Saturday, June 11, 2016

த்வைபாயனரின் வெற்றி!

பராசர முனியின் பெயர் உச்சரிக்கப்பட்ட உடனேயே சத்யவதி முகம் சிவந்தாள். நாணம் அவளைச் சூழ்ந்து கொண்டது. தன் கணவன் சக்கரவர்த்தியின் தோளைத் தடவிக் கொண்டே அவள் மெல்லிய குரலில் த்வைபாயனரிடம் கேட்டாள்: பராசர முனிவர் எடுத்துக் கொண்டு உறுதிமொழியைக் கொஞ்சம் சரிவரச் சொல்ல முடியுமா? அவர் சொன்ன அதே வார்த்தைகளில் சொல்ல இயலுமா?” என்றவள் உடனே மன்னன் பக்கம் திரும்பிக் கொண்டு, “பிரபுவே, உங்களுக்கு ஏற்கெனவே பராசர முனிவரையும் அவர் எனக்களித்த ஆசிகளையும் அறிவீர்கள். அவருடைய துணையாக நான் சிறிது காலம் வாழ்ந்ததையும் அறிவீர்கள்!” என்றாள்.

த்வைபாயனர் சற்றும் தயக்கமின்றி மேலும் பேசினார். “என் தந்தை சொன்னது என்னவெனில் அவர் எப்பாடு பட்டேனும் தர்மக்ஷேத்திரத்தை மீட்டெடுத்து மீண்டும் ரிஷி, முனிவர்கள் வசிக்கும் இடமாக மாற்றி அங்கே இருந்த வண்ணம் ஆர்யவர்த்தத்தில் தர்ம சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க மன்னர்களுடன் ஒத்துழைக்க வேண்டும் என்பதே! அங்கே வசிக்கப் போகும் ரிஷி, முனிவர்கள் தர்மத்திற்குக் கட்டுப்பட்டு வாழ வேண்டும். அதற்காகவே உயிர் பிழைக்கவேண்டும் என்பதே அவர் குறிக்கோள். அது நிறைவேற வேண்டும் என்பதே என் வேண்டுகோள்.”


“ஹூம், த்வைபாயனரே, அது இப்போது ஓநாய்களின் குடியிருப்பாக மாறியதோடல்லாமல் காட்டு மிருகங்கள் வசிக்கும் இடமாகவும் ஆகி விட்டது!” என்றார் காங்கேயர்.  த்வைபாயனர் சிரித்தார். பின்னர் மேலும் தொடர்ந்து, “நல்லது யுவராஜா அவர்களே! என் நண்பன் பைலரின் துணையுடன் நான் அங்கே ஓரிரவு தங்கினேன். ஹஸ்தினாபுரம் வரும் முன்னர் அங்கே தான் தங்கினோம் இருவரும். ஓநாய்கள், கரடிகள் மற்றக் காட்டு மிருகங்கள் எல்லாமும் அங்கே இருக்கின்றன. கூடவே ராக்ஷதர்களும் இருக்கிறார்கள். ராக்ஷசர்கள் எங்களைக் கொன்றே போட்டிருப்பார்கள். நாங்கள் மட்டும் ஒளிக்கடவுளான சூரியபகவானின் கருணையால் மஹா அதர்வ ரிஷி ஜாபாலி அவர்களால் காப்பாற்றப்படாவிட்டால்! நாங்கள் இருந்த இடமே தெரிந்திருக்காது! அவர் தான் வந்து எங்களைக் காப்பாற்றினார்.”


“அதெல்லாம் சரி, முனிவரே! அந்த இடத்தைச் சுத்தம் செய்து காட்டை அழித்து மிருகங்களை இன்னும் உள்ளே அடர்ந்த காட்டுக்குள் விரட்டிவிட்டு எல்லாம் செய்யலாம் தான்; ஆனால் அது சாபங்கள் நிறைந்த இடம். அங்கே யுத்தம் நடந்தபோது பல போர் வீரர்கள், ரிஷிகள், முனிகள், பெண்கள் இறந்திருக்கின்றனர். அவர்களின் ஆவிகளெல்லாம் அங்கே அலைவதாகச் சொல்கின்றனர். இரவும் பகலும் அவை புலம்பிக் கொண்டே இருக்கின்றன என்கின்றனர். மனிதர்கள் வசிக்க லாயக்கில்லை என்றும் சொல்கின்றனர்.” என்றார் காங்கேயர்.


“நான் அங்கே தான் போய் வசிக்கப் போகிறேன்.” என்றார் புன்னகையுடன் த்வைபாயனர். “ ஒரு ஆசிரமமும் உண்டாகும். அது நன்கு வளர்ந்து நூற்றுக்கணக்கான ஸ்ரோத்ரியர்களை நியம, நிஷ்டைகளுடனும், சகலவிதமான நல்லொழுக்கங்களுடனும் உண்டாக்கும். அவர்கள் எடுத்துக் கொள்ளும் சபதங்களை உறுதியுடன் நின்று அவர்களை நிறைவேற்றுமாறு அந்த ஆசிரமச் சூழலை உருவாக்க வேண்டும். மதிப்புக்குரிய காங்கேயரே! இன்று பிரம்ம தேஜஸும்,க்ஷத்திரிய தேஜஸும் பிரிந்து கிடக்கிறது. பிராம்மணர்கள் தவிக்கின்றனர். பிரம்ம தேஜஸோடு, க்ஷத்திரிய தேஜஸும் ஒன்று கலக்க வேண்டும். இல்லை எனில் தர்மத்தையும், நேர்மையையும் எந்த அரசனாலும் சரிவரக் கடைப்பிடிக்க இயலாது. அவனுக்கு வழிகாட்ட எவரும் கிடைக்க மாட்டார்கள். ரிஷிகளும் முனிவர்களும் காடுகளின் அடர்ந்த குகைக்குள் சென்று விடுவார்கள்.  மற்றவர் மிருகங்களைப் போன்ற வாழ்க்கை நடத்துவார்கள்.” என்றார் த்வைபாயனர்.


“ஆஹா, முனிசிரேஷ்டரே, என் தந்தை அப்படி எல்லாம் இல்லை. தன்னால் இயன்ற அளவுக்கு க்ஷத்திரிய தர்மத்தை விடாது கைப்பிடித்து வந்துள்ளார். தன் சக்தியையும் அதிகப்படுத்தி வந்திருக்கிறார். ஆனால் மற்றவர்களிடம் இதற்கான ஆதரவையோ, ஒத்துழைப்பையோ அவர் பார்க்கவில்லை!” என்றார் காங்கேயர்.


“அது நம் தப்பு, காங்கேயரே! ஆம், நம் தவறு! நாம் கலங்காமல் எவ்விதமான மத, மாற்சரியங்களுக்கும் உட்படாமல் தர்மத்தைக் காக்கவேண்டியது ஒன்றே நம் லட்சியம், நம் கடமை என்று அதற்காகவே உயிர் வாழ வேண்டும். இன்றைய நாட்களில் எந்த மனிதனால் அப்படி வாழ முடிகிறது?”


காங்கேயருக்கு த்வைபாயனர் மறைமுகமாகத் தன்னைச் சாடுகிறாரோ என்னும் சந்தேகம் எழுந்தது. தெரிந்தோ தெரியாமலோ அவர் தன்னைக் குற்றம் சாட்டுகிறார் என்று நினைத்த காங்கேயர் கொஞ்ச நேரம் எதுவும் பேசாமல் மௌனமாக நின்று கொண்டிருந்தார். அவர் உள்ளே பலவிதமான யோசனைகள் ஓடின. அவர் எண்ணத்தைப் புரிந்து கொண்டவர் போல த்வைபாயனர் சொன்னார்; “மதிப்புக்குரிய காங்கேயரே, உம்மிடம் பிரம்ம தேஜஸும் காண்கிறேன், க்ஷத்திரிய தேஜஸையும் காண்கிறேன். மதிப்புக்குரிய மஹாராணி என்னிடம் உங்களைக் குறித்து மிகவும் உயர்வாகச் சொன்னார்கள். அதிலும் நீங்கள் எடுத்துக் கொண்ட சபதத்தை நிறைவேற்றுவதற்குக் கடினமான வழிகளைக் கூடக் கடைப்பிடிப்பதாய்ச் சொன்னார்கள்.” என்றார்.


மஹாராஜா ஷாந்தனுவுக்குப் பெருமை தாங்கவில்லை. தன் அருமை மகனைப் பெருமையுடன் பார்த்தார். பின்னர் மெல்லிய குரலில், “காங்கேயனால் உண்மைக்கும் சத்தியத்துக்கும் புறம்பாக நடந்து கொள்ள முடியாது!” என்றார்.


“மதிப்புக்குரிய பேரரசரே! ஒரு மனிதன் சபதம் எடுப்பதும் அதன்படி நடப்பதும் மிகவும் போற்றுதலுக்கு உரிய ஒன்று. ஆனால் மனிதர்களை அப்படி நடந்து கொள்ள வைப்பது தான் நேர்மையின் பாதையில் நடக்க வைப்பது தான் மிகவும் கடினமான ஒன்று!” என்றார் த்வைபாயனர். “நீங்கள் சொல்லுவதை நான் புரிந்து கொள்கிறேன்.” என்றார் காங்கேயர். “நான் உண்மையின் வழியில் சத்தியத்தின் பாதையில் செல்ல விரும்புகிறேன். ஆனால் மற்ற மனிதர்களை அவ்வாறு மாற்றுவது கடினம் என்பதை அறிந்திருக்கிறேன். என்னால் மாற்றவும் இயலவில்லை!” என்றார் காங்கேயர்.


“மதிப்புக்குரிய காங்கேயரே, நீங்கள் என்னை விட வயதிலும் அனுபவத்திலும் பெரியவர்! ஆகவே நான் துணிவோடு இத்தகைய ஆலோசனையைக் கூறுவதை தயவு செய்து மன்னியுங்கள். தவ வாழ்க்கையில் ஒருவன் ஈடுபடுவது மிகவும் சிறந்தது தான்; இல்லை எனவில்லை. ஆனால் மனிதரை அப்படி மாற்றுவது அத்தகைய தவ வாழ்க்கையில் ஈடுபடச் செய்வது அதை விடச் சிறப்பானது!” என்றார் த்வைபாயனர். “ஆமாம்,” என்று மெல்லிய குரலில் கூறிய காங்கேயர் தனக்குத் தானே பேசிக் கொள்பவர் போல, “அனுதினமும், அல்லும், பகலும் என்னை வாட்டிக் கொண்டிருப்பது எதுவெனில், நான் எடுத்துக் கொண்டிருக்கும் சபதத்தை எவரும் சரியாகப் புரிந்து கொள்ளாமல் இருப்பது தான்! அதன் மூலம் நான் மிகவும் துன்பம் அடைகிறேன்.” என்றார்.


“நீங்கள் உங்கள் சபதங்களை நிறைவேற்றுவதில் உண்மையாக இருக்கிறீர்கள், காங்கேயரே! அதில் முனைப்போடு ஈடுபடுகிறீர்கள். ஆனால் உங்கள் மனதில், ஆழ் மனதில் எரிந்து கொண்டிருக்கும் சத்திய தீபம், அதன் ஒளி இங்குள்ள பலர் மனங்களையும் சென்றடையவில்லை. எவரும் புரிந்து கொள்ளவில்லை. நான் அறிந்தவரையில் நான் கேள்விப்பட்ட வரையில் குரு வம்சத்துத் தலைவர்களால் உங்கள் தலைமையை இழப்பது என்பதைச் சகிக்க முடியவில்லை. அவர்களால் அதைத் தாங்க முடியவில்லை! அதை நினைக்கவே அவர்கள் நடுங்குகின்றனர்.” என்றார் த்வைபாயனர். காங்கேயருக்கு த்வைபாயனர் சொல்ல வந்ததின் உட்கருத்து நன்கு புரிந்து விட்டது. சற்று நேரம் பூமியைப் பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார்.

