Thursday, September 3, 2015

பாமா செய்த தந்திரங்கள்!

ஆகையால் தன் மூத்த சகோதரன் ஆன பங்ககராவைத் தன் நம்பிக்கைக்கு ஏற்றவனாக நினைத்த பாமா அவனுடன் தன் லட்சியத்தைப் பகிர்ந்து கொண்டாள். தன் தந்தைக்கும் மற்ற யாதவத் தலைவர்களுக்கும் இடையே உள்ள உறவைச் சரியாகப் புரிந்து வைத்திருந்த அவனோ இவள் நோக்கத்தைக் கேட்டுச் சிரித்தான். முட்டாள் தனமாகக் கனவு காண்கிறாள் எனக் கேலியும் செய்தான். ஆனால் பாமாவோ தன்னளவில் தீர்மானமாக இருந்தாள்; கிருஷ்ணன் ஒருவனே அவள் கணவன்! தன் எண்ணத்தையும் உறுதியையும் அவளால் மாற்றிக் கொள்ள இயலாது. தன் வீட்டு மனிதர்களின் துணையின்றியே அவள் கிருஷ்ணனைக் குறித்த நல்ல விதமான பிரசாரங்களின் மூலம் அனைவர் மனதையும் மாற்றவும் நினைத்தாள். சில காலம் முன்னர் கிருஷ்ணன் யுதிஷ்டிரனின் அழைப்பை ஏற்று ஹஸ்தினாபுரம் சென்று  அங்கிருந்து வடநாட்டிற்கு மற்ற அதிரதர்களுடன் சென்றதுமே அவள் தன் முயற்சியைத் தொடங்கி விட்டாள்.

தன் தாயின் சகோதரியின் மகனும், கிருஷ்ணனின் சிறந்த நண்பனுமான கிருதவர்மனைத் தன் நம்பிக்கைக்குப் பாத்திரனாகக் கொண்டாள். அவன் மூலம் அவள் கிருஷ்ணனுக்குக் குதிரைகளையும் ஆயுதங்களையும் அவன் அறியாமல் கொடுத்து உதவி வந்தாள். அவள் தந்தையின் குதிரை லாயங்களில் கணக்கில்லாமல் இருந்த குதிரைகளாலும், ஆயுதக் கிடங்குகளில் கிடந்த எண்ணிக்கையற்ற ஆயுதங்களாலும் அவளால் இதைச் செய்ய முடிந்தது. அத்தனை அதிகமான அளவில் இருந்ததால் அவள் எடுத்ததே எவருக்கும் தெரியவில்லை. அதிர்ஷ்டம் அவள் பக்கம் இருந்தது. கிருஷ்ணனோடு ஹஸ்தினாபுரம் செல்லத் தயாராக இருந்த சாத்யகியைப் போகவிடாமல் தடுக்கவும் அதோடு அவனை அடியோடு கொன்றுவிடவும் அவள் தந்தை ஜயசேனனை ஏற்பாடு செய்திருந்தார். அது அவளுக்குத் தெரியவந்தது. அவள் சிற்றப்பன் தன்னுடன் சூதாடுவதிலும் குடிப்பதிலும் ஜயசேனனுக்கு உதவிகள் செய்து அவனைத் தங்கள் பக்கம் வளைத்தான். அதுவும் அவளுக்குத் தெரிய வந்தது.

அவள் தந்தை சாத்யகியைக் கடத்துவதற்கும், அவனைக் கிருஷ்ணனோடு சேர விடாமல் தடுப்பதற்கும் செய்த ஏற்பாடுகள் மட்டுமின்றி அதற்கான காரணங்களைக் கூட அவள் அறிந்திருந்தாள். அவளை மணக்க முடியாது என மறுத்தது ஒரு காரணம் எனில் கிருஷ்ணனின் ஏற்பாடுகளை முற்றிலும் தகர்த்து அவனை ஒன்றுமில்லாதவனாக ஆக்க வேண்டும் என்பது இன்னொன்று. ஆகவே அவள் எதிர் நடவடிக்கை எடுத்தாள். அவளுக்கு மிகவும் பழக்கமான அவள் அந்தரங்கக் காவலர்கள் சிலரின் உதவியை நாடினாள். அவர்கள் உதவியுடன் சாத்யகியைக் கடத்தினாள். அதிலும் அவள் முந்திக் கொண்டாள். ஜயசேனனும் அவன் ஆட்களும் சாத்யகியைக் கொல்லும் முன்னரே அவனை அவள் கடத்தி மறைத்துவிட்டாள். கிருஷ்ணனின் வேலை முழுவதுமாக வெற்றியுடன் முடிவடையவே அவள் விரும்பினாள். அதில் அவன் தோற்றுப் போகவோ அவன் தூது செல்லக் கிளம்ப முடியாமல் அவனைத் தடுப்பதிலோ அவளுக்கு விருப்பமில்லை.  தன் தந்தையின் அனுமதி இன்றி கிருஷ்ணனுக்குக்குதிரைகள் மட்டுமின்றி ரதங்கள், ஆயுதங்கள் என அளித்தாள். இதை சாத்யகியின் மூலம் செய்து முடித்தாள். இதற்கு பதிலாக சாத்யகியிடம் அவள் வாங்கிய உறுதிமொழி கிருஷ்ணனை அவள் மணப்பதற்கு வேண்டிய உதவிகளை அவன் செய்ய வேண்டும் என்பதே! இப்போது சாத்யகி மட்டுமின்றி அவனுடைய நெருங்கிய இரு நண்பர்களும் அவளுக்கு இந்த விஷயத்தில் உதவி செய்ய ஆவலுடன் இருக்கிறார்கள்.

மேலும் அவள் பல முறை முயன்றும் கிருஷ்ணனின் இரு மனைவியரின் உதவியும் அவளுக்கு எவ்வகையிலும் கிட்டவில்லை. ருக்மிணி ஒரு யாதவத் தலைவரின் மகள் என்ற முறையில் அவளை மரியாதையுடனேயே நடத்தினாள். ஷாயிப்யாவோ அவளை ஒரு சிறு குழந்தையாகவே நினைத்தாள். தேவகியின் உதவியைப் பெறலாம் என நினைத்து அவள் செய்த முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தது. அவள் சத்ராஜித்தின் மகள் என்னும் உண்மை அவர்களுக்கு அவ்வப்போது நினைவில் வந்து அவளுடன் அவர்கள் நெருங்குவதைத் தடுத்துத் தொலை தூரத்தில் நிறுத்தியது.  ஆனால் சத்யபாமா தோல்வியை ஏற்க மாட்டாள். அவள் மெல்ல மெல்ல அந்தக் குடும்பத்தை நெருங்கி கிருஷ்ணனின் இளைய சகோதரி சுபத்ராவின் நட்பைப் பெற்று விட்டாள். உல்லாசமாயும், சுறுசுறுப்பாகவும், அதே சமயம் வேடிக்கையாகவும் பேசும் சுபத்ராவுக்குத் தன்னை விட வயதில் மூத்த ஒரு பெண்ணின் சிநேகிதம் பிடித்திருந்தது. இந்த நட்பை வைத்துக் கிருஷ்ணனின் குடும்பத்தில் நடப்பதை எல்லாம் அவ்வப்போது சத்யபாமா அறிந்து வந்தாள்.

இந்தப் புகழ் பெற்ற கதாநாயகர்கள் வெற்றியடைந்து திரும்பியதைக் கொண்டாடும் வரவேற்பு நிகழ்ச்சிக்கு அவள் தந்தை கலந்து கொள்ளப் பிரியப்படவில்லை. குடும்பத்தினரையும் தன்னுடைய கட்டுப்பாட்டினுள் இருக்கும் மற்ற யாதவத் தலைவர்களையும் அவர் தடுத்துவிட்டார். அதோடு கிருஷ்ணன் திரும்பி வரும் செய்தி கிடைத்ததுமே அவன் திரும்பும் நாளுக்குச் சரியாக நான்கு நாட்கள் முன்னரே வேத பிராமணர்களை வைத்து யாகங்களையும்,யக்ஞங்களையும் அவள் தந்தை ஆரம்பித்து வைத்தார். வெகு நேரம் நடைபெறும் இவற்றைச் சாக்கு வைத்து வரவேற்பு நிகழ்ச்சிக்குப் போகாமல் இருக்கலாம் என்பதால் தான் அவர் இப்படிச் செய்கிறார் என்பதை பாமா புரிந்து கொண்டாள்.  ஆனால் அதற்காக அவள் போகாமல் இருந்துவிடுவாளா என்ன?  அவள் போக முடிவு செய்து விட்டாள்.

