Wednesday, March 25, 2015

பீமன் பறந்தான்!

“நான் எப்போதுமே எந்தவிதமான சூழ்நிலைக்கும் ஈடு கொடுக்கத் தயாராக இருக்கிறேன், தாத்தா அவர்களே, கவலை வேண்டாம்!” என்று சொன்ன பீமன் மீண்டும் அவரை வணங்கி அங்கிருந்து விடைபெற்றுக் கொண்டு திருதராஷ்டிரனின் மாளிகை நோக்கிச் சென்றான். தன் பெரிய தந்தைக்கும், பெரிய தாய்க்கும் தன் வணக்கங்களைத் தெரிவித்துக் கொண்டான் பீமன்.  அவர்களும் வழக்கப்படி தங்கள் ஆசிகளைத் தெரிவித்துக் கொண்டனர். எல்லாம் சம்பிரதாயமாகவே நடைபெற்றன.  ஒவ்வொரு பேச்சு வார்த்தையும் முன் கூட்டித் திட்டமிட்டது போல் குறிப்பிட்ட சில விசாரணைகளுடன் நிறைவு பெற்றன. உள்ளன்புடன் பீமனும் பேசவில்லை;  அவர்களும் பேசவில்லை. இது பார்க்கும் அனைவருக்கும் தெள்ளத் தெளிவாகப் புரியும்படி இருந்தது. அதன் பின்னர் பீமன் தாங்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேற்றப்படும் முன்னர் தங்கி இருந்த தங்கள் சொந்த மாளிகைக்குத் திரும்பினான்.  அந்த மாளிகை தான் இப்போதும் பாண்டவ சகோதரர்களும், அவர்கள் தாயும், புது மணமகள் திரௌபதியும் வசிக்கவெனத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தது.  இதை ஏற்கெனவே அறிந்திருந்த பீமன் உண்மையிலேயே அதே மாளிகைக்குத் தாங்கள் திரும்பி வந்ததன் மூலம் தாங்கள் அனைவருமே வெற்றி அடைந்து விட்டதாக எண்ணினான்.  இது தான் உண்மையான வெற்றி என்றும் நினைத்துக் கொண்டான்.

கொடூரமான நாடு கடத்தல் என்னும் தண்டனையின் மூலம் அவர்கள் இங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். இப்போதோ?? அவர்கள் ஐவரும் வெற்றி பெற்றவர்களாக மட்டும் அல்ல, பலம் பொருந்திய துருபதனின் மருமகன்களாகவும் திரும்பி இருக்கின்றனர். இதை எல்லாம் எண்ணிக் கொண்டிருந்தாலும் பீமனின் உள் மனது வேறொன்றையே நினைத்துக் கொண்டிருந்தது.  அது தான் அந்தத் தாமரைப் பூப் போன்றப் பறக்கும் பாதங்களைக் கொண்ட காசி தேசத்து இளவரசி அவனைத் தனியே சந்திக்க இருப்பது தான்.  அவள் எப்போது, எங்கே, எப்படி அவனைச் சந்திக்க வருவாள்? பீமனின் உள்மனம் அதையே எதிர்பார்த்துக் கொண்டிருந்தது. அப்போது பார்த்து கோபு அவனிடம், “பிரபுவே, உங்கள் தண்டாயுதத்தைக் கொண்டு வந்து தரவா?” என்று கேட்கவும் பீமனுக்குச் சிரிப்பு வந்தது. அவனைப் பார்த்து அவன் இரு காதுகளையும் தன் கைகளால் திருகிய வண்ணம், “முட்டாளே, இப்போது எதற்கு தண்டாயுதம்? நான் என்ன பலியாவின் தலையை உடைக்கப் போகிறேனா? அல்லது வேறு ஏதேனும் இளம்பெண்ணின் மண்டையை உடைக்கப் போகிறேனா?  எனக்குப் பிடித்த ஆயுதம் அது என்பது சரியே!  ஆனால் இப்போது எதற்கு?” என்று கேட்டான்.

