Wednesday, February 12, 2014

சாத்யகிக்கு ஆபத்து!

சாத்யகி முரண்டு பிடித்துக் கொண்டு தப்பிக்க வேண்டும் என நினைத்தாலும் நிலைமை அவனுக்கு சாதகமாக இல்லை.  சரியான சந்தர்ப்பம் வந்தால் தான் தப்பிக்க முயற்சி செய்யமுடியும்.  ஆகவே வாளாவிருந்தான்.  அவனைத் தூக்கிச் சென்றவர்கள் சற்று நேரம் தெருக்களிலேயே சுற்றிச் சுற்றி வருகிறார்கள் என உணர்ந்தான் சாத்யகி.  இது அவனைக் குழப்புவதற்காகவும் இருக்கலாம்.  கொஞ்ச நேரத்தில் ஒரு பழைய ரதத்தில் தான் வைக்கப்பட்டதை உணர்ந்த சாத்யகி அந்த ரதம் இடிந்து விழுந்துவிடும் நிலையில் உள்ளதோ எனவும் எண்ணினான்.  ஏனெனில் முன்னும், பின்னும் பக்கவாட்டிலும் ஒரே ஆட்டமாக ஆடிக் கொண்டே இருந்தது அந்த ரதம்.  சீரான ஓட்டமாக இல்லை. சக்கரங்கள் உருளும்போதும் அதிர்ச்சி அதிகமாகத் தெரிந்தது.  குதிரைகள் ரதத்தை ஓட்டும் வழக்கமான குதிரைகளாக இருக்காது என்றும் மோசமான மட்டக்குதிரைகளாக இருக்கலாமோ எனவும் ஊகித்தான் சாத்யகி.  சற்று நேரத்தில் காற்றில் வந்த வாசனையின் மூலம் அவன் ரைவதக மலைப்பக்கம் செல்கிறோம் எனப் புரிந்து கொண்டான்.   இந்த மலையும் அதன் சுற்றுப்புறங்களும் சாத்யகிக்கு நன்கு பழக்கம் ஆனவையே.  ஆகவே அவன் எளிதில் இந்த வழியைக் கண்டறிந்துவிடலாம். எப்படியேனும் தப்பிக்கலாம்.

தான் கடத்தப்படுகிறோம் என்பதைத் தெளிவாய்ப் புரிந்து கொண்டாலும் யாரால், எதற்காகக் கடத்தப்படுகிறோம் என்பது அவனுக்குப் புரியவில்லை. அவன் மேலே யோசிக்கும் முன்னர் ஒரு பேரதிர்வோடு ரதம் மலை அடிவாரத்தில் நின்றது.   இப்போதும் அவனை அவிழ்த்து விடாமல் அப்படியே தூக்கி ஒரு பல்லக்கில் ஏற்றி மலை மேல் ஏறினார்கள்.  பத்திலிருந்து எட்டு மனிதர்கள் இருக்கலாம் என சாத்யகி ஊகித்தான்.  அவர்கள் விட்ட பெருமூச்சுக்களும் காலடி ஓசையிலிருந்தும் இதை சாத்யகி கண்டு கொண்டான்.  அவர்கள் தங்களுக்குள்ளாக எதுவுமே பேசிக்கொள்ளவில்லை என்றாலும் அவர்களில் இருவர் தலைமை வகிப்பவர்கள் என்றும் மிக மெதுவாக அவர்கள் தங்கள் உத்தரவுகளைத் தெரிவிக்கின்றனர் என்றும் புரிந்து கொண்டான்.  அவர்களில் எவரையும் அவன் யார் எனப்புரிந்து கொள்ள இயலவில்லை.  அவர்கள் மலையில் கொஞ்சம் மேலே வந்துவிட்டனர்.  வழி எல்லாம் மிகக் கரடு முரடாக ஒழுங்கில்லாமல் மேடும் பள்ளமுமாக இருந்தது.  அவர்கள் ஏறச் சிரமப்பட்டனர் என்பது அவர்கள் அவ்வப்போது விடும் பெருமூச்சிலிருந்து தெரிந்தது.  சிலர் மிக மோசமாக மூச்சிரைத்தனர். பல்லக்கு அப்போது ஒரு இடத்துக்கு வந்ததும் நின்றது.  அது நின்ற இடம் யாதவத் தலைவர்களுள் ஒருவரின் மாளிகை.  ரைவதக மலையின் மேலே யாதவர்கள் கட்டி இருந்த கோட்டைக்குள் அந்த மாளிகை இருந்தது.

