Sunday, June 17, 2012

உத்தவன் பேசுகிறான்!


“பாண்டவர்கள் ஐவரையும் கொல்லச் சதித்திட்டம் தீட்டி இருந்தனர். அதைக் கேள்விப் பட்டதும் பீமன் பதிலடி கொடுக்கத் தயார் செய்து கொண்டிருந்தான்.  தாத்தா பீஷ்மருக்கு விஷயத்தின் முக்கியத்துவம் புரிந்து, திருதராஷ்டிரனோடு நீண்ட நேரம் கலந்து ஆலோசித்திருக்கிறார்.  அதன் பின்னரே யுதிஷ்டிரனை திருதராஷ்டிரன் அழைத்திருக்க வேண்டும்.” உத்தவன் கூறினான்.  

“ஓஹோ, திருதராஷ்டிரன் யுதிஷ்டிரனின் என்ன கூறினாராம்?”

“திருதராஷ்டிரன், துரியோதனன் கடுமையான நடவடிக்கை எடுக்கத் தயார் செய்து கொண்டிருப்பதாகவும், குரு வம்சம் சகோதரச் சண்டையில் அழிந்துபடும் எனத் தான் கவலையில் இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறார்.”

இடையில் ஷ்வேதகேது, “துரியோதனன் எதையும் செய்வான்; செய்யக் கூடியவனே!” எனத் தன் கருத்தைக் கூறினான்.  

உத்தவன் தொடர்ந்து, “ குரு வம்சத்தைக் காக்கவும், பேரழிவில் இருந்து தடுக்கவும், யுதிஷ்டிரன் தன் யுவராஜா பட்டத்தையும், பதவியையும் துறக்க வேண்டியது தான் ஒரே வழி என திருதராஷ்டிரனால் சுட்டிக் காட்டப்பட்டிருக்கிறது.” என்றான்.

“யுதிஷ்டிரன் அதற்கு ஒத்துக்கொண்டானா?”

“சற்றும் தயங்கவில்லை கண்ணா! உடனே ஒத்துக்கொண்டிருக்கிறான்.” உத்தவன் குரலில் இப்போது லேசாய்க் கோபம் தெரிந்தது. “ஆனால் அந்த அரசனுக்கு இது போதவில்லை;  அவன் மனம் சமாதானம் ஆகவில்லை.  ஏனெனில் பாண்டவர்களை நாட்டுக் குடிமக்கள் கண்ணின் கருமணியாக நேசிக்கின்றனர்.  அவர்கள் மேல் மிகுந்த மதிப்பும், மரியாதையும் காட்டி வருகின்றனர்.  யுதிஷ்டிரனோ, பாண்டவ சகோதரர்களோ ஹஸ்தினாபுரத்தில் இருக்கும்வரையிலும் துரியோதனனால் யுவராஜா பட்டத்தை ஏற்க முடியாது.  யுதிஷ்டிரன் எப்போதுமே நாட்டு மக்களுக்கும், படை வீரர்களுக்கும் கண்ணைப் போன்றவனாகவே இருந்து வருவான். அதைத் தாங்கும் சக்தி துரியோதனனுக்கு இல்லை.”

“ஆகவே?”

“யுதிஷ்டிரன் தன் சகோதரர்களுடனும் தாயுடனும் வாராணவதத்தில் போய்ச் சில மாதங்களைக் கழிக்குமாறு கேட்டுக் கொள்ளப் பட்டான். அங்கே இப்போது ஒரு மாபெரும் திருவிழா நடைபெறப் போகிறது.  அந்தச் சாக்கில் சென்று அங்கே சில மாதங்கள் தங்கும்படி அறிவுறுத்தப் பட்டிருக்கிறான். இதற்கும் யுதிஷ்டிரன் மறுப்புச் சொல்லவில்லை; ஒத்துக்கொண்டு விட்டான்.”

“பீஷ்மர் என்ன சொன்னாராம் இதற்கு?  பாண்டவர்களிடம் அவர் மிகப் பிரியமும், பாசமும் காட்டுகிறார் என்றல்லவோ எண்ணினேன்?”

“தாத்தா பீஷ்மர் கடுமையான முகபாவத்துடனும், வாய் திறந்து எதுவும் பேசாமலும் அந்தப்பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்ளாமலும், அதே சமயம் பேச்சு வார்த்தையின் சாரத்தை உள்வாங்கிக் கொண்டும் இருந்ததாக யுதிஷ்டிரன் கூறினான்.  ஆனால் அவர் பேசிய ஒரே வார்த்தை, “யுதிஷ்டிரா, உங்களை எவராவது தாக்க வந்தால் பதிலுக்கு நீங்களும் பதிலடி கொடுத்து உங்களைக் காத்துக்கொள்ளுங்கள்! ” என்பதே என்று யுதிஷ்டிரன் கூறினான்.”

“பீமனும், அர்ஜுனனும் இதற்கு ஒத்துக் கொண்டனரா?” கண்ணன் கேட்டான்.

“முதலில் பிடிவாதமாக மறுத்தனர்.  பீமனுக்குக் கடுங்கோபம்.  அர்ஜுனன் எதிர்ப்புத் தெரிவித்தான். நகுல, சகாதேவர்களுக்கு இந்த யோசனையே பிடிக்கவில்லை.  ஆனால் யுதிஷ்டிரன் மன்னனுக்கு வாக்குக் கொடுத்துவிட்டு வந்து விட்டான்;  ஆகவே குந்தி தேவி யுதிஷ்டிரனுடைய வாக்குறுதியைக் காப்பாற்ற வேண்டியது நம் கடமை என்று கூறி விட்டாள்.  பிறகென்ன?  எவரும் மறுப்புச் சொல்லவில்லை. வெகு அருமையான, அற்புதமான குடும்பம் அவர்களுடையது. ஒவ்வொருவரும் மற்றவரின் அங்கமாகவே இருக்கின்றனர். தனித்துத் தெரிவதில்லை.”

“அவர்களுடைய பலமே அது தான்!  அதுவே அவர்களுக்கு வெற்றியையும், புகழையும் கொடுக்கும்.  உத்தவா, உன்னுடைய கதையை முழுக்கச் சொல்.”

