Sunday, January 12, 2014

தர்மத்தின் வாழ்வதனைச் சூது கவ்வும்!

தன் நிலையைத் தனக்குள்ளேயே எண்ணிய கிருஷ்ணன், தன் அதிர்ஷ்டத்தை நினைத்து நொந்து கொண்டான்.  ஆனால் தன் நண்பர்கள் அனைவருமே தான் எங்கிருந்தாலும் அங்கே தர்மம் இருக்கிறது என்னும் எண்ணம் கொண்டிருப்பதையும் அவன் நினைவு கூர்ந்தான்.  அந்த தர்மம் தனக்கு எப்போதுமே வெற்றியைக் கொண்டு வந்திருக்கிறது என்பதையும் உணர்ந்தான்.   அவனுக்கு நிறையவே வெற்றிகள் கிடைத்துள்ளன.  அது என்னமோ உண்மை தான்.  ஆனால் அவன் தான் செல்லுமிடமெல்லாம் தர்மத்தைப் பின்பற்றி அதையும் கொண்டு செல்கிறனா?  இல்லை என்றே தோன்றுகிறது.  அப்படி அவன் தர்மத்தைக் கொண்டு சென்றிருந்தால் இன்றைக்கு அவன் உறவினர்கள் கண்களில் அது ஏன் படவில்லை?  அவன் செய்ய நினைத்தது சரி என அவனுக்கு மட்டும் ஏன் தோன்றவேண்டும்? அவர்களுக்கும் ஏன் தோன்றவில்லை?  என் சொந்த மனிதர்களையே என்னால் தர்மத்தின் பாதையில் தொடரச் செய்ய இயலவில்லை எனில் வரவிருக்கும் தலைமுறைகளை எவ்வாறு அதர்மத்தின் பக்கம் செல்லாமல் என்னால் மீட்க இயலும்??  அதர்மத்தின் பக்கம் அரசர்கள் போகாமல் அவர்களை எவ்விதம் நான் தடுப்பேன்?  தர்மத்தை நிலைநாட்டுவதும், அதை என்றென்றும் அனைவரும் பின்பற்றுமாறு காப்பது எப்படி?   அவன் இருக்கும் இந்தக் காலகட்டத்துக்கு மட்டுமில்லால் எப்போதும், என்றென்றும் நிலைக்கும்படியாக தர்மத்தை எவ்வாறு அவன் பாதுகாப்பான்?  தர்மத்தின் பாதுகாவலனாக அவன் எவ்விதம் தன் கடமையை ஆற்றுவான்?

விடைகாண முடியாத புதிர் ஒன்றின் கேள்விகளை எதிர்கொண்டிருக்கும் மாணவனைப் போல் உணர்ந்தான் கிருஷ்ணன்.   அவன் இப்போது போராடிக் கொண்டிருக்கும் தர்மம் என்பது தான் என்ன? இந்த தர்மத்தைப் பாதுகாத்து அதன் பால் அனைவரையும் ஈர்க்கும் வண்ணம் அவன் செய்யப் போவது என்ன? மனிதர்களின் கட்டுக்கடங்கா உணர்ச்சி வெள்ளத்திலும், அவர்களின் பலஹீனங்களிலும் ஒவ்வொரு நிமிடமும் அவர்களை அவன் எவ்விதம் பாதுகாக்கப்போகிறான்?

அன்றிரவு புயலும், காற்றுமாக மழை கொட்டித் தீர்த்தது.  இடியின் சப்தம் காதைப் பிளந்தது என்றால் மின்னல் கண்களைப் பறித்தது.   கடல் அலைகளோ ஒரு தென்னை மர உயரத்துக்கு எழும்பிக் குதித்தன.  கரையை உடைத்துக் கொண்டு கடல் வெள்ளம் உள்ளே புகுந்துவிடுமோ என்னும் அளவுக்கு அலைகள் ஆக்ரோஷத்துடன் கரையை மோதின.  மழைச் சப்தமோ அது மழை நீரா அல்லது பெரிய கூழாங்கற்கள் விழுகின்றனவா என்னும்படியான சப்தத்துடன் கூரையில் பேரிரைச்சலுடன் விழுந்தது. அப்போது அந்த அனைத்து சப்தங்களையும் மீறிக் கொண்டு ஒரு குரல் அதிகாரத்துடனும், கம்பீரம் குன்றாமலும், “தர்மம் என்றால் என்ன?” என்ற கேள்வியைக் கேட்டது.   கண்ணனின் தூக்கத்தை அந்தக் குரல் கலைத்ததோடு அல்லாமல் அவனைக் கனவுலகில் இருந்தும் எழுப்பி விட்டது.  விண்ணுக்கும், மண்ணுக்குமாய் எழுந்த அந்தக் குரல் “தர்மம் என்றால் என்ன?” என்று கேட்டது ஈரேழு பதிநாலு லோகங்களிலும் எதிரொலிக்கும்படியான சப்தத்தை உண்டாக்கியது.


தெளிவற்ற, குழப்பமான காட்சிகள் உருவமில்லாமல் ஏதோ தோற்றங்கள் கண்ணன் முன் தோன்றின.    மிதந்து கொண்டும், உருண்டு கொண்டும், மறைந்து கொண்டும், தெரிந்து கொண்டும் பல தோற்றங்களில் ஆடவர்கள் தோன்றினர்.   அனைத்தும் மறைந்து திடீரென விருந்தாவனம் அதன் அழகான மரம், செடிகொடிகளோடும், பழங்களைப் பறித்து உண்ணும் குரங்குகளின் “ஈ” என்ற இளிப்போடும்,  ஆடும் மயில்களோடும், பாடும் குயில்களோடும் கண்ணன் கண் முன்னே தோன்றியது.  ம்ஹ்ஹூம்,  ராதை, அதோ ராதை, கண்ணனால் கைவிடப்பட்ட ராதை! ஆஹா, அவள் தான் அன்று பூத்த மலர் போல எத்தனை புதுமையுடன் காணப்படுகிறாள்.  என் உயிரை விட மேலான என் ராதை!  அவளை அவள் விதி இவ்விதம் தள்ளிவிட்டது!  தன்னந்தனியாக என்னை நினைத்து உருகுகிறாளே.  இது அவள் விதியா?  அல்லது இது தான் என் தர்மமா?

ராதை மறைந்தாள்.  மத்ராவின் மல்யுத்த மேடை கண்ணன் கண்ணெதிரே தோன்றியது.  சுற்றிலும் மக்கள் கூட்டம்.  மக்கள் அனைவரும் கண்ணனின் புகழ் பாடி கோஷமிடுகின்றனர்.  வாசுதேவ கிருஷ்ணனுக்கு மங்களம் என்ற தொனி எங்கும் எழுகிறது.  ஆண்கள், பெண்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், சிறுவர்கள், சிறுமிகள் அவ்வளவு ஏன் ?  வயது முதிர்ந்தோர் கூடக் கண்ணனைப் புகழ்ந்து கோஷம் இடுகின்றனர்.  கண்ணனின் ஒவ்வொரு அசைவையும் கூர்ந்து கவனிக்கின்றனர்.  கம்சன், கொடூர மனம் படைத்த கம்சனின் உடலைத் தூக்கிச் சுழற்றிக் கண்ணன் அந்த மல்யுத்த மேடையில் வீசி எறிகிறான்.  கம்சனின் இறந்த உடலைக் கண்ட மக்கள் கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.  தங்கள் ரக்ஷகன் வந்தே விட்டான் எனக் கிருஷ்ணனைக் கொண்டாடுகிறது.   ஆனால், ஆனால், கண்ணன் கொன்றது யாரை?? அவன் தாய் வழி மாமனை!  இது தர்மமா?

கம்சன் மறைந்தான்;  அந்தக் காட்சிகள் மறைந்தன.  பலராமனும், கிருஷ்ணனும் மத்ராவை விட்டு ஓடுகின்றனர்.  ஜராசந்தனிடமிருந்து தப்பிக்க வேண்டி கோமந்தக மலை அடிவாரம் செல்கின்றனர்.  சஹ்யாத்திரி மலை அடிவாரத்தில் அடைக்கலம் புகுந்து கொள்கின்றனர்.  ஏனெனில் கண்ணன் ஒருவனுக்காக யாதவ குலத்தையே ஜராசந்தன் அழித்துவிட்டால்?? ஆகவே யாதவ குலத்தைக் காக்க வேண்டிக் கண்ணன் பலராமனோடு கோமந்தகத்துக்கு வந்துவிடுகிறான்.  யுத்தத்தை நேரிடையாக எதிர்கொள்ளாமல் இப்படித் தப்பித்து வந்தது சரியா?  அவன் சுத்த வீரனா? அல்லது கோழையா?  இது தர்மமா?

ஜராசந்தனின் மண்டையை உடைக்க பலராமன் தயாராக இருந்தான். கோமந்தக மலையில் அவன் காலடி எடுத்து வைத்திருந்தால் அடுத்த நிமிடம் அது நடைபெற்றிருக்கலாம்.  ஆனால் கண்ணன் தலையிட்டு பலராமனின் கதையைத் தடுத்து  அவன் கோபத்தையும் குறைத்து,  ஜராசந்தனின் உயிரைக் காப்பாற்றினான்.  ஆர்யவர்த்தத்தின் அக்கிரமங்களுக்கெல்லாம், அதர்மங்களுக்கெல்லாம் துணை போகும் சக்கரவர்த்தியின் உயிரைக் காப்பாற்றினான்.  ஆனாலும் ஜராசந்தன் திருந்தினானா?  இல்லையே! எத்தனை அரசர்களைத் துன்புறுத்தி வருகிறான்?  எத்தனை எத்தனை ரிஷி, முனிவர்களின் குருகுலங்கள் கலைக்கப்பட்டன!  எத்தனை பெண்களின் வாழ்க்கையை நாசம் செய்தான்?  அவனை நான் காப்பாற்றியது தர்மமா?

குண்டினாபுரத்தில் விதர்ப்ப இளவரசியின் வேண்டுகோளின் பேரில் அவளைத் தூக்கிச் சென்றதோடு அல்லாமல் அவளை விடுவிக்கப் போராடிய அவள் சகோதரனையும் காயப்படுத்தினேன்.  ருக்மிணியின் சுயம்வரமே ஒரு கேலிக்கூத்தாக, பெண்களின் கோபக் குமுறலுக்கும், அரசர்கள், இளவரசர்களின் கடித்த பற்களிடையே கொண்ட கோபாவேசமான பேச்சுக்களுக்கும், அரச குலப்பெண்களின் புலம்பலுக்கும் காரணம் ஆகிவிட்டது.   இளகிய நல்ல சுபாவம் கொண்ட  பீஷ்மகனின் மனம் நொறுங்கி விட்டது.  ருக்மியோ தண்டனையாக தனக்குத் தானே நாடு கடத்திக் கொண்டான்.  இது தர்மமா?