வாயில்காவல் காப்பவனிடம் பல்லக்குத் தூக்கிகளோடு வந்தவர்கள் ஏதோ கிசுகிசுவெனப் பேசியது கேட்டது.  கொஞ்ச தூரத்தில் கதவுகள்   திறக்கப்பட்ட சப்தம் கேட்டது.  பல்லக்கில் இருந்து சாத்யகியைத் தூக்கிக் கொண்டு மாளிகையின் உள்ளே சென்றனர்.  அவனைத் தூக்கிச் சென்றவர்கள் நாலைந்து அறைகளைத் தாண்டியதும், படிகள் போன்றதொரு இடத்தில் மேலே ஏறிப் பின் கீழே இறங்கினார்கள்.  அங்கே சுத்தமான காற்று வீசாவிட்டாலும் குளிர்ச்சியாக இருந்தது.  ஆஹா, பாதாளத்தில் அமைந்திருக்கும் ஏதோ ஒரு குகைக்குத் தன்னைத் தூக்கிச் சென்று அங்கேயே விட்டு விடுவார்கள் போலும்.  இவன் அப்படியே கிடந்து சாகட்டும் என நினைக்கிறார்கள் போலும்!

மஹாதேவா! கடைசியில் என் விதி இதுவா?? இப்படி மடியவா நான் வீரனானேன்!  இந்நேரம் என் படை வீரர்களை வழி நடத்திக்கொண்டு வெற்றிப் பாதையில் செல்ல வேண்டியவன் அல்லவோ நான்!  ஒரு நல்ல வீரனாக, ஒரு கதாநாயகனாக, ஒரு சிறந்த படைத்தலைவனாக வெற்றியை நோக்கிச் செல்லவேண்டிய நான் இங்கே கிடக்கவேண்டுமா?  ஆஹா, இதை எல்லாம் கண்ணன் அறிய மாட்டானே! இப்போது கண்ணனுக்கு என் உதவி தேவைப்படும் இந்த நேரம் பார்த்து நான் இப்படி மறைவதை அவன் அறிந்தால் என்னைக் குறித்து என்ன எண்ணுவான்? கோவிந்தா, நீ நிச்சயம் என்னைத் தவறாகவே எண்ணப் போகிறாய்!

அவனைத் தூக்கிச் சென்றவர்கள் இன்னும் கொஞ்சம் கீழே சென்றதும் அவனைத் தரையில் கிடத்திவிட்டுக் கட்டுக்களில் இருந்து அவனை விடுவிக்க ஆரம்பித்தார்கள்.  பின்னர் அவர்கள் காட்டிய வேகம் பிரமிக்க வைத்தது.  பிரமிக்கும் வேகத்தில் மேலேறிய அவர்கள் மேலே சென்றதும் ஒரு பொறி தானாக இயங்கி அல்லது இயக்கப்பட்டு ஒரு கதவு மூடிக்கொண்ட அச்சுறுத்தும் ஒலி சாத்யகிக்குக் கேட்டது.  தான் தன்னந்தனியாக நிராதரவாக விடப்பட்டிருந்ததை அறிந்தான் சாத்யகி.  இப்போது செய்ய வேண்டியது முதலில் அவன் உடலின் மேல் பாகத்தை மூடி இருந்த சாக்கை எடுத்து அவன் உடலை விடுவிப்பது.  அடுத்துக் கட்டுக்களை நன்கு தளர்த்தி முழுதும் கட்டுகளில் இருந்து தன்னை விடுவித்துக் கொள்வது.  இதை உடனடியாகச் செய்து முடித்தான் சாத்யகி.  சுற்றுப்புறம் எங்கும் கருமையான இருட்டு அப்பிக் கிடந்தது.   குகை பெரியதா, சிறியதா என்று அவனால் அறிய முடியாததோடு வெளிச்சமும், காற்றும் வருவதற்கு அந்த குகைக்குள் வழி இருக்கிறதா என்பதும் தெரியவில்லை.  ஆனால் இது என்ன?  ஏதேதோ பூச்சிகள்? பூச்சிகளா?  விஷ ஜந்துக்களா?  ஊர்வன போல் தெரிகிறதே!  ஆம், பற்பல விஷ ஜந்துக்கள் அங்குமிங்கும் ஊர்ந்ததோடு மெல்ல மெல்ல சாத்யகியின் மேலும் கால்கள் வழி ஏற ஆரம்பித்தன.