பீமனின் விளையாட்டுத் தனமான எண்ணங்களில் இப்போது ஒரு விசித்திரமான எண்ணம் குறுக்கிட்டது.  தற்செயலாக அவன் ஜாலந்திராவின் மண்டையை உடைத்து விட்டால்?  பின் அவளைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டு அவளை ஆறுதல் செய்யும் வண்ணம் அழலாமே!  நன்றாக அழலாம். தனக்குள் இந்த எண்ணத்தை நினைத்துச் சிரித்துக் கொண்டான் பீமன். அவன் மகிழ்ச்சி கட்டுக்கடங்காமல் போனது.  நடக்கையிலேயே அவன் கனவு காண ஆரம்பித்தான். அந்தக் கனவிலேயே ஜாலந்திரா அவன் மனைவியாக இதே மாளிகையில் அவனுடன் தங்குவதாகக் கண்டான் பீமன். அது மட்டுமா?  அவனுக்கும் ஜாலந்திராவுக்கும் குழந்தைகள் கூடப் பிறக்கின்றன!  ஆஹா! திரௌபதியை மறந்து விட்டோமே!  ஆம், ஆம், அவனுக்கும் திரௌபதிக்கும் கூடக் குழந்தைகள் பிறக்கின்றான. ஆஹா, அவன் குடும்பமே வீரதீர சாகசங்கள் செய்யும் கதாநாயகர்கள் நிறைந்த குடும்பமாக இருக்கும்.  இதைப்பார்க்கும் துரியோதனன், (அது வரைக்கும் அவன் உயிரோடு இருந்தால்) பொறாமைத் தீயில் வெந்து போவான்.  அதுவும் அவன் மனைவியின் சொந்த சகோதரி, பீமனைத் திருமணம் செய்து கொண்டதை அவன் ஒருக்காலும் விரும்ப மாட்டான்.  நினைத்து நினைத்துப் புழுங்குவான்.

ஒருவழியாக நினைவோட்டங்களிடையே பீமன் மாளிகையின் உட்புறத்துக்கு வந்து விட்டான்.  அவன் தாய் குந்தி உட்பட அனைவருமே அரச விருந்துக்குத் தயார் ஆகிக் கொண்டிருந்ததைக் கண்டான் பீமன். அர்ஜுனன் பொறுக்கி எடுத்த சிறப்பான உடைகளையும், ஆபரணங்களையும் தரித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு எப்போதுமே தன் தோற்றம் நன்றாக இருக்க வேண்டும் என்னும் எண்ணமும் உண்டு;  தான் நன்றாக இருக்கிறோம் என்னும் எண்ணமும் உண்டு. அர்ஜுனனைப் பார்த்து பீமன்,”அர்ஜுனா, குரு துரோணரைப் பார்த்துவிட்டாயா?” என்று கேட்க, “பார்த்தேன்!” என்று சுருக்கமாக அர்ஜுனன் சொன்னான். “இப்போதைய நிலைமை குறித்து அவர் என்ன நினைக்கிறார்? உன்னிடம் ஏதேனும் சொன்னாரா?” பீமன் கேட்க, “சகோதரச் சண்டையில் ஒருவரை ஒருவர் கொன்று கொள்ளப் போகிறோம் என்பது அவர் எண்ணம்.” என்றான் அர்ஜுனன்.

“ஓஹோ, அப்படியா?  அவர் நம் பக்கம் இருந்து நமக்கு உதவி செய்வாரா?”

“தெரியவில்லை.  அவர் ஒரே மகன் அஸ்வத்தாமா ஹஸ்தினாபுரத்தை விட்டு நீங்கினால் அவரும் இங்கிருந்து சென்று விடுவாராம்.  அவருடைய பழைய இடமான ஆகிச்சத்திரத்துக்கே. “

“ம்ம்ம்ம்? கிருபாசாரியார்?”

“அவரும் தன் மாப்பிள்ளையுடனே சென்று விடுவார்.”

“ஆஹா, நல்லது; நல்லது. இவர்கள் அனைவருமே ஹஸ்தினாபுரத்தை விட்டு நீங்கும் அந்த நாளே மிக மிக நல்ல நாளாக இருக்கப் போகிறது. நாமும் நமக்குள் நாமே சண்டை போட்டுக் கொண்டு ஒருவரை ஒருவர் கொல்வதை விடுத்து மற்ற நாடுகளின் போக்கில் மாறுதல்கள் ஏற்பட்டால் அங்கு சென்று போரிட்டு அவற்றை வெல்ல முயலலாம்.  அவற்றை வென்று நம் நாட்டுடன் சேர்த்துக் கொள்ளலாம். நம்முடைய சக்தி எல்லாம் சகோதரச் சண்டையில் வீணாகாமல் தடுக்கலாம்.  அது சரி, குரு வம்சத்துப் படை வீரர்கள், படைத் தளபதிகள், இவர்கள் நினைப்பு என்னவோ?”

