கண்ணன் உத்தவனைப் பார்த்து, “உத்தவா, அனைவரும் சிரத்தையின்றி, நம்பிக்கை இழந்து காணப்படுகின்றனர்.  தர்மம் ஜெயிக்கும் என்றே எண்ணவில்லை. நீயுமா அப்படி எண்ணுகிறாய்?” என்று கேட்டான்.
“இல்லை கண்ணா! நான் நம்பிக்கை இழக்கவில்லை;  எல்லாவற்றுக்கும் மேல் உன்னிடம் எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது.”
“என்றால் என்னைப் பற்றிக் கவலைப்படாதே உத்தவா!  ஆனால் இந்த மக்களிடம் நான் நம்பிக்கையை மீண்டும் உண்டாக்கவேண்டும்.  தர்மம் ஜெயிக்கும் என்பதை அவர்கள் நம்ப வேண்டும். அதைச் செய்யவில்லை எனில் நான் எதற்காகப் பிறந்திருக்கிறேனோ அதற்குப்பொருளே இல்லாமல் போய்விடும்.  நான் வாழ்வதற்கும் அர்த்தமில்லாமல் போய்விடும்.”
“எனக்குப் புரிகிறது கிருஷ்ணா!”
“உத்தவா, பின்னர் என்னை எதுவும் கேட்காதே!  நான் என்ன செய்யப்போகிறேன், ஏன் செய்யப் போகிறேன், எப்படி என்றெல்லாம் ஆராயாதே!  தந்தையையும், தாயையும் நன்றாகக் கவனித்துக்கொள்.  என் சார்பாக அவர்களை நீ நமஸ்கரித்து ஆசிகளைப் பெற்றுக்கொள்.  பெரிய அண்ணா பலராமனுக்கும், மற்றவர்களுக்கும் நான் எப்போதுமே அவர்களுடனே இருப்பேன் எனவும் அவர்களைக் கைவிடமாட்டேன் என்றும் உறுதியாய்ச் சொல்.  மேலும் முக்கியமான செய்தி என்னவெனில், இதை யார் விருப்பமுடன் கேட்கிறார்களோ அவர்களுக்கு மட்டும் சொல்.  கிருஷ்ணனை விடவும் தர்மம் உயர்ந்தது;  கண்ணன் காப்பாற்றுகிறானோ இல்லையோ, தர்மம் நிச்சயம் கைவிடாது; காப்பாற்றும்.  அது ஒன்றே யாதவர்களைத் தற்போது காக்க வல்லது.  அதற்காகக் கண்ணன் தன் உயிரைக் கூடக் கொடுக்க வேண்டுமானால் கொடுப்பான்.  அப்படி என் உயிரைக் கொடுப்பதன் மூலம் அதிசயம் நிகழ்ந்தால் அதுவும் ஏற்புடையதே. அவர்களை அது நம்பிக்கை கொள்ள வைக்கும்.”
இதைச் சொன்ன கிருஷ்ணன் உத்தவனை இறுகத் தழுவிக்கொண்டான்.  பின்னர் தன் ஆபரணங்களையும், ஆயுதங்களையும் உத்தவனிடம் கொடுத்துவிட்டு ஒரு தடியை மட்டும் எடுத்துக்கொண்டு நீண்ட அடிகளை வைத்து வேகமாய் நடந்து இருளில் மறைந்தான்.  மறுநாள் காலை மதுரா நகரமே அதிர்ந்தது.  கண்ணன் இரவோடிரவாக ஊரை விட்டே ஓடிவிட்டான். அவன் எங்கே போயிருக்கிறான் என்பதை எவரும் அறிய மாட்டார்கள்.  பயங்கரக் காட்டின் மத்தியில் மேய்ந்து கொண்டிருந்த கால்நடைக்கூட்டம், சிங்கத்தின் கர்ஜனையைக் கேட்ட மாத்திரத்தில் எவ்வாறு பயந்து இங்குமங்கும் ஓட நினைத்து ஓடுமோ அவ்வாறே மதுராவின் யாதவர்களும் இங்குமங்கும் ஓடினார்கள்.  மாட்டுக்கூட்டத்தை அடக்கி வழிக்குக் கொண்டு வர இடையன் இல்லாது போனது போல இவர்களுக்கும் தலைமை தாங்கக் கண்ணன் இல்லை.  ஒருவருக்கொருவர் இனி என்ன என்று பேசிக்கொண்டார்கள்.   ஜராசந்தன் வந்துவிடுவான்; கால யவனன் வந்துவிடுவான்; இதை எல்லாம் காட்டிலும் மேலாக அச்சமும், பீதியும் அவர்களை ஆட்டிப் படைத்தது. “கண்ணன் என்னமோ தப்பி ஓடிவிட்டான்!  என்ன ஆகப்போகிறதோ நமக்கெல்லாம்~!” இந்தக் கவலையே அவர்களை ஆட்டிப் படைத்தது.
