Saturday, September 24, 2011

கண்ணனைக் காப்பாற்றுங்கள்!

“அத்தையார் இவை அனைத்தையும் அறிய நேர்ந்தது எவ்வாறோ?” கண்ணன் வினவினான்.

“கோவிந்தா, சிசுபாலனிடம் நான் ருக்மிணியை மணமுடிக்கும் உத்தேசத்தைக் கைவிடுமாறு வற்புறுத்தினேன். அப்போது அவனே இவற்றை என்னிடம் கூறினான். கண்ணா, சக்கரவர்த்தி ஜராசந்தனை நீ அவமானப் படுத்தி ஓட ஓட விரட்டியதையும், வலுக்கட்டாயமாக சுயம்வரத்தைத் தள்ளிப்போடச் செய்ததையும், அவன் அணியை இரண்டாக உடைத்ததையும் அவன் ஒரு நாளும் மறக்கமாட்டான் என்றும் சிசுபாலன் என்னிடம் கூறினான். அவன் வாழ்நாளிலேயே இவ்வளவு பெரிய அவமானத்தைக் கண்டதில்லையாம். கண்ணா, ஜராசந்தன் உன்னைக் குறித்துச் சொல்கையில், கண்ணன் உயிருடன் இருந்தாலும் சரி,இல்லை எனினும் சரி என்று குறிப்பிட்டது எனக்கு என்னவோ நல்லதொரு சகுனமாய்ப் படவில்லை. “ சேதி நாட்டரசிக்கு முகம் வாடியது.

“எனக்கும் பிடிக்கவில்லைதான் அத்தையாரே! ஆனால் அது எப்படிப்பட்ட பொருளில் சொல்லப்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்கிறேன்.” கண்ணன் யோசனையுடன் கூறினான். கண்ணனின் உடல் ஒரு முறை குளிர் சுரம் வந்தது போல் நடுங்கியது. தன்னைச் சுதாரித்துக்கொண்டான். ஜராசந்தனின் திட்டம் என்னவாக இருக்கும் என்பதை அவனால் புரிந்து கொள்ள முடிந்தது. கண்ணனுக்கெதிராக அணி திரட்டவோ, சதி செய்யவோ இப்போது அவன் முனையப் போவதில்லை. ஆர்ய வர்த்தத்தின் அரசர்களையும் பிரிக்கப் போவதில்லை. ஏனெனில் சேதி நாட்டரசன் தாமகோஷன், அவந்தி நாட்டரசன், போஜ நாட்டரசன் பீஷ்மகன் ஆகியோரிடம் அவனுக்கு இப்போது நம்பிக்கையும் இல்லை. ஷால்வன் ஒருவன் துணையுடன் இப்போது தன்னந்தனியாகத் தன் வேலையை ஆரம்பிக்கப் போகிறான். வேறு எவரையும் இப்போது அவன் நம்பவில்லை. ம்ம்ம்ம்ம்ம்…… சரிதான்…… இப்போது புரிகிறது. சித்தப்பா விதுரர் பீமனிடம் ரகசியமாய்க் கூறி அனுப்பிய செய்தி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததே! இரண்டுக்கும் உள்ள தொடர்பும் இப்போது விளங்குகிறது. சால்வனோடு ஜராசந்தனின் தனிப்பட்ட சந்திப்புக்கும், சால்வன் கால யவனனைச் சந்தித்ததற்கும், இப்போது கால யவனன் படை திரட்டுவதில் முனைந்திருப்பதற்கும் இதுதான் அர்த்தமா?? ஆஹா!

தன்னுடைய பழைய திட்டத்தைக் கையில் எடுத்துவிட்டான் ஜராசந்தன். ஒரு எதிரியை அடியோடு நசுக்க வேண்டுமென்றால் அவனை நாற்புறமும் சூழ்ந்து கொள்ள வேண்டும் என்று ஆரம்பித்துவிட்டான். இதன் மூலம் எதிரியை வேரோடு அறுத்து அழித்து ஒன்றுமில்லாமல் பண்ணிவிடலாம். கிழக்கிலிருந்து ஜராசந்தன் வந்தானெனில் தெற்கு மற்றும் மேற்குத்திசைகளிலிருந்து முறையே சால்வனும், காலயவனனும் வருவார்கள். எந்தவிதமான வெளி நாட்டு உதவிகளும் மதுராவின் யாதவர்களுக்குக் கிட்டாமல் செய்வதற்கு இதைவிடச் சிறந்ததொரு திட்டம் இல்லை. இதன் மூலம் யாதவர்களை அடியோடு அழித்துவிடலாம். இது நிச்சயமாய்க் காட்டுமிராண்டித்தனமே. ஆனால் ஜராசந்தனிடம் வேறு எதையும் எதிர்பார்க்க இயலாது. ஆர்ய அரசர்கள், சக்கரவர்த்திகள் போன்றோரிடம் நெருங்கிய தொடர்பு, மண உறவு வைத்துக்கொண்டாலும் ஜராசந்தனுக்கு ஆரியர்களையோ அவர்கள் அரசாட்சி முறைகளையோ, அரச தர்மத்திற்கும், நீதிக்கும், நேர்மைக்கும் அவர்கள் கொடுக்கும் முக்கியத்துவமோ குடிமக்களை மதிக்கும் மாண்போ சிறிதும் பிடிக்காது என்பதைப்பல முறை கிருஷ்ணன் உணர்ந்திருக்கிறான். கால யவனனைத் தூண்டி விட்டதன் மூலம், அவனுக்கு மேற்குப் பிராந்தியம் முழுவதும் அவனே ஆட்சி செய்து கொள்ளலாம் என்ற ஆசையைக் கொடுத்திருப்பான். இதன் மூலம் மேற்குப் பிராந்தியத்தின் ஆர்ய வம்சத்து அரசர்களை இந்தப் பிசாசு அரசன் கொடுமைக்கு ஆளாக்கலாம். மேலும் மதுராவின் கடைசி யாதவன் வரை அழித்து ஒழித்தும் விடலாம்.

