Friday, October 4, 2013

இவன் மனிதனா? மாயாவியா? பரம்பொருளா? துரோணரின் சந்தேகம்!

“என்ன!! உன் தந்தைக்குத் தெரியாமல் வந்தாயா?  என்னை இதை நம்பச் சொல்கிறாயா? ஷிகண்டின், நீ ஒரு பாரம்பரியம் மிக்க அரசகுடும்பத்தின் இளவரசன்/இளவரசி!  உன் தந்தைக்கு அறிவிக்காமல் நீ எப்படி வந்திருக்க முடியும்?” துரோணர் கோபத்தின் உச்சியில் இருந்தார்.

“ஐயா, இது உண்மையே.  முற்றிலும் உண்மை.  அங்கிருந்து நான் இரவோடிரவாகத் தப்பி ஓடி வந்துவிட்டேன். காம்பில்யத்திலிருந்து ஓடி வந்துவிட்டேன்.  ஓடிவரவில்லை எனில் ஏதானும் ஆற்றிலோ, குளத்திலோ மூழ்கி என்னை நான் சாகடித்துக்கொண்டிருக்க வேண்டும்.  அதுவும் என் மனைவியாகிய அந்தப் பெண் வருவதற்குள் நான் தப்பியாக வேண்டுமே! எனக்கு வேறு என்ன வழி?”

“ஆனால் என்னிடம் ஏன் வந்தாய்?”

“ஐயா, இந்த மூவுலகிலும் தேடினாலும்  ஒரு பெண்ணை நல்லதொரு போர்வீரனாக மாற்றுவதற்கு ஏற்றதொரு ஆசாரியர் உங்களை விட்டால் எவருமில்லை எனக் கேள்விப் பட்டிருக்கிறேன். “இதைச் சொல்கையில் ஷிகண்டினுக்கு மனதில் வருத்தமும் சந்தேகமும் ஏற்பட்டு விட்டது.  துரோணர் தன்னைச் சீடனாக ஏற்க மறுத்துவிடுவார் என்றதொரு அச்சம் ஏற்பட்டது.  ஆனால் துரோணரோ, “ நான் ஒரு பெண்ணை என் மாணாக்கராக எடுத்துக்கொள்வேன் என்று உன்னிடம் சொன்னவன் முழு முட்டாள் என நினைக்கிறேன். இல்லை எனில் அப்படிச் சொல்லி இருக்கமாட்டான்.” என்றார் துரோணர்.  “இல்லை, ஐயா, என்னிடம் சொன்னவரின் நேர்மையையோ, அவரின் வார்த்தைகளையோ சந்தேகிக்க இயலாது!  என் வாழ்க்கையில் இது வரை நான் பார்த்தவர்களில் இவரைப் போன்றவர்கள் அரிதானவர்கள்!” என்றான் ஷிகண்டின்.

“யார் அது?”

“வாசுதேவக் கிருஷ்ணன்!”

இந்தப் பெயரைக் கேட்டதும் துரோணருக்குத் தூக்கிவாரிப் போட்டது என்றால் அது மிகையில்லை.  அலக்ஷியமாக அமர்ந்திருந்தவர் சட்டென்று நிமிர்ந்து உட்கார்ந்து ஆழ மூச்சை உள்ளிழுத்துப் பின் நிதானமாக வெளியிட்டார்.  ஆஹா, இந்த கிருஷ்ண வாசுதேவன் உண்மையில் மனிதன் தானா?  தன்னைச் சுற்றி ஒரு மாயவலையைப் பின்னிக்கொண்டு அதில் அகப்படும் அனைத்து மனிதர்களையும் தன்பால் கவர்ந்திழுக்கிறானே!  காம்பில்யத்திற்குச் சென்றிருக்கிறானா?  ஆஹா, துருபதனின் மகளை அவன் அல்லவோ மணக்கப் போவதாய்ச் சொல்கின்றனர்!  என் பரம வைரியின் மகளைக் கிருஷ்ண வாசுதேவன் மணக்கப்போகிறானா?  இப்போது என் பரம வைரியின் இன்னொரு மகளை என் யுத்தசாலைக்கு அனுப்பி என்னைச் சோதிக்கிறான் போலும்.  ம்ம்ம்ம்ம், துரோணருக்கு இப்போது அனைத்துமே புரிந்தாற்போல் இருந்தது.  எல்லாம் தெளிவாகிவிட்டாற்போல் இருந்தது.   கிருஷ்ணன் ஒரு தந்திரம் செய்தால் அவனுக்கு மேல் நாம் செய்ய மாட்டோமா?  தந்திரத்தை தந்திரத்தால் வெல்லலாம்.  அவன் சொந்தப் பகடைக்காயைக் கொண்டே அவனை வீழ்த்தலாம்.  துரோணர் ஒரு முடிவுக்கு வந்துவிட்டார்.  ஷிகண்டினைப் பார்த்து, “வாசுதேவக் கிருஷ்ணனுக்கு நீ ஒரு பெண் என்பது தெரியுமா?” என்று கேட்டார்.  “நான் அவரிடம் அனைத்தையும் விளக்கிக் கூறிவிட்டேன்.” என்றான் ஷிகண்டின்.

