Monday, December 15, 2014

சத்யவதியின் கலக்கம்!

“சுவர்ணப்ரஸ்தத்தையும், பானிப்ரஸ்தத்தையும் ஆள்வதற்கு துரியோதனனுக்கு எவ்வகையில் ஆக்ஷேபணை இருக்க முடியும்?”

“தாயே, துரியோதனன் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் சென்றுவிடுவதாகச் சொல்கிறான்.  அதைக் கேட்ட திருதராஷ்டிரனோ அவன் சென்றுவிட்டால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாகச் சொல்கிறான். துரியோதனனும் இங்கேயே இருந்தால் தற்கொலை செய்து கொள்வானாம்.”

“கோழைகள்! கோழைகள்! அதிலும் துரியோதனன் மிகவும் கோழை! அவனுடைய ஆசைகள், விருப்பங்கள் அவை நன்மை தரக்கூடியன அல்லவென்றாலும் அவை நிறைவேறாவிட்டால் உடனே தற்கொலை செய்து கொள்வதாக அனைவரையும் பயமுறுத்துவான்.  இதுவே அவன் வழக்கம். அது இருக்கட்டும் மகனே!  நீ துரியோதனனை சமாதானப் படுத்தி இருக்கவேண்டும். யுதிஷ்டிரன் அரசனாவதற்கு துரியோதனனை பக்குவப் படுத்தி இருக்க வேண்டும்.  அவனிடம் நீ இது குறித்துப் பேசி ஒப்புக்கொள்ள வைக்கவில்லையா?”

தன் மகனைப் பார்த்துத் தயையுடன் சிரித்த தாயைப் பார்த்த பீஷ்மர் முகத்தில் வருத்தம் தாண்டவமாடியது. “தாயே, துஷ்சாசனும், விகர்ணனும் சற்று நேரத்திற்கு முன் தான் என்னை வந்து பார்த்தனர். துஷ்சாசனனின் சூழ்ச்சியும் தந்திரமும், கபடமும் தாங்கள் அறியாதது அல்ல.  அவன் என்ன சொல்கிறான் தெரியுமா? யுதிஷ்டிரனை அரசனாக்கினால் அவனும் அவன் சகோதரர்களும் காந்தாரத்துக்குச் சென்று விடுவார்களாம்.”

“ஓஹோ, அப்படியா விஷயம்?  அவ்வளவு தூரத்துக்குப் பேச ஆரம்பித்து விட்டனரா?”

“இன்னும் மோசமாகப் பேசினான். என் வாழ்நாளிலேயே முதல்முறையாக பரதன் பிறந்த குலத்தில் பிறந்த ஒரு வாரிசு தன் மூத்தோரை மதியாமல் எதிர்த்துப் பேசுவதுடன் அவர்கள் கட்டளைகளை ஏற்கவும் மறுக்கிறான்.  இன்றுவரையிலும் இப்படி ஒருவனை நான் பார்த்தது இல்லை. “பீஷ்மர் இதைச் சாதாரணமான குரலில் சொல்ல நினைத்தாலும் அவரால் முடியவில்லை.  அவர் மனவேதனை குரலில் தெரிந்தது.

“அப்படியா சொன்னான்?  அதுவும் உன்னிடமேவா? காங்கேயா!  என்ன இது!”

“ஆம் தாயே, என்னிடமே அப்படித் தான் சொன்னான். அதை நன்றாக உணர்ந்து தான் சொல்லி இருக்கிறான்.  அந்த இடத்திலேயே அவன் மண்டையில் ஒன்று போடலாமா எனக் கோபம் வந்தது. ஆனால் அதனால் என்ன பலன்?  எதுவும் இல்லை. என்னை நானே அடக்கிக் கொண்டேன்.”

“ம்ம்ம்ம், இதைக் குறித்து ஆசாரியர் துரோணர் ஏதேனும் அறிவாரா?”

“தாயே!  அவர் அறியாதது இல்லை.  இதுவும் தெரியும் அவருக்கு.  இன்னமும் அதிகம் தெரிந்திருக்கும். துரியோதனனை அவர் ஆதரிக்கவில்லை எனில் அஸ்வத்தாமா துரோணரை விட்டுச் சென்றுவிடுவதாக அவரிடம் மிரட்டினான் என்று துரோணர் என்னிடம் சொன்னார். அவன் அப்படிச் செய்யக் கூடியவனே.  அதே போல் துரோணரைக் குறித்தும் தாங்கள் அறிவீர்கள். அவருடைய ஒரே மகன் சம்பந்தப்பட்டிருக்கும் எந்த விஷயத்திலும் அவர் பலஹீனம் வெளிப்படும்.  மகனிடம் அவ்வளவு பாசம் அவருக்கு!”

