Friday, April 5, 2013

திரெளபதிக்கு சுயம்வரமா? துருபதனின் ஒப்புதல்!“கண்ணா, சுயம்வரம் என்பது இப்போதெல்லாம் மிகப் பழமையான நாகரிகமாகி விட்டது.  அர்த்தமற்ற வெறும் சடங்காகி விட்டது.  அப்படியே சுயம்வரம் நடத்தினாலும் அதன் மூலம் திரெளபதிக்கு ஆர்யவர்த்தத்தின் மிக வலிமை வாய்ந்த வில் வித்தையில் சிறந்ததொரு வீரன் கிடைத்துவிடப் போகிறானா?”

“மன்னரே,  தாங்கள் புரிந்து கொள்ளவில்லை.  நம் முன்னோர்கள் செய்ததைப்போன்றதொரு உண்மையான சுயம்வரத்தை நீங்கள் ஏன் நடத்தக் கூடாது? “ சற்றே குரலைத் தழைத்துக் கொண்டஅன் கிருஷ்ணன்.  “ ஒரு பரிக்ஷை வையுங்கள் மன்னா,  உண்மையானதொரு பரிக்ஷையாக அது இருக்கட்டும். வில் வித்தையிலேயே சிறந்ததொரு போட்டியைத் தேர்ந்தெடுங்களேன்.  அதன் மூலம் இந்தத் தேர்வில் எந்த வில்லாளி ஜெயிக்கிறானோ அவனை இளவரசி மணமகனாய்த் தேர்ந்தெடுக்க இயலும்.”

துருபதன் அசந்து விட்டான்.  அவனுக்கு இந்த யோசனை மிகவும் பிடித்திருந்தது.  இதன் மூலம் ஏற்படப் போகும் தாக்கங்களை நினைத்துப் பார்த்தான்.  சிறந்த வில் வீரன் யார் எனவும் நினைத்துப் பார்த்தான்.  ஒரு புன்னகையுடன் கிருஷ்ணனைப் பார்த்து, “வாசுதேவா, இப்போது உன்னையன்றிச் சிறந்த வில்லாளி வேறு எவர் இருக்கின்றனர்?”  என்றான்.

“எனக்குத் தெரியவில்லை மன்னா!  வில் வித்தையில் சிறந்த வீரன் யார் எவர் என்பது இன்னமும் நமக்குள் நிச்சயமாய்த் தெரியவில்லை.  இந்தப் போட்டி முடிவடைந்ததாகவும் தெரியவில்லை.  ஆனால் மற்ற வில்லாளிகள் நிறையப் பேர் இருக்கையிலே நீங்கள் அவர்கள் அறியாமல் என்னை ஏன் தேர்ந்தெடுக்க வேண்டும்? எத்தனை அரசகுமஅரர்களை அழைக்க முடியுமோ அவ்வளவு பேரையும் அழையுங்கள்.  கடுமையானதொரு போட்டியை ஏற்படுத்துங்கள்.  அதன் மூலம் அரசகுமாரி சிறந்ததொரு வீரனைத் தன் மணமகனாய்த் தேர்ந்தெடுக்க உதவுங்கள்.”

துருபதன் தன் மனதிற்குள்ளாக இந்த யோசனையை  நன்கு ஆராய்ந்தான்.  இதன் மூலம் ஏற்படப் போகும் நிகழ்வுகள் அவன் மனதில் புரண்டு ஓடிக் கொண்டிருந்தன. கிருஷ்ணன் மேலே பேசிக் கொண்டிருந்தான்.  “உங்களுடன், உடன்படிக்கை செய்து கொண்டிருக்கும் பல தேசத்து அரசர்கள், அரசகுமாரர்கள் என அனைவரும் இந்தச் சுயம்வரத்துக்கு வருவார்கள்.  நீங்கள் தவிர்க்கவே முடியாததொரு அதிகார மையமாக அவர்கள் நடுவில் விளங்குவீர்கள்.  மேன்மேலும் பற்பல அரசர்களின் உதவிகளும் அவர்களின் நட்பும் உங்களுக்குக் கிடைக்கும்.  அதன் மூலம் உங்கள் படைபலம் மேலும் வலுவடையும்.  நீங்கள் யாரையும் எவரையும் விரோதிக்கப் போவதில்லை.  இந்தச் சுயம்வரத்தின் மூலம் அனைவரையும் நீங்கள் சரிசமமாகப் பார்க்கிறீர்கள் என்றே உறுதியாகும்.  சுயம்வரத்தின் முடிவில் நீங்கள் மிகவும் வலுவடைவீர்க்கள்.  மனரீதியிலும், படை பலமும், மேலும் நண்பர்கள் வட்டமும் விரிவடைந்து வலுப்பெறுவீர்கள்.  இப்போது நீங்கள் என்னை உங்கள் மாப்பிள்ளையாகத் தேர்ந்தெடுத்தீர்களானால், பல அரசர்கள், இளவரசர்களின் விரோதத்துக்கு ஆளாவீர்கள்.”

“எல்லாம் சரிதான் வாசுதேவா! ஆனால் எந்த அரசனாலும், இளவரசனாலும் இந்தப் போட்டியில் ஜெயிக்கவே முடியவில்லை எனில்?  என் பெண்ணுக்கு மணமகன் யார்?”

