Thursday, August 20, 2015

யுதிஷ்டிரனுக்குப் பட்டாபிஷேஹம்!

சற்று நேரத்தில் யுதிஷ்டிரன் அந்த ராஜசபைக்குள் நுழைந்தான். அவன் ஒரு பக்கம் வேத வியாசரும் இன்னொரு பக்கம் பீஷ்மரும் கூடவே வந்தனர். அவர்களுக்குப் பின்னர் தௌம்யரும், சோமதத்தரும் பின் தொடர்ந்தனர்.  யுதிஷ்டிரன் யுவராஜாவுக்கான கிரீடத்தை அணியவில்லை. தலையில் ஏதும் அணியாமலேயே வந்தான். சிவப்பு நிறப் பீதாம்பரத்தை உடுத்தி இருந்தான். தங்கத்தில் கற்கள் பதிக்கப்பட்ட பல்வகையான ஆபரணங்களை அணிந்திருந்தான். தலை நிமிர்ந்து அனைவரையும் பார்த்து மரியாதையும், அன்பும் ததும்பச் சிரித்தவண்ணம் இயல்பாகவே வந்த ராஜநடையுடன் சென்ற அவனைப் பார்க்கையிலேயே தர்மதேவதையே மண்ணில் இறங்கி நடமாடுவது போல் இருந்தது.

அவன் உள்ளே நுழையும்போதே ஒலிக்க ஆரம்பித்த எக்காளங்கள் இன்னமும் ஒலித்துக் கொண்டிருந்தன. அரசன் வரவை அறிவிக்கும் வண்ணமாகச் சங்கங்கள் முழங்கின. அங்கு குழுமி இருந்த ஆயிரக்கணக்கான மல்லர்களும் சங்குகளை முழங்கித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர். அங்கிருந்த அனைவரும் எழுந்து நின்று, “குரு வம்சத்தினருக்கு மங்களம்! குருவம்சத்தினர் நீடூழி வாழ்க!” என்றெல்லாம் முழக்கமிட்டனர்.  சபாமண்டபத்தின் மைய மேடையில் சிங்காதனத்திற்கு அருகே அவர்கள் வந்ததும், தௌம்யர் சந்தனத்தை யுதிஷ்டிரன் தலையிலும் கன்னங்களிலும் பூசி அக்ஷதைகளைத் தூவி அவனை ஆசீர்வதித்தார். அந்தப் பெரிய மேடையின் ஒரு பக்கம் விதுரன் தன் கைகளில்  கிரீடத்தையும் ஷாந்தனு மஹாராஜா பயன்படுத்தி வந்த வில்லையும், அம்புகளையும் வைத்துக் கொண்டு காத்திருந்தார். யுதிஷ்டிரன் தன் தலைமயிரைச் சேர்த்துக் கட்டி இருந்த முடிச்சை அவிழ்த்து விட்டான். பீஷ்மர் விதுரர் கைகளில் இருந்த கிரீடத்தை வாங்கி யுதிஷ்டிரன் தலையில் வைத்தார். விதுரரிடமிருந்து வில்லையும், அம்புகளையும் வாங்கி யுதிஷ்டிரன் கைகளில் கொடுத்தார். இதன் மூலம் குரு வம்சத்தினரை தனக்களிக்கப்பட்டஅதிகாரங்களுக்கு உட்பட்டு யுதிஷ்டிரனே தலைமை வகிப்பான் என்பதை உறுதி செய்தார். யுதிஷ்டிரனும் அந்த வில்லுக்கும், அம்புக்கும் மரியாதை செய்யும் விதமாக அவற்றை வாங்கித் தன் கண்களில் ஒற்றிக் கொண்டு அரியணையில் வைத்தான்.