ஹஸ்தினாபுரம்!! துரியோதனனுக்கு அவன் செய்வது தர்மமா?  நன்மையா? தவறைச்சரி செய்கின்றானா?  அடுத்து கர்ணன்!  அவன் தாயால் பிறந்ததுமே ஒதுக்கப்பட்டவன்.   அதிர்ஷ்டம் கெட்டவன்.  அவனை அவன் தாய் மட்டுமா ஏமாற்றினாள்.  மனிதர்களும்தானே!  என்றாலும் அவன் தன் உயர்ந்த குடிப்பிறப்பினால் விளைந்த மனோதிடத்துடன் அனைத்தையும் எதிர்கொள்கின்றானே!  தன் சொந்தத் திறமையினாலும் அதனால் விளைந்த பலனாலுமே தன் நற்குணங்களை நிலைநாட்டவும் முயற்சிக்கின்றானே! அவன் பாதையில் நான் குறுக்கிடலாமா?  இது தர்மமா?

காம்பில்யம்,  அங்கே நடந்ததோ!  துருபதனும், அவன் மக்களும் தங்கள் மனதைத் திறந்து அவனிடம் காட்டிவிட்டனர்.  அவர்கள் நம்பிக்கையைக் கண்னன் ஒத்துக் கொண்டான், எனினும் குருவம்சத்தினரிடம் போரிட்டு ஜெயிக்கவேண்டும் என்னும் பேராபத்தை எதிர்கொள்ள மறுத்துவிட்டான். ஆனால் அடுத்து அவன் செய்யப் போவது என்ன? அனைவரும் பிரமிக்கத்தக்க வகையில் ஒரு சுயம்வரத்தை ஏற்பாடு செய்து அதை நடத்தி முடிக்க எண்ணுகிறான்.  அது அவ்வாறே நடைபெறுமா?  தோல்வியுறுமா? அநேகமாய்த் தோல்வி தான் கிட்டும்.  இது தர்மமா?

கண்ணன் உடல் நடுங்கியது.  அப்போது இரு மிருதுவான கரங்கள் அவனைத் தொட்டன.  கண்களைத் திறந்து பார்த்த கண்ணன் ருக்மிணி அன்பும், ஆதுரமும் கலந்த பார்வையுடன் அவனைப் பார்த்துக் கொண்டிருப்பதைக் கண்டான்.  ஒரு புன்னகையோடு தன் கண்களை மூடிக்கொண்ட கண்ணன் மீண்டும் உறங்க ஆரம்பித்தான்.  ஆனால் உறங்கினானா?




Friday, January 10, 2014

அதிர்ஷ்டம் இல்லாக் கண்ணன்!

விசுவாசமும், நம்பிக்கையும் தரும் மனைவி மட்டும் இருந்து விட்டால் ஒரு மனிதனால் எதைத் தான் சாதிக்க முடியாது!  கண்ணனுக்கோ இரு மனைவியரும் அப்படியே கிடைத்து இருந்தனர். கரவீரபுரத்தின் இளவரசியான ஷாய்ப்யா  கண்ணனின் உள் மனதுக்குள் கொந்தளித்துக் கொண்டிருந்த எண்ணங்களைத் தன் அதீத புத்திசாலித் தனத்தினால் புரிந்து கொண்டாள். எப்போதும் அதிகம் பேசாமல் பார்வை ஒன்றாலேயே கண்காணிக்கும் அவளுக்கு வீர, தீர, பராக்கிரமசாலியான கண்ணனுக்கு இப்போது ஏற்பட்டிருக்கும் பின்னடைவு புரிந்து கொள்ள முடிந்தது.   எவராலும் சமாளிக்க முடியாத செயல்களைச் செய்வதினாலேயே கண்ணன் சிறந்தவனாக விளங்குவதையும் அவளால் உணர முடிந்தது.  அவன் கடுமையான போராட்டங்களில் சிக்கிக் கொண்டிருக்கும் பல சந்தர்ப்பங்களை அவள் கண்டிருக்கிறாள்.  பேரழிவிலிருந்து விரைவான செயல்பாட்டின் மூலம் வெளிவர அவனுக்கு எவ்வளவு சக்தி தேவைப்பட்டிருக்கிறது என்பதையும் அறிவாள்.  தீங்கு வரக்கூடும் என்பது தெரிந்தே தன் அதிசய சக்திகளைப் பயன்படுத்துவதன் மூலம் அவன் பிரச்னைகளில் இருந்து விடுபட்டு வந்திருக்கிறான்.  இது நிச்சயம்.  ஆகவே அவள் இப்போதும் அதிகம் பேசவே இல்லை.  ஆனால் கண்ணனின் மனநிலைக்கு ஏற்றாற்போல் நடந்து கொண்டதோடு, அவனுடைய  ஒரு பார்வையிலோ, சொல்லிலோ, செய்கையிலோ அவன் மனதைப் புரிந்தவளாக அவனுக்கு ஊக்கத்தைக் கொடுக்கும் விதமாக நம்பிக்கை ஊட்டி வந்தாள்.

கண்ணனுக்குத் தன் தாயும், இரு மனைவியரும் தன்னிடம் வைத்திருக்கும் நம்பிக்கையும், அன்பும், பரிவும் பாசமும் நன்கு புரிந்தது.  ஆகவே அவன் தன்னிடம் எவ்வித மாற்றமும் இல்லாதவன் போல எப்போதும் போல மாறாப் புன்னகையுடன் இருந்தான்.  ஆனால் அடி மனதில் அவனுக்கு வேதனையும், தொந்திரவும் தொடர்ந்து இருந்து வந்தன.   உண்மையான சூழ்நிலை என்ன என்பதைக் குறித்து அவன் தீர்மானமாக அறிந்திருந்தான்.  யாதவர்கள் காற்றில் ஆடும் கொடியைப்போல ஆட்டம் கண்டுவிட்டனர்.   அவன் இவ்வளவு வருடங்களாகப் போற்றிப் பாதுகாத்து வந்த தர்மத்தின் வழியில் செல்ல வேண்டும் என்ற குறிக்கோள், அதன் மூலம் தர்மத்துக்குக் கிடைக்கவிருந்த வெற்றி அனைத்தும் நெருங்கி வருவதைப் போல் வந்துவிட்டு மறைந்துவிட்டது.  இனி நம்பிக்கைக்கே இடமில்லாமல் போய்விட்டது.  இப்போது அவன் செய்ய வேண்டியது எல்லாம் வாய் பேசாமல் சுயம்வரத்தில் கலந்து கொள்வது ஒன்று மட்டுமே!  ஆனால் இந்த சுயம்வரத்தில்  தர்மத்தின் மாட்சிமை பொருந்திய சக்தி தன்னிடம் உள்ளது என்ற எண்ணத்துடன் அந்த கம்பீரத்துடன் அவனால் கலந்து கொள்ள இயலாது.  யாதவர்கள் எவரும் அவனுக்குப் பின்னால் துணையாக இல்லை என்பதை அனைவரும் புரிந்து கொண்டுவிடுவார்கள்.  மற்ற அரசர்களைப் போல அவனும் அவர்களில் ஒருவனாகவே இருக்க வேண்டும்.  அவன் மகிமையோ, அவன் வீரமோ, மாட்சிமையோ தனித்து உணர முடியாது.

உத்தவனை கண்ணன்  பீஷ்மரிடம் தூது அனுப்பி இருக்கிறானே!  அதுவும் தோற்றுவிடுமோ?  அப்படித் தோற்றுவிட்டால்?? பீஷ்மருக்குக் கண்ணன் விடுத்த வேண்டுகோளை  பீஷ்மர் ஏற்றுக்கொள்ளாவிட்டால்??  நியாயம் என்ன என்பதையும், நீதியின் வழி செல்லவேண்டிய அவசியத்தையும் பீஷ்மரும் உணராவிட்டால்??   உத்தவன் தலைமையில் நாகர்கள் புஷ்கரத்தை வலுவில் பிடுங்கி செகிதானாவுக்குக் கொடுக்கும்படி நேர்ந்துவிட்டால்?? இல்லை; இல்லை. அப்படி எல்லாம் நடவாது.  புஷ்கரம் மட்டும் செகிதானாவிற்குத் திரும்பக் கொடுக்கப்படாவிட்டால்!! ஆஹா, கண்ணன் தோற்றே விடுவான்.   தவிர்க்க இயலாமல் அனைவரையும் கவர்ந்திழுக்கும் கண்ணனின்  வசீகரம் மெல்ல மெல்ல மறைந்தே போகும்.  கண்ணன் தன் தலையை உலுக்கிக் கொண்டான்.  ஆனால் ஒன்று நிச்சயம், கண்ணன் திட்டப்படி ஐந்து சகோதரர்களும் சுயம்வரத்தில் எப்படியேனும் கலந்து கொண்டே ஆக வேண்டும்.

கண்ணனின் திட்டப்படி, அவர்கள் ஐவரும் அனைவரும் பிரமிக்கும் விதத்தில் இந்த சுயம்வரத்தின் போது வெளிப்பட வேண்டும்.  அப்படி இல்லை எனில் அவர்கள் ஐவருமே குரு வம்சத்தினரின் கெளரவர்கள் நூற்றுவரின் அடிமைகளாக அவர்களைச் சார்ந்தவர்களாகவே என்றென்றும் வாழும்படி ஆகிவிடும்.  குரு வம்சத்தினரின் முன்னர் வேறு உதவிகள் இல்லாதவராய் நிராதரவாய் நிற்கும்படி ஆகிவிடும்.  சகோதரச் சண்டை அதிகம் ஆகும்; அல்லது துரியோதனன் தன் முழு அதிகாரத்தையும் பிரயோகிப்பதால் எதுவுமே செய்ய முடியாமலும் போகலாம்.  அதோடு விட்டதா?  மேலும் இந்த ஜராசந்தன் ஒருவன் இருக்கிறானே!  மகத நாட்டுச் சக்கரவர்த்தி!  ஆரியர்களை அழிப்பதே அவன் குறிக்கோளாக வைத்திருக்கிறான்.  ஆரியர்களையும், அவர்களின் வாழ்க்கை முறையையும் அழிப்பதே அவனுக்கு முக்கியம். அதற்காகவே பாஞ்சால இளவரசியைக் கடத்தித் தூக்கிச் செல்லவும் தயங்க மாட்டான்.  ஒன்றையொன்று தொடர்ந்து வரும் சத்யம், யக்ஞம், தபஸ் போன்ற ஆசார, அநுஷ்டானங்கள், ரிஷி, முனிவர்களால் சொல்லப்பட்ட, சொல்லப்படுகின்ற அவர்கள் ஆசிரமங்களில் கற்பிக்கப்படுகின்ற இந்த வாழ்க்கை முறைக்கெல்லாம் அழிவு ஏற்பட்டு விடும்.  அவர்களால் அன்றோ ஆரியர்களின் வாழ்க்கை கட்டுப்பாட்டுடனும், கண்ணியத்துடனும், ஒரே சீராக நடந்து வருகிறது.  இவை மறைந்து போய்விடுமோ?   இவற்றைக் காக்க எவரும் இல்லாமல், இவற்றை மேம்படுத்த, இவற்றைக் கற்க எவரும் இல்லாமல் ஒரேயடியாக மறைந்து விடுமோ?  என்ன செய்யப் போகிறேன்!

