Sunday, October 27, 2013

ராஜ சபை கூடியது!

நெற்றிப் புருவம் நெரிய, வாயிலில் தனக்காகக் காத்துக் கொண்டிருந்த  ரதத்தில் துரோணர் ஏறினார்.  மெல்ல நடந்தாலும், அவர் நடையில் ஒரு தீர்மானமும், நிச்சயமும் விசேஷமாகத் தெரிய நடந்து சென்றார்.  தன்னைத் தானே கட்டுப்படுத்திக் கொண்டிருந்தாலும் உள்ளூர அவர் கொதித்துக் கொண்டிருந்தார்.   மழைக்காலம் வந்து சென்றுவிட்டது.  அந்த நீண்ட கங்கைக் கரை நெடுஞ்சாலை பயணத்துக்காக நெடுந்தூரப் பயணிகளுக்கென திறக்கப்பட்டு விட்டது.  கங்கை மழைக்காலத்தின்  சேறு நிறைந்த வேகமான புது வெள்ளம் குறைந்து இப்போது பூரண அமைதியுடன் சலசலவென ஓடிக் கொண்டிருந்தாள்.  முடிவில்லா ஓட்டம்!  இரண்டு நாட்கள் முன்னர் தான் காம்பில்யத்திலிருந்து வந்த படகுகளில் சில பிராமணர்கள் வந்தனர்.  மெத்தப்படித்த பண்டிதர்களான அந்த பிராமணர்கள் காம்பில்யத்தின் ஒரு சிறந்த அமைச்சரின் தலைமையில் குரு வம்சத்தினரின் இளவரசர்களை திரெளபதிக்கு நடக்கவிருக்கும் சுயம்வரத்திற்கு அழைப்பு விடுக்க வந்திருந்தனர்.  சித்திரை மாதம் பூர்ணிமைக்குப் பின்னர் வரும் முதல்நாளில் சுயம்வரம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகத் தகவல்கள் கூறின.  துரோணரின் ஜென்ம வைரியான துருபதனின் மகள் திரெளபதிக்கு சுயம்வரம்!

குரு வம்சத்து இளவரசர்களை சுயம்வரத்திற்கு அழைத்த விபரங்கள் அனைத்தும் காட்டுத் தீ போல் பரவி ஹஸ்தினாபுரம் முழுதும் இதே பேச்சாக இருந்தது.  ஆசாரியர் துரோணருக்கும் இந்தச் செய்தி தெரிய வந்தது.  அத்தோடு நின்றதா?  இன்று காலை தான் யுவராஜாவான துரியோதனனின் மனைவி பானுமதியும் இதே செய்தியைத் தூக்கிக் கொண்டு வந்து ஆசாரியரின் காதுகளில் போட்டாள்.   காம்போஜ இளவரசியான பானுமதியை ஆசாரியர் துரோணர் தன் சொந்த மகளுக்கும் மேலாக நேசித்து அன்பு பாராட்டி வந்தார்.  எளிதில் உணர்ச்சி வசப்பட்டாலும் உற்சாகத்தில் குறைவில்லாமல் அதே சமயம் அனைவரும் தனக்கே சொந்தமாக இருக்கவேண்டும் என்ற எண்ணமும் கொண்டவளான பானுமதி இந்த ஆசாரியரின் சவால்களும், சங்கடங்களும்,  போர்களும்  நிறைந்ததொரு அரச வாழ்க்கையில் மலர்ச்சியையும், ஆனந்தத்தையும் எப்படியோ கொண்டு வந்து விட்டாள்.  துரோணர் அவள் தந்தையான காம்போஜ அரசனின் நீண்ட நாள் நண்பன் என்பதோடு துரியோதனனுக்கும் ,பானுமதிக்கும் திருமணம் நடக்கக் காரணமாகவும் இருந்தார்.  துரியோதனனின் முதல் மனைவியும் பானுமதியின் மூத்த சகோதரியுமான இளவரசி இறந்ததும், பெரு முயற்சிகள் செய்து பானுமதியை துரியோதனனுக்குத் திருமணம் செய்விக்கக் காரணமாக இருந்தவர் துரோணர். துரியோதனன் பால் அவள் அன்பு ஊற்றைப் போலத் தடையின்றிப் பீரிட்டுப் பொங்கிப் பிரவாகம் எடுத்த வண்ணம் இருந்தது.  சுயநலத்தை முன்னிட்டு அவன் செய்த பல செயல்களும் அவளுக்குத் தன் கணவனின் சக்தியையும், வீரத்தையும் வெளிப்படுத்துவதாகத் தோன்றவே அவன் பால் தன் விசுவாசத்தை எல்லையின்றிக் காட்டி வந்தாள்.