மதுரா! என் அருமைத் தாய் நகரம்! என்னை இவ்வுலகுக்கு அளித்த நகரம்! என்னைப் பெற்ற தாய், தந்தையர் அவர்களின் மூதாதையர் எனப் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்து வரும் அற்புத நகரம்! இது தான் தன்னுள் எத்தனை எத்தனை சந்தோஷங்களையும், துக்கங்களையும் அடக்கி உள்ளது! இதன் ஒவ்வொரு கட்டிடமும், ஒவ்வொரு கல்லும் எத்தனை எத்தனை உணர்ச்சிகளைப் பிரதிபலிக்கிறது. நகரின் ஒவ்வொரு மூலை முடுக்கும் எத்தனை எத்தனை காதலர்களையும், எத்தனை எத்தனைப் புதுமணத் தம்பதிகளையும் கண்டிருக்கும்? அவர்களின் தனிமையையும், உல்லாசத்தையும் கண்டு ஆனந்தப் பட்டிருக்கும்? இந்த நகரின் யாதவர்கள் எவற்றில் குறைந்தவர்கள்? யாருக்கும் எந்தக் கெடுதலும் செய்யாமல் மாபெரும் சக்கரவர்த்தியின் வம்சத்தில் வந்தாலும் தங்களுக்கு விதிக்கப்பட்டதை அப்படியே ஏற்றுக்கொண்டு மக்கள் தொண்டே முக்கியம் எனக்கருதி வாழ்ந்து வருகின்ற என் மூத்தோர், என் குலப் பெரியோர்! அனைவருக்கும் நான் செய்யும் கைம்மாறு இதுதானா? என்னை அன்றோ அனைவரும் தங்களைக் காப்பாற்ற வந்த ரக்ஷகனாய்க் கருதுகின்றனர்! அந்த ரக்ஷகன் ஆன என்னால் அல்லவோ இவ்வளவு பெரிய அபாயம் இந்த நகருக்கும், நாட்டிற்கும் அனைத்து யாதவக் குலத்துக்குமே ஏற்பட்டுள்ளது!

இதை எப்படி நான் முறியடிப்பேன்! எந்த வழியும் தெரியவில்லையே! யாரிடம் உதவி கேட்பது?? ம்ம்ம்ம்ம்…இல்லை,….இல்லை….. யாரிடமும் கேட்க முடியாது; கேட்கவும் கூடாது. என்னால் ஏற்படப் போகும் இம்மாபெரும் விபத்து என்னாலேயே நிகழாமல் தடுக்கப்படவேண்டும். இதை இப்போது உடனடியாகத் தணிக்கவோ குறைக்கவோ முற்படாமல் இருப்பதும், எவரிடமும் இது குறித்துப் பேசாமல் இருப்பதுமே நல்லது. ம்ம்ம்ம்விதி! விதி எவரை விட்டது. நடப்பது நடக்க வேண்டியதுதான். அந்த நேரம் வரும்வரை காத்திருக்கத்தான் வேண்டும். ஹஸ்தினாபுரத்திலிருந்து எந்த உதவியையும் எதிர்பார்க்க முடியாது. அங்கே அவர்களுக்குள்ளேயே ஒருவருக்கொருவர் பொறாமை, கோபம், பழி வாங்கல்! என்னுடைய அத்தை வழி சகோதரர்களான பாண்டவர்களுக்குத் தங்களை இவற்றிலிருந்து காத்துக்கொள்ளவே நேரம் சரியாக இருக்கும். பாஞ்சால அரசன் துருபதனுக்கோ பாண்டவர்களால் ஏற்பட்ட அவமானத்தின் காரணமாய் அவர்களின் உறவின்முறை எவருடனும் தொடர்பு வைத்துக்கொள்ளப் பிடிக்காது. மற்ற எந்த அரசர்களுக்கும், சிற்றரசர்களுக்கும் ஜராசந்தனை எதிர்க்கும் அளவிற்குத் துணிவும், வல்லமையும் இல்லை.

1 comment:

priya.r said...

இந்த அத்தியாயம் 98 ஐ படித்து விட்டேன் கீதாமா
கண்ணன் யோசனை மற்றும் திட்டங்களை இந்த பதிவில் தெரிந்து கொள்ள முடிந்தது ..