கிருஷ்ணன் இப்போது பெரும்புகழுடன் வந்திருக்கிறான். அவனுடைய தெய்விகத் தன்மையையும் நிரூபித்திருக்கிறான். அவள் தகப்பனின் கொடுங்கோன்மையைத் தாண்டி அவள் இதில் வெற்றியடையும்படியாகக் கிருஷ்ணனைக் குறித்து நல்லபடியாகப் பேசியாக வேண்டும்.  இன்று அதிகாலையிலே அவள் சுபத்ராவுடன் கிருஷ்ணனை துவாரகை வாயிலில் வரவேற்கும் நிகழ்ச்சிக்குச் சென்றாள். மற்ற யாதவப் பெண்களுடன் சேர்ந்து கொண்ட அவள் அவர்களைப் போலவே ஒரு தாமிரப் பானையையும் கொண்டு சென்றிருக்க வேண்டும். ஆனால் அவள் தந்தை ஒரு செல்வந்தர் ஆயிற்றே. தங்கப்பானையைக் கொண்டு சென்றாள் பாமா. அனைத்து யாதவப் பெண்களும் அவளைக் கொஞ்சம் பொறாமையுடன் தான் பார்த்தனர். அவர்கள் எல்லாம் எவ்வளவு உயர்ந்த இடத்தில் இருந்தாலும் செல்வம் என்று வரும்போது அவள் தந்தையிடம் இருக்கும் செல்வம் அவர்களிடம் இல்லை. அவர்கள் இதில் அவளோடு போட்டி போட முடியாது.

யாதவத் தலைவர்கள் அனைவரும் அவள் தந்தையின் செல்வத்தையும் அவரையும் மதிப்பதே இல்லை. அவரைக் கீழ்த்தரமாகவே நினைக்கின்றனர். அதிலும் அந்த அக்ரூரர்! சில மாதங்கள் முன்னர் அவள் மாளிகைக்கு வந்திருந்தார். அவள் தந்தையிடம் பாண்டவர்களுக்காக அவர்கள் சொத்தில் ஐந்தில் ஒரு பாகம் குதிரைகள், ரதங்கள், தங்கம், பசுக்கள் எனக் கொடுக்கும்படி வற்புறுத்தினார். அதற்கு அவள் தந்தை நிச்சயமாக மறுத்துவிட்டார். யாதவர்கள் அனைவரும் பாண்டவர்களின் படை வீரர்களா? அவர்களுக்காகச் செலவழிக்க யாதவர்கள் யார்? அவர்களின் சொத்தை ஏன் பாண்டவர்களுக்காகக் கொடுத்து அழிக்க வேண்டும்? யுதிஷ்டிரன் என்ன பெரிய சாம்ராஜ்யச் சக்க்ரவர்த்தியா? நாம் அவனுக்குக் கப்பம் செலுத்தவேண்டுமா? அதெல்லாம் முடியாது என்று தீர்மானமாகச் சொல்லிவிட்டார்.

Wednesday, September 2, 2015

பாமாவின் கனவில் கிருஷ்ணன்!

செல்லும் இடங்களில் எல்லாம் கண்ணன் நிகழ்த்தி வந்த சாகசங்களைக் குறித்து அவள் நிறையக் கேள்விப் பட்டிருந்தாள். துவாரகையில் அவற்றைக் குறித்துப் பேசாத நபர்களே இல்லை! இதைக் குறித்துத் திரும்பத் திரும்பப் பேசிப் பேசி மக்கள் மகிழ்ந்தனர். அதிலும் குரு வம்சத்து அரசனான பாண்டுவின் ஐந்து புத்திரர்களையும் ராக்ஷசவர்த்தத்தில் இருந்து கண்ணன் மீட்டுக் கொண்டு வந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்தது.  வாரணாவதத்தில் துரியோதனாதியரால் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்ட ஐவரும் அங்கிருந்து உயிருடன் தப்பிச் சென்றது ஒரு அதிசயம் எனில் அவர்கள் ராக்ஷஸவர்த்தத்தில் உயிருடன் இருந்து தப்பி வந்தது இன்னொரு அதிசயம். அதோடு மட்டுமில்லாமல் யாதவர்களின் நீண்ட வருடங்களாக எதிரியான ஜராசந்தனைக் கண்ணன் தனி ஒருவனாக  திரௌபதியின் சுயம்வரத்திலிருந்து விலக வைத்ததும், அவனைக் காம்பில்யத்தை விட்டே ஓட வைத்ததையும் பேசப் பேச அவர்களுக்கு அலுக்கவில்லை. துருபதனின் அருமையும், பெருமையும் நிறைந்த மகளைக் கரம்பிடிக்கப் பாண்டவர்களுக்கு உதவி செய்தது, இறந்து கொண்டிருந்த பானுமதிக்கு அளித்த வாக்குறுதி, அவள் கணவன் துரியோதனனே ஹஸ்தினாபுரத்தை ஆளுவான் என்னும் வாக்குறுதி, அதை அவன் நிறைவேற்றிய விதம். ஐந்து சகோதரர்களையும் எவ்விதச் சண்டையும் பூசலும் இல்லாமல் ஹஸ்தினாபுரத்திலிருந்து காப்பாற்றிக் காண்டவப்ரஸ்தம் கொண்டு சேர்த்தது. அங்கே புதியதொரு நகரை நிர்மாணித்து அதற்கு இந்திரப்ரஸ்தம் என்னும் பெயரைச் சூட்டியது அனைத்தையும் துவாரகை மக்கள் பேசும்போது பாமா கேட்டுக் கொண்டிருப்பாள்.

இதைக் குறித்துப் பேசிய துவாரகை மக்கள் அனைவரும் கிருஷ்ணனை மனிதனே அல்ல; கடவுள் என்றே நினைத்தனர். வெளிப்படையாக அதைச் சொல்லவும் செய்தனர். ஆனால் சத்ராஜித் அதை ஏற்கவில்லை என்பதோடு அவனைத் தங்கள் தலைவனாக ஏற்றிருந்த ஒரு சிறிய யாதவக் குழுவினருக்கும் இதில் கருத்து வேறுபாடுகள் உண்டு. கிருஷ்ணனின் சாகசங்களைப் பிறர் பேசும்போது கேட்ட அவர்கள் அதைக் கேலி செய்து சிரித்தனர். பரிகாசமாகப் பேசினார்கள். சத்யாவுக்கு இது எல்லாம் மனதை வருத்தியது. பாமாவுக்கு அது மட்டும் வருத்தமில்லை; கிருஷ்ணன் மேல் அவள் தந்தை காட்டிய விரோத மனப்பான்மையும் அவளால் புரிந்து கொள்ள இயலவில்லை. மரியாதைக்கும் மதிப்புக்கும் உரியவரான உக்ரசேனரைக் கூட சத்ராஜித் சிறிதும் மதிக்கவில்லை. வெளிப்படையாக அவமதித்தான்.

ஆனால் இந்த அவமதிப்புக்கான காரணங்கள் அவள் தந்தையிடம் உண்டு என்பதும் அவற்றை எவராலும் மறுக்க முடியாது என்பதையும் அவள் உணர்ந்தே இருந்தாள். ஏனெனில் அனைவருக்கும் சத்ராஜித்தின் அளவு கடந்த செல்வமும், அதன் காரணத்தால் அவன் கைப்பிடிக்குள் இருக்கும் சில யாதவர்களையும் நினைத்தே அவர்கள் சத்ராஜித்தை வெறுத்து வந்தனர். அவன் மேல் பொறாமை கொண்டனர். மற்ற யாதவத் தலைவர்களுக்கும் தனக்கும் இருந்த இடைவெளியை நீக்கிச் சரி செய்ய வேண்டும் என்றே அவள் தந்தை நினைத்தார். அதற்கான முயற்சிகளையும் செய்தார். அதற்காகவே அவள், பாமா யுயுதானா சாத்யகியைக் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும் என நினைத்தார். கிருஷ்ணன் குடும்பத்துடன் வலிமை வாய்ந்த சாத்யகன் குடும்பம் நெருக்கமானது. யுயுதானா சாத்யகியை பாமா மணப்பதன் மூலம் அவர்களிடையே உள்ள இடைவெளியை ஓரளவாவது நீக்கலாம்.  ஆனால் எவ்வித சம்பிரதாயத்திற்கும் கட்டுப்படாமல் அந்த விருப்பம் முற்றிலும் நிராகரிக்கபப்ட்டது. அதிலிருந்து சத்ராஜித்தின் கௌரவம் பாழாகி விட்டது என்பது போல் அவனுக்கு மனதுக்குள் வருத்தம். அவன் மனம் காயப்பட்டு விட்டது. அதிலிருந்து அந்த மேன்மை தாங்கிய குடும்பத்து நபர் எவரானாலும் அவரை எவ்வகையிலாவது அவமானம் செய்தே ஆக வேண்டும் என்னும் எண்ணம் சத்ராஜித்திடம் தோன்றியதோடு அல்லாமல் அதற்கான ஆவன செய்தும் வந்தான். ஒவ்வொரு அடி எடுத்து வைக்கும்போதும் அந்த மேன்மை பொருந்திய குடும்பத்தின் மேன்மையை எவ்வகையில் குறைக்கலாம் என்றே எண்ணினான்.