யுதிஷ்டிரன் தலை குனிந்து அரியணைக்கு எதிரே கைகளைக் கூப்பிய வண்ணம் நிற்க வேத வியாசரும் மற்ற வேத பிராமணர்களுமாக நன்மைகளை வேண்டியும், ஆசீர்வாதங்களை அளிக்கும் விதமாகவும் மந்திர கோஷங்களைச் செய்ய ஆரம்பித்தனர். பாண்டுவின் மறைவுக்குப் பின்னர் சுருட்டி வைக்கப்பட்டிருந்த வெண்கொற்றக் குடையானது இப்போது சோமேஸ்வரால் பிரிக்கப்பட்டு அவன் தன் வயதான தந்தையுடன் சேர்ந்து அரியணைக்குப் பின்னால் குடையைப் பிரித்துப் பிடித்தபடி நின்று கொண்டான். அரியணையில் அமரும் முன்னர் முதலில் வியாசரையும் பின்னர் தாத்தா பீஷ்மரையும் நமஸ்கரித்தான் யுதிஷ்டிரன். பின்னர் முறையே திருதராஷ்டிரன், பலராமன், துரோணர், கிருபர், தன் மதகுருக்களான தௌம்யர், சோமதத்தர் ஆகியோரையும் தன் தாய் குந்தியையும் நமஸ்கரித்தான். பின்னர் கிருஷ்ணன் பக்கம் திரும்பிய யுதிஷ்டிரனைத் தன் இருகரங்களையும் நீட்டி வரவேற்றான் கிருஷ்ணன். அவனை அப்படியே அணைத்துக் கொண்டான் யுதிஷ்டிரன். பின்னரே அரியணையில் அமர்ந்தான். ஒவ்வொரு ஆசனத்திற்கும் பின்னர் நின்று கொண்டிருந்த சேடிப் பெண்கள் அதுவரை பதுமைகள் போல் அசையாமல் நின்று கொண்டிருந்தனர். இப்போது யுதிஷ்டிரன் அமர்ந்ததும் உயிர் பெற்றவர்கள் போல் தங்கள் கரங்களில் இருந்த சாமரங்களை வீச ஆரம்பித்தனர்.

சபையில் கொஞ்சம் கசமுசவென்ற சப்தம் எழுந்திருந்தது. பீஷ்மர் தன் கைகளை உயர்த்திக் காட்டி அமைதியை நிலைநாட்ட முயன்றார். பீஷ்மர் மிகவும் உணர்ச்சி வயப்பட்டிருப்பது அனைவருக்கும் பார்க்கும்போதே புரிந்தது. எத்தனை வருடங்கள்! எத்தனை வருடங்கள்! இந்தக் குரு வம்சத்தினரின் இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தை தனி ஒருவராக எத்தனை வருடங்களாக பீஷ்மர் கட்டிக் காத்து வருகிறார்! எதற்காக! எல்லாம் இத்தகையதொரு அருமையான தருணத்துக்காகவே! ஆம்! இப்படி ஓர் சர்வ வல்லமையும் பெற்ற இளைஞன் இந்த அரியணையில் அமர வேண்டும்; ஆட்சி புரிய வேண்டும். இங்கே தர்மத்தின் ஆட்சி நிலைபெற்று ஓங்க வேண்டும் என்பதே அவர் விருப்பமாக இருந்தது. கடைசியில் அது நிறைவேறும் தருணம் நெருங்கி விட்டது. இத்தனை வருடங்களாகத் தனி ஒருவனாக அவர் தூக்கிச் சுமந்த பாரத்தை எல்லாம் இறக்கி வைக்கும் நேரம் நெருங்கி விட்டது. தன் வயதான தோள்களினால் சுமக்க முடியாமல் சுமந்து வரும் இந்த மாபெரும் சாம்ராஜ்ய பாரத்தை யுதிஷ்டிரனின் இளந்தோள்களில் இனி சுமத்தலாம். ஆஹா! எத்தகைய அரிய தருணம் வாய்த்துள்ளது! ஆனாலும்!!!!! பீஷ்மரின் மனம் பல்லாண்டுகள் பின்னோக்கிச் சென்றது. பாண்டுவுக்கு ராஜ்ய பட்டாபிஷேஹம் செய்து வைத்த அந்த நாளை அவர் நினைவு கூர்ந்தார். இதே சபாமண்டபத்தில் அதுவும் நடந்தது!
 

1 comment:

ஸ்ரீராம். said...

ம்ம்ம்.... இப்போ ஃபிளாஷ்பேக்கா!