Sunday, April 7, 2013

நண்பனாய், மந்திரியாய், நல்லாசிரியனுமாய்! பண்பிலே தெய்வமாய்!


கண்ணனை துருபதன் பார்த்த பார்வையில் இப்போது புதியதொரு நேசமும், பரிவும், அன்பும் தென்பட்டன.  “எந்த விதமான நிபந்தனைகளுமின்றி, எதையும் திரும்பத் தனக்கெனக் கேட்காமல் தன்னுடைய நட்பையும், அன்பையும் மட்டுமே தருகின்றானே இந்த இளைஞன்!  இவன் எப்படிப் பட்டவன்! இது எனக்கு ஒரு சவாலாக இருக்கும் போலுள்ளதே!”  ஆம், இயல்பிலேயே நல்ல முறையில் வளர்க்கப்பட்ட துருபதனுக்குக் கண்ணனின் இந்தப் பெருந்தன்மையையும் விசாலமான மனப்போக்கையும் கண்டு தான் கண்ணனிடம் திரெளபதியைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நிபந்தனை விதித்ததைக் கண்டு தன் மேலேயே கோபம் வந்தது.  துருபதனின் பழிவாங்கும் எண்ணமெல்லாம் கட்டோடு மறைந்து இந்தக் கருநிறத்து இளைஞனின் மேல் அளவற்ற அன்பும், மரியாதையும் மிகுந்தது.  கண்ணனைப் பார்த்து, “வாசுதேவா, எனக்கு ஒரு வாக்குறுதி அளிப்பாயா?  நீ எப்போதும் எனக்கும், என் குழந்தைகளும், என் நாட்டுக்கும் நண்பனாகவே இருக்க வேண்டும்.  எந்நிலையிலும் இதற்கு மாற்றம் கூடாது.  திரெளபதியை சுயம்வரத்தில் மேஹசந்தி வென்றாலும், அவ்வளவு ஏன்?  துரியோதனனோ, சிசுபாலனோ இந்தப் போட்டியில் வென்று திரெளபதியை அடைந்தாலும், நீ மட்டும் எப்போதும் எங்கள் நண்பனாகவே இருக்க வேண்டும்.  இந்த வாக்குறுதியை மட்டும் அளிப்பாய்!” என்றான்.
“அப்படியே மன்னா! நான் சத்தியம் செய்கிறேன்.  என்றென்றும் உங்கள் நண்பனாகவே இருப்பேன்.  ஆனால் ஒரு விஷயம், நீங்கள் மேலே சொன்ன எவருக்கும் இந்தத் தேர்வில் வெற்றியடைவது கடினமே!” என்றான் கண்ணன்.

“எப்படிச் சொல்கிறாய் கண்ணா?” துருபதன் கொஞ்சம் ஆச்சரியத்துடனேயே கேட்டான்.

“மன்னா, நீங்கள் அநுமதி அளித்தால் நான் ஆசாரிய ஷ்வேதகேதுவை இங்கே விட்டுச் செல்கிறேன்.  சுயம்வரத்துக்கான ஏற்பாடுகளை அவர் கவனித்துக் கொள்வார்.  பின்னால் ஆசாரியர் சாந்தீபனி அவர்கள் வந்து சேர்ந்ததும், எப்படிப் பட்ட வில் வித்தை வைக்கலாம் என்பதை அவர் முடிவு செய்யட்டும்.  ஆனால், மன்னரே, மீண்டும் உங்களை ஒரு விஷயத்தில் எச்சரிக்கிறேன்.  சுயம்வரம்  நடைபெறப்போகிறது, அதற்கு ஒரு போட்டி உண்டு என்பது மட்டுமே அனைவருக்கும் தெரிந்திருக்கட்டும்.  எப்படிப்பட்ட போட்டி என்றோ, அது வில் வித்தையில் போட்டி என்றோ சுயம்வரத்தின் ஆரம்பநாள் வரை கடைசி நிமிடம் வரை எவரும் அறியக் கூடாது.  அதை மட்டும் ரகசியமாகவே வைத்திருங்கள்.  வில் வித்தையில் சிறந்தவனை மட்டுமே திரெளபதி மணப்பாள் என்பது கடைசி நிமிடத்தில் தெரிந்தால் போதும்.”