ஆனால் யுயுதானா சாத்யகிக்கு அவளை மணமுடிக்க சாத்யகி தந்தை சாத்யகன் ஒத்துக் கொள்ளாதது பாமாவைப் பொறுத்தவரை நல்லதே! அதில் அவள் மகிழ்ச்சியே அடைந்தாள். சாத்யகி இளைஞன், கவர்ச்சிகரமான இளைஞன், பலசாலி, வீரன் எல்லாமும் தான். ஆனாலும் அவனை மணக்கும் அளவுக்கு அவன் மேல் பாமாவுக்குப் பெரிய விருப்பு எல்லாம் இல்லை. யாதவத் தலைவர்களிலேயே பிரபலமான வசுதேவனின் பிள்ளை கிருஷ்ணனைத் தான் பாமா மணக்க விரும்பினாள். ஆனால் இந்த விருப்பத்தைத் தன் சிற்றன்னையரிடமோ அல்லது தந்தையிடமோ தெரிவிக்க அவளுக்கு முடியவில்லை. தெரிவிக்க யோசித்தாள். அவள் குடும்பத்தினருக்குக் கனவில் கூடக் கிருஷ்ணனுக்கு அவளை மணமுடிக்கும் எண்ணம் வராது. அவள் தந்தைக்கு யாதவர்களுக்கு ஏற்படும் ஒவ்வொரு சிறு சிறு கஷ்டத்திற்கும் வசுதேவனின் குடும்பம் தான் காரணம் என்னும் அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு. இதை எவ்வாறு கடந்து வருவது என்பதைக் குறித்து அவள் தினமும் யோசித்து வந்தாள்.

அவள் தந்தைக்கு அவர் செய்வது என்னமோ நியாயமாகவே இருக்கலாம். யாதவர்களில் மிகவும் பணக்காரர் என்பதோடு வலிமை வாய்ந்த தலைவரும் ஆவார். சத்ராஜித்தின் மாளிகையின் செல்வ வளமும், செழிப்பும் துவாரகை முழுதும் பேசப்படும் ஒன்று. அவள் தந்தையிடம் விலை உயர்ந்த பல நல்ல ஜாதிக்குதிரைகள், பசுக்கள் என உள்ளன. எல்லாவற்றுக்கும் மேல் அவள் தந்தை சூரியதேவனால் ஆசீர்வதிக்கப்பட்டவர். பிரபாஸ தீர்த்தத்தின் காவல் தெய்வமான சூரியன் அவள் தந்தையை ஆசீர்வதித்திருக்கிறான். அதற்கு அடையாளமாக சூரிய தேவனால் சத்ராஜித்துக்கு விலை மதிக்க முடியாத “ச்யமந்தக மணி” என்னும் ஒப்பற்ற ரத்தின ஆபரணம் கிடைத்துள்ளது. அந்த ச்யமந்தக மணியை வைத்து முறைப்படி ஒழுங்காக வழிபாடுகள் செய்தால் அது கல்லைக் கூடப்பொன்னாக மாற்றும் வல்லமை உள்ளது. அவளுக்கு அவள் தந்தை மேல் மிகவும் பாசம் உள்ளது. அவள் தந்தையும் அவளிடம் பாசம் அதிகம் உள்ளவரே!  ஆனால் இதற்காக அவளால் கிருஷ்ணனை மறக்கவே முடியாதே! அவனைப் பார்க்கக் கிடைக்கும் ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் எதிர்நோக்கிக் காத்திருக்கவும் செய்கிறாள்.

மதுராவில் கிருஷ்ணன் தன் மாமன் ஆன கம்சனோடு போரிட்டுக் கொண்டிருந்த அந்தச் சமயத்திலேயே அவள் முடிவை எடுத்து விட்டிருந்தாள். அப்போது அவள் வயது ஆறு மட்டுமே! அந்த வயதிலேயே கிருஷ்ணன் மேல் அவளுக்கிருந்த ஈர்ப்பு சக்தி மிகவும் அதிகமாக இருந்ததோடு தன் சிநேகிதிகளோடு விளையாடும் போதெல்லாம் அவள் தன்னைக் கிருஷ்ண வாசுதேவன் என்றே அழைத்துக் கொள்வாள். கிருஷ்ணனின் நினைவுகள் அவளைத் துரத்தின. அவள் கனவுகளில் அவன் மட்டுமே வந்தான். அவளைக் கவர்ந்து தன் மணமகளாக ஏற்பதாகச் சொல்லிக் கொண்டிருந்தான். பல சமயங்களிலும் அவள் கனவுகளில் கிருஷ்ணனோடு தான் குடும்ப வாழ்க்கை நடத்துவதாகக் கண்டிருக்கிறாள். அது தான் உண்மையோ என்னும்படியாக இருக்கும். பின்னர் கனவு கலைந்து திடீரெனத் தூக்கிவாரிப் போட்டு எழுந்திருக்கையில் தன்னைப் போன்ற உயர்குடும்பத்துப் பெண்ணிற்கு இப்படி எல்லாம் கனவுகள் வரலாமா என்று அவள் வெட்கம் அடைவாள். ஆனால் அதற்காக தன் கனவுகளில்கிருஷ்ணன் வராமல் போய்விடப் போகிறானே என நினைத்து அவள் தினமும் இரவு தூங்கப் போகையில் இன்று கனவில்கிருஷ்ணன் வர வேண்டும் எனப் பிரார்த்தித்துக் கொள்வாள்.

அவள் வளர வளர அவள் மனம் கிருஷ்ணன் பால் அதிகம் சென்றது. அவனைத் தான் மணந்து கொள்ள வேண்டும் என்னும் தீர்மானம் உறுதிப்பட்டது. அவள் இல்லாமல் கிருஷ்ணன் என்ன செய்வான்? அவளால் தான் அவனுக்கு மகிழ்ச்சியைத் தர முடியும். அவளால் மட்டுமே அவனுக்கு ஓர் ஆதர்ச மனைவியாக வாழ்க்கை நடத்த முடியும். அவள் இல்லையேல் கிருஷ்ணனுக்கு எவ்வித மகிழ்ச்சியும் இல்லை. இது வரை அவன் வாழ்க்கையில் சந்தித்த எந்தப் பெண்ணும் கொடுக்காத அளவுக்கு மகிழ்ச்சியை மட்டுமின்றி அவனுடைய வேலைகளிலும், மற்றப் பிரச்னைகளிலும் பங்கெடுப்பாள். பெருந்தன்மையுடன் அவனைப் பகிர்ந்து கொள்வாள். அவன் வாழ்வில் இத்தகைய பெண்ணையே இதுவரை சந்தித்ததில்லை என அவன் எண்ணும்படி நடந்து கொள்வாள்.

ஆனால் வருடங்கள் செல்லச் செல்ல கிருஷ்ணனை மணக்க முடியும் என்னும் நம்பிக்கை அவள் மனதில் ஆட்டம் கண்டது. அவள் தந்தையும் மற்ற யாதவர்களும் மற்ற யாதவர்களிலிருந்து பிரிந்தே காணப்பட்டார்கள். அவர்களை இவர்கள் லட்சியமே செய்யவில்லை.

Tuesday, September 1, 2015

கண்ணன் வருவான், கதை சொல்லுவான், ஐந்தாம் பாகம் ஆரம்பம்! பாமா பரிணயம்!

அனைவருக்கும் வணக்கம். இது வரை பொறுமையாக நான்கு பாகங்களாகக் கண்ணனின் கதையைப் படித்து வந்ததற்கும், ஆதரவு கொடுத்தமைக்கும் நன்றி. இன்றிலிருந்து ஐந்தாம் பாகம் ஆரம்பிக்கிறது. இதில் பாமா பரிணயம் தான் முக்கிய இடம் பிடிக்கிறது. நாம் படிப்பது கண்ணன் கதைகள். அவன் வாழ்வில் நடந்த நிகழ்வுகள். அதை தர்க்கரீதியாகப் பார்த்து இப்படி நடந்திருக்கலாம்; இப்படி நடந்திருக்க வாய்ப்பு உண்டு என்பதைப் புரிந்து கொள்வதே இதன் அடிப்படை. கண்ணனின் சாகசங்களை, மாயாஜாலங்கள் என்னாமல் உண்மையில் எப்படி நடந்திருக்கும் என்று திரு முன்ஷி ஜி கற்பனை கண்டதன் விளைவே இந்தக் கதைகள். ஆகவே இனி வரப்போகும் ஐந்தாம் பாகத்தில் வழக்கம் போல் கண்ணனின் சாகசங்கள் இடம் பெறும். பாண்டவர்கள் குறித்தோ, அவர்கள் என்ன ஆனார்கள் என்பது குறித்தோ நாம் தெரிந்து கொள்ளப் போவதில்லை. பாமாவுக்கு முக்கியத்துவம் கொடுத்து எழுதப்பட்டது இது. ஆகவே அதை மனதில் கொண்டு படிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்.
*********************************************************************************


நண்பகல் நெருங்கிக் கொண்டிருந்தது. துவாரகையிலேயே மிகப் பெரிய மாளிகை சத்ராஜித்துடையது தான். முழுவதும் வெள்ளை நிறத்தில் சுண்ணாம்பு அடிக்கப்பட்டிருந்த அந்த மாபெரும் மாளிகையைச் சுற்றிலும் தாழ்வாரம் நீண்டு ஓடிக் கொண்டிருந்தது. சௌராஷ்டிரக் கடற்கரையை ஒட்டி இருந்த அந்த மாபெரும்   மாளிகையை ஒட்டியே, அதன் பரந்து விரிந்த தோட்டப்பகுதியில் வேலைக்காரர்கள், தோட்டக்காரர்கள் ஆகியோருக்கான சிறு வீடுகளும், குடில்களும் காணப்பட்டன. ஓர் பக்கம் குதிரை லாயம் ஒன்று பெரிதாகக் காணப்பட்டது. இன்னொரு பக்கம் பசுக்கள் இருக்கும் தொழுவமும் இருந்தது. நூற்றுக்கணக்கில் பசுக்கள் காணப்பட்டன. வீட்டின் பின் பகுதியில் ஏதோ சப்தம்! என்ன?