இந்த தர்மசங்கடமானதொரு இக்கட்டானதொரு சூழ்நிலையைக் குறித்து நினைக்க, நினைக்க, கண்ணனுக்குத் தான் ஏதோ, எதையோ விட்டு விட்டது போல், மறந்துவிட்டது போல் இருந்தது.  அனைவரும் அவனைக் கடவுள் எனக் கொண்டாடுகின்றனர்.  ஆனால் அவனோ ஒரு சாமானியனாக, பலஹீனனாகவன்றோ இருந்து வருகிறான்!  ஆஹா, அனைவருமே நான் ஏதோ அதிசயங்களை நிகழ்த்துபவனாக, ஒரு சாகசக்காரனாக நினைக்கையில் நான் இப்படி இருக்கிறேனே!  நான் ஒரு சாமானியன். ஆனால் கெட்டிக்காரன்.  அதிர்ஷ்டம் என்பது என் கதவுகளை எப்போதோ ஒரு முறை தான் தட்டுகிறது.

Wednesday, January 8, 2014

கண்ணன் படும் பாடு!

இது வரையிலும் கிருஷ்ணன் சொன்னவற்றை ஆமோதித்து வந்தவர்களுக்குக் கூட இப்போது கொஞ்சம் தயக்கம் வந்துவிட்டது.   பலராமனின் யோசனையை அனைவரும் ஏற்கலாம் என நினைத்தனர்.  துரியோதனன் புஷ்கரத்தை ஆக்கிரமித்ததில் அவர்களுக்கு உடன்பாடாகவே  இருந்தது.  அதில் தாங்கள் தலையிட வேண்டாம் என எண்ணினார்கள்.  சாத்யகியுடனும், கிருதவர்மாவுடனும் கிருஷ்ணன் மட்டும் சுயம்வரத்துக்குச் செல்லட்டும்.  ஆனால் போட்டிகளில் ஈடுபட வேண்டாம்.  துரோணரை எதிரியாக்கும் விதமாகவும், ஜராசந்தனின் கொடுங்கோன்மை அதிகரிக்கும் வண்ணமாகவும் இந்த சுயம்வரத்தில் போட்டிகளில் கலந்து கொண்டு திரெளபதியை ஜெயிக்க வேண்டிய கட்டாயம் ஏதும் இல்லை.  அவர்கள் அனைவரின் எதிர்ப்பைச் சம்பாதித்துக் கொண்டு ஜெயித்து மனைவியாக்கிக் கொள்ள திரெளபதி அப்படி ஒன்றும் உயர்ந்தவள் அல்ல.  அதற்கான தகுதி அவளிடம் இல்லை.


இந்த ஆலோசனை சபையிலிருந்து திரும்பிய கிருஷ்ணன் மிகுந்த மனவேதனையில் இருந்தான்.  அவன் போட்ட  திட்டங்கள் எல்லாம் ஒன்றும் இல்லாமல் போய்விட்டன.  யாதவத் தலைவர்கள் அவனை மிக மோசமாக ஏமாற்றிவிட்டனர்.  தங்கள் குலத்தின் தற்போதைய சுகத்தையும், சுதந்திரத்தையும் மட்டுமே எண்ணிக் கொண்டு, நாட்டின்  வடக்குப் பகுதியில் நடைபெற்று வரும் மாற்றங்களைக் கூர்ந்து கவனிக்க மறுக்கின்றனர். அவன் உதவியால் அவர்கள் அடைய வேண்டிய இலக்குகளை அடைந்துவிட்டனர்.  அதோடு அவன் யாதவ குல ரக்ஷகன் என்பது முடிந்துவிட்டது.

இப்போது அவர்கள் அனைவரும் திருப்தியாகவும், சந்தோஷமாகவும், பெரும்பணக்காரர்களாகவும் வாழ்ந்து வருகின்றனர்.  ஆகவே அவனுடைய பணி என்ன, எதற்காக அவன் அரும்பாடுபட்டு தூது செல்கிறான் என்பது குறித்தெல்லாம் அவர்களுக்குக் கவலை ஏதும் இல்லை.   அவ்வளவு ஏன்? அவர்களின் தர்மம் என்ன என்பது குறித்தும் அக்கறை இல்லை.  ஒரு நல்ல சிறந்த ஆரியன் எப்படி வாழவேண்டும், ஒரு ஆரிய அரசன் எப்படி ஆட்சி நடத்த வேண்டும், அவன் அரச தர்மம் என்ன என்பதை எல்லாம் ஆர்ய வர்த்தம் முழுமைக்கும் யாதவர்கள் மூலம் நடத்திக்காட்ட வேண்டும் என்று கிருஷ்ணன் கண்ட கனவுகளெல்லாம் கரைந்து போயின!  அவனுடைய வாழ்க்கையின் குறிக்கோளாக அவன் நினைத்தது ஊமை கண்ட கனவாக ஆனதோடு அல்லாமல்  முட்டாள் தனம் என்னும் பெயரை அன்றோ வாங்கி விட்டது.  ஆரியர்களின் வாழ்க்கையோடு தான் தங்கள் வாழ்க்கையும் பின்னிப் பிணைந்தது என்பதை யாதவர்கள் உணரவே இல்லையே!  இவை அனைத்தும் தங்கள் நன்மைக்கே என்பதை அவர்கள் தெரிந்து கொள்ளவே இல்லையே!

கிருஷ்ணனின் மனதில் துரியோதனனால் செகிதனாவுக்கு நடந்த தவறைச் சரி செய்ய நினைக்கும்  எண்ணம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்ததை அவர்களால் புரிந்து கொள்ள இயலாது தான்.  அதில் அவர்கள் தலையிட மறுப்பதும் புரிந்து கொள்ளக் கூடியதே!  அல்லது இந்த சுயம்வரத்தின் மூலம் ஆர்யவர்த்தம் முழுதையும் தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர நினைக்கும் ஜராசந்தனின் முயற்சியையும் அவர்கள் தடுக்க நினைப்பார்கள் என எண்ண முடியாது தான்.  இது அதர்மம் என்றும்  அதன் வெற்றி என்றும் புரிந்து கொள்ள மறுக்கிறார்கள் தான்.  ஆனால் அதன் மூலம் துரோணருக்கும், துருபதனுக்கும் இடையில் இருக்கும் மனக்கசப்பையையும், பகைமை உணர்வையும் அடியோடு அழிக்க வேண்டும் என்றும் நினைக்கவில்லையே! அதிலே இவர்களுக்குக் கொஞ்சமும் ஆர்வம் இல்லையே!  இந்த மனக்கசப்பும், வெறுப்பும் எந்த அளவுக்குத் துன்பத்தை ஆர்யவர்த்தம் முழுமைக்கும் அளிக்கும் என்பதையும் யோசிக்க மறுக்கின்றரே!  யாதவர்கள் நடுநிலைமை வகிப்பவர்கள்;  அவர்கள் அமைதியை விரும்புபவர்கள் என்பதை எல்லாம் இந்தப் பகைமையை ஒழிப்பதன் மூலம் நிரூபிக்கலாமே!   தங்கள் இருப்பும், தங்கள் தலையீடும் அங்கே எவ்வளவு தேவை என்பதை உணர மறுக்கின்றனரே!

ஆனால் இந்த சுயம்வரத்தின் மூலம் பாண்டவர்கள் ஐவரையும் கிருஷ்ணன் வெளிக்கொண்டுவர நினைப்பது குறித்து யாதவர்கள் எவரும் அறிந்திருக்கவில்லை.  அது மட்டுமின்றி அர்ஜுனனை இந்தப் போட்டியில் கலந்து கொள்ளச் செய்து திரெளபதியை வெல்ல முயற்சி செய்யச் சொல்லவேண்டும் என்று கண்ணன் திட்டம் வகுத்திருப்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்.  ம்ஹூம், இல்லை; இல்லை;  கண்ணனும் அவர்களுக்குச் சொல்லப் போவதில்லை.  இப்போது இல்லை.  எப்போதும் இல்லை; அப்படியே சொன்னாலும் அவர்கள் இதைக் கேட்டுவிட்டுக் கேலியாகச் சிரிப்பார்கள்.   இதை முட்டாள்தனமாகவும் நினைப்பார்கள்.  பார்க்கப் போனால் இது ஒரு சூதாட்டம் போலத் தான்.

ஒருவேளை அர்ஜுனனை இந்த சுயம்வரத்தில் கலந்து கொள்வதில் இருந்து ஏதேனும் காரணங்கள் தடுக்கலாம்.  எவரேனும் தடுக்கலாம்.  அவ்வளவு ஏன்? அவன் துரோணரின் அருமைச் சீடன் என்பது ஒன்றே போதுமே!  திரெளபதியை அவன் வெல்ல முயன்றால் அதுவே பெரும் தடையாகுமே! அல்லது திரெளபதி அவன் துரோணரின் சீடன் என்பதால் அவனைத் தேர்ந்தெடுக்க மறுக்கலாம்.  அதனால் வந்திருக்கும் அரசர்கள், இளவரசர்கள் எல்லாருடைய  மனநிலையிலும் மாற்றங்கள் ஏற்பட்டு அவர்கள் கலவரம் செய்யலாம்.  அல்லது ஜராசந்தனால் திரெளபதி கடத்திச் செல்லப்படலாம். இவை எதுவும் நிகழாமல் இருக்க வேண்டுமானால்!!!!!!!!!!!!!!  கண்ணனின் அனைத்து நம்பிக்கைகளும், வாக்குறுதிகளும் செகிதனாவை மீண்டும் புஷ்கரத்துக்கு அரசனாக்கிவிட்டு அந்த வழியே செல்ல அர்ஜுனனுக்கு எந்தத் தடையையும் ஏற்படுத்தாமல் உதவிகள் செய்வதன் அடிப்படையிலேயே அமைந்திருந்தது.   இந்த உதவியை அர்ஜுனனுக்கும், கண்ணனுக்கும் யாதவர்களைத் தவிர எவரால் செய்ய முடியும்?  அவனுடைய அனைத்து நம்பிக்கைகளும் மண்ணோடு மண்ணாகிவிட்டனவே!

