Friday, January 21, 2011

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், 2-ம் பாகம்!

"ஆம், ஆம், அவன் இறந்திருக்கவேண்டும்!” என்றான் இன்னொரு இளம் யாதவன். சாத்யகி கோபத்துடன், “அவன் நன்றாகவே இருக்கிறான். உயிரோடு தான் இருக்கிறான். இது உண்மையான செய்தி. முதலில் நீங்கள் அனைவரும் நிதானத்துக்கு வாருங்கள். அடுத்துச் செய்யவேண்டியது என்ன என்று யோசிக்கலாம்.” என்றான். இப்போ வசுதேவரைக் கொஞ்சம் பார்ப்போமா?
இங்கே மதுராவில் வசுதேவரின் குடும்பத்தில் ஒரு சில மாறுதல் நடந்திருந்தன. கிருஷ்ணனும், பலராமனும் உத்தவனோடு மதுராவை விட்டுச் சென்றதும், குந்தி ஹஸ்தினாபுரத்தில் இருந்து உதவி கேட்டு ஆளை அனுப்பி இருந்தாள். தனக்கும், தன் ஐந்து குமாரர்களுக்கும் ஆபத்து நேரிடும் என அஞ்சுவதாயும், ஆகவே இந்நேரம் உடன்பிறந்த சகோதரன் ஆன வசுதேவரின் உதவி தேவை எனவும் கேட்டிருந்தாள். ஹஸ்தினாபுரச் சூழ்நிலையையும், அதே சமயம் பீஷ்மப் பிதாமஹரோடும், திருதராஷ்டிரனோடும் தனித்தனியே பேசி அவர்கள் கருத்தையும் தெரிந்து வரவேண்டும் என்று நினைத்த வசுதேவன் அதற்காக அக்ரூரரை அங்கே அனுப்பி வைத்திருந்தார். குரு வம்சத்தினரின் வாரிசுச் சண்டையினாலும், அவர்களின் ஒற்றுமையின்மையினாலும் வசுதேவரும் கவலையடைந்தார். அக்ரூரர் ஹஸ்தினாபுரம் திரும்பி வரும் வழியில் குருக்ஷேத்திரம் சென்று அங்கே சரஸ்வதி நதிக்கரையில் ஆசிரமம் அமைத்துத் தங்கி இருந்த வேதவியாசரையும் சந்தித்துப் பேசினார்.


மதுரா வந்தடைந்த அக்ரூரர் வசுதேவரையும், உக்ரசேனரையும் சந்தித்து குருவம்சத்தின் மூத்தவர்கள் பாண்டவர்களிடம் அன்பாயும், பக்ஷமாயும் இருந்துவருவதைத் தெரிவித்தார். என்றாலும் திருதராஷ்டிரனின் குமாரர்களும், அவர்களுக்கு நண்பனாக இருந்து வழிநடத்தும் கர்ணனும், சேர்ந்து கொண்டு பலவகைகளிலும் பாண்டவர்களைத் துன்புறுத்தி மகிழ்வதாயும் தெரிவித்தார். இந்தக் கர்ணன் ஒரு தேரோட்டியின் மகன் என்று சொல்கின்றனர். ஆனாலும் சிறந்த வீரனாய் இருக்கிறான் என்றும் கெளரவர்களின் உற்ற நண்பனாய் இருப்பதாயும் கூறினார். என்றாலும் பாண்டவர்கள் மிகவும் பொறுமையுடனேயே இருப்பதாயும் மக்கள் அனைவருமே அவர்களிடம் பிரியமாகவும், பாசத்துடனும் இருப்பதாயும் கூறினார். பின்னர் அக்ரூரர் தேவகியைப் பார்த்துப் பேச அந்தப்புரம் வந்தார். அவள் அப்போது தன்னுடைய பொன்னாலான ஊஞ்சலில் குழந்தைக் கிருஷ்ணனின் விக்ரஹத்தை இட்டுத் தாலாட்டிப் பாட்டுப் பாடிக்கொண்டிருந்தாள். அவளைப் பொறுத்தவரை இது ஒரு கோயில். கோயிலில் இறைவனுக்குப் பள்ளியறையில் விட்டுப் பாடிக்கொண்டிருக்கும் ஓர் அடியார் கூட்டத்தைச் சேர்ந்தவள் அவள். அக்ரூரரைக் கண்ட அவள் அவர் காலில் விழுந்து ஆசியைப் பெற்றுக்கொண்டாள். “தேவகி, இன்னமுமா உன் குழந்தைக் கிருஷ்ணனை நீ மறக்கவில்லை?” என்று வினவினார் அக்ரூரர். “இனி அவன் குழந்தை இல்லை அம்மா. வீரனாக ஆகிவிட்டானே! அதுவும் அவனே நம்மை எல்லாம் காக்க வந்திருக்கும் ஓர் ரக்ஷகன்.” என்றார் சிரித்துக்கொண்டு.

