Thursday, October 31, 2013

ஷகுனி, நண்பனா விரோதியா?

ஷகுனி மஹாபாரதத்தின் முக்கியக் கதாபாத்திரம்.  காந்தார நாட்டு இளவரசன்.  ஆனால் அவன் ஏன் இங்கே குரு வம்சத்தினரோடு இருந்து வருகிறான்?  ஹஸ்தினாபுரத்தில் ஏன் இருக்கிறான்?  அதைக் கொஞ்சம் பார்த்துவிட்டு மேலே தொடருவோம்.  ஏற்கெனவே சொல்லிவிட்ட நினைவு இருக்கு என்றாலும் மீண்டும் நினைவூட்டிக் கொள்வோம்.  காந்தார அரசன் சுலபன்/சுவலன், நூற்றுக்கும் மேல் பிள்ளைகளும், காந்தாரி என்ற பெண்ணும் உடையவன்.  உரிய வயதில் மகளுக்குத் திருமணம் செய்ய நினைத்தான்.  அரண்மனை ஜோதிடர்கள் இளவரசி காந்தாரியின் ஜாதகப் படி அவளுக்கு இரண்டு திருமணங்கள் என்றும், முதல் கணவன் உயிருடன் இருக்கமாட்டான், அவளை மணந்ததுமே உயிரை விட்டு விடுவான் என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்து விட்டனர்.  அப்போது தான் குரு வம்சத்து இளவரசர்களுக்குப் பெண் கேட்டு பீஷ்மர் தூது அனுப்பி இருந்தார். இந்தத் தகவல் அவர்கள் காதுகளுக்கு எட்டாவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டுமே!  சுவலன் யோசித்து முடிவெடுத்தான்.  தன் மகளுக்கு ஓர் ஆட்டுக்கடாவை மணமகனாகத் தேர்ந்தெடுத்து ஆட்டுக்கடாவோடு மகளுக்குத் திருமணமும் செய்வித்து அந்த ஆட்டை உடனே வெட்டி பலி கொடுக்கவும் கட்டளையிட்டான்.  அவ்வாறே நடந்தது.  ஆனால் இவை அனைத்தும் பரம ரகசியமாகப் பாதுகாக்கப் பட்டது.  அப்படித் தான் சுவலன் நினைத்து வந்தான். 

பின்னர் திருதராஷ்டிரனோடு காந்தாரிக்குத் திருமணம் முடிந்து அவளும் ஹஸ்தினாபுரம் வந்து விட்டாள்.  அவளுடன் வந்த சில சேடியர்களின் பேச்சின் மூலம் காந்தாரி ஒரு விதவை எனக் கேள்விப் படுகிறார் பீஷ்மர்.  இந்த விஷயம் பாண்டுவின் காதுகளிலும் விழுகிறது.  உடனே ஒற்றர்களை  காந்தாரத்துக்கு அனுப்பி உண்மை எதுவெனக் கண்டறியும்படி பீஷ்மர் கூறினார்.  ஒற்றர்களும் காந்தாரத்தில் உளவறிந்து காந்தாரிக்கு ஓர் ஆட்டுக்கடாவை மணமுடித்ததையும், அப்போதைய சட்டப்படி அவள் விதவையே என்றும் சொன்னார்கள்.  மேலும் ஆடு பலி கொடுத்ததாலேயே திருதராஷ்டிரன் உயிர் பிழைத்தான் என்றும் இல்லை எனில் அவன் உயிரிழந்திருப்பான் என்றும் ஒற்றர்கள் கூறவே பீஷ்மருக்கு உண்மையை மறைத்துக் கல்யாணம் செய்து வைத்த காந்தார அரசன் மேல் கோபம் வந்து அவர்கள் மேல் போர் தொடுக்கிறார்.  எவராலும் வெல்ல முடியாத பீஷ்மருக்குப் பாண்டுவும் துணைக்குச் செல்ல காந்தார அரசனும், இளவரசர்களும் சிறைப்பிடிக்கப்பட்டு ஹஸ்தினாபுரம் கொண்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். 