“ம்ம்ம்ம், வந்திருக்கும் விருந்தாளிகள் செல்லும் வரை எதுவும் நடக்காது என நம்புகிறார்கள்.  அவர்கள் சென்றதுமே இங்கே ஒரு மாபெரும் யுத்தம் நடக்கும் என எதிர்பார்க்கின்றனர்.  ஆனால் அனைவருமே தாத்தா பீஷ்மரின் பக்கமே நிற்பதாக வாக்குக் கொடுத்திருக்கின்றனராம்.”

அவ்வளவில் பீமன் அங்கிருந்து கிளம்பிச் சென்று நதியில் நீராடி, சற்று நேரம் நீச்சல் அடித்துப் பயிற்சி செய்து விட்டுப் பின்னர் நதிக்கரையிலேயே தன் நியம, நிஷ்டைகளை முடித்துக் கொண்டு அரண்மனைக்குத் திரும்பி வந்தான்.  அனைவரோடும் தாத்தா அவர்கள் அளிக்கும் மாபெரும் அரச விருந்தில் கலந்து கொண்டான்.  ஹஸ்தினாபுரத்துக் குடிமகன்கள் அனைவருமே இந்த விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.  இத்தனை விருந்தினர் கூடி இருந்த இந்தச் சமயத்திலும் நிலைமையில் ஒரு பதட்டம் இருந்ததை அனைவருமே உணர்ந்திருந்தனர்.  விருந்து என்னவோ கோலாகலமாகத் தான் நடைபெற்றது. வரப் போகும் சச்சரவின் அடையாளங்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாகத் தெரிந்ததை அனைவரும் அலட்சியம் செய்ய நினைத்தாலும், மறக்க நினைத்தாலும் அதுவே வெளிப்படையாகத் தெரிந்தது.

ஜாலந்திராவைச் சந்திக்கப் போகும் நள்ளிரவுக்காக பீமனின் மனம் காத்திருந்தது.  என்றாலும் அவன் அந்த விருந்தை நன்கு ரசிக்கவே செய்தான். என்றாலும் நள்ளிரவுச் சந்திப்பையே அவன் எதிர்நோக்கிக் கொண்டிருந்தான். ஏற்கெனவே கனவுலகில் மிதந்து கொண்டிருந்தவனை இந்த அரச விருந்தின் சுவை இன்னமும் கனவுலகில் மிதக்கச் செய்தது. உணவு முடிந்து அரச விருந்தின் சம்பிரதாயங்கள் அனைத்தும் முடிந்தவுடன் யுதிஷ்டிரனும், திரௌபதியும் அவர்களுக்கென அலங்கரிக்கப்பட்டிருந்த அறைக்குச் சென்றனர்.  மற்றச் சகோதரர்கள் நால்வரும் அரண்மனை முன்றிலில் படுத்தனர். தன் படுக்கையை மற்றச் சகோதரர்கள் படுக்கும் இடத்திலிருந்து தள்ளிப் போடும்படி கோபுவிடம் சொன்னான் பீமன்.  அதன்படியே அவனுக்குப் படுக்கை தயாரிக்கப்பட்டது.

அனைவரும் படுத்தனர். ஒவ்வொரு விளக்காக அணைக்கப்பட்டது. பீமன் தன் படுக்கையில் படுத்து உறங்குவது போல் பாசாங்கு செய்தான். சற்று நேரத்தில் அர்ஜுனன், நகுலன்,சஹாதேவன் ஆகியோர் உண்மையிலே ஆழ்ந்த உறக்கத்தில் மூழ்கிவிடத் தன் படுக்கையிலிருந்து குதித்து எழுந்த பீமன் தன் வாளை எடுத்து இடுப்பின் உறையில் செருகிக் கொண்டு கோபுவின் துணையோடு பலியாவின் மல்யுத்த மைதானம் நோக்கிப் பறந்தான்.

1 comment:

ஸ்ரீராம். said...

கோபுவைப் பற்றி முன்பு ஏதாவது குறிப்பு வந்துள்ளதா

என்ன?எவ்வளவோ நுணுக்கமான விவரங்கள் தந்திருக்கும்போது அந்த படாடோபமான விருந்தில் என்னென்ன பரிமாறியிருப்பார்கள் என்ற எண்ணம் வருகிறது!