வீட்டின் பின்பக்கக் கதவு வழியே ஓர் அழகான இளம்பெண் உள்ளே நுழைகிறாள். அவள் வேறு யாரும் அல்ல. சத்யபாமா தான். சத்ராஜித்தின் ஒரே பெண். சத்யா என அனைவராலும் அழைக்கப்படுவாள். சூரியனுக்காக அவள் தந்தை அங்கே ஓர் கோயில் கட்டி இருந்தார். அதை ஒட்டிய முற்றத்தில் தான் அந்தக் கதவு திறக்கிறது. சத்யபாமா சிறு பெண்ணாகக் கொஞ்சம் உயரம் கம்மியாக இருந்தாள். அதனாலோ என்னமோ கொஞ்சம் குண்டாகவும் தெரிந்தாள். எனினும் அது அவளுக்கு நன்றாகவே இருந்தது. வெள்ளை வெளேர் என வெண் தாமரையைப் போல் காணப்படும் அவள் முகம் இப்போது வெயிலில் இருந்து வந்ததால் சிவந்து வெண்மையும், சிவப்பும் கலந்ததொரு அபூர்வ நிறத்தில் காணப்பட்டது. கவர்ச்சிகரமான எழிலோடு காணப்பட்டாள். அவள் கண்களில் அவளுடைய புத்திசாலித்தனமும், திறமையும் பளிச்சிட்டது.

உள்ளுக்குள்ளே ஆனந்தக் கூத்தாடிக் கொண்டிருந்தாள் பாமா. அவள் வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்த நாள் இந்நாளே என அவள் நினைத்தாள். சற்றுத் தொலைவில் வீட்டின் சுற்றுச் சுவருக்கு அப்பால் காணப்பட்ட சமுத்திரத்தையும் அதன் அலைகள் ஓயாமல் கரையில் வந்து மோதுவதையும் பார்த்தவளுக்கு அவளுடைய சந்தோஷத்தைப் பார்த்து விட்டே சமுத்திர ராஜன் தன் அலைக்கரங்களை விரித்துக் கொண்டு ஆனந்த நடனம் ஆடுவதாகத் தோன்றியது.  அந்தப்புரம் நோக்கி நடந்த பாமா அங்கே யாரும் இல்லை என்பதை உணர்ந்தாள். சிறு வயதிலேயே தாயை இழந்துவிட்ட பாமாவுக்குச் சிற்றன்னையர் இருந்தனர். ஆனால் அவர்களும் அந்தப்புரத்தின் மற்ற மகளிரும் வீட்டின் முன் முற்றத்தில் அவள் தந்தைக்கு உணவு படைப்பதில் மும்முரமாக இருந்தனர். அவருடன் கூட அவரின் அலுவலர்கள், மற்றும் தினந்தோறும் யாகம் வளர்த்து வழிபாடுகளை நடத்தித் தரும் பிராமணர்கள் ஆகியோரும் அமர்ந்து உணவு உண்டனர்.

எவரும் அறியாமல் அருந்தும் நீர் வைக்கப்பட்டிருக்கும் அறைக்குள் நுழைந்த சத்யா தன் கைகளில் அதுவரை வைத்திருந்த தங்கப் பானையை அதன் இடத்தில் வைத்தாள். இப்போது முன் முற்றம் சென்று அங்கே தந்தைக்கு உணவு படைக்கும் சிற்றன்னையருடனும், மற்ற மகளிருடனும் சேர்ந்து கொள்ள அவளுக்கு இஷ்டமில்லை. இவ்வளவு நேரம் அவள் எங்கிருந்தாள் என்னும் கேள்வி எழும்! அவள் இவ்வளவு நேரம் இல்லை என்பதும் ஏன் என்பதும் அனைவர் மனதையும் கேள்வியில் ஆழ்த்தும்! ஆகவே அந்தப்புரத்தின் தாழ்வாரத்திற்குச் சென்று அங்கே தொங்க விட்டிருந்த ஊஞ்சலில் அமர்ந்து மெல்லிய குரலில் “உய்” எனக் குரல் கொடுத்த வண்ணம், “ஊரி” என்றும் அழைத்தாள்.

அவள் அழைப்பைக் கேட்டதும், “ஊர்வசி” என்னும் பெயருள்ள, ஆனால் அனைவராலும், “ஊரி” என அழைக்கப்படும் அவள் செல்லப் பூனை அங்கே ஓடோடி வந்தது. அது வருவதைப் பார்த்தால் வெள்ளைப்பூக்களால் ஆனதொரு பெரிய பூங்கொத்து நான்கு கால்களைப் பெற்று ஓடி வருவதைப் போல் காட்சி அளித்தது. சத்யபாமா தன் கைகளை நீட்டவும் அது துள்ளிக் குதித்து அவள் முழங்காலில் ஏறி அமர்ந்து கொண்டு, தன் பச்சை நிறக் கண்களால் அவளையே பார்த்தது.

மெல்ல அதனிடம், “ஊரி, யார் வந்தார்கள், தெரியுமா?” என்று கேட்டாள் பாமா. பூனை, “மியாவ்” என்றது. அதன் முகத்தைத் தன்னிரு கரங்களிலும் அடக்கிய வண்ணம் பாமா, “நாம் இன்று அவரைப் பார்த்தோம், ஊரி!” என மெல்லக் கிசுகிசுத்தாள். பூனை என்ன சொல்லும்! எந்த மறுமொழியும் அதனிடமிருந்து வரவில்லை. சத்யா யாரைப் பார்த்தால் எனக்கென்ன? பார்க்காவிட்டால் எனக்கென்ன? என்று அது வாளாவிருந்தது. அதற்கு அவற்றில் ருசியில்லை. இப்போது அதன் நோக்கமே வேறு. அது மிக்க பசியோடு இருந்தது.  தன் எஜமானியோடு உணவு அருந்தும் நேரத்துக்காகக் காத்திருந்தது அது. சத்யா அதைச் செல்லமாக அடித்தாள். பூனை வருத்தமாக “மியாவ்” என்றது. “இதைக் கேள், ஊரி! முட்டாளே! என்ன நடந்தது தெரியுமா? அவன் என்னைப் பார்த்துச் சிரித்தான். நானும் அவனைக் கண்டு சிரித்தேன்!” என்று அதன் காதுகளில் மெல்லக் கிசுகிசுத்தாள்.

சந்தோஷம் தாங்க முடியாத சத்யபாமா ஊஞ்சலை வேகமாக ஆட்டினாள். ஊர்வசியைத் தன் கைகளால் பிடித்த வண்ணம் ஆடினாள் அவள். பூனை தன் கண்களை மூடிக் கொண்டு விட்டது. தன் எஜமானி எப்போது உணவு உண்ணப் போகிறாளோ! அப்போது தான் நமக்கு இன்று சாப்பாடு என்பதை அது தீர்மானித்துவிட்டாற்போல் இருந்தது. சத்யபாமா அன்றைக்கு நடந்த நிகழ்ச்சிகளை அசைபோட ஆரம்பித்தாள். நடந்தவை அனைத்தும் அவள் கண்கள் முன்னர் வந்தன. என்ன நடந்தது என்பதை நினைத்துப் பார்த்தாள். இன்றைக்கு ஆரியவர்த்தத்தில் பற்பல வெற்றிகளைப் பெற்று துவாரகைக்கு மீண்டும் திரும்பி வந்து கொண்டிருந்த வாசுதேவ கிருஷ்ணன், பலராமன் மற்ற அதிரதர்கள் அனைவருக்கும் துவாரகை நகர வாயிலில் நகரத்துப் பெண்கள் அனைவரும் சேர்ந்து வரவேற்புக் கொடுத்தனர்.

சத்யபாமா எப்படியோ அந்தக் கும்பலில் கலந்து கொண்டு விட்டாள். அவள் கைகளிலும் ஒரு தங்கக்குடத்தில் நீரை எடுத்துக் கொண்டு பாட்டுப் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் சென்ற மகளிரோடு அவளும் சென்றாள். அவள் தந்தை இந்த வரவேற்பில் கலந்து கொள்ளாதது தவறு என அவள் நினைத்தாள். அது மட்டுமா? சத்ராஜித்தின் மாளிகையிலிருந்து வேலைக்காரர்கள் கூட அந்த வரவேற்பில் கலந்து கொள்ளக் கூடாது என்று கண்டிப்பான கட்டளையும் இட்டிருந்தான். துவாரகை முழுவதும் கொண்டாட்டங்களிலும் ஆடல்,பாடல்களிலும் களித்திருக்கையில் அவள் குடும்பம் மட்டும் அதில் கலந்து கொள்ளக் கூடாது என்பது முட்டாள் தனம் என பாமா நினைத்தாள்.

Monday, August 31, 2015

தோன்றியது இந்திரப்ரஸ்தம்! நான்காம்பாகம் முடிவு!