“பின்னர் உங்கள் மகளும், நீங்களும் வந்திருக்கும் அரசர்கள், இளவரசர்களில் எவரேனும் தகுதி வாய்ந்த ஒருவரை உங்கள் மகளுக்கு மணமகனாய்த் தேர்ந்தெடுத்துக் கொள்ள முடியுமே?”

“வாசுதேவா, அப்போது என் மகள் உன்னைத் தேர்ந்தெடுத்தால்?”  துருபதனின் முகத்தில் குறும்புச் சிரிப்பு. ஒரு கண நேரம் துரோணரையும், அவர் தன்னை அவமானம் செய்ததையும், தான் பழிவாங்க வேண்டியே உயிர் தரிப்பதையும் மறந்தவன் போல் காணப்பட்டான்.   ஆனால் கண்ணன் அசரவில்லை.

“மன்னா, இந்தப்போட்டியில் நான் கலந்து கொண்டு ஜெயிக்கவில்லை எனில்?”  கண்ணனும் சிரித்தான்.  “பின்னர் உங்கள் மகள் என்னை எப்படித் தன்மணமகனாய்த் தேர்ந்தெடுப்பாள்?  அவள் தான் ஆர்யவர்த்தத்தின் சிறந்த வில்லாளியை அல்லவோ மணக்க எண்ணுகிறாள்?  ஆனால் அரசே, யாதவர்களின் நட்பும், பலமும் என்றென்றும் உங்களுக்குக் கிடைக்கும்.  நான் உங்கள் மாப்பிள்ளையாக ஆகாவிட்டாலும் யாதவர்கள் உங்களை என்றும் நட்பாகவே கருதுவார்கள். அதில் சந்தேகமே வேண்டாம்.”

சற்று நேரம் யோசித்த துருபதன் பின்னர் கண்ணனிடம் மெதுவாக, “வாசுதேவா, நீ கூறியபடி சுயம்வரம் வைத்தால் நிச்சயமாய் என் பலம் கூடும்.  நட்பு வட்டமும் பெருகும். “ என்று ஒத்துக் கொண்டான்.

6 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஒப்புக்கொள்ள வைத்தது எதற்கும் அசராதவன் அல்லவோ...

தொடர்கிறேன்...

வை.கோபாலகிருஷ்ணன் said...

//துருபதன் தன் மனதிற்குள்ளாக இந்த யோசனையை நன்கு ஆராய்ந்தான். இதன் மூலம் ஏற்படப் போகும் நிகழ்வுகள் அவன் மனதில் புரண்டு ஓடிக் கொண்டிருந்தன. கிருஷ்ணன் மேலே பேசிக் கொண்டிருந்தான். “உங்களுடன், உடன்படிக்கை செய்து கொண்டிருக்கும் பல தேசத்து அரசர்கள், அரசகுமாரர்கள் என அனைவரும் இந்தச் சுயம்வரத்துக்கு வருவார்கள். நீங்கள் தவிர்க்கவே முடியாததொரு அதிகார மையமாக அவர்கள் நடுவில் விளங்குவீர்கள். மேன்மேலும் பற்பல அரசர்களின் உதவிகளும் அவர்களின் நட்பும் உங்களுக்குக் கிடைக்கும். அதன் மூலம் உங்கள் படைபலம் மேலும் வலுவடையும். நீங்கள் யாரையும் எவரையும் விரோதிக்கப் போவதில்லை. இந்தச் சுயம்வரத்தின் மூலம் அனைவரையும் நீங்கள் சரிசமமாகப் பார்க்கிறீர்கள் என்றே உறுதியாகும். சுயம்வரத்தின் முடிவில் நீங்கள் மிகவும் வலுவடைவீர்க்கள். மனரீதியிலும், படை பலமும், மேலும் நண்பர்கள் வட்டமும் விரிவடைந்து வலுப்பெறுவீர்கள். இப்போது நீங்கள் என்னை உங்கள் மாப்பிள்ளையாகத் தேர்ந்தெடுத்தீர்களானால், பல அரசர்கள், இளவரசர்களின் விரோதத்துக்கு ஆளாவீர்கள்.”//

ஸ்ரீ கிருஷ்ணனின் இந்தப்பேச்சு மிகவும் அழகாக உள்ளது.

பகிர்வுக்கு நன்றிகள்.

பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

sambasivam6geetha said...

வாங்க டிடி, நன்றி.

sambasivam6geetha said...

வாங்க வை.கோ. சார், ரசித்த பகுதியைச் சுட்டுவதற்கு நன்றி. ரசனைக்கும் நன்றி. இவை எல்லாம் படிக்கப் படிக்க அலுக்காதவை.

ஸ்ரீராம். said...

சிறந்த வில் வீரனாக கண்ணனை நினைக்கும் துருபதனுக்கு விஜயன் நினைவு அப்போது ஏன் வரவில்லை? அவன் இவனின் எதிரி லிஸ்ட்டில் இருப்பதாலா? அல்லது அப்போது விஜயன் பெயர் வாங்கவில்லையா?

sambasivam6geetha said...

வாங்க ஸ்ரீராம், விஜயன் உயிருடன் தான் இருக்கான் என துருபதன் எப்படி அறிவான்?