Friday, June 14, 2013

காட்டுக்குள்ளே பாண்டவர்களா?

பெண்கள் அனைவரும் உத்தவனைப் பார்த்த பார்வையிலும், செய்த ஆராய்ச்சியிலும் மிகவும் வெட்கம் கொண்ட உத்தவனுக்கு அங்கிருந்து ஓடிவிடலாமோ என்ற எண்ணமே தோன்றியது.  அவனுடைய இத்தனை வருட வாழ்க்கையில் இத்தனை பெண்களால் ஒரு போதும் முற்றுகை இடப்பட்டதில்லை. அதிலும் இளம்பெண்களாலும் சூழப்பட்ட உத்தவன், அந்தப் பெண்கள் மிக இயல்பாக இருந்ததைக் கண்டு ஆச்சரியமும் அடைந்தான்.  அவர்கள் உடல் மிக அழகான வடிவமைப்பெற்றிருந்ததும், ஆரியர்களைப் போல் அவ்வளவு சிவந்த நிறம் இல்லை எனினும், தொடர்ந்த மஞ்சள் தேய்ப்பால் தங்கம் போல் பளபளத்த மேனியும் அவன் கண்களைக் கவர்ந்தது.  அவர்களில் அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசிகளும் இருந்தனர்.  அனைவரும் மிகவும் நட்புடனும், ஆத்மார்த்தமான அன்புடனும் உத்தவனோடு பேசினார்கள்.  நடக்கையில் அவர்கள் நடையில் தெரிந்த வளைவுகளும், நெளிவுகளும், அவர்கள் நாககன்னிகள் என்பதை நினைவூட்டும் வகையில் அமைந்திருந்தது. 

உத்தவன் அவன் மாமனான கார்க்கோடகனிடம் அழைத்துச் செல்லப்பட்டான்.  கார்க்கோடகனோ உத்தவனைப் பிறந்தது முதல் அறிந்தவன் போல் நடந்து கொண்டான்.  எள்ளளவும் தயக்கமின்றி மிகவும் வெளிப்படையாகவும், அதைக் காட்டும் முகபாவத்துடனும் பேசினான்.  அவன் மகனான மணிமான் என்பவனோ உத்தவனை விடச் சில ஆண்டுகள் சிறியவனாக இருந்தான்.  அதோடு உத்தவனின் வில், அம்பு, அம்புறாத்தூணி அவனின் வாள் போன்றவை அவனை மிகவும் கவர்ந்தது என்பது அவன் பேச்சில் இருந்து தெரிந்தது.  அடுத்த பட்டத்து இளவரசன் அவன் தான் என்பதற்கான அடையாளம் அவன் உடை அலங்காரத்தின் மூலம் தெரிந்தது.  மணிமானுக்கு உத்தவனுக்குத் தெரிந்த எல்லாப் போர்க்கலைகளையும் தானும் கற்றுத் தேற வேண்டும் என்ற ஆசை மிகுந்ததோடு அதை உத்தவனிடமும் கூறினான். 

ஆயிற்று!  அடுத்து வந்த பெளர்ணமி தினத்தன்று உத்தவன் நாக கூடம் வந்ததற்கான கொண்டாட்டங்களோடு கூடிய தினமாக அமைந்தது.  மிகப் பெரிய விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  ஆர்யகனும், வியாச முனிவரும் சாதாரணப் பொதுமக்களோடு தாங்களும் ஒருவராக விருந்துண்ண அமர்ந்தனர்.  வியாசர் அந்த மாபெரும் கூட்டத்தில் தனித்துத் தெரிந்ததோடு அல்லாமல் மிகப் பெரிய குடும்பத்தின் வயது முதிர்ந்த பாட்டனாரைப் போன்ற அன்புடன் அனைவரையும் நலம் விசாரித்துக் கொண்டு முகமன் கூறி வரவேற்று அமரச் சொல்லி உபசரித்தும் கொண்டிருந்தார். விருந்து முடிந்ததும் ஆரம்பமான நாட்டியங்கள் மறுநாள் காலை விடியும் வரை நீண்டது.  பல வண்ண போர்க்குறிகளைக் கொண்ட வண்ணங்களை உடலில் தீட்டிக் கொண்டு, கைகளில் ஆயுதங்களை ஏந்திய வண்ணம், தலையில் இறகுகளால் ஆன கிரீடத்தைச் சூட்டிக்கொண்டு ஆண்கள் அலங்கரித்துக் கொண்டு ஆட வந்தனர்.  கூடவே பெண்களும் ஆடினார்கள்.  மணிக்கட்டிலிருந்து ஆரம்பித்து முழங்கை வரை வளையல்களை அணீந்திருந்தார்கள் அந்தப் பெண்கள்.  கால்களிலோ தண்டைகளும் கொலுசுகளும் முழங்கால் வரை வந்திருந்தன. 