“வாசுதேவா, அவர்கள் அனைவரும் திரெளபதி தனக்குப் பிடித்த மணமகனைத் தேர்ந்தெடுக்கப் போவதாய் அன்றோ  நினைப்பார்கள்?  அது சரியல்ல.  அப்படி எல்லாம் நியாயமில்லாமல் நடந்து கொள்ள என் மனம் சம்மதிக்கவில்லை.  அது ஏமாற்றுவது போல் ஆகிவிடாதா?”  துருபதன் மனம் கவலையில் ஆழ்ந்தது.

“ஏன், மன்னா?  ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் இளவரசி தன் கணவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்று விரும்புவது கூடத் தவறா?  அவளுக்கு அந்த உரிமை இல்லையா?  அதைச் சுயம்வர நாளன்று அவள் அறிவித்தல் தவறா?”

“இல்லைதான். “ யோசனையுடன் துருபதன் கூறினான்.

“பின்னர் ஏன் கவலை அடைகிறீர்கள் மன்னரே?  இளவரசியவர்கள் சுயம்வர தினத்தன்று சுயம்வர மண்டபத்திற்கு வந்து தனக்கு வரப்போகும் கணவனுக்கு ஏற்படுத்தி இருக்கும் போட்டியைப் பற்றிக் கூறி அந்தப் போட்டியில் வெல்பவனையே மணமகனாக ஏற்கப் போவதாய் அறிவிக்கச் செய்யுங்கள்.  இது இளவரசியின் விருப்பம்.  இது தான் உண்மையும் கூட.”  என்றான் கண்ணன்.

“தெரியவில்லை வாசுதேவா, என்ன சொல்வது எனப் புரியவில்லை.  எப்படி இவ்வளவு விரைவில் உன்னிடம் நம்பிக்கை வைக்கிறேன் என்பது எனக்குப் புரியவில்லை.  அல்லது நான் சரியானதொரு செயலைத் தான் செய்கிறேனா என்பது குறித்தும் எனக்குத் தெரியவில்லை.  உன்னுடைய யோசனையை ஏற்பது சரியா என்றும் தெரியவில்லை.  ஆனால் என் மனம் உள் மனம் அதை ஏற்கச் சொல்கிறது.  நீ மட்டும் என்னுடைய சபதத்தை நிறைவேற்ற உறுதுணையாக இருப்பேன் என்று வாக்குறுதி கொடுத்துவிட்டால், நான் உன்னுடைய யோசனையை ஏற்கிறேன்.  “

“கவலைப் படாதீர்கள் மன்னரே!   நான் நினைக்கிறாப்போல் சுயம்வரம் வெற்றி பெறட்டும்.  வெற்றி பெற்றுவிடும் என்றே எண்ணுகிறேன்.  அப்படி மட்டும் நடந்துவிட்டால்…….. மன்னா, நீர் மிக்க வலிமை பொருந்திய மன்னராக இந்த ஆர்யவர்த்தத்தில் திகழ்வீர்கள்.  எந்தவிதமான இடையூறுமின்றி உங்கள் நோக்கத்தை ஈடேற்றிக் கொள்ளலாம்.  ஆர்யவர்த்தத்தின் சிறந்த வில்லாளியை உங்கள் மருமகனாய்ப் பெறுவதோடு அவன் நண்பர்கள் அனைவரும், அவன் உறவினர்களும் உங்களுக்கு உறுதுணையாய் வருவார்கள்.  இப்போது வெறுப்பிலும், விரக்தியிலும் ஆழ்ந்திருப்பவர்களால் எந்தவிதமான குறையையும் கூற இயலாது.”

“யாதவர்கள்?  கண்ணா அவர்களின் உதவி எனக்குக் கிட்டுமா?”

“வருவோம் மன்னா.  பலராமன் தலைமையில் நாங்கள் அனைவரும் உங்கள் உதவிக்கு வந்து கூடுவோம்.  குரு வம்சத்தினரின் துணையும், பலமும் இருந்தாலும் துரோணர் பலமிழந்தவராகவே இருப்பார்.  நீங்கள் அவரைக் குறித்துச் சிந்தனையே செய்ய வேண்டாம்.”

“இதன் மூலம் என் சபதம் எப்படி நிறைவேறும்?” துருபதனின் முகம் வாட்டமுற்றது.  உள்ளூறக் கோபமும் வந்தது.

