Monday, February 7, 2011

கண்ணன் வருவான், கதை சொல்லுவான் 2-ம் பாகம்!

எல்லாவற்றையும் விட ப்ருஹத்பாலனுக்கும், அவன் நண்பர்களுக்கும் ஆத்திரமடைய வைத்த ஒரு விஷயம் கண்ணனிடம் இருந்த அந்த காந்த சக்திதான். அனைவரையும் பார்த்த மாத்திரத்தில் தன் பக்கம் இழுத்தான் கண்ணன். அவனைக் கண்டவர் ஆணோ, பெண்ணோ, பறவைகளோ, மிருகங்களோ, அவ்வளவு ஏன் செடி, கொடிகளும், மரமும், மலையும், நதியும், கடலும் கூட அவன் ஆணைக்குக் கட்டுப்பட்டவை போல் தென்பட்டன என்றால் மிகையில்லை. அதுவும் தினம் காலை அவன் நதியில் குளிக்கச் சென்றால் அவன் வரும் நேரத்தைத் தெரிந்து வைத்துக்கொண்டு ஒரு கூட்டம் கண்ணன் தரிசனத்திற்குக் காத்துக்கிடக்கிறது. மஹாதேவர் கோயிலுக்குக் கண்ணன் சென்றால் அங்கே மஹாதேவரை வணங்குவதையும் விட்டுவிட்டு மக்கள் கூட்டம் அவனை மொய்த்துக்கொள்கிறது. பெண்களோ எனில் தேவகியின் அந்தப்புரத்திற்குக் கண்ணன் வரும் நேரம் அங்கே குழுமுகின்றனர் . இளைஞர்களும், மற்ற ஆண்களும், கண்ணன் மல்யுத்தப் பயிற்சி செய்யும் இடத்திலும், ஆயுதப் பயிற்சி மேற்கொள்ளும் இடத்திலும் கூடுகின்றனர். அவன் சொல்வதை வேதவாக்காய் நினைக்கின்றனர்.

ப்ருஹத்பாலன் எப்போதையும் விட அமைதியாகிவிட்டான். சாத்யகிக்கோ தன் நண்பனும், பட்டத்து இளவரசனாகப் போக இருந்தவனும் ஆன ப்ருஹத்பாலனின் திறமை மீது அவநம்பிக்கை கொண்டுவிட்டான். கண்ணன் எதிர்பார்க்கும் குணங்கள் எதுவும் தன்னிடமோ தன் நண்பர்களிடமோ இல்லை என்பதைப் புரிந்துகொண்டுவிட்டான். ப்ருஹத்பாலன் இனி பட்டத்து இளவரசன் ஆவது கடினம் என்றே தோன்றியது. ஆனால்
ப்ருஹத்பாலனின் கவலையே வேறு! அவன் மதுராவின் அரசனாக முடிசூட்டிக்கொண்டு ஜராசந்தனின் நட்பைப் பெற்று சுகமாய் வாழலாம் என நினைத்துக்கொண்டிருந்தான்,; அந்த எண்ணத்தில் கண்ணன் மண்ணைப் போட்டுவிட்டானே! கண்ணன் ஜராசந்தனையே ஜெயித்து ஓட ஓட விரட்டிவிட்டான் என்ற குதூகலத்தில் ஆழ்ந்திருக்கும் மதுரா நகரம் இனி ப்ருஹத்பாலனை நினைக்குமா?