பீஷ்மருக்கு இருந்த கோபத்தில் அவர்களைக் கொல்ல வேண்டும் என நினைத்தாலும் அப்படிச் செய்வது தர்ம விரோதம் என்று புரிந்தவராய் தினமும் ஒரு கைப்பிடி அரிசி மட்டுமே அவர்கள் நூற்றுவருக்கும் உணவாக அளிக்கச் சொல்கிறார்.  ஒரு கைப்பிடி அரிசியில் ஒரு மனிதனே உண்ண முடியாதபோது காந்தார அரசனும், அவனின் பிள்ளைகள் நூறுபேரும் உண்பது எப்படி?  இன்னும் கொஞ்சம் உணவு தா எனக் கேட்பதும் அரசர்களுக்கு உரிய தர்மம் இல்லை;  அதுவும் பெற்ற மகள் வீட்டில் உணவே அளிக்கவில்லை என்றாலும் கேட்கலாம்;  தினம் ஒரு கைப்பிடி உணவு அளிக்கையில் போதவில்லை என்பதோ, சிறையிலிருந்து தப்பிப்பதோ சரியல்ல என்ற முடிவுக்கு வந்த அனைவரும், தங்களில் இளையவன் ஆன ஷகுனியைத் தேர்ந்தெடுத்து அந்தக் கைப்பிடி அரிசியைத் தினமும் அவன் ஒருவனையே உண்ணும்படி வற்புறுத்தினார்கள்.  குரு வம்சத்தினரைப் பழி வாங்க அவன் ஒருவனாவது மீதம் இருக்க வேண்டும் என்று அவனிடம் எடுத்துக் கூறினார்கள்.  ஷகுனியின் கண்ணெதிரே அவன் குடும்பத்தினர் ஒவ்வொருவராக மடிந்து வந்தனர்.  ஒரு நாள் சுவலன் ஷகுனியின் கால் ஒன்றை கணுக்காலில் அடித்து உடைத்தான்.  ஷகுனியிடம், “ இனி நீ நன்றாக முன்போல் நடக்க இயலாது;  நொண்டி நொண்டி தான் நடப்பாய்.  நொண்டும் ஒவ்வொரு முறையும் கெளரவர்களைப் பழி வாங்க வேண்டியதன் காரணத்தை நினைவு கூர்ந்து வா.  அவர்கள் உனக்கும் நம் வம்சத்துக்கும் செய்த அநீதியை ஒரு போதும் மறவாதே!” என்று கூறினான். 

ஷகுனி நன்றாக தாயம் ஆடுவதும், சூதாட்டத்தில் பெரு விருப்பம் கொண்டவன் என்பதும் தகப்பன் ஆன சுவலன் நன்கு அறிவான்.  தான் சாகும் தருவாய் நெருங்கிவிட்டதை அறிந்த சுவலன் ஷகுனியை அழைத்து, “ நான் இறந்ததும் என் கைவிரல் எலும்புகளால் தாயம் ஆடும் தாயக்கட்டையை உருவாக்கு.  அதில் முழுதும் என் ஜீவன் நிரம்பி இருக்கும்.   கெளரவர்கள் பால் கொண்ட என் ஆத்திரமும் நிரம்பி இருக்கும்.  நீ அந்த தாயக்கட்டையை உருட்டி என்ன கேட்கிறாயோ அது தான் வரும்.   நீ விரும்பும் வண்ணமே எண்ணிக்கை விழும்.  நீயே வெற்றி பெற்று வருவாய்!’  என்று கூறினான்.    சிறிது காலத்தில் சுவலனும் இறந்து போனான்.  அனைவரும் இறக்க ஷகுனி ஒருவனே மிஞ்சினான்.  அவன் மிகவும் இளையவனாக இருந்த காரணத்தாலும் காந்தார நாட்டுக்கு ஒரே வாரிசாக இருந்ததாலும் பீஷ்மரின் கண்காணிப்பில் ஹஸ்தினாபுர அரண்மனையிலேயே வளர்ந்தான்.  ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் கெளரவர்களை எவ்விதம் தான் பழி வாங்குவது என்பதிலேயே தன் மூளையைச் செலவழித்தான்.  வெளிப்பார்வைக்குக் கெளரவர்களின் நண்பன் போல் காட்டிக் கொண்டு பீஷ்மர் எப்படித் தன் குடும்பத்தை அழித்தாரோ அதே போல் அவர் குடும்பத்தின் கடைசி வாரிசு வரை அழிக்கத் திட்டம் தீட்டினான்.  அவனுக்கு துரியோதனனின் ஆத்திரம், ஆங்காரம், பேராசை, பொறாமை ஆகியன உதவி செய்தன.