11 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//“தெரியவில்லை வாசுதேவா, என்ன சொல்வது எனப் புரியவில்லை. எப்படி இவ்வளவு விரைவில் உன்னிடம் நம்பிக்கை வைக்கிறேன் என்பது எனக்குப் புரியவில்லை. அல்லது நான் சரியானதொரு செயலைத் தான் செய்கிறேனா என்பது குறித்தும் எனக்குத் தெரியவில்லை. உன்னுடைய யோசனையை ஏற்பது சரியா என்றும் தெரியவில்லை. ஆனால் என் மனம் உள் மனம் அதை ஏற்கச் சொல்கிறது.//

அதுதான் மாயக்கண்ணனின் மஹிமை.

க்தைப்பகுதி நன்றாக விறுவிறுப்பாகச் செல்கிறது.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

இன்னம்பூரான் said...

இத்தகைய உறவு அமைவது அரிது. தவிர, மிகவும் நேர்த்தியாக எழுதியிருக்கிறீர்கள். வாழ்த்துக்கள்.
இன்னம்பூரான்

sambasivam6geetha said...

வாங்க வை.கோ.சார், பாராட்டுக்கும், வாழ்த்துக்கும் நன்றி.

sambasivam6geetha said...

அட? "இ" சார்??? ஆச்சரியம் தான். தேடிப் பிடித்து நீங்கள் இங்கே வந்தது ஆச்சரியமும் சந்தோஷமுமாய் இருக்கு. வாழ்த்துகளுக்கு நன்றி.

திண்டுக்கல் தனபாலன் said...

பிடித்த பாடல் வரிகளோடு பகிர்வு சுவாரஸ்யம்... தொடர்கிறேன்...

முந்தைய கருத்துரையில் நண்பரின் Blogger முகவரியில் கருத்துரை வந்து விட்டது... சற்று முன் தான் சில மாற்றங்களை அவர் செய்ய சொன்னார்... LOGOUT செய்யாததால் இது போல்...

வல்லிசிம்ஹன் said...

“ஏன், மன்னா? ஒரு பெரிய சாம்ராஜ்யத்தின் இளவரசி தன் கணவன் எப்படிப்பட்டவனாக இருக்க வேண்டும் என்று விரும்புவது கூடத் தவறா? அவளுக்கு அந்த உரிமை இல்லையா? அதைச் சுயம்வர நாளன்று அவள் அறிவித்தல் தவறா?”//
கேட்டானே கேள்வி கண்ணன்.
பெண்ணுரிமை அப்போது நன்றாகவே இருந்திருக்கிறது.
சுறுசுறுப்பாகப் போகிறது.

ஸ்ரீராம். said...

படிச்சுட்டன்! நன்றாகவே போய்க் கொண்டிருக்கிறது!

sambasivam6geetha said...

வாங்க டிடி, நண்பரோட ஐடியில் இருந்த பின்னூட்டத்தை நீங்களே எடுத்தாச்சுனு நினைக்கிறேன். :))))

sambasivam6geetha said...

வாங்க வல்லி, பெண்ணுக்கு எப்போதுமே உரிமை இருந்து தான் வந்திருக்கு. :))))

sambasivam6geetha said...

வாங்க ஶ்ரீராம், துருபதனுக்குப் பாண்டவர்கள் உயிருடன் இருக்கும் விபரம் தெரியாது அல்லவா? அதான். போன பதிவில் கேட்ட கேள்விக்கு இங்கே விடை! :)))

அப்பாதுரை said...

திரும்பத் திரும்ப தன்னுடைய சபதம் நிறைவேறுவதிலேயே குறியாக இருக்கும் துருபதன் - அவனது சபதத்தை சற்றே மறக்கச் செய்து தனக்கேற்றப் பாதையில் திருப்பச் செய்யும் கண்ணன் - இடையே திரௌபதியின் உண்மையான விருப்பம் வில்வீரனை மணப்பது தான் என்பது கொஞ்சம் இடிக்கிறது. ஒரு பெண் என்றக் கண்ணோட்டத்தில் அவளது விருப்பத்தையும் ஆராய்ந்திருக்கலாமோ? துருபதன் தியாகியில்லை, கண்ணன் தியாகியில்லை - திரௌபதி மட்டுமே இங்கே தியாகியாகத் தெரிகிறாள்.