Sunday, December 25, 2016

அன்று நகைத்தாளடா! உயிர் மாமனே! அவளை எனக்கு ஆளாக்கினாய்!

பீமன் தன்னுடைய தண்டாயுதத்தைத் தூக்கக் கிளம்பினான். பீஷ்மரின் காலடிகளில் அது கிடந்தது. ஆனால் அர்ஜுனன் பீமனைத் தடுத்தான்.  ஆனால் யுதிஷ்டிரனின் எண்ணமோ வேறாக இருந்தது. ஆம், திரௌபதியும் இப்போது இங்கே இருந்தாக வேண்டும். அவர்கள் ஐவர் மட்டும் ஒற்றுமையுடன் ஒன்றாக இருந்தால் போதாது! கூடவே திரௌபதியும் அவர்களுடன் இருக்க வேண்டும்.  அவர்கள் ஐவரையும் இணைக்கும் முக்கிய நபராக திரௌபதி இருக்கிறாள். ஆகவே அவளும் இருந்தாக வேண்டும். உடனே யுதிஷ்டிரன் பேச ஆரம்பித்தான். “ நான் இப்போது என் மனைவியும் பாஞ்சால நாட்டு இளவரசியும் , எங்கள் ஐவருக்கும் பிரியமான மனைவியும்  ஆன திரௌபதியைப் பணயம் வைக்கிறேன்.” என்றான். சபாமண்டபத்தில் கூடி இருந்த மக்கள் அனைவரும் திகைத்து உட்கார்ந்திருந்தனர்.

அங்கு நடப்பது என்ன என்பதை அவர்கள் பூரணமாகப் புரிந்து கொள்ளும் முன்னரே அங்கே சூதாட்டம் ஆடி முடிக்கப்பட்டு விட்டது. ஷகுனியும், “நாங்களே இம்முறையும் வென்றோம். இப்போது பாஞ்சால இளவரசி எங்கள் அடிமை! எங்களுக்கு தாசியாகச் சேவை செய்ய வேண்டியவள்!” என்றான். துரியோதனனும் அவன் சகோதரர்களும் தங்கள் சுயக்கட்டுப்பாடுகளை இழந்து குதூகலத்தில் கூச்சலிட்டார்கள். அவன் ஆதரவாளர்களும், நண்பர்களும் அந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.  ஒரு சிலர் அவனைக் கட்டித் தழுவிக் கொள்ள இன்னும் பலர், “துரியோதனனுக்கே ஜெயம்! வெற்றி துரியோதனனுக்கே!” என்றெல்லாம் கூவினார்கள். அவர்களுடன் சேர்ந்து அங்க தேசத்து மன்னன் கர்ணனும் இந்த சந்தோஷத்தில் கலந்து கொண்டான். துரியோதனனுக்கும் அவனுக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.  கர்ணன் துரியோதனனைப் பார்த்துப் புன்னகையுடன் அவன் காதுகளில் மெல்லக் கிசுகிசுத்தான்.

“துரியோதனா, இந்த திரௌபதி அவள் சுயம்வரத்தில் நம்மை எல்லாம் துச்சமாக நினைத்து உதறித் தள்ளிவிட்டு அர்ஜுனனைத் தேர்ந்தெடுத்தாள் அல்லவா? அப்போதே நான் அவளை அந்தச் சுயம்வர மண்டபத்திலிருந்து கடத்தித் தூக்கி வந்திருப்பேன். ஆனால் நீ தான் என்னைத் தடுத்தாய்!”  என்றான். அதற்கு துரியோதனன், “போகட்டும் விடு! இப்போது அவள் நம் அடிமை. நாம் கருணை காட்டினால் தான் அவளுக்கு நன்மை பயக்கும். ஆகையால் அவளை நாம் இப்போது என்ன வேண்டுமானாலும் செய்யலாம். யாரும் எதுவும் கேட்க முடியாது!” என்றான்.

இந்த மானங்கெட்ட நிகழ்ச்சியின் மூலம் குரு வம்சத்தினருக்கு ஏற்படப் போகும் அவப்பெயரை நினைத்து பீஷ்மர் வருந்தினார். தன் மதிப்பிழந்துவிட்டதாகக் கருதினார்.  அவர் கண் முன்னால் அவர்கள் குடும்பத்து அருமை மருமகள், பேரரசன் துருபதனின் மகள், எவ்வளவு மென்மையும் மதிப்பும் மிக்கவள், அனைவராலும் விரும்பப் படுபவள், அனைவராலும் மதிக்கப்படுபவள், இன்று ஒரு பேரத்திற்குப் பலியாகி விலை போய்விட்டாள். இது நீதியா, தர்மமா? யுதிஷ்டிரன் அவன் வாழ்நாளில் நேர்மையைக் கடைப்பிடித்து வந்திருக்கலாம்.  ஆனால் இன்று அவன் தன்னைத் தானே தியாகம் செய்து கொண்டது மட்டுமில்லாமல், தன் சகோதரர்கள் மற்றும் அருமை மனைவியையும் தியாகம் செய்யும்படி நேர்ந்து விட்டது. இதெல்லாம் எதற்காக? ஓர் கடினமான போர் ஏற்படுவதைத் தடுப்பதற்காக! அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக! யுதிஷ்டிரன் தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டுள்ளான்.  துரியோதனனால் அவர்கள் ஐவருக்கும் குரு வம்சத்து அரச குலத்தவரிடம் ஏற்பட்டிருக்கும் தீராப்பகையை ஒழிப்பதற்காக இத்தனையும் நடந்திருக்கிறது.