மெல்ல எழுந்து அமர்ந்த சாத்யகியின் கண்கள் சற்று நேரம் இருட்டில் சுற்றும், முற்றும் பார்த்தன.  இருட்டிற்குக் கண்கள் பழகியதும் மீண்டும் உற்றுக் கவனித்த சாத்யகிக்கு குகையின் ஒரு பக்கத்திலிருந்து வெளிச்சக் கீற்று ஒன்று தெரிவதை உணர்ந்து கொள்ள முடிந்தது.  அதே சமயம் தன்னால் எழுந்து நின்று நடந்து சென்றால் குகையின் கூரை தன் தலையில் இடிக்கும் என்பதையும் உணர்ந்து கொண்டான் அவன்.  வந்தவர்கள் குனிந்து உருட்டி விட்டிருந்திருப்பதாலும், குனிந்து கட்டை அவிழ்த்து விட்டு உடனே ஓடி விட்டதாலும் அப்போது சரியாகக் கவனிக்கவில்லை.  இப்போது தன் இரு கரங்களையும் கால்களையும் பயன்படுத்திக் கொண்டு தவழ்ந்து அந்த வெளிச்சம் இருக்கும் இடத்தை நோக்கிச் சென்றான்.


மெல்ல அருகே சென்றவனுக்கு அந்த வெளிச்சக் கீற்று மனிதர்களால் உண்டாக்கப்பட்டதல்ல என்றும், நிலவின் ஒளிக்கீற்று ஒன்று குகையின் பிளவு ஒன்றின் வழியாக உள்ளே நுழைந்துள்ளது என்பதும் புரிந்தது.  அவன் தப்பிச் செல்ல வாய்ப்புகள் அரிது என்பதையும் உணர்ந்தான்.  அவன் நிரந்தரமாக இங்கே அடைக்கப்பட்டு முடிவை எய்தும்படி விடப்போகின்றனரா அல்லது இது தாற்காலிகமாகவா என்பது குறித்து அவனுக்கு ஏதும் தோன்றவில்லை.  ஏனெனில் அவனை இவ்வாறு கடத்தி வருவதில் யாருக்கு லாபம் என்பதும் யாருடைய விருப்பம் என்பதும் அவனுக்குப் புரியவில்லை. அதைக் குறித்து எதுவும் அவனால் அநுமானிக்க முடியவில்லை. ஜயசேனன்?? ம்ஹூம், வாய்ப்பே இல்லை. அவ்வளவாக அவர்கள் குழு பிரபலம் அடையவில்லையே!  சாத்யகியைப் பிடிக்காது.  எங்கே கண்டாலும் வலுச்சண்டைக்கு இழுப்பார்கள் தான்!   ஆனால் அவர்கள் இவ்வளவு தூரம் செய்வார்களா என்பது குறித்து அவனுக்கு சந்தேகமாகவே இருந்தது.