பின்னர் மெல்ல தலையைத் தூக்கிக் கொண்டு, மனப்பூர்வமான குரலில் பேசினார். “ நான் தவறாக நினைத்து வந்திருக்கிறேன். ஆம்! இன்று வரை எனக்கு இது புரியவில்லை. இந்த விஷயம் என் தந்தை, என் தாய் மற்றும் நான் எங்கள் மூவருக்கிடையே உள்ள ஒரு விஷயம் என்றே நினைத்திருந்தேன். அது தவறு என்று புரிகிறது. ஆம், மக்கள் பேசுவார்கள் தான்! நிறையப் பேசுவார்கள். எல்லாவிதமான காரணங்களையும், காரியங்களையும் சுட்டிக் காட்டுவார்கள். நியாயங்கள் அலசப்படும். அவை என் மேலும் என் தாய் மேலும் அநாகரிகமான முறையில் பாயும்! இத்தனைக்கும் என்னைப் பெற்ற மகனாகவே நினைக்கிறாள் இந்தத் தாய்! அவளைக் குற்றம் சுமத்துவார்கள்!” என்றார் காங்கேயர்.


“ஆஹா, அவை எதுவுமே நடக்காது யுவராஜா! நீங்கள் விரைவில் சித்திராங்கதனை யுவராஜாவாக அறிவிப்புச் செய்துவிடுங்கள். அதன் பின்னர் யாரும் எவரும் எதுவும் பேச மாட்டார்கள்” என்றார் த்வைபாயனர்.
அதற்கு ஷாந்தனு, “இந்த குரு வம்சத்துத் தலைவர்கள் அனைவரும் நான் இருக்கையிலேயே இப்படி எல்லாம் நடந்து கொண்டால், நான் பித்ருலோகம் போய்விட்டேன் எனில் இன்னும் என்னவெல்லாம் சொல்வார்களோ, செய்வார்களோ! தெரியவில்லை!” என்று சோகத்துடன் கூறினார். அதற்கு காங்கேயர் இன்னமும் மெதுவான குரலில், “ஆம், நீங்கள் சொல்வது சரியே! குரு வம்சத்துத் தலைவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து இருக்கின்றனர். ஒரு குழுவினர் என்னைத் தலைவனாகவும் அடுத்த அரசனாகவும் ஏற்க நினைக்கின்றனர். இன்னொரு குழுவினர் சித்திராங்கதனை அரசனாக ஏற்க விரும்புகின்றனர். இதன் மூலம் குரு வம்சத்தினரிடையே பரஸ்பரச் சண்டை தான் மூளும். ஹஸ்தினாபுரம் போர்க்களமாகி விடும்!” என்றார்.


“அவர்களின் வியாகூலத்தை நீ தான் தீர்க்க வேண்டும் மகனே!” என்றான் ஷாந்தனு.


“தந்தையே, தாங்கள் அனுமதித்தால் நாளைக் கழித்து மறு நாள் ராஜசபையைக் கூட்டலாம். அந்த சபையில் சித்திராங்கதனை யுவராஜாவாக அறிவிப்புச் செய்துவிடலாம். நான் என்னுடைய சபதத்தை அனைவரும் நிறைந்திருக்கும் அந்த ராஜசபையில் அறிவிக்கிறேன். அதோடு அல்லாமல், நான் என்றென்றும் ஹஸ்தினாபுரத்துக்கும், குரு வம்சத்தினருக்கும் கடமைப்பட்டிருப்பதால் அவற்றைப் பாதுகாக்கப் பாடுபடுவேன் என்றும் என்றும் என்னுடைய முழு உதவியும் ஹஸ்தினாபுரத்துக்கும் குரு வம்சத்தினருக்கும் உண்டு என்பதையும் சொல்லிவிடுகிறேன். இந்த சாம்ராஜ்யம், மஹாராஜா பரதனால் ஸ்தாபிக்கப்பட்ட இந்த சாம்ராஜ்யம் வழிவழியாகத் தொடரவும் என்னால் ஆன உதவிகளைச் செய்வேன் என்றும் சபதம் இடுகிறேன். அதற்காக என்ன விலை இருந்தாலும் கொடுப்பேன். ஹஸ்தினாபுரத்தின் சிங்காதனத்தில் குருவம்சத்தினர் எவர் அமர்ந்தாலும் இது தான் என்னுடைய நிலைப்பாடு. இத்தகையதொரு சபதத்தை நான் எடுத்துக் கொள்கிறேன்.” என்றார் காங்கேயர்.


“மதிப்புக்குரிய காங்கேயர் சரியாகச் சொல்லுகிறார். இவர் தான் தர்மத்தின் பாதுகாவலர். ஒளி பொருந்திய தர்ம வாள் இவர் தான்! இவர் தர்மத்தின் திருவுருவம்!” என்றார் த்வைபாயனர். “த்வைபாயனர் நம்மை விட்டுச் செல்வதற்கு முன்னால் ராஜசபையைக் கூட்டுவதற்கான ஏற்பாடுகளைச் செய் மகனே!” என்றான் ஷாந்தனு. “என்னால் இனி அதிக நாட்கள் இங்கே தாமதிக்க முடியாது. இன்னும் மூன்று நாட்களில் நான் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் செல்ல நினைக்கிறேன்.” என்றார் த்வைபாயனர்.


“தந்தையின் கட்டளை அதுவெனில்,” என்ற காங்கேயர், “நாளை மறுநாள் ராஜசபை கூட்டப்படும். அதற்குள்ளாக மதிப்புக்குரிய பராசர முனிவரின் மகன் த்வைபாயனர் கூறியது போல் தந்தையும் சிறிதளவாவது நடக்க ஆரம்பித்து விடுவார்.” என்றார் காங்கேயர்.

Friday, June 10, 2016

த்வைபாயனரின் யோசனை!

“மன்னர் மன்னா! சிறிது காலம் முன்னர் வரை க்ஷாத்ர தேஜஸும், பிரம்ம தேஜஸும் ஒன்றையொன்று பிரிக்க முடியாமலேயே இருந்து வந்திருக்கிறது. அனைத்து ரிஷிகளிடமும் க்ஷாத்திர தேஜஸும் இருந்திருக்கிறது. பிரம்ம தேஜஸும் இருந்து வந்துள்ளது. அப்படியான ரிஷிகளிடம் பாடம் கற்கும் க்ஷத்திரிய அரசர்கள் நீதி பரிபாலனத்தில் சிறந்தவர்களாக இருந்து வந்தனர். ஆனால் இப்போது அவை ஒன்றையொன்று சாராமல் பிரிந்து விட்டன. சஹஸ்ரார்ஜுனனோடு நடத்திய யுத்தத்தின் பின்னர் இவை எல்லாம் அடியோடு மாறி விட்டன. முன் போல் இவை ஒன்று சேரவேண்டும். அப்போது தான் சம்பிரதாயங்களையும், சடங்குகளையும், நியமங்களையும் விதிகளையும் சரிவரக் கடைப்பிடிக்க முடியும்!”

காங்கேயனுக்கு இது பிடித்தமானதாகத் தெரிந்தது. ஆகவே அவர் தலையை அசைத்துத் தம் சம்மதத்தைத் தெரிவித்தார். மேலும் வாய்மொழியாகவும், “ஆம், த்வைபாயனரே, அது அப்படித்தான் இருக்க வேண்டும். ஆனால் அதை நாம் திரும்பக் கொண்டுவர வேண்டுமானால் என்ன செய்யவேண்டும்?” என்றும் கேட்டார்.

அதற்கு த்வைபாயனர், “யுவராஜா, என் தந்தை பராசர முனிவர் அடிக்கடி சொல்வது என்னவென்றால், ஸ்ரோத்ரியர்கள் தங்கள் வாழ்க்கையில் முழு ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து வேதம் ஒன்றுக்காக மட்டும் வாழ்ந்து வர வேண்டும். ஆனால் அப்படியான பிராமணோத்தமர்கள் இப்போது அரிதாகவே காணப்படுகின்றனர். அனைவரும் தங்கள் நியம, நிஷ்டைகளை மறந்து வருகின்றனர். பிராமணர்கள் ஒழுங்காக இருந்து அனைத்தையும் கற்பித்தாலன்றி க்ஷத்திரியர்களால் நாடாள இயலாது! ஆக அவர்களும் தங்கள் உண்மையான கடமைகளை மறந்துவிட்டனர்.” என்று என் தந்தை சொல்வார்.” என்றார் த்வைபாயனர்.

தன் தலையை ஆட்டி ஆமோதித்த வண்ணம் காங்கேயன் சொல்வார்:” நீங்கள் சொல்வது முற்றிலும் சரியே, த்வைபாயனரே!  ராஜரிஷிகளாகவே இருந்த மனுவின் நாட்களும் வைவஸ்வனின் நாட்களும் காலப்போக்கில் மறந்து மறைந்துவிட்டன. இப்போதுள்ள க்ஷத்திரியர்களுக்கு தவத்தின் வலிமை தெரியவில்லை. அதற்காக வாழ்வதுமில்லை. அதிகாரங்களைக் கைப்பற்றி நாடுகளை ஆளவே விரும்புகின்றனர். ஆட்டம், பாட்டம், கொண்டாட்டங்களில் தங்கள் காலத்தைக் கழிக்கவே விரும்புகின்றனர். போட்டியிலும், பொறாமையிலும் ஒருவரை ஒருவர் கொன்று கொண்டு காலத்தைக் கழிக்கின்றனர். அவர்களிடம் போய் நீதி, நேர்மை, ஒழுக்கம், தர்மம் என்றெல்லாம் பேசினால் நம்மைப் பார்த்துச் சிரிப்பார்கள்!”

காங்கேயன் தன் கைகளைத் தன் தந்தையின் தோள்களின் மேல் அன்புடன் வைத்துக்கொண்டு தடவிக் கொடுத்தார். “தந்தைக்கு என்ன செய்வது என்று புதிராக இருக்கிறது. குழம்பிப் போய் இருக்கிறார். க்ஷத்திரியர்கள் தங்கள் அரச தர்மத்தை எல்லாம் கைவிட்டு எத்தனையோ காலங்கள் ஆகின்றன. எல்லாம் ஒவ்வொன்றாய்க் கெட்டுப் போக ஆரம்பித்தாயிற்று. இது எங்கே போய் முடியப் போகிறது என்பதே புரியவில்லை. இதை யார் எப்படி நிறுத்தப் போகிறார்கள் என்பதும் தெரியவில்லை!”

கருணையுடனும், தயையுடனும் புன்னகைத்தார் த்வைபாயனர்.

“ஆர்யவர்த்தமும் அதன் மக்களும் இன்னமும் கெடாமல் பாதுகாக்கவேண்டிய பொறுப்பு மதிப்புக்குரிய மன்னர் மன்னரிடமும், யுவராஜாவான உங்களிடமும் இருக்கிறது, பிரபுவே! நீங்கள் இருவரும் மனம் வைத்தால் அதைத் தடுத்து நிறுத்தலாம்.”

“ம்,, அப்படி நடக்கவேண்டும் என்றே நானும் விரும்புகிறேன். ஆனாலும் சில சமயங்களில் எனக்கே தர்மத்தின் படி வாழ்வது என்பது ஒரு சவாலாகத் தோற்றமளிக்கிறதே! என்ன செய்வது?” என்று ஒரு நீண்ட பெருமூச்சுடன் கூறினார் காங்கேயன். “கவலை வேண்டாம் யுவராஜா!” என்று சொன்ன த்வைபாயனர் அவர் வயதுக்கு மீறிய விவேகத்துடன் காணப்பட்டார். அதே விவேகத்துடன் அவர் மேலும் கூறுவார்:” இருள் அதிகம் ஆகும்போது தான் வெளிச்சம் பிறக்கிறது. தர்மம் தானே எழுந்து நிற்கும்; அதற்கு வேண்டிய வலிமையையும், வல்லமையையும் சேகரித்த பின்னர் அது தானே எழுந்து நிமிர்ந்து நிற்கும்.” என்றார்.

“நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை எனக்குச் சொல்லுங்கள். தந்தையும் தன்னால் இயன்றதைக் கட்டாயமாய்ச் செய்வார்.” என்றார் யுவராஜா காங்கேயன். தன்னை விட வயதில் மிகச் சிறியவராக இருக்கிறார் இந்த இளம் துறவி. ஆனாலும் இவரிடம் அளப்பரிய மதிப்பும், மரியாதையும் உண்டாகிறதே என நினைத்துக் கொண்டார் காங்கேயன்.


“வழி மிக எளிதானது யுவராஜா அவர்களே! நீங்களும், நானும், இன்னும் நூற்றுக்கணக்கான பிரமசாரிகளும் பிரமசரிய விரதம் ஏற்கையில் கீழ்க்கண்டவாறு உறுதிமொழி எடுத்திருந்தோம்.
நான் நல்லனவற்றையே நினைத்துக் கொண்டு தீயனவற்றை மறந்துவிடுவேன்
நான் உண்மையையே கடைப்பிடிப்பேன். பொய்யை வெறுத்து ஒதுக்குவேன்.
ஞானத்தையும் விவேகத்தையும் போற்றுவேன்; அறியாமையை ஒதுக்குவேன்.
சத்தியப் பாதையில் செல்வேன்; பொய்யின் பாதையை ஒருக்காலும் நாட மாட்டேன்.
எளிமையான வாழ்க்கையை வாழ்வேனே அன்றி ஆடம்பர வாழ்க்கையை விரும்ப மாட்டேன்."

"யுவராஜா, இவற்றை எல்லாம் நாம் ஒருக்காலும் மறக்காமல் கடைப்பிடித்து வந்தோமானால் ஒளிக்கடவுளான சூரிய பகவான் நமக்கு நல்லனவற்றை எல்லாம் அருளித் தருவார். அவர் கண்கள் ஒரு கணம் மெல்ல மங்கியது போல் காணப்பட்டது. அவர் மேலும் அடக்கத்துடன் கூறினார்:” என்னால் இயன்றவரையிலும் இவற்றை எல்லாம் கடைப்பிடிக்க நான் முயற்சி செய்து வருகிறேன். கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று எனக்கு விருப்பம் தான். ஆனால் என்னால் இயன்றவரை முயல்கிறேன். முயற்சியை நான் ஒரு போதும் கைவிடவில்லை!” என்று சொல்லிய வண்ணம் சுற்றிலும் பார்த்தவண்ணம் தன் பேச்சைக் கொஞ்சம் நிறுத்தினார் த்வைபாயனர்.

சூரியனின் மெல்லிய கிரணங்கள் அந்த அறைக்குள் நுழைந்து அலாதியானதொரு சோபையைக் கொடுத்துக் கொண்டிருந்தது. கதவுகள் வழியாகவும், சாளரங்கள் வழியாகவும் நுழைந்த வெளிச்சத்தைக் கண்ணுற்ற த்வைபாயனர் சூரியக் கடவுளை வழிபடும் விதமாகக் காயத்ரி மந்திரத்தைச் சொல்லத் தொடங்கினார். பின்னர் மேலும் பேசினார்.

“தோல்விகள் மேல் தோல்விகளைக் கண்டாலும் என் நம்பிக்கைக்கு அசைவில்லை. என்  தந்தை பராசர முனிவர் எடுத்துக் கொண்ட உறுதிமொழி வீணாகிப் போய்விடக் கூடாது!” இதைச் சொன்ன த்வைபாயனர் தனக்குள்ளே மீண்டும் தன்னம்பிக்கை கிளர்ந்து எழுந்ததை உணர்ந்தார்.

Wednesday, June 8, 2016

ஷாந்தனுவின் வேண்டுகோள்!

சிகிச்சை ஆரம்பித்து எட்டு நாட்கள் ஆகி இருந்தன. எட்டாம் நாள் சக்கரவர்த்தி ஷாந்தனு மெல்ல எழுந்து அமர்ந்ததோடு அல்லாமல் தன்னைச் சுற்றி என்ன நடந்தது, இப்போது என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினான். மெல்ல மெல்லப் பேசவும் செய்தான். ஆனாலும் குரலில் பலஹீனம் இன்னமும் தெரிந்தது. அவனால் வழக்கமான குரலில் பேச முடியவில்லை. அன்று மத்தியானம் சிகிச்சை முடிவடைந்ததும் த்வைபாயனர் சம்பிரதாயச் சடங்குகளைச் செய்து அக்னியை அணைத்தார். பின்னர் கோயிலுக்குச் செல்வதற்காகக் கிளம்பினார்.

சக்கரவர்த்தி ஷாந்தனு மென்மையான கரடித்தோலால் செய்யப்பட்ட படுக்கையில் சாய்ந்த வண்ணம் படுத்திருந்தான். அவனருகே அவனுடைய ஆசை மனைவி மஹாராணி சத்யவதி அமர்ந்து கொண்டு மன்னனின் தோளை மெதுவாகப் பிடித்து விட்டுக் கொண்டிருந்தாள். அவள் முகம் சந்தோஷத்தில் மலர்ந்திருந்தது. அதோடு அவள் உள் மனதில் தன் மகன் கிருஷ்ண த்வைபாயனரின் சக்தியைக் குறித்துப் பெருமிதமும் ஏற்பட்டிருந்தது. தன் மகன் மகாப் பெரிய சாதனையைச் செய்துவிட்டான் என்று அவளுக்குப் புரிந்தது. படுக்கையின் தலைமாட்டில் விசிறி வீசும் பெண்கள் நின்று கொண்டு இயந்திரம் போல் தங்கள் வேலையைச் செய்து கொண்டிருந்தனர்.


படுக்கையின் வலப்பக்கம் போட்டிருந்த ஆசனத்தில் யுவராஜா காங்கேயன் அமர்ந்திருந்தார். அவர் முகத்தில் இப்போது பதட்டமும், வியாகூலமும் குறைந்திருந்தது. அமைதி தெரிந்தது. த்வைபாயனரின் மேல் அலாதியான மதிப்பும் ஏற்பட்டிருந்தது. அவரால் இத்தனை காலம் செய்து வந்த வைத்தியங்களில் குணமடையாத தன் தந்தை இப்போது த்வைபாயனரின் மந்திர வித்தைக்குக் குணமானது குறித்து இன்னமும் புரிந்து கொள்ள முடியவில்லை. எந்தவிதமான மருந்துகளுக்கும் குணமாகாத தன் தந்தை இப்போது குணமாகி இருக்கிறார். இந்த இளைஞனுக்கு நல்லதொரு எதிர்காலம் காத்திருக்கிறது.

ஆனால் அதே சமயம் ஆசாரியரும், ராஜகுருவுமான விபூதி அவர்கள் யுவராஜா காங்கேயன் அருகே அமர்ந்திருந்தவர் த்வைபாயனரை அவநம்பிக்கையுடனும் வெறுப்புடனும் பார்த்துக் கொண்டிருந்தார். இங்கே நடந்த அதிசயத்தினால் அவர் அதிர்ச்சி அடைந்திருந்தார். இப்படியும் நடக்க முடியும் என்பதை அவர் எதிர்பார்க்கவே இல்லை. அதிலும் அந்த இளைஞன் சொன்ன மந்திரங்கள் பெரும்பாலும் அவர் அறிந்தவையே! அவரால் சொல்லப்பட்டவையே! அவரும் மந்திர வித்தையை நன்கு கற்று அதில் தேர்ச்சி பெற்றவரே! ஆனால் இந்த இளைஞன் முன்னால் அவர் திறமை தோற்கடிக்கப்பட்டு விட்டதே!


ஹஸ்தினாபுரத்தின் ஸ்ரோத்ரியர்களுக்குள்ளே அவர் தான் இன்றளவும் தலைவராக இருந்ததோடு அல்லாமல் அதன் மூலம் கிடைத்து வந்த பெரிய மரியாதைகளையும், மதிப்பையும் அவர் அனுபவித்து வந்தார். அதர்வ வேதம் வேதங்களின் தொகுப்புத் தான் என்று யாரேனும் சொல்லி வந்தால் அவர்களைக் கொஞ்சமும் மதிக்க மாட்டார். எவரோடும் ஒத்துப் போக மாட்டார். அதர்வ வேதத்தைக் கொண்டாடுபவர்களைத் தம் விரோதியாகவே பார்ப்பார். அவர் தினமும் மன்னனின் படுக்கைக்கு அருகே அமர்ந்து கொண்டு அங்கு நடக்கும் சாஸ்திர ரீதியான சடங்குகளை மேற்பார்வை செய்து வந்தார். அது அவர் கடமை. ஒரு ராஜகுருவாக மன்னனுக்குச் செய்ய வேண்டிய கடமை! ஆகவே அவர் அங்கே அமர்ந்திருக்க நேர்ந்தது. இல்லை எனில் இந்த இளைஞன் அதர்வ வேதத்தை அந்த மந்திரங்களை உச்சரிக்க ஆரம்பித்ததுமே அவர் அறையை விட்டே வெளியேறி இருப்பார். அவர் சிறிதும் இதை எதிர்பார்க்கவே இல்லை. அதர்வ மந்திரத்தை இந்த இளைஞன் உச்சரித்துக் கொண்டே அதில் சொல்லி இருக்கும் மந்திர மூலிகைகளைக் கொண்டு மன்னனுக்கு சிகிச்சை அளிக்கப் போகிறான் என்று அவர் நினைக்கவே இல்லை!


த்வைபாயனர் கோயிலில் பார்த்த இளைய மந்திரி குனிக் என்பவரும் அங்கே படுக்கைக்கு அருகே அதன் காலடியில் நின்று கொண்டிருந்தார். அவர் தன்னுடைய புத்திசாலித்தனத்தினாலும் ஆர்வமிகுதியினாலும் த்வைபாயனர் செய்ததைப் பாராட்டியதோடு அல்லாமல் இதன் மூலம் த்வைபாயனருக்கு என்ன விதத்தில் லாபம் கிட்டப் போகிறது என்பதைத் தெரிந்து கொள்ளவும் ஆர்வம் காட்டினார். ஹஸ்தினாபுரத்தின் மேல் த்வைபாயனருக்கு என்ன விதத்தில் உரிமை இருக்கப் போகிறது என்றும் இந்தக் காரியத்தின் மூலம் அவர் அடையப்போகும் லாபத்தின் அளவு குறித்தும் அவர் சிந்தித்தார்.

த்வைபாயனர் இவை எதையும் கவனிக்காமல் அறையை விட்டு வெளியேற ஆயத்தமானார். வெளியேறும் முன்னர் அவர் காங்கேயனிடம் அறையில் உள்ள ஊழியர்களை அப்புறப்படுத்தும்படி மெதுவாகச் சொன்னார். உடனே சைகை மூலம் அறையிலிருந்து ஊழியர்களையும், மந்திரி குனிக்கையும் அப்புறப்படுத்தினார் காங்கேயன். அறையில் எவரும் அந்நியர் இல்லை என்பதை நிச்சயம் செய்து கொண்ட த்வைபாயனர் மன்னனைப் பார்த்து, “சக்கரவர்த்தி, பரத குலத்துச் சிறந்த அரசே! நாளை ஒன்பதாம் நாள் என்னுடைய சிகிச்சை முடிவடைகிறது. அதன் பின் நீங்கள் கொஞ்சம் எழுந்து நடக்கலாம். இனிமேல் நாளைக்குப் பின்னர் என் உதவி உங்களுக்குத் தேவையாக இருக்காது!” என்றார்.