“ஹஸ்தினாபுரத்து மக்களுக்கு எப்படியோ விஷயம் தெரிந்து விட்டது.  ஐந்து சகோதரர்களும், குந்தி தேவியும் வாரணாவதம் திருவிழா எனச் செல்லப்போகிறார்கள் என்பதைக் கேட்டதும், அவர்களுக்கு நம்பிக்கையே வரவில்லை. இதில் ஏதோ சூது இருப்பதாகவே பேசிக் கொண்டனர். யாருமே பாண்டவர்கள் வலுவில் வந்து தங்கள் பதவியையும், செல்வத்தையும், அரச போகத்தையும் துறந்துவிட்டுச் செல்வார்கள் என்பதை எதிர்பார்க்கவில்லை.  இரண்டு நாட்களில் அவர்கள் கிளம்புகையில் மக்கள் வெள்ளமாகத் திரண்டு அவர்களுக்குப் பிரியாவிடை கொடுத்தனர்.  அனைவரும் கண்ணீர் விட்டனர்.”

“நீ என்ன செய்தாய்?”

“நானும் அவர்களுடன் வாரணாவதம் சென்றேன். அவர்களோடு சில நாட்கள் தங்கினேன்.  பாண்டவர்கள் செல்லும் இடமெல்லாம் மக்கள் கூட்டமாக வந்து அவர்களை வாழ்த்தி வணங்கி ஆர்ப்பரித்தனர்.  ஆனால்…ஆனால் ஏதோ ஒன்று அந்த மாளிகையில் எனக்குப் புரியாத ஏதோ ஒன்று என்னை நெருடிக் கொண்டே இருந்தது.  ஏதோ பேரிழப்பு, அல்லது பேரிடர் வரப்போகிறது என்றே நினைத்தேன்.  அரசமாளிகை எத்தனை வலுவாக இருக்கவேண்டுமோ அத்தனை வலுவாக அது இல்லை.  எதை வைத்துக் கட்டினார்கள் என்று தெரியாவண்ணம் சுவரெல்லாம் மிக மெலிதாகக் கைகளால் தட்டினாலே விழுந்து உடையும் போல் இருந்ததாய் எனக்குத் தோன்றியது.  புரோசனன் என்னும் மிலேச்சப் படை வீரன் பாண்டவர்களின் தேவைகளைக் கவனிப்பதற்காக நியமிக்கப் பட்டிருந்தான்.  ஆனால் எனக்கோ அவன் அவர்களை ஒற்றறிவதாகவே பட்டது. இரவும் பகலும் அவர்களைக் கண்காணிக்க வீரர்களை நியமித்திருந்தான்.”

“இதில் சூது இருப்பதாய்த் தெரிந்ததுமே பாண்டவர்கள் ஹஸ்தினாபுரம் சென்றிருக்கலாமே?” கண்ணன் கேட்டான்.

“அவர்களால் திரும்ப முடியாது.  யுதிஷ்டிரன் வாக்குக்கொடுத்துவிட்டான்.  அப்படியே அவர்கள் அழைப்பு ஏதும் இல்லாமல் அவர்களாகத் திரும்பினாலும் உடனடியாக அவர்கள் கொல்லப் படுவார்கள். துரியோதனன் அதில் மிகவும் கெட்டிக்காரன்.  ஆகவே கவனமாக இருப்பான்.”



Friday, June 15, 2012

தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்!


வழி நெடுக அவர்களை அக்கம்பக்கத்துக் கிராம மக்கள் வரவேற்று உபசரித்தனர்.  இந்த வழியில் தான் மூன்று வருடங்கள் முன்னால் யாதவர்கள் மதுராவை விட்டு துவாரகை நோக்கிய நீண்ட நெடும் பயணம் செய்திருந்தனர்.  ஷால்வ அரசன் கூட இப்போது யாதவர்களின் நண்பனாக மாறி இருந்தான்.  கண்ணனை மிகவும் உபசரித்து அவன் நாட்டைக் கண்ணனின் பரிவாரங்கள் கடக்குமிடம் எல்லாம் எந்தவிதமான இடையூறுகளும் நேரிடாவண்ணம் பாதுகாப்புக் கொடுத்தான்.  ஆகவே புஷ்கர க்ஷேத்திரத்தை நெருங்கியதும். அனைவரும் தண்டு இறங்கினார்கள்.  கண்ணனின் ரதம் கருடக் கொடியைப் பறக்கவிட்டுக் கொண்டு வந்து நின்றது.  அங்கேயே அனைவரும் தங்க, உணவு உண்டு ஓய்வு எடுக்க, எனக் கூடாரங்கள் அமைக்கப்பட்டன.  கண்ணன் ஏற்கெனவே உத்தவனை எதிர்பார்த்துக் கொண்டிருந்தான்.  ஹஸ்தினாபுரத்திற்குச் சில குதிரை வீரர்களை விரைவாய்ச் சென்று உத்தவனை அழைத்து வரவும் ஏற்பாடு செய்திருந்தான்.  ஆகவே உத்தவன் அநேகமாய் இங்கே சந்திக்கலாமோ எனக் கண்ணனின் எதிர்பார்ப்பு இருந்தது.

கண்ணன் எதிர்பார்ப்பை விட வேகமாய் உத்தவன் வந்து சேர்ந்தான்.  ஹஸ்தினாபுரத்திலிருந்து குதிரைகளை விரட்டிக் கொண்டு வந்திருந்தான் என்பதைக் குதிரைகள் வாயில் நுரை தப்ப மூச்சு விட்டுக் கொண்டு நின்று கொண்டிருந்ததில் இருந்து தெரிந்தது.  உத்தவனும் இந்த அதிவேகப் பயணத்தில் களைத்துச் சோர்ந்திருந்தான்.  அவனுடைய பரிவாரங்களால் உத்தவனின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியாமல் பின் தங்கி விட்டனர்.  ஆகவே உத்தவன் மட்டுமே வந்திருந்தான்.  உத்தவனின் வேகமான பிரயாணத்தைக் குறித்து அறிந்த சாத்யகிக்கும், ஷ்வேதகேதுவுக்கும் விஷயம் மிகவும் முக்கியமானது என்பதோடு கவலை தரக்கூடியது என்பதும் புரிந்தது.  விஷயம் என்னவெனத் தெரிந்து கொள்ள வேண்டி அவர்களும் அங்கே வந்து சேர்ந்தனர்.

“கிருஷ்ணா, கிருஷ்ணா, நான் என்ன சொல்வேன்! எப்படிச் சொல்வேன்! மாபெரும் விபத்து நடந்திருக்கிறது.  பிரளயமே வந்துவிட்டதோ என அஞ்சுகிறேன்.  கண்ணா, கண்ணா, உன் அத்தையின் மக்கள் ஐவரும் இறந்துவிட்டனர்.  எவரும் உயிருடன் இல்லை.” இதை இவ்வளவு தொடர்ச்சியாக உத்தவனால் கூற முடியவில்லை. இடையிடையே மூச்சு விட்டுக் கொண்டு வார்த்தைகளை நிறுத்தி நிறுத்திப் பேசினான்.  எனினும் அவனுடைய தாங்கொணா சோகம் அந்தக் குரலில் தெரிந்தது. 

