Sunday, March 24, 2013

கண்ணனின் தீவிர சிந்தனை!


கண்ணன் கண் முன்னே பாஞ்சால நாட்டு அரசன் துருபதனின் குடும்பம் விரிந்தது.  எத்தனை அழகான காட்சி!  இந்தக் குடும்பத்தில் இருக்கும் அனைவரும் ஒருவருக்கொருவர் அன்பினாலும், பாசத்தினாலும் பிணைந்து இருக்கின்றனர்.  ஆனால் இந்த ஷிகன்டின் மட்டுமே தனித்துத் தெரிகிறானே?  அதோ பாஞ்சால மன்னன் சிம்மாசனத்தில் கவலை தோய்ந்த முகத்துடன் அமர்ந்திருக்கையில் அவன் காலடியில் அவன் முழங்காலில் கைகளைப் பதித்த வண்ணம் திரெளபதி.  தகப்பன் அருகே அவனுக்குப் பாதுகாப்புக் கொடுப்பது போல் த்ருஷ்டத்யும்னன் காணப்பட, சத்யஜித்தோ இனம் தெரியா வருத்தம் முகத்தில் துலங்கச் செய்வதறியாது தவிக்கும் தகப்பனை ஆதுரத்துடன் பார்த்தபடியே நிற்கிறான்.  இவர்கள் அனைவரும் பாசம் என்னும் மெல்லிய கயிற்றால் பிணைக்கப்பட்டிருக்கின்றனர். ஆச்சரியமான குடும்பம்!

ஷிகன்டின் இந்தக் குடும்பத்தில் தப்பிப் பிறந்தவன்.  எவராலும் அவனை அடக்க இயலவில்லை.  மிகவும் பாரம்பரியப் பெருமை வாய்ந்த குலத்தில் பிறந்தாலும் அதோடு ஒட்டவில்லை.  கிருஷ்ணன் இதை நினைத்து ஆச்சரியம் கொண்டாலும் இன்னொரு பக்கம் அவனுக்கு வருத்தமாகவும் இருந்தது.  அவனுடைய இந்த திடீர் மறைவு குடும்பத்தினருக்கு ஒரு பக்கம் அதிர்ச்சியையும் அதே சமயம் பல பிரச்னைகளுக்கும் பதில் சொல்ல இயலாத நிலையில் இருந்த துருபதனுக்கு ஒரு வகையில் நிம்மதியையும் கொடுத்திருக்குமோ?   கிருஷ்ணன் மனதில் இந்தக் குடும்பத்தின் மீது இரக்கம் சுரந்தது.  அவர்கள் அனைவரின் மனதிலும் வெறுப்பின் விளைவாக விளைந்த கோபமும், பழிவாங்கும் எண்ணமும் நிரம்பி இருந்தது தான்.  ஆனாலும் இத்தகைய பெரிய பாரம்பரியம் கொண்ட அரச குடும்பத்தினரிடம் அரிதாகவே காணப்படும் பெருந்தன்மையும்,  உயர் பண்புகளும் இவர்களிடம் அபரிமிதமாகவே காணக் கிடைக்கிறது.  இதை நினைத்துக் கண்ணனுக்கு  உவகையும், ஆச்சரியமும் ஏக காலத்தில் தோன்றியது.  திரெளபதியுடன் தனக்கு நடந்த உரையாடலை நினைவு கூர்ந்தான் கண்ணன்.  அதன் காரணமாகவே இப்போது அவன் முக்கியமான முடிவுகள் எடுத்தாக வேண்டும்.

இங்கே இப்போது இருக்கும் நிலைமை மிக மோசமாகக் காண்கிறது.  எந்த நேரத்திலும் நிலைமை முற்றி அதன் மூலம் கலகம் என்னும் பெருந்தீ உருவாகலாம்.  மனக்கசப்பு என்னும் உணர்வால் துருபதன் மனமும், அவன் பெண், பிள்ளைகள் மனங்களும் நிரம்பி வழிகின்றன.  பெருமையும், அகங்காரமும், கர்வமும், பேராசையும்  கொண்ட துரோணரை இவர்கள் ஒருக்காலும் தங்கள் நண்பராக ஏற்கப் போவதில்லை.

இதே வெறுப்பும், பேராசையும் தான் துரியோதனனையும், அவன் சகோதரர்களையும், நண்பர்களையும் பீடித்திருக்கிறது.  பாண்டவர்கள் மேல் வெறுப்பு, கோபம், பொறாமை. இந்த வெறுப்பும், கோபமும் பாண்டவர்கள் மேல் மட்டுமில்லாமல் பாண்டவர்களுக்கு ஆதரவாக யார் நின்றாலும், கெளரவர்களின் வழியில் குறுக்கே வருவதாகவே நினைத்து இன்னும் கோபம் கொள்கின்றனர்.  துரியோதனன் மிகப் பெரிய பிரச்னையை உருவாக்குகிறான்.  அவனே ஒரு பிரச்னை தான்.  தற்சமயம் குருக்ஷேத்திரத்தில் இருந்தாலும் விரைவில் ஹஸ்தினாபுரம் திரும்பிவிடுவான்.  அதன் பின்னர் இரண்டு அல்லது மூன்று மாதங்களில் அவனே யுவராஜா.  ஹூம், இதன் மூலம் சர்வ வல்லமை கொண்ட பதவியில் அமர்ந்துவிடுவான்.  சகுனியின் ஆலோசனையின் பேரில் துரோணரும் ஆதரவு தெரிவிக்கத் தன் யுவராஜப் பதவியை நிச்சயம் செய்ய வேண்டிப் பாஞ்சாலத்தின் மேல் படையெடுக்கவும் தயங்க மாட்டான்.

இவர்களுடைய இந்தப்  பிரச்னைகளால் ஆர்யவர்த்தம் முழுதும் நாசமாவதோடு அல்லாமல் ஜராசந்தனுக்கு இன்னமும் வசதியாகப் போய்விடும்.  மகதத்திலிருந்து கிளம்பிக் காசியை ஒரு நொடியில் வீழ்த்திவிட்டுப் பாஞ்சாலத்திற்குள் புகுந்து கொள்ள அவனுக்கு நேரமாகாது.  ம்ஹூம், மஹா பெரிய பிரச்னை.  நெருக்கடி உச்சகட்டத்தை அடைந்துள்ளது.  இதிலிருந்து நான் தப்ப முடியாது;  தப்பவும் கூடாது.  என்ன ஆனாலும், என்ன விலை கொடுத்தாவது இதைத் தடுக்கவேண்டும்.  என் கடமையை நான் ஆற்றியாகவேண்டும்.  இந்தப் பயங்கர நெருக்கடி நிலைமையைக் கொஞ்சம் தள்ளிப் போடப் பார்க்கலாம்.  முழுவதாய்த் தடுக்க முடியும் எனத் தோன்றவில்லை.  தள்ளிப் போடவேண்டுமெனில் புதியதொரு சூழ்நிலை உருவாக வேண்டும்.  துருபதனை முன்னிட்டுக் கொண்டே அது நடைபெறவும் வேண்டும்.  எப்படியாவது துருபதன் ஜராசந்தனுடனோ அல்லது மற்றப் பேராசை பிடித்த இளவரசர்கள், அல்லது அரசர்களுடனோ உடன்படிக்கை செய்து கொள்ளாமல் தடுக்க வேண்டும்.  இதன் மூலம் துருபதனின் வெறுப்பைக் குறைக்க முயல வேண்டும்.  வெல்ல வேண்டும்.  அதற்கேற்ற சக்தி எனக்கு வேண்டும்.   துருபதனின் வாழ்க்கையின் குறிக்கோள் துரோணரை வெல்வது அல்ல எனக் காட்டி அவன் வாழ்க்கையின் உண்மையான நோக்கத்தைத் தூண்ட வேண்டும்.  கிருஷ்ணன் ஒரு முடிவுக்கு வந்துவிட்டான்.