18 comments:

ஸ்ரீராம். said...

காந்தாரி - ஆட்டுக்கிடா திருமணம் - இப்போதுதான் கேள்விப்படுகிறேன்! எத்தனை தெரியாத கதைகள்? எத்தனை கிளைக்கதைகள்? ஒரு வெர்ஷனில் இருப்பது இன்னொன்றில் இல்லை? எது உண்மை? எது முழுமை?

ஸ்ரீராம். said...

பீஷ்மருக்குத்தான் எவ்வளவு நல்ல குணம்? 'பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே' என்று பாட அப்போது பாரதி பிறக்கவில்லையே? இல்லையா!!!

:)))

ஸ்ரீராம். said...

சகுனி தன்னுடைய சகோதரி படும் துன்பம் தாங்காமல் கத்தியால் தன் தொடையில் தானே குத்திக் கொள்வதாய் விஜய் டிவி மகாபாரதத்தில் காட்டுகிறார்கள்.

ஸ்ரீராம். said...

//வெளிப்பார்வைக்குக் கெளரவர்களின் நண்பன் போல் காட்டிக் கொண்டு பீஷ்மர் எப்படித் தன் குடும்பத்தை அழித்தாரோ....//

:))))

வை.கோபாலகிருஷ்ணன் said...

சகுனியைப்பற்றிய பல விஷயங்கள் உங்களின் இந்தப் பதிவின் மூலமே நான் அறிந்து கொண்டேன்.

//ஒவ்வொரு நொடியும், ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் கெளரவர்களை எவ்விதம் தான் பழி வாங்குவது என்பதிலேயே தன் மூளையைச் செலவழித்தான். வெளிப்பார்வைக்குக் கெளரவர்களின் நண்பன் போல் காட்டிக் கொண்டு பீஷ்மர் எப்படித் தன் குடும்பத்தை அழித்தாரோ அதே போல் அவர் குடும்பத்தின் கடைசி வாரிசு வரை அழிக்கத் திட்டம் தீட்டினான்.//

ஆச்சர்யமாக உள்ளது.

அப்பாதுரை said...

மகாபாரதக் கதை நெளிவு சுளிவெல்லாம் பிரமிக்க வைக்கிறது.

ரிஷபன் said...

நமது விமர்சன புத்தியை ஒதுக்கி வைத்துவிட்டு மஹாபாரதத்தை படித்தால்.. படைப்பாளியின் எழுத்து நேர்த்தியையும், எங்கும் சமரசம் செய்து கொள்ளாத நேர்மையையும் ரசிக்கலாம்.

இராஜராஜேஸ்வரி said...

வெளிப்பார்வைக்குக் கெளரவர்களின் நண்பன் போல் காட்டிக் கொண்டு பீஷ்மர் எப்படித் தன் குடும்பத்தை அழித்தாரோ அதே போல் அவர் குடும்பத்தின் கடைசி வாரிசு வரை அழிக்கத் திட்டம் தீட்டினான்.

உறவாடிக் கெடுப்பதுதானே
உயர்ந்த ராஜதந்திரம்...!

sambasivam6geetha said...

வாங்க ஶ்ரீராம், இதெல்லாம் முன்ஷிஜியோட புத்தகத்தில் இல்லை. நான் தேடிச் சேர்த்தேன். :))) இதே போல் கர்ணன் குறித்தும் எழுதி இருக்கேன். அதுவும் தேடிக் கண்டு கொண்டது தான். முதல் பாகத்திலும் ராதையைக் குறித்த தகவல்கள் பல்வேறு சொற்பொழிவுகள் மூலம் சேகரித்தவையே. :)))))

sambasivam6geetha said...

பீஷ்மருக்கு சுவலன் ஏமாற்றி விட்டான் என்று கோபம். இது குறித்து இன்னும் தேடிப் படிக்க வேண்டும். இப்போதைக்கு இதை என்னால் நியாயப் படுத்த முடியவில்லை.

sambasivam6geetha said...