அனைவரும் அதிர்ந்தனர். “என்ன?”கிருஷ்ணனும் அதிர்ந்து போனான் என்பது அவனைக் கட்டி அணைத்த வண்ணம் இருந்த உத்தவனுக்குப் புரிந்தது.  ஆனால் உடனேயே சமாளித்துக் கொண்டு, “உத்தவா, சற்று ஆற அமர உட்கார்ந்து கொள்வாய்.  கொஞ்சம் நிதானப் படுத்திக் கொண்டு பின்னர் பேசலாம்.” என்றான்.  பதிலே சொல்லாத உத்தவன் கண்ணன் பிடியிலிருந்து விடுவித்துக்கொள்ள முயன்றான்.  முடியாமல் அப்படியே கீழே அங்கிருந்த ஒரு மரத்தடியில் பொத்தென விழுந்தான். கண்ணனும் அருகே அமர்ந்த வண்ணம் அவனைத் தேற்ற முயன்றான். ஷ்வேதகேதுவும் அருகே அமர்ந்து கொள்ள, சாத்யகி உத்தவனுக்குக் குடிக்க நீர் கொண்டு வரச் சென்றான். “உத்தவா, நிதானமாய் நடந்தவைகள் அனைத்தையும் தெரிவி!” என்றான் கண்ணன்.

“பாண்டவர்கள் ஐவரும் இறந்தனர்.”  மீண்டும் இதையே சொன்ன உத்தவன், வாரணாவதத்தில் அரக்கு மாளிகையில் அவர்கள் அனைவரும் தாய் குந்தியோடு சேர்த்து எரிக்கப்பட்டதைக் கூறினான்.  எவரும் இப்போது உயிருடன் இல்லை என்பதைத் தெரிவித்தான்.  கண்ணனால் இந்தச் செய்தியை நம்பமுடியவில்லை.  ஆனால் உத்தவன் பொய் கூற மாட்டான்.  அதுவும் இம்மாதிரியான விஷயத்தில். “கொஞ்சம் நிதானப்படுத்திக் கொள் உத்தவா.  மெல்ல மெல்ல ஒவ்வொன்றாய் ஆரம்பத்தில் இருந்து கூறு. அவசரம் ஒன்றுமில்லை.” என்றான்.  அதற்குள்ளாக சாத்யகி குடிநீர் கொண்டு வர அதை வாங்கிக் குடித்த உத்தவன், பேச ஆரம்பித்தான்.

“கண்ணா, நான் ஹஸ்தினாபுரக் கோட்டை வாயிலை அடைந்ததும், பீமனும், அர்ஜுனனும் அங்கு வந்து என்னை வரவேற்று அழைத்துச் சென்றனர்.  நான் அங்கே சென்று குந்தி தேவியை வணங்கி விபரங்கள் சொல்கையில் யுதிஷ்டிரனும், இரட்டையர்களான நகுல, சகாதேவரும் அங்கிருந்தனர்.  குந்தி தேவி அனைவரையும் மிகவும் விசாரித்தார்.  நாங்கள் பேசுகையிலேயே அவசரம் அவசரமாக அங்கே வந்த முதலமைச்சர் விதுரர் யுதிஷ்டிரரை திருதராஷ்டிரன் அழைப்பதாகவும், மிகவும் அவசரம் எனவும் கூறினார்.  உடனே யுதிஷ்டிரன் அவர்களோடு சென்றார்.”

“அவர்கள்,…… பாண்டவர்கள் அங்கே எப்படி இருந்தனர்? மகிழ்வாகத் தானே?” கண்ணன் கேட்டான்.

“இல்லை, துரியோதனனும், அவன் சகோதரர்களும் அந்த ரத சாரதியின் மகன் கர்ணன், மற்றும் துரியோதனன் மாமன் சகுனி ஆகியவர்களின் தூண்டுதலின் பேரில் இவர்கள் ஐவரையும் கொன்றுவிடத் திட்டம் தீட்டி இருப்பதாய் உளவுச் செய்தி கிடைத்திருந்தது.  எல்லாவற்றுக்கும் மேலே இவர்களோடு ஆசாரியர் துரோணரின் ஒரே மகன் அஸ்வத்தாமாவும் சேர்ந்திருந்தான். “

“ஆம், நான் இதை அறிவேன். ஒற்றர்கள் மூலம் அறிந்தேன்.” என்ற கண்ணன், “என்ன திட்டம் தீட்டி இருந்தனர்?” என்று கேட்டான்.

Monday, June 11, 2012

திருதராஷ்டிரனுக்கு நிம்மதி!


திருதராஷ்டிரன் பெரிதும் நிம்மதி அடைந்தான் என்பது அவன் பேசியதில் இருந்து புரிந்தது.  “குழந்தாய், அங்கே உனக்கு ஒரு அழகான மாளிகைக் கட்டப்பட்டிருக்கிறது.  எந்தவிதமான தொந்திரவுகளும், வேலைகளும் இல்லாமல் நீ நிம்மதியாய்ப்பொழுதைக் கழிக்கலாம்.  ஆனால்,….ஆனால்…… பீமனும், அர்ஜுனனும் சம்மதிப்பார்களா?  அவர்களுக்கு ஹஸ்தினாபுரத்தை விட்டுச் செல்ல சம்மதமாய் இருக்குமா?  ஏதேனும் தொந்திரவுகளை….ம்ம்ம்ம் தடங்கல்களை உருவாக்கப்போகிறார்கள்.” திருதராஷ்டிரன் குரலில் தெரிந்த ஆர்வத்தைக் கண்டு யுதிஷ்டிரன் மனதுக்குள் சிரித்துக் கொண்டான்.  என்றாலும் தன் தம்பிகளைக் குறித்து நன்கு அறிந்திருந்த அவன், “பெரியப்பா, அவர்களுக்குச் சம்மதம் இராதுதான்;  நிச்சயம் எதிர்ப்பார்கள்.  ஆனால் நான் உங்களுக்கு வாக்குக் கொடுக்கிறேன், அரசே, உங்கள் கட்டளையை நாங்கள் நிறைவேற்றுவோம்.” என உறுதி மொழி கொடுத்தான் யுதிஷ்டிரன்.