“எப்படிப் பட்டவன்?  அந்தக் கிருஷ்ண வாசுதேவன்?” துரோணர் கேட்டார்.
“அற்புதமான மனிதன். மிக அற்புதமானவன்.” ஷிகண்டினின் கண்களில் கனவு காண்பது போன்றதொரு தோற்றம்.  வாசுதேவக் கிருஷ்ணனைக் குறித்த அந்த அருமையான நினைவுகளில் மூழ்கியவனாய் மீண்டும் பேச ஆரம்பித்தான். “ ஐயா, அவன் காம்பில்யத்துக்கு வந்திருந்தான்.  காம்பில்யத்தின் இறுக்கமான சூழ்நிலையை மகிழ்வான ஒன்றாக மாற்றிவிட்டான்.  நாங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமாக உணர்ந்தோம்.  என் தந்தை உட்பட!  அவன் அருமைகளில் நாங்கள் முற்றிலும் கரைந்து போனோம்.”

துரோணருக்கு இப்போது முழுவதும் தன்னிலை திரும்பி விட்டது.  இத்தனை நேரம் ஒரு வித அலக்ஷியத்தோடேயே கேட்டு வந்தவர். இப்போது தன்னை முற்றிலும் சுதாரித்துக் கொண்டு விட்டார். அவருடைய எச்சரிக்கை உணர்வு மீண்டும் எழுப்பப்பட்டு விட்டது.  அந்த உணர்வோடேயே இப்போது காம்பில்யத்தில் நடந்த அனைத்தையும் கேட்டுத் தெரிந்து கொள்ள விரும்பினார்.  அவர் தன் எச்சரிக்கை உணர்வைக் கைவிடாமலேயே ஷிகண்டினிடம், “உன் தந்தையின் முடிவுக்கு, திரெளபதியைத் திருமணம் செய்து கொள்ளும் முடிவுக்குச் சம்மதித்தானா கிருஷ்ண வாசுதேவன்?”

“உங்களுக்கு இது குறித்து ஏற்கெனவே தெரியுமா?” கேட்ட ஷிகண்டின் தன் கண்கள் விரிய மேலே கூறியதாவது:” ஆசாரியரே, கிருஷ்ண  வாசுதேவன் அந்த வேண்டுகோளுக்கு என்ன சொன்னான் என்பதை நீங்கள் அறிய வேண்டுமா?  என் சகோதரி கிருஷ்ணாவை மணக்க மறுத்துவிட்டான்.  ஒரு அரசனின் பழிவாங்கும் முடிவுக்காக ஒரு இளவரசியை மணந்து கொண்டு அந்த அரசனின் கைப்பாவையாகத் தன்னால் இயங்க முடியாது எனத் திட்டவட்டமாய்த் தெரிவித்து விட்டான்.”  துரோணரோ இதை எதிர்பார்க்கவே இல்லை.  இந்த வார்த்தைகள் அனைத்தும் ஏதோ கனவில் சொல்லப்படுவது போல் அவர் காதுகளில் விழுந்தன.  அவரால் தன் காதுகளை நம்பவும் முடியவில்லை.   என்றாலும் ஷிகண்டினின் இந்த வெளிப்படையான பேச்சால் நாம் ஏமாறக் கூடாது என அவர் நினைத்தார்.  ஷிகண்டின் தன்னை ஏமாற்றுவதாகவும் நினைத்தார்.  ஆகவே அவனைப் பார்த்து,” உனக்கு எப்படித் தெரியும்?  கிருஷ்ணன் உன் சகோதரியைத் திருமணம் செய்து கொள்ள மறுத்ததை நீ எவ்வாறு அறிவாய்?”