சற்று நேரத்தில் அனைவரும் யமுனையில் நீராடிக் களித்த குதூகலத்தோடு மேலே நடந்தனர். காண்டவப்ரஸ்தம் கண்களில் பட்டது. ஆனால் அவர்கள் எதிர்பார்த்த அளவுக்குக் காடு அடர்ந்து காணப்படவில்லை. ஏனெனில் கிருஷ்ணனின் முன்னேற்பாட்டின்படி நாகர்களின் தலைவன் ஆன மணிமான் தன் ஆட்களோடு அங்கே வந்து காட்டைத் திருத்தி ஓரளவுக்கு ஒழுங்கு செய்து அனைவரும் சில நாட்கள் தங்கும்படியாக மாற்றி அமைத்திருந்தான். ஆங்காங்கே சிறிய, பெரிய கூடாரங்கள் காணப்பட்டன. ஓலைகளால் வேய்ந்த குடில்களும் காணப்பட்டன. மண்ணால் எழுப்பட்ட குடிசைகளும் கூரையாகப் பச்சைப் புல்லால் வேய்ந்து காணக் கிடைத்தன. அசைந்து அசைந்து வந்த அந்த மாபெரும் நகரம் அங்கே தங்கித் தங்கள் வேலைகளை உடனே கவனிக்கும்படியாகக் காண்டவப்ரஸ்தம் தயார் நிலையில் காணப்பட்டது. வந்தவுடனேயே பீமனின் யானைகள் பெரிய பெரிய மரங்களை வேரோடு பெயர்த்து எடுத்து அவற்றை வழிநடத்திய இடத்திற்குக் கொண்டு சென்றன. தங்கள் தேவைக்கேற்ற குடிசைகள், குடில்கள், கூடாரங்களை வந்த மக்களின் குடும்பங்கள் எடுத்துக் கொண்டு அங்கே தங்குவதற்கான ஆயத்தங்கள் செய்ய ஆரம்பித்தனர். கோபு மிகுந்த உற்சாகத்தில் அங்குமிங்கும் ஓடி ஓடிச் சென்று வேலைகள் செய்தான்.

தெருக்கள் எங்கே அமைய வேண்டும், சதுக்கங்கள், மைதானங்கள், நிலாமுற்றங்கள், மாளிகைகள் அமைய வேண்டிய இடங்கள், கடைத்தெருக்கள் அமைய வேண்டிய இடம், அரச மாளிகைகள், மற்றத் தனி நபர்களுக்கான வீடுகள் என ஒவ்வொருவருக்கும் பொருந்தும்படியான இடங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை அமைக்க வேண்டிய மாபெரும் திட்டத்தை வரைய ஆரம்பித்தான். கைவினைக்கலைஞர்களையும், தச்சர்கள், கொல்லர்கள், ஆசாரிகள், கொத்துவேலை செய்வோர் போன்றோருக்குத் தக்க ஆணைகள் பிறப்பித்து அவர்களை மேற்பார்வை செய்யும் வேலையையும் கோபு தன்னுடன் வைத்துக் கொண்டு தன் நண்பர்களையும் அதில் இணைத்துக் கொண்டான்.

நகுலன் குதிரைகளைக் கவனிக்க ஆரம்பித்தான். குதிரைகளுக்கான லாயங்கள், உணவு, மருத்துவம் போன்றவற்றைக் கவனித்ததோடு அவற்றைத் தனித்தனியாக மேற்பார்வை பார்க்கத் தக்க ஆட்களையும் நியமித்தான். பிராமணர்கள் அவரவர் படிப்புக்கும் தகுதிக்கும் ஏற்பத் தங்கள் மாணாக்கர்களைத் தேர்ந்தெடுத்துத் தக்க பாடங்களைப் போதிக்க ஆரம்பித்தனர். தௌம்யர் அனைத்து பிராமணர்கள் மற்றும் அவர்களின் சீடர்கள் போன்றோரை மேற்பார்வை பார்த்துத் தக்கபடி கட்டளைகளைக் கொடுத்து வந்தார். இத்தகைய சாகசமான அனுபவங்கள் அனைவருக்கும் புதியவை என்பதால் எல்லோரும் பேரார்வத்தோடு இதில் பங்கு கொண்டனர். சில நாட்களில் பருவ மழை தொடங்கியது. அதற்குள்ளாக அங்கே வந்திருந்த அனைவருக்கும் தங்குமிடம் கிடைத்து விட்டது. யாரும் மழையில் கஷ்டப்படவில்லை.


நிலம் இல்லை என்றோ போதவில்லை என்னும்படியாகவோ யாரும் சொல்லவில்லை. அவரவருக்குத் தேவைப்பட்ட நிலத்தை அவர்களே ஆர்ஜிதம் செய்து கொண்டு தங்களுக்குத் தேவைக்கேற்ப அதைப் பயன் படுத்திக் கொண்டனர். இந்திரனுக்காக அங்கே சிறப்பு வழிபாடு ஒன்று செய்யப்பட்டது. அடிக்கடி பெருமழையும் புயலும் வந்து புதிய நகர நிர்மாணத்தைச் சீரழிக்காமல் இருக்கப் பிரார்த்தனைகள் செய்து கொள்ளப்பட்டன. இந்த யாகத்தை வியாசரே தலைமை தாங்கி நடத்திக் கொடுத்தார். அவர்கள் விண்ணப்பத்தைக் கேட்டுக் கொண்டது போல் அந்த வருஷம் பருவ மழை தப்பாமல் பெய்தாலும் பெரிய அளவில் வெள்ளமொ, புயலோ இல்லாமல் தப்பினர்.

கிருஷ்ணன் மனம் நெகிழ்ந்தது. இந்திரனுக்குச் செலுத்தும் நன்றிக்கடனாக நகரின் பெயரைக் காண்டவப்ரஸ்தம் என்பதில் இருந்து இந்திரப்ரஸ்தம் என்று மாற்றும்படி யுதிஷ்டிரனுக்குக் கிருஷ்ணன் ஆலோசனை கூறினான். (இப்போதைய டெல்லியும் அதன் சுற்றுப்புறங்களும் இந்திரப்ரஸ்தம் ஆகும்.) இந்த பூவுலகிலேயே இது மிக அழகான அற்புதமான ஓர் இடமாக மாறும் என்றும் கிருஷ்ணன் கூறினான். அவன் தீர்க்கதரிசனம் சீக்கிரம் உண்மையாயிற்று. தேவர்களின் தச்சன் ஆன விஸ்வகர்மாவை வேண்டிக் கொண்டு அவரின் ஆசிகளோடும் துணையோடும் கோபு விரைவில் தன்னுடன் வந்திருந்த தொழிலாளிகளோடு நகர் நிர்மாணக்கட்டுமான வேலையை ஆரம்பித்தான்.

மெல்ல மெல்ல அற்புத நகரம் உருவாயிற்று. தூர, தூரங்களில் உள்ள மக்களுக்கெல்லாம் இந்தச் செய்தி போய்ச் சேர்ந்து அனைவரும் இந்த அதிசய நகரைப் பார்க்க வேண்டிக் கூட்டம் கூட்டமாக வந்தனர். மழை நின்று குளிர்காலம் ஆரம்பம் ஆயிற்று. உத்தவனும் துவாரகையிலிருந்து பாண்டவர்களுக்குக் கொடுக்க வேண்டிய பரிசுகளை எல்லாம் சுமந்து கொண்டு வந்து சேர்ந்தான். வியாசர் ஓரளவு நிலைமை சீராகிவிட்டதால் தானும் விடைபெறுவதாகக் கூறிக் குருக்ஷேத்திரத்தில் உள்ள தன்னுடைய ஆசிரமத்திற்குச் சீடர்களோடு பயணம் ஆனார். மெல்ல மெல்ல நகரம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டு அனைவரும் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப ஆரம்பித்தார். கிருஷ்ணன்  தானும் பலராமனும் துவாரகைக்குத் திரும்புவதாகக் கூறினான். யுதிஷ்டிரன் மிகவும் வருத்தம் அடைந்தான். கிருஷ்ணனைப் பிரிய வேண்டும் என்பது மிகவும் கஷ்டமான ஒன்றாக இருந்தது அவனுக்கு.

“கிருஷ்ணா! எங்களை நீ மிகவும் ஆதரித்துக்காத்து வருகிறாய். எங்கள் குலதெய்வம் நீயே தான்! எங்கள் தந்தையை விட நீயே எங்களை நன்றாகக் காப்பாற்றி வருகிறாய். தந்தையை விட நீ மேலானவனாக இருக்கிறாய். நீ இல்லை எனில் நாங்கள் பாஞ்சால இளவரசியைக் கைப்பிடித்திருக்க இயலாது. அது நடந்திருக்கவே நடந்திருக்காது. அதே போல் நீ  இல்லை எனில் இந்த இந்திரப்ரஸ்தம் எங்கே! உன்னால் அல்லவோ இந்த நேர்மையும், தூய்மையும் உருவெடுத்த அற்புத நகரம் உருவாயிற்று!” என்று தழதழத்த குரலில் கூறினான்.

