Saturday, August 22, 2015

இனி காண்டவப்ரஸ்தமே உங்கள் நாடு!

சற்று நேரம் பழைய நினைவுகளில் ஆழ்ந்த பீஷ்மர், தன்னைச் சுதாரித்துக் கொண்டு, உரத்த குரலில் பேச ஆரம்பித்தார். ஆனால் அவர் குரலில் உணர்ச்சிகள் மிகுந்திருந்தன. இதைக் கண்டோருக்கும், பீஷ்மரின் சொற்பொழிவுகளை ஏற்கெனவே கேட்டிருப்போருக்கும் ஆச்சரியம் அளித்தது. எதற்கும் கலங்காத இரும்புப் பாறை என அனைவரும் நினைத்திருந்த பீஷ்மரா இவ்வளவு உணர்ச்சிகரமாகப் பேசுகிறார்! அனைவரும் கூர்ந்து கவனித்தனர்!

“என் அருமைக் குழந்தாய்! யுதிஷ்டிரா! இதே சபையில் உன் தந்தையையும் பல வருடங்கள் முன்னர் இந்த ஹஸ்தினாபுரத்தின் சக்கரவர்த்தியானதற்கு என் ஆசிகளைத் தெரிவித்தேன். இப்போது அந்த மஹாதேவன் அருளாலும், கடவுளரின் ஆசிகளாலும் இதே ராஜ சபையில் நீ அரியணை ஏறுவதைப் பார்க்கும் மகிழ்ச்சியும், உன்னை ஆசீர்வதிக்கும் பெரும்பேறும் எனக்குக் கிடைத்திருக்கிறது. இது என்னை உவகை கொள்ள வைக்கிறது. மாபெரும் சக்கரவர்த்தியான பரதன் ஆண்ட இந்த நீண்ட பாரம்பரியம் கொண்ட ராஜ வம்சத்தில் உன்னைப் போன்ற தர்ம, நியாயத்துக்குக் கட்டுப்பட்ட இளவரசன் அரியணை ஏறுவது சாலப் பொருந்தும்.”

“என் குழந்தாய்! உன் முன்னோர்கள் எப்படி தர்மத்திற்கும் நியாயத்திற்கும் கட்டுப்பட்டு அரச தர்மங்களையும் அரசனுக்குரிய கடமைகளையும் மறவாமல் ஆட்சி புரிந்து இந்த குரு வம்சத்திற்குப் பெருமை சேர்த்தனரோ அவ்வாறே நீயும் இந்த அரியணையில் நீண்ட காலம் அமர்ந்திருந்து நல்லாட்சி தரப் பிரார்த்திக்கிறேன். உன் ஆட்சியில் தர்மம் ஓங்கிச் செழித்து வளரட்டும்!”

“உன் மூதாதையரைப் போலவே நீயும் ராஜசூய யாகம், அஸ்வமேத யாகம் போன்ற மாபெரும் யாகங்களை மேற்கொண்டு நடத்திப்பெருமை பெறுவாயாக!”

“வீசும் தென்றல் காற்றில் சுகந்த மணமுள்ள பூக்களின் நறுமணம் நானாதிசைகளிலும் அதுவாகச் சென்று பரவுவது போல உன் பெயரும், புகழும், பெருமையும் இந்தப் பரந்த பாரத வர்ஷத்தின் நானாதிசைகளிலும் பரவுவதாக!”

“இறைவன் கருணையினாலும், அவன் அருளினாலும் நீ நல்ல செயல்களையே செய்ய வேண்டும் என்றும், நல்ல யோசனைகளையே யோசிக்க வேண்டும் என வேண்டிப் பிரார்த்திக்கிறேன். இந்தக் குரு வம்சத்தின் புகழை நீ நிலைநாட்ட வேண்டுமென்றும் இந்த சாம்ராஜ்யத்தின் ஒவ்வொரு வீட்டிலும் தர்மம் நிலவ வேண்டும் என்றும் குரு வம்சத்தினருக்கும், இந்த நாட்டு மக்களுக்கும் உன் செயல்கள் அனைத்தும் பெரும் சிறப்பைக் கொண்டு வர வேண்டும் என்றும் பிரார்த்திக்கிறேன்.”


