Tuesday, August 26, 2014

கண்டேன், கண்டேன், கண்ணுக்கு இனியன கண்டேன்!

அன்று காலை திரௌபதி தன் அந்தப்புரம் சென்று அங்கே தங்கி இருந்த தன் மாமியார் குந்தியைப் பார்த்தபோது மகிழ்ச்சியின் உச்சியில் இருந்தாள். தனக்கு உடலே இல்லாதது போலவும், தான் காற்றில் மிதப்பது போலவும் உணர்ந்தாள்.  அதை அதிகப்படுத்தும் விதமாக கிருஷ்ண வாசுதேவன், பலராமன், சாத்யகி ஆகியோர் தாங்கள் தங்கி இருந்த முகாம்களில் இருந்து கிளம்பி அரண்மனைக்கு வந்து பாண்டவர்களுக்கென ஏற்படுத்தப்பட்டிருந்த தாற்காலிக அறைகளுக்குப் பக்கத்தில் தங்கி இருந்தார்கள்.  ஆஹா, இதன் மூலம் கண்ணனை எவ்விதத் தடங்கல்களும் இல்லாமல் இங்கேயே பார்க்கலாமே!  திரௌபதி உண்மையில் மிகவும் சந்தோஷத்தில் இருந்தாள். ஆனால், கண்ணனைத் தனிமையில் சந்திப்பது என்பதே இயலாத ஒன்றாகத் தெரிந்தது.  அவன் மாளிகையில் வந்து தங்குகிறான் என்பது தெரிந்ததுமே மாளிகை வாசிகள் இதையும் ஒரு கோயிலாக நினைத்துக் கண்ணனை வணங்க வரிசையில் காத்திருந்தார்கள்.


பல்வேறு நாடுகளின் அரசர்கள், இளவரசர்கள், இன்னும் மிகப் பெரிய பதவிகளை வகித்த திறமைசாலிகளான வீரர்கள், அதிரதர்கள், மஹாரதர்கள் போன்றோர் அவள் சுயம்வரத்தில் கலந்து கொண்டவர்கள் ஆவார்கள். அவர்கள் அனைவரும் கண்ணன் ராஜ மாளிகையில் தங்கி இருக்கும் செய்தி அறிந்ததும், தனித்தோ அல்லது கூட்டமாகவோ அங்கே வந்து அவனைப் பார்த்து அவன் ஆலோசனைகளைக் கேட்டுக் கொண்டார்கள்.  ஒரு சிலர் தங்கள் மரியாதையை மட்டும் தெரிவித்துச் சென்றனர்.   பாஞ்சாலத்தில் இருந்த ரிஷிகள், முனிவர்கள், துறவிகள், சந்நியாசிகள் போன்றோர் அங்கே வந்து கண்ணனுக்குத் தங்கள் ஆசிகளைத் தெரிவித்துச் சென்றனர்.


இவர்களைத் தவிர பொதுமக்கள் பலரும் கண்ணனைக் காண ஆவலுடன் காத்திருந்தனர்.  ஆண்கள், பெண்கள், குழந்தைகள்  யாரும் அழைக்காமலேயே கூட்டம் கூட்டமாக வந்து அரண்மனையின் முன் வாயிலின் முற்றத்தை நிறைத்தனர்.  அவர்களைத் திருப்பி அனுப்ப முடியாமல் காவலாளிகள் திண்டாடினார்கள்.  அவர்கள் கூட்டமாக அங்கே தங்கி இருந்ததோடு அல்லாமல் கண்ணனைக் குறித்தும் அவன் சாகசங்கள் குறித்தும் இடைவிடாமல் பேசியது அலைஓசை போல் அவ்வப்போது கேட்டுக் கொண்டிருந்தது.  ஆஹா, இவன் தான் எப்படிப்பட்ட மனிதன்! உண்மையிலேயே கடவுளோடு சமமாக மதிக்கும் அளவுக்குத் தகுதி வாய்ந்தவன்.  நம் தந்தையைத் தான் எப்படிப் பேசி சுயம்வரம் நடத்த ஒப்புக் கொள்ள வைத்தான்.  அதோடு மட்டுமா?  தன்னுடைய மந்திர, தந்திரங்களைப் பயன்படுத்தி  ஜராசந்தனை சுயம்வரத்திலிருந்தே விலக வைத்தான்.   இல்லை எனில் அவன் அவளை வலுக்கட்டாயமாகத் தூக்கிச் சென்று தன் பேரன் மேகசந்திக்குத் திருமணம் முடித்திருப்பான்.  அதோடு மட்டுமா?  பாண்டவர்கள் ஐவரையும் சரியான சமயத்தில் உயிருடன் திரும்பக் கொண்டு வந்தானே!


