Thursday, December 22, 2016

நெறி உரைத்திடும் மேலவர் வாய்ச்சொல் நீசரானவர் கொள்ளுவதுண்டோ?

ஆனால் விதுரர் தான் ஓர் விஷயத்தில் சரியாகப் புரிந்து கொள்ளாததையும் அப்போது உணர்ந்தார். பொதுவாக விதுரர் நினைப்பது போல் தான் நடந்து வந்திருக்கிறது. தவறியதே இல்லை. ஆனால் இப்போது விதுரர் தாம் தவறாகப் புரிந்து கொண்டு விட்டோம் என்பதை உணர்ந்து கொண்டார்.  மிக மோசமாக நடக்கப் போகிறது என்பதையும் கண்டு கொண்டார். இந்த விளையாட்டின் விளைவுகள் யுதிஷ்டிரனையும், மற்ற நான்கு சகோதரர்களையும் சொத்து இழக்கச் செய்வது மட்டுமே என நினைத்திருந்தார் விதுரர். மிஞ்சிப் போனால் இந்திரப் பிரஸ்தத்தையும் பிடுங்குவார்கள் என்றே எண்ணி இருந்தார். ஆனால் துரியோதனாதியரின் நோக்கம் அதுவல்ல என்பதை இப்போது தான் தெளிவாகப் புரிந்து கொண்டார் விதுரர். பாண்டவர்கள் ஐவரையும் சொத்துக்களை மட்டுமில்லாமல் நாட்டையும் இழக்க வைத்து, பாண்டுவின் புத்திரர்கள் என்னும் அந்தஸ்திலிருந்தும் அவர்களை விலக வைத்துப் பின் க்ஷத்திரிய அரசகுலத்தவர் என்னும் தகுதியிலிருந்தும் அவர்களை நீக்கித் தங்கள்  அடிமைகளாகச் செய்ய வேண்டும் என்பதே துரியோதனாதியரின் நோக்கம் என்பதை விதுரர் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொண்டார். அவர் மனம் கொதித்தது.

ஏற்கெனவே பீஷ்மரும் விதுரரும் ஹஸ்தினாபுரத்தின் அரசாட்சி நிலையாக இருப்பதற்குச் செய்து வந்து கொண்டிருந்த பல்வேறு முயற்சிகளையும் முறியடித்துத் தன் விருப்பம் போல் நடந்து கொண்டு வந்தான் துரியோதனன்.  பீஷ்மரின் அரசு அதிகாரத்தை நிலைக்க விடாமல் குலைக்கும்படி நடந்து வந்தான். மிக இளம் வயதிலிருந்தே துரியோதனனுக்குப் பாண்டவர்கள் பால் இருந்த அளவற்ற வெறுப்பின் மதிப்பீட்டைச் சரியாகப் புரிந்து கொள்ளத் தவறி விட்டார் விதுரர். அதை நினைத்து இப்போது தன்னைத் தானே நொந்து கொண்டார். விதுரர் இப்போது திருதராஷ்டிரன் பக்கம் திரும்பி அவன் காலைத் தொட்டார். பீஷ்மரிடமிருந்து மௌனமாக சம்மதத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவருக்கு அவரின் தலை அசைப்பே போதுமானதாக இருந்தது.  அதன் பின்னர் திருதராஷ்டிரனும் அனுமதி கொடுத்தான்.

அனுமதி கிட்டியதும் விதுரர் பேசினார்: “பிரபுவே,  நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். இந்த விளையாட்டை இத்துடன் நிறுத்துங்கள். நாம் இருவரும் ஒன்றாகத் தான் தொட்டிலில் வளர்ந்தோம். அப்போதிலிருந்து நாம் நண்பர்களாகவும் இருந்து வருகிறோம். இத்தனை வருடங்களாக நான் உண்மையாகவும் நேர்மையாகவும் உங்களுக்காக உழைத்து வருகிறேன். என்னால் இப்போது இந்த நேர்மையற்ற செயலைப் பார்த்துக் கொண்டு மௌனமாக இருக்க இயலாது. ஆகவே நான் இப்போது உங்களை எச்சரிக்கிறேன். ஹஸ்தினாபுரம் மெல்ல மெல்ல அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது!” என்றார்.

