Tuesday, June 28, 2011

ருக்மிணியின் கனவு! கண்ணன் வந்தான் 2ஆம் பாகம்!

பலநாட்களாக நாம் கண்ணனோடேயே இருந்துவிட்டோம். ருக்மிணியைக் கவனிக்கவே இல்லை. ஏற்கெனவே அவள் மிகுந்த கோபத்திலும், ஆத்திரத்திலும் இருக்கிறாள். இப்போ நாம் வேறு கவனிக்கவில்லை என்றால் அவ்வளவு தான்! வாருங்கள், ஷ்வேதகேதுவை விடவும் சீக்கிரமாய்ப் போவோம் விதர்ப்ப நாட்டிற்கு. அந்நாட்டின் அரசனுக்குக் கண்ணின் கருமணியைப் போன்றவள் இளவரசி ருக்மிணி. ருக்மிக்குத் தன் ஒரே தங்கையும் அதிபுத்திசாலியுமான ருக்மிணியின் மேல் அளவு கடந்த வாஞ்சை. அவள் கண்ணால் கண்டதை அவர்கள் வாங்கிக் கொடுத்தார்கள். மனதில் என்ன நினைப்பாள் என முன்கூட்டியே தெரிந்து கொண்டு நிறைவேற்றினார்கள். ஆகவே திருமண விஷயத்திலும் தன்னிஷ்டம் போலவே நடக்கவேண்டும் என ஆசைப்பட்டாள் ருக்மிணி. ஆனால் இந்தப் பெரியவங்க படுத்தற பாடு இருக்கே! அப்பப்பா! தொல்லை தாங்க முடியலை! ஏதோ ராஜாங்க விஷயமாம்; அதற்காகக் கூட்டுச் சேரப்போறாங்களாம். அதற்கு விதர்ப்பநாடும், சேதிநாடும் இணைவது நல்லதாம். ஆகவே ருக்மிணிக்கு சிசுபாலன் தான் கணவன் என நிச்சயப் படுத்தி விட்டார்கள். அதுவும் எப்படி? பெயருக்கு ஒரு சுயம்வரத்தை ஏற்படுத்திவிட்டு. ஏற்கெனவே தேர்ந்தெடுக்கப் பட்ட சிசுபாலன் தான் வென்றான் என அறிவிப்பார்கள். சேச்சே! கேவலம்! கேவலம்! இப்படியும் நடக்குமா?

எல்லாம் நாம் நினைப்பதற்கு மாறாகவன்றோ நடக்கிறது! சிசுபாலனுக்கும் எனக்கும் திருமண ஏற்பாடுகள் நடக்கும் வேகத்தைப் பார்த்தால் தலை சுற்றுகிறதே! மதுராவிற்கு அழைப்பே அனுப்பவில்லையாமே! ம்ம்ம்ம்? அப்படி எனில் கண்ணன் வருவானா? இந்தத் தாத்தாவை நம்பினால் எதுவுமே நடக்காது போல் தெரிகிறது. அவரும் அண்ணனை எதிர்க்கத் தனக்கு வயது பத்தாது என்றும் இந்த முதிர்ந்த வயதில் இளம் வயதும், துடிதுடிப்புடனும் இருக்கும் ருக்மிக்கு எதிராய்ப் பேச முடியவில்லை என்றும் புலம்புகிறார். அப்பா பீஷ்மகரோ பட்டத்து இளவரசனின் வேலைகளில் தான் குறுக்கிடுதல் இயலாது என்று மறைமுகமாய்க் கூறுகிறார். ருக்மிணியும் தன்னால் இயன்றவரை அழுது பார்த்துவிட்டாள்; தன்னைச் சின்னஞ்சிறு வயதினிலே விட்டுவிட்டு மறைந்த தன் தாயைப் பற்றிப் புலம்பித் தீர்த்துவிட்டாள்; அவ்வளவு ஏன்? தகப்பனோடு சண்டையும் போட்டுப் பார்த்துவிட்டாள். ஆனால் பீஷ்மகனோ தன் மகனுக்கு எதிராக ஒரு துரும்பைக் கூடத் தூக்கி அந்தப் பக்கம் போடத் தயாராக இல்லை.