சற்று நேரம் எதுவும் பேசாமல் யோசனையில் ஆழ்ந்த சத்யவதி பின்னர் உள்ளார்ந்த கவனத்துடன் பேச ஆரம்பித்தாள்.  அவள் குரலின் ஆழத்திலிருந்து அவள் இதில் உறுதியாக இருப்பது தெரிந்தது. “காங்கேயா!  இந்த நாட்டுக்கு அரசன் ஆவதற்கு யுதிஷ்டிரனே தகுதி வாய்ந்தவன். அவனே சரியான வாரிசு.  அவனை அரசனாக்குவதே சரியானது.  அவனை ஹஸ்தினாபுரத்தை விட்டுச் செல் என எவரும் கேட்க முடியாது.  அதே சமயம் துரியோதனனின் விபரீத ஆசைகளைக் குறித்தும் நாம் அறிவோம். அவன் எண்ண ஓட்டத்தை நாம் புரிந்தே வைத்திருக்கிறோம். யுதிஷ்டிரன் அரசன் ஆவதற்கோ, பாண்டவர்கள் ஐவரும் இங்கேயே வசிப்பதையோ துரியோதனன் முற்றிலும் விரும்ப மாட்டான்.” அப்போது இருந்த சூழ்நிலையைக் குறித்து விவரித்த சத்யவதி மேலும் யோசனையில் ஆழ்ந்தாள்.

“ஆம், தாயே, ஆம், யுதிஷ்டிரனை மட்டும் நாம் மன்னன் ஆக்கிவிட்டோம் எனில் சகோதரச் சண்டை நிச்சயம்.  பெரியப்பன் மக்களும், சிற்றப்பன் மக்களும் ஒருவருக்கொருவர் அடித்துக்கொள்வார்கள். அதனால் நாட்டில் ஓர் உள்நாட்டு யுத்தமே ஏற்பட்டுவிடும். அதோடு இல்லை தாயே,  திருதராஷ்டிரன் மக்கள் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் சென்றார்களானால் அவர்களோடு சேர்ந்து நம் ஆசாரியர்களும், படைகளின் தளபதிகளும் ஆன துரோணாசாரியாரும், அவர் மைத்துனர் கிருபாசாரியாரும் கூட அவர்களோடு சென்றுவிடுவார்கள். தன் மக்கள் அனைவரும் சென்றுவிட்டார்களெனில் திருதராஷ்டிரன் மட்டும் இங்கேயே இருப்பானா என்ன? அவனும் சென்று விடுவான். குரு வம்சத்தின் சாம்ராஜ்யமே மெல்ல மெல்லச் சரியத் துவங்கும்.”

நீண்ட பெருமூச்சு விட்டாள் சத்யவதி. “நான் இப்படி எல்லாம் நடக்கும் என்று நினைக்கவே இல்லை மகனே!  என் வாழ்நாளில் என் சந்ததியினர் தங்கள் பாட்டனை எதிர்ப்பார்கள்; நான் அதைக் காண நேரும் என்றே நினைக்கவில்லை.  இதைப் பார்க்கவா நான் உயிருடன் இருக்கிறேன்! இந்தக் குழந்தைகளுக்காக நீ எவ்வளவு செய்திருக்கிறாய்!  அவர்கள் தகப்பனை விட நீ தான் இந்தக் குழந்தைகளை மிக அருமையாக வளர்த்து ஆளாக்கினாய்!  அனைவரையும் வீரர்களாக்கி மகிழ்ந்திருக்கிறாய்! அவர்களுக்கு என்ன தேவையோ அவற்றைச் சரியான சமயத்துக்கு அவர்களுக்குக் கிடைக்கச் செய்து பார்த்தாய். உன்னுடைய வார்த்தையை அவர்கள் மீற முடியாச் சட்டமாக அல்லவோ மதிக்க வேண்டும்!”

“தாயே, உலகம் மாறிக் கொண்டு வருகிறது.  இந்நாட்களில் மூத்தோருக்கு மரியாதை செய்வது என்பது குறைந்தே வருகிறது.” பீஷ்மர் எவ்விதமான உணர்ச்சியும் இல்லாமல் வறட்டுக் குரலில் கூறினார்.

“காங்கேயா, நாம் நீண்டநாட்களாக வாழ்ந்து வருகிறோம் அல்லவா?  அதை நீ உணர்ந்திருக்கிறாய் அல்லவா?” இவ்வளவு நாட்கள் வாழ நேர்ந்தது குறித்த வருத்தம் குரலில் இழையோட சத்யவதி மேலும் பேசினாள்.” நாம் வானபிரஸ்தம் செல்ல வேண்டிய நேரம் வந்துவிட்டது.  நாம் இங்கே இருக்கக் கூடாது.  காட்டிற்குச் செல்ல வேண்டும்.  இதை நான் எப்போதோ செய்திருக்க வேண்டும்.  ஆனால் க்ருஷ்ண த்வைபாயனன் தான் தடுத்துவிட்டான்.  இது சமயமல்ல என்று கூறிவிட்டான். என்னை வற்புறுத்தி நாட்டில் தங்க வைத்து விட்டான்.”