Sunday, March 17, 2013

ஷிகன்டினைக் காணவில்லை!


“நேர்மையின் வடிவம் எனப்படும் பீஷ்மர் அப்போது எங்கே போனார்?  தூய்மைக்கும், நேர்மைக்கும் தன்னை ஒரு அவதாரம் எனக் கூறிக்கொள்வாரே?  அப்போது எங்கே போனார்? பரதனின் குலத்தில் பிறந்த மாபெரும் சக்கரவர்த்தி, அதுவும் குரு வம்சத்தினரின் சக்கரவர்த்தி என்ற பெருமையில் மூழ்கி இருக்கும் திருதராஷ்டிரர் என்ன செய்து கொண்டிருந்தார்?  அவர்கள் அனைவரும் துரோணர் ஏதோ ஒரு பெரிய அரசனை வென்று அவன் நாட்டைக் கைப்பற்றி விட்டார் என எண்ணினார்களோ என்னவோ! ஹஸ்தினாபுரத்தில் துரோணருக்கு அப்படி ஒரு மாபெரும் வரவேற்புக் கொடுத்தனர்.  “  திரெளபதி தொடர்ந்தாள்.  கிருஷ்ணன் யோசனையில் ஆழ்ந்தான்.  இவ்வளவு மேன்மையான இதயமும், எண்ணங்களும் கொண்ட ஒரு இளவரசியின் வேண்டுகோளைத் தட்டுவது என்றால்……. கிருஷ்ணன் மனம் அவனையும் அறியாமல் திரெளபதியின் பால் கவரப்பட்டது.  ஆனால் அதே சமயம் அவளை மணந்து கொண்டு துருபதனின் நோக்கத்தை ஈடேற்றவும் கிருஷ்ணனுக்கு இஷ்டமில்லை.

திரெளபதியை நோக்கிய கண்ணன், “ஒருவேளை நான் ஒத்துக் கொண்டதன் பின்னரும்……. தோற்றுப் போனேன் எனில்?” என வினவினான்.  திரெளபதியின் முகம் புன்னகையால் மலர்ந்து விகசித்தது.  “உங்களைக் குறித்து நாங்கள் அனைத்தும் அறிவோம் வாசுதேவரே!  நீங்கள் ஒரு நாளும் தோற்க மாட்டீர்கள்.” என்றாள்.
“ஏன் அவ்வாறு நினைக்கிறீர்கள் இளவரசி?”  கண்ணனும் புன்னகையோடு கேட்டான்.

“துரோணரின் சீடர்களில் இரண்டே பேர் தான் வில்வித்தையில் சிறந்து விளங்குபவர்கள்.  ஒன்று அர்ஜுனன், இன்னொருவன் கர்ணன்.  குரு சாந்தீபனியின் சீடர் ஆன கிருஷ்ணனின் சக்கரமோ எல்லாவற்றையும் அடியோடு அழிக்க வல்லது.  அந்த மஹாதேவனின் திரிசூலம் கூட அதன் முன் தோற்கும்.”

“ஓ, ஓ, மிகவும் மிகைப்படுத்திச் சொல்லி இருக்கின்றனர் இளவரசி.  அதுவும் குரு சாந்தீபனி அவர்கள் என்னிடம் மிகவும் அன்பு பாராட்டுபவர்.”  “அப்படி நீர் தோற்றால் நாங்கள் அதை ஏற்கத்தான் வேண்டும்.” கபடற்ற திரெளபதியின் பேச்சு கண்ணன் மனதைக் கவர்ந்தது. 

“இளவரசி, நான் உங்களுக்கு உதவ வேண்டுமெனில் உங்கள் கையைப் பிடித்து உங்களை மணந்தே ஆகவேண்டுமா?  வேறு விதத்தில் உங்களுக்கு உதவ முடியாதா?”

“ஏன் , என்னை உங்களுக்குப்பிடிக்கவில்லையா?  உங்கள் மனைவியாக ஆக நான் தகுதியற்றவளா?” திரெளபதியின் குறும்பான பேச்சைக் கேட்டுக் கண்ணன் சிரித்தான்.

“இளவரசி, நான் ஒரு மாட்டிடையன் என்பதை நீங்கள் நன்கு அறிவீர்கள் என எண்ணுகிறேன்.  ஒரு மாபெரும் சாம்ராஜ்யத்தின் ஒரே இளவரசியை நான் எவ்வாறு மணக்கமுடியும்?  அதற்கான தகுதியே எனக்கில்லை.  அதோடு இந்த ராஜாங்க விஷயங்களுக்காக இளவரசிகளின் வாழ்க்கையை பேரம் பேசுவதையும் நான் கட்டோடு வெறுக்கிறேன்.  திருமணம் என்பது ஒரு வியாபாரம் அல்ல.  நாம் திருமணம் குறித்துப் பேச வேண்டாம்.   உங்கள் தந்தையின் சபதம் குறித்துக் கவலைப்படாமல் உங்களுக்குப் பிடித்த மணமகனை நீங்களே தேர்ந்தெடுங்கள் இளவரசி.  திருமணம் என்னும் பந்தம் இல்லாமலேயே நான் துருபதன் பக்கமே நின்று அவருக்கே உதவிகள் செய்வேன் என்னும் உறுதிமொழியை உங்களுக்கு அளிக்கிறேன்.  உங்களுக்கும் என்னுடைய உதவிகள் உண்டு இளவரசி, நீங்கள் என்னை உங்களில் ஒருவனாக நினைக்க வேண்டும்.”

அவர்கள் பேச்சு திடீரென நின்றது.  கண்ணன் திரும்பிப் பார்த்தபோது துருபதன் வந்து கொண்டிருந்தான்.  அவன் ஏதோ முக்கியமான அதிர்ச்சியான விஷயத்தைக் குறித்துக் கேள்விப் பட்டு அந்த அதிர்ச்சியிலிருந்து மீளாமலேயே இங்கே வந்து கொண்டிருக்கிறான் எனக் கண்ணனுக்குத் தோன்றியது.  எப்போதையும் விட இப்போது மிகவும் கடுமையாகவும், பயங்கரமாகவும் அவன் முகம் காட்சி அளித்தது.  தன் மகனைப் பார்த்து, “த்ருஷ்டத்யும்னா, ஷிகன்டின் மறைந்துவிட்டான்!” என்று அறிவித்தான்.  அவன் குரலில் தாள முடியாத கோபம் இருந்ததை அனைவரும் உணர்ந்தனர்.  த்ருஷ்டத்யும்னன், சத்யஜித், திரெளபதி மூவரும் அதிர்ச்சி அடைந்தனர்.  தங்கள் இருக்கையிலிருந்து எழுந்தே விட்டனர்.  


“என்ன, உண்மையாகவா?” எனக் கேட்க, துருபதனும், “ஆம், உண்மைதான்.  ஷிகன்டின் மறைந்து விட்டான்.  அவன் எங்கெல்லாம் ஒளிந்திருக்கக் கூடும் என்பதை அறிந்த அங்கெல்லாம் அவனைத் தேடினேன்.  ஆனால் அவன் எங்கும் காணப்படவில்லை.  எப்படி மறைந்தான் என்பதற்கான அடையாளங்களும் கிடைக்கவில்லை.”  சோர்வுடனும், மனக் கலக்கத்துடனும், அங்கிருந்த மரம் ஒன்றைச் சுற்றிக் கட்டப்பட்டிருந்த மேடையில் துருபதன் அமர்ந்து கொண்டான்.  “அவன் பிறந்திருக்கவே வேண்டாம்!” என்று வேதனை மிகுந்த குரலில் கூறிவிட்டுத் தன் தலையைத் தன்னிரு கரங்களாலும் பிடித்துக் கொண்டான்.  அவன் கண்கள் கண்ணீரால் நிரம்பியது.  கிருஷ்ணன் நிலைமையை உணர்ந்தவனாய் எதுவுமே பேசாமல், எதுவுமே கேட்காமல் அங்கிருந்து மெல்ல வெளியேறினான்.