துரோணருக்கும் கிருபருக்கும் நடப்பது என்னவென்று புரியவே இல்லை. இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவம் என்ன என்பதை அவர்கள் உணரவே இல்லை. அவர்கள் இருவரும் வெட்கத்திலும் அவமானத்திலும் தலை குனிந்து அமர்ந்திருந்தனர். அவர்கள் இந்த நிகழ்ச்சியின்போது குறுக்கிட்டுப் பேசித் தடுக்கவே விரும்பினார்கள். ஆனால் தன் ஒரு கையசைவால் பீஷ்மர் அவர்களைத் தடுத்து விட்டார்.  துரியோதனனின் இந்த அடாவடி நடவடிக்கையினால் அதிர்ச்சிக்குள்ளாகிய ராஜகுருமார்கள் சோமதத்தரும் ஆசாரியர் தௌமியரும் பீஷ்மரிடம் அனுமதி கேட்டுக் கொண்டு அந்த அவையை விட்டு வெளியேறினார்கள். அவர்களுடன் அந்த சபையில் இருந்த பல ஸ்ரோத்திரியர்களும் ஒருவர் பின் ஒருவராக வெளியேறினார்கள்.

செய்வதறியாது திகைத்து உட்கார்ந்திருந்த விதுரர் தன் இரு கைகளாலும் முகத்தைத் தாங்கிய வண்ணம் பூமியை நோக்கிக் கொண்டு அமர்ந்திருந்தார். அவர் மனமெல்லாம் பூமா தேவியிடம் குரு வம்சத்து இளையவர்கள் செய்யும் இந்த அக்கிரமத்தை மன்னிக்கும்படி வேண்டிக் கொண்டிருந்தது. “இதற்கு நான் இறந்திருக்கலாமே!” என்று திரும்பத் திரும்ப அவர் மனம் சொல்ல வாயும் அதை முணுமுணுத்தது.  திருதராஷ்டிரன் மிகவும் சந்தோஷத்துடன் இருந்தான் என்பது அவன் திரும்பத் திரும்ப சஞ்சயனிடம், “இப்போது நமக்கு வெற்றியின் மூலம் என்ன கிடைத்தது?” என்று ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் கேட்டுக் கேட்டுத் தெரிந்து கொண்டான்.

அங்கிருந்த பெரியோர்கள் அனைவரின் தகுதியையும் பதவியையும் முற்றிலும் நிராகரித்துவிட்டு துரியோதனன் ஷகுனியைக் கட்டித் தழுவிக் கொண்டு உற்சாகம் அடைந்தான். “மாமா அவர்களே, இன்று என் வாழ்நாளில் ஒரு பொன்னாள். மிகவும் மகிழ்ச்சிக்கு உள்ளான நாள். இந்த அருமையான நாளை உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.” என்றான்.  பின்னர் விதுரர் பக்கம் திரும்பி, “ஏ, சித்தப்பா விதுரா, இந்த திரௌபதி தன் சுயம்வரத்தில் எங்களை எல்லாம் அவமதித்து நடந்து கொண்டபோது நீ எங்கே போயிருந்தாய்? அந்த சுயம்வரத்தில் கூடி இருந்த அனைத்து அரசர்களையும் எங்களை ஏளனத்துடன் பார்த்துக் கேலி செய்ய வைத்தாளே, அப்போது நீ எங்கே போயிருந்தாய்? இப்போது அவள் எங்கள் அடிமை. நீ தான் இப்போது அந்தப்புரம் சென்று அவளை இங்கே இழுத்து வர வேண்டும்.” என்றான்.