ஷாந்தனு பதிலே சொல்லாமல் தன் கைகளைக் கூப்பி அவரை வணங்கினான். பின்னர் த்வைபாயனரிடம், “நான் எவ்வண்ணம் உங்களுக்குப் பரிசளிப்பேன்? என் நன்றியை எப்படித் திருப்பிக் காட்டுவேன்? த்வைபாயனரே! தயை கூர்ந்து சொல்லுங்கள்!” என்றான். அவன் குரலில் நன்றி நிரம்பி வழிந்தது. “பரிசா?” என்று கேட்டுவிட்டுச் சிறுபிள்ளையைப் போலப் பெரிதாகச் சிரித்தார் த்வைபாயனர். “பரிசை வைத்து நான் என்ன செய்யப் போகிறேன், அரசே! எனக்கு அதை வைத்து எப்படிப் பயன்பெறுவது என்பதே தெரியாது. அதோடு சக்கரவர்த்தி, அந்தப் பரிசை நான் ஏற்றுக் கொண்டேன் ஆனால், என்னுடைய தவமெல்லாம் வீணாகிவிடுமே!  என் தவம் வீணானால் நான் சொல்லும் மந்திரங்களுக்குப் பொருளே இல்லை. அவையும் தங்கள் சக்தியை இழந்துவிடுமே! பரிசெல்லாம் வாங்கிக் கொள்ளும் அளவுக்கு நான் எதுவும் புதிதாகவோ அதிசயமாகவோ செய்து விடவில்லை. எல்லாம் வல்ல ஒளிக்கடவுள் என்னை வழிநடத்தி ஹஸ்தினாபுரம் கொண்டு சேர்த்தார். அதோடு அல்லாமல் உங்களை குணப்படுத்தும் சக்தியையும் எனக்கு உவந்தளித்தார். அவர் இதை எனக்கு மட்டுமல்ல பலப் பல ஸ்ரோத்ரியர்களுக்குச் செய்து தான் வருகிறார்.”


மன்னன் சைகை காட்ட காங்கேயன் மன்னனின் வாய்க்கருகே தன் காதை வைத்துக் கொண்டு தகப்பன் மெல்ல மெல்லப் பேசுவதை உன்னிப்பாகக் கேட்டார். தந்தை என்ன சொல்ல விரும்புகிறார் என்பதைத் தெரிந்து கொண்ட காங்கேயர் த்வைபாயனரிடம் திரும்பி, “தந்தை உங்களுக்கு எவ்வகையில் உதவி செய்தால் உங்களுக்குப் பயனாக இருக்கும் என்று தெரிந்து கொள்ள விரும்புகிறார்.” என்றார். அதற்கு த்வைபாயனர், “பரத குலத்தில் சிறந்தவரே, யுவராஜா, என்னை மாபெரும் நன்றிக்கடனில் மூழ்க அடிக்காதீர்கள். ஏற்கெனவே எனக்கு நீங்கள் அபாரமான தன்னம்பிக்கையைக் கொடுத்து விட்டீர்கள். ஒளிக்கடவுளான சூரிய பகவானின் கருணா கடாட்சம் என் மேல் நிறைய இருக்கிறது என்பதைக் காட்டிக் கொடுத்துள்ளீர்கள். நான் என்ன செய்கிறேனோ அதற்கு அவன் துணை இருக்கிறது என்பதையும் புரிய வைத்துள்ளீர்கள். இதற்கு மேல் என்ன வேண்டும்? எனக்கு வாழ்க்கையில் உள்ள ஒரே ஒரு குறிக்கோள், தர்மம் நிலைபெற்று வாழ வேண்டும். இந்தப் புண்ணிய பூமியில் தர்மத்தின் ஆட்சி நடக்கவேண்டும் என்பதே ஆகும். நம் முன்னொர் கடைப்பிடித்த அந்த தர்ம வாழ்க்கை மீண்டும் வரவேண்டும்.”


“என் தந்தை அவர் வாழ்ந்த வாழ்க்கை முழுவதும் ஒரு அரசனாக, சக்கரவர்த்தியாகத் தன் தர்மத்தைக் கைவிடாது காப்பாற்றி வந்திருக்கிறார்., தர்மத்தின் வழியினில் நடந்து வந்திருக்கிறார்.” என்றார் காங்கேயன்.

சக்கரவர்த்தியின் உதடுகள் புன்னகை செய்ய முயன்று தோற்றுப் போய்க் கொஞ்சம் கோணிக் கொண்டன. எனினும் மன்னனின் முகபாவத்திலிருந்து அவன் புன்னகை செய்கிறான் என்பதைப் புரிந்து கொண்டனர். தான் பேச விரும்புவதை ஜாடை மூலம் தெரிவித்த மன்னன், மெதுவான குரலில், “தர்மம் அழிந்து தான் வருகிறது!” என்று ஒத்துக் கொண்டான்.


“மன்னா, அது யார் தவறும் அல்ல! சஹஸ்ரார்ஜுனன் ஒரு காட்டுத்தீயைப் போல் வந்து புகுந்து அனைத்தையும் அழித்துச் சாம்பலாக்கி விட்டான். அவன் வழியில் குறுக்கிட்டவர் யாராக இருந்தாலும், எதுவாக இருந்தாலும் அடியோடு அழித்துவிட்டான்.” என்ற த்வைபாயனர் தான் சொல்வது அனைத்துக்கும் ஒரு குறியீடு இருக்கிறது என்பதை மன்னன் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அழுத்தம் திருத்தமாகப் பேசினார். “அவனைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட ஆரியர்களால் தங்கள் உயிரைக் காத்துக்கொள்ளவே போராட வேண்டி இருந்தது. இதை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள் மன்னா! ஏனெனில் இந்தப் போரில் நேரடியாக ஈடுபட்ட உங்களுக்கு இது நன்றாகவே புரியும். மற்றவர்களை விட நீங்கள் புரிந்து கொள்வீர்கள். எத்தனையோ ஆசிரமங்கள் அழிக்கப்பட்டு விட்டன. வீடுகள் நிர்மூலமாக்கப்பட்டன. பெண்கள் மானபங்கப்படுத்தப்பட்டனர். அதற்குச் சம்மதிக்காதவர்கள் கொடுமைப்படுத்தப்பட்டுக் கொல்லப்பட்டனர். நேர்மையான மனிதர்கள் செய்வதறியாமல் ஓர் தெளிவற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர். ஆரியர்களின் வாழ்க்கைத் தரம் தாழ்ந்து போனதோடல்லாமல் பழைய விதிகள், நியமங்கள், நீதிகள் அனைத்தும் மறக்கப் பட்டு விட்டன. அவற்றைக் கடைப்பிடிப்பவர் இன்று இல்லை!”


“இதற்கு நான் அல்லது நாம் என்ன செய்யவேண்டும்?”மன்னன் ஆர்வமுடன் கேட்டான். த்வைபாயனரின் பேச்சில் அவன் முழுமையாக ஈடுபட்டுவிட்டதை அவன் முகம் காட்டியது.

Monday, June 6, 2016

மன்னன் கண் திறந்தான்!

ராஜகுருவான ஆசாரிய விபூதி என்பார் அங்கே ஓர் ஆசனத்தில் கம்பீரமாக அமர்ந்திருந்தார். கைகளில், கழுத்தில் எண்ணற்ற ஆபரணங்கள். கைகளின் எல்லா விரல்களிலும் மோதிரங்கள். கழுத்தில் கனமானதொரு சங்கிலி! அவர் அரசகுரு என்பதை அறிவிக்கும் வண்ணம் ஓர் பட்டுத்துணியிலான உருமால்! அவரும் சளைத்தவர் அல்ல. மந்திர வித்தையில் தேர்ந்தவரே! ஆனாலும் கொஞ்சம் இகழ்ச்சியோடும், கொஞ்சம் வெறுப்போடும் உள்ளே நுழைந்த இளம் துறவியைப் பார்த்தார். இவனால் என்ன செய்ய முடியும்? நாம் செய்ய முடியாத அதிசயத்தை இவன் செய்துவிடுவானா? அதையும் தான் பார்ப்போமே!

 த்வைபாயனர் அனைத்தையும் கண்டும் காணாதவராகத் தன் வேலையிலேயே மும்முரமானார். ஊழியர்கள் கொண்டு வந்த கொடுத்த பொருட்களை வைத்துச் சிறிய அக்னிகுண்டம் ஒன்றை உருவாக்கினார். அதை மன்னனின் படுக்கைக்குச் சற்று அருகேயே நிர்மாணித்தார். பின்னர் அக்னியை உருவாக்கி அக்னிதேவனுக்கு வழிபாடுகள் செய்து ஆஹுதி கொடுத்தார்.
பின்னர் அங்கே எரிந்து போய்ச் சாம்பலானவற்றை எடுத்துக் கைகளில் வைத்த வண்ணம் மன்னன் அருகே வந்தார். அந்தச் சாம்பலை மன்னனின் நெற்றி, உடல், மார்பு, கைகள், கால்கள், கன்னங்கள் எனப் பூசினார். பூசுகையிலேயே அவருடைய வாய் மந்திரங்களைச் சரியான உச்சரிப்பில் உச்சரித்துக் கொண்டிருந்தது.

மஹா அதர்வ ரிஷி பைலருக்கு எப்படிச் செய்தாரோ சற்றும் பிசகாமல் அப்படியே இங்கே மன்னனுக்கும் செய்தார். முதலில் வேதத்தின் முதல் மூன்று தொகுப்புக்களிலிருந்த மந்திர வித்தைக்கான மந்திரங்களைச் சொல்ல ஆரம்பித்தவர், பின்னர் மஹா அதர்வ ரிஷி பைலரை எழுப்புவதற்குச் சொன்ன மந்திரங்களைச் சொன்னார். மெல்ல மெல்ல அவருடைய மந்திர சப்தம் அந்த அறையை நிறைத்தது. எங்கும் ஓர் பவித்திரமான உணர்வு சூழ்ந்து கொள்வதை அனைவருமே உணர்ந்தார்கள். அடுத்து யமதர்மனை வழிபட்டு அவனிடம் பிரார்த்தனைகள் செய்து கொண்ட த்வைபாயனர் தன் பையிலிருந்து மந்திர மூலிகைகளை எடுத்தார். அவற்றிலிருந்து சாறு பிழிந்து கொஞ்சம் போல் நீர் கலந்து மன்னனின் உதடுகளைப் பிரித்து மெல்ல மெல்ல அவன் வாயில் புகட்டினார். கைகள் இந்த வேலைகளைச் செய்ய அவர் மனமும் வாயும் ஒருமித்து மந்திர வித்தைக்கான மந்திரங்களைச் சொல்வதிலே ஈடுபட்டிருந்தது. அவர் அந்த மந்திரங்களின் உண்மைத் தன்மையை முற்றிலும் உணர்ந்து மனப்பூர்வமாக ஒன்றிப் போய் மந்திரங்களைச் சொல்லச் சொல்ல அந்த அறையின் ஒட்டு மொத்த சூழ்நிலையுமே மெல்ல மெல்ல மாற ஆரம்பித்தது.


அந்த அறைக்குள் நுழைந்த சூரிய ஒளியே புதியதொரு தேஜஸோடு பிரகாசிக்க ஆரம்பித்தது. மீண்டும் அக்னிகுண்டச் சாம்பலை எடுத்து மன்னனின் உடல் முழுதும் பூசி விட்டார் த்வைபாயனர். அவர் குரல் அந்த அறையையே நிறைக்க அனைவரும் அந்த மந்திரங்களால் கட்டுண்டவர்கள் போல் வாய் திறக்காமல் அப்படியே நின்றனர். அமர்ந்திருந்தவர்கள் சற்றும் அசையாமல் அப்படியே அமர்ந்திருந்தனர். த்வைபாயனரின் கண்கள் அசையாமல் சக்கரவர்த்தி ஷாந்தனுவையே பார்த்துக் கொண்டிருந்தன. அவற்றிலிருந்து தெரிந்த ஒளி மன்னனை எப்போது வேண்டுமானாலும் எழுப்பி விடும் என்பது போல் இருந்தது. த்வைபாயனரின் கண்களையும் அவற்றிலிருந்து பெருகிய ஒளி மன்னனை நோக்கிப் பாய்ந்ததையும் அது மன்னனை எப்போது வேண்டுமானாலும் எழுப்பி விடும் என்பதையும் மஹாராணி சத்யவதியால் புரிந்து கொள்ள முடிந்தது.

