Thursday, October 27, 2011

என் குடும்பம் வண்ணமுறக் காத்திடுவான்!

"இது ஒன்றே நாம் தப்பிக்க வழி. காலயவனனையும், ஜராசந்தனையும் ஒரே நேரத்தில் எதிர்கொள்ளலாம்." கண்ணன் கூற, "ஒருவேளை நமக்கு இதில் வெற்றி கிட்டவில்லை எனில்?" கத்ருவுக்கு சந்தேகம் பிறந்தது. " தளபதியாரே, நாம் இறக்கப் போவது ஒரே முறைதான். " கண்ணன் குரலில் அதீதமான தன்னம்பிக்கை தெரிந்தது. அதே சமயம் மற்றவர்களுக்கும் தன்னம்பிக்கையை ஊட்ட முயன்றான். "நம்மிடம் வேறு வழியே இல்லை; இதுவே எல்லாம் வல்ல மஹாதேவர் நமக்குக் காட்டி இருக்கும் நல்வழியென நான் நம்புகிறேன். இந்த வழியில் செல்லுகையிலும் நாம் இறக்க வாய்ப்பு இருந்தாலும்; உயிர் பிழைத்திருக்க அதிக வாய்ப்பு இருப்பதால், ஒரு முயற்சி செய்யலாம்." கண்ணன் தீர்மானமாய்ச் சொன்னான். அவன் கண்கள் பிரகாசித்தன. அனைவரையும் சுற்றுமுற்றும் பார்த்தான். எல்லார் முகத்திலும் நம்பிக்கைக் கீற்று மின்னலெனப் பளிச்சிடுவதை உணர்ந்தான். மேலே தொடர்ந்து, "பெரிய அண்ணா பலராமருக்கும், உத்தவனுக்கும் குஷஸ்தலைக்குச் செல்லும் வழி நன்கு தெரியும். வழியில் நாம் பாலவனங்கள், காடுகள், சதுப்பு நிலக்காடுகள், புதைகுழிகள் எனப் பலவகையான இயற்கை ஆபத்துகள் காத்திருக்கின்றன. அனைத்தையும் எதிர்கொள்ள வேண்டும். ஆனால் பலராமனும், உத்தவனும் தலைமை வகித்து வழிநடத்திச் செல்வதால் நாம் நம்பிக்கை இழக்கவேண்டாம். சரியான பாதையில் அழைத்துச் செல்வார்கள். " கண்ணன் உறுதி கொடுத்தான்.

"நீ? கண்ணா! நீ என்ன செய்யப் போகிறாய்?"உக்ரசேனர் கேட்டார். "நான் என்னுடைய வார்த்தையைக் காப்பாற்றப் போகிறேன் தாத்தா. இந்த மதுராவின் கடைசிக் குடிமகன் நகரை விட்டு வெளியே செல்லும்வரை காத்திருப்பேன். அதன் பின்னரே மதுராவை விட்டு வெளிவருவேன். உங்கள் பின்னாலேயே வந்து உங்களுக்குப் பாதுகாப்புக் கொடுத்துவருவேன். தேவைப்பட்டபோது முன்னிருப்பேன். தேவை எனில் காலயவனனைத் தன்னந்தனியாகச் சந்திக்கவும் தயாராக இருக்கிறேன். யாதவர்களில் ஒருவருக்கேனும் அவர்களால் பாதிப்பு ஏற்பட்டால் அதன் பின்னர் ஒரு கணம் கூட நானும் உயிர் தரியேன். மாட்சிமை பொருந்திய அரசே, உங்கள் கட்டளைகளைக் கொடுங்கள்; ஆசிகளைத் தாருங்கள். நமக்கு நேரமே இல்லை. விரைவில் கிளம்பவேண்டும். வரும் திங்களன்று காலை சூரிய உதயத்திற்கு முன்னால், நாம் கிளம்பிவிடவேண்டும். நமக்காகப் புதியதோர் உலகம் காத்திருக்கிறது." என்றான் கண்ணன்.

பல்லாயிரக்கணக்கான கால்கள் முளைத்த பூரான்களைப் போல யாதவர்கள் கூட்டம் கூட்டமாகக் காடுகளையும், பாலைவனங்களையும் நோக்கிச் சென்றனர். முற்றிலும் புதிய நாட்டில், புதியதோர் உலகை நாடிச் சென்றார்கள். சுதந்திரமாகவும், இன்பமாகவும் வாழவேண்டி தொலைதூரத்தில் எங்கோ இருக்கும் செளராஷ்டிரக் கடற்கரையை நோக்கி நடந்தனர். சிலர் மாட்டுவண்டிகளிலும், சிலர் குதிரை வண்டிகளிலும், சிலர் ரதங்களிலும், சிலர் பல்லக்குகளிலும், பெரும்பான்மையான சாமானிய மக்கள் நடந்தும் பயணம்செய்தனர். பலராமனும், உத்தவனும் தலைமை வகித்து நடத்திச் செல்ல, உக்ரசேனர், வசுதேவர், அக்ரூரர் மற்ற யாதவத் தலைவர்கள் அனைவரும் ரதங்களில் தங்கள் குடும்பங்களோடு பயணம் செய்ய இளைஞர்களில் பலரும் குதிரைச் சவாரி செய்து வந்தனர். ஒவ்வொரு குடும்பத்திற்கும் சொந்தமான கால்நடைகள் ஒட்டகங்கள், மாடுகள், யானைகள், குதிரைகளும் அவைகளால் தூக்க முடிந்த அளவுக்குப் பொதியைத் தூக்கிச் சுமந்து பயணம் செய்தன. வேடுவர்களும், நாகர்களும் மற்றவர்களும் கூடவே பயணம் செய்தனர். அவர்களைப் பின் பக்கமிருந்து சாத்யகி தலைமையில் மற்ற யாதவ இளைஞர்கள் பாதுகாவல் செய்து வந்தனர். சின்னஞ்சிறு நாடான அக்ரவனத்தின் அரசன் சாருதேஷ்னனும் ஜராசந்தன் கைகளில் மாட்டிக்கொள்வதைவிட யாதவர்களுடன் தப்புவதே மேல் எனக் கூடவே தன் பரிவாரங்களோடு பயணம் செய்தான்.

கண்ணன் அனைவரது பாதுகாப்பையும் நன்கு கவனித்து வந்தான். கண்ணின் இமைபோலக் காத்தான். மிகவும் கஷ்டமான இந்தப் பயணத்தில் மக்கள் பல துன்பங்களை அடைந்தனர். வயது முதிர்ந்த பலரும் பயணத்தின் கடினம் தாங்காமல் இறந்தனர். நோயாளிகளால் பயணம் செய்ய இயலவில்லை. பாலைவனங்களைப் பகல்வேளைகளில் கடக்கையில் அதன் வெப்பம் தாக்கிக் கால்நடைகள் இறந்தன. மக்களுக்கும் துன்பங்கள் நேரிட்டது. என்றாலும் எஞ்சியிருந்த யாரும் நம்பிக்கையை இழக்காமல் மேலே மேலே பயணித்தனர்.

1 comment:

priya.r said...

//பல்லாயிரக்கணக்கான கால்கள் முளைத்த பூரான்களைப் போல யாதவர்கள் கூட்டம் கூட்டமாகக் காடுகளையும், பாலைவனங்களையும் நோக்கிச் சென்றனர்//உவமை வித்தியாசமாக இருக்கிறது !

புதியதொரு உலகம் காண ஆவலோடு கண்ணன் காட்டிய பாதையில் பயணிப்போம் !