கண்ணனின் தன்னம்பிக்கையே ஆட்டம் கண்டுவிட்டதோ என்னும்படி கண்ணன் அவன் வாழ்க்கையிலேயே முதல்முறையாகக் கவலை கொண்டான்.  என்ன செய்வது என்பதே அவனுக்குப் புரியவில்லை. அவனுடைய இந்தத் துன்பங்களில் அவனோடு பங்கு கொள்வார் எவருமே இல்லாதது போல் உணர்ந்தான்.   எவரிடமும் மனம் விட்டுப் பேசக் கூட அவனால் முடியவில்லை.  உத்தவன் எங்கோ இருந்தான்.  சாத்யகி, ஒரு நல்ல விசுவாசமுள்ள நண்பன் தான்.   இளம் யாதவ வீரர்களை வரவிருக்கும் மாபெரும் யுத்த சாகசங்களுக்குப் பயிற்சி அளிப்பதில் இருந்து அவன் தவறவில்லை.  தவறாமல் பயிற்சி அளித்து வந்தான் தான்.  ஆனாலும் அவனுக்கு உள்மனதில் இத்தனை பெரிய ஒரு வீர, தீரப் பராக்கிரமச் செயலைச் செய்தே ஆகவேண்டுமா?  அது நடக்குமா என்னும் சந்தேகம்  தோன்றிக் கொண்டே தான் இருந்தது.  


அவன் தாய் தேவகி, அவன் இரு மனைவியர் ருக்மிணி, ஷாய்ப்யா,  ஆகிய மூவரும் தங்கள் உள்ளுணர்ச்சியால் கண்ணன் மனப்போராட்டத்தை எவ்விதமோ புரிந்து கொண்டனர்.  ஆகவே மூவரும் அவரவர் வழியில் அவனுக்கு உதவியும், ஆறுதலும் அளிக்க முற்பட்டனர்.   தேவகி அம்மா அவனுடைய துன்பங்களினால் குடும்பத்தின் மற்ற உறுப்பினர்களின் அன்புக்கும், பாசத்துக்கும் இடையூறு ஏற்படாவண்ணம் கவனமாகப் பார்த்துக் கொண்டாள்.  என்றாலும் அவளுக்குள் தன்னுடைய கோவிந்தன் ஒரு கடவுள் என்னும் எண்ணமும், அவன் இருக்கும் வரையில் எதிர்காலம் குறித்த சிந்தனையோ, கவலையோ வேண்டாம் என்னும் எண்ணமும் தொடர்ந்து இருந்தன.  


தாய்மை எய்தி இருந்த ருக்மிணி தன் அன்பாலும், அழகாலும் கண்ணன் மனதைக் கவர்ந்து அவன் உள்ளத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தினாள்.  தான் கண்ணனை மிகவும் காதலிப்பதையும், அவன் மேல் வைத்திருக்கும் அளப்பரிய நம்பிக்கையையும் தன் செயல்களாலும், பேச்சுக்களாலும் வெளிப்படுத்தினாள்.  கண்ணனுக்குத் தோல்வி என்பதே இல்லை என்றும், அவன் தர்மத்தை நிலைநாட்டவே பிறந்திருக்கிறான் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றும் தெளிவு படுத்தினாள்.  அதோடு கண்ணனுடைய அபரிமித வெற்றிக்காகவே இத்தனை கஷ்டங்களையும் மனத் துன்பத்தையும் அவன் அனுபவிக்கிறான் என்றும் அடுத்து அவன் பெறப்போவது மாபெரும் வெற்றி என்றும் தீர்மானமாகக் கூறினாள்.  தன் அன்பும், ஆதரவும் என்றென்றும் கண்ணனுக்கே என்று  கூறியதோடு அல்லாமல் அவன் செயல்களுக்கு என்றென்றும் உறுதுணையாக இருப்பதாகவும் உறுதி கூறினாள்.



Tuesday, January 7, 2014

சத்ராஜித்தின் வாதமும், கண்ணனின் நிராதரவான நிலையும்!

கிருஷ்ணன் எவ்வளவு சொல்லியும், எத்தனை விளக்கியும் அவன் அனைவரின் நம்பிக்கையையும் பெற்றதாகத் தெரியவில்லை.  யாதவத் தலைவர்கள் எவருக்கும் அவன் சொன்னதின் மேல் எந்தவிதமான அபிப்பிராயமும் ஏற்பட்டதாகவும் தெரியவில்லை.  அவர்களில் தலைமை வகித்தவன் சத்ராஜித் என்னும் வலிமை வாய்ந்த, மிகப் பெரிய பணக்காரன் ஆன யாதவத் தலைவன் ஆவான்.  இங்குள்ள மற்ற யாதவர்களிடையே மட்டுமின்றி ஆர்யவர்த்தம்,  மற்றும் அதைத் தாண்டி வாழ்ந்து வந்த அனைத்து யாதவர்களிடையேயும் சத்ராஜித்தின் அதிகாரம் சென்று கொண்டிருந்தது.  அனைவரும் அவனை முக்கியமான தலைவர்களில் ஒருவனாக மதித்து அவன் சொல்வதைக் கேட்பார்கள்;  கேட்டும் வந்தார்கள்.  சியமந்தக மணி என்னும் விலை மதிக்க முடியாத ஒப்பற்ற அதிசய சக்தி வாய்ந்த மணியை அவன் எவ்விதமோ பெற்றிருந்தான். (இது குறித்து விரிவான தகவல்கள் பின்னர் வரும்.)  அந்த மணியின் சக்தியும், ஒளியும் எங்கெங்கும் பேசப்பட்டுக் கொண்டிருந்த ஒன்று.  அந்த மணியின் ஸ்பரிசம் எதன் மேல் பட்டாலும் அது பத்தரைமாற்றுத் தங்கமாக மாற்றிக் கொண்டிருந்ததாகவும் சொல்லி வந்தனர். அதோடு இல்லாமல் சத்ராஜித்திடம் பல பெரிய வணிகக் கப்பல்கள், போர்க்கப்பல்களும் இருந்தன.  எண்ண முடியாத அளவுக்கு மிகப் பெரிய சொத்திற்கும் அதிபதியாக இருந்தான்.  ஆடம்பரமானதொரு வாழ்க்கையை வாழ்ந்து வந்ததோடு அல்லாமல், துவாரகையின் பணக்கார யாதவர்களைக் கேளிக்கை நிகழ்ச்சிகள் மூலமும், மற்றும் பலவிதங்களிலும் மகிழ்விப்பதிலும், அவர்களோடு நெருங்கிப் பழகுவதிலும் முன்னணியில் இருந்து வந்தான்.

ஆனால் என்ன காரணத்தினாலோ சத்ராஜித்திற்குக் கிருஷ்ணன் மேல் சிறிதும் நம்பிக்கை என்பதே இல்லை.  இப்போதோ கேட்கவே வேண்டாம். கிருஷ்ணனின் யோசனைகளுக்கும், அவன் எடுத்த முடிவுகளுக்கும் பலத்த ஆக்ஷேபங்களைத் தன் முழு மனதோடு தெரிவித்தான்.  கிருஷ்ணனின் மேல் தனக்குள்ள அவநம்பிக்கையையும் வெளிப்படையாகக் காட்டிக் கொண்டான்.   கொஞ்சமும் நிம்மதி இல்லாமல் மத்ராவுக்கு வெளியே வாழ்ந்து வந்த அவன் கம்சனின் மறைவுக்குப் பின்னரே மத்ரா திரும்பினான்.  ஒரு அகதியைப் போல மத்ரா திரும்பினவனுக்கு யாதவக் குடிகள் அனைவரும், இடையனாகவும், மாடு மேய்ப்பவனாகவும், காடுகளிலும், நதிக்கரைகளிலும் திரிந்து வந்தவனும் ஆன ஒரு சின்னஞ்சிறு இளைஞனை நம்பி இருப்பது ஆச்சரியத்தை மட்டுமின்றி, இது பேராபத்துக்கு வழி வகுக்கும் என்றும் தோன்றியது. இவனை நம்புவதில் உள்ள ஆபத்தை யாதவர்கள் உணரவே இல்லையே?  எப்படிக் காட்டுத்தனமாய் வளர்க்கப்பட்டானோ அவ்விதமே எல்லையில்லாத கனவுகள் கண்டு இவ்வுலகத்து மக்கள் அனைவரையும் தர்மத்தின் பாதையில் திருப்பப் போவதாய்ச் சொல்லிக்கொண்டு திரியும் இவனா யாதவர்களின் தலைவன்?   இவனா அனைவரையும் வழி நடத்துகிறான்?  இது சரியாக வருமா?  சத்ராஜித்துக்குக் கோபம் மட்டுமில்லாமல் கண்ணன் மேல் தனக்கிருந்த அவநம்பிக்கையையும் வெளிப்படையாகவே காட்டி வந்தான்.