“குழந்தாய், நீ மிகப் பெரியவன்! உயர்ந்த உள்ளம் உனக்கு.  என் தம்பி பாண்டுவைப்போலவே உயர்ந்த உள்ளமும், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் போக்கும், பெருந்தன்மையான மனமும் உனக்கும் வாய்த்திருக்கிறது.  இந்தக்குரு வம்சத்தைப் பேரழிவில் இருந்து நீ இப்போது காப்பாற்றி உள்ளாய்.” திருதராஷ்டிரன் உண்மையாகவே இதை உணர்ந்து கூறினான் என்பது புலப்பட்டது. 

“அரசே, இப்போது எனக்கு விடைகொடுங்கள்.” யுதிஷ்டிரனுக்கு உடனே சென்று தம்பிகளையும், தாயையும் பார்க்க ஆவல் மிகுந்தது.  திருதராஷ்டிரன் கால்களில் விழுந்து வணங்கியவன், பீஷ்மர் கால்களிலும் விழுந்து வணங்கினான்.  அவனைத் தூக்கி அணைத்துக் கொண்டார் பீஷ்மர்.  இவ்வளவு நேரமும் எதுவும் பேசாமல் இறுகிய முகத்தோடு அமர்ந்திருந்தார் அவர்.  யுதிஷ்டிரனைத் தூக்கி நிறுத்திய பீஷ்மர், “ யுதிஷ்டிரா, தர்மமே நீ தான்.  நீயே தர்மம். நீ வேறு அது வேறல்ல.  அனைவரையும் காத்து ரக்ஷிக்கும் அந்த மஹாதேவன் உன்னையும், உன் தம்பிமார்களையும் காப்பாற்றுவான்.  நீ இப்போது செல்லும் பாதை அந்த மஹாதேவரால் ஆசீர்வதிக்கப்பட்டதாய் இருக்கும்.” அவனை மீண்டும் அணைத்துக் கொண்ட பீஷ்மரின் கண்களிலிருந்து உதிர்ந்த கண்ணீர் முத்துக்கள் யுதிஷ்டிரனின் உச்சந்தலையில் அக்ஷதைகள் போல் விழுந்தன.  கிழவரின் மனதைப் புரிந்து கொண்ட யுதிஷ்டிரனுக்கு ஒரே சமயத்தில் நன்றி உணர்வு, அன்பு, பாசம், கிழவரை விட்டுப் பிரிய வேண்டுமே என்ற வருத்தம் எல்லாம் ஏக காலத்தில் தாக்கியது.  தன் கையாலாகாத் தனத்தை நினைந்து நொந்து கொண்டான்.  அவன் தொண்டை அடைத்துக் கொண்டு பேச்சுக் கிளம்பவில்லை.

பாண்டவர்கள் வாரணாவதம் செல்லட்டும்.  நாம் இப்போது கண்ணன் எங்கே வந்து கொண்டிருக்கிறான், என்ன செய்கின்றான் என்பதைப்பார்ப்போமா!

ஹஸ்தினாபுரத்துக்கு வந்து கொண்டிருந்த கண்ணனுக்கும், அவன் பரிவாரங்களுக்கும் சாத்யகியின் பிள்ளையான யுயுதானா பொறுப்பேற்றுக் கொண்டிருந்தான்.  அவர்கள் அப்போது புஷ்கர க்ஷேத்திரத்தை நெருங்கிக் கொண்டிருந்தனர்.  சாத்யகி ஒரு மாபெரும் ரதப் படைக்குத் தலைவனாகப்பொறுப்பேற்று வழி நடத்திக் கொண்டிருந்தான். சாத்யகியே ஒரு அதிரதன்.  ரதப் படையின் மிக உயர்ந்த பொறுப்பில் இருந்தான். ஒவ்வொரு ரதமும் எந்தவிதமான சூழ்நிலைகளுக்கும் ஈடு கொடுக்கும் வகையில் தயாரிக்கப்பட்டிருந்தது.  ஒவ்வொரு ரதமும் இரண்டு அதிரதர்களைக் கொண்டிருந்ததோடு இரண்டு சாரதிகளும் இருந்தனர்.  அதே போல் மாற்றுக் குதிரைகளும் ஒவ்வொரு ரதத்துக்காகவும் தயார் நிலையில் கூடவே வந்து கொண்டிருந்தன. இதைத் தவிர பல மாட்டு வண்டிகளில் ஆயுதங்கள், உணவுப்பொருட்கள், கூடாரம் அடித்துத் தங்குவதற்கான பொருட்கள், மருத்துவ வசதிகள் என வரிசையாக வந்து கொண்டிருந்தன.  எல்லாம் புஷ்கர நகரை நெருங்கி விட்டது.  புஷ்கரம் அப்போது யாதவர்களின் ஆட்சியில் தான் இருந்தது.


Saturday, June 9, 2012

யுதிஷ்டிரனின் பெருந்தன்மை!


திருதராஷ்டிரனைப்போல் யுதிஷ்டிரன் எதற்கும் தயங்கவில்லை.  அவன் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கத் தயாராக இருந்தான்.  அதனால் குடும்பத்தில் முக்கியமாய் ஹஸ்தினாபுரத்தின் அரசியல் வாழ்வில் நிம்மதியும், அமைதியும் கிடைக்குமானால் அவன் விரைவில் ஒரு முடிவு எடுக்க வேண்டும்.  அதற்கு அவன் தாத்தா பீஷ்மரின் உதவியைக் கூட எதிர்பார்க்கவில்லை.  அவன் எதற்கும் தயாராகிவிட்டான்.  திருதராஷ்டிரனைப் பார்த்து, “நான் என்ன செய்யவேண்டும் அரசே?  நான் ஏற்கெனவே ஒரு முறை கூறியதையே மீண்டும் கூறுகிறேன்.  நீங்கள் கட்டளையிடுங்கள்; நாங்கள் அதை நிறைவேற்றுகிறோம்.  அரசே, உங்கள் அனைவரின் முழுச் சம்மதத்துடனேயே தாத்தா பீஷ்மர் என்னை யுவராஜாவாக்கினார்.  அப்போது நீங்கள் முழு மனதோடு சம்மதம் தெரிவித்தீர்கள்.  நானாக இதைக் கேட்கவில்லை;  நீங்கள் பெரியோர்கள் பார்த்து யுவராஜாவின் அலுவல்களைக் கவனிக்கச் சொல்லிக் கவனித்தேன்;  இப்போது அது கூடாதெனில் சொல்லுங்கள்.  இப்போது, இந்த நிமிடமே நான் யுவராஜா பதவியிலிருந்து விலகி விடுகிறேன்.  தாராளமாக துரியோதனனே யுவராஜாவாக ஆகிக் கொள்ளட்டும்.  இதன் மூலம் அவன் மனம் கொஞ்சமானும் சாந்தம் அடைந்தால் நல்லதே!  அவனும், அவன் சகோதரர்களும் சந்தோஷமாய் இருந்தாலே போதுமானது.”