ஆஹா, நான் மட்டும் ஜராசந்தனிடம்…….. சட்டென ஒரு பயம் தாக்கியது ப்ருஹத்பாலனுக்கு. கிருஷ்ணன் இருக்குமிடத்தை ஜராசந்தனுக்குச் சொன்னதும், கிருஷ்ணனைக் காட்டிக்கொடுத்ததும், தான் தான் என்பதை எவரேனும் கண்டு பிடித்துத் தன்னைக் காட்டிக்கொடுத்துவிட்டால்?? அவன் தாயான கம்சாவிற்கோ, அசூயையிலும், அதன் விளைவாக எழுந்த ஆத்திரத்திலும் என்ன செய்வதென்றே புரியவில்லை. தன் பிரியத்துக்கு உகந்த மகன் ஆன ப்ருஹத்பாலன் இனி அரியணை ஏறமுடியும் என்பது கனவு என்று புரிந்துவிட்டது அவளுக்கும். திடீரென எங்கிருந்தோ வந்து தன் கனவுகள் அனைத்தையும் சுக்குநூறாக ஆக்கிய கண்ணன் மேல் இனம் தெரியாத துவேஷமும் ஏற்பட்டது. இந்தச் சூழ்நிலையைச் சரியாகவும் நிதானமாகவும் கையாளவேண்டும். அதற்குத் தகுந்த நபர் சாத்யகிதான். கம்சாவிற்கு மீண்டும் கண்ணன் மேல் கோபம் மூண்டது.

சாத்யகி கம்சா நினைத்தது போல் விரைவில் நிதானத்துக்கு வந்துவிட்டான். அடுத்து என்ன செய்யவேண்டும் என்று தீர்மானிக்கவேண்டும். தன் நண்பர்களை ஒன்று திரட்டினான். சரியான சமயம் வந்ததும் கண்ணன் மேல் தாக்குதல் நடத்திக்கொள்ளலாம் என்றும், அதுவரை பொறுமையைக் கடைப்பிடித்துக்கொண்டு நாமும் மல்யுத்தப் பயிற்சி, ஆயுதப் பயிற்சி என்று கலந்து கொள்வோம் என்று கூறினான். அனைவருக்கும் இந்த யோசனை பிடித்தது. ஆகவே அவர்களும் அனைவருடனும் கலந்து கொண்டு எல்லாப் பயிற்சிகளையும் மேற்கொண்டார்கள். முக்கியமாய் ரதம் விரைவாக ஓட்டும் பயிற்சி. ப்ருஹத்பாலன் அதில் தீவிரம் காட்டி வந்தான்.

அந்தப்புரத்தில் ஷாயிபாவுக்கு புது இடமும், புதிய சூழ்நிலையும், புதிய மனிதர்களும் கண்டாலே பிடிக்கவில்லை. ஆத்திரமாய் வந்தது. அவளை மீண்டும் பழைய நிலைக்கு மாற்றவேண்டி தேவகி அம்மாவும், திரிவக்கரையும் எடுத்த முயற்சிகள் அனைத்தையும் தோல்வியைத் தழுவும் வண்ணம் அவள் மாறவோ, மனதை மாற்றிக்கொள்ளவோ மறுத்தாள். என்றாலும் அவள் மனதையும் கவர்ந்த ஒரு விஷயம் தேவகி அம்மா பாலகிருஷ்ணனுக்கு வழிபாடு செய்து வந்தது. அவள் சித்தப்பன் ஆன ஸ்ரீகாலவனுக்கு இப்படி ஒரு உள்ளார்ந்த ஈடுபாட்டுடனேயே அவளும் வழிபாடுகளைச் செய்து வந்திருந்தாள். அவ்வளவு ஈடுபாட்டுடன் இந்த பாலகிருஷ்ண விக்ரஹத்திற்கு தேவகி அம்மா வழிபாடுகள் செய்கிறார்களே! அதையே ஆச்சரியத்துடன் கவனிப்பாள் ஷாயிபா. என்றாலும் அவள் தன் நாக்கையே சாட்டையாகப் பாவித்து அனைவரையும் ஓட ஓட விரட்டினாள். தன் வார்த்தைகளால் அனைவரின் மனதையும் புண்ணாக்கினாள். தேவகி அம்மாவிடம் கடுமையைக் காட்டுவதற்குக் கொஞ்சம் கஷ்டமாய் இருந்தாலும் ஷாயிபா அவளையும் விட்டு வைக்காமல் தன் அதிகப் பிரசங்கித் தனமான கேள்விகளாலும், கடுமையான குதர்க்கப் பேச்சுக்களாலும் அவள் மனதையும் புண்ணாக்க முயன்றாள். ஆனால் தேவகியோ அனைத்தையுமே தன் அன்பும், கருணையும், கனிவும் நிறைந்த பேச்சாலேயே சமாளித்தாள். ஷாயிபா எவ்வளவு மோசமாய் அவளை நடத்தினாலும் அதைப் பொறுத்துக்கொண்டு அவளிடம் அன்பு பாராட்டினாள்.