 ஏனெனில் அவள் தன் மகனின் இந்தச் சக்தியைக் குறித்து ஏற்கெனவே அறிவாள். அவள் மனம் பின்னோக்கிச் சென்றது. த்வைபாயனர் ஆறு வயதுக் குழந்தையாக இருக்கையில் கல்பியில் அவளோடு இருக்கும்போது யமுனைக்கரையில் வந்து நின்று கொண்டு தன் தந்தையை அழைப்பார் அல்லவா? அப்போது அவர் முகமும் கண்களும் இப்படித் தான் ஜொலித்தன! தன் முழுமனதோடு தன் தந்தையை அங்கே வந்து தன்னை அழைத்துச் செல்லும்படி த்வைபாயனர் விடுத்த அழைப்புக் குரல் எப்படி அவர் தந்தையின் காதுகளில் போய் விழுந்து அவரும் கல்பிக்கு வந்து த்வைபாயனரை அழைத்துச் சென்றாரோ அதே போல் இப்போதும் நடக்கப் போகிறது என்று சத்யவதி உறுதியாக நம்பினாள்.


எல்லாருடைய கண்களும் த்வைபாயனரின் மேல் பதிந்திருந்தன. அவர் உடல் சற்று நேரத்தில் விரைப்பாகி விட்டது. தன் முழு சக்தியையும் பிரயோகித்துத் தன் குரலில் கொண்டு வந்திருப்பதைப் போல் காணப்பட்டார் அவர். அவர் உடலின் சக்தியும் உள்ளத்தின் பலமும் ஒன்று சேர்ந்து அந்த மந்திரப் பிரயோகங்கள் மூலம் மன்னனுக்குப் போய்ச் சேருகின்றன என அனைவருக்கும் புரிந்தது. தன் ஒருமித்த சக்தியனைத்தையும் கண்களில் கொண்டு வந்த த்வைபாயனர் அந்த ஒளி விடும் கண்களில் வீசும் ஒளிரேகைகள் மூலம் மன்னனின் உடலுக்குள் அவற்றைப் பாய்ச்சி அவனைத் தன்னிலைக்குக் கொண்டு வர முயல்கிறார் என்பதையும் தெரிந்து கொண்டனர். மந்திர சப்தம் விடாமல் கேட்டுக் கொண்டே இருந்தது. அனைவரும் மூச்சுக்கூட விடாமல் அடுத்து என்ன என்று பார்த்துக் கொண்டிருந்தனர். ஏதோ அதிசயம் நடக்கப் போகிறது என்பதை அனைவரும் உணர்ந்தார்கள்.


மன்னன் அசைவின்றிக் கிடந்தான். மந்திர சப்தங்கள் உச்சஸ்தாயியில் ஒலித்துக் கொண்டிருந்தன. அனைவரின் கண்களும் மன்னன் மேலும் த்வைபாயனர் மேலும் மாறி மாறிச் சென்று கொண்டிருந்தன. அப்போது திடீரென மன்னனின் கண் இமைகள் படபடத்தன. கண்ணுக்குள்ளே கருமணிகள் உருண்டன. அதுவரையிலும் மூச்சுவிடுவதற்குப் போராடிக் கொண்டிருந்த மன்னனின் மூச்சு சீராக வர ஆரம்பித்தது. ஆனால் இன்னமும் கண்களைத் திறக்கவில்லை! என்றாலும் இப்போது அவன் மயக்கத்தில் இல்லை என்பதையும் நீண்ட ஆழ்ந்த தூக்கத்தில் இருக்கிறான் என்பதையும் புரிந்து கொள்ள முடிந்தது. ஆயிற்று!

மீண்டும் ஒருமுறை அக்னிச் சாம்பல் மன்னன் உடலில் பூசப்பட்டது. மணிமந்திர  ஔஷதம் மன்னன் வாயில் புகட்டப்பட்டது. அப்போது மன்னன் லேசாகக் கண்களைத் திறந்தான். சுற்றும் முற்றும் பார்த்த அவன் கண்கள் காங்கேயனின் மேல் வந்து நிலைத்தன. பின்னர் அசதி தாங்காமல் அந்தக் கண்கள் தானாக மூடிக் கொண்டன.  ஆயினும் மன்னன் மீண்டும் வலுக்கட்டாயமாகத் தன் கண்களைத் திறந்து தன் படுக்கைக்கு அருகே அமர்ந்திருக்கும் மஹாராணி சத்யவதியைப் பார்த்தான். அவளைப் புரிந்து கொண்டதற்கு அடையாளமாகத் தலை அசைத்தான். பின்னர் மீண்டும் கண்களை மூடியவன் அப்படியே தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டான் என்பது அவனுடைய சீரான மூச்சிலிருந்து தெரிந்தது.


அன்றைய தினத்துக்கான மந்திர ஓதல் முடிவடைந்தது. த்வைபாயனர் மனதுக்குள் சந்தோஷத்துடன் சம்பிரதாயமான முறையில் அக்னி குண்டத்து நெருப்பை அணைத்தார். தன்னுடைய தண்டத்தையும் சுரைக் குடுக்கையையும் எடுத்துக் கொண்டார். தன் கண் பார்வையினாலும், சைகைகளினாலும் மஹாராணியிடம் விடைபெற்றுக் கொண்டவர் அப்படியே சைகைகளின் மூலமே காங்கேயனிடமும், சித்திராங்கதன், விசித்திர வீரியன் ஆகியோரிடமும் விடைபெற்றுக் கொண்டார். அறையை விட்டு மெல்ல வெளியேறினார். மக்கள் அனைவருக்கும் அரண்மனையில் நடந்த இந்த அதிசயம் குறித்துத் தெரிவிக்கப்பட்டது. அதைக் கேட்ட அனைவரும் மாளிகை வாயிலில் கூடினார்கள்.

அரண்மனையை விட்டு வெளியேறிச் சென்று கொண்டிருந்த இளம் துறவியைப் பார்த்து ஆவலுடனும் மரியாதையுடனும் நமஸ்கரித்தார்கள். அனைவரும் மிக்க மரியாதையுடன் அவரைப் பார்த்து வணங்கினார்கள். ஆனால் துறவியோ நடந்த நிகழ்ச்சிகளினால் மிகவும் களைத்துப் போயிருந்தார். அவர் உடலிலிருந்த சக்தி அனைத்தையும் இழந்தவர் போல் காணப்பட்டார். அதோடு இல்லாமல் நடந்த அதிசயத்தினால் அவருமே வாயடைத்துப் போயிருந்தார். அங்கு கூடி நின்ற கூட்டத்தைக் கூடக் காணாமல் அதைப் பற்றிய சிந்தனையே சிறிதும் இல்லாமல் தன் தலையைக் குனிந்து கொண்டு மனதிலும் உடலிலும் அடக்கம் நன்கு தெரியத் தான் தங்கி இருந்த கோவில் வளாகத்தை நோக்கி நடந்தார்

Sunday, June 5, 2016

த்வைபாயனருக்குப் பரிட்சை!

“தாங்கள் பயப்படுகிறீர்களோ, தாயே! மன்னிக்கவும் மஹாராணி! யுவராஜா காங்கேயர் தன் சபதத்தை நிறைவேற்ற மாட்டார் என்று நீங்கள் அஞ்சுகிறீர்களா? அதனால் தான் ராஜசபையில் அனைவர் எதிரிலும் அதை அறிவித்தாக வேண்டும் என்கிறீர்களா?” என்று த்வைபாயனர் கேட்டார்.

“இல்லை மகனே, காங்கேயன் சொன்ன வண்ணமே செய்து முடிப்பான். அவன் சபதத்திலிருந்து ஒருக்காலும் பிறழ மாட்டான். அவன் மிகவும் நேர்மையானவன். உண்மையை விரும்புவான். நியாயமான, நேர்மையான பாதையில் செல்ல விரும்புவான். என்னை அவன் ஒருபோதும் சிற்றன்னையாகக் கருதியதே இல்லை. சொந்தத் தாயாகவே கருதுகிறான். அவன் தன் தந்தையிடம் செய்து கொடுத்த சத்தியத்தைக் காப்பாற்றுவான் என்பதில் எனக்குச் சந்தேகமே இல்லை! அவனுக்குத் திருமணத்திற்குப் பல தேசத்து ராஜகுமாரிகளைக் கொடுப்பதாகச் சொல்லிக் கேட்டுக் கொண்டிருக்கின்றனர். ஆனால் அவன் திருமணம் செய்து கொள்ள இன்று வரை சம்மதிக்கவில்லை. அதோடு இல்லாமல் அவன் என் மகன்களைத் தான் ராஜரீக காரியங்களிலும், போர்ப்பயிற்சிகளிலும் ஈடுபடுத்திக் கற்றுக் கொடுத்து வருகிறான்.”

“பின் என்ன கஷ்டம் தாயே! வழி தான் தெளிவாக இருக்கிறதே!”

“இல்லை, மகனே! காங்கேயனைப் பொறுத்தவரை எல்லாம் சரிதான். ஆனால் இந்தக் குரு வம்சத்தின் மற்றத் தலைவர்கள்! அவர்கள் அனைவரும் தங்கள் பாரம்பரியத்தில் மிக்க பெருமை கொண்டவர்கள்; கர்வம் மிக்கவர்கள்! ராஜசபையில் அனைவர் எதிரிலும் காங்கேயனின் சபதம் குறித்த அறிவிப்புச் செய்வதற்கு முன்னரே ஆர்யபுத்திரர் ஷாந்தனு மஹாராஜா பித்ரு லோகம் சென்றுவிட்டாரெனில்! ம்ஹூம், அப்போது உள்ள நிலைமையைக் குறித்து எதுவும் சொல்ல முடியாது மகனே! குரு வம்சத்துத் தலைவர்கள் அனைவரும் காங்கேயனுக்குத் தான் ஆதரவு தெரிவிப்பார்கள். அவர்கள் ஆதரவு கிட்டிவிட்டதெனில் காங்கேயனைத் தவிர வேறு எவரும் அரியணை ஏறவே முடியாது. ஏனெனில் அவர்கள் அவ்வளவு செல்வாக்குப் படைத்தவர்கள். ம்ம்ம்ம், உன் தந்தை, மஹான் பராசர முனிவர் மட்டும் உயிருடன் இருந்திருந்தால்! மகனே! அவருடைய மந்திர வித்தையின் மூலம் ஷாந்தனு மஹாராஜாவைக் குணப்படுத்தும்படிக் கெஞ்சிக் கேட்டிருப்பேன். ஆனால், மகனே, எனக்கு என்னவோ தோன்றுகிறது! அவருடைய அந்தச் சக்தி அவர் மூலமாக உனக்கும் வந்திருக்க வேண்டும் என்று எண்ணுகிறேன்.”

“எனக்குத் தெரியவில்லை, தாயே! என்னிடம் அந்த சக்தி இருக்கிறதா, இல்லையா என்று தெரியவில்லை!” அடக்கத்துடன் கூறிய த்வைபாயனர் மேலும், “என்னுடைய தூது வெற்றிகரமாக முடியவேண்டும் என்பது கடவுளரின் விருப்பமாக இருந்தால், தாயே சக்கரவர்த்தியின் உடல்நலத்தைக் குணப்படுத்தும் பொறுப்பில் எனக்கு அவர்கள் உதவி கட்டாயமாய்க் கிட்டும்.”

“மகனே, நான் காங்கேயனை அழைத்து உன்னை ஆர்யபுத்திரரின் படுக்கைக்கு அருகே கொண்டு விடச் சொல்கிறேன்.” என்றாள் சத்யவதி!

உடனே காங்கேயர் அங்கே வரவழைக்கப்பட்டார். அவரிடம் சத்யவதி, த்வைபாயனரைச் சுட்டிக் காட்டி, அவர் பராசர முனிவரின் மகன் என்றும் அவரும், த்வைபாயனரும் வேதங்களை நன்கு கற்று கற்பிப்பதாகவும் அதில் உள்ளபடியே வாழ்க்கை நடத்துவதாகவும், அவற்றுக்காகவே வாழ்ந்து வருவதாகவும் கூறினாள். மேலும் அவர்களின் வேத மந்திரங்களால் அவர்களால் அதிசயங்களை நிகழ்த்த முடியும் என்றும் கூறினாள். மேலும் தன் இனிய குரலில் அவள் கூறியதாவது:” நான் ஏன் அவரைத் திரும்பக் கூப்பிட்டேன் தெரியுமா! ஏனெனில் அவர் உணவே பல நாட்களாக உண்ணவில்லை என்பதை அறிந்தேன். அதனால் அழைத்தேன். அதெல்லாம் போகட்டும்! இப்போது நாம் ஏன் த்வைபாயனரை வைத்து ஆர்யபுத்திரரின் உடல்நலம் மேம்படுவதற்கான முயற்சிகளில் ஈடுபடக் கூடாது? அவருடைய மந்திர வித்தையையும் முயன்று பார்க்கட்டுமே! அதில் நமக்கு எவ்விதமான நஷ்டமும் இருக்கப் போவதில்லை!” என்றாள்.

