Wednesday, August 26, 2015

யாதவர்களின் பரிசு!

அதற்குள்ளாகக் கிருஷ்ணன் மெல்ல மெல்ல தன் அடுத்த அஸ்திரத்தைப் பிரயோகித்தான். பீஷ்மரைப் பார்த்து, “தாத்தா அவர்களே! ஒருவேளை இங்குள்ள சில படித்த வேத பிராமணர்கள், மல்லர்கள், படை வீரர்கள், தச்சர்கள், வைசியர்கள், குருவம்சத்தின் பிரதானிகளில் சிலர், க்ஷத்திரியப் பெருமக்களில் சிலர், கைவினைஞர்கள் என்று சிலர் ஆகியோர் அவர்கள் குடும்பத்துடன் ஐந்து சகோதரர்களுடன் சேர்ந்து காண்டவபிரஸ்தம் போக நினைக்கலாம். ஆகவே அவர்கள் செல்லவேண்டிய ஏற்பாடுகளையும் கவனிக்க வேண்டும்.” என்றான். கூட்டம் அசையாமல் கேட்டுக் கொண்டிருந்தது. இதை அவர்கள் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. இப்போது கிருஷ்ணன் சொன்னதைக் கேட்டது, அவர்களுக்கு மனதில் பெரும் நிம்மதி ஏற்பட்டது. ஆஹா, துரியோதனனின் கொடுங்கோன்மையிலிருந்து தப்ப இப்படி ஒரு வழி இருக்கிறதா என்று சந்தோஷமும், மகிழ்ச்சியும் அடைந்தார்கள். அதுவரை அவர்கள் மனதில் ஏற்பட்டிருந்த அச்சம் மறைந்தது. அனைவரும் சாது! சாது! என்று கோஷித்துத் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

இந்தச் செய்தி இடி போல் இறங்கியது துரியோதனனுக்கு! அவன் இதை எதிர்பார்க்கவில்லை. ஆனால் இதை எதிர்த்துப் பேச நினைத்தும் அவனால் பேச முடியவில்லை. கிருஷ்ணனின் இருப்பு அந்த சபையையே ஒரு மந்திரக் கயிறால் பிணைத்திருப்பது போல் அவனையும் பிணைத்திருந்தது. அதிலிருந்து அவனால் வெளிவர முடியவில்லை. தன்னுடைய எதிரிப்பைக் காட்ட நினைத்தாலும் அவனால் இப்போது என்ன சொல்ல முடியும்? துஷ்சாசனனின் கொடூரமான பார்வையைக் கண்ட ஷகுனி மெல்லக் குனிந்து அவன் காதுகளில், “தந்திரக்கார இடையன் இவன்!” என்று கூறினான். பீஷ்ம பிதாமகருக்குக் கிருஷ்ணனின் சாதுரியம் புரிந்தது. ஆகவே அவனைப் பார்த்துப் புன்னகை புரிந்தார். சில நொடிகளில் பாண்டவர்களுக்கு திருதராஷ்டிரன் அளித்த வனவாசத்தைக் கிருஷ்ணன் மாற்றி விட்டானே! இப்போது அவர்களால் குரு வம்சத்தினரின் இன்னொரு புத்தம்புதிய நகரமும், அதைச் சார்ந்ததொரு சாம்ராஜ்யமும் உருவாகப் போகிறது! இது குரு வம்சத்தினருக்கு மட்டுமல்ல; பாண்டவர்களுக்கும் ஒரு வகையில் மாபெரும் வெற்றியே!

கிருஷ்ணனைப் பார்த்து அவர், “வாசுதேவா! நான் உனக்கு என்னுடைய வாக்குறுதியை அளிக்கிறேன். இந்த ஹஸ்தினாபுரத்திலிருந்து எவர் செல்ல நினைக்கின்றனரோ அவர்களைப் பாண்டவர்களுடன் செல்ல அனுமதி கொடுக்கிறேன். அவர்கள் செல்கையில் அவர்கள் செல்வங்களை எல்லாம் கூடவே எடுத்துச் செல்லட்டும். தங்கமும், ரத்தினங்களும், வைரமும் மட்டுமில்லாமல் கால்நடைச் செல்வங்கள், அவர்களுடைய குதிரைகள், பசுக்கள் மற்றும் அவர்கள் வைத்திருக்கும் மாட்டு வண்டிகள், ரதங்கள் இன்னும் என்னவெல்லாம் வைத்திருக்கின்றனரோ அனைத்தும் எடுத்துச் செல்லட்டும். மேலும் அவர்களுக்குத் தேவைப்பட்டால் ஹஸ்தினாபுரத்தில் அவர்கள் விட்டுச் செல்லும் சொத்துக்களுக்கு ஈடான பணத்தை துரியோதனன் அளிப்பான்.”

“சாது! சாது!”

