Tuesday, March 10, 2015

பானுமதியின் வளர்ப்புத் தாய் ரேகா பீமனைச் சந்திக்கிறாள்!

சற்று நேரம் யோசிப்பது போல் பாவனை செய்த பீமன் திடீரெனத் தோன்றியது போல் ஒரு குறும்புச் சிரிப்புடன் மீண்டும் பலியாவைப் பார்த்தான். “பலியா, கௌரவர்கள் மனம் மாறும் முன்னர் அவர்களை ஹஸ்தினாபுரத்திலிருந்து அனுப்ப நீ உதவி செய்வாயா? உன் உறவினர்களை இவ்விஷயத்தில் நம்பலாமா?” என்று விஷமத்துடன் கேட்டான்.

“சின்ன எஜமான், நிச்சயமாக அவர்களை நம்பலாம்.  நான் ஏற்கெனவே இது குறித்து அவர்களுடன் கலந்து ஆலோசித்திருக்கிறேன். தேவைப்பட்டால் எங்கள் உயிரைக் கூட உங்களுக்காகத் தியாகம் செய்யவும் தயாராக இருக்கிறோம்.” என்றான் பலியா உணர்ச்சி பொங்க. பின்னர் கொஞ்சம் தயக்கத்துடன், “எஜமான், துரியோதனனுக்குக் கீழ் குடிமக்களாக வாழ்வதில் எங்களுக்கு இஷ்டம் இல்லை.  அது மிகவும் கஷ்டமான ஒன்று.  மேலும் அவன் மாமன் ஆன ஷகுனியின் ஒற்றர்கள் எங்கும் நிறைந்திருக்கின்றனர். நீங்கள் அனைவரும் இப்போது உயிருடன் திரும்பி வரவில்லை எனில் எங்களில் சிலர் மீண்டும் எங்கள் தாயகமே திரும்பி இருப்போம்.  சிலர் அதற்குத் தயாராகவும் இருந்தார்கள்.”

“ம்ம்ம்ம்ம், எத்தனை மாட்டுவண்டிகள் உன்னிடமும், உன் உறவினர்களிடமும் உள்ளன?  மொத்த எண்ணிக்கையை மட்டும் கூறு பலியா!”

“200க்கும் மேல் இருக்கும், எஜமானே!”

“உன் உறவினர்களை அவரவர் மாட்டு வண்டிகளோடு துஷ்சாசனிடம் நாளை மறுநாள் அதிகாலையில் அனுப்பி வைக்க முடியுமா உன்னால்?”

“ஓ, அது எளிது.  அனுப்பி வைப்பேன்.  ஆனால் எதற்காக எஜமானே!”

ஏதோ ரகசியம் காப்பவன் போல் இருந்தது பீமன் முகம்.  அவன் ஏதோ நாடகம் ஆடப் போகிறான் என்பது பலியாவுக்குப் புரிந்தது. “அவர்கள் அனைவரும் துஷ்சாசனிடம் சென்று இப்படிச் சொல்லவேண்டும்.”ஐயா, தாங்கள் அனைவரும் காந்தார நாட்டுக்குச் செல்வதாகக் கேள்விப்பட்டேன். உங்கள் உடைமைகளை எடுத்துச் செல்லத் தயாராக வண்டிகளுடன் வந்துள்ளோம்.” என்று சொல்ல வேண்டும், பலியா! புரிகிறதா?” என்று பீமன் கள்ளச் சிரிப்போடு கூறினான். இப்போது பலியாவுக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை.

“ஆஹா, சின்ன எஜமான்! இது நல்ல வேடிக்கை தான்.  பார்க்கவே மிகவும் ரசமாக இருக்கப் போகிறது. ஆனால், எஜமான், துஷ்சாசன் உங்களுக்கு யார் சொன்னது நாங்கள் காந்தாரம் போகப் போவதாய் என்று கேட்டுவிட்டால்? என்ன செய்வது?  அவர்கள் அப்போது இதிலிருந்து தப்புவது எவ்வாறு?”