பல சமயங்களிலும் அவனுடைய பல்வேறு செயல்களுக்கு நியாயம் கற்பித்ததோடு அல்லாமல், அவனுக்கு உறுதுணையாக நின்று தன் அன்பான வார்த்தைகளாலும், ஆதரவான அணைப்பினாலும் அவனை ஆறுதல் படுத்தினாள்.  தன் மனைவி தன் மீது எல்லையற்ற அன்பு செலுத்துவதும், தன்னை வணங்கி பூஜிப்பதும் துரியோதனனுக்கு வசதியாகவே இருந்தது.  அவள் முந்தானையில் தன் தவறுகளை மறைத்துக் கொண்டு அதில் சுகம் கண்டான்.  இப்படியான இந்த ஆனந்த வாழ்க்கையில் இப்போது விரிசல் கண்டு விட்டது.  பானுமதிக்குத் தாங்க முடியவில்லை.  தன் கணவன் காம்பில்ய நாட்டு இளவரசி திரெளபதிக்கு நடைபெற விருக்கும் சுயம்வரத்தில் பங்கு பெறப் போகிறான் என்பதைக் கேட்டதிலிருந்தே அவளுக்கு நிலை கொள்ளவில்லை.  அதிர்ச்சியில் ஆடிப்போன பானுமதி செய்வதறியாமல் இந்த மாபெரும் பேராபத்திலிருந்து தன்னைக் காக்கவேண்டி ஆசாரியரை நாடி வந்தாள்.  அவர் இதில் தலையிட்டுத் தன்னைக் காக்கும்படி வேண்டினாள்.  ஆசாரியர் துரோணருக்கு இது முற்றிலும் புதிய செய்தியாக இருந்தது.  பாவம், பானுமதி!  எவ்வளவு நல்ல பெண்! வெகுளியும் கூட!  துரியோதனன் பால் அளவற்ற பாசமும், அன்பும் கொண்டவள்.  துரியோதனன் பால் அன்பு காட்டியதன் மூலம் தன் அன்பையும் பாசத்தையும் வீணாக்கி விட்டாளோ!  அவள் வாழ்க்கையும் வீணாகிவிட்டதோ!  ஹூம் அவள் மட்டும் என்ன?