திரிவக்கரையோ ஷாயிபாவிடம் ஒரு சிநேகிதியாகவே நடந்து கொண்டாள். ஷாயிபா தன் பழைய வாழ்க்கையை நினைத்துக்கொண்டு அழும்போதெல்லாம் அவளை நன்றாக வாய்விட்டு அழும்படி செய்தாள் திரிவக்கரை. அவள் துன்பப் பட்டு மனம் வருந்தினால் அவளிடம் அப்போது ஒரு வார்த்தை கூடப் பேசாமலேயே அவளுக்கு வேண்டிய பணிவிடைகள் செய்தாள். ஷாயிபா திரிவக்கரையிடம் கோபத்தைக் காட்டினாள் என்றால் அவள் அதை லக்ஷியமே செய்யவில்லை. ஆனால் ஷாயிபா கண்ணனைப் பற்றி ஒரு வார்த்தை தப்பாய்க் கூறிவிட்டால் போதும்! பொங்கி எழுவாள் திரிவக்கரை. கண்ணன் நிகழ்த்திய அற்புதங்களை எடுத்துச்சொல்லுவாள். அவனுடைய நேர்மையை, அவன் எவ்வாறு தர்மத்திலிருந்து பிறழாமல் இருக்கிறான் என்பதை, அவன் எவ்விதம் கூனும், அழகற்றவளாயும் இருந்த தன்னை ஒரு அழகான பெண்ணாக மாற்றினான் என்பதை! சொல்லச் சொல்ல அலுக்காது திரிவக்கரைக்கு. மேலும் ஷாயிபாவுக்குக் கோபம் வந்து கண்ணனைக் குறித்து அவதூறான சொற்களைப் பேசிக் கத்த ஆரம்பித்தால் திரிவக்கரையும் அவள் குரலுக்கும் மேல் குரலெடுத்துக் கத்த ஆரம்பிப்பாள். கடைசியில் இருவருக்குமே களைப்பும், அலுப்பும் வர ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்வார்கள். ஷாயிபாவிற்கோ சுயப் பச்சாத்தாபத்தில் மனம் நைந்து போக தன்னை அறியாமல் கண்ணீர் விட்டு அழ ஆரம்பிப்பாள். திரிவக்கரை தன்னைத் தானே சமாதானம் செய்து கொண்டு ஷாயிபாவையும் ஆறுதல் வார்த்தைகள் கூறித் தேற்ற ஆரம்பிப்பாள்.

கண்ணன் இரு நாட்களுக்கு ஒருமுறை அங்கே வந்து நலம் விசாரிப்பான். திரிவக்கரையை இப்போது தேவகியின் அந்தப்புரத்திலேயே தங்க வைத்திருந்தான். ஒருநாள் கம்சாவும் ஏதோ வேலையாக அங்கே வந்திருக்கையில் ஷாயிபா தன் வழக்கமான அலக்ஷியத்துடனும், கர்வம் பொங்கவும், தேவகியைப் பார்த்து, “இந்தப் பொம்மையை எத்தனை நாட்கள் அம்மா வைத்து வழிபாடு செய்வீர்கள்? உங்கள் பொன்னான நேரத்தை இந்தப் பொம்மையைக் குளிப்பாட்டுவதிலும், அலங்கரிப்பதிலும், உணவு ஊட்டுவதிலும் செலவு செய்கின்றீர்களே?” என்றாள்.

“குழந்தாய், அது என் கடவுள்! என் உயிர்! என் ஜீவன்!” தேவகிக்கு ஷாயிபாவின் இந்த நடவடிக்கைகளும், அவள் கேள்விகளும் இப்போது மிகவும் பழகி விட்டது. “யாரம்மா இந்தக் கடவுள்? இந்த பொம்மைக்குழந்தையா உங்கள் கடவுள்?” மீண்டும் அலட்சியமாய் ஷாயிபா. தேவகி பொறுமையாக, “ இவன் என் மகன் என்பது உனக்குத் தெரியுமே ஷாயிபா!” என்றாள். “ஓ,ஓ, நான் நன்றாய் அறிவேன் அம்மா. இந்தப் பொம்மை ஒரு சின்ன்ஞ்சிறு குழந்தைப் பொம்மையாக அல்லவோ உள்ளது? உங்கள் மகன் நன்கு வளர்ந்து இளைஞனாக ஆகிவிட்டாரே!”

