Saturday, October 16, 2010

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்

ஜராசந்தன் கொதிக்கிறான்!

ஸ்ரீகாலவனுக்காகப் பதின்மூன்று தினங்கள் துக்கம் அநுஷ்டிக்கப் பட்டு, அது முடிந்து இளவரசன் ஷக்ரதேவன் அரசனாகப் பட்டம் சூட்டப் பட்டான். ருத்ராசாரியார் அரசவையின் தலைமை குருவாக நியமிக்கப் பட்டார். ருத்ராசாரியாரும் பலத்த ஆலோசனைகளுக்குப் பின்னர் அதை ஏற்றுக்கொண்டார். அவருடைய பேரன் புநர்தத்தனை இளவரசனுக்குச் சகல வித்தைகளையும் கற்பிக்குமாறு பணித்தார். ராணி பத்மாவதி இவ்வளவும் சுபமாகவும், எந்தவிதமான ஆக்ஷேபங்கள் இன்றியும் நடந்ததுக்குக் கண்ணனுக்கு மனமார நன்றி கூறினாள். ஸ்வேதகேதுவும், தாமகோஷனும், கண்ணனும் நீண்ட ஆலோசனைகளை நெடுநேரம் நடத்தினார்கள். பலத்த வாதப் பிரதிவாதங்களுக்குப் பின்னர் ஸ்வேதகேது ஜராசந்தன் சென்ற பாதையில் அவனைத் தொடர்ந்து வேகமாய்ச் சென்றான். அவந்தியின் இளவரசர்கள் ஆன விந்தனுக்கும், அநுவிந்தனுக்கும் ஸ்வேதகேது ஒரு சமயம் குருவாக இருந்தது இதற்கு அநுகூலமாக இருக்கும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். கண்ணனால் ஓட அநுமதிக்கப்பட்ட ஜராசந்தன் என்ன ஆனான் என ஒரு எட்டு போய்ப் பார்ப்போமா?? ஜராசந்தன் இப்போது இருக்கும் நிலையில் அவனுக்குத் தெரியாமலேயே நாம் போய்ப் பார்க்கவேண்டும். தெரிந்தால் தொலைந்தோம்.

அநுவிந்தனின் குதிரைகள் என்னமோ அதிக வேகம் ஓடக் கூடியவையே. ஆனாலும் கண்ணனால் மன்னிக்கப்பட்டு ஓட அநுமதிக்கப்பட்டதாலோ என்னமோ ஜராசந்தனின் மனம் ஒரு நிலையில் இல்லை. அதோடு குதிரைகள் ஓடும் வேகமும் அவனுக்குப் போதவில்லைதான். என்றாலும் அந்த வேகத்தால் உள்ளே அமர்ந்திருந்த ஜராசந்தன் ரதத்தின் இருபக்கமும் தூக்கி எறியப் பட்டான். ஆனாலும் அது கூட அவனைப் பாதிக்கவில்லையோ என்று எண்ணும்படி மூடிய கண்களைத் திறக்கவில்லை அவன். எங்கும் வெற்றி, எதிலும் வெற்றி, எப்போதும் வெற்றி. இதுதான் இவ்வளவு வருடங்கள் அவன் கண்டது. ஜராசந்தன் என்ற பெயரைக்கேட்டாலே அழுத பிள்ளை வாயை மூடும். பிறக்க இருக்கும் குழந்தை அழாமலேயே பிறக்கும். அப்படி ஒரு சக்தி அவனுக்கு இருந்தது. ஆனால்?? ஆனால்??? தற்போது??? ஜராசந்தனின் உள்ளத்துக்குள்ளே ஒரு பூகம்பமே நடந்து கொண்டிருந்தது. எரிமலை வெடித்து அக்னிக்குழம்பு ஆறாக ஓடியது. மனதினுள் வெடிக்கும் பூகம்பத்தின் வேகம் தாங்காமல் அவன் தன் நெஞ்சை அமுக்கிக் கொண்டான். தலையை இரு கைகளாலும் பிடித்துக்கொண்டான். போதாது, போதாது, இது போதாது, வேகம், வேகம், இன்னும் வேகம். அந்தக் கண்ணனின் குரலோ, அல்லது அவன் உருவமோ கண்ணுக்கு மட்டுமல்ல மனதையும் எட்டாத வெகு தூரத்திற்குச் சென்றுவிட வேண்டும்.