கார்க்கோடகனும், மணிமானும் உத்தவனையும் தங்களோடு ஆட்டத்துக்கு இழுத்துவிட்டனர்.  மிக அழகாக ஆடிக் கொண்டிருந்த அந்த நாக கன்னியர்களின் முன்னே தன்னுடைய ஆட்டத்தின் மோசமான தன்மை உத்தவனுக்கே புரிந்தது.  இயற்கையாகவே போர்க்குணம் மிகுந்திருந்தும் அவர்களிடம் ஆடல், பாடல் போன்ற கலைகளை அப்யசிக்கவும் நேரமும், விருப்பமும் இருப்பதை உணர்ந்து உத்தவன் ஆச்சரியமும் அடைந்தான்.  போருக்கெனச் சிறப்பாகத் தயாரிக்கப்பட்ட தாமிரத்தினால் ஆன பல்வகை ஆயுதங்களையே அவர்கள் பயன்படுத்தினார்கள்.  அவற்றில் சிறிய குத்தீட்டிகளும், ஈட்டிகளுமே பிரதானமாக இருந்தன.  ஆனாலும் அவர்கள் பெரும்பாலும் மிருகங்களை வேட்டையாடுகையில் கைகளையே பயன்படுத்தியதாகவும் அவர்கள் பேச்சிலிருந்து அறிந்து வியந்தான்.  அது தான் உண்மையான வீரனின் அடையாளமாக அவர்கள் நினைப்பதையும் புரிந்து கொண்டான்.  விற்களையும், அம்புகளையும் பயன்படுத்திப் போரிடுவதை உண்மையான வீரத்துக்கு ஏற்றதாகக் கருதவில்லை என்பதை அறிந்தும் வியப்படைந்தான்.  அவனால் இதைப் புரிந்து கொள்ள முடியவில்லை.  கிருஷ்ணனையும், அர்ஜுனனையும் போன்ற சுத்தமான, வலிமையும், வல்லமையும் பொருந்திய வில் வீரர்கள் கூட இதில் அடங்குவார்களா என்பதையும் எண்ணி வியந்தான்.  அவர்களுக்கெல்லாம் இது பொருந்தாது என்றும் நினைத்தான்.  ஆனால் நாகர்களின் சமூகச் சூழ்நிலைகளுக்கும், பழக்க, வழக்கங்களுக்கும் இது ஏற்றதாக இருக்கலாம்.   அடிக்கடி நடந்த ஆரியர்களோடான அவர்களின் யுத்தங்களின் போதெல்லாம் நாகர்களுக்குப் பெரும் நஷ்டமே விளைந்து வந்திருக்கிறது.   அதனாலேயே இவர்கள் இன்னமும் காட்டுக்கு உள்ளே சென்று இப்படியான ஒரு வாழ்க்கையை நடத்துகின்றனரோ!