பின்னர் ஒரு சீறலுடன் அவன் மேலும் கூறினான்.”இது ஓர் அற்புதமான மரியாதை இங்குள்ள பெரியவர்களுக்கெல்லாம். ஒரு அரசியை வரவேற்க வேண்டும்; ஆனால் அவள் இனிமேல் அரசியே அல்ல! ஓர் அடிமை! அவள் இங்கே வந்து எங்கள் அனைவருக்கும் தக்க மரியாதையைத் தெரிவித்த பின்னர், இங்குள்ள பெண் அடிமைகள் வசிக்கும் இடத்துக்குச் செல்ல வேண்டும். அவளுக்குத் தான் செய்ய வேண்டிய வேலைகள் என்னவென்று விரைவில் கற்றுக்கொள்ளச் சந்தர்ப்பம் கிட்டும்!” என்று கூறினான். பின்னர் தன் மீசையைத் தானே திருகிவிட்டுக் கொண்டான்.

விதுரர் தன் ஆசனத்திலிருந்து எழுந்து துரியோதனனைப் பார்த்துக் கை கூப்பி வணங்கினார். “மாட்சிமை பொருந்திய இளவரசே, திருதராஷ்டிர அரசனின் மகனே! இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. எதற்கும் நேரம் ஆகிவிடவில்லை.  நான் சொல்வதைக் கொஞ்சம் கேள்! இனி மேலே எதையும் செய்யாதே! போதும், விட்டு விடு! இதோடு நிறுத்திக் கொள்! திரௌபதி உன்னுடைய அடிமை அல்ல. ஒருக்காலும் இல்லை. அவள் ஓர் க்ஷத்திரிய குலத்து இளவரசி! ஆரியவர்த்தத்தின் பெருமை மிகுந்த சக்கரவர்த்தியின் குமாரி! அவள் பாண்டவ சகோதரர்கள் ஐவருக்கும் மனைவியும் ஆவாள்!” என்றார்.

“ஆஹா! அரசியா அவள்! அரசி!” என்று வாயைக் கோணிக் கொண்டு ஊளையிடும் குரலில் கூவினான் துரியோதனன். அப்போது விதுரர் மேலும் பேசினார். “யுதிஷ்டிரனுக்கு அவளைப் பணயம் வைக்க எந்த உரிமையும் இல்லை. ஏனெனில் ஏற்கெனவே அவன் தன்னைத் தானே பணயம் வைத்துக் கொண்டு அடிமையாகி விட்டான். ஓர் அடிமை எப்படி இன்னொரு சுதந்திரமான பெண்ணைப் பணயம் வைக்க முடியும்? இதோ, பார், துரியோதனா! நான் உன் நன்மையை விரும்புபவன் அல்ல என நீ நினைக்கிறாய்! ஆனால் அப்படி எல்லாம் இல்லை! நான் உன் நன்மைக்காகவே இப்போது பேசுகிறேன். நீ இப்போது என்னுடைய ஆலோசனைகளைக் கேட்காவிட்டால், நீ உன் சகோதரர்களுடனும், உன் நண்பர்களுடனும் முற்றிலும் அழிந்து படுவாய்!”

விதுரர் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தார். சற்று நேரம் கழித்துத் தன் தலையைத் தூக்கி துரியோதனனைப் பார்த்து, “ உன் கண்கள் இன்று மூடிக் கொண்டன போலும்! குருடாகிவிட்டன போலும்! இல்லை எனில் இன்றைய நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடைபெறப் போகின்றவை குறித்து நீ யோசித்துப் புரிந்து கொண்டிருப்பாய்!” என்று கூறினார். அவர் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன.

“நீ புலம்புவதெனில் தனியே புலம்பிக்கொள், கிழவா! நிறுத்திக்கொள் இப்போது!” என்ற துரியோதனன் தன் குர்லை உயர்த்தி, “இனிமேலும் ஏதும் பேச வேண்டாம். நிறுத்து! நாங்கள் ஏற்கெனவே நிறையவே உன் புத்திமதிகளையும் ஆலோசனைகளையும் கேட்டுக் கொண்டு விட்டோம். நீ கீழ்க்குடிக்குப் பிறந்தவன் தானே! ஆகவே நீ எதற்கெடுத்தாலும் பயப்படுகிறாய்! ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுகிறாய். நாங்கள் பிறவியிலேயே க்ஷத்திரியர்கள்! அரச குலத்தவர். எல்லாவிதமான ஆபத்துக்களையும் எதிர்நோக்கும் போர்க்குணம் படைத்தவர்கள்! எங்களுக்குக் கடவுளின் அருள் பூரணமாக இருக்கிறது!” என்றான்.

1 comment:

ஸ்ரீராம். said...

பெரும் குரலெடுத்து அழும் விதுரர்! திரௌபதி முன்வைப்பதாகச் சொல்லப்படும் வாதத்தை(தர்மர் யாரை முதலில் பணயம் வைத்தார் என்று) இவர்தான் முதலில் சொல்கிறார். நேர்மை என்ற பெயரில் தர்மரின் அசட்டுத்தனங்கள்.