Wednesday, March 6, 2013

திரெளபதியின் வருத்தமும், ஆக்ரோஷமும்!


“இப்போது என்ன செய்யலாம் என நீங்களே சொல்லுங்கள், வாசுதேவரே!  என் தந்தையின் வேண்டுகோளை நீர் நிறைவேற்ற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம்.” திரெளபதி வாசுதேவ கிருஷ்ணனைக் கொஞ்சம் ஆவல் கலந்த பார்வையுடன் பார்த்துக் கொண்டே கேட்டாள்.  எவ்விதமேனும் தன் தந்தையை இந்தப் பிரச்னையில் இருந்து விடுவிக்க வேண்டும் என்ற அவள் ஆவல் கிருஷ்ணனுக்குத் தெள்ளத் தெளிவாய்ப்புரிந்தது.  அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.  சிறிது நேரம் இடைவெளி விட்ட திரெளபதி மீண்டும் தொடர்ந்தாள்.  “ வாசுதேவா, என் தந்தையைக் குறித்து நீர் அறிய மாட்டீர்.  அவர் முழுதும் நற்குணங்களும், நற்சிந்தனைகளுமே கொண்டவர்.  எப்போதுமே நேர்மையானதொரு வாழ்க்கையே வாழ்ந்து வருகிறார்.  இந்தப் பாஞ்சால நாட்டு மக்களுக்கு அவர் தந்தையைப் போன்றவர்.  குடிமக்களைத் தன் சொந்த மக்களாகவே என் தந்தையும் கருதுகிறார்.   அவர் எப்போதும்  எவருக்கும் எந்தக் கெடுதலும் செய்தது இல்லை. “

தன் தந்தையின் மேல் திரெளபதி கொண்டிருக்கும் பாசம் அவள் பேச்சில் நன்கு புரிய வந்தது.  மேலும் அவள் தொடர்ந்தாள்.  “ ஆனால் அவரால் பீமனும் அர்ஜுனனும், அவரைக் கட்டி இழுத்து வந்த அவமானத்தை மறக்க இயலவில்லை.  அப்போதில் இருந்து அவர் ஒரு வித்தியாசமான மனிதராக இருக்கிறார்;  நாங்களும் மாறிவிட்டோம் வாசுதேவா!   அந்த அவமானம் ஏற்பட்ட நிமிடங்களில் இருந்து அவரால் அந்த அவமானத்தைச் சகித்துக்கொள்ள முடியாமல் கங்கையில் விழுந்து உயிரை விட்டுவிடலாமா எனப் பல நேரங்கள் நினைத்தார்.   ஆனால் தாயற்ற குழந்தைகளான எங்களை, அவரே பாசத்துடனும், அன்புடனும் வளர்த்து வந்திருக்கிறார்.  அவர் பாசத்தைப் பெற்ற நாங்கள் அவருக்குத் திரும்பச் செய்யக் கூடிய கடமை அவர் அடைந்த அவமானத்தை அகற்றுவது தான் இல்லையா?  நாங்கள் அவரைத் தேற்றினோம்.  அவரது அவமானத்தைத் துடைப்பதாக சபதம் இட்டோம்.  அவர் அடைந்த அவமானத்துக்குப் பழிக்குப் பழி வாங்குவதாய் வாக்குக் கொடுத்தோம்.” திரெளபதி மீண்டும் நிறுத்திவிட்டுச் சற்று மூச்சு வாங்கினாள்.  பின்னர் தொடர்ந்து, “ஆம், நாங்கள் பழிவாங்காமல் விடமாட்டோம்.”  என முடித்தாள்.

திரெளபதியையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தான் கிருஷ்ணன்.  கோபத்திலும், தந்தைக்கு ஏற்பட்ட அவமானத்தால் எழுந்த வருத்தத்திலும் பளபளத்த  அவள் கன்னங்களில் சிவப்பும், கண்களில் தோன்றி மறைந்த மின்வெட்டைப் போன்ற ஒளியும்,  பேசும்போதே அனைவரையும் தன் பக்கம் கவர்ந்து இழுக்கும் வல்லமை கொண்ட இனிய குரலின் ஓசையும்,  அந்தக் குரலோசை  அந்த அறையின் சுவர்களைக் கூட அவள் பக்கமே நிற்கச் செய்கிறதோ என்னும்படி எதிரொலித்த விந்தையும், திரெளபதி தன் தந்தையிடம் கொண்டிருக்கும் எங்கும் காணமுடியாப் பாசத்தையும் கண்ட கண்ணன் வியந்தான்.  அவள் மன உறுதியைக் கண்டு மனதுக்குள் பாராட்டினான்.  கிடைத்தற்கரிய பெண் இவள் என்பதைப் புரிந்து கொண்டான்.  ஏதேனும் தெய்வ சந்நிதானத்தில் நிற்கிறோமோ என்னும்படியாக அவள் குரலின் ஓசை அவனை ஓர் உன்னதமான மனநிலைக்கு இட்டுச் சென்றது. “மாட்சிமை பொருந்திய இளவரசியாரே, தங்கள் தந்தையின் மேல் தாங்கள் வைத்திருக்கும் அன்பும், பாசமும் அளப்பரியது.  எங்கும் காண இயலா ஒன்று.” என்று மெல்லக் கூறினான்.

முதலில் திரெளபதிக்குக் கண்ணன் இதை ஏளனம் செய்யும் விதத்தில் கூறுகிறானோ என்ற சந்தேகம் ஏற்படவே அவனைக் கூர்ந்து பார்த்தாள்.  அவன் முகத்தின் மூலம் அப்படி ஒரு எண்ணம் அவனிடம் இல்லை என்பதையும், அவன் உளமாரவே இதைக் கூறுகிறான் என்பதையும் புரிந்து கொண்டாள்.  தன்னுடைய ஆழமான தந்தை அன்பைக் கண்டு அவன் வியந்து பாராட்டுகிறான் என்பதும் அவளுக்குப் புரிந்தது.  “எங்கள் தந்தையாரே எங்களுக்கு உயிர் கொடுத்தவர்.  ஆகவே அவருடைய நன்மைக்கு நாங்கள் எங்கள் உயிரைக் கொடுக்கத் தயாராக உள்ளோம். “ என்றாள் திரெளபதி. 

மெல்ல யோசனையுடன் கேட்டான் கண்ணன். “இளவரசி, நான் உங்களுக்கு உதவ முடியவில்லை எனில், நீங்கள் ஜராசந்தனின் வேண்டுகோளை ஏற்றுக்கொள்வீர்களா?”

இதற்கு திருஷ்டத்யும்னன் பதில் கூறினான்: “இந்த விஷயம் குறித்து நாங்கள் ஏற்கெனவே விவாதித்துவிட்டோம்.  நீ சம்மதிக்கவில்லை எனில் நாங்கள் ஜராசந்தனின் பேரன் ஆன மேஹசந்தியை எங்கள் மாப்பிள்ளையாக்கிக் கொள்வோம்.  பின்னர் ஜராசந்தனின் படைகளோடு எங்கள் படைகளும் சேர்ந்து குரு வம்சத்தினரை எதிர்க்க ஆயத்தமாகும்.  இரு ராஜ்யங்களின் படைகளுக்கு முன்னர் அவர்களால் நிற்க இயலாது!” என்றான்.
“பின்னர் ஆர்யவத்தமே தீப்பிடித்து எரியும்!”  கிருஷ்ணன் மெல்ல ஒரு இளநகையுடன் கூறினான்.

