Tuesday, October 18, 2011

இந்தக் கண்ணனைப் போலன்பு கொண்டவர் வேறுளரோ?

மதுராவில் சந்தோஷ ஆரவாரம். அனைவருக்கும் இனம் புரியாத நிம்மதி. கண்ணன் வந்து விட்டான். வந்தே விட்டான். இனி இல்லைத் துயரம்! படமுடியாதினித் துயரம் என இருந்தோர் அனைவரும் கண்ணனின் பாஞ்சஜன்யத்தின் ஒலி கேட்டுப் பரவசம் அடைந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள், சிறுவர், சிறுமியர், வயோதிகர் என அனைவரும் ஓடோடி மதுராவின் கோட்டை வாயிலுக்குக் கண்ணனை வரவேற்கச் சென்றனர். ஜெயஶ்ரீ கிருஷ்ணா! என்ற கோஷம் கடல் அலையைப் போல் ஒலித்தது. அவர்களின் ஆட்டம், பாட்டம், கொண்டாட்டத்திற்கு இடையில் ஒரு உருவம் கையில் பிடித்திருந்த தண்டாயுதத்தோடு மெல்ல மெல்ல நடந்து வருவதைக் கண்டனர். யார் அது?? கண்ணனா? ஆம்! கண்ணனேதான். அவர்களை நோக்கித் தான் வருகிறான். ஆனால் என்ன இது? இது முற்றிலும் மாறுபட்ட கிருஷ்ணன்! அவர்கள் எப்போதும் பார்க்கும் கிருஷ்ணன் அல்ல. ஏதோ புனிதத்தைத் தாங்கி வருபவன் போல் காணப்பட்டான். அவனைச் சுற்றி ஒரு புதிய சூழ்நிலை காணப்படுகிறதோ? கொஞ்சம் கடுமை; அதிகமாய் நன்றி, விசுவாசம், விநயம். கண்ணன் அங்கே வந்த உக்ரசேனரின் கால்களில் விழுந்து வணங்கினான். தேவகி அம்மா சந்தோஷம் தாங்க முடியாமல் அழ, வசுதேவரும், உக்ரசேனரும் கண்ணனை வாரி எடுத்துக்கட்டி அணைத்தனர். மற்றவரெல்லாம் கண்ணனின் காலடிகளில் விழுந்து வணங்கினார்கள். கண்ணன் கண்களில் இனம் புரியாத் துயரம்.

"மாட்சிமை பொருந்திய அரசே, மதிப்புக்குரிய தந்தையே, என் விருப்பத்திற்கு முற்றிலும் மாறாக நான் திரும்பி இருக்கிறேன். நீங்கள் அனைவரும் காட்டிய விசுவாசமும், நம்பிக்கையும் என்னைக் கட்டி இழுத்து வந்துவிட்டது. "

"உன்னை விட்டுப் பிரிந்து எங்களால் இருக்க முடியவில்லை கிருஷ்ணா! என்ன நடந்தாலும் சரி, எங்களுக்கு உன் இருப்பு மிக அவசியமான ஒன்று." உக்ரசேன மஹாராஜா முழு மனதோடு கூறினார். "யாதவ குலத் தலைவரே! தர்மம் ஜெயிக்கும் என்ற நம்பிக்கை இல்லாமல் நம்மால் வாழ முடியாது. அதற்காக நாம் நம் உயிரையும் கொடுக்கத் தயாராக இருக்க வேண்டும். " அனைவரும் சிரிப்புக் கலந்த அழுகையோடு கண்ணனை மாளிகைக்கு அழைத்து வந்தனர். விசித்திரமாகக் கண்ணன் வாயைத் திறந்து எதுவுமே பேசாமல் அமைதி காத்தான். உக்ரசேன மஹாராஜா மந்திராலோசனை சபையைக் கூட்ட உத்தரவிட்டார். அனைத்து யாதவத் தலைவர்களுக்கும் செய்தி போய், அரண்மனையின் முன் முற்றம் மக்கள் கூட்டத்தாலும், தலைவர்கள் கூட்டத்தாலும் நிரம்பி வழிந்தது. பொது மக்களில் பலரும் கண்ணனை ஒருமுறையாவது பார்த்துவிடவேண்டும் என்ற ஆவலில் வந்தனர். ஆனால் அவர்கள் கண்களைக் கண்ணன் அணிந்திருந்த நாடோடிகளின் உடை உறுத்தியது. கண்ணனை பழையபடி கிரீடத்தில் மயில்பீலியைச் சூடியவண்ணம் மஞ்சள் பீதாம்பரம் அணிந்தே பார்க்க விரும்பினார்கள். நல்ல வேளையாக அரசவைக்கு வருவதாலோ என்னமோ கண்ணனும் முறைப்படியான பழைய உடையையே உடுத்தி வந்தான். தன்னுடைய சொந்த ரதத்தை ஓட்டிக்கொண்டு பலராமன், உத்தவன், சாத்யகி துணைக்கு வரக் கண்ணன் வந்து சேர்ந்தான். அவனைக் கண்டதுமே அனைவருக்கும் உடலில் பலமும், மனதில் வலுவும் ஏற்பட்ட எண்ணம். எதிர்க்க முடியாததொரு மாபெரும் சக்தியின் வடிவமாய்க் காட்சி அளித்தான்.

