Saturday, January 8, 2011

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்

ஆஹா, நாம இப்போ மதுராவை விட்டுட்டு வந்துப் பல நாட்கள் ஆகிவிட்டனவே . அதுக்குள்ளே அங்கே என்ன என்னமோ நடந்து விட்டது. சொல்லப் போனால் சதியாலோசனைகளிலும், அவசர ஆலோசனைகளிலும் மதுராவின் யாதவர்கள் அனைவரும் பொங்கிக் கொதித்துக்கொண்டிருக்கும் நீர் போல் கொதித்துக்கொண்டிருந்தனர். கம்சன் இறந்த செய்தி கேட்டதும் மற்ற நாடுகளில் இருந்த யாதவர்கள் தங்கள் சொந்த நாட்டுக்குத் திரும்பினாலும், அவர்கள் அனைவரும் அவர்களுக்கே உரித்தான தனிச் சட்டங்களை அநுசரித்தனரே அன்றி மதுராவின் சட்ட, திட்டங்களை மதிப்பார் இல்லை. உக்ரசேனர் பெயரளவுக்கே தலைவராய் இருந்தார், அவரால் இவர்களை அடக்கி ஆள முடியவில்லை. அவரவர் தங்கள் விருப்பத்துக்கு ஏற்றவாறு பேசுவதும் செயலாற்றுவதுமாய் இருந்தனர். வசுதேவர் அவர்களிடையே தன்னுடைய இனிமையான சுபாவத்தால் பெயர் பெற்றிருந்தார் ஆனாலும், அவருடைய இனிமையான சுபாவமே அவர்களை அடக்கி ஆளமுடியாமல் அவரைத் தடுத்தது. மற்றொருவரான அக்ரூரரோ மிகவும் ஆன்மிக நாட்டத்தோடும் துறவு மனப்பான்மையோடும் இருந்ததால் அவராலும் எவரையும் கடிந்து எதுவும் சொல்ல முடியவில்லை. ஆகவே மதுராவில் அவரவரும் தாங்கள் இட்டதே சட்டம் என்னும்படிக்கு இருந்தார்கள்.


எல்லாவற்றுக்கும் மேல் உக்ரசேனரின் அரண்மனையே சதியாலோசனைக்குத் தலைமை இடமாக இருந்து வந்தது. கம்சன் இறந்ததும் ஏற்பட்ட கிளர்ச்சிகளில் உக்ரசேனரின் மற்ற மகன்களும் கொல்லப் பட்டனர். அவரின் ஐந்து மகள்களும் வசுதேவரின் உடன்பிறந்தவர்களுக்கு வாழ்க்கைப் பட்டிருந்தனர். அவர்களில் கம்சா என்னும் மூத்த பெண்ணோ, வசுதேவரின் சொந்த சகோதரர் ஆன தேவபாகனுக்கு மனைவியாக இருந்தாள். அவள் உக்ரசேனரின் அருமையான செல்லப் பெண்ணாகவும் இருந்தாள். கம்சனால் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த உக்ரசேனருக்கு முழுக்க முழுக்க உதவி செய்தது கம்சாதான். ஒரு காலகட்டத்தில் உக்ரசேனருக்கு அருகேயே தன் இருப்பிடத்தை மாற்றிக்கொண்டு தன் புகுந்த வீட்டுக்கு விசேஷங்களின் போது மட்டுமே போய் வருவதையும் வழக்கமாக்கிக்கொண்டு விட்டாள். எப்போதும் தன் அருமைத் தந்தை உக்ரசேனரைக் கவனிப்பதிலேயே தன் நேரத்தைச் செலவிட்டாள். கம்சாவிற்கு மூன்று மகன்கள். மூவரிடத்திலும் அவள் கருத்து மூன்று விதமாக இருந்தது. தன் சொந்த மகன்களே ஆனாலும் அவளால் எல்லா மகன்களையும் ஒரே நோக்கோடு வளர்க்க இயலவில்லை. மூத்தவன் ஆன சித்ரகேது ஷூரர்களில் யுத்தத்தில் தேர்ந்தவனாக இருந்ததோடு அல்லாமல் தகப்பனுக்கு வேண்டிய உதவிகளையும் செய்து வந்தான். தன்னுடைய அரச பரம்பரையிலும், தன் தந்தையிடமும் அதிகம் பற்று வைத்திருந்த கம்சாவோ மூத்த மகனை ஒரு விருந்தாளி போலவே நடத்தினாள். தன் பெரியப்பாவான வசுதேவனுக்குச் சேவகம் செய்யும் மூத்த மகனை அவளால் மரியாதையுடன் பார்க்க முடியவில்லை. கடைசி மகன் ஆன உத்தவனையோ அவளுக்குச் சுத்தமாய்ப் பிடிக்கவே இல்லை.


