Saturday, May 16, 2015

பானுமதியின் கடைசி ஆசை!

உள்ளே வந்த கிருஷ்ணன் சற்றும் தயங்காமல் கோட்டைத் தாண்டி உள்ளே சென்றான். மருத்துவப் பெண்மணி கிருஷ்ணனை உள்ளே வரக் கூடாது என எச்சரிக்கை செய்தாள். ஆனாலும் கிருஷ்ணன் அதை லக்ஷியம் செய்யவில்லை. பானுமதியின் அருகே சென்றுவிட்டான். அவள் நெற்றியில் கையை வைத்துப் பார்த்தான். தாங்க முடியாத ஜ்வரத்தில் தவித்துக் கொண்டிருந்தாள் பானுமதி. பானுமதியின் அருகே வந்ததோடு இல்லாமல் அவளைத் தொட்டும் பார்த்த கிருஷ்ணனைப் பார்த்து மருத்துவப் பெண் ஆச்சரியமும், அதிர்ச்சியும் அடைந்தாள்.  ஏனெனில் ஆரியர்களின் நடைமுறை வழக்கப்படி ஒரு இளம்பெண்ணுக்கு அருகே அவள் தகப்பன், சகோதரன், கணவன் அல்லது மகன் தான் செல்லலாம். அவளைத் தொடலாம்.  அதிலும் கல்யாணம் ஆன பெண் என்றால் இவர்களைத் தவிர்த்த மற்ற ஆண்களை அருகே நெருங்கவே விடமாட்டார்கள். ஆனால் கிருஷ்ணன் பானுமதியின் அருகே வந்ததோடு அல்லாமல் அவளைத் தொட்டும் விட்டான்.

ஆனால் கிருஷ்ணன் முகம் கனிந்து இருந்தது. முகத்தில் பானுமதியின் நிலைமை குறித்த விசாரம் தெரிந்தது. அனம் மனம் பூராவும் பானுமதியின் உடல்நிலை குறித்த கவலையே நிரம்பி இருந்தது. கருணையினால் நிரம்பிய உள்ளத்தின் அனைத்து அன்பும் அவன் கண்கள் வழியே வந்து அவன் கைகள் மூலம் பானுமதியின் உடலில் பிரவாகித்தது. சொந்த சகோதரனைப் போன்ற பாசத்துடன் கிருஷ்ணன் பானுமதியைப் பார்த்தான். வேறெந்த ஆண்மகனிடமும் காண முடியாத பாசம் அவன் கண்களில் மிளிர்ந்தது. ஆனாலும் வழக்கமில்லாத வழக்கமாகக் கிருஷ்ணன் பிரசவித்த பெண்ணின் அருகே சென்றது அங்கிருந்த அனைவருக்கும் ஏற்கமுடியாததாகவே இருந்தது. இதன் மூலம் கிருஷ்ணன் இனி எந்தவிதமான நித்ய கர்மானுஷ்டானங்களும் செய்ய இயலாது என்பதோடு அவன் இதற்கான பரிகாரங்களையும் செய்து தன்னைப் புனிதமாக்கிக் கொண்டால் தான் நித்யகர்மானுஷ்டானங்களைத் தொடர முடியும். அனைவரும் திகைப்பில் இருப்பதை கிருஷ்ணன் உணர்ந்து கொண்டான்.

உடனே அவர்களைப் பார்த்து, “நான் என்ன செய்கிறேன் என்பதை நன்கு அறிந்து புரிந்து கொண்டே செய்கிறேன்.” என்று சொன்னவண்ணம் மருத்துவப் பெண்மணியிடமும் அதைத் தெரிவித்தான். பின்னர் பானுமதியிடம் திரும்பி, “பானுமதி, பானுமதி! என் அருமைச் சகோதரி! நான் வந்துவிட்டேன். உன் கோவிந்தா வந்திருக்கிறேன்.” என்று குரலில் கனிவு தெரியச் சொன்னான். அவள் கைகளைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டவன் அவள் நாடியை ஒரு தேர்ந்த மருத்துவனைப் போல் கணக்கிட்டான். அவள் நாடி மெல்ல மெல்ல விழுந்து கொண்டிருந்தது என்பதையும் கண்டான். இவ்வளவு ஜுரத்தோடு அவள் எப்படிப் பிழைத்து எழுந்திருக்கப் போகிறாள் என்பதையும் நினைத்துக் கவலை கொண்டான்.

