Sunday, December 27, 2015

ச்யமந்தகம் திருடப்பட்டதா?

சத்ராஜித்தின் அரண்மனை. பொழுது விடியும் நேரம். கருக்கிருட்டு மெல்ல மெல்ல மறைந்து கொண்டிருந்தது.  எங்கும் ஓர் அமைதியான சூழ்நிலை நிலவிக் கொண்டிருந்தது. அப்போது அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு திடீரென ஒரு குரல் கிரீச்சிட்டுக் கத்தியது. தொடர்ந்து குழப்பமான பல குரல்கள்! தெளிவில்லாமல் கூச்சல்கள்! உற்றுக் கேட்டால்! “திருடன், திருடன்! ச்யமந்தகமணியைத் திருடி விட்டான்!” “ஐயகோ! திருடன் வந்திருக்கிறான்! ச்யமந்தகமணியைக் காணவில்லையே!” மாளிகையின் உள்ளே காலை நேரத்து உறக்கம் கலையாமல் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் அனைவரும் தூக்கிவாரிப் போட்டுக் கொண்டு எழுந்தனர். கூக்குரல்களுக்கு நடுவே தனியாகத் தொனித்த குருவின் குரலை அடையாளம் கண்டு கொண்டார்கள். கூக்குரல்கள் வந்த திசையை நோக்கி அனைவரும் ஓடினார்கள்.

சத்யபாமா அந்த நேரம் தூங்கிக் கொண்டிருக்கவில்லை. விழித்துக் கொண்டு தான் படுத்திருந்தாள். சற்று நேரத்திற்கு முன்னர் மறைந்திருந்த வண்ணம் அவள் பார்த்த விசித்திரமான காட்சிகளை மனதினுள் மீண்டும் மீண்டும் கொண்டு வந்து அலசிக் கொண்டிருந்தாள். தன் தந்தை தன் சிறிய தந்தையை வேறு ஏதோ முக்கியமான வேலையாக அனுப்பியதை நினைத்து யோசித்துக் கொண்டிருந்தாள். ப்ரசேனன் எங்கே சென்றான்? யோசித்து யோசித்து அவள் மூளை குழம்பியது. இப்போது இந்தக் கூக்குரல் கேட்டதும் தன் படுக்கையிலிருந்து துள்ளி எழுந்தாள். தாழ்வாரத்திற்குச் சென்றவள் முன்னால் தன் தந்தை செல்வதைக் கவனித்தாள். அவர் பின்னாலேயே அவளும் சென்றாள். அவர் கோயிலின் வாயிலுக்கருகே ஓடிச் சென்று அங்கே திருடன் ஓடினால் பிடிக்க வேண்டி சென்று கொண்டிருந்தார்.

சத்யபாமாவின் சொந்தச் சகோதரன் ஆன பங்ககராவும், மாற்றாந்தாயின் மக்களான வடபதி, தபஸ்வந்தா ஆகியோரும் சில காவலர்களுடன் அங்கே கூடினார்கள். அவர்களுக்குள்ளாகப் பேசிக் கொண்டு சத்ராஜித்தைத் தொடர்ந்து சென்றனர். குடும்பத்தின் மற்ற உறுப்பினர்கள் அனைவரும் அந்தத் தாழ்வரையில் கூடி ச்யமந்தகம் காணாமல் போனதைக் குறித்து அதிசயித்துப் பேசிக் கொண்டனர். அனைவரும் திகைப்பிலும் பயத்திலும் உறைந்து போயிருந்தனர். அவர்கள் அனைவரும் எதிர்பார்த்திருந்த பேரிடர் கடைசியில் நிகழ்ந்தே விட்டது. வாசுதேவ கிருஷ்ணன் ச்யமந்தக மணியைத் திருடிச் சென்றுவிட்டான். அப்போது சத்யபாமாவுக்கு முன்னால் சென்ற சத்ராஜித் வாயிற்படியருகில் சற்றே குனிவதை பாமா பார்த்தாள். சத்ராஜித் எதையோ கீழே போடுவதையும் மீண்டும் எடுக்கையில் அது காதில் அணியும் குண்டலமாக இருந்ததையும் கவனித்தாள். அப்போது சத்ராஜித் பெருங்குரலெடுத்துக் கத்தினான்.