எங்கும் வெற்றி முழக்கமும், “சாது, சாது!” என்னும் கோஷமும் கிளம்பின. அப்போது திருதராஷ்டிரனுக்குப் பின்னர் நின்றிருந்த அவன் அமைச்சரான சஞ்சயன், திருதராஷ்டிரன் காதுகளில் ஏதோ கிசுகிசுக்க, உடனே திருதராஷ்டிரன் தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேசத் தயார் செய்து கொண்டான். அவையில் இருந்த சப்தம் குறைந்து எங்கும் நிசப்தம் நிலவியது. திருதராஷ்டிரன் மிகவும் முயற்சி செய்து பேச ஆரம்பித்தான். எனினும் அவனுக்கு வார்த்தைகளே வரவில்லை. தடுமாறினான்.

யுதிஷ்டிரனைப் பார்த்து, “குரு வம்சத்து மஹாராஜா! என்னுடைய மகன்களை விட அதிகம் எனக்குப் பிரியமானவனே! என்னுடைய ஆசிகளையும் ஏற்றுக் கொள்வாய்! பரிசுத்தமான நம்முடைய நினைவுகளில் என்றென்றும் தங்கி இருக்கும் நம் முன்னோர்களைப் போல் நீயும் சகல விதத்திலும் மாட்சிமை பொருந்தி பல்லாண்டு ஆட்சி புரிவாயாக!”

திருதராஷ்டிரன் மீண்டும் தடுமாறினான். அவனுக்குப் பேச்சு வரவில்லை. மீண்டும் மீண்டும் தொண்டையைக் கனைத்துக் கொண்டு பேச முயற்சி செய்தான். அவன் உதடுகள் நடுங்கின. மிகவும் உணர்ச்சிவசப் பட்டிருக்கிறான் என்பது பார்ப்போருக்கு எளிதில் புரிந்தது.

“நீ பல வசந்தங்களைக்கண்டு ஆட்சி புரிவாய்! என்னுடைய அருமைச் சகோதரனும், உன் தந்தையுமான  பாண்டு பெற்றிருந்த புகழைப் போல் நீயும் புகழ் பெறுவாயாக!” மீண்டும் நிறுத்திக் கொண்டு தன் வலுவை எல்லாம் சேர்த்துக் கொண்டான் திருதராஷ்டிரன். “……… உன்னால் இந்த நாட்டில் அமைதி நிலவ வேண்டும்……………… சாந்தி நிலவ வேண்டும்…………… மிக மிக மெதுவாக இதைச் சொன்னான் திருதராஷ்டிரன். அவையோருக்கு இது சரியாகக் காதில் விழாததால் உன்னிப்பாய்க் கேட்டனர். “உன்னுடைய இந்தப் பட்டாபிஷேஹ நிகழ்வால் குரு வம்சத்தில் என்றென்றும் அமைதியும், சாந்தியும் நிலவட்டும்.” என்ற திருதராஷ்டிரன் விண்ணை நோக்கித் தன் குருட்டுக் கண்களைத் திருப்பினான். மேலே உள்ள கடவுளரின் ஆசிகளை வேண்டுவது போல் தன் கைகளை விரித்தான். “மேலும்…………..மேலும்………… என் மகன்கள் நூற்றுவர்……………….. அதாவது உன் பெரியப்பன் வழிச் சகோதரர்கள்…………………………….திருதராஷ்டிரனின் தொண்டை அடைத்துக் கொண்டது.

தர்மசங்கடமான அமைதி அங்கே நிலவியது. துரியோதனனையும், அவன் சகோதரர்களையும் இந்த நேரம் சொல்லி இருக்கக் கூடாதோ என்னும் வண்ணம் அனைவரும் சங்கடத்தில் ஆழ்ந்தனர். ஆனால் திருதராஷ்டிரன் மீண்டும் பேச ஆரம்பித்தான். “மாட்சிமை பொருந்திய யுதிஷ்டிரா! நீ எனக்கு ஒரு மாபெரும் பொறுப்பைச் சுமத்தி விட்டாய்! துரியோதனனுக்கு எந்தப் பகுதியை அளிப்பது! உனக்கு எந்தப் பகுதியை அளிப்பது! என்பதை எல்லாம் நீ என்னையே முடிவு செய்யச் சொல்லி விட்டாய்! இதன் மூலம் என் பொறுப்பும், சுமையும் அதிகரித்து விட்டது. உனக்கு எதைக் கொடுப்பேன்? துரியோதனனுக்கு எதைக் கொடுப்பேன்?” திருதராஷ்டிரன் திகைத்தாற்போல் நிறுத்தினான்.  ராஜசபையே நெருப்பின் மீது நிற்பது போல் தத்தளித்தது.