காங்கேயனுக்குத் தன் தந்தையின் உடல்நலம் குறித்து நன்கு தெரியும். அவர் உடல் நலம் இனிமேல் முன்னேற்றம் அடைவதற்கான சாத்தியங்களே இல்லை என்பதையும் அறிவார். ஆனாலும் தன் சிற்றன்னையின் வேண்டுகோளைப் புறக்கணிக்க வேண்டாம் என்று முடிவு செய்தார். ஏனெனில் சிற்றன்னையின் விருப்பம் பூர்த்தி செய்யப்படவில்லை என்னும் குறை அவளுக்கு இருக்க வேண்டாம். ஒருவேளை தன் விருப்பம் பூர்த்தியாகி இருந்தால் சக்கரவர்த்தி உயிர் பிழைத்திருப்பார் என்று அவள் எண்ணலாம் அல்லவா?

ஆகவே காங்கேயர் சம்மதித்தார். சத்யவதி ஒரு ஊழியனைக் கூப்பிட்டு த்வைபாயனரை கங்கை நதியின் கரைக்கு அரண்மனைக்கருகிலேயே இருக்கும் கரைக்கு அழைத்துச் செல்லும்படி கூறினாள். அங்கே த்வைபாயனர் தன்னைச் சுத்தப்படுத்திக் கொண்டு சூரிய பகவானையும் வேண்டிக் கொண்டு காயத்ரி மந்திரத்தையும் ஜபித்தார். காயத்ரியைத் தன் உதவிக்கு அழைத்தார். வெளிப்பார்வைக்கு அமைதியாகவும் தன்னை அடக்கிக் கொண்டவராகவும் இருந்தாலும் த்வைபாயனர் உள்ளுக்குள்ளே உணர்ச்சிவசப்பட்டிருந்தார். அடுத்தடுத்து நிகழ்ந்த சம்பவங்கள் அவரை மாபெரும் உணர்ச்சிக்கடலில் தள்ளி இருந்தது. அவர் தந்தையின் மரணம்; ஓநாய்களின் பிடியிலிருந்தும் ராக்ஷசர்களின் பிடியிலிருந்தும் அதிர்ஷ்டவசமாகத் தப்பியது; இறந்து கொண்டிருப்பவர்களைப் பிழைக்கவைக்கும் மஹா மந்திரத்தைத் தற்செயலாக அதர்வ மஹாரிஷியின் மூலம் தெரிந்து கொள்ள நேர்ந்தது; எல்லாவற்றுக்கும் மேல் அதர்வ ரிஷியின் ஆசிரமத்திலிருந்து உயிருடன் தப்பியது; விசித்திரமான சம்பவங்கள் மூலம் மிகவும் விசித்திரமான முறையில் அவர் தாயுடன் சந்திப்பு நேர்ந்தது; தாய் மூலம் குரு வம்சத்து சக்கரவர்த்தியை இப்போது குணப்படுத்த வந்திருப்பது! இவை எல்லாமே தர்மக்ஷேத்திரத்தை மீட்டெடுக்க வேண்டும் என்னும் தன் முயற்சி வெற்றி பெற்று விடும் என்பதை உணர்த்துவதாகவே த்வைபாயனர் நினைத்தார். அதற்கு ஹஸ்தினாபுரத்து உதவி கிட்டும் என்றும் மனமார நம்பினார். ஆஹா! இது எல்லாம் நடந்திருப்பது எல்லாம் வல்ல அந்தப் பரம்பொருளின் கருணையினால் அல்லவோ! கடவுளர் அனைவரும் தம் மேல் தங்கள் கருணாகடாட்சத்தைப் பொழிவது குறித்து த்வைபாயனருக்கு மனம் விம்மியது.

த்வைபாயனர் சக்கரவர்த்தி ஷாந்தனு படுத்துக் கிடந்த அறைக்குள்ளே அழைத்துச் செல்லப்பட்டார். மெதுவாக மனதுக்குள்ளாகத் தங்கள் குல முன்னோர்களான பராசரர், சக்தி, வசிஷ்டர் அனைவரையும் பிரார்த்தித்துக் கொண்ட த்வைபாயனர் பிருகு முனிவரையும் ஆங்கிரஸ முனிவரையும் கூட மறக்காமல் பிரார்த்தித்துக் கொண்டார். பின்னர் தாம் குருவாக ஏற்றுக் கொண்ட மஹா அதர்வ ரிஷி ஜாபாலியையும் மானசிகமாக வணங்கிக் கொண்டார். ஒளிக்கடவுளான சூரியனை வேண்டிக் கொண்டார். எல்லாவற்றுக்கும் மேல் தன்னை இந்த அளவுக்குத் தக்கவனாக மாற்றி இருக்கும் மாபெரும் வேதங்களின் துணையை வேண்டினார். தன் வாழ்க்கையை அவற்றுக்காகவே அர்ப்பணித்திருப்பதால் அவற்றின் உதவி தனக்குக் கிட்டும் என்றும் நம்பினார்.

அங்கே வந்த தன் தாயைப் பார்த்தார். அவள் முகத்தில் தன் மகன் மீதிருந்த நம்பிக்கை தெரிந்தது. த்வைபாயனருக்கு அது கவலையைத் தந்தது. ஒரு வேளை அவர் தோற்று விட்டால்! “ஆஹா, கடவுளே, நான் இந்தப் பரிட்சையில் தோற்று விட்டேன் எனில் என் தாய் மனம் புண்படுவாள். அவள் இதயம் சுக்கு நூறாகி விடும். அவள் முகத்தில் புன்னகையை இனி ஒரு போதும் பார்க்கவே முடியாது!” தான் தோற்கக் கூடாது என்று உறுதி பூண்டார் த்வைபாயனர். இல்லை. இல்லை. த்வைபாயனன் தோற்க மாட்டான். தனக்குத் தானே சொல்லிக் கொண்டார். கடவுளர் அனைவரும் விரும்புவதற்கேற்ப தர்மக்ஷேத்திரம் புனர் நிர்மாணம் அடைய வேண்டும். பழைய வளத்தைப் பெற வேண்டும். அது நடக்கவேண்டுமெனில் தான் தோற்கக் கூடாது!

தன்னம்பிக்கையுடன் அறைக்குள்ளே நுழைந்தார் த்வைபாயனர். அவருடன் யுவராஜா காங்கேயனும், சத்யவதியும், மற்ற ஊழியர்களும் பின்னால் வந்தனர். ஏற்கெனவே அங்கிருந்த பழைய ஸ்ரோத்ரியர்கள் இந்த இளந்துறவி யுவராஜனால் விரட்டப்பட்டுச் சென்றவன் மீண்டும் உள்ளே வந்திருக்கிறானே என அதிர்ச்சியுடன் பார்த்தார்கள்.  தங்களுடைய அதிகாரத்தை ஏகபோக உரிமையை அவன் பிடுங்கிச் செல்ல வந்திருப்பதாகவே நினைத்தார்கள். வருடக்கணக்காகத் தங்களுடைய கடுமையான உழைப்பினால் கிடைத்திருக்கும் இந்தப் பிரத்தியேக உரிமையை இப்போது இன்று வந்த இவன் பிடுங்கிக் கொண்டு விடுவானோ? இவனால் எப்படி வெல்ல முடியும்?

Friday, June 3, 2016

சத்யவதியின் விருப்பம்!

அதற்குள்ளாகத் தன் மகன் உணவே உண்ணவில்லையே என்பது சத்யவதியின் நினைவில் வந்தது. ஆகவே, “மகனே, நான் நீ உணவு உண்ணவில்லை என்பதை மறந்தே போனேனே!” என்று சொல்லிய வண்ணம் தன் கைகளைத் தட்டினாள். வந்த ஊழியர்களிடம் த்வைபாயனருக்குத் தேவையான உணவைக் கொண்டு வரும்படி பணித்தாள். ஊழியர்கள் உணவைக் கொண்டு வந்து தர த்வைபாயனர் அதை உண்ண அமர்ந்தார். சத்யவதி மகனின் அருகே தானும் ஒரு சின்ன ஆசனப் பலகையில் கீழேயே அமர்ந்தாள். பலகையாக இருந்தாலும் அது தங்கத் தகடுகளும், வெள்ளித் தகடுகளும் பொருத்தப்பட்டுக் காணப்பட்டது. தாயும் மகனும் ஒரு சோகமான சூழ்நிலையில் பதின்மூன்று ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்தனர். அதன் பின்னர் நடந்த சில வித்தியாசமான நிகழ்வுகளின் மாறுபட்ட சூழ்நிலையினால் இப்போது தாயும் மகனும் சந்திக்க நேர்ந்தது. ஆனால் எப்படி! தாய் ஒரு மகாராணியாகவும், மகன் அனைத்தும் துறந்த இளம் துறவியாகவும்!

“மகனே! உனக்கு நினைவிருக்கிறதா! நீ என்னை விட்டுப் பிரிந்து செல்கையில் நான் எப்போது உன் வருகையை விரும்புகிறேனோ அப்போது வருவதாகச் சொல்லிச் சென்றாயே! அது நினைவில் இருக்கிறதா? மகனே! நான் உன்னைத் தினந்தோறும் அழைத்த வண்ணமே இருந்தேன்!” என்றாள் மஹாராணி சத்யவதி!

“ஆம், தாயே! நினைவில் உள்ளது! எவ்வாறு மறப்பேன்! அதுவும் என் தாயையா? ஒருக்காலும் இல்லை தாயே! அல்லும், பகலும் நான் உங்களை நினைத்துக் கொண்டே இருந்தேன். நீங்களும் எப்போதுமே என் முன்னிலையில் இருந்தீர்கள். உங்கள் குரல் எனக்குக் கேட்டவண்ணமே இருந்தது. ஒரு முறை ஓநாய்களின் பிரதேசத்தில் கேட்டேன். இன்னொரு முறை மஹா அதர்வ ரிஷியின் ஆசிரமத்தில்! அப்போது “கிருஷ்ணா! எங்கே இருக்கிறாய் நீ! ஏன் வரமாட்டேன் என்கிறாய்?” என்று நீங்கள் கேட்டது இன்னமும் என் காதுகளில் ஒலித்தவண்ணம் இருக்கிறது. இறையருளால் அவர்கள் வழிகாட்டுதலில் நானும் உங்களை வந்தடைந்துள்ளேன்!” என்றார் த்வைபாயனர். மேலும் புன்னகையுடன் அவர் சொன்னார்;”நான் கல்பிக்குச் சென்றபோது நம் பழைய வழக்கப்படி ஒரு மண்பானையில் ஆலிலையை வைத்து உங்களுக்கு யமுனைத் தாயின் மூலம் அனுப்பி வைத்தேன்! என்னை மன்னிக்கும்படி அதன் மூலம் கேட்டுக் கொண்டேன்!” என்றார்.

“மன்னிப்பதா! உன்னையா! நானா? எதற்காக மன்னிப்பு மகனே!”

“நான் கல்பியிலிருந்து உங்களை விட்டுச் சென்றது குறித்துத் தான் நீங்கள் கோபமாக இருந்தீர்களே!”

“ஆஹா, மகனே! நான் உன்னைக் கோபிப்பதா! உன்னை எப்படி நான் கோபிப்பேன்! நீ ஒருபோதும் என்னைக்கோபம் அடைய வைத்ததில்லை!”