அவனுடைய பிறப்பு நினைவில் வந்தது அவனுக்கு. காசி ராஜனின் இரு பெண்களையும் அவன் தந்தையான மகத நாட்டரசர் திருமணம் செய்து கொண்டார். குழந்தைப் பேறு வேண்டி பிரார்த்தித்தவருக்குக் குலகுருவின் மூலம் மந்திரிக்கப் பட்ட ஒரு மாம்பழம் கிடைக்க அதைத் தன் மனைவியரிடம் கொடுத்து இருவரில் எவரேனும் ஒருவரைச் சாப்பிடச் சொல்லுகிறார். ஆனால் அந்தப் பெண்களோ தங்கள் இருவருக்குமே குழந்தை வேண்டும் என இருவருமே ஆளுக்குப் பாதியாகச் சாப்பிட இருவரும் கர்ப்பமுற்றார்கள். குழந்தையும் பிறக்கிறது சரிபாதியாக. பயந்த இளவரசிகள் குழந்தையின் இரு கூறுகளையும் காட்டில் கொண்டு போய்ப் போடச் சொல்லிக் கட்டளையிடுகிறார்கள். காட்டில் போடப் பட்ட குழந்தைக் கூறு தனித்தனியே கிடக்கிறது. அங்கே வசித்துக்கொண்டிருந்த ஜரா என்னும் அரக்க குலத்துப் பெண்ணின் கண்களில் விசித்திரமான இந்தக் குழந்தை பட, அவள் ஆர்வ மிகுதியால் எடுத்துக் குழந்தையின் கூறுகளை ஒன்றாக்கி நேராய்ச் சேர்க்கக் குழந்தையும் தன் முதல் குரலைக் கொடுத்து அழுகிறது. குழந்தையின் அங்க லக்ஷணங்களை வைத்து அரசகுமாரனாய் இருக்குமோ எனச் சந்தேகித்த அவள், குழந்தையைப் பத்திரமாய்ப் பாதுகாத்து வருகிறாள். காட்டிற்கு வேட்டையாட வந்த மகத நாட்டு அரசனிடம் தனக்குக் குழந்தை ஒன்று கிடைத்த கதையைக் கூறக் குழந்தையைக் கண்ட அவர் அது தன் குழந்தைதான் என்பதையும் நிச்சயம் செய்து கொள்கிறார். அந்தக் குழந்தையை அரண்மனைக்கு எடுத்துச் சென்று வளர்க்கவும் ஆசை கொள்கிறார்.

குழந்தையை அரக்கியிடமிருந்து வாங்கிக் கொள்கிறார். அவள் பெயரோடு சேர்ந்தே வரும்படிக்குக் குழந்தைக்கு ஜராசந்தன் என்னும் பெயரைச் சூட்டி வளர்த்து வருகிறார். உரிய பருவம் வந்ததும் ஆட்சி ஜராசந்தன் கைகளுக்குச் செல்கிறது. அதன் பின்னர் அவன் திரும்பியே பார்க்கவில்லை. எங்கும் ஜெயம், எதிலும் ஜெயம், எப்போதும் ஜெயம்தான். முதலில் அவன் தந்தையின் ஆட்சிக்காலத்தில் பிரிந்து கிடந்த மகதத்தை ஒன்று சேர்த்து மாபெரும் சாம்ராஜ்யமாக்கித் தனக்குக் கீழே கொண்டு வந்தான். பின்னர் தன் சாம்ராஜ்யத்தின் கரங்களை மெல்ல மெல்ல வெளியேயும் கொண்டு வந்தான். அதற்குத் தான் அவன் எத்தனை விதமாய்ப் பாடுபட வேண்டி வந்தது. யுத்த தந்திரங்களைக் கடைப்பிடிக்க வேண்டிய சமயத்தில் அவற்றைக் கடைப்பிடித்தும், சிலரைத் தட்டிக்கொடுத்து நண்பராக்கியும், சிலரை வஞ்சகமாய் ஏமாற்றியும், (ம்ம்ம்ம் பெரும்பாலும் இதுதான் அவன் சாமராஜ்ய விரிவுக்கே காரணமாய் இருந்திருக்கிறது) சூது, வாதுகளின் மூலமும், தந்திரமான, நயந்த பேச்சுக்கள் மூலமும் ஒவ்வொருவரையும் தனக்குக் கீழே கொண்டு வந்தான். இந்த தாமகோஷன்! அவனோடு எவ்வளவு சண்டை போட்டு அவனைத் தோற்கடித்துத் தன்னை அவனுக்கு மேற்பட்ட சாம்ராஜ்யாதிபதியாக ஒப்புக்கொள்ள வைக்க நேர்ந்தது! இதே போல்தான் பீஷ்மகன். விதர்ப்ப தேசத்து அரசன் ஆன அவன், தன் தந்தையால் இழந்த நாட்டை மீட்க வேண்டும் எனப் போரிட்டான். பின்னால் இருக்கிறதைக் காப்பாற்றிக்கொண்டாலே போதும் என்ற முடிவுக்கு வந்துவிட்டான். அவன் மகன் ருக்மி தான் நம்மை ஒரு சாம்ராஜ்யச் சக்கரவர்த்தி என எடுத்த எடுப்பிலேயே ஒப்புக்கொண்டதோடு அல்லாமல், நமக்கு உதவியாகவும் இருந்து வருகிறான். இத்தனை வருடங்களாக என்னுடைய பெயரும், புகழும் உச்சத்திலேயே இருந்து வந்திருக்கிறது. ஒரு நாளும் கீழிறங்கியதில்லை.