அவளையும் எப்படியோ பேசி ஐவரையும் மணக்கவும் வைத்துவிட்டான்.   கண்ணனின் இத்தகைய நடவடிக்கைகள் அனைவரையும் ஆச்சரியப்படுத்துவதோடு, அவன் அதிசயங்களைப் புரிகிறான் என்னும் எண்ணத்தையும் அதன் மூலம் அவன் மேல் பிரமிப்பும்,பெருமதிப்பும் ஏற்படுத்துகிறது.  அவன் இவற்றுக்கெல்லாம் காரணகர்த்தாவாகி விடுகிறான். முற்றத்திலேயே பொதுமக்கள் இன்னமும் கூட்டமாக அமர்ந்து கண்ணனைப் பார்க்க வேண்டிக் காத்திருக்கிறார்கள். நாள் முழுதும் சலிக்காமல், “ஜயது, ஜயது கிருஷ்ண வாசுதேவா!” என்னும் முழக்கத்தைச் செய்த வண்ணம் காத்திருக்கின்றனர்.  கிருஷ்ணன் உடனே அவர்களிடையே வரவேண்டும் என்று கூச்சலிட்ட வண்ணம் பெருத்த ஆரவாரங்கள் செய்கின்றனர்.  அதைக் கேட்டு அவன் வந்ததும், சிலர் அவன் பாதங்களில் வீழ்ந்து வணங்குகின்றனர்; அவனைக் கட்டி அணைக்க விரும்புபவர்கள் பலர். அவன் பார்வை பட்டாலே போதும் என நினைப்பவர்கள் பலர். அத்தனையையும் மீறிச் சிலரிடம் அவன் பேசி அவர்களை நலம் விசாரித்தால் அப்படி விசாரிக்கப்பட்டவர்கள் தங்கள் அதிர்ஷ்டத்தை நினைத்து மகிழ்ந்தால் மற்றவர்கள் அவர்களைப் பொறாமையுடன் பார்த்தனர். அவன் ஒருவரைப் பார்த்துச் சிரித்தாலே அந்த மனிதர் தான் உயர்ந்ததொரு இடத்தில் இருப்பதாக நினைத்துக் கொள்கிறார்.


கிருஷ்ணன் தன் குடும்பத்தையும், குந்தியின் குடும்பத்தையும் தன் கல்யாணத்தின் மூலம் எப்படி அழகாக ஒன்று சேர்த்துவிட்டான் என எண்ணி எண்ணி வியந்தாள் திரௌபதி.  அவள் தந்தை எப்போதுமே ஏதோ ஆழ்ந்த யோசனையில் முகம் கடுத்தவராய்க் காணப்படுவார்.  ஆனால் இப்போதோ அவர் பேச்சே மென்மையாக ஆகி இருப்பதோடு கிருஷ்ண வாசுதேவனைக் குறித்துப் பேசினால் மிகவும் மரியாதையுடன் பேசுகிறார்.  த்ருஷ்டத்யும்னனோ இயல்பாகவே தைரியமும், தன்னம்பிக்கையும் வாய்ந்தவன்.  யாருக்கும் எளிதில் தலை வணங்க மாட்டான்.  ஆனால் கிருஷ்ணனுக்கு எதிரே தன்னைச் சிறியவனிலும் சிறியவனாக உணர்கிறான் என்பதை அவன் நடவடிக்கையிலேயே புரிந்து கொள்ள முடிகிறது.  சாத்யகி, சிறுவன், இளைஞன், கிருஷ்ணன் நடந்த பூமியைத் தொழும் ரகம் அவன்.


குந்தியோ எனில் தன் தாய்மை அன்பு முழுதையும் திரௌபதியிடம் மட்டுமின்றிக் கிருஷ்ணனிடமும் காட்டுகிறாள் என்பது அவனைக் குறித்து மிக அன்பாகவும், ஈடுபாட்டுடனும், பாசம் காட்டி அவள் பேசுவதிலிருந்து புரிந்து கொள்ள முடிகிறது.  யுதிஷ்டிரனை அவன் மற்ற சகோதரர்கள் கடவுளைப் போல் நினைக்கிறார்கள் என்றாலும் ஐவருமே கிருஷ்ணன் விஷயத்தில் மாற்றுக் கருத்துக் கொண்டிருக்கவில்லை.  யுதிஷ்டிரனும் கிருஷ்ணனை நடமாடும் தெய்வமாகவே கருதுகிறான்.  பீமன் விளையாட்டு புத்தி கொண்டவன். அவ்வப்போது கிருஷ்ணனிடம் சம்பிரதாய விரோதமான  ஹாஸ்யங்களை உதிர்த்தாலும் உள்ளூர அவனுக்கும் கிருஷ்ணனிடம் பக்தி இருப்பதை அவன் பணிவே எடுத்துச் சொல்கிறது.   அர்ஜுனன் கிருஷ்ணனுக்கு உற்றதொரு நண்பனாக அவன் காலடியை ஒற்றியே செல்கிறான்.  மகிழ்ச்சி ஒன்றையே தன் இயல்பாகக் கொண்ட நகுலனும், புத்திசாலியும், விவேகமுள்ளவனுமான சஹாதேவனும் கூடக் கிருஷ்ணனை வழிபடுவதே தங்களுக்கு உகந்தது எனப் புரிந்து கொண்டிருக்கின்றனர்.


இதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை.  அவள் அவனை அவன் உண்மையான சொரூபத்தில் பார்த்திருக்கிறாள்.  அவன் அப்படியே இருக்கவேண்டும் என்றும் விரும்புகிறாள். ஆஹா, அந்த அனுபவம்! கிருஷ்ணன் தன்னைத் தானே வெளிப்படுத்திக் கொண்டு அவளிடம் சுயம்வரத்திற்கு ஒத்துக்கொள்ளவேண்டும் என்றும் அது தான் அவளுடைய தர்மம் எனவும் கூறிய அந்த விநாடி! அவள் இந்த உலகம் முழுதையும் பார்த்ததோடு அல்லாமல், உலகத்தினுள் தன்னையும் கிருஷ்ணனையும் பார்த்தாள்.  அது மட்டுமா? தன்னில் கிருஷ்ணனையும், கிருஷ்ணனிடம் தன்னையும் கண்டாளே! அதை மறக்க முடியுமா?  அது தான் அவன் உண்மையான சொரூபம்! ஆம் அன்றிலிருந்து அவனுடன் தான் ஆன்மிக ரீதியாகப் பிணைக்கப்பட்டிருப்பதை திரௌபதியால் உணர முடிந்தது.  அவளுடைய எண்ணங்களையும், செயல்களையும் பரிசோதித்து அவள் தன்னைத் தானே சுயபரிசோதனை செய்து கொள்ளக் கிருஷ்ணனின் பாராட்டு மொழிகள் உரைகல்லாக அமைந்தன.


யோசித்துக் கொண்டே திரௌபதி அந்தப்புரத்தைக் கடந்து வெளியே வந்து ஒரு சிறிய தோட்டத்தையும் கடந்தாள்.  கிருஷ்ணன் அமர்ந்திருக்கும் தாழ்வாரத்தில் இருக்கும் சிறியதொரு முற்றத்தை அடைந்தாள்.  அங்கே காணப்பட்ட அறையின் கதவு பாதி மூடி இருந்தது.  மெல்ல மெல்லச் சென்ற திரௌபதி அந்தப் பாதி மூடப்பட்ட கதவைத் திறந்து உள்ளே பார்வையைச் செலுத்தினாள்.  கிருஷ்ணன் தனியாக இல்லை.  அவள் இரண்டாவது கணவன் பீமனும், மத்ஸ்ய நாட்டரசன் விராடனும் உடன் இருந்தனர்.  இந்த நெருக்கமான சந்திப்பால் கிருஷ்ணன் மேல் அவள் வைத்திருந்த மதிப்பு இன்னமும் கூடியது.  அதோ அவன் உட்கார்ந்திருக்கிறான்.  தன்னியல்பு மாறாமல், சிறுபிள்ளை போல் விளையாட்டுத் தனம் தெரியும் வண்ணம், அவன் எழிலும், நளினமும் ஒவ்வொரு அங்கத்திலும் தெரியும்படியாக, விசாலமான பேசும், சிரிக்கும் அவன் கண்கள் அவனுடைய ஒவ்வொரு மனோநிலைக்கும் ஏற்றவாறு மாற்றங்களை உடனுக்குடன் காட்டியபடி இருக்கப் பேசிக் கொண்டிருந்தான்.


ஆசனத்திலிருந்த திண்டில் பாதி சாய்ந்த வண்ணம் அமர்ந்திருந்த கிருஷ்ணனனின் நீண்ட சுருட்டை முடிகள் அவன் தோளைத் தொட்டுக்கொண்டிருக்க, அவன் அமர்ந்திருந்த நிலையால் அணிந்திருந்த மாலை சற்றே இடம் மாறிக் காணப்பட, அவன் மார்பிலுள்ள பிறப்பு அடையாளம் நன்கு தெரியவர, ஆஹா! என்ன ஒரு கோலம் இது! இது என்ன நிறம்?  கறுப்பா? அல்லது நீலமா?  கரு நீலமா? என்ன நிறம் இது? கருநீல நிறத்தில் காட்சி அளிக்கும் மழைமேகங்களின் நிறமா இது? ஆனால்…. ஆனால் இது  மற்றக் கருநிறத்தவருக்கு இருப்பதைப் போல் இல்லாமல் ஒளி வீசுகிறதே!  காணக்கிடைக்காத காட்சி இது!

2 comments:

ஸ்ரீராம். said...

கதையின் இந்தப் பகுதிகளில் ஒரு தேக்க நிலை இருப்பதுபோல் தெரிவது என் பிரமையா?

sambasivam6geetha said...

அப்படி எல்லாம் இல்லை, ஶ்ரீராம், திருமணமான புதுப் பெண்ணின் பார்வையில் அனைத்தையும் பாருங்கள். :)))