அதற்குள்ளாக சத்யவதியின் கட்டளையின் பேரில் ஒரு சேடிப் பெண் சிறிய இளவரசர்கள் இருவரையும் அங்கே அழைத்து வந்தாள்.சித்திராங்கதனும், விசித்திர வீரியனும் அங்கே வந்தார்கள். சித்திராங்கதனுக்குப் பதினோரு, பனிரண்டு வயதுக்குள்ளும், விசித்திர வீரியன் பத்து வயதுக்குள்ளும் இருந்தனர். அவர்கள் இருவரும் வெளுத்து சோகையாக மெல்லிய உடல் வாகுடன் காணப்பட்டனர். ஆனால் அரசகுமாரர்களுக்கே இருக்கும் அதீதமான கர்வத்துடன் காணப்பட்டனர். அதிகம் செல்லம் கொடுத்து வளர்க்கப்படும் குழந்தைகள் என்பதைப் புரிந்து கொள்ள வெகு நேரம் ஆகவில்லை த்வைபாயனருக்கு!

இவர்களின் சின்னச் சின்ன ஆசைகள் கூட நிறைவேற்றி வைக்கப்படும் என்பதையும் புரிந்து கொண்டார். வந்த குழந்தைகள் அரை மனதாகத் தங்கள் தாய்க்காக தாய்க்கு எதிரே தங்கள் இருகைகளையும் கூப்பி வணங்கினார்கள். ஆனால் தங்கள் தாய் அந்தப் பிச்சைக்காரத் துறவியோடு சமமாகக் கீழே அமர்ந்திருந்ததை அவர்களால் பொறுக்க முடியவில்லை. ஒரு மஹாராணியான தங்கள் தாய் இந்தப்பிச்ச்சைக்காரனுக்குச் சமமாக உட்காருவதா? அவர்கள் முகத்திலேயே அந்த ஏமாற்றம் தெரிந்தது.

இது எதையுமே கண்டு கொள்ளாமல் சத்யவதி திரும்பித் தன் இரு குமாரர்களையும் பார்த்து, “குமாரர்களே, இது கிருஷ்ண த்வைபாயனர்! பராசர முனிவரின் புதல்வர்!” என்று அறிமுகம் செய்து வைத்தாள். மேலும் தொடர்ந்து, “பராசர முனிவரின் ஆசிகளால் தான் நான் உங்கள் தந்தை ஆர்யபுத்திரர் ஷாந்தனுவைத் திருமணம் செய்து கொள்ள முடிந்தது. த்வைபாயனன் சிறியவன் தான். ஆனால் தன் தந்தையிடமிருந்து அவருடைய தவம் செய்யும் ஆற்றலையும், விசாலமான அறிவையும் பெற்றிருக்கிறான். அவன் கால்களில் விழுந்து வணங்கி அவன் ஆசிகளைப் பெற்றுக் கொள்ளுங்கள்!” என்றும் அறிவுறுத்தினாள். இருவரும் கொஞ்சமும் சிரத்தையே இல்லாமல் தாய் சொல்வதற்காக மீண்டும் கைகளைக் கூப்பி அவரை வணங்கினார்கள்.

சித்திராங்கதன் தன் தாயிடம் திரும்பி, “அம்மா, இவர் தானே தந்தையைப் பார்க்க வேண்டும் என்று விரும்பினார்? இந்தத் துறவியைத் தானே பெரியண்ணா காங்கேயர் விரட்டி விட்டார்?” என்று கேட்டான். மனதைப் புண்படுத்தும் இந்த அவமதிப்பான பேச்சைச் சற்றும் பொருட்படுத்தாமல் த்வைபாயனர் சிறுவர்கள் இருவருக்கும் புன்னகையுடன் ஆசிகளை வழங்கினார்.

“இவருக்கு உன்னிடம் என்ன வேண்டுமாம், அம்மா?” என்று விசித்திர வீரியன் கேட்டான். சத்ய்வதியின் முகத்தில் கோபத்தையும் எரிச்சலையும் கண்ட த்வைபாயனர் உடனே குறுக்கிட்டார். “இளவரசே, எனக்கு மஹாராணியிடமிருந்தோ அல்லது மற்ற எவரிடமிருந்தோ எதுவும் வேண்டாம். நான் எதுவும் கேட்டுப் பெற வரவில்லை. அங்கே யுவராஜா காங்கேயரிடம் நான் சொன்ன மாதிரி நான் எதையும் கேட்டுப் பெற இங்கே வரவில்லை; கொடுத்துச் செல்லவே வந்திருக்கிறேன்.” என்றார்.

“எங்களுக்கு உன்னால் என்ன கொடுக்க முடியும்?” அகங்காரத்துடன் கேட்டான் சித்திராங்கதன்.

“என்னால் உங்களுக்குக் கடவுளின் உதவியைப் பெற்றுத் தர முடியும். வேதங்களின் உதவியுடன். என்றென்றும் நிலைத்திருக்கும் வேதங்களின் உதவியால் கடவுளரை அழைத்து உங்களுக்கு அவர் உதவியைப் பெற்றுத் தர முடியும்!” என்றார் த்வைபாயனர்.

ஆனால் அதற்குள்ளாக சத்யவதி இருவரையும் அங்கிருந்து போகச் சொல்ல அரை மனதாக இருவரும் அங்கிருந்து சென்றனர். அவர்கள் இருவரும் சென்றதும் அங்கிருந்த ஊழியர்களையும் வெளியே அனுப்பினாள் சத்யவதி. பின்னர் த்வைபாயனரிடம், “கிருஷ்ணா! நான் மிகப் பெரிய இக்கட்டானதொரு நிலையில் இப்போது இருக்கிறேன். ஆர்யபுத்திரர் ஷாந்தனுச் சக்கரவர்த்தி எப்படியேனும் உயிர் பிழைத்து எழ வேண்டும்; என்னிரு மகன்களின் எதிர்காலம் அவர் உயிர் பெற்று எழுவதில் தான் இருக்கிறது!” என்றாள். இப்போது அவள் ஒரு மஹாராணியாகக் காட்சி அளிக்கவில்லை. பழைய மீனவப் பெண் தன் அருமை மகனிடம் தன் துயரங்களையும் துன்பங்களையும் பகிர்ந்து கொண்ட ஒரு தாயாக மாறி விட்டாள்.

“மகனே, நீயும் உன் தகப்பனாரும் கல்பியிலிருந்து சென்ற பின்னர் ஒரு நாள் நான் ராஜா ஷாந்தனுவின் கண்களில் பட்டேன். அவர் என்னை மணக்க விரும்பினார். அப்போது உன் பாட்டனார் ஜாருத் ஷாந்தனு மஹாராஜாவிடம், என் வயிற்றில் பிறக்கும் ஆண் மக்களே சிங்காதனம் ஏறவேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். முதலில் ஷாந்தனு அதை ஏற்கவில்லை. ஏனெனில் அவருக்கு காங்கேயன் என்னும் புத்திசாலியும் வீரனும் ஆன மகன் ஏற்கெனவே இருந்தான். அவனுக்கு யுவராஜாவாகப் பட்டமும் சூட்டப்பட்டிருந்தது. ஆகவே ஷாந்தனு மஹாராஜா கவலையுடன் இருந்தார். ஆனால் உன் பாட்டனாரோ பிடிவாதமாக என் குழந்தைகளே பட்டம் ஏற வேண்டும் என்றும் யுவராஜா காங்கேயன் விட்டுக் கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டிருந்தார். இதை அறிந்த காங்கேயன் தான் சிங்காதனம் ஏறுவதில்லை என்று சபதம் செய்தான்.”

“ஆனாலும் திருப்தியுறாத என் தந்தை அவனுக்குத் திருமணம் ஆனால் குழந்தைகள் பிறக்கும். அந்தக் குழந்தைகளால் சிங்காதனத்துக்கு மீண்டும் போட்டி உருவாகும் என்று சொல்ல காங்கேயன் தான் திருமணமே செய்து கொள்வதில்லை என்றும் சபதம் செய்தான்! அது ஷாந்தனு ராஜாவுக்கு முதலில் வருத்தமாக இருந்தாலும் என் மேல் கொண்ட தீராத ஆசையால் அதற்குச் சம்மதித்து என்னைத் திருமணமும் செய்து கொண்டார். எனக்கும் இரண்டு பிள்ளைகள் பிறந்திருக்கின்றன. அவர்கள் பிறந்த நாளில் இருந்து நான் ஷாந்தனு ராஜாவிடம் சிங்காதனம் சித்திராங்கதனுக்குத் தான் என அறிவிக்கும்படி கேட்டு வருகிறேன். அவரும் அப்படிச் செய்வதாகத் தான் சொல்லிக் கொண்டிருந்தார். ஆனால் அதற்குள்ளாக உடல் நலமில்லாமல் படுத்துவிட்டார்! ராஜ்யசபையில் என் மகன் சித்திராங்கதன் தான் பட்டம் ஏறுவான் என்றும் காங்கேயன் தன் சபதத்தைக் கடைப்பிடிப்பான் என்றும் ஆர்யபுத்திரர் வாயிலாக அறிவித்தால் தான் எனக்கு நிம்மதி!”

Wednesday, June 1, 2016

தாயும் மகனும்!

அப்போது த்வைபாயனர் சற்றும் கலங்காமல் தன் கைகளை உயர்த்திய வண்ணம், :யுவராஜா! நான் இங்கிருந்து எதையும் எடுத்துச் செல்ல வரவில்லை. கொடுத்துச் செல்லவே வந்திருக்கிறேன்.” என்றார். ஆனால் யுவராஜா காங்கேயனோ த்வைபாயனரைச் சற்றும் மதிக்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டார். இந்த இளம் துறவிக்கு மரியாதை என்பதே இல்லை என்றே அவர் எண்ணினார். த்வைபாயனர் வேறு வழியின்றி தள்ளி இருந்தே சக்கரவர்த்திக்கு நலம்பெறும்படி ஆசிகளைக் கூறிவிட்டு கனத்த மனதுடன் அங்கிருந்து வெளியேறினார்.

அவர் ஹஸ்தினாபுரத்திற்கு எதற்காக வந்தாரோ அந்த எண்ணம் முழுவதுமே இப்போது வீணாகிவிட்டது. சக்கரவர்த்தி ஷாந்தனுவின் துணையோடு தர்மக்ஷேத்திரத்தைப் புனர் நிர்மாணம் செய்ய வேண்டும் என்னும் அவர் ஆசை! இப்போது முற்றிலும் மறைந்தே போய்விட்டது. இந்த யுவராஜாவின் உதவியை நாடலாம் எனில் அவன் உதவி செய்பவனாகத் தெரியவில்லை. த்வைபாயனரின் தன்னம்பிக்கை சற்றே ஆட்டம் கண்டது. இப்போது தன்னைச் சுற்றிச் சூழ்ந்திருக்கும் இந்தக் கருமையான இருட்டிலிருந்து தன்னைக் காப்பாற்றத் தன் தந்தை மட்டும் பக்கத்தில் இருந்தால் எவ்வளவு நன்மையாக இருக்கும். ஆஹா! தந்தை மட்டும் இப்போது இங்கிருந்தால்!

அரசமாளிகையின் வெளி மைதானத்தில் இருந்து வெளியேறிக் கொண்டிருந்தார் த்வைபாயனர். அப்போது ஓர் வயதான பெண்மணி அங்கே அவரை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அவளைப் பார்த்தால் மிகவும் உயர்ந்த இடத்தில் வேலை செய்பவளைப் போல் இருந்தாள். அவள் அணிந்திருந்த ஆடை, அணிமணிகள் அரச மாளிகையில் வேலை செய்பவர்கள் அணிவது! அவரை நோக்கி வேகமாய் கிட்டத்தட்ட ஓடியே வந்தாள். த்வைபாயனரை நமஸ்கரித்து விட்டு அவள் கேட்டாள். “மாட்சிமை பொருந்திய ரிஷியே! நீங்கள் வெகு தூரத்திலிருந்து வந்திருப்பது போல் தெரிகிறது! ஏதேனும் உண்ணக் கிடைத்ததா உங்களுக்கு? உண்டீர்களா?” என்றாள். “இல்லை!” என்று தலை அசைத்த த்வைபாயனர், “நான் கோயிலுக்கு வரும்போது அங்கே உணவுப் பரிமாற்றங்கள் அனைத்தும் முடிந்து விட்டன. வந்திருந்த விருந்தாளிகள் அனைவரும் உண்டு முடித்துவிட்டனர்.” என்றார்.

