Monday, October 4, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2ம் பாகம்

ஷாயிபாவின் துயரம்!


கண்ணன் மேலும் தொடர்ந்து கூறினான்: “ஸ்வேதகேது! ஒரு பெண்ணின் அழகில் மயங்கியது உம்முடைய பலவீனமான மனதை அன்றோ சுட்டிக் காட்டுகிறது? என்றோ ஓர் நாள் அவள் உம்மை மணப்பாள் என எதிர்பார்ப்பிலே இருந்தீர் அன்றோ?? இப்போது அவள் நிலையைப் பாரும்! அவள் அனைத்தையும் இழந்தவளாய், ஓர் அபலையாய் நிற்கிறாளே? தன் அன்புக்கும், வணக்கத்துக்கும் உகந்த பெரியப்பனை இழந்தாள், அதன் மூலம், அவளுடைய இறைவன், அவளுடைய நம்பிக்கைகள், ஆசைகள், எதிர்காலம் அனைத்துமே நாசமாய்ப் போயிற்று அன்றோ?? இப்போது நீர் அவளுக்கு ஆறுதல் அன்றோ கூறவேண்டும்?? ஒருவேளை அவள் மனம் மாறி உம்மை நாடலாம்! அவளை நன்கறிந்தவர் என்ற முறையிலே இப்போது நீர்தான் இருக்கிறீர்! ஆகவே அவளுக்கு ஆறுதல் கூறி அவள் மனப்புண்ணை ஆற்ற முயலுங்கள்!”

“வாசுதேவகிருஷ்ணா! அவளுக்கு மன வருத்தமா?? இல்லை, இல்லை இதயமே இல்லாத ஒருத்திக்கு எங்கனம் வருத்தமும், துக்கமும் ஏற்படமுடியும்?? என்னை ஒரு பகடைக்காயாகவே அவள் தன் ஆட்டத்தில் பயன்படுத்தி வந்திருக்கிறாள். “

“ஸ்வேதகேது! பெண்கள் அனைவருமே அவர்களின் பிரியத்துக்கு உகந்த ஆண்களைத் தங்கள் சதுரங்க ஆட்டத்தின் காய்களாகக் கருதி அவர்கள் இஷ்டத்துக்கு நகர்த்தி வருகின்றனர். இதற்கு ஷாயிபா விதிவிலக்கு இல்லை! நாம் அனைவருமே அவர்களின் பகடைக்காய்கள் தான்! சற்று முன் ஷாயிபா பேசினதைக் கேட்டீர் அல்லவா?? அவளுடைய வாழ்க்கையின் அடித்தளமே, நொறுங்கி விட்டதென்று நினைக்கிறாள். இதை உம்மால் சரி செய்ய இயலும் என நான் நம்புகிறேன். முடிந்தால் அவளைப் பலவந்தமாகவாவது இங்கிருந்து அழைத்துச் சென்று அவளைச் சமாதானம் செய்ய முயற்சி செய்யும்!”

ஷாயிபா ஒரு விதமான பிரமிப்போடு கண்ணனையே பார்த்துக்கொண்டு செய்வதறியாது நின்று கொண்டிருந்தாள். அவள் இதயத்தின் ஆழத்துக்குள்ளே கண்ணனின் வார்த்தைகள் சல்லடைக்கண்களாகத் துளைத்துக்கொண்டு சென்றன. தன்னை நன்கு அறிந்தவனும் தன்னைக் காதலித்தவனும் ஆன ஸ்வேதகேதுவைத் தவிர வேறு யாரும் நமக்கு இப்போது உதவ மாட்டார்கள் என்ற உண்மை அவள் நெஞ்சைப் பிளந்தது. அப்போது கண்ணன் அவளை நேருக்கு நேர் பார்த்து, “ஷாயிபா, ஸ்வேதகேது குண்டினாபுரம் செல்லப் போகிறார். நீ விரும்பினால் அவருடன் அவரது மனைவியாகச் செல்லலாம். உனக்கு அதில் விருப்பமில்லை எனில் என்னுடன் மதுராவுக்கு வா. அங்கே சிலகாலம் தங்கினால் காலம் உன் மனப்புண்களை ஆற்றும். உன்னால் உன் பெரியப்பனை மறக்க முடியாது. ஆனால் எப்படி இருந்தாலும் நீ இங்கே தங்க முடியாது. ராணி பத்மாவதிக்கு நீ இழைத்த கொடுமைகளை அவள் மறந்திருக்கமாட்டாள். “

“கொலைகாரா! கொடுமையான கொலைகாரா!”