திருதராஷ்டிரனுக்கு உள்ளூற மகிழ்ச்சி என்பது அவன் குரலில் தெரிந்தாலும், அவன் மிகக் கஷ்டப்பட்டு முகத்தில் வருத்தத்தை வரவழைத்துக் கொண்டு, யுதிஷ்டிரன் சொல்வது தனக்கு மிகவும் வருத்தத்தை அளிக்கும் செய்தி எனக் காட்டிக் கொண்டான்.  “இது மட்டும் போதாது யுதிஷ்டிரா! இதனால் எல்லாம் இந்த சகோதரச் சண்டை முடிவுக்கு வந்துவிடும் எனத் தோன்றவில்லை.  ஹஸ்தினாபுரத்து மக்கள் உன்னையும், உன் சகோதரர்களையும் தங்கள் உயிராக நினைக்கின்றனர்.  தர்மமே அவதாரம் செய்திருக்கிறது உன் மூலமாக என எண்ணுகின்றனர்.  நீ தர்மத்தின் தேவதை எனப்போற்றுகின்றனர். துரியோதனன் வலுக்கட்டாயமாய் உன்னிடமிருந்து யுவராஜா பதவியைப் பிடுங்கிக் கொண்டான் என்பது தெரிய வந்தால் மக்கள் புரட்சி செய்வார்கள்.  அவர்களை அடக்குவது அவ்வளவு எளிதல்ல.” திருதராஷ்டிரன் எப்படியேனும் யுதிஷ்டிரன் மூலமே இந்தப் பிரச்னைக்கு முடிவு கட்ட விரும்பினான்.

“மாட்சிமை பொருந்திய அரசே,  மனம் விட்டுச் சொல்லுங்கள்.  ஆணையிடுங்கள்.  நாங்கள் இப்போது என்ன செய்ய வேண்டும்?  என்ன செய்தால் பரதச் சக்கரவர்த்தியால்  ஸ்தாபிக்கப் பட்ட இந்த மாபெரும் சாம்ராஜ்யம் நிலைத்து நிற்கும்?  இந்த ராஜ்யத்தின் மேன்மைக்காக நான் எதுவேண்டுமானாலும் செய்வேன்; என் தம்பிகளும் அதற்கு உடன்படுவார்கள்.” என்றான்.

“அது சரி, அது சரி” திருதராஷ்டிரன் கைகளைப் பிசைந்து கொண்டான்.  அரியணையில் கை முஷ்டிகளால் ஓங்கிக் குத்தினான்.  என்ன செய்வது எனப்புரியாமல் தவித்தான். பின்னர் யுதிஷ்டிரனிடம், “குழந்தாய், நீ பதவியை விட்டு விலகினாலும் ஹஸ்தினாபுரத்தில் உன்னால் நிம்மதியாக வாழ முடியாது.  துரியோதனன் வாழ விடமாட்டான். அதுதான் என்ன செய்வதெனப் புரியாமல் தவிக்கிறேன்.”

திருதராஷ்டிரனின் தர்மசங்கடத்தைக் குறைக்க உதவினவன் போல யுதிஷ்டிரன் நகைத்தான்.  தனக்கு இதெல்லாம் ஒன்றும் புதிய விஷயமில்லை, ஏற்கெனவே எதிர்பார்த்ததுதான் என இதன் மூலம் அனைவருக்கும் தெரிவித்தான். “அரசே, நாங்கள் ஹஸ்தினாபுரத்தை விட்டே, இந்த நாட்டை விட்டே சென்று விடுகிறோம். காட்டுக்குச் சென்றுவிடுகிறோம்.” என்றான்.

“இல்லை, இல்லை, அதெல்லாம் வேண்டாம்.” திருதராஷ்டிரன் குரல் நடுங்கியது.  மீண்டும் பீஷ்மரை உதவிக்கு அழைப்பவன் போல் அவர் பக்கம் பார்த்தான்.  பின்னர் அதே நடுக்கமான குரலில், “நீங்கள் காட்டுக்கெல்லாம் போக வேண்டாம்.  வாரணாவதம் போய்ச் சில மாதங்கள் அங்கே தங்கி இருங்கள்.  அங்கே கடவுள்களுக்கெல்லாம் கடவுளான மஹாதேவருக்கு ஒரு விழா நடைபெறப் போகிறது. ஆயிரக்கணக்கான மக்கள் அந்த விழாவில் பங்கெடுக்க வருகின்றனர்.  நீங்கள் அதில் கலந்து கொண்டாற்போலவும் இருக்கும்.  அந்த விழாவுக்காக உழைத்தாற்போலவும் இருக்கும்.  சில மாதங்கள் நீங்கள் இங்கிருக்கவில்லை எனில் துரியோதனனும் மனம் அமைதியடைவான்.  அவர்களுடைய சந்தேகமும் நீங்கும். அதன் பின்னர்…..பின்னர்……. நீங்கள் ஹஸ்தினாபுரம் திரும்பலாம்.”

“பெரியப்பா,” முதல்முறையாக உறவுப் பெயர் சொல்லி அழைத்த யுதிஷ்டிரன், “எனக்குப்புரிந்து விட்டது. நாங்கள் என்ன செய்யவேண்டுமென நீங்கள் நினைக்கிறீர்களோ அதை உங்கள் உத்தரவாக எண்ணித் தலைமேல் சுமந்து அதை நிறைவேற்றுவோம். கவலைப்படாதீர்கள்.  நான் இன்றே யுவராஜா பதவியைத் துறந்துவிட்டேன்.” இதைச் சொல்கையில் யுதிஷ்டிரன் குரலில் எந்தவிதமான வருத்தமும் தெரியவில்லை.  “எங்கள் தாய் குந்தியுடனும், என் மற்ற சகோதரர்கள் நால்வருடனும், நான் நாளை மறுநாள் வாரணாவதம் கிளம்பி விடுகிறேன்.”

Monday, June 4, 2012

திருதராஷ்டிரனின் கபட நாடகம்!


