Sunday, June 7, 2015

ராஜ சபையின் நிகழ்வுகள் (தொடர்ச்சி) 3

வலப்பக்கம் கடைசியில் இருந்த வெள்ளி சிங்காதனத்தில் யுதிஷ்டிரன் அமர்ந்து கொண்டான். அதே போன்றதொரு சிங்காதனத்தில் இடப்பக்கக் கடைசியில் துரியோதனன் அமர்ந்தான். இருவரும் அவரவருக்கு உரிய இடத்தில் அமர்ந்ததும், அங்கே அவ்வளவு நேரமாக சலவைக்கல்லால் ஆன சிலை போல் நின்று கொண்டிருந்த ஒரு இளம்பெண் தன் நடவடிக்கைகளை ஆரம்பித்தாள். தன் கையிலிருந்து பெரிய மயிலிறகு விசிறியால் இருவருக்குமாகச் சேர்த்து விசிறத் தொடங்கினாள். அடுத்துக் கட்டியக்காரர்கள் நாக நாட்டரசன் ஆன மணிமானின் வரவைத் தெரிவித்தனர். அவனுக்கு ஆரியர்களின் இந்த மாபெரும் சபையில் தானும் கலந்து கொள்வது குறித்து ஏற்பட்ட மகிழ்வை வெளிப்படையாகக் காட்டிக் கொண்டான். துரியோதனனுக்கு அருகில் காணப்பட்டதொரு தங்க சிங்காதனத்தில் அமரும்படி அவனுக்கு ஒரு பணிப்பெண்ணால் காட்டப்பட அவனும் அதில் அமர்ந்தான். அடுத்து நுழைந்தவர்கள் அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விராடனும், சுநீதனும். யுதிஷ்டிரன் அருகே விராடன் அமர, சுநீதன் மணிமான் அருகே அமர்ந்தான். ஒவ்வொரு முக்கிய விருந்தாளி வரும்போதும் யானை மேல் அமர்ந்திருக்கும் இசை வல்லுநர்கள் தேர்ந்ததொரு இசையை இசைத்தனர். மல்லர்கள் தங்கள் தோள்களில் தொங்கிய சங்குகளை எடுத்து அனைவருக்கும் வரவேற்பு முழக்கங்களைச் செய்தனர்.

திடீரென அதுவரை முழங்கிய இசை ஒலி நின்றது. எங்கும் அமைதி! நிச்சப்தமாக இருந்தது. அனைவரும் நுழைவாயிலையே பார்க்க, தாத்தா பீஷ்ம பிதாமகர், விதுரரின் துணையோடு உள்ளே நுழைந்து கொண்டிருந்தார். இந்த வயதிலும் சற்றும் வளையாத அவர் முதுகு, நிலைப்படியை இடிக்கும் அளவுக்கு உயரம், அனைவரையும் நேருக்கு நேர் பார்த்த கண்கள், அதில் தெரிந்த உண்மையின் ஒளி, பீஷ்மரின் முகத்தில் தெரிந்த கம்பீரம் அனைத்தையும் கண்டு சபையோர் பிரமித்தனர். மெல்ல மெல்லத் தன் அடிகளை எடுத்து வைத்து அவர் நடந்து வந்தாலும் அதில் காணப்பட்ட நிதானம், இந்த வயதிலும் அனைவரையும் கவர்ந்திழுக்கும் வண்ணம் அழகாகக் காணப்பட்ட முகம், அதில் சுற்றி வட்டமிட்டு அமைந்திருந்த தலைமயிரும், தாடியும் சேர்ந்தாற்போல் வெண்மையாகக் காணப்பட்டது, அழுத்தமான உதடுகள், ஆணையைப் பிறப்பிக்கப் போகிறேன் என்பதைச் சொல்லும் வண்ணம் அதிகாரங்களைக் காட்டிய கண்கள் இவற்றோடு வெள்ளைப் பீதாம்பரப் பட்டை அணிந்து கொண்டு அவருக்கெனத் தனியாக இருந்த கிரீடத்தைத் தரித்த வண்ணம் ஒரே ஒரு வைர ஆபரணத்தை அணிந்து கொண்டு தேவலோகத்திலிருந்து வந்த தேவதூதனைப் போல் காட்சி அளித்தார் பீஷ்மர்.