அவளுக்குத் தன் கணவன் இந்தக் குழந்தையைப்பிறந்ததுமே தன்னிடமிருந்து பிரித்து கோகுலத்திலும், விருந்தாவனத்திலும் வளர்ந்து வந்த கண்ணனோடும், பலராமனோடும் சேர்ந்து வளர அனுப்பியதே பிடிக்கவில்லை. திரும்பி வந்தாலாவது தன் மகன் தன்னை அன்போடு பார்ப்பான் என எண்ணியவளுக்குத் தங்களிடம் படை வீரர்களாக இருந்து வரும் ஷூரர்களின் தலைவன் ஆன வசுதேவனின் இடைக்குலத்து மகனிடம் முழுமையாக அவன் அன்பு செலுத்தி வந்தது இன்னும் வெறுப்பைத் தந்தது. அரச குலத்தில் பிறந்த தனக்கு இப்படி ஒரு மகனா என எண்ணி எண்ணி மனம் நொந்தாள். ஆகவே அவள் தன் ஆசையையும், அன்பையும் இரண்டாவது மகன் ஆன பிருஹத்பாலனிடமே வைத்தாள். அவனே தன்னையும், தங்கள் குலத்தையும் முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்வான் என உறுதியாக நம்பினாள். அவன் மேல் எல்லையற்ற பாசத்தைச் செலுத்தியதோடு வேறு எவருடைய ஆளுமைக்கும் அவன் பலியாகாத வண்ணம் காவல் காத்துவந்தாள் என்றே சொல்லலாம். ஏமாற்றத்துக்கு உள்ளான அவளுடைய தாய்மையானது ப்ருஹத்பாலனிடம் அன்பு செலுத்துவதில் தன் ஏமாற்றத்தைக் கொஞ்சம் கொஞ்சமாய் மறந்துவந்தது.
மேலும் அவள் எப்போதுமே ப்ருஹத்பாலனைத் தன்னோடு வைத்திருந்ததால் உக்ரசேனருக்கும் இந்தப் பேரன் மேல் பாசம் கொஞ்சம் அதிகமாகவே இருந்தது. கம்சா எதிர்பார்த்ததும் அதுவே. தன்னுடைய மற்ற சகோதரர்களும் இறந்ததும், இயற்கையாகவே அவள் அடுத்துத் தன் மகன் தான் அரசுக்கட்டிலுக்கு உரியவன் என்று நினைத்தாள். ஆகவே தன் தகப்பன் தன் மகனுக்குப் பதிலாகக் கண்ணனை அரசாள அழைத்ததில் அவளுக்கு அதிர்ச்சியும், வெறுப்பும் ஏற்பட்டது. தன் தகப்பன் செய்த இந்த அவமானத்தை அவளால் மறக்கவே முடியவில்லை. கண்ணனும், பலராமனும் மதுராவை விட்டுத் தப்பி ஓடியதும் தான் அவள் மனதில் ஒருவாறு நிம்மதி பிறந்தது எனலாம். அவள் தன் பேச்சுக்களாலும், குறிப்புகளாலும், பல்வேறு நடத்தைகளாலும் கண்ணனும், பலராமனும் ஜராசந்தனை எதிர்க்கப்பயந்து கொண்டு கோழைகளைப் போல் ஓடிப்போனார்கள் என்று கூறி எல்லா யாதவர்களின் மனதையும் மெல்ல மெல்ல மாற்றவும் முயற்சித்து வந்தாள். அதன் பின்னரே ஒரு நாள் அவளுக்கு அவளின் கண்ணின் கருமணியான பிருஹத்பாலனின் ராஜ தந்திர நடவடிக்கையாலேயே ஜராசந்தன் மதுராவை முற்றுகையிடவில்லை என்றும் மதுராவை காத்தது தன் அருமை மகனே என்றும் செய்தி கிடைத்தது.