பீமன் சற்று யோசித்தான். பலியாவின் முதுகில் தட்டிக்கொடுத்த வண்ணம் கூறினான்:” இது தாத்தா அவர்களின் கட்டளை என அவனிடம் சொல்லச் சொல்லு பலியா.ஹாஹாஹா, அப்படிச் சொல்லிவிட்டால் யாருக்குத் தாத்தாவிடம் போய் அவரைக் கேட்கும் தைரியம் வரும்? அவர் உண்மையாகவே இப்படி ஒரு கட்டளை இட்டாரா எனக் கேட்கும் எண்ணமே அவர்களுக்குத் தோன்றாது.” என்ற வண்ணம் சிரித்தான். பீமனின் சிரிப்பை பலியாவும் எதிரொலித்தான். அப்போது அங்கே அசைந்து அசைந்து வந்த மாலா பீமன் சாப்பிட்ட வாழை இலையை எடுக்க வேண்டி அங்கே வந்தவள் இருவரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டாள். பின்னர் மெதுவாக பலியாவிடம், “தந்தையாரே, இளவரசி பானுமதியின் வளர்ப்புத் தாய் ரேகா உங்களைப் பார்க்க வேண்டி வந்திருக்கிறாள்.  உடனே உங்களை அவசரமாகப் பார்க்க வேண்டுமாம்.  வெளியே காத்திருக்கிறாள்.” என்னும் செய்தியைச் சொன்னாள்.

“ஆஹா, அவள் எதற்காக என்னைப் பார்க்க வரவேண்டும்? என்னிடம் என்ன வேலை அவளுக்கு? என்னுடைய சின்ன எஜமான் திரும்பிச் செல்லும்வரை அவளைக் காத்திருக்கச் சொல்லு.  இப்போது என்னால் அவளைப் பார்க்க முடியாது.” என்றான் பலியா. “இல்லை தந்தையே, சின்ன எஜமான் இங்கே இருக்கையிலேயே அவள் உங்கள் இருவரையும் பார்க்க விரும்புகிறாள். சின்ன எஜமானுக்கு ஏதோ அவசரச் செய்தி சொல்ல விரும்புகிறாள் போலும்.” என்றாள்.

பீமனுக்கு ஆச்சரியம் மிகுந்தது. “அவளுக்கு என்னிடம் என்ன வேலை? ஆஹா, துரியோதனன் ஏதோ தந்திர வேலைகளில் இறங்கி இருக்கிறான் போலும்.  இது நிச்சயம் அவன் தந்திரம் தான். என்னவென்று தான் பார்த்துவிடுவோம்.  உடனே அவளை உள்ளே வரச் சொல்!” என்றான் பீமன். மாலா உடனடியாக ரேகாவை உள்ளே அனுப்பிவிட்டுத் தான் வெளியேறினாள். ரேகா உள்ளே வந்தவள் பலியாவையும், பீமனையும் கீழே விழுந்து வணங்கிவிட்டு பீமன் சொன்னதன் பேரில் அவர்களுக்கு எதிரே தரையில் அமர்ந்து கொண்டாள்.

“நீ தான் பானுமதியின் வளர்ப்புத் தாயா?” என்று பீமன் கேட்க ரேகா அதை ஆமோதித்தாள்.

“ஹஸ்தினாபுரத்துக்கு எப்போது வந்தாய்?” பீமன் கேட்க, “காசி இளவரசி துரியோதனனை மணந்து கொண்டு ஹஸ்தினாபுரம் வந்தபோது நானும் வந்தேன் இளவரசே!” என்றாள்.

“ம்ம்ம், உனக்கு என்னிடம் என்ன வேண்டும்?” என்றான் பீமன்.

4 comments:

ஸ்ரீராம். said...

படிச்சாச்சு. பீமனைக் காதலிக்கும் பெண்ணின் பெயர் மறந்து விட்டது! பழைய பதிவுக்குப் போக வேண்டும்!

மோகன்ஜி said...

ஆஹா... இப்படில்லாம் கூட மகாபாரதம் நடக்குதா... ஒரு மத்யானத்துக்கு ஆச்சு எனக்கு...உங்க வலைப்பூவுலேமுன்னே போய் படிக்கணுமே.. நல்லா ஆற்றொழுக்கா எழுதுறீங்க. VAAZHTHTHUKKAL

sambasivam6geetha said...

@மோகன் ஜி, யாரு சொன்னாங்க? யாரு சொன்னாங்க? இது பலரும் அறியாத பக்கம். :))) ஆனால் எதுவும் என் சொந்தக் கற்பனை எல்லாம் இல்லை. உங்களைப் போல் கற்பனை வளம் எனக்கில்லை. வெறும் மொழி பெயர்ப்புத் தான். :)))) இதைப் புத்தகமாய்க் கொண்டு வரும் ஆவலும் உண்டு. கண்ணன் என்ன நினைக்கிறானோ தெரியவில்லை.

sambasivam6geetha said...

தொடர்ந்து விடாமல் படித்து வரும் இதன் ஒரே ரசிகரான ஶ்ரீராமுக்கு என் மனமார்ந்த நன்றி. :)))