தன்னைப் போலவே மன உறுதியும், வீரமும் படைத்தவன் என்ற காரணத்துக்காகவே, கம்சனைத் தனக்கு நண்பனாக்கிக்கொண்டு தன்னிரு பெண்களையும் அவனுக்கே திருமணம் செய்து வைத்தான் ஜராசந்தன். கம்சனும் அதற்கு ஏற்பவே இறுதிவரை நடந்து வந்திருக்கிறான். இவ்வளவும் எதற்கு?? மதுராவை நமக்குக் கீழே கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே அன்றோ?? ஆர்யவர்த்ததின் முக்கியமான நகரம் மதுரா. அதை யாதவர்கள் ஆட்சி செய்து வருகிறார்கள். பலம் பொருந்திய யாதவர்களை முறியடிக்கக் கம்சனின் துணை வேண்டியிருந்தது. மேலும் அஸ்வமேத யாகம் செய்வதன் மூலமும் என் சக்கரவர்த்திப் பதவியைத் தக்க வைத்துக்கொள்ளலாம். மேலும், மேலும் ராஜ்யங்கள் நம்முடன் சேரும் என்று தானே கம்சன் நமக்கு அவ்வளவு உதவி செய்தான். ஆஹா, மாப்பிள்ளை என்றால் அவனல்லவோ மாப்பிள்ளை! நம் படைகளை நடத்திச் சென்று கடைசியில் அஸ்வமேத யாகக் குதிரையை ஒப்படைக்கும் வரை எவ்வளவு சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறான்??