சத்ராஜித் எப்போதோ உணர்ந்துவிட்டான்.  யாதவர்கள் கிருஷ்ணனால் வழி நடத்தப்பட்டு, பல தலைமுறைகளுக்கும் இப்படியான இடர் விளைவிக்கும் வாழ்க்கையை ஒரு சாகசம் என நினைத்து வாழ்ந்து வந்தார்களானால்??? மொத்த ஆர்யவர்த்தமும் யாதவர்களுக்கு உட்பட்டு ஆளப்பட வேண்டும் என்ற கனவு கண்டார்களானால்??  ம்ஹூம், இதெல்லாம் நடக்கக் கூடியதே அல்ல! வெறும் கனவு!  வெறும் வாய்ப்பந்தல் போடுகிறான் அந்தக் கிருஷ்ணன். இல்லை, இல்லை, எனக்கு ஆர்யவர்த்தத்தை ஆளவேண்டும் என்ற எண்ணமெல்லாம் இல்லை.  சத்ராஜித் கிருஷ்ணனின் யோசனைகளைத் திட்டவட்டமாக மறுத்தான்.  எல்லாம் சொல்லி முடித்தாயிற்று!  இனி என்ன? யாதவர்கள் ஒரு போதும் மற்றவர்களின் சொந்த விஷயங்களிலோ அவர்கள் உள்நாட்டு விவகாரங்களிலோ தலையிடமாட்டார்கள். அதோடு இல்லாமல் சத்ராஜித்துக்கே இவை எதுவும் பிடிக்காது.  அவனுக்கு வாழ்க்கையை எல்லா விதங்களிலும் அனுபவித்து வாழ்வதும், யாதவர்களிடையே தன்னுடைய கெளரவம் காப்பாற்றப்படுவதுமே முக்கியமான ஒன்று.  மற்றவை பற்றி அவனுக்குக் கவலையில்லை.    அவனை வளமாகவும், செழிப்பாகவும் மாற்றாத எதுவும் தர்மத்தோடு சேர்ந்தது இல்லை.

கிருஷ்ணனின் யோசனைகளைக் கேட்ட சத்ராஜித் வாய் விட்டுச் சிரித்தான். ஆர்யவர்த்தத்தின் அரசர்கள் எப்படிப் போனால் யாதவர்களுக்கு என்ன வந்தது?  அவர்களுக்கு இதன் மூலம் என்ன லாபம் அல்லது நஷ்டம்?  ஜராசந்தன் அவர்களை நிர்மூலமாக்க முயன்று கொண்டிருந்த போது எந்த அரசன் அவர்களின் உதவிக்கு வந்தான்??  அவர்களின் அதிகாரங்களை அவர்களுக்குள்ளாகப் போர் செய்து முடிவு செய்துகொள்வதே சிறந்தது.   இதில் எல்லாம் தலையிடாமல் ஒதுங்கி இருப்பதிலேயே யாதவர்களுக்கு கெளரவம்.  அதுவே அவர்களுக்குச் சிறப்பையும் உயர்வையும் கொடுக்கும்.   துருபதன் ஜராசந்தனின் பேரனுக்குத் தன் பெண்ணைக் கொடுக்க விரும்பினால்,  அது நிச்சயமாகப் பாஞ்சாலத்தின் அழிவுக்கும், துருபதனின் அதிகாரத்துக்கும் ஒரு கேள்விக்குறியாகவே இருக்கும்.  அதில் எள்ளளவும் சந்தேகமே இல்லை.  ஆனால் அது நமக்கு எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தாது.  ஹஸ்தினாபுரத்துக்காரர்களுக்கு, குரு வம்சத்தினருக்கே இதன் மூலம் பெரிய அளவில் தாக்கம் ஏற்படும்.  ஆகவே பீஷ்மர் தான் இது குறித்தும், மகத நாட்டு அதிகாரத்தை ஒழிப்பது குறித்தும் கவலைப்பட வேண்டுமே தவிர, யாதவர்கள் அல்ல.  அவர்கள் மூவரும் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டு தங்களைத் தாங்களே அழித்துக்கொள்ளட்டும்.  அப்படித் தான் நடக்கப் போகிறது.   இது தான்  அவர்களுக்கு விதித்த விதி.  இதில் யாதவர்களுக்கு எவ்விதமான சம்பந்தமும் இல்லை.  அவர்களை இதில் நுழைப்பதில் எவ்விதமான புத்திசாலித்தனமும் தென்படவும் இல்லை. சத்ராஜித் மேலும் நிதானமாக விவரிக்க ஆரம்பித்தான்.   அமைதியான இந்த நாட்களின் இனிமையைக் குறித்தும், அதன் மூலம் தங்களுக்குக் கிடைத்துள்ள அருளாசிகள் குறித்தும் எண்ணிப்பார்க்கச் சொன்னான்.

யாதவ குலமே இப்போது தான் செழுமையையும், வளத்தையும், சுகத்தையும் கண்டு வருகிறது.  அவர்களின் அக்கறை யாதவ குல முன்னேற்றத்தில் தான் இருக்கவேண்டுமே அன்றி, எதிரிகளின் அதிகாரங்களைப் பறித்து வெல்வதிலும், அவற்றில் ஈடுபடுவதிலும் இல்லை.  கடவுள் யாதவர்களுக்கு வாழ்க்கையை இப்படியான வெட்டி வேலைகளில் ஈடுபடுத்திக் கொண்டு வீணாக்கவா கொடுத்திருக்கிறார்??  ஆக்கபூர்வமான வேலைகளில் ஈடுபடவே யாதவர்கள் பிறந்திருக்கின்றனர்.   மற்றவர்களின் சண்டையில் தலையிடுவதற்காகவா யாதவர்களுக்கு ஆண்டவன் உயிர் கொடுத்து வாழ வைத்திருக்கிறான்?   கிருஷ்ணனின் அடுத்தடுத்த சமாதானப் பேச்சுக்களும், யாதவர்கள் தர்மத்தின் நெறியில் வாழ்ந்து  தர்மத்தைக் கடைப்பிடித்து அதை செளராஷ்டிராவில் மட்டுமின்றி ஆர்யவர்த்தம் முழுமைக்கும் கடைப்பிடிக்கவேண்டும் எனக் கிருஷ்ணன் கூறியதும் எவருக்கும் காதுகளில் ஏறவில்லை.  அதற்கு எவரும் ஆதரவும் தெரிவிக்கவில்லை.  எவரோ எங்கேயோ போட்டுக்கொள்ளும் யுத்தத்துக்காக, நம் யாதவ இளைஞர்கள் அங்கே போய் அவர்களுக்காகப் போரில் ஈடுபட்டுத் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள வேண்டுமா என்பதே பெரும்பாலான முதிய யாதவத் தலைவர்களின் கருத்தாக இருந்தது.


Monday, January 6, 2014

கண்ணனை நம்புபவர்கள் எவருமே இல்லையா?

பெரியோர்களின் இந்தக் கருத்தைக் கண்டு ஏமாற்றம் அடைந்த கிருஷ்ணன் தன் சகோதரன் பலராமன் பக்கம் திரும்பினான்.  கிருஷ்ணனை ஒரு போதும், ஒரு நொடியும் பலராமன் விட்டுக் கொடுத்ததே இல்லை.  இது வரை வாழ்ந்திருந்த வாழ்க்கையில் எல்லாம் கிருஷ்ணனின் பக்கமே நின்று அவனுக்குப் பேருதவிகள் செய்திருக்கிறான்.  ஆனால் இப்போது??? பலராமனுக்குத் தன் வாழ்க்கையில் பெரும் திருப்தி ஏற்பட்டிருந்தது. மகிழ்ச்சியோடு வாழ்ந்து வந்தான்.  கஷ்டங்களோடு வாழ்ந்து வந்த வாழ்க்கையின் மேல் அவனுக்கு அவனையும் அறியாமல் ஒரு வெறுப்பு வளர்ந்திருந்தது.  தன் அருமை நண்பர்களோடு நேரத்தைச் செலவிடுவதிலும், அவர்களோடு மதுபானம் அருந்திய வண்ணம் சூதாட்டங்களில் ஈடுபட்டுப் பொழுதைக் கழிப்பதிலும், அனைவரையும் அதிகாரம் செய்த வண்ணம் நடந்து கொள்வதிலும், சிறு வயது சாகசங்களை நினைத்து நினைத்து மகிழ்ந்து வாழ்வதிலும் அவன் பொழுது கழிந்து கொண்டிருந்தது.  தன்னுடைய இள வயது சாகசங்களை நினைத்து நினைத்துப் பெருமை கொண்டிருந்த அவனுக்கு யாதவர்களோடு இனி யாரும் போர் புரிய மாட்டார்கள்; யாதவர்கள் வலிமை பெற்றுவிட்டனர் என்பதில் ஐயமே இல்லை.

பலராமன் வெளிப்படையாக இருந்தான்.  ஆனால் கோவிந்தனோ!  அவன் சற்றும் மாறவில்லை.  இளவயதில் இருந்த அதே கோவிந்தனாகவே இப்போதும் சாகசங்களை நிகழ்த்த ஆசைப்படுபவனாக, அதிசயங்கள் நிகழ்த்துவதில் பிரியமுள்ளவனாகவே இருந்து வருகிறான்.  எப்போது பார்த்தாலும் அதிசயங்களை நிகழ்த்த முடியுமா?  போதும்; போதும். பலராமனுக்கு இதுவரை நடைபெற்றவையே போதும் எனத் தோன்றியது. கண்ணனுக்கு திரெளபதியின் சுயம்வரத்துக்குச் செல்ல வேண்டும் என ஆசை இருந்தால் தடுப்பவர்கள் யார்?  தாராளமாய்ப் போகட்டுமே!   கோவிந்தன் விரும்பினால் பலராமன் அவனுடன் துணைக்கு மட்டுமே செல்வான்.  அந்தப் போட்டிகளில் எல்லாம் கலந்து கொள்ள மாட்டான்.  ஆஹா, இன்னொரு மனைவியைக் கொண்டு வருவதன் மூலம் குரு வம்சத்தினரின் பகைமை அல்லவோ வரதக்ஷணையாக வந்து சேரும்!   அதோடு அவர்களோடு யுத்தம் செய்யும்படியும் நேரிடலாம்.  வேண்டாம் வேண்டாம்.  இது என்ன புதுத் தொல்லை.  அவள் கழுத்தில் கட்டிய கல்லாக அன்றோ இருந்து வருவாள்!  நமக்கு வேண்டாம்.