தேவகியின் ஈடுபாட்டையும், பக்தியையும் பற்றி அறிந்திருந்த மற்றப் பெண்களுக்கு ஷாயிபாவின் இந்தக் கேள்வி கொஞ்சம் அச்சத்தையே உண்டாக்கியது. ஆனால் தேவகி அதே நிதானத்தோடு, “எனக்கு அவன் எப்போதுமே குழந்தைதான் ஷாயிபா. அவன் பிறந்தபோது நான் அவனை இவ்வாறே கண்டேன். உனக்குத் தெரியும் அல்லவா? அவன் பிறந்ததும், கோகுலத்திற்குச் சென்றுவிட்டான் என்றும், அங்கே யசோதையிடம் வளர்ந்தான் என்பதும், பதினாறு வருடங்கள் நான் அவனைக் கண்களால் கண்டது கூட இல்லை என்பதும், நீ அறிவாய் அல்லவா? அப்போது அந்த மீளாத் துயரத்திலிருந்து என்னை மீட்டது இந்தக் குழந்தை விக்ரஹம் தான். இவனை இவ்வகையில் நான் அநுதினமும் வழிபட்டு வந்திருக்காவிட்டால் இன்று உயிரோடு இருந்து கொண்டு உன்னுடன் பேசிக்கொண்டிருக்க மாட்டேன்.”

“இருக்கலாம் அம்மா, ஆனால் இந்தப் பொம்மைக் கண்ணனைப் பார்த்தால் கண்ணன் இப்போது எப்படி இருக்கிறானோ, அதைப் பற்றிச் சுட்டிக்காட்டுவதாகத் தெரியவே இல்லையே! போகட்டும், இத்தனை புத்திசாலி ஆன அவன் ஏன் இன்னமும் உங்களை இந்தப்பொம்மைக்கு வழிபாடு செய்து வருவதை அநுமதித்து வருகிறான்? அவன் தான் நேரிலேயே வந்துவிட்டானே?”

“குழந்தாய், கண்ணனுக்குத் தெரியும் எது நன்மை, எது தீமை என்பது!” தேவகி பொறுமையாய்ச் சொல்ல ஷாயிபா ஏளனமாய்ச் சிரித்தாள்.

“அவனுக்கா? அவனுக்கு நன்மை, தீமை, நல்லவர், கெட்டவர் எதுவும் தெரியாது!” என்றாள்.


இந்தக் கண்ணன் கதை திரு கே.எம். முன்ஷி அவர்கள் எழுதிய கிருஷ்ணாவதார் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு எழுதப் படுகிறது என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகிறேன். நன்றி.

2 comments:

priya.r said...

நல்ல பதிவு
இந்த 42 அத்தியாயத்தை படித்து விட்டேன்
திரு முன்ஷி அவர்கள் எந்த மொழியில் இதனை எழுதினார் கீதாம்மா

//“குழந்தாய், அது என் கடவுள்! என் உயிர்! என் ஜீவன்!” தேவகி//
படிக்க படிக்க தேவகி அவர்களின் பாசத்தையும் பகுதியையும் நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை .,
எனது தோழி சிட்னியில் இருக்கும் ஜானு கூட இப்படி தான் மூன்று ஸ்வர்ண கிட்டா(கிட்டா என்பது சிலை என்று பொருள் தானே ) வைத்து பூசிப்பதாக எழுதி இருக்கா

பதிவுக்கு நன்றி கீதாம்மா

இராஜராஜேஸ்வரி said...

கிருஷ்ண்ன் என்றாலே ஆக்ர்ஷிப்பவன் என்றுதானே பொருள்?
கதையும் என்னை ஆகர்ஷித்துவிட்டது.