Wednesday, August 22, 2012

பானுமதியின் அழைப்பும், கண்ணனின் வியப்பும்!


துரியோதனனும் அவன் தம்பியும் மதுபானம் அருந்தி இருப்பார்களோ என்ற சந்தேகம் அவர்கள் நடந்து வந்த விதத்திலிருந்து தெரிய வந்தது.  கிட்டே வந்ததும்,  துரியோதனனின் தடுமாற்றம் நிறைந்த பேச்சால் அது நிரூபணம் ஆயிற்று.   துரியோதனன் கண்ணனிடம், “வாசுதேவா, இதோ என் தேவி இன்று கெளரி பூஜை செய்கின்றாளாம்.  அவள் மட்டுமல்ல;  மற்ற இளவரசிகளும் தான்.  ஆகவே அந்தப் பூஜையில் கலந்து கொள்ள உன்னை அழைக்க வந்துள்ளோம்.”  என்றான்.  கண்ணன், “மன்னித்துக்கொள், துரியோதனா, நான் படுத்துத் தூங்கத் தயார் செய்து கொண்டிருக்கிறேன்.” என்று மறுக்கும் விதமாய்ச் சொன்னான்.  அப்போது பானுமதி கண்ணனை நேரடியாகப் பார்த்து, தன் நாட்டியமாடும் கண்களால் சிரித்தாள்.  அவள் சிரிக்கையில் கண்கள் தனியாகச் சிரித்தன; கன்னங்கள் தனியாகச் சிரித்தன;  உதடுகள் தனியாகச் சிரித்தன.  கண்களோ ஒரு நாட்டிய விழாவையே நடத்தியது.  அதை ரசித்தான் கண்ணன்.  அவள் தன் சிரிக்கும் கண்களால் அவனைப் பார்த்த வண்ணம், “எங்களை  நீங்கள் ஏமாற்றக் கூடாது வாசுதேவரே!  உங்களைப் பற்றிய அனைத்துச் செய்திகளையும் நாங்கள் அறிந்து வைத்துள்ளோம்.  விருந்தாவனத்தின் கோபியரின் கண்ணின் கருமணியே நீர் தாம் என நாங்கள் அறிவோம்.  நாங்களும் அவர்களுக்குச் சளைத்தவர்களல்ல என்பதை இன்று பார்ப்பீர்கள்!” என்றாள்.  அவள் இதைச் சொன்ன விதத்தில் இருந்து அவளை ஏமாற்றி விட்டுத் தப்பும் எண்ணம் கண்ணனுக்கு இருந்தால் அது அறவே நீங்கியது.

“விருந்தாவனம் நிகழ்ச்சிகள் எல்லாம் பழைய பசுமையான காலங்கள்;  அந்தக் காலமே வேறு.  இது வேறு காலம்.  அதோடு நான் இப்போது இருக்கும் நிலையில் விருந்தாவனத்தில் என்னை ஏற்பது சந்தேகமே.  அங்கிருந்த கோவிந்தன் இப்போது இல்லை.  அதோடு நான் இப்போது உங்களுடைய கொண்டாட்டங்களில் கலந்து கொள்ளும் மனநிலையோடு இல்லவும் இல்லை.” என்றான் கண்ணன்.  தன் கால்களால் சிறு குழந்தையைப் போலவே தரையை உதைத்தாள் பானுமதி.  “இல்லை; இல்லை” என்றாள் பிடிவாதமாக.  “நீர் கட்டாயமாக வருகிறீர். “ சட்டெனக் குரலைத் தழைத்துக்கொண்டு இரக்கமாக, “உமக்கு இங்கே பொழுது சந்தோஷமாகவே கழியவில்லை;  விருந்தாளியான உமக்கு சந்தோஷத்தைக் காட்ட வேண்டியது எங்கள் கடமை.  அதோடு இப்போது தான் துக்க நாட்களும் முடிவடைந்து விட்டனவே.” என்றாள் விடாமல்.  ஒரு அரசகுமாரிக்குரிய கம்பீரமோ, அதிகாரமோ இல்லாமல் சின்னக் குழந்தையைப் போல் நடந்து கொண்டிருந்த பானுமதியின் இயல்பே அதுதான் என்பதைக் கண்ணன் புரிந்து கொண்டுவிட்டான்.  ஆகவே அவளுடைய பேச்சுக்களும், நடத்தையும் அவனுக்கு இயல்பாகவே இருந்தன.  தவறாகப் படவில்லை.  அவளோடு சேர்ந்து துரியோதனனும், அவன் கூட வந்த மற்ற சகாக்களும் கண்ணனை வற்புறுத்தினார்கள். 