தன் சொந்த யாதவ குலத்து வாழ்க்கையையும், தன் பாட்டியார் வந்த நாக குலத்து வாழ்க்கையையும் பார்த்த  உத்தவனுக்கு அதிலிருந்த வேறுபாடுகள் புரிந்ததோடு இருவரையும் ஒருங்கிணைத்த முனி வேத வியாசரின் அரும்பெரும் தொண்டையும் குறித்துப் புரிந்து கொண்டான்.  மேலும் அவர் இருவரையும் தனித்தனியாக வேறுபடுத்திப் பார்க்காமல் அனைவரையும் ஒன்றாகவே கருதியதோடு தாமும் அவர்களில் ஒருவராகவே கருதிக் கொண்டார்.  இந்த இயல்பு அவரிடம் வெகு சாதாரணமாக அமைந்திருந்தது.  இதன் காரணமாகவே குரு வம்சத்தினர்களின் பிதாமகரும், அனைவரும் கண்டு அஞ்சும் பீஷ்மர் முதல் குரு சாந்தீபனி, மேலும் நாகர்களின் தலைவன் ஆர்யகன் வரை ------அவ்வளவு ஏன்?  மிகவும் தாழ்ந்த நிலையில் இருக்கும் ஒரு சாதாரணக் குடிமகன் கூட அவரைத் தங்களில் ஒருவராகவே கருதிக் கொண்டனர்.  பிரமனால் படைக்கப்பட்ட உலகை விட அதி அற்புதமான ஒரு உலகை வியாசமுனி அவர்களுக்குக் காட்டிக் கொடுத்தார் எனலாம். 

உத்தவன் கார்க்கோடகனோடு தங்க வைக்கப்பட்டான்.  மூன்று மனைவியரைக் கொண்ட கார்க்கோடகன் தன் பெரிய குடும்பத்துடன் அங்கிருந்த சில குடிசைகளில் வசித்து வந்தான்.   மணிமான், அவன் மனைவி, மணிமானின் இரட்டைச் சகோதரிகள் பிங்கலை, கபிலை ஆகியோர் உத்தவனுக்கு வேண்டிய வசதிகளைச் செய்து கொடுத்தார்கள்.   அவர்களின் தனிப்பட்ட அக்கறை உத்தவனுக்குப் புரிந்தாலும் இப்படியான கவனிப்புகளுக்குப் பழக்கமில்லாத காரணத்தால் அவன் தர்மசங்கடமாகவே உணர்ந்தான்.  ஆனால் இதன் விளைவாகவோ என்னமோ, உத்தவனுக்குள்ளாக மறுநாளே பெரிய மாற்றம் தெரிந்தது.   இதுகாறும் தன்னை ஒரு துறவியாகவே கருதி வந்த உத்தவன் தன்னுடைய சுயக்கட்டுப்பாடுகள் தன்னை விட்டு நீங்கி விடுமோ என அச்சமும் கொண்டான்.  ஷாயிபாவை மனதில் நினைத்துப் பின்னர் கிருஷ்ணனிடம் தன்னை வெளிப்படுத்தியபின்னர் உத்தவன் மனதில் எத்தகைய உல்லாச உணர்வுகளும் தோன்றியதில்லை.  தன்னுடைய வாழ்க்கையை இத்தனை எளிமையாகக் கழித்ததில் அவனுக்குக் கொஞ்சம் அதிருப்தி கூடத் தோன்றி ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான்.  அவனால் அதைக் கட்டுப்படுத்த இயலவில்லை.  தன் வாழ்க்கையில் எதையோ இழந்துவிட்டதாய் உணர்ந்தான்.

ஆனாலும் தான் மேற்கொண்டு வந்த வேலையை விரைவில் முடிப்பதற்கு ஆர்வம் காட்டினான்.  மூன்றுநாட்கள் கழிந்ததும், மெல்ல வியாசமுனியிடம் தான் அவரோடு வந்ததின் காரணத்தை விளக்கினான். பெரிதாகச் சிரித்த வியாசர், “உத்தவா, இதைக் கூடவா என்னால் புரிந்து கொள்ள இயலாது?  நான் அன்றே தெரிந்து கொண்டுவிட்டேன்.  கார்க்கோடகனும் ஏற்கெனவே அவன் ஆட்களை அனுப்பிக் காட்டின் உள்ளே புதிதாக ஐந்து சகோதரர்களும், அவர்களின் தாயும் வந்திருக்கின்றனரா எனப் பார்க்கச் சொல்லியுள்ளான்.” என்றார்.