துரியோதனனும் அவன் ஆதரவாளர்களும் விதுரரை கோபமாகவும் ஆத்திரமாகவும் பார்த்தார்கள். அவர்கள் தாங்கள் முதல் நாள் இரவு எடுத்திருந்த முடிவைச் செயல்படுத்தும் நேரம் விரைவில் வந்து விடும் என்றும் தங்கள் முடிவைச் செயல்படுத்திவிடலாம் என்றும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். விதுரர் ஆனால் தொடர்ந்து பேசினார்:”பிரபுவே, உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? துரியோதனனின் பிறப்பின் போது நமக்குத்  தெரிந்து எத்தனை எத்தனை கெட்ட சகுனங்கள் தோன்றின என்பதை நீங்கள் அறிவீர்கள் அல்லவோ? இதோ உங்கள் இந்த மகன் தான் இவ்வுலகம் முற்றிலும் அழியக் காரணகர்த்தாவாக இருக்கப் போகிறான். ஆகவே அவனைக் கொன்று தான் அந்தப் பேரழிவிலிருந்து நாம் இவ்வுலகைக் காக்க வேண்டும். அவனைக் கொல்வதில் தவறில்லை!” என்றார்.

விதுரரின் மென்மையும் இனிமையும் நிறைந்த குரல் ஓர் பயங்கரப் புயல் காற்றின் ஓசையைப் போல் அந்த சபாமண்டபத்தில் ஒலித்ததை அனைவரும் உணர்ந்தனர். விதுரர் மேலும் தொடர்ந்து பேசினார்: “மாட்சிமை பொருந்திய மன்னா! இந்த விளையாட்டு மேலும் தொடர்ந்தால், நமக்குச் சொல்லப்பட்ட தீர்க்க தரிசனங்கள் அனைத்தும் உண்மையாகிவிடும். உங்கள் மகனால் பாண்டவ சகோதரர்களிடமிருந்து கிட்டத்தட்ட கொள்ளையடிக்கப்பட்ட இந்தச் செல்வங்களும் அவர்களின் உடைமைகளும் நல்லதற்கல்ல. அந்த இறைவனுக்கே இது பொறுக்காது. இறைவனின் கோபத்துக்கு இவர்கள் ஆளாகப் போகின்றனர். உங்களுடைய இந்த முதுமையான வயதில் நீங்கள் உங்கள் குமாரர்கள் அனைவரும் அழியப் போவதை, அதுவும் உங்கள் எதிரே அழியப் போவதை உணரப் போகிறீர்கள். ஆம், ஐயா, உங்கள் அனைத்து மகன்களும் அழிந்து போகப் போகின்றனர்.”

“அரசே, உங்கள் மகன் துரியோதனன், பாண்டவ சகோதரர்களுடன் நேருக்கு நேர் நின்று போரிட தைரியமில்லாமல் இருக்கிறான். போர்க்களத்தில் அவர்களை எதிர்கொள்ள அவனுக்கு இஷ்டமில்லை. “இப்போது ஷகுனியைச் சுட்டிக்காட்டிய வண்ணம் விதுரர் மேலும் பேசினார்:” இதோ இந்த தந்திரக்கார ஷகுனி, காந்தார இளவரசன் துணையுடன் உங்கள் மகனும் அவன் ஆதரவாளர்களும் பாண்டவர்களின் சொத்துக்கள் அனைத்தையும் கொள்ளையடித்து விட்டனர். நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், பிரபுவே. போதும், இந்த விளையாட்டை இத்துடன் நிறுத்துங்கள். நிறுத்தச் சொல்லி ஆணையிடுங்கள். நீங்கள் அப்படிச் செய்யவில்லை எனில் அனைத்து க்ஷத்திரியர்களும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு செத்துப் போகப் போகின்றனர்.  தர்மம் அழியப் போகிறது. குரு வம்சத்தினரால் தர்மத்தைக் காக்க முடியவில்லை எனில், நீங்கள் கட்டிய மகத்தான சாம்ராஜ்யக் கோட்டை தகர்ந்து விடும். ஆசிரமங்கள் அனைத்தும் கல்லறைகளாகிவிடும். சுடுகாடாகி விடும். க்ஷத்திரியர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளுவார்கள். மிச்சம் மீதி இருப்பர்கள் இப்படிப்பட்ட கோரமான வலிமைக்கு முன் எதிர்கொள்ள முடியாமல் செய்வதறியாமல் தவிப்பார்கள்.”