அவரும் தான் தன் வாழ்நாளை துரியோதனனை ஒரு நல்ல  வீர, தீரப்  பராக்கிரமங்கள் நிறைந்த கதாநாயகனாக மாற்றுவதில் ஈடுபட்டுத் தோல்வி தான் அடைந்துள்ளார்.  எவ்வளவு சக்தியையும், நேரத்தையும் அவன் பால் செலவிட்டிருப்பார்!  அனைத்தும் வீணாகி விட்டது.  ஹூம், அர்ஜுனனைப் போன்றதொரு அருமையான சீடன் இனி கிடைப்பானா?  அவன் மட்டும் உயிருடன் இருந்தால்!!! துரோணர் பெருமூச்சு விட்டார்.  துரோணரின் மாணாக்கர்களில் ஒருவன் அந்த துருபதனைத் தோற்கடித்து, வெற்றிப் பரிசாக திரெளபதியின் கரங்களைப் பற்றினால்!!  இது துரோணரால் ஓரளவுக்கு சகித்துக் கொள்ள முடியும்.  ஆனால்! துரியோதனனோ!  சாதாரணமான ஒரு யுவராஜாவாகச் சென்று இளவரசி திரெளபதியைத் தனக்கு மணமுடிக்குமாறு கேட்கப் போகிறான்.  இது அவன் பிறந்த குரு வம்சத்துக்கு மட்டுமில்லை;  துரோணரின் சீடன் என்ற முறையிலும் அவரது கெளரவத்துக்கும் சேர்த்து இழுக்கு. முடியாது; முடியாது;  துரோணர் இதை ஒரு நாளும் அநுமதிக்க மாட்டார்.  துரியோதனன் இந்த சுயம்வரத்துக்குச் செல்வதிலிருந்து தடுப்பது அவர் பொறுப்பு.  பிதாமகர் பீஷ்மருக்குக் கூட குரு வம்சத்தின் யுவராஜா இத்தகையதொரு சுயம்வரத்தில் கலந்து கொள்வதில் சம்மதம் இராது.   இதைக் கேவலமாக நினைப்பார்.

துரோணரின் தேர் அரண்மனை வாயிலை நெருங்கியது.  துரோணருக்கு திடீரென கிருஷ்ண வாசுதேவன் நினைவு வந்தது.  அவனை என் எதிரி என நினைத்திருந்தேனே!  உண்மையில் அவன் எதிரியே அல்ல;  நண்பன். அதுவும் என்னிடம் மிகவும் மரியாதை வைத்திருக்கும் நண்பன்.  அவனுக்கு எவ்வளவு அறிவும், ஞானமும் இருந்திருந்தால், அவரை ஒரு மகா வீரராகவும், போர்த்தளபதியாகவும், போர்ப்பயிற்சிகளில் சிறந்ததொரு ஆசாரியராகவும் மட்டும் நினையாமல், ஒரு பெண்ணைச் சிறந்ததொரு ஆணாக, போர் வீரனாக, யுத்த தந்திரங்களில் சிறந்தவனாக மாற்ற முடியும் என உறுதியோடு சொல்லி இருப்பான்!   ஆஹா!  இந்த இடைச்சிறுவன் அற்புதமானவன்.  ஹூம், அவன் ஹஸ்தினாபுரம் வந்தபோது அவனைச் சந்திக்கும் சந்தர்ப்பம் மட்டும் கிடைத்திருந்தால்!!  சட்டென்று அவருக்கு துரியோதனன் செய்யவிருக்கும் மடத்தனம் நினைவில் வந்தது.  அவன் மட்டும் காம்பில்யம் சென்றால்!  ஆசாரியர் துரோணர் இங்கே குரு வம்சத்தினரோடு தொடர்ந்து இருக்க மாட்டார்.  விலகி விடுவார்..  ஆசாரியர் துரோணர் சாமானியமானவரா என்ன!