தங்களுக்குக் காத்திருக்கும் ஆபத்தைக் கூட மறந்த மக்கள், "ஜெயஶ்ரீ கிருஷ்ணா!" என்று கோஷமிட்டனர். கைகளைக் கூப்பியவண்ணம் பதில் வணக்கம் தெரிவித்தான் கண்ணன். அதில் விநயம் தெரிந்தாலும், கொஞ்சம் கடுமையாகவே அனைவரையும் நோக்கிய வண்ணம், " வெற்றி கிருஷ்ணனுக்கு அல்ல; தர்மத்திற்குத் தான் வெற்றி! தர்மம் காக்கப்பட்டாலே வெற்றி அடைந்ததாய்ச் சொல்லலாம்." என்றான். மந்திராலோச்சனை தொடர்ந்தது. அனைவரும் கண்ணனை வரவேற்றுப் பேசுகையில், எப்போதும் மலர்ந்த முகத்துடன் காணப்படும் கிருஷ்ணனுக்குப் பதிலாகக்கடுமையான முகத்தோடு, எந்த நிமிடம் சக்ராயுதத்தைப் பயன்படுத்துவானோ என்ற தோற்றத்தில் தர்மத்தை ரக்ஷிக்க வந்த கோலத்தில் காட்சி அளித்தான். உக்ரசேன மஹாராஜா கண்ணனிடம் யாதவர்கள் அனைவரும் கொண்ட அவநம்பிக்கைக்கு மன்னிப்புக் கேட்டுக்கொண்டார். கடன் அனைவரின் சார்பாகவும் இதைக் கூறினான். மேலும் தொடர்ந்து, "கிருஷ்ண வாசுதேவா, இறப்பிலும், பிறப்பிலும், வெற்றியிலும், தோல்வியிலும் நாங்கள் அனைவரும் உன்னோடே இருக்கிறோம். இருப்போம். இனி எங்களைப் பிரிந்து போக நினையாதே!:" என்றான்.

கண்ணன் அந்த நேரத்தின் முக்கியத்துவத்தை நன்கு உணர்ந்தான். அனைவரையும் நமஸ்கரித்தான். "மரியாதைக்குரிய பாட்டனாரே, தந்தையே, நான் திரும்பி வரவேண்டும்; உங்களோடு இருக்க வேண்டும் என நீங்கள் நினைத்தீர்கள். நான் வந்துவிட்டேன். இனி நீங்களே என்னைப் பிரிந்தாலும் நான் பிரிய மாட்டேன்." என்றான்.

2 comments:

Ashwin Ji said...

பட்சாச்ச்ச்ச்....

priya.r said...

ஆஹா! கண்ணன் வந்தான் எங்கள் கண்ணன் வந்தான் என்று பாட தோன்றுகிறதே !

பதிவுக்கு நன்றி கீதாமா