“உண்மைதான். உன் பெரியப்பனை நான் கொன்றேன். ஆனால் அதில் பாதிதான் உண்மை! அவரைக் கொல்லவேண்டும் என்ற எண்ணம் எனக்குக் கொஞ்சம் கூடக் கிடையாது. கொடூரமான எண்ணம் படைத்தவன் அல்ல நான். நிச்சயமாய் ஸ்ரீகாலவனை என்னால் உனக்குத் திரும்பக் கொடுக்க இயலாது. ஆனால், ஒரு அருமையான தாயை உனக்கு என்னால் கொடுக்க முடியும். என் தாய் தேவகி, என்னைப் பெற்றெடுத்தவள் உன்னைத் தன் அருமை மகள் போலவே நடத்துவாள். நீ அவளைத் தாயாக ஏற்றால் நானும், என் அண்ணன் பலராமனும் உன் சகோதரர்கள் போலவே உன்னிடம் பிரியத்துடனும், பாசத்துடனும் இருப்போம். ஆனால் அதை ஏற்பது உன் விருப்பத்தைப் பொறுத்தது. அல்லது ஸ்வேதகேதுவை நீ மணக்க விரும்பினால் , இன்னமும் ஸ்வேதகேதுவுக்கு உன் மேல் ஆசை இருக்கிறது என நம்புகிறேன். நீ அவரை மணந்து கொண்டு அவருக்கும் மகிழ்ச்சியை அளிப்பதோடு நீயும் மகிழ்வாய் இருக்கலாம். “

ஸ்வேதகேது ஒரு தர்மசங்கடமான நிலையில் இருப்பது போல் உணர்ந்தான். அவனால் கண்ணனை மறுத்தும் பேசமுடியவில்லை. கண்ணன் சொல்வதை ஏற்கவும் முடியவில்லை. கண்ணன் மீண்டும் ஷாயிபாவைப் பார்த்து, “எழுந்திரு ஷாயிபா, உன் முகத்தைக் கழுவிக்கொள். ஆஹா, எவ்வளவு அழகான முகம்?? எத்தனை பெரிய கண்கள்? அழுது அழுது அவை உன் முகத்தையே கோரமாக்கிவிட்டதே?” கண்ணன் குனிந்து கீழே ஸ்வேதகேதுவால் உட்கார்த்தி வைக்கப் பட்டிருந்த ஷாயிபாவைத் தன்னிரு கரங்களால் தூக்க முயன்றான்.

“துரோகி, பச்சைத் துரோகி! உன்னைக் கிழித்து உன் கண்களிலிருந்து அந்த விழிகளைப் பிடுங்கப் போகிறேன்.” ஷாயிபா ஆத்திரத்துடன் மீண்டும் கண்ணன் மேல் பாய்ந்தாள்.

“ஓஹோ, ஷாயிபா, அந்தப் புலி நகங்களை என்னைத் தாக்குவதற்குப் பயன்படுத்தாதே! உன் கணவனாக வரப் போவது ஸ்வேதகேது எனில் அவனுக்காகப் பத்திரமாய் அதைப் பாதுகாத்து வைத்துக்கொள். என்னிடம் உன் பலத்தைக் காட்டாதே! தேவகி அம்மா மதுராவில் காத்திருக்கிறாள். எழுந்திரு! தைரியமாய் இரு! கிளம்பலாம்!”
வாசுதேவன் என்ற பெயரைச் சூட்டிக்கொண்டதால் நீயும் வாசுதேவன் ஆகிவிடுவாயா?? பொய்யான வாசுதேவனே!”

கண்ணன் முகத்தில் இளநகை தெரிந்தது. கண்களும் குறும்பில் பளிச்சிட்டன. “நீ என்னைவிட ஓரிரண்டு வயது மூத்தவளாய் இருப்பாயோ?? இருக்கும்! ஆனால் என் சின்னக் குட்டித் தங்கை கூட உன்னை விடப் புத்திசாலித்தனமாய்ப் பேசுவாளே! வா, வா, வந்து மதுராவில் நீயே நேரில் பார்ப்பாயாக! என் தந்தை வசுதேவரையும் பார்க்கலாம், தேவகி அம்மாவையும் பார்க்கலாம். அவர் சொல்லுவார், நான் ஏன் வாசுதேவன் என அழைக்கப் படுகிறேன் என்பதை. அவர் வசுதேவர் என்றால் வசுதேவரின் பிள்ளையான நான் வாசுதேவன் ஆகமாட்டேனா?? எப்படிப் பொய்யான வாசுதேவன் ஆவேன்?? உனக்கு விருப்பம் இருந்தால், நீ முழு மனதோடு சம்மதித்தால் நீயும் அவருக்கு இன்னொரு குமாரியாகலாம்.”