கிருஷ்ணன் உள்ளே சென்றதைக் கண்ட ஜாலந்திரா தானும் கோட்டைத் தாண்டி உள்ளே சென்றாள். பானுமதியின் அருகே அமர்ந்தவள் அவளைத் தடவிக் கொடுத்தாள். அவள் கண்களில் நீர் நிரம்பியது. அப்போது பானுமதி தன் கண்களை மீண்டும் திறந்தாள். அருகே ஜாலந்திரா இருப்பதைப் பார்த்தவள் மிகவும் சிரமப்பட்டு விழிகளை விரியத் திறந்து கிருஷ்ணனையும் கண்டு கொண்டாள். தனக்காக அவன் வந்திருப்பதை எண்ணி அவள் முகம் ஒரு கணம் ரத்த ஓட்டம் பெற்றுப் பின் மீண்டும் பழைய நிலையை அடைந்தது. “கோவிந்தா! நீ வந்து விட்டாயா? உண்மையாகவா?” என்றாள் பானுமதி. அவள் குரலில் மகிழ்ச்சி தெரிந்தது. அடுத்த கணமே அவள் மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்தாள். கிருஷ்ணன் அவள் கையை விடவே இல்லை. தொடர்ந்து பிடித்துக் கொண்டிருந்தான்.

சில நிமிடங்களில் மயக்கம் தெளிந்தவளாகக் கண் விழித்த பானுமதி மீண்டும் கிருஷ்ணனை வியப்புடன் உற்று நோக்கினாள். அவள் முகம் மலர்ந்தது. அவனையே உற்று நோக்கியவள் கண்களில் அளப்பரிய அர்ப்பணிப்புடன் கூடிய பக்தி தெரிந்தது. “கோவிந்தா, கோவிந்தா………. என்று அவனை மெல்ல அழைத்தவள், “உனக்குத் தெரியுமா? எனக்கு மகன் பிறந்திருக்கிறான்.” இதைச் சொல்வதற்குள்ளாக அவளுக்கு மூச்சு வாங்கியது. மிகவும் திணறினாள். பின்னர் திக்கித் திக்கிப் பேசினாள். “அவன் தான் குருவம்சத்தின் அடுத்த சக்கரவர்த்தியாக இருப்பான்.” என்றாள். இதற்குள்ளாகக் களைத்துப் போனவளாகத் தன் கண்களை மூடியவள் மீண்டும் மயக்கத்தில் ஆழ்ந்தாள்.  மறுபடியும் அவள் தன் கண்களைத் திறக்கச் சில நிமிடங்கள் ஆயிற்று. கண்களைத் திறந்தவள் கிருஷ்ணனைப் பார்த்து, “என்னை மன்னித்து விடு…. சகோதரா! “ என்றபடியே கிருஷ்ணனை அரை மயக்கத்தில் பார்த்தவள், “உன்னைச் சந்தித்து என் மரியாதைகளைத் தெரிவிக்க என்னால் வர முடியவில்லை.” என்றவள் தன் சக்தி அனைத்தையும் திரட்டிக் கொண்டு பேச ஆரம்பித்தாள். “கோவிந்தா! நீ எனக்கு மிகப் பெரியதொரு வரம் கொடுத்திருக்கிறாய்.  என் கணவன் தான் ஹஸ்தினாபுரத்தை ஆள்வான் என்னும் வாக்குறுதியைக் கொடுத்ததன் மூலம் நீ எனக்கு மிகப் பெரிய உதவியைச் செய்திருக்கிறாய். “

மீண்டும் அவளுக்கு மயக்கம் வந்தது. மயக்க நிலையிலேயே அவள் மனம் அங்குமிங்கும் அலை பாய்ந்தது. தெளிவில்லாத வார்த்தைகளைப் பேச ஆரம்பித்தாள். பின்னர் மீண்டும் நினைவுக்கு வந்தவள் போல் கிருஷ்ணனையே உற்றுப் பார்த்த வண்ணம், “எனக்குச் சத்தியம் செய்து கொடு, கோவிந்தா! என்னுடைய கடைசி ஆசை. எனக்கு நீ செய்யப் போகும் கடைசி உதவி. இதன் பின்னர் நான் உன்னை எதுவும் கேட்க மாட்டேன்.” என்றாள்.