“நான் மறைந்திருந்து ஒட்டுக் கேட்டேன்.” என்றான் ஷிகண்டின்.  இவன் உண்மையையே பேசுகிறான் என்பதை துரோணர் உணர்ந்தார்.  ஆகவே அவருள் மாற்றம் ஏற்பட்டது. “ கிருஷ்ண வாசுதேவன் எப்படி என்னிடம் போகச் சொல்லி உனக்கு ஆலோசனை கொடுத்தான்?”  என்று கேட்டார்.  ஷிகண்டின் ஆரம்பித்தான்:” வாசுதேவ கிருஷ்ணன் காம்பில்யம் வந்த போது என் மாமனாரின் செய்தியும் வந்திருந்தது.  என் மனைவியைக்காம்பில்யம் அழைத்து வரப் போவதாய்ச் செய்தி வந்திருந்தது.  இதைக் கேட்டதுமே என் தந்தை, குடும்பத்தின் மற்றவர்கள், ஏன் பாஞ்சாலம் முழுதுமே,  ஒரு குழப்பமான சூழ்நிலை நிலவியது எனலாம்.  அவள் வந்ததுமே நான் யார் என்பதைக் கண்டறிவாள்.  பின்னர் இவ்வுலகம் அனைத்துமே எங்கள் குடும்பத்தைப் பரிகசிக்கும்; கேலி செய்யும்.  தூற்றும்.   என் தந்தை, நேர்மைக்குப் பெயர் பெற்றவர், என்னை ஒரு ஆண்மகன் என்று சொல்லப்பட்டதால் ஏமாற்றுக்காரன் என்ற பெயரை வாங்கிக் கொள்ள நேரும்; எல்லாவற்றுக்கும் மேல் தஷர்ணாவின் இளவரசியோடு மணமுடித்ததற்காகவும் ஏசப்படுவார்!”

“உண்மைதான்! பின்னர்?


“பின்னர் என்ன!  நான் என்னைக் குறித்த ரகசியம் வெளியாகும் முன்னர் இறக்க வேண்டும்;  அல்லது அரண்மனையை விட்டுப் பாஞ்சாலத்தை விட்டே வெளியேறியாக வேண்டும் என முடிவு செய்துவிட்டேன்.  ஆனால் அப்போது தான், வாசுதேவனை நான் பார்த்தேன்.  விசித்திரமாக, விந்தையாக என் மனதில் புதியதொரு நம்பிக்கையை அவன் விதைத்தான்.”


“எப்படி?  என்ன நம்பிக்கையை அவன் உனக்குக் கொடுத்தான்?”
“உண்மையில் ஐயா, வாசுதேவன் எனக்கு எந்த நம்பிக்கையையும் கொடுத்துப் பேசவில்லை.  ஆனால் அவன் அருகாமையே ஒருவருக்கு நம்பிக்கையையும்,  மகிழ்ச்சியையும் கொடுக்கும்.  அவன் எங்கே சென்றாலும் தன்னுடன் இவற்றையும் எடுத்துச் செல்கிறான்.”

“வாசுதேவக் கிருஷ்ணனிடம் உன் மனதைப் பறி கொடுத்திவிட்டாய்!” துரோணர் ஒரு புன்னகையுடன் இதைக் கூறினார்.   “இல்லை, இல்லை.  அந்த அதிசயத்தை நான் நேரிலேயே பார்த்தேன்.  அது தந்தையிடம் வேலை செய்தது.   தந்தைக்கு மட்டுமின்றி அந்த அதிசயக் காற்று என் சகோதரன் த்ருஷ்டத்யும்னனுக்கும், என் சகோதரி திரெளபதிக்கும் கூட அடித்தது.   அப்படியே என் மேலும் அந்தக் காற்று வீசியது.  நாங்கள் அனைவருமே எங்கள் வழிகளிலேயே எல்லாவற்றையும் புதியதொரு கோணத்தில் பார்க்க ஆரம்பித்தோம்.”