“துரியோதனன், எவர் சொன்னாலும் கேட்க மாட்டான். உனக்குத் தான் நன்கு தெரியுமே அவன் குணத்தைக் குறித்து. தலை கனம் பிடித்தவன்.” கொஞ்சம் தயக்கத்துடனேயே திருதராஷ்டிரன் பேசியதைப் பார்க்கையிலேயே எவ்வகையிலேனும் யுதிஷ்டிரனிடம் தான் நடுநிலையாக நடப்பதாய்க் காட்டிக் கொள்ள விரும்பினான் என்பது தெளிவாகவே புரிந்தது அனைவருக்கும்.  பீஷ்மர் முகத்தில் வெளிப்படையாக வெறுப்புத் தெரிந்தது.  ஆனால் கண்களற்ற திருதராஷ்டிரன் தொடர்ந்தான். “ஒரு தரம் ஒருத்தரை வெறுக்க ஆரம்பித்தால், வெறுப்பின் ஆழத்துக்கே போய் வெறுக்க ஆரம்பிப்பான்.  அவன் வெறுப்புக்கு முடிவு இல்லை.  நான் என்ன செய்ய முடியும் மகனே?”

“எங்களுக்கு ஒரு நல்வழியைக் காட்டுங்கள் அரசே.  நீங்கள் சொல்லும் வார்த்தைக்கு, அல்ல,அல்ல கட்டளைக்குக் கீழ்ப்படிகிறோம்.  நான் மட்டுமல்ல, என் தம்பிகளும் கீழ்ப்படிவார்கள்.” யுதிஷ்டிரன் உறுதிபடச் சொன்னான்.

“இல்லை, மகனே, இல்லை.  என் அருமைத் தம்பியான பாண்டுவின் புத்திரர்களுக்கு நான் துரோகம் செய்ய விரும்பவில்லை.  அவர்களை ஏமாற்ற மாட்டேன்.  ஆனால்……” தயங்கிய திருதராஷ்டிரனின் அசைவற்ற விழிகள் மீண்டும் பீஷ்மர் இருக்கும் திசை நோக்கிச் சென்றன.  திருதராஷ்டிரன் பீஷ்மரின் அநுமதியை வேண்டுபவன் போலக் கெஞ்சலாக முகத்தை வைத்துக் கொண்டிருந்தான்.  “இப்போது இதை நாம் செய்யவில்லை என்றால், இதற்கு உடன்படவில்லை எனில்………. ஹஸ்தினாபுரம் தூள் தூளாக உடைந்து சுக்கு நூறாகி விடும்.  இந்த மாபெரும் சாம்ராஜ்யத்தின் கதி மிக மோசமாகும்.”


“துரியோதனனின் அவநம்பிக்கையை நீக்க நான் எடுத்துக் கொண்ட முயற்சிகள் அனைத்தும் பயனற்றுப் போயினவா?” யுதிஷ்டிரன் வருத்தத்துடன் கேட்டான்.


திருதராஷ்டிரனின் கைகள், கால்கள் என அனைத்தும் நடுங்கத் தொடங்கின.  பீஷ்மரின் மெளனம் அவனைக் கொன்றுவிடும் போல் இருந்தது.  அதை விட அவர் அவனைக் கேவலமான வார்த்தைகளால் திட்டி இருக்கலாம்.  அதைக் கூடப்பொறுத்துக் கொண்டு விடுவான் திருதராஷ்டிரன்.  இந்த மெளனம்.  இது பேச்சை விடவும் கொடிய தண்டனையாகத் தோன்றுகிறது.  பீஷ்மரையே பார்த்த வண்ணம் பேச்சைத் தொடர்ந்தான் திருதராஷ்டிரன்.  “அவநம்பிக்கையைக் குறித்த எந்தப் பேச்சும் இல்லை மகனே!” திருதராஷ்டிரன் தயக்கத்துடன் மீண்டும் தொடர்ந்தான். “ இப்போது செயலில் இறங்கிவிட்டனர் கெளரவர்கள்.  நான் கூறிய புத்திமதிகள் அவர்கள் காதுகளில் ஏறவே இல்லை.  சகோதரச் சண்டையில் இறங்கி விட்டனர்.”

“நான் அவ்வளவு முட்டாளில்லை அரசே!  அவர்கள் எங்கள் ஐவரையும் கொன்றுவிடத் திட்டம் தீட்டி இருப்பதை நானும் அறிவேன்.” யுதிஷ்டிரன் தைரியமாகவே கூறினான்.   பீஷ்மரின் கண்களில் மின்வெட்டுப் போல் தோன்றிய கோபம் நிறைந்த ஒளியால் பொசுங்கி விடுவோமோ என யுதிஷ்டிரன் நினைத்தான்.  அவர் கண்களில் கோபம் தோன்றினாலும் வாய் திறந்து ஒரு வார்த்தையும் பேசவில்லை.  வாய் திறந்து பேசாவிட்டாலும் பீஷ்மரின் கோபத்தை உணர்ந்த திருதராஷ்டிரன் பீஷ்மருக்குப் பயந்து அவசரம் அவசரமாக,, “கடவுளே, மஹாதேவா, இல்லை; மகனே; இல்லை;  அப்படி எல்லாம் அவர்கள் நடக்க மாட்டார்கள்.  நானும் அனுமதிக்க மாட்டேன்.”  என்றான்.

இந்த விஷயம் ஒன்றும் புதிதில்லை என்பது போலவும், அன்றாடம் நடக்கும் வழக்கமான ஒன்றைக்குறித்துப் பேசுவது போலும் யுதிஷ்டிரன் பேசினான்.” அரசே, இப்போது நாங்கள் என்ன செய்ய வேண்டும்?  எங்களைக் காத்துக் கொள்ளலாமா?  அல்லது எந்தவிதமான பாதுகாப்பும் இன்றி நிபந்தனைகள் ஏதுமின்றி, எங்களை அவர்களிடம் ஒப்புக் கொடுத்துக் கொள்ளவா?”

“உங்களை நீங்கள் பாதுகாத்துக்கொண்டே ஆகவேண்டும்.” முதல்முறையாக வாய் திறந்தார் பீஷ்மர்.  உறுதியுடனும், தெளிவுடனும், கட்டளை போல் கூறினார். “என்னருமைப் பாண்டுவின் புத்திரர்களை இம்மாதிரியாகக் கொலைக்களம் அனுப்ப முடியாது.  அவர்கள் கொல்லப்படக் கூடாது.  இதில் நான் தெளிவாகவும் உறுதியாகவும் இருக்கிறேன்.”  பீஷ்மரின் இந்தப் பேச்சுக் கத்தியை விடக் கூர்மையாக அனைவர் மனதிலும் போய்ப் பாய்ந்தது.  சற்று நேரம் அங்கே அமைதி காக்கப்பட்டது.  எவரும் பேசவில்லை.  பீஷ்மர் மீண்டும் தன் வெண்தாடியைத் தடவிக் கொடுக்க ஆரம்பித்தார்.