தன் சுயமரியாதையைத் துறந்து செல்வமோ, அதிகாரமோ, பதவிகளோ பெறுவதில் ஆசைகளே இல்லாத ஒரு பிராமணன், உண்மையான பிராமணன்  ஆன ஜமதக்னி முனிவரின் மகனான, சாக்ஷாத் பரசுராமரின் சீடர்.  பரசுராமரின் நேரடி சீடரான இந்த துரோணரை வெல்வதற்கும் ஒருவர் உண்டோ?  துரியோதனன் மட்டும் திரெளபதியைத் திருமணம் செய்து கொண்டான் எனில், ஹஸ்தினாபுரத்தில் இருந்தே துரோணர் சென்று விடுவார்..இதோ, அரண்மனை ராஜசபை வந்துவிட்டது. ஆசாரியர் அரண்மனையின் ராஜசபை நடைபெறும் இடத்திற்குச் சென்ற சமயம் அங்கே ஏற்கெனவே இந்த சுயம்வரம் குறித்த விவாதங்களே நடைபெற்றுக் கொண்டிருந்தன.  தன் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த  பீஷ்மப் பிதாமகர் வழக்கத்தை விட உயரமாக, சிம்மாசனத்தை விடவும் உயரமாகக் காணப்பட்டார்.  இந்த வயதில் கூடச் சற்றும் தளர்ச்சியில்லாத அங்க, அவயவங்களோடு மன உறுதியும், உடல் பலமும் , பிரமசரியத்தின் தேஜஸோடும் விளங்கினார்.  கண்ணில்லாக் குருட்டு அரசனான திருதராஷ்டிரனோ, பீஷ்மர் பக்கம் அமர்ந்த வண்ணம் எதுவுமே பார்க்க இயலாக் குருட்டுக் கண்களை அப்புறமும், இப்புறமும் உருட்டிய வண்ணம் அமர்ந்திருந்தான்.  விறைப்பாகவும், கம்பீரமாகவும் அமர்ந்திருந்த பீஷ்மர் அருகே இவன் தொய்ந்து போய் தளர்வோடு அமர்ந்திருப்பது காணவே விசித்திரமானதாக இருந்தது.  இவ்வளவு வருடங்களாக பீஷ்மர் கஷ்டப்பட்டுக் கட்டிக் காத்து வந்த அதிகாரங்கள் அனைத்தும் அவன் முன்னே தொய்ந்து ஒன்றுமில்லாமல் போய் விட்டதாக துரோணர் உணர்ந்தார்.

திருதராஷ்டிரன் அருகே அமர்ந்திருந்த துரியோதனன் தன் வழக்கமான ஆங்காரமும், ஆத்திரமும் கண்களில் தெரிய அமர்ந்திருந்தான்.   அவனருகே அமர்ந்திருந்த துஷாசனனோ அங்கிருந்த அனைவரையும் உற்று நோக்கிய வண்ணம் தன் நெடிய மெலிந்த உருவம், இன்னமும் மெலிந்தாற்போல் காணப்பட்டான்.  அவனருகே தன் கண்களிலேயே சூழ்ச்சியையும், வஞ்சகத்தையும், பேராசையையும் காட்டிய வண்ணம் காந்தார நாட்டு இளவரசன் ஆன ஷகுனி அமர்ந்திருந்தான்.  அவனுடைய பருத்த உடல் பார்க்கவே எண்ணெய்ப் பிசுக்கோடு இருக்கின்றான் போலக் காட்சி அளித்ததோடு அல்லாமல், அவனிடம் நல்ல குணங்களே மருந்துக்கும் இல்லை என்பதையும் வஞ்சகமானவன் என்பதையும் தெரிவித்தது.   ஷகுனியின் அருகே அமர்ந்திருந்த தேரோட்டி அதிரதனின் மகன் ஆன கர்ணன், தன் புத்திசாலித்தனத்தையும், உயர்ந்த அறிவோடு கூடிய ஞானத்தையும் உடையவன் என்பதை சூரியனைப் போல் பளிச்சிடும் கண்களால் காட்டியவண்ணம் அமர்ந்திருந்தான்.  அவன் கண்களின் மொழியிலிருந்து அங்கே நீண்ட நேரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த விவாதம் அவனுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதைக் காட்டியது.  தன்னால் இதை எளிதாக நேரடியான ஒரு தீர்வின் மூலம் முடிக்க முடியும் என்பதை அவன் முகம் சொல்லாமல் சொல்லியது.  கர்ணன் பக்கத்தில் துரோணரின் அருமை மகன் அஸ்வத்தாமா அமர்ந்திருந்தான். துரியோதனனுக்கு அஸ்வத்தாமா வலக்கரம் போன்றவன்.  அவனில்லாமல் துரியோதனனுக்கு எதுவும் முடியாது.