துரோணர் நினைவுகளில் அமிழ்ந்து போனார்.  இந்தக் கிருஷ்ண வாசுதேவனிடம் இருக்கும் மாயம் தான் என்ன?  அவரால் புரிந்து கொள்ள இயலவில்லை.   ஹஸ்தினாபுரத்துக்கு அவன் வந்ததிலிருந்து அவனிடம் இருக்கும் அந்த மந்திரக்காற்று இங்குள்ள மொத்தச் சூழ்நிலையையும் மாற்றும் வண்ணம் ஆகி உள்ளது.  அவன் வந்ததுமே இங்குள்ள சூழ்நிலையின் இறுக்கமே போய்விட்டது.  “அப்படி என்னதான் செய்தான் அவன் உங்களுக்கு எல்லாம்?” துரோணர் ஷிகண்டினிடம் மீண்டும் கேட்டார்.  தன் பேச்சு சாதுரியம் முழுவதையும் பயன்படுத்திக் கிருஷ்ண வாசுதேவன் குறித்துக் கூற எண்ணினான் ஷிகண்டின்.

“குறிப்பாய் அவன் எதுவும் சொல்லவில்லை;  செய்ய வில்லை.  ஆனால் எங்கள் ஒவ்வொருத்தரிடமும் தனிப்பட அவன் காட்டிய அன்பிலும், அவன் பேசிய வார்த்தைகளிலும்  அவனுக்கும் எங்களுக்கும் அப்போது தான் அறிமுகமே ஏற்பட்டது எனத் தோன்றவில்லை.  நீண்ட நாள் பிரிந்திருந்த ஒரு நண்பனைப் போலவே அவன் பேசினான்.  எங்கள் ஒவ்வொருவரையும் அந்தரங்கமாய்த் தனித் தனியாய் அறிந்திருந்தான்.  அவன் பார்வை எங்கள் மேல் பட்டதுமே நாங்கள் வித்தியாசமாய் உணர்ந்தோம்.  அந்த உணர்வு விவரிக்க முடியாதது.  ஒரு அமைதி ஏற்படுத்திய பார்வை அது.   அனைவரையும் மயக்கும் ஒருவித சக்தி அந்தக் கண்களில் இருந்தது.    அவன் என்னைப் பார்க்கும்போதெல்லாம், நானும், அவனும் மட்டுமே தன்னந்தனியாக இந்தப் பூவுலகில் இருக்கிறோம் என்றும், எங்களைத் தவிர வேறு யாருமே இல்லை என்றும், நானும் அவனும் இணைந்து எல்லா உண்மைகளையும் பரிமாறிக் கொள்கிறோம் என்றும் தோன்றியது எனக்கு.  என் மனதின் ஆழத்தில் வெகு ஆழத்தில், அவன் கண்களால் ஊடுருவிப் பார்த்தான்.  அதை நான் உணர்ந்தேன்.  அத்தோடு மட்டும் அல்ல;  என் மனதின் பலவீனமான சக்தியை அவன் புதியதொரு ஆக்கபூர்வமான சக்தியாக மாற்றியதையும் உணர்ந்தேன்.  அனைத்தையும் எதிர்கொள்ளும் மனப்பான்மை என்னுள் விளைந்தது.  போராட்ட குணம் மிக்கவனாக மாறினேன்.  ஆஹா, குருதேவரே, என்னால் பூரணமாகச் சொல்ல இயலவில்லை.  எப்படி விவரிப்பேன்?  ஆனால் நான் அப்போது தான் புதியதாய்ப் பிறந்ததாக உணர்ந்தேன் என்பது மட்டும் உண்மை! சொல்லுக்கடங்கா சக்தி என்னுள் நிறைந்தது.”
3 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

கதை சுவாரஸ்யமாகப் போகிறது. பகிர்வுக்கு நன்றிகள்.

இராஜராஜேஸ்வரி said...

உண்மையில் ஐயா, வாசுதேவன் எனக்கு எந்த நம்பிக்கையையும் கொடுத்துப் பேசவில்லை. ஆனால் அவன் அருகாமையே ஒருவருக்கு நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் கொடுக்கும். அவன் எங்கே சென்றாலும் தன்னுடன் இவற்றையும் எடுத்துச் செல்கிறான்.”/

பரமாத்மாவாக வந்த
பரம்பொருள் அல்லவா..!!

ஸ்ரீராம். said...


ஷிகண்டினின் வர்ணனை பிரமாதம். அதுவும் கடைசி பாரா. கண்ணனுடன் பழகும் வாய்ப்பு நமக்குக் கிடைக்கவில்லையே என்று ஏக்கம் வருகிறது. 'கலியுகக் கண்ணன்' தேங்காய் போல வம்பு செய்தால் கண்ணன் வருவானோ ஆவலும் பிறக்கிறது.