“ஹூம், இப்போது, இனி என்ன தீப்பிடிப்பது வாசுதேவரே!  ஆர்யவர்த்தம் எப்போதோ சாம்பலாகிவிட்டதே.  எப்போது என் தந்தையைப் போன்ற நேர்மையும், குடிமக்களுக்கு நன்மையும் செய்யும் ஓர் அரசன், அதர்மமான வழியில் சிறைப்பிடிக்கப் பட்டு ஒரு பிராமணன் காலில் விழுந்து தன் உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்புக் கேட்கும்படி வற்புறுத்தப் பட்டானோ, அன்றே ஆர்யவர்த்தம் சாம்பலாகிவிட்டது வாசுதேவரே!” திரெளபதி பல்லைக் கடித்துக் கொண்டு ஆக்ரோஷமாய்க் கூறினாள்.

Thursday, February 28, 2013

திரெளபதி மனம் திறக்கிறாள்!


கிருஷ்ணனின் மனம் நெகிழ்ந்தது.  திரெளபதியின் ஆழ்ந்த வருத்தம் அவனைக் கொஞ்சம் அசைத்தது. அவளைப் பார்த்து அவன், “நான் மாட்சிமை பொருந்திய மன்னருக்கு உதவவே விரும்புகிறேன், இளவரசி!  ஆனால் நீங்கள் அனைவரும் விரும்பும் வகையில் அல்ல.”  அவர்கள் அனைவரும் கிருஷ்ணன் மேல் வைத்திருந்த ஆழ்ந்த நம்பிக்கையைப் பொய்ப்பிக்க வேண்டுமே என நினைக்கையிலேயே கண்ணன் மனம் மிக வலித்தது.  ஆனால் அவர்கள் கூறியதை அவன் ஏற்றால் அவன் மனமே அவனை மன்னிக்காது.  எந்த தர்மத்தைக் காக்கவென அவன் பாடுபடுகிறானோ அதற்கு விரோதமாகவே இருக்கும்.  இக்கட்டான சூழ்நிலையில் தான் இருப்பதைக் கண்டு கண்ணன் மனம் வருந்தினான்.   அதே சமயம் திரெளபதி அவனைப் பார்த்து, “கண்ணா, தர்மத்தைக் காக்கவென்றே நீங்கள் அவதாரம் எடுத்திருப்பதாய் அனைவரும் கூறுகின்றனர்.  எங்களுக்கு உதவி செய்வதன் மூலம் உங்களுடைய தர்மம் காக்கப்படாதா?  தர்மத்துக்கு விரோதமான எதையும் உங்களை  நாங்கள் செய்யச் சொல்லவே இல்லையே!  துரோணரால் நாங்கள் எவ்வளவு கொடூரமான முறையில் நடத்தப் பட்டோம் என்பதை நீர் அறிவீரா?”   திரெளபதியின் முகத்திலும் குரலிலும் மீண்டும் நம்பிக்கைக்கீற்று தென்பட்டது.

“ஏதோ கொஞ்சம் அறிவேன்.  முழு விபரங்களும் தெரியாது.” என்றான் கண்ணன்.  கண்ணன் முகத்தை நேருக்கு நேர் தைரியமாகப் பார்த்த திரெளபதி, “எனில் நான் சொல்கிறேன், கேளுங்கள்!” என்றாள்.  “அப்போது அஹிசாத்ராவில் என் தந்தை ஒரு திருவிழாவை ஏற்பாடு செய்து நடத்திக் கொண்டிருந்தார். கோயிலில் இருந்து கடவுளரை வணங்கிவிட்டு அங்கிருந்த அந்தணர்களும், அர்ச்சகர்களும் புடைசூழ என் தந்தை அப்போது தான் வெளியே வந்தார்.  கோயிலைச் சுற்றிலும் கோயிலுக்குள்ளும் மக்கள் வெள்ளம்.  எவரும் ஆயுதம் தரிக்கவில்லை.  அந்தச் சமயம் பார்த்து துரோணரும் அவருடைய சீடர்களும் ஆயுதபாணியராகச் சூழ்ந்து கொண்டனர்.  இது தர்மத்துக்கு விரோதமில்லையா?  அர்ஜுனன் தூரத்திலிருந்து ஒரு மரத்தின் அருகிருந்து என் தந்தையைக் குறி வைத்தான்.  ஒரே அம்பில் என் தந்தையின் கிரீடத்தைக் கீழே தள்ளினான்.  அடுத்த அம்பில்  என் தந்தையின் வலது காதின் தங்க வளையங்கள் இரண்டு துண்டாக ஆகிவிட்டன.  மூன்றாவதில் அவரின் காலில் காயத்தை ஏற்படுத்தினான்.  என் தந்தை தன்னைச் சமாளித்துக் கொள்ளக் கூட அவகாசம் கொடுக்கவில்லை.  அவர் தன்னைச் சமாளித்துக் கொண்டு தன் வில்லையும், அம்பையும் எடுப்பதற்குள்ளாக அர்ஜுனன் தாக்குதலால் கீழே விழுந்துவிட்டார்.  அவரைச் சூழ்ந்திருந்த மக்கள் அனைவரும் நிராயுதபாணியாக இருந்தமையால் பயந்து ஓடி விட்டனர்.  பின்னர் பீமனும், அர்ஜுனனும் அவரை இழுத்துக் கொண்டு போய்க் கட்டி துரோணரிடம் இழுத்துச் சென்றனர்.  என் தந்தை,  இந்த ஆர்ய வர்த்தத்தின்  ஒரு பகுதியான  பாஞ்சாலத்தின் மாட்சிமை பொருந்திய மன்னர் ஒரு திருடனைப் போல இழுத்துச் செல்லப்பட்டார்.” பேச்சை நிறுத்திய திரெளபதிக்கு மேல் மூச்சு வாங்கியது.  அவள் கண்களில் இருந்து அக்கினி ஜ்வாலை கிளம்பியது.  அவள் குரோதத்தின் உச்சியில் இருப்பதை அவள் முகம் காட்டியது.

அவள் மேலே தொடரட்டும் எனக் கிருஷ்ணன் காத்திருந்தான். 

“அர்ஜுனனோ, பீமனோ சரியான போர் வீரர்களைப் போல நேருக்கு நேர் யுத்தம் புரிந்திருந்தால் என் தந்தை அதைப் பெரிய விஷயமாக எடுத்துக் கொண்டிருக்கவே மாட்டார்.  யுத்தம் மன்னர்களுக்குள்ளே நடைபெறுவது சகஜம் தானே!  ஆனால் துரோணரோ அவ்விதம் யுத்தம் புரிய அனுமதிக்கவில்லை.  அவர் என் தந்தையை சற்றும் எதிர்பாராவிதத்தில் ஜெயிக்கவே விரும்பினார்.  அதுவும் அவருடைய சீடர்களுக்கும், அவருடைய அஸ்தினாபுரத்து மக்களுக்கும் தெரியும்படி ஜெயிக்க விரும்பினார்.  அவருடைய மாணாக்கர்களுக்கு எதிரே என் தந்தையை அவமானப்படுத்தி, அவரைக் கேவலமாக நடத்தித் தனக்கெதிரே மண்டி போட வைக்கவும் விரும்பினார்.   அவர் விரும்பியதை நடத்திக் கொண்டார்.  ஹூம், அதே போல் நடத்தினார்.  என் தந்தை மன்னிப்புக் கேட்டுக் கொண்டதற்குப் பின்னரே விடுதலை செய்யப் பட்டார்.  என் தந்தை அளித்த வாக்குறுதிப்படி நடக்காததற்கும், அதை உடைத்ததற்கும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதோடு அல்லாமல் எங்கள் நாட்டின் ஒரு பகுதியையும் துரோணருக்குக் கொடுக்க வேண்டி வந்தது.  அப்படியும் அவருக்குத் திருப்தி இல்லை.  எங்கள் நாட்டைப் பறித்துக் கொண்டதோடு அல்லாமல், எங்கள் மக்களைக் கொள்ளை அடித்தார்; அவர்களை சொந்த நாட்டை, வீட்டை விட்டு விரட்டி அடித்தார்.  பசியுடனும், துக்கத்துடனும், ஆதரவு காட்ட மனிதர்கள் இல்லாமல் அவர்களைத் துரத்தி அடித்தார்.”