“நாம் கட்டாயமாய் அவர்களைக் கண்டுபிடிக்க வேண்டும், முனிவரே!  கிருஷ்ணன் திரும்பிச் செல்கையில் அவர்கள் ஐவரும் தங்கள் தாய் குந்தியுடன் எங்களுடன் துவாரகை வந்தால் நல்லது!” என்றான் உத்தவன்.

“என்னால் அதிக நாட்கள் இங்கே தங்க இயலாது.  இன்றிலிருந்து பத்தாம் நாள் நான் அகிசத்ராவில் இருந்தாக வேண்டும்.  நீ இங்கே தங்கி இருந்து கிடைக்கும் செய்திகளைச் சேகரித்து வா.  உனக்குத் துணைக்கும், உதவிக்கும், என் மாணாக்கர்களில் சிலரை விட்டுச் செல்லவா?” என்றார் வியாசர்.

“வேண்டாம், மஹரிஷியே, என் மாமன் கார்க்கோடகன் அளித்து வரும் உதவியே போதுமானது!”



அப்போது கார்க்கோடகன் உள்ளே வந்து, வியாசரை நமஸ்கரித்தான்.  “ஆசாரியரே, ஒரு செய்தி! உத்தரவு கொடுங்கள்!” எனக் கேட்க, வியாசரும் அனுமதி கொடுத்தார்.  “எங்கள் தலைவர்களில் ஒருவனான சிகுரி நாகன் அனுப்பிய செய்தி இது. நம் எல்லைக்குட்பட்ட கிராமம் லஹூரியாவின் ஒரு நாகன் அனுப்பிய செய்தியாம்.  சில மாதங்கள் முன்னர் ஐந்து ஆரியர்களைக் காட்டின் உட்பக்கத்தில் பார்த்திருக்கிறான்.  அவர்களில் ஒருவன் மிகுந்த பலவானாகக் காணப்பட்டதோடு ஒரு வயதான பெண்மணியைத் தன் தோள்களில் சுமந்தும் சென்றானாம். "

"ஆஹா, அவர்கள் சகோதரன் பீமனும், அவர்கள் தாய் குந்தியுமாகவே இருக்கவேண்டும்." உத்தவன் கூறினான்.

"ஆனால் அவர்கள் எங்கேதான் சென்றனராம்?" வியாசர் கேட்டார்.

"சிகுரி அனுப்பிய செய்தி என்னவெனில் முதலில் வேற்று மனிதர்களைத் தங்கள் பிராந்தியத்தில் பார்த்த அதிர்ச்சியில் அந்த நாகன் ஓட்டமாக ஓடி ஒளிந்துவிட்டானாம்.  ஆகையால் அவர்கள் எங்கே சென்றனர் என்பது அவனால் கூற முடியவில்லை.  ஆனால் ஆசாரியரே, கவலை வேண்டாம்.  லஹூரியாவுக்கு சிகுரியே நேரில் சென்றிருக்கிறான்.  கட்டாயமாய் நல்ல செய்தி கொண்டு வருவான்."


4 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

இதுவரை நான் படித்தோ கேட்டோ அறியாத மிக நல்லதொரு கதை.

ந்ன்னா, விலாவரியாக ஒவ்வொரு சம்பவத்தையும் விவரித்து எழுதியுள்ளீர்கள்.

பாராட்டுக்கள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

அவர்கள் எங்கே கிடைக்க போகிறார்கள்...?

இனி மேலும் சுவாரஸ்யம் கூடும்... நன்றி...

ஸ்ரீராம். said...

உத்தவனின் எண்ண ஓட்டங்கள் இயல்பு.

அப்பாதுரை said...

லகுரியாவா? சுவாரசியமான பெயர்.
உத்தவனின் சங்கடத்தை விவரிக்கும் முதல் பேரா சூபர்.