அவருக்குப் பின்னால் வந்தது யாதவர்கள் தலைவன் ஆன பலராமன். பார்க்கவே பெரும் ராக்ஷசன் போல் இருந்தான். எப்போதும் மது மயக்கத்தில் இருப்பதால் அரைக்கண்கள் மூடியே காணப்பட்டன. அனைவரையும் பார்த்து உற்சாகமாகச் சிரித்த வண்ணம் வந்தான் பலராமன். சிவந்த அவன் உடலில் நீல நிறப் பீதாம்பரத்தை அணிந்து கொண்டிருந்தான். விலை உயர்ந்த ஆபரணங்களைப் பூண்டிருந்தான். தலைமயிர் லேசாக நரைக்கத் தொடங்கி இருந்தது. தாடியை ஒழுங்காக ஒதுக்கி விட்டுக் கொண்டிருந்தான். தாத்தா பீஷ்மர்  வியாசருக்கு அருகே தனக்கெனப் போடப்பட்டிருந்த ஆசனத்தில் அமரவும் அவருக்கு அருகே பலராமன் அமர்ந்தான். அவர்கள் இருவரும் உள்ளே நுழைகையில் எங்கும் சங்குகள் ஆர்ப்பரித்தன. எக்காளங்கள் ஊதப்பட்டன. கட்டியக்காரர்கள் பெரும் குரலில் அவர்கள் வரவை முழக்கினார்கள். பீஷ்மருக்குப் பொதுமக்கள் அனைவரும், “பிதாமகருக்கு வாழ்த்துகள்! மங்களம் உண்டாகட்டும்!” என்று சொல்லி வாழ்த்தினார்கள்.

இவர்கள் வரவுக்குப் பின்னர் வந்தது திருதராஷ்டிரன். எப்போதும் துணைக்கு வரும் சஞ்சயன் கையைப் பிடித்து அழைத்துவர திருதராஷ்டிரன் மெல்ல மெல்ல வந்தான். நின்று நின்று வந்தான். வியாசரின் இடப்புறமாய்ப் போடப்பட்டிருந்த சிங்காதனத்துக்கு அவன் அழைத்துச் செல்லப்பட்டான். திருதராஷ்டிரனுக்குப் பின்னர் அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்த கிருஷ்ண வாசுதேவன் வந்தான். வியாசர் வரும் நேரம் கொடுக்கப்படும் இசை மரியாதைகளோடு வாசுதேவக் கிருஷ்ணனும் சரியாக அந்த நேரம் உள்ளே நுழைய வேண்டும் என்பது பீஷ்மர் வலியுறுத்திச் சொன்னது. ஆகவே கிருஷ்ணன் அப்போது தான் வந்தான். அவனுடைய சீரான உடலமைப்பு, வாசனை மிகுந்த மலர்களால் கட்டப்பட்ட அழகான மாலை கழுத்தில், தலையில் அவன் வழக்கமாக அணியும் கிரீடம், அதன் மேல் மயில் பீலி! அவன் ஆயுதமான சக்கரம் இடத்தோளில் தொங்க, கிருஷ்ணனின் சாகசங்களை எல்லாம் கட்டியம் கூறுவோரும் நாடோடிப் பாடல்கள் பாடுவோரும் பாடல்களாகப் பாட கிருஷ்ணன் வந்தான். அனைவரின் கண்களும் அவன் பக்கம் திரும்பின. இத்தனை பெயரும் புகழும் வாய்ந்த அந்தக் கிருஷ்ணன் உண்மையிலேயே இத்தனை அற்புதங்களைச் செய்திருப்பானா என்பதே பலரின் ஆச்சரியமும் கூட!