ப்ருஹத்பாலன் தன்னுடைய சாமர்த்தியமான நடவடிக்கைகளினால் ஜராசந்தனை எவ்வாறு தன்னால் தடுக்க முடிந்த்து என்பதைப் பற்றி மதுராவின் அனைத்து யாதவர்களிடமும் மிகவும் பெருமையாகக் கூறினான். அக்ரூர்ருக்கும் கடாவுக்கும் கூட இது முதலில் ஆச்சரியம் அளித்தாலும் ப்ருஹத்பாலனின் சாமர்த்தியத்தைப் புகழத் தயங்கவே இல்லை. எனினும் அக்ரூரருக்கு ப்ருஹத்பாலன் மதுராவைக் காப்பாற்றும் நோக்கத்தில் கிருஷ்ணன் இருக்கும் இடத்தைச் சொல்லி இருப்பானோ என்ற சந்தேகம் மட்டும் மறையவில்லை. ஆனாலும் அவர் அதை வெளிக்காட்டிக்கொள்ளவில்லை. இங்கேயோ கம்சாவுக்கும் சந்தேகம் தான். அவள் சந்தேகமோ தன் சகோதரிகளிடமே. ஏனெனில் தன் மகன் ப்ருஹத்பாலனுக்கு அடுத்த அரசுரிமையைத் தரவேண்டி அவர்களின் சம்மத்த்தைக் கேட்டபோது அவர்களோ அதைத் திட்ட வட்டமாய் மறுத்ததோடு கண்ணனும், பலராமனுமே அதற்கு முழுத் தகுதி வாய்ந்தவர்கள் எனத் தாங்கள் நம்புவதாயும் கூறிவிட்டார்கள்.
ப்ருஹத்பாலனின் திட்டமோ வேறுவிதமாய் இருந்த்து. தன் வயதை ஒத்த இளம் யாதவர்களையும், வீரர்களையும் தன் பக்கம் சேர்த்துக்கொள்ள முயன்றான் அவன். பலரும் அவன் பக்கம் சேர்ந்து கொண்டார்கள். ஏனெனில் அனைவருக்குமே கம்சனின் கொடூரம் பிடிக்காமல் இருந்தது. ஆகவே அவன் ஒழிந்தான் என்பது அவர்கள் வரையில் மிகவும் மகிழ்வான ஒன்றாக இருந்த்து. ஆனால் திடீரென்று இந்தக் கிருஷ்ணன் எங்கே இருந்து வந்தான்?? வந்ததோடு இல்லாமல் எல்லாப் புகழையும் தனக்கல்லவோ ஸ்வீகரித்துக்கொண்டு விட்டான்?? கூடவே அவன் அண்ணனாம், பலராமன் என்றொரு குண்டோதரன். அது சரி, இந்த ப்ருஹத்பாலனின் தம்பியான உத்தவன் கூட அல்லவா அவர்கள் பக்கமே இருக்கிறான்?? மதுராவின் இளைஞர்களில் இவர்கள் மூவரும் அன்றோ முக்கியத்துவம் பெற்றிருக்கின்றனர்?? இப்படி எல்லாம் எண்ணியவர்களில் சத்ராஜித்தும், யுயுதானா என்ற சாத்யகியும் இருந்தனர். கண்ணனும், பலராமனும் ஓடிப் போனதில் இவர்கள் அனைவருமே மகிழ்வடைந்தனர். அனைவரும் ஒன்றாய்க் கூடிக் கண்ணனின்கோழைத்தனத்தை இகழ்ந்து பேசியதோடு , ப்ருஹத்பாலனின் அரசுரிமையையும் வற்புறுத்திப்பெறவேண்டும் என்று கூறினார்கள். உக்ரசேனரைப் போன்ற பலவீனமான மன்னன் இருப்பது சரியில்லை எனவும் உடனடியாக ப்ருஹத்பாலனுக்கு அரசுரிமையைத் தரவேண்டும் என்றும் முடிவெடுத்தனர்.

3 comments:

priya.r said...

நல்ல பதிவு;பதிவுக்கு கீதாம்மா ;
அத்தியாயம் 36 படித்து முடித்து விட்டேன்
இந்த பெயர்களை எல்லாம் இப்போ தான் முதல் தடவையாக படிக்கிறேன் கீதாம்மா
இந்த அறிய தகவல்களின் மூலம் எது என்று தெரிந்து கொள்ள ஆவல் ..

sambasivam6geetha said...

நன்றி ப்ரியா.

இராஜராஜேஸ்வரி said...

விரிவாக ,அழகாக எழுதியுள்ளீர்கள்.