திரெளபதி கண்ணனுக்கு நடந்தவற்றைச் சொல்லுவதாக ஆரம்பித்திருந்தாலும், அவள் தனக்குத் தானே அந்த நிகழ்வுகளை மீண்டும் தன்னுள் காண ஆரம்பித்திருந்தாள் என்று தெரிய வந்தது.   அதிலும் அந்த நிமிஷம் அவள் அந்த நிகழ்ச்சியை, அவள் தந்தையின் அவமானத்தை நேருக்கு நேரே கண்டு கொண்டிருந்தாள் என்பதையும் உணர முடிந்தது.  அந்த நிகழ்வுகளின் காலத்துக்குச் சென்று மீண்டும் வாழ ஆரம்பித்த அவள் குரல் கோபத்திலும், குரோதத்திலும் நடுங்க ஆரம்பித்தது.  அவள் கண்களில் தெரிந்த ஒளி ஒரு தீப்பிழம்பைப் போல் காணப்பட்டதெனில் அவள் முகமே அக்னியால் சூழ்ந்தது போல் சிவந்து  இருந்தது.  திடீரெனத் தன்னைச் சமாளித்துக் கொண்ட திரெளபதி பேச்சை நிறுத்தினாள்.

Sunday, February 24, 2013

திரெளபதியுடன் கண்ணன்!


மறுநாள் காலையிலே திருஷ்டத்யும்னன் வந்து திரெளபதியைப் பார்த்துப் பேசக் கண்ணனை அழைக்க வந்தான்.  இரவு முழுவதும் தூங்காத அசதியும், சோர்வும் அவன் முகத்தில் வெளிப்படையாகத் தெரிந்தது.  ஆனாலும் கண்ணன் எதையும் கேட்டுக்கொள்ளவில்லை.   தன்னுடைய கிரீடத்தை எடுத்து வைத்துக் கொண்டு கண்ணன் திரெளபதியைச் சந்திக்கக் கிளம்பினான்.  திரெளபதி தனியாக அவனைச் சந்திக்கவில்லை என்றும் தன் சகோதரர்கள் ஆன திருஷ்டத்யும்னனும், சத்யஜித்தும் அருகில் இருக்கையிலேயே சந்திக்க ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது என்பதையும் கிருஷ்ணன் உணர்ந்தான்.  ஆனால் இப்போதும் இன்னொரு சகோதரன் ஆன ஷிகன்டின் அங்கே காணப்படவில்லை என்பதையும் கவனித்துக் கொண்டான்.  அந்த இளைஞனைக் குறித்த மர்மம் ஏதோ உள்ளது!  அதற்குள்ளாகக் கண்ணனின் சிந்தனைகளைக் கலைத்துக் கொண்டு அவன் எதிரே அமர்ந்த திரெளபதி தலையைக் குனிந்து அவனை வணங்கினாள்.  அவள் தலையில் சூடியிருந்த மலர்களின் சுகந்தம் அந்த அறை முழுதும் நிரம்பி இருந்தது. 

அவளைப் பார்த்துக் கிருஷ்ணன், “ஒருவேளை இது சம்பிரதாயத்துக்கு விரோதமாக இருக்கலாம், மாட்சிமை பொருந்திய இளவரசியே.  ஆனால் மன்னர் நான் உங்களைச் சந்தித்துப் பேச வேண்டும் என விரும்பினார்.  ஆகவே அவர் விருப்பத்தின் பேரிலேயே உங்களைச் சந்திக்கச் சம்மதித்தேன்.” என்றான்.  தன்னுடைய விசாலமான கண்களால் கண்ணனை நேருக்கு நேராகப் பார்த்தாள் திரெளபதி.  அவன் மனத்தின் ஆழத்தை அந்தக் கண்களால் அளக்க முற்படுகிறாளோ?  பின்னர் சற்றே தயங்கிய மெல்லிய குரலில், “நான் என் தந்தையிடன் உங்களைக் கண்டு பேச வேண்டும் என வற்புறுத்தினேன்.  ஒருவேளை ஒரு பெரிய நாட்டின் அரசகுமாரிக்கு இதெல்லாம் உகந்தவையாக இல்லாமல் இருக்கலாம்.  சம்பிரதாய விரோதமாகவும் இருக்கலாம்.  பாரம்பரிய மிக்க அரசகுடும்பத்தில் பிறந்த எனக்கு இது பாரம்பரியத்தைப் பின்பற்றாத ஒரு விஷயமாகவும் இருக்கலாம்.”

பின்னர் தன் உறுதியான குரலில் தீர்மானமாகப் பேச ஆரம்பித்தாள்.  அவள் குரலின் தன்மையைக் கண்ட கிருஷ்ணன் தன் தகப்பனிடமிருந்து இந்த குணத்தை அவள் பெற்றிருக்கிறாள் என்பதை உணர்ந்தான்.  அவள் கண்ணனுக்குக் காட்டிய பணிவான தன்மைக்கு நேர் விரோதமான குரலில் பேசினாள்.  “நான் எங்களுக்கு உதவ உங்களால் முடியுமா முடியாதா என உங்களைக் கேட்க எண்ணினேன்.  அதுவும் நானே நேரிடையாகக் கேட்க வேண்டும் என விரும்பினேன்.”  என்றாள்.  கிருஷ்ணன் முகத்தில் தவிர்க்க முடியாத அந்தப் புன்னகை தோன்றியது.  இந்தப் பெண்ணின் மனோதைரியத்தையும், வெளிப்படையான பேச்சையும் கண்டு வியந்தான்.  உள்ளூர அவளைப் பாராட்டவும் செய்தான்.  “இளவரசி,   தாங்களும், தங்கள் தந்தையும் என்னிடம் காட்டும் கருணையால் நான் நெகிழ்ந்து விட்டேன்.  தங்களிடம் எதையும் மறுக்க இயலாதபடி செய்து விட்டீர்கள்.”  என்றான்.  “ஆனால் ஏன் என்னைத் தேர்ந்தெடுத்தீர்கள் உங்களுக்கு உதவ?  அதை நான் தெரிந்து கொள்ளலாமா?”

இப்போது திருஷ்டத்யும்னன் குறுக்கிட்டான். “கண்ணா, உன்னைக் குறித்தும் உன் சாகசங்கள் குறித்தும் நாங்கள் இரண்டு வருடங்களாக  யோசித்து வருகிறோம்.  உன்னைக் குறித்து இரண்டு வருடங்களாகச் சிந்தித்து வருகிறோம்.  நீ எப்போது யாதவர்களை மதுராவிலிருந்து தப்ப வைத்து செளராஷ்டிரம் அழைத்துச் சென்றாயோ அப்போதிலிருந்து வியந்து வருகிறோம்.”  என்றான். 

“எவ்வகையில் நான் உதவ முடியும்?? யாதவர்கள் எங்கோ மேற்குக் கடற்கரைக்குப் பக்கம் தூரத்தில் இருக்கின்றனர்.  அவ்வளவு வலுவாக இருப்பதாகவும் சொல்ல முடியாது.  மேலும் நானும் ஒரு அரசன் இல்லை.”

“நீங்கள் ஒரு அரசனை விடவும் மேம்பட்டவர்.  நீங்கள் ஒரு கடவுள்.  ரக்ஷகர்.  அப்படித்தான் ஆர்யவர்த்தம் முழுதும் பேசுகிறது.  இந்த ஆரியர்களுக்குள்ளேயே உங்கள் ஒருவரைத்தான் மொத்த ஆர்ய வர்த்தமும் மதிக்கிறது.  மதித்து வணங்குகிறது.”  வருத்தம் தோய்ந்த விழிகளுடன்  பேசினாள் திரெளபதி.  அவள் வருத்தத்திற்குக் காரணம் புரியவில்லை கிருஷ்ணனுக்கு.  தன் தந்தையின் நிலை குறித்தா?  ஆம், அப்படித்தான் இருக்க வேண்டும்.  கிருஷ்ணனுக்கு இந்தப் பெண்ணின் பேச்சு மட்டுமில்லாமல் அவள் உறுதியும் பிடித்தது.  தன் தந்தைக்காக இவள் எப்படிப் பட்ட பிரச்னையையும் சந்திக்கத் தயாராக இருக்கிறாள்.  அவள் மேல் மதிப்பு உயர்ந்தது கண்ணனுக்கு.