“வருந்தாதே யுதிஷ்டிரா! நான் எங்கே இருந்தாலும், உங்கள் ஐவரைக்குறித்துத் தான் சிந்திப்பேன். உங்கள் நலனுக்காகவே வாழ்கிறேன். நீ தர்ம சாம்ராஜ்யத்தின் அரசன், இளவரசன் அனைத்தும் ஆவாய்! உனக்கு எப்போது என் உதவி தேவைப்படுமோ அப்போதெல்லாம் நான் நிச்சயமாய் வந்துவிடுவேன். சுழிக்காற்றை விட வேகமாகப் பயணப்பட்டு உன்னை வந்தடைவேன்! இது நிச்சயம்!” என்றான். அடுத்து அர்ஜுனன் கிருஷ்ணனுக்குப் பிரியாவிடை கொடுக்க அவனை அணைத்துக் கொண்ட போது அவனால் தன் விம்மலை அடக்க முடியவில்லை. அவனுடைய உள்ளார்ந்த சோகத்தைப் புரிந்து கொண்டான் கிருஷ்ணன். அவன் முதுகில் தட்டிக் கொடுத்துச் சமாதானம் செய்தான். “துவாரகைக்கு வா! என் சார்பாக அன்பின் அடையாளத்தை உனக்குக் காட்டுகிறேன்.” என்றான். கிருஷ்ணனும், பலராமனும் அதன் பின்னர் குந்தி தேவி, திரௌபதி மற்றப் பாண்டவ சகோதரர்கள் ஆகியோரிடமும் பிரியாவிடை பெற்றனர்.

அனைவரும் சேர்ந்து கலங்கிய மனதுடனும், கண்ணீர் பொங்கும் விழிகளுடனும் கிருஷ்ணனுக்கு விடை கொடுத்து அனுப்பியதும் கிருஷ்ணன் தன் ரதத்தில் ஏறிக் கொண்டான். சாரதியிடமிருந்து குதிரைகளின் கயிற்றைத் தன்னிடம் வாங்கிக் கொண்டவன் பாண்டவர்கள் பக்கம் திரும்பினான். அனைவரும் கண்களில் கண்ணீருடன் காட்சி அளித்தனர்.  கண்ணன் அனைவரையும் திரும்பத் திரும்பப்பார்த்து சூரியனின் கதிர்களைப் போன்ற பிரகாசமானதொரு புன்சிரிப்பை அவர்களுக்குப் பரிசாகத் தந்தான். ஆம், அவன் போக வேண்டும்! அவனுடைய நகரத்துக்கு, அவனுடைய சொந்த மக்களிடையே போக வேண்டும்; அனைவரையும் பார்க்க வேண்டும். ஆனால் அவன் மனம் என்னமோ இந்த ஐந்து சகோதரர்களிடம் தான் இருந்தது. தர்ம சாம்ராஜ்யம் அமைக்கப்பாடுபடும் இந்த தைரியமான, துணிச்சல் மிகுந்த சகோதரர்கள் ஐவருக்கும் அவன் உதவி தேவை தான். ஆனாலும் அவன் போயாக வேண்டும். உடனேயே திரும்பிய கிருஷ்ணன் தன் கைகளிலிருந்த கயிற்றைச் சுண்டி விட்டுக் குதிரைகளை விரட்டினான். தேவலோகத்திலிருந்து வந்த இந்திரன் கருமேகங்களுக்கிடையே மறைவது போல் தன் பின்னே பெரும் புழுதிப் புயலைக்கிளப்பி விட்டுவிட்டுக் கிருஷ்ணனின் குதிரையும் ஓடி மறைந்தது.

நான்காம் பாகம் முடிந்தது. இனி ஐந்தாம் பாகம் தொடரும். படித்து ஆதரவு காட்டும் அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

Sunday, August 30, 2015

காண்டவப்ரஸ்தம் நோக்கிய பயணம்! பின்னுரை தொடர்கிறது!

பீமன் ஒரு பெரிய யானையின் மேல் அமர்ந்திருந்தான். அவனோடு கிருஷ்ணனும் காணப்பட்டான். குரு வம்சத்து முக்கியஸ்தர்களில் பலரும் பீமனைத் தொடர்ந்து யானை மேல் வந்தனர். அந்த மாபெரும் ஊர்வலத்தையே பீமன் தான் தலைமை தாங்கி நடத்துவது போல் இருந்தது. யானைகள் செல்லும்போதே தங்கள் உணவுக்காகவும், செல்லும் வழிக்காகவும் வழியெங்கும் காணப்பட்ட பெரிய மரங்களைப் பெயர்த்தெடுத்தன. உண்ணக் கூடியவற்றை உண்டு விட்டு மிச்சத்தை வழியிலேயே போட்டுவிடும்படி யானையைப் பழக்கி இருந்தனர் யானைப் பாகர்கள். அதனால் பின் தொடர்பவர்கள் வழி தவறிப் போகாமல் பின் தொடர வசதியாக இருக்கும் அல்லவா! யானைகளுக்குப் பின்னர் அதிரதர்களும், மஹாரதர்களும் வந்தனர்.  அவர்களுக்குப் பின்னால் வேத வியாசர் தன் குழுவினருடன் வந்தார். அவர்கள் அனைவரும் கால்நடையாகவே வந்தனர். யுதிஷ்டிரனும் பலராமனும் அவர்களுக்குத் துணையாக அவர்களுடனே வந்தனர்.

எல்லாவற்றுக்கும் பின்னால் மாட்டு வண்டிகள் தானியங்களையும், தங்கங்களையும், மற்றப் பொருட்களையும் சுமந்து கொண்டு வரிசையாக வந்தன. கௌரவர்களிடம் பாகப்பிரிவினையில் பெற்ற தங்கத்தோடு கூடத் தங்கள் மாமனார் ஆன துருபதன் அளித்த தங்கத்தையும் எடுத்துக் கொண்டு வந்தனர் பாண்டவர்கள். ரதங்களில் அரசகுல மகளிர் பயணித்தனர். அவர்களில் குந்தி தேவியும் திரௌபதியும் காணப்பட்டனர். மற்ற சாமானியப் பெண்மணிகள் அவரவர் தகுதிக்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப மாட்டு வண்டிகளிலோ, கால்நடையாகவோ பயணித்தனர். அனைவரும் தங்கள் சிறிய குழந்தைகளைத் தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு பெரிய குழந்தைகளின் கைகளைப் பிடித்த வண்ணம் விழாக்காலப் பாடல்களைப் பாடிக் கொண்டு வந்தனர்.

இவர்களுக்கெல்லாம் பின்னால் மற்றவர்கள் வந்தனர். தங்கள் குடும்பத்தினருடன் வந்தனர். வண்டிகளிலும், குதிரைகள் மேலும், மாட்டு வண்டிகளிலும்,  கோவேறு கழுதைகள் மேலும், ஒரு சிலர் பல்லக்குகளிலும் பயணித்தனர். இரு பக்கங்களிலும் கால்நடைச் செல்வங்கள் அவற்றின் எஜமானர்கள் அவற்றைக் கவனிக்கப் பயணித்தன. மல்லர்கள் அங்குமிங்கும் போய் வந்து அனைவரையும் உற்சாகப்படுத்தி வந்தனர். கால்நடைகளைக் கவனிப்போரிடம் சென்று அவர்களுக்கு வேண்டிய தேவைகள் எல்லாம் சரிவரக் கிடைக்கின்றனவா என்று கேட்டு உறுதி செய்து கொண்டனர். இசைக்கருவிகள் முழக்குவோரும் இந்த மாபெரும் ஊர்வலத்தில் கலந்து கொண்டு தங்கள் இசைக்கருவிகளை முழக்கிய வண்ணம் வந்தனர். அந்த சப்தத்தால் சுற்று வட்டாரமே அதிர்ந்தது. பாடகர்கள் அருமையான பாடல்களை இசை அமைத்துப் பாடியபடி வந்தனர். செல்லும்போதே வேத பிராமணர்கள் தங்கள் சீடர்களுக்குப் பாடம் கற்றுக் கொடுத்த வண்ணம் வந்தனர்.

இந்த நகரும் நகரமானது ஒவ்வொரு நாளும் விடிகாலையில் மாடுகள் கறக்கப்பட்டவுடன், அனைவரும் காலை அநுஷ்டானங்களை முடித்தவுடன் கிளம்பும். ஒரு யோஜனை தூரம் அல்லது இரண்டு யோஜனை தூரம் வரை தொடர்ந்து செல்வார்கள். (ஒரு யோஜனை என்பது கிட்டத்தட்டப் பத்துமைல்) கிட்டத்தட்ட 20 மைல் தூரம் சென்றதும் சூரியன் உச்சிக்கு வருவதற்கு ஒரு நாழிகை முன்னர் சாத்யகியால் ஏற்கெனவே குறிப்பிட்டு அமைக்கப்பட்டிருக்கும் தங்குமிடத்திற்குச் சென்று தங்குவார்கள். அங்கே சென்று அந்த அசை நகரம் தங்கியதும், வேத வியாசர் யாகத் தீயை மூட்டுவார். யாகங்கள் செய்யப்பட்டு அர்க்கியங்கள் கொடுக்கப்பட்டு யாக அக்னிக்கு அவிர்பாகமும் கொடுக்கப்படும். அதன் பின்னர் அந்த மாபெரும் மக்கள் கூட்டத்தில் உடல்நலம் சரியில்லாதோரைக் கவனிப்பார் வியாசர். தன் ஆசிகளையும் மந்திரிக்கப்பட்ட பாலையும்குடிக்கக் கொடுப்பார். அதன் பின்னர் அனைவரும் மதிய உணவை முடிப்பார்கள்.