“நான் மதுராவுக்கெல்லாம் வரப்போவதில்லை!’ தீர்மானமாய்ச் சொன்னாள் ஷாயிபா.

“எனில் ஸ்வேதகேதுவை மணந்து கொண்டு அவனோடு குண்டினாபுரம் செல்! இங்கே ராணி பத்மாவதியோடு இருக்க விரும்புகிறாயா?”

ஷாயிபாவிற்குத் தன் நிராதரவான நிலைமை ஒருவாறு புரிந்தது. அவள் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. ஸ்ரீகாலவன் சொல்லியும், அவன் சொல்லாமலும் ராணி பத்மாவதிக்கு அவள் இழைத்த கொடுமைகள் அவள் கண் முன்னே அணி வகுத்தன. ஒரு காலத்தில் அவள் அடிமையைவிடக் கேவலமாக நடத்திய ராணி பத்மாவதி இன்று முழு அதிகாரமும் படைத்த ஒரு பெண்மணி. இவளுக்குக் கீழே இவள் உத்தரவை எதிர்பார்த்து ஷாயிபா நடந்துகொள்ளவேண்டுமா?? ஒருகாலும் நடக்காது. ஆனால் பின் அவள் எங்கே போவாள்? ஷாயிபா மனம் உடைந்து போனாள். கண்ணன் பரிதாபம் கலந்த பார்வையோடு அவளைப் பார்த்து, “அழாதே, அழுகையை நிறுத்து. நான் உன்னை மதுராவுக்கு அழைத்துச் செல்கிறேன். யாருக்குத் தெரியும்?? ஸ்வேதகேது தன் மனதை மாற்றிக்கொண்டு உன்னை மணக்க வந்தாலும் வருவான். ஆகவே நீ அவன் வரவுக்காகக் காத்திருக்கலாம். உன் கூரிய இந்த நகங்களையும் அவனுக்காகப் பாதுகாத்து வைத்துக்கொள்! ஸ்வேதகேது எத்தனை பெரிய வில்லாளி என நீ அறிவாயா?? அவன் வைத்த குறி தப்பாமல் ஒரே அம்பில் அனைத்தையும் வீழ்த்தும் வல்லமை படைத்தவன். எப்போது எனக் கேட்கிறாயா? உன்னை அவன் சந்திக்கும் வரை அத்தகையதொரு வல்லமை படைத்திருந்தான்! அப்படிப்பட்டவன் இப்போது இப்படி ஆகிவிட்டான்! ம்ம்ம்…. போகட்டும், உத்தவா, நீதான் இந்தப் பெண்ணை அழைத்துச் சென்று அந்தப்புரத்தில் விட்டு வா!”

உத்தவன் கீழே அடம் பிடித்துக்கொண்டு அமர்ந்திருந்த ஷாயிபாவைப் பிடித்து எழுப்ப முயன்றான். ஷாயிபாவைத் தொட்டதுமே உத்தவனின் உடல் சிலிர்த்தது. நாடி, நரம்புகளில் எல்லாம் ரத்தம் சூடாகப் பாய்ந்தது. உத்தவனின் முகமும் உணர்வுகளில் சிவந்து கன்றிப் போனது. அவன் உடல், உள்ளம் அனைத்திலும் இனம் காணமுடியாததொரு நெருப்புக் கொழுந்து விட்டு எரிந்தது.

4 comments:

எல் கே said...

todarungal

priya.r said...

கண்ணன் அறிவுரைகளையும் புத்திமதிகளையும் கேட்க
நாம் புண்ணியம் செய்து இருக்க வேண்டும்.
நன்றி கீதாம்மா !

பித்தனின் வாக்கு said...

enna achunga?. 1st ku appuram post varavillai. nan thodarnthu padikkinren. viraivil adutha post podunga.

sambasivam6geetha said...

பித்தனின் வாக்கு, அக்டோபர் நாலாம்தேதி இந்தப் பதிவைப் போட்டேன். அதுக்கப்புறமா இணையமே சரியா வரலை. உடல் நிலையும் நடுவில் கொஞ்சம் மோசமா இருந்தது. இணையம் இருக்கும்போது நவராத்திரிப் பதிவுகளைப் போடுவதே பெரும்பாடா இருக்கு. நடுவில் இணையம் போயிடும். கொஞ்சம் பொறுங்க. :(((((((((