அது மட்டுமா?  துரியோதனன் என் அன்பான மாணவன் ஆயிற்றே!   தன் பிரியத்துக்கு உகந்த அந்த மாணவனை பலராமன் மிகவும் நேசித்தான்.  ஹூம்! பாவம் துரியோதனன்!  அவன் விதி தான் எப்படி அவனை மோசம் செய்திருக்கிறது!  அரச குலத்தில் பிறந்தவன் ஒரு குருட்டுத் தந்தைக்கா பிறக்க வேண்டும்!  துரதிர்ஷ்டம் பிடித்தவன்!  அதனால் அவன் தன் வாரிசு உரிமையையே இழக்க நேரிட்டு விட்டதே!  என்ன துரதிர்ஷ்டம்!   செகிதனா இருந்தாலும் சரி இல்லை எனினும் சரி,   யாராக இருந்தால் எனக்கு என்ன?  துரியோதனன் போரிட்டு ஜெயித்ததைப் பிடுங்கி அவனிடம் கொடுக்க வேண்டும் என்னும் எண்ணம் பலராமனுக்கு இல்லை.   புஷ்கரத்தை துரியோதனனிடமிருந்து எடுத்துக்கொள்ளக் கூடாது.  செகிதனா தோற்றவன் தோற்றவனே!   அவன் துவாரகைக்குத் திரும்பட்டுமே!  இங்கிருக்கும் எண்ணற்ற யாதவத் தலைவர்களுள் அவனும் ஒருவனாக இருக்கட்டுமே! என்ன குறைந்துவிடப் போகிறது?  அங்கே காட்டில் ஆட்சி செய்வதை விடவும் இது நல்லதே!   அவனுக்கு ஒன்றும் தாழ்வு ஏற்படப் போவதில்லை.  ஒரு போர் என்று ஏற்பட்டால் யாரேனும் ஒருவர் தான் ஜெயிக்கலாம்.  இரு தரப்பும் எப்படி ஜெயிக்க முடியும்.  ஒருவர் தோற்றே ஆகவேண்டும்.  இதற்காக யாதவர்கள் இந்த உலகெங்கும் சுற்றிக் கொண்டு எல்லா மனிதர்களின் தவறுகளையும் சரி செய்து கொண்டிருக்க முடியுமா என்ன?  தன் மனதில் உள்ளவற்றைக் கிருஷ்ணனிடம் தெரிவித்த பலராமன் அந்த இடத்தை விட்டு வெளியேறினான்.  சூழ்நிலையைப் புரிந்து கொண்டு முடிவு எடுக்கும்படிக் கிருஷ்ணனிடம் கூறிவிட்டே சென்றான்.

அடுத்து யாதவத் தலைவர்களைச் சந்தித்த கிருஷ்ணன் அவர்களின் கடும் எதிர்ப்பைச் சமாளிக்க வேண்டி இருந்தது.  மொத்த சூழ்நிலையையும் தெளிவாக விளக்கினான் கிருஷ்ணன்.   புஷ்கரத்தை துரியோதனனிடமிருந்து மீட்டு அதை ஆண்டு வந்த செகிதனாவிடம் ஒப்படைக்க வேண்டியதன் கட்டாயச் சூழ்நிலையைத் தெளிவாகக் கூறினான்.  இதன் மூலம் யாதவர்களின் கெளரவம் காப்பாற்றப்பட வேண்டும் என்று கூறினான்.  இந்தக் கடமையிலிருந்து அவர்கள் தவறக் கூடாது.  அப்படித் தவறினால் பாரதத்தின் வட பாகத்தை ஆண்டு வந்த யாதவ இளவரசர்களின் மேல் அவர்களின் கூட்டாட்சித் தத்துவத்தின் மூலம் செலுத்தி வரும் அதிகாரங்களை இழக்க நேரிடும்.  அவர்களின் ஒத்திசைவு கிடைக்காமல் போய்விடும்.  அவர்களின் சொந்த பூமியான மத்ராவையும் அவர்கள் புனர் நிர்மாணம் செய்ய நேரம் வராமலும் போய்விடலாம்.  இப்போது நாம் செய்யப் போகும் இந்தச் செயலின் மூலம் அதற்கு ஒரு வழி பிறக்கலாம்.  மத்ரா மட்டும் மீண்டும் நிர்மாணிக்கப்பட்டுவிட்டால் வட பாரதத்தில் யாதவர்களின் சக்தியை ஒருவராலும் அழிக்க முடியாது.

அது மட்டுமா?  மகதநாட்டுச் சக்கரவர்த்தி ஜராசந்தன் இந்தச் சுயம்வரத்தில் தன் பேரனுக்கு திரெளபதியை நிச்சயம் செய்துவிட்டான் எனில்?? அதை நினைத்தே பார்க்க முடியவில்லை!  ஜராசந்தன் துருபதனோடு திருமண ஒப்பந்தம் போட்டுக்கொள்வதை எப்படியேனும் தடுக்க வேண்டும்.  இது மட்டும் நிகழ்ந்தால்!! துருபதனுக்கும் பேரழிவு காத்திருக்கிறது.  இன்றைக்குச் சுதந்திரமாக உலவிக் கொண்டிருக்கும் ஆர்யவர்த்தத்தின் சக்கரவர்த்திகளும், அரசர்களும், மன்னர்களும், இளவரசர்களும் ஜராசந்தனின் பணியாளர்களாக மாறிவிடுவார்கள்.  ரிஷிகளாலும், முனிவர்களாலும் நடைபெற்று வரும் குருகுலங்கள் மூடப்பட்டுவிடும்;  அல்லது அவற்றை ஆதரிக்கும் மன்னர்கள் இல்லாமல் அவை தவிக்க நேரலாம்.  ஜராசந்தன்  யாதவ குலத்துக்கே ஒரு முக்கியமான மன்னிக்க முடியாத, எளிதில் விலக்க முடியாத ஒரு எதிரி ஆவான்.  இந்த சுயம்வரத்தில் மட்டும் யாதவர்களின் நண்பர்களான ஒரு வீரன், அதிரதர்களான  யாதவர்களின் உதவியோடு அவன் திரெளபதியை வென்று விட்டான் எனில் ஜராசந்தனை முழுமையாகச் செயலிழக்கச் செய்து விட முடியும்.  என்ன ஆனாலும் சரி, கிருஷ்ணன் போட்டியில் கலந்து கொள்ளப்போவதில்லை.  ஆனால் யாதவர்களிலேயே சிறந்த வில் வித்தை வீரர்களான கிருதவர்மன், சாத்யகி, மற்றும் அவன் சிற்றன்னை குமாரன் ஆன கடன் ஆகியோர் கலந்து கொள்ளலாம்.  அவர்களில் எவரேனும் திரெளபதியை வெல்லலாம்.


Monday, December 23, 2013

கண்ணனின் தர்மசங்கடம்!

கண்ணன் இப்போது ஒரு இக்கட்டான நிலையில் இருக்கிறான்.  துவாரகைக்குத் திரும்பி இருந்த கண்ணன் யாதவர்களின் நிலையைக் கண்டு அமைதியை இழந்தான்.  அவன் இல்லாத இந்த நாட்களில் அவர்கள் சோம்பலை வளர்த்துக் கொண்டதோடு ஆட்டம், பாட்டம் உல்லாசங்களிலேயே ஈடுபட்டு நாட்களைக் கழித்திருக்கின்றனர்.  ஏனெனில் அக்கம்பக்கத்து அரசர்கள் அனைவருமே நட்புப் பாராட்டி வந்தனர்.   வலிமையுள்ள அரசர்கள் எவரும் இப்போது இல்லை.  போர், யுத்தம் என்ற பேச்சுக்கே இடமும் இல்லை.  ஆகவே கஷ்டமும், சங்கடங்களும், வேலைகளும் நிறைந்த சிரமமான கட்டுப்பாடான வாழ்க்கை முறைக்கு இப்போது அவசியம் இல்லை.  அவரவர் மனம் போன போக்கில் வாழ்ந்து வந்தனர்.  இதற்குத் தான் வடநாடு சென்றதே முக்கியக் காரணம் எனக் கண்ணன் நினைத்தான்.   தன் மேல் தவறு இருப்பதாகவும் நினைத்தான். வடக்குப் பக்கம் யாத்திரை செல்கையில் குறிப்பிட்ட யாதவர்களின் வீரத்தையும், வலுவையும் வெளிப்படையாய்க் காட்டா வண்ணம் போட்டிருந்த இரும்புத்திரையைக்  கழற்றிவிட்டே சென்றான்.  அவனுடன் நெருங்கிப் பழகியதில் யாதவர்கள் தங்களுக்கு என ஒரு அடையாளத்தைப் பெற்றிருக்கின்றனர்.  இவ்வளவு நாட்கள் அவன் உழைப்புக்கும், அவன் வாழ்ந்த வாழ்க்கைக்கும் இது ஒன்றே மிச்சம்.  இவர்களில் முக்கியமானவனாக உத்தவன் இருந்து வருகிறான்.  விசுவாசம் காட்டுவதிலோ, வீரத்திலோ, எந்த வேலைக்கும் முன் வந்து செய்வதிலோ அவனுக்கு ஈடு இணை இல்லை.   நம்பிக்கைக்கு உரியவனும் கூட;  அதோடு தர்மத்தைக் கடைப்பிடித்து வாழ்வதிலும் ஈடுபாடு கொண்டவன்.  அடுத்து சாத்யகி.

சாத்யகிக்கும் விசுவாசத்துக்குப் பஞ்சமில்லை.  வீரம் மிகுந்தவனே.  தைரியமானவனும் கூட.  ஆர்வமும், ஆவலும் நிரம்பப் பெற்றவன்.  ஆனால் பொறுமை என்பது கிடையாது.  எல்லாவற்றுக்கும் அவசரப் படுகிறான்.  கிருதவர்மனோ திடமானவன்.  உடல்வலுவில் மட்டுமில்லாமல் மனத்தளவிலும் திடம் உள்ளவன்.  வீரர்களைச் செலுத்துவதில் அவனுக்குத் தனிப்பட்டதொரு  அரிய சக்தி இருக்கிறது என்னமோ உண்மை தான். சாருதேஷ்னா என்பவனோ, கெட்டிக்காரன், அதி விரைவில் எல்லாவற்றையும் புரிந்து கொள்வான்.  சமயோசிதமாய்ச் சிந்திக்கும் அறிவு உள்ளவன்.  அவனைத் தான் இப்போது எல்லை நாடுகளின் ஒன்றான அக்ரவனத்திற்கு அரசனாக நியமித்திருக்கிறது.  ஷால்வனையும், செகிதனாவையும் அவன் மேற்பார்வை பார்த்துக் கொள்வான்.  செகிதனாவுக்கு மீண்டும் புஷ்கரத்தை வாங்கிக் கொடுத்தாக வேண்டும்.   செளராஷ்டிரத்திலேயே விட்டுச் சென்ற மற்ற யாதவ அதிரதர்கள் அனைவருமே யுத்தம் செய்வதிலும், ரதத்தில் இருந்து போர் புரிவதிலும் நிகரற்றவர்கள்.  அதில் எந்த சந்தேகமும் இல்லை.  அவர்களுக்குக் கண்ணனிடம் ஈடுபாடு உண்டு தான்.  அவன் தலைமையையும் ஏற்கின்றார்கள் தான்.  ஆனால் அவர்களுக்குள்ளேயே வலு இல்லாமல் இருக்கின்றனர்.   தங்கள் ஆற்றலைப் பரிமளிக்கச் செய்யும் கலை அவர்களுக்குக் கைவரவில்லை.  அதிலும் கண்ணன் இப்போது போட்டிருக்கும் திட்டம் குறித்து அவர்கள் எதுவும் அறியமாட்டார்கள்.  இவர்கள் அனைவருமே கண்ணன் இல்லாத இந்த நாட்களில் பொழுதுபோக்குகளில் மனதைச் செலுத்திப் பழகிவிட்டனர்.