“குரு சாந்தீபனி உன்னைக் குறித்த அனைத்துத் தகவல்களையும் கூறினார் வாசுதேவா!  ஜராசந்தன் கூட உன்னைக் கண்டு பயப்படுகிறான் என்றும் அறிந்தோம்.”  திருஷ்டத்யும்னன் கூறினான்.

“குருஜி என்னிடம் எப்போதும் அன்பு அதிகம் காட்டி வருகிறார்.  ஆனால் மன்னர் துருபதன் என்னிடம் வைத்த வேண்டுகோள் என் சக்திக்கு அப்பாற்பட்டது.  என்னால் துரோணரோடு யுத்தம் செய்ய முடியாது;  ஏனெனில் குரு வம்சத்தினரோடு எனக்கு யுத்தம் செய்யும் அளவுக்கு எதிரிகள் இல்லை.”  திரெளபதியின் முகத்தை ஏமாற்றம் என்னும் மேகம் சூழ்ந்து கொண்டது.  ஏனெனில் இவ்வளவு நேரம் பிரகாசமாக இருந்த அவள் முகம் இப்போது கறுத்தது.  முகம் கவலையில் ஆழ்ந்து போகக் கண்கள் கீழ் நோக்கிப் பார்த்தன.  தனக்கே கேட்குமோ கேட்காதோ என்னும்படியான மெல்லிய குரலில் அவள் கண்ணனிடம், " வாசுதேவா, அப்போது, அப்போது,  நீங்கள் எங்கள் உதவிக்கு வரப் போவதில்லை என்று முடிவே செய்து வீட்டீர்களா?" என்று கேட்டாள். அவளது அழகிய விசாலமான கண்களில் நிரம்பிய நீரைப் பார்த்த கண்ணன் ஒரு மாபெரும் சமுத்திரத்தின் அலைகள் கரையில் வந்து மோதிக்  குமுறிக் கொண்டிருப்பதைப் போல் உணர்ந்தான். 

Monday, February 18, 2013

கண்ணனும், நண்பர்களும்!


“ஏன் கண்ணா?” என்று சாத்யகி கேட்க, கண்ணன்,  “ நாம் இப்போதைக்கு இந்தப் பிரச்னைகளில் மாட்டிக்கொள்ளாமல் தப்புவதற்குத் தான் அது உதவும். ஆனால் நீண்ட காலத்துக்கு உதவாது.  மேலும் ஆர்யவர்த்தத்தின் அழிவுக்கும்  காரணம் ஆகிவிடுவோம்.  இந்த  வெறுப்புமயமான மனிதர்களின் அந்தரங்கப் பழிவாங்கலில்  இருந்து தப்பலாம். ஆனால்  அவர்கள்  ஒருவரை ஒருவர் கொன்று கொண்டு மொத்த  ஆர்யவர்த்தத்தின் அழிவுக்கே காரணமாகிவிடுவார்கள்.  உலக க்ஷேமத்துக்காக நம் முன்னோர்கள் மிகவும் பாடுபட்டுக் கட்டிய இந்த கம்பீரமும், நேர்மையும், அழகும் பொருந்திய தர்மம் என்னும் கட்டிடம் தூள் தூளாகிவிடும்.  எங்கும் வன்முறையும், வெறுப்பும், பழிவாங்கலுமே முன் நிற்கும்.  மனிதர்கள் ஒருவரை ஒருவர் எவ்வகையிலேனும் பழி தீர்த்துக் கொள்ளவே முனைவர்.  எங்கெங்கு காணினும் ஒழுக்கமின்மையே முன் நிற்கும்.  ஒழுக்கத்தைக் குறித்து எவரும் சிந்திக்கக்கூட மாட்டார்கள்.”  என்றான் கண்ணன்.

“கண்ணா, என்னால் இன்னமும் புரிந்து கொள்ள முடியவில்லை.  பாரத வர்ஷத்தின் இந்த வட பாகத்திலிருந்து பிரிந்து நாம் மேற்குக் கடல் பக்கம் நிம்மதியாக வாழ்வதால் மொத்த உலகும், மனிதர்களும் பாதிக்கப்படுவது எவ்வாறு?”

“இல்லை சாத்யகி, இல்லை.  இந்த வெறுப்பின் ஆழத்திலிருந்து நம்மை நாம் பிரித்துக் கொள்ள இயலாது.  அது சரியும் இல்லை.  வெறுப்பை எல்லாம் மாற்றி அன்புமயமாக்குதலே நம் கடமை.  அதை வெல்வதிலே தான் நம் திறமையும் உள்ளது.  ஒருவேளை இந்தக் கடமையை நாம் ஆற்றும் சமயம் நாமே முழுவதும் அழிந்து போகவும் நேரிடலாம்.  ஆனால் நாம் அதற்கெல்லாம் பயப்படக் கூடாது.  இறைவன் நமக்கு இட்ட கட்டளை இங்கு தர்மத்தை நிலை நாட்டுவது தான்.    இந்த மாபெரும் பணியைச் செய்கையில் நமக்கு இறப்பு நேரிடுமெனில் நாம் அதை முன்னின்று வரவேற்கத் தயாராக இருக்க வேண்டும்.   இதை விட்டு பயந்து ஓடுவது சரியில்லை.  அப்படி நாம் இறந்தாலும், நாம் எவ்வகையிலேனும் தர்மத்தை நிலை நாட்டி விட்டே இறப்போம்.  நமக்குப் பின்னர் தர்மத்தைக் கடைப்பிடிக்கும் ஒரு வலிமை மிக்க பாரம்பரியத்தை விட்டுச் செல்வோம்.  பின்னால் புதியதொரு  ரக்ஷகன் தோன்றலாம்.  நாம் விட்டுச் சென்ற பணியை அவன் முடிப்பான். “

“இப்போது நாம் என்ன செய்ய வேண்டும் எனக் கூறுகிறாய் கிருஷ்ணா?” ஷ்வேதகேது கேட்டான்.

“இப்போது எனக்கு நம்பிக்கையின் ஒரு கீற்றுக் கூடத் தென்படவில்லை.  நான் இளவரசியைச் சந்தித்த பின்னர் ஒருவேளை நம்பிக்கை ஒளியே தென்படலாம்.”

சிறுபிள்ளைத்தனமாக நகைத்தான் சாத்யகி.  தொடர்ந்து, “நாம் நம்பிக்கையின் ஒளியை முனிவர்களில் சிறந்தவரான முனிசிரேஷ்டர் வியாசரிடம் காண முடியவில்லை.  மன்னன் துருபதனிடமும் காண முடியவில்லை. இப்போது நாம் அந்த நம்பிக்கையின் கீற்றாவது ஒரு அழகிய இளம்பெண்ணான இளவரசியிடம் கிடைக்கும் என நம்புகிறோம்.  பிரபுவே, கண்ணா,  நீங்கள் விருந்தாவனத்தில் எப்படி இருந்தீர்களோ அதிலிருந்து சற்றும் மாறியதாகத் தெரியவில்லை. “

கிருஷ்ணனுக்குக் கோபம் வரவில்லை.  மாறாக உற்சாகத்துடன் சிரித்தான்.  “சாத்யகி,   மாணவர்களின் ஊக்கத்தைப் பொறுத்தே ஆசிரியர்கள் பாடம் சொல்லிக் கொடுக்கும் முறையில் விநயம்  ஏற்படும்.   இது ஒரு கெட்டிக்கார மனிதனிடம் இருந்து வருவதை விட ஒரு பெண்ணிடம் இருந்தும் வரலாம்.  வரும்.  அடிக்கடி இப்படி ஏற்படுகிறது.  திரெளபதியின் மூலம் ஏதேனும் நம்பிக்கை ஒளி கிடைக்கிறதா எனப் பார்க்கப் போகிறேன்.”