திருதராஷ்டிரன் அவசரம் அவசரமாக, “குழந்தாய், குழந்தாய், நாம் மோதல்களையும், முரண்பாடுகளையும் தவிர்ப்போம்.  யுதிஷ்டிரா, நான் சொல்வதில் உனக்குச் சம்மதம் தானே?”

யுதிஷ்டிரனுக்கு திருதராஷ்டிரன் எந்தப் பக்கம் பேச்சைக் கொண்டு போக விரும்புகிறான் என்பதை நன்கு புரிந்து கொண்டான். “எங்களால் எந்தவிதமான மோதல்களோ, முரண்பாடுகளோ ஏற்படாது மன்னா!  இது நிச்சயம்.  அரியணையில் அமர வேண்டும் என்பதற்காக என் சகோதரர்களோடு சண்டையிடுவதை நானும் விரும்ப மாட்டேன்.  என் சகோதர்களும் விரும்ப மாட்டார்கள்.” என்று நேரடியாக விஷயத்துக்கு வந்துவிட்டான்.  பீஷ்மர் அவனைப் பரிதாபமாய்ப் பார்த்தார்.

“ஆஹா, ஆஹா, ஆஹா, என் தம்பி பாண்டுவைப் போலவே பேசுகிறாய் மகனே.  என் அருமைத் தம்பி பாண்டு ஒரு உயர்ந்த மனிதன்.  அவனைப்போலவே நீயும் பேசுகிறாய்.  நீயும் அவனைப் போலவே உயர்ந்த உள்ளத்தைக் கொண்டிருக்கிறாய்.”  திருதராஷ்டிரனின் குரலில் அவனையும் அறியாமல் மகிழ்வும், சந்தோஷமும் கரை புரண்டு ஓடியது.

Sunday, June 3, 2012

யுதிஷ்டிரனின் வருத்தமும், பீஷ்மரின் மெளனமும்!


யுதிஷ்டிரா, நான் உன்னையும், உன் சகோதரர்களையும் பற்றி நன்கறிவேன். “ திருதராஷ்டிரன் குரலில் தவிர்க்க முடியாததொரு தவிப்புத் தெரிந்தது.  “இம்முறை விஷயம் மிகவும் ஆபத்தான நிலைமைக்குப் போய்விட்டது.  ஏன், அதையும் தாண்டி எந்தவிதமான சமரசமும் செய்து கொள்ள முடியா நிலையில் இப்போது இருக்கிறோம்.  உனக்கு நன்கு தெரியும், என் மகன்களாகிய கெளரவர்கள் குறித்து.  அவர்களுக்கு ஏற்கெனவே உங்கள் ஐவர் மேலும் தீராத பகையும், அதை ஒட்டிய பொறாமையும் நெருப்பாக எரிந்து கொண்டிருக்கிறது.  போதாததுக்கு அவர்களின் நட்பு வட்டமும் சரியில்லை.  அந்த ரத சாரதியின் மகன், அவன் வளர்ப்பு மகன், கர்ணன் அவனை நீ நன்கறிவாய் அல்லவா? அந்தக் கர்ணனுக்கு அர்ஜுனனிடம் ஏனோ வெறுப்பு.  அவன் துரியோதனனைத் தூண்டிக் கொண்டிருக்கிறான்.   இன்னும் அதிகமாய் அஸ்வத்தாமா வேறு இவர்கள் பக்கம் சேர்ந்து கொண்டிருக்கிறான்.  அவர்களின் தாய் மாமன் சகுனியைப் பற்றிக் கேட்கவே வேண்டம். இவர்கள் அனைவரும் சேர்ந்து துரியோதனனின் ஏற்கெனவே கொதிக்கும் மனதை இன்னமும் கொதிக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர். “ தனக்கு இஷ்டமே இல்லாத ஒரு விஷயத்தைப் பேசுகிறோம் என யுதிஷ்டிரன் புரிந்து கொள்ள வேண்டும் என திருதராஷ்டிரன் நினைத்தான்.    அதற்கேற்றாற்போல் திருதராஷ்டிரனின் குரலின் பாவம் அமைந்தது.  யுதிஷ்டிரன்  தனக்கு இந்த விஷயத்தில் இஷ்டமில்லை எனப் புரிந்து கொள்ள வேண்டும் என்றே காட்டிக்கொள்ள நினைத்தான்.

“மரியாதைக்குரிய சக்கரவர்த்தி!  நான் என்ன செய்ய வேண்டும்? அவர்கள் என்னிடம் எதை எதிர்பார்க்கின்றனர்?” பீஷ்மர் அசையாமல் அமர்ந்திருப்பதைக் கடைக்கண்களால் யுதிஷ்டிரன் கண்டு கொண்டான்.

தன் மனதில் ஏற்பட்டிருக்கும் துயரத்தையும் ஒரு துக்கமான விஷயத்தைச் சொல்லப் போவதின் வருத்தத்தையும் தெரிவிக்கும் முறையில் திருதராஷ்டிரன் தன் தலையை இப்படியும் அப்படியும் ஆட்டிக் கொண்டான்.  “மகனே, யுதிஷ்டிரா, உன்னிடம் சொல்லத் தயக்கமாக இருந்தாலும் வேறு யாரிடம் சொல்வேன்?  வேறு எவரை என்னால் நம்ப முடியும்? நீ ஒருவனே நம்பிக்கைக்கு உகந்தவன்;  நீ புத்திசாலி;விவேகி; சிந்தித்துச் செயலாற்றுபவன்.  குழந்தாய், நீங்கள் ஐவரும் மாபெரும் சக்தியாக உருவாகிக் கொண்டிருப்பதை என் மகன்கள் நூற்றுவராலும் சகிக்க இயலவில்லை.  அதோடு உங்களுக்குப் பொதுமக்களின் ஆதரவும் மிகுந்து காணப்படுகிறது.  என் மகன்களில் ஒருவனைக் கண்டாலும் வெறுக்கும் அஸ்தினாபுரத்து மக்கள் உங்களைக் கண்டால், உங்களில் இளையவன் ஆன சஹாதேவனைக் கண்டால் கூட ஆரவாரம் செய்து ஆர்ப்பரித்து வாழ்த்துகின்றனர். இதை என் மகன்களால் காணவும், கேட்கவும் சகிக்கவில்லை. அவர்களால் இதைத் தாங்க முடியவில்லை.  உங்களைப் பற்றிப் பல வதந்திகள் உலவுகின்றன.  அவர்கள் அதையும் கேட்டுத் தாங்க முடியாமல் தவிக்கின்றனர்.”  திருதராஷ்டிரன் பேசுவதைக் கேட்ட யுதிஷ்டிரன் முகத்தில் தாங்கொணா வருத்தம் தெரிந்தது.