நல்லவேளையாய்த் தொலைக்காட்சி மஹாபாரதம் எல்லாம் பார்க்கிறதில்லை. :))) என்னோட கருத்தில் நான் எழுதுவதில் அவற்றின் சாயல் வந்துவிடுமோ என என்னையும் அறியாமல் ஓர் எண்ணம். :))) அவ்வளவு மன உறுதி இல்லாமல் இல்லை. என்றாலும் நம்மையும் மீறி வந்துட்டால்????

sambasivam6geetha said...

வாங்க வைகோ சார், பல விஷயங்களையும் கூர்ந்து கவனித்தால் மஹாபாரதத்தில் பழிவாங்குவது என்பது முக்கியமான ஒரு வேலையாக இருந்து வருவது தெரியும். யது குலத்தவர்களும், ஷகுனியின் முன்னோர்களும், ஒரு தந்தை வயிற்றில் வந்த சந்ததிகள் என்பதாலேயே ஷகுனிக்குக் கண்ணனையும் யாதவர்களையும் கண்டால் பிடிக்காது என்றும் படித்துள்ளேன். அது குறித்தும் தகவல்கள் கிடைத்தால் பகிர்ந்து கொள்கிறேன்.

sambasivam6geetha said...

ஆமாம் அப்பாதுரை, இதிலிருந்து நாம் கற்க வேண்டிய நீதிகளும் நிறையவே உள்ளன. :))))

sambasivam6geetha said...

ஆஹா, ரிஷபன் சார், உங்களை இங்கே பார்த்ததில் மிக மிக மிக மிக சந்தோஷம். மஹாபாரதம் குறித்த உங்கள் பார்வையும் சரியே. வரவுக்கு மிக்க நன்றி.

sambasivam6geetha said...

வாங்க ராஜராஜேஸ்வரி, சரியாத் தான் சொன்னீங்க. :))))

இராஜராஜேஸ்வரி said...

வெளிப்பார்வைக்குக் கெளரவர்களின் நண்பன் போல் காட்டிக் கொண்டு பீஷ்மர் எப்படித் தன் குடும்பத்தை அழித்தாரோ அதே போல் அவர் குடும்பத்தின் கடைசி வாரிசு வரை அழிக்கத் திட்டம் தீட்டினான்.

பீஷ்மர் எப்போது தன் குடும்பத்தை அழித்தார்??

பெயர் மாறிவிட்டதா என்ன???!!!

sambasivam6geetha said...

வாங்க ராஜராஜேஸ்வரி, பெயர் எதுவும் மாறலை. ஷகுனியின் குடும்பத்தைச் சிறையெடுத்து, கைப்பிடி அளவு உணவே அளித்து அவர்கள் அனைவரையும் இறக்கும்படி செய்தது பீஷ்மர் தான் அல்லவா? ஆகவே ஷகுனி தன் குலத்துக்காகப் பழி வாங்கவே ஹஸ்தினாபுரத்தில் கெளரவர்களோடு தங்கி இருந்து அவர்களுக்கு உதவி செய்வது போல் நடித்து மறைமுகமாகப் பழி வாங்குகிறான்.

இந்தப் பதிவிலேயே விபரங்கள் இருக்கின்றன. :))))

Jpn Agnee said...

பாதாள சிறையில் அடைபட்ட சகுனியின் குடும்பத்தார் அனைவரும் இறந்துவிட்டனரா என பார்க்க பீஷ்மரும் திருதிராஸ்டனும் பாதாள சிறைக்கு வருகின்றனர்.
இவர்கள் வருவதை உணர்ந்த சகுனி, என் மைத்துனரை ஏமாற்றிய அனைவருமே அழிந்தனர் என்று தன் நாடகத்தை அக்கணமே தொடங்குகிறார்.
இதனால் மகிழ்வுற்ற திருதிராஸ்டன் சகுனியை தன்னோடு வரும்படி அரண்மனை அழைத்துச் செல்கிறார்.
இவ்வாறு நான் ஒரு நூலில் படித்தேன்.
இருப்பினும் என்னை கவர்ந்தவர்கள் பீஷ்மரும் சகுனியும்.