ஆஹா, இது என்ன?? துரோணருக்கு ஆச்சரியம் மிகுந்தது!  பீஷ்ம பிதாமகரின் நம்பிக்கைக்குப் பாத்திரமானவரும், மஹா ஞானி என்று பெயரெடுத்தவரும் நீதிக்கும், நேர்மைக்கும் எடுத்துக்காட்டு எனச் சொல்லப்படுபவரும் ஆன விதுரரை அங்கே காணோம்.  ஆனால்  தந்திரமும், புத்தி நுட்பமும் மிகுந்த மந்திரி குனிகன் அங்கே இருந்தார்.  வயதின் காரணமாகத் தசைகள் சுருங்கிக் கண்கள் இடுங்கிக் காணப்பட்டார் அவர். துரோணரின் மைத்துனரும், குரு வம்சத்தினரின் ஆதி குருவுமான கிருபாசாரியாரும் அங்கே வீற்றிருந்தார். துரோணர் சபைக்குள் நுழைந்தார்.
7 comments:

ஸ்ரீராம். said...

பானுமதி இரண்டாம் மனைவி, அவள் அக்காதான் முதல் மனைவி போன்ற தகவல்கள் புதிது. பல்வேறு புத்தகங்களில் பல்வேறு விதமான தகவல்கள் கிடைக்கின்றன. முழுமையாக ஒரு விவரம் கூட சிதறாமல் எந்தப் புத்தகத்தில் இருக்கும்?

ஸ்ரீராம். said...

// பாவம், பானுமதி! எவ்வளவு நல்ல பெண்!//

ஆனால் இதெல்லாம் அரச நீதியில் சகஜம்தானே?

திண்டுக்கல் தனபாலன் said...

ok... thanks... from new android...

ஸ்ரீராம். said...

// துரியோதனனை ஒரு நல்ல வீர, தீரப் பராக்கிரமங்கள் நிறைந்த.........................................அனைத்தும் வீணாகி விட்டது//

என்ன குறை. அவன் மரணத்தின்போதுதான் தேவர்கள் பூமாரிப் போழிவார்களே... அந்த அளவு அவன் வீரன்தானே?

ஸ்ரீராம். said...

//அவனுக்கு எவ்வளவு அறிவும், ஞானமும் இருந்திருந்தால், அவரை ஒரு மகா வீரராகவும், போர்த்தளபதியாகவும், போர்ப்பயிற்சிகளில் சிறந்ததொரு ஆசாரியராகவும் மட்டும் நினையாமல், ஒரு பெண்ணைச் சிறந்ததொரு ஆணாக, போர் வீரனாக, யுத்த தந்திரங்களில் சிறந்தவனாக மாற்ற முடியும் என உறுதியோடு சொல்லி இருப்பான்! //

புகழ்ச்சியில் மகிழ்ச்சி?

வை.கோபாலகிருஷ்ணன் said...

//பரசுராமரின் நேரடி சீடரான இந்த துரோணரை வெல்வதற்கும் ஒருவர் உண்டோ? துரியோதனன் மட்டும் திரெளபதியைத் திருமணம் செய்து கொண்டான் எனில், ஹஸ்தினாபுரத்தில் இருந்தே துரோணர் சென்று விடுவார்..//

சுவாரஸ்யமான கதை.;) பகிர்வுக்கு நன்றிகள்.

இராஜராஜேஸ்வரி said...

வன் கண்களின் மொழியிலிருந்து அங்கே நீண்ட நேரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்த விவாதம் அவனுக்கு ஏற்புடையதாக இல்லை என்பதைக் காட்டியது. தன்னால் இதை எளிதாக நேரடியான ஒரு தீர்வின் மூலம் முடிக்க முடியும் என்பதை அவன் முகம் சொல்லாமல் சொல்லியது.

அரசனைக்காட்சிகள் கண்முன் விரிவதைப்போல் சுவாரஸ்யமான விரிவுரைகள் அருமை..!