அதோடு யாதவர்களுக்கு இன்னும் மேலும் மேலும் செல்வம் குவிந்தது. அவர்கள் வாழ்க்கைமுறையை எளிதாக்கி விட்டது.  அவர்களின் கால்நடைச் செல்வங்கள் பெருகிவிட்டன.  பூமித்தாயோ அவர்கள் சொன்னபடி, சொன்னதுக்கு மேலே அள்ளிக் கொடுத்தாள்.  முக்கியமான மூன்று துறைமுகங்கள் ஆன துவாரகை, பிரபாச க்ஷேத்திரம், சபர் கச் ஆகியவற்றில் வெளிநாட்டுப் பண்டங்கள் வந்து குவிந்த வண்ணம் இருக்கின்றன.  தங்கமும், வைரமும், முத்துக்களும், விலைமதிக்க முடியா ரத்தினங்களும், சந்தனக் கட்டைகளும் குவிகின்றன.   இத்தனை செழுமையும் சேர்ந்து ஆடம்பர வாழ்வைக் காட்டிவிட்டது.  பகட்டும் போலி ஆடம்பரமும் அதிகம் ஆகிவிட்டது.  ஏற்கெனவே யாதவர்களுக்குக் குடியும், சூதாட்டமும் வாழ்க்கையின் முக்கியமான ஒரு நிகழ்வாக இருந்தது.  இப்போதோ, இத்தனை பெரும்பணமும், பகட்டான வாழ்க்கையும் சேர்ந்து அவர்களில் இளைஞர்கள் கூட இந்தப் பகட்டுக்கு முழு அடிமையாகி இருந்தனர்..

இது ஒரு முக்கியமான அதே சமயம் கவலைப்படக் கூடிய சூழ்நிலை எனக் கண்ணன் நினைத்தான்.  இந்த யாதவர்களை மனதில் வைத்தே அவன் வடக்கே சென்றபோது எல்லாத் திட்டங்களையும் போட்டிருந்தான்.   போரோ, அமைதியோ யாதவர்கள் அதில் உறுதியாக நிற்பார்கள்; தர்மத்தை நிலைநாட்ட வேண்டிய உதவிகளைச் செய்வார்கள்.  தர்மம் நிலைநாட்டப்படும்.  என்றெல்லாம் நம்பினான்.  ஆனால் செல்வமும், அதனால் விளைந்த இந்த சுகமும் ஒரு பெரிய புயல் போல் யாதவர்களின் வாழ்க்கை முறையையே மாற்றிவிட்டதே!  கொடிய தொற்று நோய் பரவுவது போல இந்த சுக வாழ்க்கை அவர்களிடையே பரவி உள்ளதே!   அவர்களை செளராஷ்டிரத்துக்கு அழைத்து வந்தபோது அவர்களிடம் இருந்த ஆர்வமும், உழைப்பும், வீரமும், உறுதியும் இந்த சுக வாழ்க்கைக்கு முன்னர் அடிபட்டுப்போய்விட்டது.  மீண்டும் இவர்களை  வலுவானவர்களாக மாற்றியாக வேண்டும்.  சாத்யகியும், கிருதவர்மனும் கிருஷ்ணனோடு ஒத்துழைக்கத் தயாராக இருந்தனர்.   வடக்கே செல்வதற்கு முன்னர் கடற்கரைக்கு தினம் சென்று உடற்பயிற்சியும், ஆயுதப் பயிற்சியும் எடுத்து வந்ததைப் போல இப்போதும் அவர்கள் இருவரும் தினம் கடற்கரை சென்று ஆயுதப் பயிற்சியும், உடற்பயிற்சியும் செய்தனர்.   ஆனால் இதைப் பார்த்துக் கூட இளைஞர்களான யாதவர்கள் கூட பயிற்சியில் பங்கேற்க வரவில்லை.  தனித்தே இருந்தனர்.

அவர்களின் மகிழ்ச்சியான வாழ்க்கையை இந்த நிகழ்வுகள் கெடுக்கின்றன என்பதைப் போல் அவர்கள் கோபத்துடன் பார்த்தனர்.  சாத்யகியும், கிருதவர்மனும் அவர்களைப் பார்த்துச் சீறிக் கோபம் கொண்டதைக் கூட லக்ஷியம் செய்யவில்லை.  செடிகளுக்குப் பிடிக்கும் கொடிய நோயைப் போல அவர்களின் வீரத்துக்கும், உழைப்புக்கும் இப்போதும் சோம்பல் என்னும் கொடிய நோய் பீடித்திருந்தது.  இந்த சுக வாழ்க்கையை விட்டு அவர்கள் வெளிவரத் தயாராக இல்லை.   எவ்வாறு  இதிலிருந்து மீள்வது? கிருஷ்ணனுக்குத் தன் திட்டங்கள் அனைத்தும் நாசம் ஆவதாகவும், யாதவர்களின் குலத்துக்கே ஒரு மோசமான கிரஹணம் பீடித்திருப்பதாகவும் தோன்றியது.   யோசித்த கிருஷ்ணன் முதலில் பெரியவர்களிடம் இதைக் குறித்துப் பேசினான்.  உக்ரசேனருக்கு வயதாகிவிட்டதால் முன்னைப் போல் அவரால் இயங்க முடியவில்லை.  வசுதேவர், கண்ணனின் தந்தை, அவர் எப்போதும் போல் சாந்தமாகவே இருந்தார்.   அக்ரூரரும் தன்னுடைய துறவித் தன்மையிலிருந்து மாறவே இல்லை.  கிருஷ்ணன் இவர்களிடம் எதிர் கொள்ள வேண்டி இருக்கும் ஆபத்துக்களைக் குறித்து விரிவாகப் பேசினான்.   செகிதனாவை புஷ்கரத்திலிருந்து துரியோதனன் விரட்டி விட்டான்.  துருபதன் மகள் திரெளபதிக்கு  ஜராசந்தனின் பேரன் மேகசந்தியுடன் திருமணம் நடக்கச் செய்யும் மறைமுக ஏற்பாடுகள்,  அதன் மூலம் துரோணரை அடியோடு நீக்க நடக்கும் ஏற்பாடுகள் என அனைத்தையும் குறித்துக் கிருஷ்ணன் எடுத்துச் சொன்னான்.

இப்போது மத்ராவிலோ யாதவர்கள் என எவரும் இல்லை;  அதோடு துரியோதனன் புஷ்கரத்தைத் திரும்பக் கொடுக்க மறுக்கிறான்.  இது தொடர்ந்தால் சாருதேஷ்னா அக்ரவனத்தில் தனித்து விடப்படுவான். ஷால்வனை நம் வீரத்தாலும், அதிகாரத்தாலும் இத்தனை நாட்கள் அடக்கி வைத்திருந்தோம்.  அவனுக்கு இந்த விஷயம் தெரிந்தால் அவன் போர் தொடுக்க ஆயத்தம் ஆகிவிடுவான்.  எல்லைப் பிராந்தியங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வர வேண்டும்.  பாதுகாக்கப்படவேண்டும்.  தன்னம்பிக்கையும், மன உறுதியும் மட்டும் இங்கே போதாது.  தக்க நபர்களால் எல்லைகள் காக்கப்பட வேண்டும். இதை எல்லாம் கேட்டுக் கொண்டார் உக்ரசேனர்.   உக்ரசேனர் உடலிலோ, மனதிலோ வலுவே இல்லை.  வழக்கம் போல எல்லையற்ற பிரியத்துடனே கிருஷ்ணன் சொல்வதைக் கேட்டுக் கொண்டார்.  பொறுமையுடன் கேட்டுக் கொண்ட அவர் வழக்கம்போல் தானாகத் தனியே எந்த முடிவும் எடுக்க முடியாதவராகப் பேசாமல் இருந்தார்.  ராஜசபையைக் கூட்டி தக்கச் சான்றோர்களிடம் விவாதித்து முடிவெடுக்க விரும்பினார்.  வசுதேவருக்கும், அக்ரூரருக்கும் கிருஷ்ணனிடம் அபரிமிதமான நம்பிக்கை இருந்தது.  என்றாலும் முழு ஆரியவர்த்தத்தைக் கட்டுப்படுத்தும்படியான இந்த நடவடிக்கைக்கு அவர்கள் சம்மதப்படவில்லை. அதை விரும்பவும் இல்லை.  மிகவும் அபாயமான ஒரு நடவடிக்கையாக நினைத்தார்கள்.  தங்கள் வாழ்க்கை மீண்டும் கேள்விக்குறியாக ஆகிவிடும் என்று அஞ்சினார்கள்.  ஏற்கெனவே பல்வேறு கஷ்டங்களை அனுபவித்தாயிற்று.  இப்போது தான் சுகம் என்பதையே காண்கின்றனர். எல்லாக் கஷ்டங்களையும் நல்லவிதமாக எதிர்கொண்டு விட்டார்கள். இப்போது போரோ, ஆயுதங்களோ எடுக்காமல் அமைதியாகவும் நிம்மதியாகவும் வாழவேண்டும் என்பதே அவர்களின் ஒரே குறிக்கோளாக இருந்தது.  பட்டதெல்லாம் போதும்;  எல்லாவற்றையும் நிறுத்திவிட்டு அமைதியாக வாழலாம் என்பதே அவர்கள் கருத்து.



Saturday, December 21, 2013

வியாசர் விடை பெற்றார்!