கற்றறிந்த வேத பிராமணர்களும் மற்றவர்களும் வேத வியாசரைச் சூழ்ந்து கொள்ள அவர்களின் சந்தேகங்களுக்குப் பதில் அளிப்பார் வியாசர். அதன் பின்னர் ரிஷி, முனிவர்களால் சித்தி அடைவதைக் குறித்தும் தன்னைத் தான் அறிதலைக் குறித்தும் வாத விவாதங்கள் நடைபெறும். தவங்கள் செய்யவும், சுய ஒழுக்கத்தைக் கடைப்பிடிப்பதைக் குறித்தும் விவாதிக்கப்படும். அங்கிருக்கும் மக்களில் சிலர் இந்த வாத, விவாதங்களைக் கேட்பதோடு மட்டுமில்லாமல் வியாசரின் ஆசிகளையும் கோரிப் பெறுவார்கள். தினந்தோறும் பெரிய அளவில் கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து வியாசரிடம் பேசி அவர் ஆசிகளைப் பெற்றுச் செல்வார்கள். அவருடைய வழிகாட்டுதலின் படி அங்கு வந்திருந்த ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு பிராமணரைத் தங்கள் குடும்ப ஆசாரியனாக ஏற்றுக் கொண்டனர். அவரவர் குடும்ப வழக்கப்படி சடங்குகள்,சம்பிரதாயங்களை செய்ய வைத்தார். குழந்தைகளுக்குக் கல்வியும் கற்பிக்கப்பட்டது.

ஒவ்வொரு குடும்பமும் தங்களுக்கு வேண்டிய மதிய உணவைத் தாங்களே தயார் செய்து கொண்டனர். பீமனின் மேற்பார்வையில் அரச குடும்பத்தினருக்கான சமையலறையில் பெரிய அளவில் உணவுப் பதார்த்தங்கள் தயாரிக்கப்பட்டு  யாருக்கெல்லாம் சமைக்க முடியவில்லையோ அனைவருக்கும் உணவு அளிக்கப்பட்டது. மதிய வேளையில் குழந்தைகள் விளையாட, வயதானவர்கள் ஓய்வு எடுத்துக் கொள்வார்கள். பெண்கள் கூடி அமர்ந்து தங்களுக்குத் தெரிந்த பாடல்களைப் பாட, ஆண்கள் அதற்கேற்ப இசைக்கருவிகளை முழக்குவார்கள். க்ஷத்திரியர்களில் சிலர் வேட்டைக்கும் சென்றனர். மல்லர்கள் தங்கள் மல்யுத்தப் பயிற்சியைத் தொடர்ந்து செய்து அனைவருக்கும் காட்சி விருந்து அளித்தனர். கூடிய கூட்டத்தினரின் உற்சாகத்துக்கும், அவர்களின் வரவேற்புக்கும் இடையே கிருஷ்ணனும், பலராமனும் கூட அர்ஜுனனுடன் அந்த மல்யுத்தப் பயிற்சியில் ஈடுபட்டுச் சிறிய அளவில் போட்டிகள் நடத்தி அனைவரையும் மகிழ்வித்தனர். சூரிய அஸ்தமனம் ஆகும் சமயம் மாலை நேர அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு இரவு உணவை முடித்துக் கொண்டு அனைவரும் உறங்கச் செல்வார்கள்.

அர்ஜுனன் தலைமையில் அங்கிருந்த மக்களை எல்லாம் க்ஷத்திரியர்களும், மற்றப் படை வீரர்களும் அரண் போல் பாதுகாத்துக் காட்டு மிருகங்களிடமிருந்தும் வழிப்பறிக் கொள்ளைக்காரரிடமிருந்தும் பாதுகாத்தனர். ஒவ்வொரு நாளும் பகல் முழுவதும் கிருஷ்ணன் ஒவ்வொரு குழுவாகச் சென்று பார்த்து அனைவரையும் அறிமுகம் செய்து கொண்டான். அவன் தரிசனத்தை வேண்டியவருக்கு தரிசனம் அளித்ததோடு அல்லாமல் பெண்களை மரியாதையுடனும் நடத்தினான். அவ்வப்போது கேலி செய்து கொண்டும், பரிகாசமாகப் பேசிச் சிரித்துக் கொண்டும், குழந்தைகளைக் கொஞ்சிக் கொண்டும் இருந்தான். மல்லர்களுடன் மல்யுத்தப் போட்டியில் கலந்து கொண்டான்.  குழந்தைகளுக்குப் பல்வேறு விளையாட்டுக்களைக் கற்றுக் கொடுத்ததோடு படித்தறிந்த ஆன்றோரின் விவாதங்களையும் மௌனமாகக் கவனித்துக் கொண்டான். தேவைப்பட்ட நேரத்தில் விவாதங்களிலும் கலந்து கொண்டான்.

ஒரு நாள் காலை நேரம்! அசை நகரம் பயணப்பட்டுக் கொண்டிருக்கையில் அனைவர் காதுகளிலும் “சோ”வென்ற சப்தம். சில்லென்ற காற்று வேறு! அனைவரும் ஆவலோடு மேலே நடந்தனர். சற்று தூரத்தில் யமுனை பொங்கிப் பிரவாகம் எடுத்து ஓடிக் கொண்டிருந்தாள். பரந்து விரிந்திருந்த யமுனையின் அகலத்தையும் விசையுடன் ஓடிக் கொண்டிருக்கும் வேகத்தையும் கண்டவர்கள் ஆச்சரியம் அடைந்தனர். தாங்கள் தங்கள் இடத்திற்கு வந்து விட்டோம் என உணர்ந்தனர். அனைவரும் பெரு மகிழ்வுடனும், களிப்புடனும் ஓட்டமாக ஓடி யமுனையில் மூழ்கினர். தங்கள் கைகளால் நீரை அடித்து மகிழ்ந்தனர்.


பின்னுரை நாளை முடியும்.

Saturday, August 29, 2015

நான்காம் பாகத்தின் பின்னுரை// காண்டவப்ரஸ்தம் நோக்கிய பயணம்!


அடுத்த நாளே பீமனுக்கு யுவராஜாவாகப் பட்டாபிஷேஹம் செய்யப்பட்டது. அதன் பின்னர் சுஷர்மாவும், ஜாலந்திராவும் காசிக்குத் திரும்பிச் சென்றனர். விராட அரசனும், சுநீதனும் கூட அவரவர் நாட்டிற்குத் திரும்பினார்கள். அக்ரூரரும் உத்தவனும் பல யாதவ அதிரதர்களுடன் கூட துவாரகை திரும்பினார்கள். பல யாதவர்களும் தங்கள் இருப்பிடம் செல்ல ஆவலாகவே இருந்தனர். என்றாலும் அனைவரும் போக முடியவில்லை. மேலும் கிருஷ்ணன் அளித்த வாக்குறுதியின்படிப் பொன்னும், பொருட்களும் கால்நடைச் செல்வங்களும் துவாரகையிலிருந்து கொண்டு வர யாரேனும் போக வேண்டுமல்லவா? ஆகவே அதற்காகவும் அக்ரூரரும், உத்தவனும் மற்ற யாதவர்களுடன் திரும்ப வேண்டி இருந்தது. மணிமானும், தன் நாட்டில் இருந்து கைவினைக்கலைஞர்களை அழைத்துவருவதற்காக நாக நாட்டிற்குக் கிளம்பினான். காண்டவப்ரஸ்தத்தில் அவர்களின் கைத் திறமையில் அனைத்தும் அமையவேண்டும் என்பது அவன் விருப்பம். ஐந்து சகோதரர்களுக்கும் தங்கள் திறமையைக் காட்டி நட்பை நீடிக்கச் செய்யவே ஆவல் கொண்டனர் அவர்கள்.

தன்னுடைய புயல் வேகப் பயணத்துக்கு வேண்டிய ஏற்பாடுகளை பீமன் செய்ய ஆரம்பித்தான். கூடவே கிருஷ்ணனையும் மேற்பார்வைக்கு அழைத்துக் கொண்டான். அர்ஜுனனும், சஹாதேவனும் குரு வம்சத்து மற்ற மக்களிடம் பேசித் தங்களுடன் காண்டவப்ரஸ்தம் வரத் தயார் ஆக இருக்கிறவர்களைத் தங்களுடன் வருவதற்கான ஏற்பாடுகளைச் செய்யுமாறு கேட்டுக் கொண்டனர். இதற்காக அவர்கள் குரு வம்சத்தினரிடம் மட்டுமில்லாமல் மற்ற க்ஷத்திரியர்கள், வைசியர்கள், மஹாஜனங்கள், படை வீரர்கள் என அனைவரிடமும் பேசி ஆக வேண்டி இருந்தது. சற்றும் குற்றம் கண்டு பிடிக்காத வகையில் விதுரரால் பிரித்துக் கொடுக்கப்பட்ட தங்கம், நகைகள், ஆபரணங்கள், ரத்தினங்கள், தானியங்கள், குதிரைகள், யானைகள், ரதங்கள், படைக்கலங்கள், ஒட்டகங்கள் ஆகியவற்றைச் சரிபார்த்துப் பாதுகாக்கும் பொறுப்பை நகுலன் ஏற்றுக் கொண்டான். பாண்டவர்களின் ஆதர்ச குருவான தௌம்யர் மற்ற வேத பிராமணர்களிடமும், முனிகள், ரிஷிகளிடமும் பேசி அவர்கள் குருகுலத்தைக் காண்டவப்ரஸ்தத்திலோ அல்லது அதற்கு அருகிலோ ஏற்படுத்துமாறு வேண்டிக் கொண்டனர். காண்டவப்ரஸ்தம் வருவதற்கு ஆவலுடன் இருப்பவர்களை ஏற்பாடுகளைச் செய்யுமாறும் கேட்டுக் கொண்டனர்.