“மரியாதைக்குரிய மூத்தவரே, என் அருமைக் கண்ணன் பிறந்தவுடன் ஒரு நிமிடம் மட்டுமே நான் அவனைக் கண்ணாரக் கண்டேன். பின்னர் அவனைத் துணியில் சுற்றி என் கணவரிடம் ஒப்படைத்தேன். அப்போதிலிருந்து என் கண்ணெதிரே துணியில் சுற்றிய என் கண்ணனின் முகமே தான் நினைவில் வருகிறது. அவனை வேறு எந்தவித உருவத்திலும் என்னால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. இருக்கட்டுமே, அவன் மூன்று உலகங்களுக்கும் ராஜாவாகவே இருக்கட்டுமே, என் அண்ணாரே, ஆனாலும் அவன் என் அருமைக் குழந்தைதான். துணியில் சுற்றி என் கணவரிடம் ஒப்படைத்தபோது எதை நினைத்தோ அவன் களுக்கென்று சிரித்துக்கொண்டிருந்தான். என்னால் அதை மறக்கவே முடியவில்லை.” என்றாள் கண்ணீர் ததும்ப.

“ஓஓஓ, தேவகி, அமைதி, அமைதி, சுபத்ரா எப்படி இருக்கிறாள்?” என்று கேட்டார். பலராமனுக்கும், கண்ணனுக்கும் பின்னர் பிறந்தவள் சுபத்ரா. “ஓ, அவளுக்கு என்ன? அண்ணாரே, அவள் நன்றாகவே இருக்கிறாள். ஆரோக்கியமாக இருக்கிறாள். எந்நேரமும் சிரிப்புத் தான். ஓர் அழகிய இளமங்கையாக வருவாள் என நினைக்கிறேன்.” குரலில் பெருமை கூடியது தேவகிக்கு.

“ம்ம்ம்ம்ம்.., இப்படி நீ கண்ணனையே நினைத்துக்கொண்டு அவனுக்காகவே உருகுவது சுபத்ராவுக்குக் கொஞ்சமும் சங்கடமாய் இல்லையா?? அதற்காக அவள் வருந்தவே இல்லையா? உனக்குத் தான் இவ்வாறு கண்ணனுக்கு எனத் தனி அன்பைக் காட்டிக்கொள்ள சங்கடமாய்த் தோன்றவில்லையா?” என்றார் அக்ரூரர்.

“அண்ணாரே, ஒரு தாய் தன் ஒரே மகளை எந்த அளவுக்கு நேசிக்கவேண்டுமோ அந்த அளவுக்கு சுபத்ராவை நான் நேசிக்கிறேன். ஆனால் கண்ணனின் விஷயம் வேறு. அவன் என் உலகம். என் மூச்சு, என் ஜீவன், என் கடவுள். இவ்வுலகத்திலும், மறு உலகத்திலும் , இன்னும் நான் எங்கே சென்றாலும் அவனே எனக்கு எல்லாமுமாய் இருக்கிறான். அது போகட்டும்; குந்தி எப்படி இருக்கிறாள்? அவள் பிள்ளைகள்? அனைவரும் நலம்தானே?”