“ஐயா, கடோத்கஜன் அரசனாவது எல்லாம் சரியே!  ஆனால் அதற்காக  அரசர் வ்ருகோதரர் ஏன் எங்களை விட்டுப் பிரிய வேண்டும்? “ இதைக் கேட்கையில் ஹிடும்பி தன் கணவன் பீமன் எவ்வாறு வியாசரிடம் பேசுகையில் இரு கைகளையும் கூப்பிய வண்ணம், பணிவையும், மரியாதையையும் காட்டுவானோ அவ்வாறே தானும் காட்ட நினைத்துக் கைகளைச் சிரமப் பட்டுக் கூப்பிய பாணியில் வைத்துக் கொண்டாள். உடலையும் முன்னே வளைத்துக் கொண்டாள்.  தன் கணவன் துணை இல்லாமல் தன் சொந்த ராக்ஷச மக்களை ஆட்சி செய்வதில் அவள் மிகவும் பதட்டம் அடைந்திருக்கிறாள் என்பதை வெளிப்படையாகவே காட்டினாள்.  ஆகவே மீண்டும் வியாசரைப் பார்த்து, “அவர் இங்கேயே இருக்கட்டும்!” என்று வேண்டிக் கொண்டாள்.

அவளைப் பார்த்துப் புன்னகைத்தார் வியாசர். ஒரு சின்னக் குழந்தையை அதன் தாய் தட்டி சமாதானம் செய்வது போல அவளையும் தன் கரங்களால் தட்டிச் சமாதானம் செய்தார்.  பின்னர் “குழந்தாய், வ்ருகோதரனுக்கு ராக்ஷசர்களைக் காக்கும் வேலை மட்டுமே இல்லை, மகளே!  அவனுக்கு என ஒரு அரச தர்மம் இருக்கிறது.  அதை அவன் கடைப்பிடிக்க வேண்டும்.  அந்த தர்மத்தை நிலைநாட்டப் போரிடவும் தயாராக வேண்டும்.  உயிரை விடவும் மேலானது அரச தர்மத்தையும், ஆட்சி தர்மத்தையும் கடைப்பிடிப்பது என்பது நான் சொல்லியா தெரியவேண்டும் உனக்கு?  அனைத்து உயிர்களுக்குமே அவரவருக்கென ஒரு தர்மம் உள்ளது.  அதை நியமத்தோடு கடைப்பிடித்து வாழ வேண்டும்.  ஆனால் நான் ஒரு வாக்குறுதி அளிக்கிறேன் உனக்கு.  ராக்ஷச வர்த்தத்தில் எப்போதெல்லாம் ஆபத்து நேரிடுகிறதோ, அப்போதெல்லாம் நீ உன் கணவனை நினைத்தாலே போதும்.  அவன் உனக்கு வந்து உதவிகளைக் கட்டாயமாய்ச் செய்வான்.  தானே நேரில் வந்து உதவுவான்.  நான் ஒரு ஆலோசனையும் கூறுகிறேன்.”

“பீமன் இங்கிருந்து செல்லுகையில் கும்பனை உன்னையும், உன் ஆட்சியையும் மேற்பார்வை பார்த்து உனக்கு உதவ நியமிக்கச் சொல்லுகிறேன்.  உன் தேவைகளையும் கும்பன் பார்த்துக் கொள்வான். ஒவ்வொரு வருடமும் உங்களில் மிகவும் வலுவானவரைத் தேர்ந்தெடுத்து கடோத்கஜனைக் காத்து வரவும், அவனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யவும், அவனுக்குப் பயிற்சி அளிக்கவும் வைத்துக்கொள்ளுங்கள். அப்படியே நீ செய்து வா மகளே!  விரைவில் உன் முன்னோரான விரோசனனின் புனிதமான ஆவி கடோத்கஜனுக்குள்ளும் புகுந்து கொள்ளும். அவனை நல்வழிப்படுத்தும்.  விரைவில் கடோத்கஜனே உன்னைக் கவனித்துக்கொள்ளும் தகுதியைப் பெற்றுவிடுவான்.”  என்றார் வியாசர்.

இவ்வளவில் கடோத்கஜன் அரசனாவது குறித்து மகிழ்ச்சி அடைந்த ராக்ஷச குருமார்கள் தாங்கள் அந்தரங்கமாய்க் கூடுமிடத்துக்குச் சென்று விரோசனனின் ஆவியை அழைத்துத் தங்களில் ஒருவர் உடலில் புகுந்து கொள்ளுமாறு வேண்டினார்கள்.  அப்படியே நடக்க சிறிது நேரத்தில் விரோசனனின் கட்டளையும் அவர்களுக்குக் கிடைத்தது.  கடோத்கஜன் அரசன் ஆவதில் எந்தத் தடையும் இல்லை என்பதே அது.  அடுத்த நாள் மிகப் பெரிய கொண்டாட்டங்களுக்கு ஏற்பாடுகள் செய்தனர்.  முறைப்படியான மதச் சடங்குகள் நடைபெற்றன.  தன் தாயின் மடியில் நின்றிருந்த கடோத்கஜனுக்கு ராக்ஷச அரசனாகப் பட்டாபிஷேஹம் நடைபெற்றது.  அவனுடைய நெற்றியிலும், தோள்பட்டைகளிலும் முறைப்படி மனித ரத்தத்தால் பொட்டு வைக்கப்பட்டது.  ஆனால் ஒரு வித்தியாசம்.  இம்முறை எந்த மனிதனையும் கொன்று ரத்தம் எடுக்கவில்லை.  ராக்ஷச குருமார்களே தங்கள் கட்டைவிரலைக் கத்தியால் கீறி ரத்தம் வரவழைத்துக் கொண்டு பொட்டு இட்டனர்.  தங்கள் அரசனுக்காக இந்த மாதிரியான ஒரு தியாகத்தைச் செய்வதில்  அவர்கள் மிகவும் பெருமையும் அடைந்தனர்.

மூன்றாம் நாள் அனைத்து ராக்ஷசர்களும் ஒன்று கூடி வியாசரை எல்லை வரை சென்று வழியனுப்பினார்கள்.  அனைவரையும் வியாசர் ஆசீர்வதித்தார். அவரால் குணம் பெற்றவர்கள் அவர் காலடியில் விழுந்து ஆசிகளை மீண்டும் பெற்றனர்.   எல்லைக்கருகே சென்ற வியாசர் சகோதரர் ஐவரையும் தன்னருகே அழைத்தார்.  மெதுவாக அதே சமயம் நிதானமாகக் கூறினார்:” நீங்கள் ஐவரும் இறந்தவர்கள் என்பதை ஒருபோதும் மறக்க வேண்டாம். இவ்வுலகில் நீங்கள் வாழ்வதற்கு உரிய நேரம் வரும் வரையிலும் நீங்கள் காத்திருக்கத் தான் வேண்டும்.  அதுவரை பாண்டு புத்திரர்கள் நீங்கள் என்பதை எவரிடமும் வெளிக்காட்டிக் கொள்ள வேண்டாம். உரிய நேரம் வருகையில் உங்களுக்கே தெரியும் வெளிக்காட்டிக்கொள்ளலாம் என்பது.  ஆகவே அதுவரையும் பொறுத்திருங்கள்.” என்றார்.

“ஆசாரியரே, நாங்கள் வெளிப்படச் சரியான தருணம் எது என்பது எங்களுக்கு எப்படித் தெரிய வரும்?” யுதிஷ்டிரன் கேட்டான்.  “நீங்கள் பாண்டுவின் புத்திரர்கள் என்பதை அறிவிக்காமலேயே துருபதன் மகள் திரெளபதியின் சுயம்வரத்தில் நீங்கள் கலந்து கொள்ள வேண்டும் எனக் கிருஷ்ண வாசுதேவன் நினைக்கிறான்.  ஆகவே இங்கிருந்து பிராமணர்களைப் போல வெளியேறுங்கள்.  உங்கள் நீண்ட தலைமுடியை உச்சியில் முடிந்து கொண்டு இளம் துறவிகளைப் போல மாறுங்கள்.  கிருஷ்ண வாசுதேவனுக்குத் தெரியும்.  நீங்கள் எப்போது பாண்டுவின் புத்திரர்கள் என அறிவிக்கலாம் என்பதை அவனே முடிவு செய்து கொள்வான்.  அப்போது நீங்கள் வெளிப்படுங்கள்.  பாண்டுவின் புத்திரர்களாக அறிவித்துக்கொள்ளுங்கள்.” என்றார்.

“தங்கள் கட்டளைப்படியே ஐயா!” என்றான் யுதிஷ்டிரன்!”

“நீங்கள் ஐவரும் சுயம்வரத்துக்குச் செல்லும் முன்னர், உத்கோசகம் சென்று அங்கே உள்ள தெளம்ய ரிஷியை உங்கள் புரோகிதராக நியமித்துக் கொள்ளுங்கள்.  ஒரு தபஸ்வியின் வழிகாட்டுதல் இல்லாமல் எந்த க்ஷத்திரியனாலும் அவனுடைய கடமைகளைச் சரிவர நிறைவேற்ற இயலாது. தங்கள் ஆன்ம வழிகாட்டிகள் இல்லாமல் எந்த க்ஷத்திரிய அரசனாலும் சரியான முறையில் அரசாட்சி செய்ய முடியாது.  மேலும் ஒன்றை நினைவில் வைத்திருங்கள் : நீங்கள் ஐவரும் ஐந்து சகோதரர்கள் என்றாலும் ஐவரும் ஒருவரே.  ஒரு கையில் உள்ள  ஐந்து விரல்களைப் போல நீங்கள் ஐவரும் ஒருவரே என்பதையும் நினைவில் இருத்தவும்.  ஒருவர் மற்றவரிடமிருந்து எப்போதும், எந்நிலையிலும் பிரியாதீர்கள்.  என்னுடைய ஆசிகள் எப்போதும் உங்களுடன் இருக்கும்.  குந்தி, உனக்கும், உன் மக்களுக்கும் என் ஆசிகள் எப்போதும் உண்டு. எல்லாரும் சந்தோஷமாக இருங்கள்.”

இவ்வளவில் ஆசாரியர் தனக்கென ராக்ஷசர்கள் கட்டி வைத்திருந்த கூண்டில் ஏறிக் கொண்டு பயணத்தை ஆரம்பித்தார்.  ராக்ஷசர்கள் அவரை நாக நாட்டின் எல்லைக் கிராமம் ஆன லஹூரியாவுக்குத் தூக்கிச் சென்றார்கள். கார்க்கோடகனும், அவன் ஆட்களும் அங்கே வியாசருக்காகக் காத்திருந்தனர். வியாசர் பயணத்தைத் தொடங்கட்டும்.  பாண்டவர்களும் போகட்டும்.  நாம் இப்போது அவசரமாக துவாரகை வரை செல்ல வேண்டும்.  அங்கே என்ன என்னமோ நடந்துவிட்டது. கிருஷ்ணன்  மனம் அமைதியற்று இருக்கிறது. என்ன ஆயிற்று?