அதற்கு மேல் அங்கே தாமதிப்பது கண்ணனுக்குச் சரியாகப் படவில்லை. ஆகவே உத்தவனுக்கும் சாத்யகிக்கும் தான் துரியோதனன் மாளிகையில் பானுமதி நடத்தும் கெளரி பூஜையில் கலந்து கொண்டு விரைவில் திரும்புவதாகச் செய்தியை அங்கே விட்டான்.  பின்னர் அவர்களோடு கிளம்பி துரியோதனன் மாளிகையை அடைந்தான்.  சாமர்த்தியம் என நினைத்துக்கொண்டு துரியோதனன் தன் அழகிய மனைவியின் எளிமையான விகல்பமில்லாமல் பழகும் விதத்தின் மூலம் தன்னை வீழ்த்திவிட எண்ணுவதைக் கண்ணன் புரிந்து கொண்டான். தான் சற்றும் அதற்கு இடம் கொடுக்கக் கூடாது என்றும் உறுதி கொண்டான்.  பானுமதியின் வெகுளித்தனமான பேச்சுக்களால் கண்ணன் கவரப்பட்டாலும் அதன் மூலம் துரியோதனனுக்கு ஏதேனும் லாபம் கிடைக்குமெனில் அதற்குத் தான் இடம் கொடுக்கக் கூடாது என்று எண்ணினான்.  பானுமதி  சில மாதங்கள் முன்னர் தான் துரியோதனனை மணந்து கொண்டு ஹஸ்தினாபுரம் வந்திருந்தாள்.  அவளுக்கு இன்னமும் ஹஸ்தினாபுரத்தின் பழக்க, வழக்கங்கள் பிடிபடவில்லை;  தன் நாட்டில் எப்படி இயல்பாக இருப்பாளோ அவ்வாறே தான் இங்கேயும் இருந்து வந்தாள்.  அவள் உடை அணிந்திருந்த விதமும் அவ்வாறே ஹஸ்தினாபுரத்து ராணிமார் உடுத்தும் விதம் போலில்லை.  அவளின் அழகிய உடலின் எழில் பார்ப்போரைக் கவரும் வண்ணம் இருந்தது என்பதோடு நகைகளால் தன்னை அலங்கரித்துக்கொள்ளாமல்  மலர்களாலேயே அலங்கரித்துக் கொண்டிருந்தாள்.  தலையிலும் மணம் மிக்க மலர்களால் ஆன பின்னலே காணப்பட்டது.  இடுப்பில் மேகலையோ, ஒட்டியாணமோ அக்கால வழக்கப்படி அணியாமல் மலர்களால் ஆன ஒட்டியாணமே காணப்பட்டது.  இந்த அலங்காரங்களோடு அவள் நடந்து வருகையில் வீசிய மணத்தில் இருந்தும், அவள் நடையிலிருந்தும்,  இந்த அழகிய பெண்ணை பிரம்மன் ரத்தத்தோடும், சதையோடும் படைக்கவில்லை;  மணம் வீசும் மலர்களாலேயே படைத்திருக்கிறான் என எண்ணும்படி இருந்தாள்.  அவளைச் சுற்றிலும் சுகந்தம் வீசிக் கொண்டிருந்தது.   கற்பனைக்கெட்டா செளந்தரிய தேவதையான அவள்  ஒரு சிறு குழந்தையைப் போல் சிரித்து விளையாடிக் கொண்டும், காரணமின்றிச் சிரித்துக் கொண்டும் இருந்தாள்.  எதைக் கண்டாலும் வியக்கும் குழந்தைகள் போலவே அவளுக்கும் எல்லாமும் வியப்பாக இருந்தது.  எல்லாவற்றையும் விட அதிசயம் என்னவெனில் கிருஷ்ணனை அன்று தான் முதல் முதலாகப் பார்க்கிறாள் என்றாலும் நெடுநாள் அவனுடனேயே இருந்து நெருங்கிப் பழகியவள் போல் நடந்து கொண்டாள்.