அக்ரூரர் தான் ஹஸ்தினாபுரம் சென்றது பற்றியும் அங்குள்ள நிலைமைகள் குறித்தும் ஒரு சின்ன விளக்கத்தை தேவகிக்குக் கொடுத்தார். அவர் மனம் மீண்டும் பழைய விஷயத்திலேயே இருந்த்து. ஆகையால் அதற்குத் தாவினார்:”தேவகி, நான் வரும் வழியில் வேதவியாசரைப் பார்த்தேன். பக்தியைப் பற்றியும், அதிலும் தெய்வீகமான அன்பு எவ்வாறு பக்தியாக மாறுகிறது என்பதைப் பற்றியும் அவர் கூறிக்கொண்டிருந்தார். எனக்கு உன் நினைவுதான் வந்தது. அதுசரி, தேவகி, பால கோபாலனை நினைத்துக்கொண்டே இருக்கும் உன்னால் எவ்வாறு சுபத்ராவுக்கும் தாயாய் இருக்க முடிகிறது?”

“என்னால் இயலும். திருமணம் ஆன நாள் தொட்டுப் பத்துவருடங்களுக்கும் மேல் சிறையில் இருந்த நான் எனது ஒரே விடுதலையாக நம்பி வந்ததே என் எட்டாவது குழந்தையைத் தான். பலவிதமான துன்பங்களையும் அநுபவித்தாலும் எட்டாவது குழந்தைப் பிறப்பையும் அதன் மூலம் விடுதலையையும் என் மனம் தேடிக்கொண்டே இருந்தது. கடைசியில் பல துன்பங்களை அநுபவித்தாலும் கண்ணன் பிறந்தான். அவன் மற்றவர்கள் வரையிலும் அவர்களை மீட்பவனாக மட்டுமே இருந்திருக்கலாமோ என்னமோ! என் வரையில் அவனே எனக்குக் கடவுள். ஆனால் அவன் பிறந்த அடுத்த கணமே என்னை விட்டுப் பிரிந்தான். அதன் பின்னர் கழிந்த வருடங்கள்!! காத்திருந்தேன்! காத்திருந்தேன் ஐயா, காத்திருந்தேன். இவ்வுலகில் எந்தத் தாயும் தன் குழந்தை இன்னொருத்தியைத் தாய் என்று சொல்லி வளர்ந்து வருவதைப் பொறுத்திருப்பாளா? நான் பொறுத்திருந்தேன். பதினைந்து வருடங்கள்! அவனுக்காக இரவும், பகலும் அவனையே நினைத்துக்கொண்டு, அவனைத் தூங்க வைத்து, அவனை எழுப்பிப் பாலூட்டித் தாலாட்டி! “
“இவ்வளவு கடுமையான காத்திருப்பிலும் அவன் என்னுடனேயே இருப்பதாயும், என் முன்னால் இருப்பதாயும் உணர்ந்தேன். அவன் என் கண்ணெதிரே இல்லாதபோதும், நான் விட்டுப் பிரிந்த அதே குழந்தை வடிவில் அவனைக் கண்டேன். அவனோடு பேசினேன், பாலூட்டினேன், அவனுக்காகத் தாலாட்டுகள் பாடினேன். அவனை அணைத்து மகிழ்ந்தேன்! என் கண்ணன், என் குழந்தை, என் மகன். ஆனால் என் அண்ணாரே! அவன் எனக்காகப் பிறக்கவில்லை. நான் அல்லவோ அவனைப் பெற்றெடுக்கவென்றே பிறந்துள்ளேன்! என்ன பாக்கியம் செய்தேனோ! நான் தான் அவனுக்கு அம்மா. நான் அவனுடையவள். என் மூச்சுக்காற்று இருக்கும் வரைக்கும் நான் அவனுடைய தாய்!