“இதோ! கிடைத்துவிட்டது! திருடன் அணிந்திருந்த குண்டலம்! ஆம்! இது அவனுடையது தான்! இல்லை எனில் இது யாருடையது?” என்று கூவினான் சத்ராஜித். சத்யபாமா திகைத்து நின்றாள். அவள் கண்களால் அவள் பார்த்திருக்கிறாள்: அவள் முன்னாலேயே அவள் தந்தை அந்தக் குண்டலத்தைக் கீழே போட்டுவிட்டுப் பின்னர் அனைவரும் பார்க்கும் வண்ணம் அதைக் கையில் எடுத்திருக்கிறார். அதை அவள் பார்த்தாள் அல்லவோ? அல்லது அதுவும் பொய்யோ? ஒருவேளை அவள் சரியாகக் கவனிக்கவில்லையோ? இல்லையே! அவள் நிச்சயம் பார்த்தாளே! எதைப் பார்த்தாள்? குனிந்து அவள் தந்தை எடுத்தது மட்டும் நிஜமோ? தான் பார்த்தது சரியா? அல்லது அவள் தந்தை இப்போது சொல்வது சரியா? என்ன செய்யலாம்? சத்யபாமாவின் மனம் குழம்பியது. இதற்குள் மற்றவர்கள் அனைவரும் அவர்களைச் சூழ்ந்து கொண்டனர். சத்ராஜித் அப்போது அனைவரிடமும் காட்டினான் அந்தக் குண்டலத்தை! “அந்தத் திருடன், கிருஷ்ணன் ச்யமந்தகமணியைத் திருடிச் சென்று விட்டான்!” சத்ராஜித் கிருஷ்ணனைத் திட்டினான். பல சாபங்களையும் கொடுத்தான். அவனுக்குத் தக்க தண்டனை கொடுக்கப் போவதாக சபதம் எடுத்தான். அப்போது அவனைப் பார்க்கவே பயங்கரமாக இருந்தது. வாரி முடியப்படாத குடுமி அவிழ்ந்து தொங்க, ஒழுங்காகத் தூக்கிக் கட்டப்படாத தாடி அங்குமிங்கும் காலைக்காற்றில் அலைய சிவந்த முகத்துடன் உக்கிரமான தோற்றத்துடன் காட்சி அளித்தான். “ச்யமந்தகம் என்னை விட்டுச் சென்று விட்டது. அந்தப் பாவி கிருஷ்ணன் அதைத் திருடி விட்டான்!” என்று உரக்கக் கத்தினான்.

ஆனால் சத்யபாமா விடவில்லை. “ஆனால் தந்தையே, நீங்கள் கோயிலுக்கு முன்னால் ச்யமந்தக வைத்திருக்கும் அறைக்கு எதிரே தானே படுத்திருந்தீர்கள்?” என்று தந்தையிடம் கேட்டாள். சத்ராஜித் அதற்கு, “சில விநாடிகளுக்காக நான் இங்கிருந்து சென்றிருந்தேன். நான் திரும்பியபோது வழிபாடுகள் நடக்கும் இந்த அறையின் கதவு உடைக்கப்பட்டிருந்தது. ச்யமந்தகம் திருடப்பட்டு விட்டது!” என்றான். பின்னர் தன்னிரு கரங்களையும் உயரத் தூக்கியவண்ணம் கடவுளரிடம் இறைஞ்ச ஆரம்பித்தான் சத்ராஜித். “சூரிய தேவனே! உன்னுடைய உக்கிரமான கிரணங்களால் அந்தத் திருடனைச் சுட்டு எரித்துவிடு! அவனும் அவன் குடும்பமும் நரகத்தின் கொடிய நெருப்பில் வெந்து அழிந்து போகட்டும்!” என்றான்.