“என் தலைவி, மதிப்புக்குரிய மஹாதேவி, மஹாராணி, தங்களை என்னுடன் வந்து மாளிகையில் உணவருந்தி விட்டுச் செல்லும்படி பணித்திருக்கிறாள்.” என்றவள், “தாங்கள் மிகவும் களைப்புடனும், பசியுடனும் இருப்பதை அவள் கவனித்திருக்கிறாள்.அதோடு யுவராஜா காங்கேயரால் நீங்கள் திருப்பி அனுப்பப்பட்டதும் அவளுக்கு மகிழ்ச்சியை அளிக்கவில்லை. அவள் யுவராஜா காங்கேயர் சார்பில் உங்களிடம் மன்னிப்பை வேண்டுகிறாள். தன் தகப்பனின் உடல் நிலையால் யுவராஜாவுக்கு மிகுந்த மனக்கஷ்டமும், வருத்தமும் ஏற்பட்டிருக்கிறது. அதனால் அப்படி நடந்து கொண்டிருக்கிறார்.” என்றாள். தன் கௌரவத்தை இழக்காமல் த்வைபாயனர் பேசினார். “என்னைத் திருப்பி அனுப்பியதிலேயே எனக்கு இனிமேல் ஹஸ்தினாபுரத்தில் எந்த வேலையும் இல்லை என்று புரிந்து விட்டது! மதிப்புக்குரிய மஹாராணியிடம் ஒருவேளை உணவில்லாவிட்டால் எனக்கு ஒன்றும் ஆகிவிடாது என்றும் அது அப்படி ஒன்று கஷ்டம் இல்லை என்றும் என் சார்பில் சொல்லிவிடு!” என்றார்.

“இல்லை, ஐயா! மதிப்புக்குரிய மஹாராணி ஒரு சபதம் எடுத்திருக்கிறார். அதன்படி எந்த ஸ்ரோத்ரியரையும் உணவு உண்ணாமல் மாளிகையை விட்டு வெளியே அனுப்பக் கூடாது என்பது தான் அது! அதோடு அவள் உங்களைச் சந்திக்கவும் விரும்புகிறாள்.”

“ஏன்?” த்வைபாயனர் கேட்டார்.

“மஹாராணி நீங்கள் பேசிய விதத்தில் மிகவும் ஈர்க்கப்பட்டு விட்டாள். “நீங்கள் நான் எடுத்துக்கொள்ளவரவில்லை! கொடுத்துச் செல்லவே வந்திருக்கிறேன்.” என்று சொன்னது அவளை மிகவும் கவர்ந்து விட்டது. இது வெறும் வார்த்தையல்ல என்பதை அவள் உணர்கிறாள். நம்புகிறாள். ஆகவே நீங்கள் வந்து பரதகுலத் தோன்றலான எங்கள் சக்கரவர்த்தி இந்த உடல்நலக் குறைவிலிருந்து மீண்டு வர வழி செய்வீர்கள் என்பதும் அவள் நம்பிக்கை!”

“அம்மா, அரச குடும்பத்தினரோடு என்னைத் திணித்துக் கொண்டு உறவாட நான் விரும்பவில்லை!” என்றார் த்வைபாயனர்.

ஆனால் அந்தப் பெண்மணி மிகவும் கெஞ்சும் குரலில், “தயவு செய்து என்னுடன் வாருங்கள். உங்களை நான் இப்போது அழைத்துச் செல்லவில்லை எனில் ராணிக்கு மிகவும் வருத்தமாகி விடும். என்னையும் மன்னிக்கவே மாட்டாள்!” என்று வேண்டிக் கேட்டுக் கொண்டாள். த்வைபாயனர் கொஞ்சம் யோசித்தார். பின்னர், “சரி அம்மா! நான் வரவில்லை என்பதற்காக உன்னை ராணி குற்றம் சொல்லிக் கடிந்து கொள்வதை நான் விரும்பவில்லை. ஆகவே நான் உன்னுடன் வருகிறேன்.” என்றவர் அந்தப் பெண்மணியைத் தொடர்ந்து சென்றார். அரச மாளிகையை நோக்கிச் சென்ற அவர்கள் ஒரு பெரிய அறையை அடைந்தனர். அந்த அறையின் ஒரு மூலையில் அவர் மஹாராணி நின்று கொண்டிருப்பதைக் கண்டார். அவள் நின்ற தோரணையே எழிலார்ந்து இருந்தது. உருவத்தில் சிறிய உருவமாக இருந்தாலும் அழகு படைத்தவள் என்பதைப் புரிந்து கொண்டார். அங்கே ஒரு சின்னக் கோயில் இருந்தது; அந்தக் கோயிலின் கருவறையில் இருந்த விக்ரஹங்களுக்கு எதிரே அவள் வணங்கி வழிபடும் தோரணையில் அமர்ந்திருந்தாள். ஆகவே அவள் முகம் அவருக்குத் தெரியவில்லை. அதோடு அவள் அந்தக் கால வழக்கப்படி தலையிலிருந்து முகத்தை மூடி முக்காடும் போட்டிருந்தாள்.

த்வைபாயனர் மஹாராணியின் எதிரே எவ்வளவு தூரம் தள்ளி நிற்கலாமோ அவ்வளவு தூரம் தள்ளி நின்றிருந்தார். மஹாராணி அந்தத் துறவியைப் பார்த்ததும் எழுந்து கொண்டு தன்கைகளைக் கூப்பியவண்ணம் அவரை நோக்கி வர ஆரம்பித்தாள். த்வைபாயனரும் அவளை ஆசீர்வதிக்கத் தயாராகத் தன் கரங்களை உயர்த்தினார். அப்போது அவள் முகத்தை மூடி இருந்த துணி சற்றே நகர்ந்தது. தலையிலிருந்து முக்காடு நழுவித் தோளில் விழுந்தது. அவள் முகத்தைப் பார்த்த த்வைபாயனர் அதிர்ந்தே போனார் என்றால் மிகையல்ல! எல்லையற்ற திகைப்பில் அவர் கண்கள் விரிந்து முகம் ஆச்சரியத்தில் காணப்பட அவர் கைகளிலிருந்து தண்டமும் சுரைக் குடுக்கையும் நழுவிக் கீழே விழுந்தன.

 இந்த அழகான எழிலார்ந்த வடிவத்தை அவர் எப்படி மறந்தார்? இந்த வசீகரத்தை எப்படி மறந்தார்? அந்த ஒளி பொருந்திய விசாலமான கண்கள், சின்னஞ்சிறிய அழகிய பாதங்கள், ஒளி பொருந்திய அழகிய வடிவான முகம்! இத்தனை வருடங்கள் ஆகியும் அந்த முகத்திலோ, உடலிலோ கொஞ்சம் கூட வயதான தன்மை தெரியவில்லை. அந்த அழகு அப்படியே இருந்தது. த்வைபாயனரின் திகைப்பையும் அவர் கைகளிலிருந்து கீழே விழுந்த பொருட்களையும் பார்த்த மஹாராணி ஸ்தம்பித்துப் போனாள். அதே சமயம் சாதாரணமாக ரிஷிகள், முனிவர்கள் தான் ராஜ வம்சத்தினருக்கு ஆசிகள் கொடுப்பார்கள். அவர்கள் வயது குறைவாக இருந்தாலும்! ஆனால் அந்தச் சம்பிரதாயங்களை எல்லாம் மீறி இந்த இளம் துறவி மஹாராணியின் கால்களில் விழுந்து நமஸ்கரித்தான்.

இது என்ன? சரியாகவே இல்லையே! என்று யோசித்த மஹாராணி த்வைபாயனர் எழுந்து நின்று கொண்டதும் அவர் முகத்தைப் பார்த்தாள். உடனே அவளுக்குப் புரிந்து விட்டது. இது அவள் கிருஷ்ணா தான்! அதே சந்தோஷத்தில் மிதக்கும் கண்கள், எப்போதும் புன்னகையுடன் இருக்கும் முகம், பெரியோர்களிடம் காட்டும் மரியாதை! ஒளி பொருந்திய கண்களிலிருந்து பெருகும் கருணை! அங்கே அப்போது இருந்த ஊழியர்களையும் மறந்தாள் மஹாராணி! அவள் கிருஷ்ணன்! அனைத்து சம்பிரதாயங்களையும் தான் ஒரு மஹாராணி என்பதையும் மறந்து, “கிருஷ்ணா!” என்று கூவினாள்.

த்வைபாயனரால் பேசவே முடியவில்லை. ஆகையால் விம்மி அழுதார். நடப்பவற்றைப் பார்த்து நிலைமையின் தீவிரத்தை உணர்ந்து கொண்ட ஊழியர்கள் ஒருவரும் சொல்லாமலேயே அங்கிருந்து வெளியேறினார்கள். தாயும் மகனும் தனித்து விடப்பட்டனர்.

“கிருஷ்ணா, உன் தந்தை மதிப்புக்குரிய முனி, பராசரர் இப்போது எங்கே?”

“தாயே, அம்மா, அவர் இறந்து நான்கு மாதங்கள் ஆகின்றன! அவர் ஓநாய்களால் கொல்லப்பட்டார். அவருடைய ஆசிரமம் இருந்த சாம்பல் பிரதேசத்தை அவர் சென்று பார்த்தபோது ஓநாய்கள் அவரைத் தாக்கின.”

“கிருஷ்ணா! நீ உன் பிரமசரிய விரதத்தை அவர் மேற்பார்வையில் முடித்துவிட்டாயா?”

“ஆம், தாயே!”

“நீ தனியாகவா இருக்கிறாய்?”

“தாயே, பைலரை உங்களுக்குத் தான் தெரியுமே! அவர் என்னுடன் இருக்கிறார். ஆனால் இப்போது அவர் என்னுடன் வர முடியவில்லை. அவருக்கு மிகவும் மோசமாகக் காயங்கள் ஏற்பட்டு உடல் நலம் பாதிக்கப் பட்டிருக்கிறார். அவரை ஓர் ஆசிரமத்தின் மனிதர்களின் கண்காணிப்பில் விட்டு வந்திருக்கிறேன். தாயே, இத்தனை வருடங்கள் ஆன பின்னரும் தாங்கள் என்னை அடையாளம் தெரிந்து கொண்டீர்களா?”

“மகனே, உன்னுடைய முகம் எனக்கு மறக்குமா? தெளிவாக நினைவில் உள்ளது! நான் அடிக்கடி கனவிலும் நினைவிலும் உன் முகத்தைப் பார்த்து வருகிறேன். எப்படி உன்னுடைய சிரிக்கும் கண்களை மறப்பேன்? உன் புன்னகையை எப்படியப்பா மறக்க இயலும்? நான் பார்த்த மனிதர்களிலேயே இவ்வளவு கருணையுடன் சிரிக்கும் ஒரே மனிதன் நீ தானே அப்பா! உன்னை நான் மறப்பேனா! ஆனால், மகனே, நீ என்னை நினைத்தாயா? என் நினைவு உனக்கு வந்ததா?” என்று மஹாராணி மூச்சு விடாமல் கேட்டாள்.

“தாயே, தாயைச் சேய் மறக்கலாகுமோ? நான் உங்களை மறக்கவே இல்லை! தந்தை பித்ருலோகம் போன பின்னால் நான் உங்களைத் தேடிக் கொண்டு கல்பிக்குச் சென்றிருந்தேன்.”

“கல்பியில் உள்ள மனிதர்கள் சௌக்கியமாக இருக்கின்றனரா?”

“நான் கிராமத்தில் இருந்த அனைவரையும் சந்தித்தேன். அவர்கள் கூறியவற்றிலிருந்து நீங்கள் ஓர் அரசனுடன் சென்று விட்டதை அறிந்தேன். ஆனால் எங்கே என்று அவர்களுக்குத் தெரியவில்லை. தாத்தாவும், பாட்டியும் கூட மற்ற மனிதர்களோடு அங்கிருந்து சென்று விட்டார்கள் என்றும் அறிந்தேன்.”