கிருஷ்ணன் அப்போது எழுந்து சென்று பலராமன் அருகே சென்று அவன் காதுகளில் மெதுவாக ஏதோ சொன்னான். ரகசியமானதொரு சம்பாஷணை இருவருக்கும் நடந்தது. உடனே அர்ஜுனன் அருகே அமர்ந்திருந்த அக்ரூரரை அழைத்த கிருஷ்ணன் அவரையும் உடன் வைத்துக் கொண்டு மேலும் பலராமனோடு ஏதோ ஆலோசனை செய்தான். ராஜசபை முழுவதும் அசையாமல் அப்படியே சித்திரங்கள் போல் அமர்ந்திருந்தது. ஆச்சரியத்தால் அகன்று விரிந்த விழிகளுடன்  பெருமிதம் பொங்க அமர்ந்திருந்த பலராமனையும் அவனுடன் சற்றும் மரியாதை குறையாமல், பாங்குடன் விநயத்துடன் பேசிக் கொண்டிருந்த கிருஷ்ணனின் அகன்ற கண்களில் கண்ட கருணையையும் பார்த்து வியந்து கொண்டிருந்தார்கள். தன் சகோதரனைக் கிருஷ்ணன் மிகுந்த மரியாதையுடன் நடத்துவதைக் கண்டு அதிசயித்தார்கள்.

கிருஷ்ணன் இதோ, இங்கே, இப்போது ஓர் அதிசயத்தைச் செய்து விட்டான். அற்புதம் ஒன்று நடந்திருக்கிறது. துரியோதனன் வெட்கத்தாலும் அவமானத்தாலும் தலை குனிந்து இருக்க வேண்டும். திருதராஷ்டிரனுக்கும் அப்படியெ. அவனுடைய பாரபட்சமான நடவடிக்கையே அவனுக்கு ஓர் தண்டனை ஆகி விட்டது. கிருஷ்ணனும், அக்ரூரரும் தங்கள் இடங்களுக்குத் திரும்பினார்கள். பலராமன் தன் தலையை உலுக்கிக் கொண்டு தன்னுள் இருந்த மயக்க நிலையை அகற்றினான். பின்னர் எழுந்து நின்று தன் கம்பீரமான குரலில் பேசத் தொடங்கினான். சபை முழுவதும் கவனமாக அவன் பேச்சைக் கேட்டது.

“சக்கரவர்த்தி ஷாந்தனுவின் அருமை மைந்தரே! காம்பில்யத்தில் பாஞ்சால இளவரசிக்கு நடந்த சுயம்வரத்தில் பங்கெடுக்கவே நாங்கள் யாதவ அதிரதர்கள் அனைவரும் இங்கே வந்தோம். அப்போது பாண்டவர்களால் பாஞ்சால இளவரசி வெல்லப்படுவாள் என்பதை நாங்கள் சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை. நாங்கள் ஆர்யவர்த்தம் வந்த சமயம் இங்கே நடைபெற்ற இரு வேறு புனிதமான, மங்களகரமான நிகழ்வுகள் நடைபெற்றதில் நாங்கள் மகிழ்கிறோம். ஒன்று பாஞ்சால இளவரசி பாண்டவர்கள் ஐவரையும் கரம் பிடித்து மணந்தது, இன்னொன்று பாண்டவர்களில் மூத்தவன் ஆன யுதிஷ்டிரன் குரு வம்சத்துச் சக்கரவர்த்தியாக முடி சூட்டப்பட்டது. எங்கள் அத்தையின் மக்கள் ஐவருக்கும் பொருத்தமானதொரு பரிசை நாங்கள் துவாரகையின் யாதவர்கள் கொடுத்தே ஆக வேண்டும். அது எங்கள் கடமை! இப்போது அந்தப் பரிசை எங்கள் மன்னரான உக்ரசேனரின் சார்பில் வாசுதேவக் கிருஷ்ணன் இந்த சபையில் அறிவிப்பான். எங்கள் தந்தையான வசுதேவரின் சார்பிலும் மற்றும் துவாரகையின் யாதவர்கள் அனைவரின் சார்பிலும் இந்தப் பரிசை கிருஷ்ணன் அறிவிக்கிறான்.” அங்கே அதுவரை ஏற்பட்டிருந்த இறுக்கமானதொரு சூழ்நிலையை பலராமனின் பேச்சும், அவனின் சிரிப்பும் ஏற்படுத்தியது. அங்கே மெல்ல மெல்ல உயிரோட்டம் ஏற்பட்டது. திருதராஷ்டிரன் பேச்சால் ஏற்பட்டு இருந்த இறுக்கம் தளர்ந்து அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

மீண்டும் சபை முழுவதும் எதிர்பார்ப்பில் ஆழ்ந்தது. கிருஷ்ணன் அறிவிக்கப் போகும் பரிசு என்னவாக இருக்கும் என்று அனைவரும் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு ஆவலுடன் காத்திருந்தனர். கிருஷ்ணன் அப்போது எழுந்து, “குரு வம்சத்துச் சக்கரவர்த்தியாரே! மாட்சிமை பொருந்திய என் தமையன் பலராமன் அனுமதியுடன், உங்கள் அனைவருக்கும் யாதவர்கள் சார்பில் ஒரு சிறு பரிசை அளிக்கிறேன்.” என்று கூறி நிறுத்தினான். அனைவரும் மூச்சுக்கூட விட மறந்து காத்திருந்தனர்.

2 comments:

அப்பாதுரை said...

என்ன பரிசோ?

துரியோதனனின் ஆட்சி கொடுங்கோல் ஆட்சி என்று குறிப்பிடப்பட்டிருக்கிறதா? மக்களைக் கொடுமைப்படுத்தினானா?

ஸ்ரீராம். said...

எது திட்டமிடப்பட்டதோ அது நடக்கிறது!!

:))))