“தயவு செய்து அவளை உன் வாழ்க்கைத் துணையாக ஏற்க வேண்டாம் கண்ணா.  அவள் பிறப்பிலிருந்து இன்று வரை வெறுப்புக்கடலில் மூழ்கிப் பழிவாங்கும் எண்ணத்தோடு வாழ்ந்து கொண்டிருக்கிறாள்.”  சாத்யகி கெஞ்சினான்.

“நம்பிக்கை இழக்காதே சாத்யகி.   நான் பார்த்துப் பேசியதன் பின்னரும் திரெளபதி வெறுப்புக்கடலில் மூழ்கிப் பழி வாங்கும் நோக்கில் இருந்தாளெனில் நான் தோல்வி அடைந்தவன் ஆவேன். அனைவரிடமும் நீங்கள் கூறுவதை நான் நம்புகிறேன்.  அது வெறும் வாய்ப் புகழ்ச்சியாக இருந்தாலும்; “ கண்ணன் சிரித்தபடி, “கண்ணன் இருக்குமிடத்தில் தர்மம் இருக்கும். என நீங்கள் அனைவரும் கூறுவீர்கள் அல்லவா?  யதோ கிருஷ்ணா,  ததோ தர்மா!”

அனைவரையும் விட ஆர்வத்தில் தூண்டப் பட்ட திருஷ்டத்யும்னன் அன்று மாலை கண்ணனைச் சந்திக்க வந்தான்.  முதலில் அவன் அனைவரிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டான்.  அன்று மாலை மன்னனால் விருந்தாளிகளோடு கலந்து கொள்ள இயலாது.  திடீரென நோய்வாய்ப் பட்டுவிட்டார்.  அன்று மாலை திருஷ்டத்யும்னனால் கூட விருந்தாளிகளைக் கவனிக்கவோ உபசரிக்கவோ இயலாது.  ஷிகண்டினின் மாமனார் ஆன ஹிரண்யவர்மர் முக்கியமான ஆலோசனைகளுக்காக தூதர்களை அனுப்பியுள்ளார்.  விஷயம் மிகவும் அவசரமும், முக்கியத்துவமும் நிறைந்தது.  மாட்சிமை பொருந்திய துவாரகையின் விருந்தாளிகளுக்கு ஆக்ஷேபணை இல்லை எனில் இன்று மாலை எங்களால் உங்களை உபசரிக்க இயலாமையைப் பொறுத்துக்கொள்ள வேண்டுகிறோம்.  இதுவே திருஷ்டத்யும்னன் கொண்டு வந்த செய்தி.  கிருஷ்ணனுக்கு எந்தவிதமான ஆரவாரமும் இல்லாமல்  ஒரு மன்னின் தூதர்கள் வந்திருப்பது மிகுந்த ஆச்சரியத்தைக் கொடுத்தது.  எனினும் அவனும் அன்று ஓய்வையே நாடியதால் திருஷ்டத்யும்னனுக்கு சம்மதம் கூறினான்.  ஆனால்…….ஆனால்…. கண்ணன் மனதை ஏதோ உறுத்தியது.  இந்த ஷிகண்டினின் விஷயத்தில் ஏதோ மர்மம் உள்ளது.  எல்லாமே ஒரு மர்மமான சூழ்நிலையில் பரம ரகசியமாக நடப்பதாகத் தோன்றியது.  என்னவாக இருக்கும்??  எதுவாக இருந்தாலும் இது கண்ணனுக்கு அவசியம் இல்லை.  ஆம், அவசியமே இல்லைதான்.

Sunday, February 10, 2013

கண்ணனின் கவலை!


“கண்ணா, நீ திரெளபதியைச் சந்திக்க த்ருஷ்டத்யும்னன் உதவி செய்வான்.  அவன் உன்னை அவளிடம் அழைத்துச் செல்வான்.”  துருபதன் கண்ணனை த்ருஷ்டத்யும்னனோடு திரெளபதியைச் சந்திக்க அனுப்பவேண்டி எழுந்தான்.  அப்போது ஒரு மெல்லிய காலடி ஓசை அந்த அறையிலிருந்து திரும்பும் வழியில் செல்வது கேட்டது.  உற்றுக் கேட்ட துருபதனுக்குக் கோபமும், எரிச்சலும் மேலோங்கியது.  தன் உதட்டைக் கடித்துக் கொண்டான்.  யாரோ, எவரோ ஒட்டுக் கேட்டிருக்கிறார்கள்.  சமாளித்துக் கொண்ட மன்னன் துருபதன் கண்ணனை த்ருஷ்டத்யும்னனும், அமைச்சரும் காத்துக் கொண்டிருந்த அறையில் கொண்டு விட்டான் .  கண்ணன் தன்னையும் அறியாமல் திரும்பிப் பார்க்க, இளம் அரசகுமாரன் ஆன ஷிகண்டின் அவர்கள் வந்த வழியில் இருந்து வெளிவந்து தோட்டத்தில்  மாந்தோப்புக்குள் நுழைந்து கொண்டிருப்பதைக் கண்டான்.  இவன் தான் துருபதனும் தானும் பேசிக் கொண்டிருக்கையில் ஒட்டுக்கேட்டவனா?  ம்ம்ம்ம்ம்???  இந்த இளைஞனைக் குறித்த மர்மம் ஏதோ இருக்கிறது.  இங்கே ஒருவருக்கும் வேண்டாதவனாகவும் உள்ளானே?  ஏன் இப்படி?  கண்ணன் மனம் தீவிர யோசனையில் ஆழ்ந்தது.

கண்ணன் துருபதனின்  பெருந்தன்மையையும், அவன் நீதி நிர்வாகத்தையும் கண்டு அதன் பால் தன் மனதைப் பறி கொடுத்திருந்தான்.  துவாரகையிலிருந்து கிளம்புகையில் வடக்கே நமக்கு எதிரிகள் இருக்கக் கூடாது என்ற ஒரே  எண்ணமே கண்ணனிடம் இருந்தது.  ஆர்ய வர்த்தத்தில் தர்மத்தை நிலை நாட்டுவதற்கு அதன் அரசர்கள் உதவி தேவை என்ற ஒரே கருத்திலும் இருந்தான்.  ஆனால் இப்போதோ கண்ணன் ஒரு மாபெரும் உணர்ச்சிக் குவியல்களால் ஆனதொரு குடும்பத்தின் அந்தரங்க விவகாரங்களில் தன்னையும் அறியாமல் பங்கெடுத்துக் கொண்டிருந்தான்.  அதன் வேகமும், அவர்களின் விவரிக்கவொண்ணா வெறுப்பும், அந்த வெறுப்புக்குக் காரணமான ஆணிவேரைக் களைய எடுத்த முயற்சிகளும், அதன் காரணமாக அந்தக் குடும்பத்து உறுப்பினர்கள் ஒருவர் மேல் ஒருவர் கொண்டிருக்கும் ஆழ்ந்த பற்றும் ஒரு பிரளய அலை போலக் கண்ணனைத் தாக்கியது.  அதில் மூழ்காமல் இருக்கப் பெரும் பிரயத்தனம் செய்தான் கண்ணன்.  சாத்யகியையும், ஷ்வேதகேதுவையும் தனிமையில் பார்த்த கண்ணன் ஒரு மாபெரும் சூறாவளிக்கு முன்னர், அதுவும் அதர்மம் என்னும் சூறாவளிக்கு முன்னர் நாம் மாட்டிக் கொண்டிருக்கிறோம்.  இதிலிருந்து தப்ப வேண்டும் என்று வலியுறுத்திச் சொன்னான்.