ஆனால் திருதராஷ்டிரன் மீண்டும் தன் சக்தியை எல்லாம் சேர்த்துக் கொண்டு பேசத் தயார் செய்து கொண்டான். அவன் என்ன சொல்ல நினைத்தானோ அதைச் சொல்லியே தீருவான் என அனைவரும் புரிந்து கொண்டனர். “ நம்முடைய சாம்ராஜ்யம் யமுனைக்கரை வரை பரவி விரிந்துள்ளது. காண்டப்ரஸ்தம் யமுனையின் கரையில் உள்ளது, அது தான் ஒரு காலத்தில் நம்முடைய தலைநகரமாக இருந்தது. அங்கே தான் நம் முன்னோர்களான பூருரவஸ், நகுஷன், யயாதி ஆகியோர் ஆட்சி புரிந்தனர். “ இப்போது திருதராஷ்டிரன் குரல் மீண்டும் மெலிந்து நைந்தது. “அது நம்முடைய பூர்வீக முன்னோர்கள் ஆட்சி புரிந்த நகரம். அங்கே சென்று நீங்கள் உங்கள் ஆட்சியைத் தொடரலாம்!”

மெதுவாகச் சொல்லி முடித்தான் திருதராஷ்டிரன். ராஜசபையில் சிறிது நேரம் வரை நிசப்தமே மேலோங்கியது. அனைவரும் திகைத்துப் போய்ப் பேச்சே வராமல் அமர்ந்திருந்தனர். காண்டவப்ரஸ்தமா? அந்தக் காட்டிலா? கடவுளே! காட்டை அழித்தல்லவோ நகரை நிர்மாணிக்க வேண்டும்! நாகரிக வாழ்க்கை வாழும் ஆரியவர்த்தத்தின் எல்லைக்கப்பால் அல்லவோ உள்ளது! அங்கே தானே ராக்ஷசர்களால் பாதிக்கப்பட்டவர்களும், நர மாமிசத்தை இரையாகத் தேடும் கொடிய காட்டு மிருகங்களும் வசிக்கின்றன. மனித நாகரிகமே அங்கே இல்லையே! ஆஹா! இதற்குப் பாண்டவர்களை நாடு கடத்தி இருக்கலாமே! இது அதைவிடக் கொடிய தண்டனையாகவன்றோ இருக்கிறது! ம்ம்ம்ம்…… அப்போது ஹஸ்தினாபுரத்தை துரியோதனனா ஆளப் போகிறான்! இது என்ன கொடுமை!

துரியோதனன் துஷ்சாசனனைப் பார்த்தான். அவன் முகத்திலும் வெற்றிப் புன் சிரிப்பு. இருவரும் தாங்கள் அடைந்த வெற்றியைப் புன்சிரிப்புடன் பரிமாறிக் கொண்டனர். மொத்த சபையும் அடுத்து என்ன நடக்கப் போகிறதோ என்பதற்குக் காத்திருந்தது. இந்தப் பட்டாபிஷேஹம் கடைசியில் சகோதரச் சண்டையில் முடிந்து விடுமோ? அதோ! அங்கே வேதவியாசரும் வியப்பினால் அகன்று விரிந்த கண்களோடு உட்கார்ந்திருக்கிறார். இந்தத் திடீர் மாற்றத்திற்குக் குறிப்பிட்ட காரணம் என்னவென்று தனக்குள் யோசிக்கிறார். ஒரு கணம், ஒரே கணம் பீஷ்மர் சொல்லவொண்ணா ரௌத்திரம் அடைந்தார். அவர் கண்களின் மின்னல் வெட்டு அதை நிரூபித்தது. இந்தக் குருட்டு அரசன் இவ்வளவு வருடங்களாக அவர் பாடுபட்டு வந்ததை எல்லாம் ஒன்றுமே இல்லை என்று ஆக்கி விட்டானே! என்ன கொடுமை இது!

1 comment:

ஸ்ரீராம். said...

விதி வேலை செய்கிறது. நடப்பவை நடந்துதானே தீர வேண்டும்!