ம்ம்ம்ம் ஆனாலும் பாஞ்சாலத்துத் திரெளபதனும், அஸ்தினாபுரத்துக்குருட்டு அரசன் திருதராஷ்டிரனும், தென் மேற்கை ஆண்டு வரும் காலயுவனனும் நம்மை ஒரு சாம்ராஜ்யச் சக்கரவர்த்தியாக ஒப்புக்கொள்ளவே இல்லை. பாஞ்சாலத்துத் திரெளபதனுக்குக் கர்வம் அதிகம். நம்மை ஒரு பொருட்டாகவே மதிக்கிறதில்லை. அஸ்தினாபுரத்துக் குருட்டு அரசனோ, அவன் பெரியப்பன் ஆன கிழவன் பீஷ்மனின் துணையில் அதிகாரம் செய்து வருகிறான். அந்த பீஷ்மனை எவராலும் வெல்ல முடியாதாமே! பலம் பொருந்தியவனாய்த் தனி ஒருவனாகவே அந்த பீஷ்மனை மாபெரும் படையையே எதிர்கொள்வானாம். காலயுவனன், அவனுடைய மக்களை நினைத்தாலே கலக்கமாய் இருக்கிறது. பின்னால் பார்த்துக்கொள்வோம். இந்த திரெளபதனையாவது அடக்கலாம் என்றால் கம்சன் இந்தச் சமயம் பார்த்துக் கொல்லப் பட்டான். மாபெரும் வீழ்ச்சிக்கு அதுவே வித்திட்டு விட்டது. இப்போதோ அவமானம்! எவ்வளவு பெரிய அவமானம்! ஒரு இடைச் சிறுவனால் மன்னிக்கப் பட்டுத் தப்பி ஓட அநுமதிக்கப் பட்டிருக்கிறேனே! இந்த அவமானமான நிகழ்வுகள் ஜராசந்தனின் இதயத்தை முட்கள் போல் குத்தின . ம்ம்ம்ம் எவனை நம் நண்பன் என எண்ணினோமோ அந்த தாமகோஷன் இன்று நம்பிக்கைத் துரோகம் செய்துவிட்டான். எவ்வளவு முறை காப்பாற்றி இருக்கிறேன் அந்த தாமகோஷனை! அவன் எனக்குச் செய்த பிரதி உபகாரம் இதுதானா??? இல்லை, இல்லை, தாமகோஷன் தலையிடாவிட்டால், அந்தக் கண்ணன், கிருஷ்ண வாசுதேவன், என்னைக் கொன்றே போட்டிருப்பான். ஆம், ஆம், தாமகோஷன் மேல் எந்தத் தவறும் இல்லை.
ஆஹா, என்னால், என் அருமை சாம்ராஜ்யத்துக்கு நிகழ்ந்திருக்கும் இந்த அவமானத்தை எவ்விதம் போக்குவேன்?? ஏதேனும் செய்து இந்த அவமானத்தை ஈடு கட்டவேண்டும்! என்ன செய்யலாம்??? என் வாழ்நாள் பூராவும் செலவு செய்து மிகவும் கஷ்டப்பட்டு நான் கட்டிய இந்த சாம்ராஜ்யக் கோட்டையைத் தக்க வைத்துக்கொள்ளும் வழியைத் தேடவேண்டும். ஏமாற்றத்திலும், அவமானத்திலும் முழுகிப் போகாமல் நான் எழுந்து நிற்கவேண்டும். என்னுடைய கர்வத்தை நான் மறந்து, பெருமையை விழுங்கிவிட்டு மீண்டும் புத்துயிர் பெற்றவனாய்த் தொடரவேண்டும். அந்த வசுதேவனின் குமாரர்கள் ஒரு மாபெரும் சக்தியாக உருவாவதைத் தடுக்க வேண்டும். எவ்விதமேனும் தடுக்க வேண்டும். அது அவ்வளவு சுலபமாக இருக்கப் போவதில்லை. பொறுமையாகத் தான் ஒவ்வொரு காயாக நகர்த்த வேண்டும். தக்க தருணம் வரும்பொழுது ஒரே வீச்சில் இருவரையும் திரும்ப எழுந்திருக்க முடியாதபடிக்கு வீழ்த்த வேண்டும்.

4 comments:

எல் கே said...

இலங்கை வேந்தன் போல் கலந்கினானா ??

priya.r said...

ஹரே கிருஷ்ணா
நல்ல பகிர்வு கீதாம்மா

//ஜராசந்தன் இப்போது இருக்கும் நிலையில் அவனுக்குத் தெரியாமலேயே நாம் போய்ப் பார்க்கவேண்டும். தெரிந்தால் தொலைந்தோம்.//
இப்படி எழுதுவதை படிக்கும் போது சற்று புதுமையாகவும் ,வித்தியாசமாகவும் இருக்குங்க ;நாமும் கதையில் பங்கு எடுத்து கொள்கிறோம் என்ற உணர்வு படிக்கும் என்னை போன்றோர்களுக்கும் வரும் என்று நினைக்கிறேன் 1!
அப்புறம் கன்னணனை போலவே கண்ணன் கதைகளும் மாயமாவதின் மர்மம் என்ன?
I could not view past days teacher

sambasivam6geetha said...

mmm aஅப்படியும் வச்சுக்கலாம் எல்கே.

@ப்ரியா, எல்லாமும் தெரியுதே?? எந்தப்பதிவுகள்னு குறிப்பிட்டுச் சொல்லுங்க. எனக்கு எல்லாம் சரியாத் தெரியுது.

priya.r said...

கடந்த சில நாட்களாகவே கண்ணன் வருவான் ப்லோகை ஓபன் பண்ணவே முடியவில்லை ;ஆனால் எண்ணங்கள் ப்ளாக் ஓபன் செய்ய முடிந்தது

நேற்று தான் கண்ணன் வருவான் ப்ளாக் ஓபன் செய்தே பார்க்க முடிந்தது ;சில அலுவல் சம்பந்த பட்ட புது சாப்ட்வேர் எனது

லாப் டாப்பில் இன்ஸ்டால் செய்ததனாலும் கூட இருக்கலாம் ;இது தான் காரணம் என்று சொல்ல முடியவில்லை

இப்போது பார்த்து படித்து பயனடைய முடிகிறது என்ற மகிழ்ச்சியை;மகிழ்ச்சியான செய்தியை உங்களுக்கு தெரிய படுத்தி கொள்கிறேன்.