“இது எப்படி அதர்மச் சூறாவளியாகும் கண்ணா?”  சாத்யகி இதன் வெளிப்படையான நல்ல விஷயங்களையும் அதன் மூலம் கிடைக்கப் போகும் பலன்களை மட்டுமே சிந்தித்தான்.  “ ஓ, ஓ, சாத்யகி, இந்த விஷயம் நம்மை வெறுப்பு என்னும் சுழலில் ஆழ மூழ்கடிக்கப் பார்க்கிறது.  இந்தச் சுழலில் அகப்பட்டுக் கொண்டு நாம் சுற்றிச் சுற்றி வரப் போகிறோம்.  மூழ்காமல் வெளியே வருவது நம் திறமையைப் பொறுத்தது.”  என்றான் கண்ணன்.  சற்றே யோசனையுடன் அனைத்தையும் விவரித்தான் கண்ணன்.  “  இதோ பார், எவ்வளவு முட்டாள்தனமான விஷயங்கள் நடந்துள்ளது என்பதைக் கவனி.  ஒரே ஒரு சிறு வெறுப்பு என்னும் தீ இன்று ஊழிப் பெரும் தீயாக மாறி விட்டிருக்கிறது.  இரண்டு முட்டாள்கள், ஒருவன் க்ஷத்திரிய இளவரசன், இன்னொருவன் அந்தணன், இருவரும் ஒருவருக்கொருவர் முட்டாள் தனமான வாக்குறுதிகளை இளம் வயதில் செய்து கொள்கின்றனர்.   அந்த வாக்குறுதியே முட்டாள்தனமானது எனில் அந்த இளவரசனும் முட்டாள் தான்.  சற்றும் யோசனையில்லாமல் அந்த அந்தணனை அவமதிக்கிறான்.  இந்த அவமதிப்பே அந்த அந்தணன் மனதில் வெறுப்பு என்னும் ஊற்றாக மாறுகிறது.  அது இன்று மாபெரும் பிரளய வெள்ளமாக மாறி இந்தப் பாஞ்சாலத்தையும், அதன் மக்களையும், அதன் அரசர், இளவரசர்கள், இளவரசி என அனைவரையும் மூழ்கடிக்கப் பார்க்கிறது.  “

“அந்த அந்தணனோ மோசமானவன்.  முட்டாள் தனத்தில் சற்றும் குறைந்தவன் அல்ல.  தன் வாழ்நாள் முழுவதையும், தன் வித்தையின் சிறப்பு முழுவதையும் இந்த அரசனைப் பழிவாங்கவென்றே செலவு செய்கிறான்.  அதற்காகவே தன்னிடம் வரும் தன் மாணாக்கர்களை இந்த அரசனைத் தோற்கடித்துப் பழிவாங்கவே தயார் செய்கிறான்.  இதை அடைவதற்காகத் தன் பிராமணத்துவத்தின் மகத்துவத்தையே,  அவ்வளவு ஏன்?  அவர்களின் நியமங்களை, கட்டுப்பாடுகளை, தவத்தை, ஒரு உண்மையான பிராமணன் வாழ்க்கை நடத்த வேண்டிய முறையை என அனைத்தையும் மீறுகிறான்.  அதோடு மட்டுமல்ல.  அவன் சார்ந்திருக்கும் அரசாங்கத்தில் அவன் வலிமையானதொரு ஆசானாகவும் திகழ்கிறான்.  இதை முன் வைத்து இந்த மரியாதைக்குரிய அரசனை இகழ்ந்து பேசி அவனைத் தோற்கடித்து அவனை இழிவுக்கு ஆளாக்கித் தேர்க்காலில் கட்டி இழுத்து எனப் பல விதங்களிலும் அவமரியாதை செய்கிறான்.  பின்னர் அவன் நாட்டையே, அதன் ஒரு பகுதியையே அவனுக்குத் தானமாகவும் தருகிறான்.  அரசனால் இந்த அவமானத்தைத் தாங்க முடியவில்லை.  என்னதான் நாட்டின் ஒரு பகுதி திரும்பக் கிடைத்தாலும், தன் முழுநாட்டையும் மீட்கும்வரை அவனுக்கு நிம்மதியில்லை.  அதற்காகவென்றே பிள்ளைகளைப் பெற்றுத் தன் பழைய நண்பனும், இப்போதைய எதிரியும் ஆன அந்த பிராமணனைப் பழிவாங்க வென்றே அவர்களைத் தயார் செய்கிறான்.  ஒவ்வொரு முறை உணவூட்டுகையிலும் இந்த வெறுப்பையும் சேர்த்தே தன் குழந்தைகளுக்கு ஊட்டுகிறான்.  அந்தக் குழந்தைகள் இன்று வாழ்வதே தங்கள் தகப்பனுக்கு நேர்ந்த அவமானத்தைத் துடைத்துப் பழிவாங்கவேண்டும் என்றே.  வெறுப்பை மேலும் மேலும் வளர்த்துக் கொண்டே போகும் அந்த அந்தணனோ இன்று ஹஸ்தினாபுரத்தில் ஒரு அசைக்க முடியா சக்தியாகிவிட்டான்.  அங்குள்ள அரசகுமாரர்களுக்கு ஆயுதப் பயிற்சி அளிப்பதோடு அல்லாமல் தானும் ஒரு சிறந்த போர்வீரனாக இருக்கிறான்.  அவன் சக்தி இன்று அளப்பரியதாக உள்ளது.  இங்குள்ள அரசனோ அவனை அடியோடு ஒழிக்க விரும்புகிறான்.  தன் பலத்தைப் பெருக்கிக் கொள்ள நினைக்கிறான்.   ஷ்வேதகேது! சாத்யகி!  இருவரும் கேளுங்கள்.  பாஞ்சாலமும், குருவம்சத்தினரின் அஸ்தினாபுரமும் இன்று பிரிந்து ஒருவருக்கொருவர் எதிரிகளாகத் திகழ்கின்றனர்.  எந்த நேரமும் அவர்களுக்குள் யுத்தம் மூளலாம்.  நாம் இவற்றுக்கு நடுவில் மாட்டிக் கொண்டுள்ளோம்.”  என்றான் கண்ணன்.

“ஓஹோ, கண்ணா, அப்படியெல்லாம் விரைந்து முடிவெடுக்காதே.  யாதவர்கள் நினைத்தால் மட்டுமே இதில் கலந்து கொள்ள இயலும்.  ஒதுங்கி இருக்க நினைத்தால் தடுப்பவர் யார்?” ஷ்வேதகேது சொன்னான்.

“இல்லை, ஷ்வேதகேது,  துருபதனின் வேண்டுகோளை நான் ஏற்றால் இந்தச் சுழலில், மாபெரும் சுழலில் யாதவர்களை நானே இழுத்துவிடுவேன்.  ஆனால் இதை நான் ஏற்கவில்லை என்றாலோ, துருபதன் தன்னுடைய பேரத்தை ஜராசந்தனிடம் பேசுவான்.  அவனுடன் ஒப்பந்தம் செய்து கொள்வான்.  அவனுடன் நட்புப் பாராட்டுவான்.  இதன் மூலம் நமக்கு நன்மை கிட்டாது அப்பனே.  இந்தச் சுழலின் ஆழமும், அகலமும் அதிகம் ஆகும்.  நாம் விரும்பினாலும் சரி, விரும்பாவிட்டாலும் சரி சுழலில் மாட்டிக் கொண்டே தீருவோம்.  வேறு வழியே இல்லை.”

“என்றால் நாம் இந்த மாயச் சுழலை விட்டு நீங்கித் திரும்பச் சென்றுவிடுவோம்.  நாம் துவாரகையில் இருந்தவரைக்கும் மிகவும் சந்தோஷமாகவே இருந்தோம்.  வா, கிருஷ்ணா, நாம் துவாரகைக்கே சென்றுவிடுவோம்.” சாத்யகி அழைத்தான்.

“அது அவ்வளவு சுலபமல்ல, சாத்யகி” , என்றான் கண்ணன்.