“அரசே! இவற்றில் எதுவும் உண்மையில்லை!” வருத்தம் தொனிக்கப் பேசினாலும் உறுதியோடும், நிச்சயத்தோடும் பேசிய யுதிஷ்டிரன் தொடார்ந்து வெளிப்படையாகவும், திண்ணமாகவும் பேசினான்.  அவன் குரலில் திருதராஷ்டிரனைத் தர்ம சங்கடமான சூழ்நிலையில் இருந்து காக்கும் எண்ணமே இருந்தது.  “இவற்றை எல்லாம் ஆரம்பித்தது அவர்கள் தானே அரசே!  நாங்கள் ஐவரும் உங்களை இந்த அரியணையில் இருந்து தூக்கி எறிந்துவிட்டு, நாங்கள் அமரப் போவதாகவும், அவர்களுக்கு உள்ள வாரிசுரிமையை நாங்கள் மறுப்பதாகவும் ஒரு வதந்தியை அவர்களே கிளப்பி விட்டிருக்கின்றனர்.  இதில் ஏதும் உண்மை இல்லை.”  யுதிஷ்டிரன் தெளிவான குரலில் கூறினான்.  அவன் கூறுவது உண்மை என அனைவருக்குமே புரிந்தது.

என்றாலும் திருதராஷ்டிரன் தொடர்ந்து, “ஆம், மகனே, அப்படி ஒரு பேச்சு இருப்பதாகச் செய்திகள் கூறுகின்றன.  அது வதந்தியே என்றாலும் அப்படி ஒரு வதந்தி நிலவுகிறது.” என்றான்.

யுதிஷ்டிரன் மனம் உடைந்தது.  குரலில் வருத்தமும் துயரமும் தொனிக்க, “ அரசே, நீங்களுமா இதை நம்புகிறீர்கள்?  இப்படியான ஒரு பாவத்தைச் செய்ய நாங்கள் துணிய மாட்டோம்.  தாத்தா பீஷ்மர் அவர்களைக் கேட்டுப் பாருங்கள்.  எங்களைப் பற்றி நன்கறிவார். “

திருதராஷ்டிரன் பீஷ்மர் பக்கம் திரும்பினான்.  அப்போது யுதிஷ்டிரன் திருதராஷ்டிரனிடம் “தந்தையே, நீர் எங்களைப் பெறவில்லை என்றாலும் பெற்ற தந்தையை விடப் பாசமாக வளர்த்து வந்திருக்கிறீர்கள்.  உண்மையைச் சொல்லுங்கள்.  உம்மை மிகவும் வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன்.  இந்த வதந்தியை நீரும் உண்மையென நம்புகிறீரா?  இதில் கூறப்படும் செய்திகள் உண்மையாய் இருக்கும் என நினைக்கிறீரா?”

பீஷ்மரோ திருதராஷ்டிரனைக் கோபத்தோடு வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்.  கண்பார்வை அற்ற திருதராஷ்டிரனால் கூட பீஷ்மரின் கோபத்தை உணர முடிந்தது.  அவசரம் அவசரமாக, “நானறிவேன், நானறிவேன். குமாரா, நான் நன்கறிவேன்.  உங்கள் அனைவரின் மேலும் எனக்கு முழு நம்பிக்கை உள்ளது.  உங்களில் எவராலும் இப்படி ஒரு விஷயத்தைச் செய்யக் கனவில் கூட நினைக்க இயலாது.  உங்கள் தந்தைக்கு உரிய மரியாதையை நீங்கள் ஐவரும் எனக்குக் கொடுப்பதையும் நான் நன்கறிவேன். “ திருதராஷ்டிரன் கொஞ்சம் நிறுத்திக் கொண்டு மீண்டும் வலுவைச் சேர்த்துக் கொண்டு பேசத் தொடங்கினான்.

தன்னுடைய பார்வையற்ற விழிகளை பீஷ்மரின் பக்கம் திருப்பிய திருதராஷ்டிரனின் உதடுகள் நடுங்கின.  பீஷ்மர் தனக்கு உதவிக்கு வராவிட்டாலும் தான் சொல்லப் போவது என்னவெனத் தெரியும் என்பதால் நடுவில் குறுக்கிடுவார் என எதிர்பார்த்தால் ஏமாந்தே போனான்.  பீஷ்மர் தன் உதடுகளை இறுக்கமாய் மூடிக் கொண்டு கடுமையானதொரு பார்வையுடன் அசையாமல் சிலை போல் அமர்ந்திருந்தார்.  அவரின் ஒரு கை மட்டும் விடாமல் தாடியைத் தடவிக் கொண்டிருந்தது.  யுதிஷ்டிரனைப் பார்த்து திருதராஷ்டிரன், “குமாரா, இந்தச் சந்தேகத்தைத் தீர்க்க ஒரே ஒரு வழிதான் இருக்கிறது.” என்றான்.

“ஆஹா, அரசே, உண்மையற்ற வதந்திகளில் இருந்தும், செய்தியில் உண்மையில்லை எனத் தெரிந்துமா?” யுதிஷ்டிரன் ஆச்சரியத்துடன் கேட்டான். 

“சந்தேகம் ஆட்கொண்டால் அவர்களுக்கு உண்மை புரியாது. அப்படியே தெரிய வந்தாலும் அதை ஏற்றுக் கொண்டு அதன்படி நடக்கவும் மாட்டார்கள்.” திருதராஷ்டிரன் கூறினான்.

“அரசே, தாத்தாவைக் கேளுங்கள்.  இப்படி ஒரு மட்டமான திட்டத்தை நாங்கள் போடுவோம் என எப்படிச் சந்தேகப்படலாம்?  எங்கள் சிந்தையில் இப்படி ஒரு எண்ணமே இல்லையே!  இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட துரியோதனனைக் கண்டு யுவராஜா அலுவலில் நீயும் பங்கெடுத்துக் கொண்டு எனக்கு உதவி  செய் எனக் கேட்டேன்.  அவன் தான் வர மறுத்துவிட்டான். நான் என்ன செய்ய முடியும்?”