கண்ணனால் எந்தவிதமான பிரச்னைகளையும் எதிர்கொள்ள இயலாது; சத்ராஜித்தும் அவன் நண்பர்களும் திட்டமாய்க் கருதினார்கள்.  எந்த ஆபத்தாய் இருந்தாலும் கண்ணன் தன்னை எப்படியோ காப்பாற்றிக்கொள்வான்.  அப்படித் தான் முன்னர் ஓடிப்போனான்; அதே போல் இப்போது அவன் ஓடிவிட்டான். நாம் அவனை நம்பிப் பிரயோஜனம் இல்லை.  நமக்கு இப்போது ப்ருஹத்பாலன் ஒருவனே கதி! வேறு வழியில்லை; முன்னர் ஒருமுறை ப்ருஹத்பாலன் ஜராசந்தனிடம் பேசி அனைவரையும் காப்பாற்றினான்.  ஆகவே இப்போதும் அவனிடமே செல்ல வேண்டும்.  அனைவரும் ப்ருஹத்பாலனிடம் சென்று தங்கள் நட்பைப்புதுப்பித்துக்கொள்ள வேண்டினார்கள்.  அதோடு ஜராசந்தனிடமும் அவர்களுக்காகப் பேசச் சொன்னார்கள். ஆனால் ப்ருஹத்பாலனுக்குத் தன்னுடைய உண்மையான நிலைமை நன்கு தெரியும்.  தான் எந்தச் செயலையும் சுயமாய்ச் செய்ய முடியாது என்றும் செயல் இழந்த நிலையில் இருப்பதும் அறிவான்.  ஆனால் அதற்காக இவர்கள் எதிரில் தன் உண்மை நிலையைக் காட்டிக்கொள்ள முடியுமா!  அவனால் இயன்றதெல்லாம் தன் முன்னாள் நண்பர்களைப் பார்த்துக் கோபத்தோடு கத்துவது ஒன்றே.
“போங்கள், இங்கிருந்து ஓடுங்கள், உங்கள் கோவிந்தன், கோபாலன், கிருஷ்ண வாசுதேவன், இன்னும் எத்தனை பெயர்கள் அவனுக்கு!  அவனைக் கேளுங்கள் பாதுகாப்பு.  நன்றாய்ச் செய்து கொடுப்பான்.  அவனைத் தானே உங்களைக்காக்க வந்த ரக்ஷகனாக நினைத்தீர்கள்! காப்பான். போய்க் கேளுங்கள்.”  அனைவருக்கும் ஏமாற்றமும், கோபமும் பொங்க ப்ருஹத்பாலனைத் திட்டிவிட்டு அங்கிருந்து நகர்ந்தனர்.
கண்ணன் இருந்தவரையிலும் தங்களுக்கு உயிர் தப்ப ஊசிமுனை அளவு சந்தர்ப்பமாவது இருக்கிறது என நினைத்த சாத்யகி, விராடன் போன்றவர்களுக்கு நிலைமையின் பயங்கரம் இப்போது புலப்படத் திகைத்தனர்.  யாதவத் தலைவர்களும் கிருஷ்ணன் தங்களைக்  கைவிட்டுவிட்டானே என்ற கோபத்தில் என்ன செய்வது எனப் புரியாமல் திகைத்தனர்.  அனைவரும் பலராமனிடம் சென்று கேட்க அவனுக்குக் கோபம் வந்தது.  கண்ணனிடம் நம்பிக்கை இல்லாமல் இருப்பது குறித்துக் கோவித்துக் கத்தினான் பலராமன். சாத்யகியைப் பார்த்து, “நேற்று அவனைத் தனிமையில் விட்டுவிட்டு வேடிக்கை பார்த்தீர்களே! இப்போது மட்டும் கண்ணன் தயவு தேவையா உங்களுக்கெல்லாம்! கோழைகள்! கோழைகள்!  நீங்களே அவனைத் தேடிக்கண்டுபிடியுங்கள்.  அல்லது காலயவனன் கைகளிலோ, ஜராசந்தன் கைகளிலோ மாட்டிக்கொண்டு செத்துத் தொலையுங்கள்.  அதுதான் உங்களுக்குச் சரியான தண்டனை!” என்று கத்தினான்.
“அண்ணா, பெரிய அண்ணா! நீங்களே இப்படிச் சொன்னால் எப்படி!  இந்தக் கஷ்டமான நிலையில் நீர் தான் எங்களுக்குத் தலைமை தாங்கி வழிநடத்த வேண்டும்.” சாத்யகி கெஞ்சினான்.
“அப்படி எதுவும் நான் செய்வேன் என நினைக்காதே சாத்யகி!  நான் கூடிய சீக்கிரமே கண்ணன் இருக்குமிடம் போய்ச் சேர்ந்துவிடுவேன்.  அவன் நிச்சயமாக ஆபத்தை நோக்கியே சென்றிருக்கிறான்.  நீங்களெல்லாம் அங்கே வருவதற்குத் தகுதி உள்ளவர்களே அல்ல.  இங்கே உங்களோடு இருப்பதைக் காட்டிலும் நான் அங்கே கண்ணனோடு ஆபத்தைச் சந்திக்கவே விரும்புகிறேன்.” பலராமன் கோபம் பொங்க ஆவேசத்துடன் கூறினான்.  சாதாரண மக்களோ கண்ணனைக் கடவுளாகவே நினைத்ததால் அவன் ஒருவனாலேயே தங்களைக்காக்க முடியும் என எண்ணி இருந்தவர்களுக்கு இப்போது அவன் நகரிலேயே இல்லை என்றதும், விதி தங்களைத் துரத்துவதை எண்ணித் துன்புற்றனர்.  மூத்த யாதவத் தலைவர்களாலும் எதுவும் செய்ய இயலவில்லை என்று நினைத்து நொந்து வருந்தினார்கள்.   வேறொரு சமயம் இதெல்லாம் கண்ணனால் தானே வந்தது; இப்போது அவன் மட்டும் தப்பிவிட்டானே எனக் கோபம் கொண்டனர்.  சில நாட்கள் முன்னர் தான் இதே கண்ணனைப் பாராட்டி அவர்கள் அனைவரும் கூறிய வார்த்தைகள் அவர்களுக்கு மறந்தே போனது.
 
1 comment:
கண்ணனையே சந்தேக கண் கொண்டு பார்க்கும் மக்களை என்ன சொல்வது :(
Post a Comment