கதவருகே வந்த கிருஷ்ணன் சபையினரைப் பார்த்துக் கை கூப்பி வணங்கினான். பின்னர் சற்றே தயங்கி நின்றான். அவன் வியாசருக்காகக் காத்திருக்கிறான் என அனைவரும் புரிந்து கொண்டனர். இடுப்பில் இறுக்கிக் கட்டிய புலித்தோலுடன், தோள்கள், முகம், தோள்பட்டை ஆகிய இடங்களில் நீளமாகப் பூசப்பட்ட விபூதிப்பட்டைகள் பளீரெனப் பிரகாசிக்க சந்தனமரக்கட்டையினால் ஆன செருப்பைப் போட்டுக் கொண்டு மெல்ல மெல்ல வந்தார் வியாசர்.  கையில் தண்டத்தை ஏந்தி இருந்தார். வெகுநாட்கள் ஊரில் இல்லாத தந்தை பல நாட்கள் கழித்துத் தன் குழந்தைகளைப் பார்க்கும்போது ஏற்படும் சந்தோஷம் அவர் முகத்தில் தெரிந்தது.  வியாசர் வரும்போது அங்கே அது வரை அமர்ந்திருந்த பிராமணர்கள், ரிஷிகள், முனிவர்கள், துறவிகள் என அனைவரும் எழுந்து நின்று வணங்கினார்கள். சபை மொத்தமும் எழுந்து நின்று கொண்டு தங்கள் கைகளைக் கூப்பிய வண்ணம் வியாசரை நமஸ்கரித்தது.  சாக்ஷாத் மஹாதேவனுக்கு உரிய முரசுகளின் முழக்கங்களும், சங்குகளின் ஆர்ப்பரிப்புக்களும் மட்டுமே அப்போது கேட்டன.

நடுவாகப்போடப்பட்டிருந்த மான் தோலால் மூடப்பட்டிருந்த ஆசனத்தில் வியாசர் அமர்ந்து கொண்டார். தன் கைகளை உயர்த்தி சபை மொத்தத்துக்கும் தன் ஆசிகளைத் தெரிவித்தார். அவர் அமர்ந்ததும் அனைவரும் அமர்ந்தனர். வியாசருக்கு வலப்பக்கம் மூன்றாவதாகப் போடப்பட்டிருந்த ஆசனத்தில் கிருஷ்ணனும் அமர்ந்து கொண்டான். சபையினருக்கும் மற்றும் அரச குலத்தோருக்கும், வந்திருந்தோர் அனைவருக்கும் அக்ஷதைகளைத் தூவி பிராமணர்கள் வேத கோஷங்களைச் செய்த வண்ணம் ஆசீர்வதித்தனர்.

“பெரும் புகழ் வாய்ந்த இந்திரனால் இந்த சபையினர் அனைவரும் எல்லா நலன்களும் பெறும்படி ஆசீர்வதிக்கப்படட்டும்.

அனைத்தும் அறிந்த சூரிய தேவனால் இந்த சபையினர் அனைவரும் எல்லா நலன்களும் பெறும்படி ஆசீர்வதிக்கப்படட்டும்.

மஹாவிஷ்ணுவின் வாகனம் ஆன தெய்வீகப் பறவையான பறவைகளின் தலைவன் ஆன கருடனால் அமங்களாமனவற்றை அழித்தொழிக்கும் கருடனால் இந்த சபையினர் அனைவரும் எல்லா நலன்களும் பெறும்படி ஆசீர்வதிக்கப்படட்டும்.

ஞானத்தின் தலைவனும் குருவும் ஆன தேவகுரு பிருஹஸ்பதியால் இந்த சபையினர் அனைவரும் எல்லா நலன்களும் பெறும்படி ஆசீர்வதிக்கப்படட்டும்.

இவை முடிந்ததும், யுதிஷ்டிரனும், துரியோதனனும் தங்கள் தங்கள் ஆசனங்களில் இருந்து எழுந்து கொண்டு வியாசரின் அருகே வந்து அவருக்கு சாஷ்டாங்கமாக நமஸ்கரித்து எழுந்தார்கள். பின்னர் பீஷ்மருக்கும், திருதராஷ்டிரனுக்கும் நமஸ்கரித்து அவர்களின் ஆசிகளையும் பெற்றனர். பின்னர் இருவரும் தங்கள் ஆசனங்களுக்குத் திரும்பிச் சென்றனர். பீஷ்மர் தன் கைகளை உயர்த்திச் சைகை செய்தார். சபையில் அமைதி நிலவியது. மூச்சு விடக் கூட பயந்தாற்போல் எங்கும் அமைதி நிலவ அனைவரும் பீஷ்மர் பேசக் காத்திருந்தனர்.

1 comment:

ஸ்ரீராம். said...

பீஷ்மர் நிஜமாக உயரமாக இருந்திருப்பாரா? அவரின் கம்பீரம், வீரம் பற்றிய வர்ணனைகளால் நமக்கு அப்படித் தோன்றுகிறதா?

:)))))))))