துரியோதனன் மாளிகைக்குச் செல்லும் வழியில் நடந்த சம்பாஷணைகளில் அவளே அதிகம் பேசினாள்.  கண்ணனிடம், “உங்களைப் பற்றிய சகலமும் அறிவேன்;  அதோடு பூர்ண சந்திரோதய காலத்தில் யமுனைக்கரையில் கோபியரோடு நீங்கள் ஆடிய ராஸ் குறித்தும் அறிவேன்.  அப்படி ஒரு பூர்ண சந்திரோதயம் நீங்கள் இங்கிருக்கையில் ஏற்பட்டால், எங்களுக்கும் அந்த நடனவகையைச் சொல்லிக் கொடுங்கள்.  நாங்களும் கோபியரைப் போலவே ஆடிப் பாடிக் களிப்போம்.”  என்றாள்.  “நீ எவ்வாறு இதை எல்லாம் அறிந்தாய்?  எல்லாம் முடிந்து போய்ப் பழைய கதையாகிவிட்டதே!”  என்றான் கண்ணன்.    சட்டெனத் தன் தோளில் கை வைத்த அவளை வியப்பாகப் பார்த்தான் கண்ணன்.  ஓர் அரசகுமாரி, அதுவும் பட்டத்து இளவரசனனின் மனைவிக்கு இம்மாதிரி நடந்து கொள்வது முறையல்ல;  ஆனால்…ஆனால்….இவள்…..ம்ம்ம்ம்ம்…. இவளின் பளிங்கு போன்ற முகத்தைப் பார்த்தாலே இவள் செய்வது தவறல்ல எனத் தோன்றுகிறதே.  கண்ணன் தன்னைச் சமாளித்துக் கொண்டான்.  அவளோ விஷமமாகச் சிரித்த வண்ணம், “எனக்கு எல்லாம்  தெரியும்.  நீங்கள் நினைக்கிறாப் போல் நான் அசடு எல்லாம் இல்லை.  மத்ரா எரிக்கப் பட்ட சில நாட்களிலேயே இசைக்கலைஞர்கள் ஒரு குழுவாக எல்லா இடங்களுக்கும் சென்றவர்கள் எங்கள் காசி ராஜ்யத்திற்கு வந்தனர்.  மத்ராவிலிருந்து வந்திருப்பதாய்ச் சொல்லிக் கொண்ட அவர்கள் கண்ணன் எப்படி யாதவ குலத்தைக் காத்து ரக்ஷித்தான் என்பதைப் பாடலாகப் பாடி என் தந்தையின் சபையினரையும், தந்தையையும் மகிழ்வித்தனர்.  அப்போது நானும் எல்லாப் பெண்களோடு உப்பரிகையில் இருந்த வண்ணம் அனைத்தையும் பார்த்துக் கேட்டு ரசித்தேன்.  முக்கியமாக உங்களுடைய ராஸ் நடனமும் அதை நீங்கள் கோபியரோடு சேர்ந்து ஆடுவீர்கள் என்பதும், அதுவும் பூர்ண சந்திரன் உதயமாகும் தினத்தன்று என்பதையும் கேட்டிருக்கிறேன்.  ஓ,  அந்தப்பாடல்களில் சில இன்னமும் என் நினைவில் மங்காமல் இருந்து வருகின்றன.  எனக்குப் பொழுது போகாமல் இருக்கையில் பாடிப் பார்ப்பேன்.  அப்போதிலிருந்து உங்களை எவ்வாறேனும் சந்திக்க வேண்டும் என்ற  ஆவல் எனக்கு இருந்து வந்தது. “  பானுமதி கொஞ்சம் நிறுத்தி கண்ணனைத் தன் தேடும் கண்களால் ஆழமாகப் பார்த்தாள். 

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... தொடர வாழ்த்துக்கள்... நன்றி...

ஸ்ரீராம். said...

மலர்களால் ஆன ஒட்டியாணம்... புதுசு! பானுமதி பற்றிய வர்ணனைகளும் புதுசு. ஏதோ கர்ணனில் சாவித்ரியைப் பார்த்ததும் (!!), 'எடுக்கவோ கோக்கவோ' கதைகள் கேள்விப் பட்டதோட சரி...! வில்லன் கேரக்டர்களைப் பற்றியும், அவர்தம் மனைவி, மக்கள் பற்றியும் ஆராய்ச்சி செய்யணும். ராவணன் மனைவி மண்டோதரியைக் கூட கற்புக்கரசிகள் வரிசையில் சொல்வார்கள் இல்லை?

ஸ்ரீராம். said...

ராஸ் நடனம் என்று ராசலீலையைத்தானே சொல்கிறீர்கள்? ஏதோ ஜாஸ் நடனம் போலக் மனம் உள்வாங்குகிறது!

பானு உரிமையை/அப்பாவியாய் கண்ணன் தோளில் கை வைப்பதும் கண்ணனின் மன ஓட்டங்களும்...

//பானுமதி கொஞ்சம் நிறுத்தி கண்ணனைத் தன் தேடும் கண்களால் ஆழமாகப் பார்த்தாள்.//

அந்த கேரக்டர் வர்ணனைக்கு இந்த வரிகள் கொஞ்சம் பொருந்தவில்லையோ...!

sambasivam6geetha said...

வாங்க திண்டுக்கல் தனபாலன், வருகைக்கு நன்றி. உங்க பதிவுகளுக்கு வரணும், மின்சாரம் இருக்கையில். :)))))

sambasivam6geetha said...

வாங்க ஸ்ரீராம், கர்ணன் படம் பற்றிய என் கருத்தே தனி! :))))) இங்கே பானுமதியை துரியோதனனிடம் அதிக அன்பு கொண்டவளாயே காணப் போகிறோம். ஆகையால் அவள் கண்ணனிடம் தனித்துப் பேச நினைக்கிறாள் என்பதையும் நினைவில் வைத்தால் அவள் ஆழமாய்ப் பார்த்ததன் பொருளும் விளங்கும். காரக்டர் வர்ணனை வெகுளியான பெண்ணைத் தான் சித்தரிக்கிறது. அதே போல் அவள் சொல்ல நினைப்பதும் அவள் வாழ்க்கைக்குத் தொடர்பானதே. பொறுத்திருந்து பாருங்கள். :))))

ராசலீலாவைத் தான் ராஸ் எனக் குறிப்பிட்ட்டேன். ஹிந்தியில் ராஸ் எனச் சொல்லி அதே பழக்கம் ஆகிவிட்டது; பேசும்போது வார்த்தைக்கு வார்த்தை அச்சா போடுவதுபோல! :)))) சிலவற்றைத் தவிர்க்க முடியாமல் நம்மையும் அறியாமல் வந்து விடுகிறது. :D