பங்ககரா தன் தந்தையை சமாதானம் செய்து மீண்டும் மாளிகைக்கு அழைத்து வந்தான். அவன் தந்தையிடம், “தந்தையே, திருடனைத் தாங்கள் நேரிலே பார்த்தீர்களா?” என்றும் கேட்டான். அதற்கு சத்ராஜித், “நான் அறைக்குத் திரும்பியபோது கருக்கிருட்டாக இருந்தது. அந்தக் குறைந்த வெளிச்சத்தில் எனக்கு எதுவும் சரியாகத் தெரியாவிட்டாலும் எவரோ ஓடிச் செல்வதை நிழலுருவாகக் கண்டேன். யாரேனும் அரண்மனைச் சேவர்கர்களாக இருக்கலாம் என நினைத்தேன். அப்போது திடீரென எழுந்த சந்தேகத்தில் உள்ளே சென்று பார்த்தபோது திருட்டைக் கண்டு பிடித்தேன். என்னையும் அறியாமல் அலறினேன். அதன் பின்னர் நான் அறையை விட்டு வெளியே வந்து தாழ்வாரத்தினருகே வருகையில் அந்தத் திருடன் நுழைவாயிலுக்கு அருகே ஓடிச் செல்வதைக் கவனித்தேன். கோயில் இருக்கும் வளாகத்தினுள் அவன் நுழைந்து விட்டான். அவன் முகத்தை என்னால் பார்க்கமுடியவில்லை. ஆனால் அது கிருஷ்ணனாகத் தான் இருக்க வேண்டும். இந்தக் குண்டலம் அவனுடையது தான் என்பதில் எனக்கு எவ்வித சந்தேகமும் இல்லை!” என்றான்.

“யாதவர்கள் எவரையும் நான் விட்டுவிடப்போவதில்லை. கூண்டோடு அழிக்கிறேன். என் ச்யமந்தகம் எனக்கு வரவேண்டும். அதுவரை அனைவரையும் சும்மா விடமாட்டேன்.” என்று பெருங்குரலெடுத்துக் கத்தினான். அதன் பின்னர் என்ன நினைத்தானோ திடீரென பங்ககராவை நோக்கித் திரும்பினான். “என்ன, பேந்தப் பேந்த விழிக்கிறாய்? செல் உடனே செல்! என் ரதத்தைத் தயார் செய்! பெரிய ரதம்! சங்கை எடுத்து ஊது! ஷததன்வாவுக்குச் செய்தியை அனுப்பு! அவனையும் ரதத்தை எடுத்துக் கொண்டு வரச் சொல்! உன் ரதத்தையும் தயார் செய்! நம்முடைய மஹாரதிகள அனைவரையும் ஒன்று சேர்! விரைவில் இதைச் செய்து முடி! அனைவரும் தயாராகட்டும்!” என்றான். பின்னர் காவலர்களிடம் திரும்பி, “முட்டாள்களே, நீங்கள் அனைவரும் முழு முட்டாள்கள்! உங்கள் காவலின் லட்சணம் இப்படி இருக்கிறது! என்னுடைய ச்யமந்தகம் மட்டும் கிடைக்கவில்லை எனில் உங்கள் அனைவரையும் துண்டு துண்டாக வெட்டிப் போட்டுவிடுவேன். விரைவில் என் ரதத்தைத் தயார் செய்யுங்கள்! அந்தத் திருடன் இந்த உலகின் எந்த முனையிலிருந்தாலும் ஓடோடிப் போய்ப் பிடித்து வருவேன்!” என்று கத்தினான்.

1 comment:

ஸ்ரீராம். said...

நல்ல நாடகம்!