ஆனால் திருதராஷ்டிரன் வாயே திறக்கவில்லை. ஒரு வார்த்தை கூட அவன் வாயிலிருந்து வெளிவரவில்லை. துரியோதனன் கோபத்தில் கொதித்தான். தன் புருவங்களை நெரித்த வண்ணம் இடையில் இருந்த வாளில் கை வைத்து அதை உருவிய வண்ணம் துஷ்சாசனன் துணைக்கு வர விதுரர் பக்கம் பாய்ந்தான். “சித்தப்பா,  எங்கள் சோற்றைத் தின்று கொண்டே எங்கள் எதிரிகளைப் புகழ்ந்து பேசுவதில் அதுவும் எங்கள் எதிரே பேசுவதில் நீங்கள் வல்லவர், நிபுணர்!” என்று கோபம் கொந்தளிக்கக் கூறினான். “சித்தப்பா, என் சிறு வயதிலிருந்தே நீங்கள் எனக்குத் தீங்கு தான் புரிந்து வந்திருக்கிறீர்கள். நீங்கள் ஓர் மிருகம். உங்களுக்கு உணவளித்த கைகளையே பாய்ந்து கடிக்கிறீர்கள். நாயை விடக் கேவலமாக நடந்து கொள்கிறீர்கள். இப்போது என் தந்தை என்னிடம் வைத்திருக்கும் பாசத்தையும் கொன்று என்னையும் அழிக்க நினைக்கிறீர்கள்!” என்று கத்தினான்.

விதுரரைப் பார்த்துச் சீறினான் துரியோதனன். அவன் கைகள் மட்டுமின்றி உடலே கோபத்தில் துடித்தது. “ஹூம், என்ன இருந்தாலும் ஓர் சேடியின் மகன் தானே, நீங்கள்! உங்களிடமிருந்து இதை விட அதிகமாக எதையும் எதிர்பார்க்க முடியாது!” என்று ஏளனமாகக் கூறினான்.  சற்று நேரம் நிறுத்திய துரியோதனன் மேலும் தொடர்ந்தான். “நீங்கள் இந்தப் பாண்டவ குமாரர்களுக்குச் சாதகமாக நடந்து கொண்டு பாரபட்சம் பார்க்கிறீர்கள். இனிமேலாவது அப்படி எல்லாம் நடந்து கொள்ளாதீர்கள்!”  “துரியோதனன் விதுரரைக் கொல்லப் போகிறானா?” இதுவே அங்குள்ள அனைவர் மனதிலும் எழுந்த கேள்வி!  துரியோதனன் மேலும் தொடர்ந்தான்.

இகழ்ச்சி நிரம்பிய குரலில் அவன் கூறியதாவது:” எங்களைப் பற்றிக் கவலைப்படாதே, வேலைக்காரியின் மகனே! உன்னுடைய அருமை அண்ணன் மகன்களுக்காகவென்று உன்னுடைய துக்கத்தைக் காப்பாற்றி வைத்துக் கொள்! உன்னுடைய வருத்தம் எல்லாம் அவர்களுக்கே போகட்டும். விரைவில் அவர்கள் அனைவரும் எனக்கு அடிமையாவார்கள்!” என்று உதடுகளை வக்கிரமாக நெளித்த வண்ணம் கூறினான். வெறுப்பும் இகழ்ச்சியும் கலந்த குரலில் சிரித்த வண்ணம் அவன் மேலும் தொடர்ந்து, “நான் என்னவாக இருந்தாலும் சரி. நான் என்ன செய்தாலும் சரி, அல்லது வருங்காலத்திலும் சரி, என்னை இந்த வாழ்க்கைப் பயணத்தில் தள்ளி விட்ட கடவுளே காரணம் ஆவார். இது கடவுளின் உத்திரவு!” இதைச் சொல்லியவண்ணம் வன்மம் பொங்க விதுரரைப் பார்த்த துரியோதனன் தன் உடைவாளை அதன் உறையிலிருந்து எடுத்து விதுரரை நோக்கி நீட்டியதைப் பார்த்தால் அவன் வழியில் விதுரர் குறுக்கிடுவார் என்பது தெரிந்தால் அவரைக் கொல்லவும் துரியோதனன் தயங்க மாட்டான் என்பதை எடுத்துக் காட்டியது.

1 comment:

ஸ்ரீராம். said...

கொடூரர் கூடம்.