"இதோ, இப்போது கூட என் கண்ணெதிரே என் முன்னே என் கண்ணன் நிற்கிறான், என் அண்ணாரே! அவன் என்னை விட்டு ஒரு நாளும், ஒரு கணமும் பிரியவே இல்லை. என்னுடனேயே எப்போதும் இருக்கிறான். என்னோடு பேசுகிறான். எனக்கெனத் தனியான விருப்பங்கள் ஏதும் இல்லை. அவன் விருப்பமே என் விருப்பம். நான் நடந்தேன் என்றால் அது அவனுக்காக. நான் விடும் ஒவ்வொரு மூச்சும் அவனுக்காக. நான் உண்டேன் என்றால் அதுவும் அவனுக்காக. என் ஒவ்வொரு செயலும் அவனுக்காக. அவனில்லாமல் என் வாழ்க்கையே இல்லை. உங்களுக்கு இது புரியாது அண்ணாரே! உங்களால் புரிந்துகொள்ளவும் இயலாது. நீங்களும் கண்ணனை ஒரு கடவுள் என்றே நினைக்கிறீர்கள் என்பதும் எனக்குத் தெரியும். மேலும் உங்கள் கண்களுக்கு அவன் வளர்ந்த ஒரு இளைஞனாகவும், வீரனாகவும் தெரிகிறான். யாதவ குலத்தின் ரக்ஷகனாகத் தெரிகிறான்.


ஆனால் எனக்கு எங்கு நோக்கினும் பாலகிருஷ்ணனாகவே இருக்கிறான். இந்த அந்தப்புரத்தின் மற்றப் பெண்கள் என்னை ஒரு பைத்தியம் என நினைக்கிறார்கள் என்பதையும் நான் புரிந்து கொண்டிருக்கிறேன். ஒருவேளை தாங்களும் அவ்விதம் நினைக்கலாம். ஆனால், எனக்கென்று, நான் என ஒரு தனித்தன்மை இல்லாமல் கண்ணனிலேயே நான் கரைந்து போய்விட்டேன் ஐயா. அவனையே நான் எங்கெங்கும் காண்கிறேன். என்னால் வேறு எவரையும் காண இயலவில்லை!”

5 comments:

பித்தனின் வாக்கு said...

ஒரு தாயின் தவிப்பு அருமையாக எழுதியுள்ளீர்கள். நன்று. இவர்களும், யேசோதையும், இராதவும் தான் பாவம். கண்ணனை என்னி பிரேமை கொண்டவர்கள் ஆகிவிட்டனர்.நன்றி அம்மா. அருத்ரா களி எங்களுக்கு கிடையாதா?. அந்த தொடரும் அருமையாக எழுதியுள்ளீர்கள்.

priya.r said...

நல்ல பதிவு;பதிவுக்கு நன்றி கீதாம்மா ;
அத்தியாயம் 39 படித்து முடித்து விட்டேன்
குழந்தை தெய்வமான பால கிருஷ்ணனின் நினைவுகளையும் ஏக்கங்களையும்
தேவகியின் வாயிலாக வெளிபடுத்திய விதம் அருமை !
தொடர்ந்து எழுத எனது பணிவான வாழ்த்துக்கள் ........

sambasivam6geetha said...

வாங்க பித்தனின் வாக்கு, ஆருத்ரா களி எனக்குச் சிதம்பரத்தில் அல்லவோ கிடைத்தது?? :)))) நன்றிங்க.

sambasivam6geetha said...

நன்றி ப்ரியா.

இராஜராஜேஸ்வரி said...

அப்போதிலிருந்து என் கண்ணெதிரே துணியில் சுற்றிய என் கண்ணனினமுகமே தான் நினைவில் வருகிறது. அவனை வேறு எந்தவித உருவத்திலும் என்னால் நினைத்துக்கூடப் பார்க்கமுடியவில்லை. //
தேவகியின் தவிப்பை கண்கூடாக உணர முடிகிறது.