ஜராசந்தனின் நட்புக்காகவும், அவனோடு தான் வைக்கப் போகும் கூட்டுக்காகவும், ருக்மி தன் தங்கை ருக்மிணியின் வாழ்க்கையைப் பணயம் வைக்கத் தயாராகிவிட்டான்; ஆம், இப்படித் தான் நினைத்தாள் ருக்மிணி. பதிலுக்கு ஜராசந்தனின் பேத்தி அப்நவியைத் தனக்கு வாழ்க்கைத் துணைவியாகக் கொள்ளப்போகிறான் ருக்மி. அந்நாட்களில் மன்னர்கள் அடிக்கடி யுத்தகளம் செல்ல வேண்டி இருந்ததாலும், பட்டத்து ராணி என ஒருத்தி இருந்தாலும், அவளுக்குக் குழந்தைப் பேறு தாமதமானால் இரண்டு, அல்லது மூன்று பெண்களைத் திருமணம் செய்து கொள்வது வழக்கமாய் இருந்தது. இதில் யாரும் எந்தத் தவறும் காணவில்லை. ஏனெனில் ராஜ்ய பரிபாலனம் நடக்கவேண்டுமே! இரண்டு அல்லது மூன்றாம் ராணியாக வருபவர்களும் குறைந்த அந்தஸ்தில் இருந்து தேர்ந்தெடுப்பதில்லை. அவர்களும் ஒரு நாட்டுக்கு இளவரசியாகவே இருப்பார்கள். ஆகவே பட்டத்து ராணியாக இருப்பவள் வேறுவழியில்லாமல் அவர்களையும் அநுசரித்து, ஆதரவு காட்டியே நடந்து கொள்வாள். இதிலே எவருக்கு முதலில் ஆண்பிள்ளை பிறக்கிறதோ அவர்களின் அந்தப் பிள்ளையையே அடுத்த பட்டத்துக்குத் தேர்ந்தெடுப்பார்கள். ஆகவே இப்போது ருக்மி செய்யப் போவதில் எவரும் குறை காண இயலாது. இது ருக்மிணிக்கும் நன்கு தெரிந்தே இருந்தது.

நாலாதிசைகளுக்கும் தூதுவர்கள் சென்று சுயம்வரத்திற்கான அழைப்பைக் கொடுத்துக் கொண்டிருந்தனர். விதர்ப்ப நாடே திமிலோகப் பட்டுக்கொண்டிருந்தது. ருக்மிணிக்கு இவை எதுவும் பிடிக்கவில்லை; நாம் பாட்டுக்கு நம் அரண்மனையின் கன்னிமாடத்தில் போய் மறைவாக அமர்ந்து கொண்டு விடலாமா என யோசித்தாள். ஆனால் வாழ்க்கையில் பிடிப்பும், ஆவலும், எதிர்பார்ப்புக்களும் கொண்ட ருக்மிணியால் அவ்விதம் மறைவாக இருந்து கொண்டு வாழ்வது என்பது அவளால் நினைக்கவும் முடியாத ஒன்று. இன்னமும் அவள் நம்பிக்கையை இழக்கவில்லை. என்றோ ஓர் நாள் அந்தக் கருநீல நிற இடைச்சிறுவன் கண்ணனை அவள் மணந்து கொள்ளத் தான் போகிறாள். அவன் என்ன பிறப்பால் இடையனா? அவனும் ராஜகுலம் தானே? க்ஷத்திரியன் தானே? ஏதோ சந்தர்ப்பக் கோளாறு; சில வருடங்கள், ம்ம்ம்ம்?? பதினாறு வருடங்கள் கோகுலத்திலும், விருந்தாவனத்திலும் இடையர்கள் மத்தியில் வளர நேரிட்டுவிட்டது. அதனால் வசுதேவரின் பிள்ளை இல்லை என்றாகிவிடுவானா? ஆஹா, அவனுடைய சாகசங்களைப் பற்றி மக்கள் கதை, கதையாய்ச் சொல்கிறார்களே; என்றோ ஓர்நாள் அவன் இங்கேயும் திடீரென வந்து என்னையும் தூக்கிக் கொண்டு போய்த் திருமணம் செய்து கொள்வான். அந்த நாள் வெகு தூரத்தில் இல்லை.

1 comment:

priya.r said...

இந்த அத்தியாயம் 73 ஐ படித்து விட்டேன் கீதாம்மா .,

ஆமாமாம் ; இந்த ஷாயீபா செய்த செயல்களால் ருக்மணி பத்தி நினைவே வரவில்லை தான்

ருக்மணி மனதளவில் தைரிய சாலியாகவும் கண்ணன் மேல் நம்பிக்கையுடனும் தான் இருக்கிறாள் .,என்ன நடக்கிறது என்று பார்ப்போம்

பதிவுக்கு நன்றி கீதாம்மா