துவாரகையின் பிரசித்தி பெற்ற தலைவர்களான வசுதேவரின் குடும்பத்தையும், சாத்யகனின் குடும்பத்தையும் பகைத்துக் கொண்டு அதன் மூலம் அரசன் உக்ரசேனனின் கோபத்தை சம்பாதிக்கும் வண்ணம் தீங்கை எனக்கு விளைவிக்க அவர்களால் முடியுமா?  நிச்சயமாய் முடியாது.  அதன் பலாபலன்களை அவர்கள் நன்கறிந்தவர்கள்.  கிருஷ்ணனால் நடத்தப்பட விருக்கும் இந்த மாபெரும் துணிகர சாதனையில் அவன் பங்குபெறக் கூடாது என நினைப்பவர் யாராய் இருக்கும்?  அவர்கள் யாராக இருந்தாலும் நிச்சயம் மிகவும் பலம் படைத்தவர்கள்;  அதிகாரத்தில் இருப்பவர்கள்.  கிருஷ்ணனின் இந்தத் துணிகர சாதனைகள் நடைபெறாவண்ணம் இடையிட்டுத் தடுக்க நினைப்பவர்கள்.  அதோடு கிருஷ்ணனிடமும் அவர்களுக்கு வெறுப்பும், பொறாமையும் இருக்கிறது.  இதன் மூலம் கண்ணனுக்கு அவமானம் ஏற்படுத்துவதோடு, அவன் அனைவரும் நினைப்பது போல் ஒரு கடவுள் அல்ல;  எந்தவிதமான அதிசயங்களையும் நிகழ்த்துபவன் அல்ல என நிரூபிக்கவும் நினைக்கின்றனர்.  இது கண்ணனுக்கு அவர்களால் மறைமுகமாகச் செய்யப்படும் அநீதி;  அவமானம்.  இந்தச் சதிக்குப் பின்னணியில் இருப்பது ஒருவேளை சத்ராஜித்தோ?

தன்னெதிரே  உள்ள பரவலான வாய்ப்புக்களைக் குறித்து ஆராய்ந்து சிந்தித்தான் சாத்யகி.  இந்தத் துணிகரமான சாதனை நிகழ்த்துவதிலிருந்து தான் தப்பி ஓடிவிட்டதாக அனைத்து மக்களும் நினைப்பார்கள்; கண்ணனோ எனில் அவன் தன் மேல் வைத்திருந்த நம்பிக்கையைச் சிதைத்துவிட்டதாக எண்ணுவதோடு ஏமாற்றிவிட்டான் எனவும் எண்ணுவான்;  புஷ்கரத்தை மட்டும் அவன் கைப்பற்றி இருந்தானானால்!  ஆஹா! எத்தகைய புகழும், பெயரும் கிடைத்திருக்கும்!  இப்போது அது கிடைக்காது.  எல்லாவற்றுக்கும் மேல், எல்லாவற்றுக்கும் மேல் சுயம்வரத்தில் கலந்து கொண்டு திரெளபதியை அடையும் வாய்ப்பையும் இழந்து விட்டான்.   அவன் விதி இப்படியா?





3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கிருஷ்ணரைப் பற்றி அறியாதவர்களுக்கு வெறுப்பும், பொறாமையும் இருக்கத்தான் செய்யும்... தொடர்கிறேன் அம்மா...

கதம்ப உணர்வுகள் said...

சாத்யகியை கடத்திக்கொண்டு வந்து இம்சித்து கட்டிப்போட்டு இருக்கும்போது சாத்யகியின் மனம் உறங்கிவிடாமல் எழுப்பிய அத்தனை கேள்விகளையும் கண்ணன் அறியமாட்டானா என்ன?

கண்ணன் சாத்யகியை இப்படி நினைக்கமாட்டான். ஏமாற்றிவிட்டான் சாத்யகி என்று கண்ணன் நினைக்கவே மாட்டான்.

அடுத்து என்னாகுமோ?

ரொம்ப நாள் கழித்து இங்க வந்தது மனசுக்கு சந்தோஷமா இருக்குப்பா கீதா.

அன்பு நன்றிகள்பா பகிர்வுக்கு.

ஸ்ரீராம். said...

விடை தெரியும்வரை நிம்மதி இருக்கப் போவதில்லை சாத்யகிக்கு!