சாத்யகியும் மற்ற யாதவ அதிரதர்களும் பாண்டவர்களும் மற்ற பரிஜனங்களும் வரும் முன்னரே அங்கு சென்று வழியில் அவர்கள் ஒவ்வொரு நாளும் தங்க வேண்டிய இடம், மற்றும் காண்டவப்ரஸ்தம் சென்றதும் தங்க வேண்டிய இடம் ஆகியவற்றைச் சரியானபடி தேர்ந்தெடுக்க வேண்டி முன்னரே கிளம்பினார்கள். துஷ்சாசனன் மல்லர்களில் இருவரைக் கொன்ற அன்று மல்லர் தலைவன் ஆன பலியா பீஷ்மரிடம் பேசி இதற்கொரு நியாயம் எனில் அது தாங்கள் தங்கள் தாய்நாடான குந்திபோஜனின் அரசுக்குத் திரும்புவதே ஆகும் என்றும் அங்கே தாங்கள் திரும்பிப் போக அனுமதி வேண்டும் எனவும் கேட்டிருந்தான். ஆனால் இப்போது யுதிஷ்டிரன் ஹஸ்தினாபுரத்தை ஆளப் போகிறான் என நினைத்திருந்தபோது அதைக் கொஞ்சம் தள்ளிப் போட்டனர். இப்போதோ முற்றிலும் நிலைமை மாறிவிட்டது. பாண்டவர்கள் காட்டுக்கு நாடு கடத்தப்பட்டிருக்கின்றனர். இந்த நிலைமையில் மொத்த மல்லர்களும் அவர்களின் துணைக்கும், உதவிக்கும் தேவைப்படும். ஆகவே பலியா அனைத்து மல்லர்களையும் காண்டவப்ரஸ்தம் சென்று பாண்டவர்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்யுமாறு கட்டளையிட்டான். அதன்படியே அவர்களும் கிளம்பினார்கள்.

ஆனால் ராணிமாதாவுக்கும், பீஷ்மபிதாமஹருக்கும் கவனிக்க ஆட்கள் இல்லாமல் போய்விடுமே! இதை நன்கு யோசித்து சோமேஸ்வரையும் அவன் மனைவியையும் மற்றச் சில மல்லர்களுடன் அங்கேயே தங்கி இருந்து ராணிமாதா சத்யவதிக்கும், பீஷ்மபிதாமஹருக்கும் வேண்டிய சேவைகளைச் செய்யுமாறும் கட்டளை இட்டான் பலியா. இரு வாரங்களுக்குப் பிறகு ஒரு நன்னாளில், ஐந்து சகோதரர்களும், கிருஷ்ணனும், பலராமனும் உடன் வர, ஹஸ்தினாபுரத்துக்கும் குருவம்சத்து மற்ற மூத்தவர்களுக்கும், தங்கள் சித்தப்பாவான விதுரருக்கும் தங்கள் பிரியாவிடையைக் கொடுத்து விட்டுக் காண்டவப்ரஸ்தம் நோக்கிக் கிளம்பினார்கள். வழியெங்கும் ஹஸ்தினாபுரத்தில் தங்கி இருக்கும் மக்கள் கூட்டம் அணிவகுத்து நின்று பாண்டவ இளவரசர்களுக்குப் பிரியாவிடை கொடுத்தது. அதிசயத்திலும் அதிசயமாக, அங்கிருந்த மூத்தோர் அனைவருக்கும் மிகவும் புதுமையாக ராணிமாதா தன் மாளிகையிலிருந்து வெளியே வந்தார். தன் கண்களில் கண்ணீருடன் குந்தி, திரௌபதி மற்றும் பாண்டவர்கள் ஐவர் ஆகியவர்களை அணைத்துக்கொண்டு உச்சி முகர்ந்து தன் ஆசிகளைத் தெரிவித்தாள். மனம் நிறைய வருத்தத்துடன் அவர்களுக்குப்பிரியா விடை கொடுத்தாள்.

கடினமான மனம் படைத்த பீஷ்மர் கண்களில் கூட அன்று கண்ணீர் நிரம்பி இருந்தது. சகோதரச் சண்டை என்னவோ நிறுத்தப்பட்டு விட்டது; அது உண்மை தான். ஆனால்!!!!!! துரியோதனனா ஹஸ்தினாபுரத்தை ஆளுவது? இது சரியா? முறையா? தர்மமா? ஆனால் அவரால் பாண்டவர்களுடன் செல்ல இயலாது. ஏனெனில் அவர் தந்தை ஷாந்தனுவுக்கு ஹஸ்தினாபுரத்தைக் காப்பேன் என்று உறுதிமொழி கொடுத்துள்ளார். என்ன ஆனாலும் அவர் வாழ்க்கை கடைசி வரை இந்த ஹஸ்தினாபுரத்தில் தான். எப்படிப்பட்ட சூழ்நிலையிலும் ஹஸ்தினாபுரம் ஒன்றே அவர் இலக்கு. இதை விட்டு அவர் செல்ல முடியாது.

தன் தாய் சத்யவதியை வேத வியாசர் கீழே விழுந்து நமஸ்கரித்தார். அங்குள்ள மற்றவர்களை ஆசீர்வதித்த அவர் தன் சீடர்களுடன் காண்டவப்ரஸ்தம் நோக்கிப் பயணித்தார். அங்கிருந்த மக்களுக்குப் பார்க்கையில் ஒரு மாபெரும் நகரமே இடம் பெயர்ந்து அங்கிருந்து செல்வது போல் தோன்றியது. ஆம், காண்டவப்ரஸ்தத்தை நோக்கி ஹஸ்தினாபுரத்தில் பாதி சென்று கொண்டிருந்தது. அங்கு எவர் இல்லை? பிராமணர்கள், க்ஷத்திரியர்கள், குரு வம்சத்தின் வாரிசுகளில் பலர், மஹாஜனங்கள், மல்லர்கள், வில்லாளிகள், அதிரதர்கள், மஹாரதர்கள், படை வீரர்கள், கைவினைக்கலைஞர்கள், என அனைவரும் தங்கள் குடும்பங்களுடனும் தங்கள் பொருட்களுடனும் காண்டவப்ரஸ்தம் நோக்கிப் பயணித்தனர்.  அதில் சில ஏழை மக்களும், தாங்கள் காண்டவப்ரஸ்தம் போயாவது தங்களுக்கெனச் சொந்தமாகச் சிறு அளவிலாவது நிலம் பெற்றுப்பயனடையலாம் எனத்தங்கள் குடும்பங்களுடன் வாழ்க்கையின் விடியல் நோக்கிப் பயணப்பட்டனர்.

Friday, August 28, 2015

வாக்குறுதிகளை நிறைவேற்றிய வாசுதேவன்!

அனைவரும் காத்திருக்கக் கிருஷ்ணன் தன் பரிசு அறிவிப்பைச் செய்தான். “எங்களிடம் இருக்கும் தங்கத்தில் ஐந்தில் ஒரு பாகம் தருகிறோம். அதே போல் தான் கால்நடைச் செல்வங்கள், ரதங்கள், குதிரைகள், யானைகள் போன்றவற்றையும் தருகிறோம். யாதவர்களில் விரும்பும் ஐந்தில் ஒரு பாகத்தினரும் பாண்டவர்களுக்குச் சேவை செய்ய வருகின்றனர். திறந்த வாய் திறந்தபடி இருக்க அனைவரும் ஸ்தம்பித்துப் போனார்கள்.  யாதவர்களால் இவ்வளவு மாபெரும் பரிசை அளிக்க முடியும் என்று அங்கிருந்த எவரும் நினைத்துக் கூடப் பார்க்கவில்லை.  சற்று நேரம் கடும் அமைதியில் இருந்த சபையில் திடீர் என யாரோ, “வாசுதேவக்கிருஷ்ணனுக்கு மங்களம்!” என்று உரத்த குரலில் கூவ அனைவரையும் இது தொற்றிக் கொண்டது. அனைவருமே கிருஷ்ணனுக்கு மங்கள வாழ்த்துகள் சொல்லியும், கிருஷ்ணனுக்கு ஜயம் என்று சொல்லியும் வாழ்த்தத் தொடங்கினார்கள்.

சாதாரணமாகக் கடுமையே காட்டும் பீஷ்மர் கூட இந்த அறிவிப்பினால் நெகிழ்ந்தும், மகிழ்ந்தும் போயிருந்தார் என்பது அங்கு கூடி இருந்த அரசர்கள் செய்த கைதட்டல் ஒலியில் கலந்து கொண்டதில் இருந்து தெரிந்தது. அங்கிருந்த மன்னர்களும் அதுவரையிலும் எந்தப் பேச்சுவார்த்தைக்கும் தங்கள் கருத்தைச் சொல்லாமல் மௌனம் காத்தவர்கள் இப்போது ஏகோபித்துக் கிருஷ்ணனின் அறிவிப்புக்குத் தங்கள் மகிழ்வைத் தெரிவித்தனர். யுதிஷ்டிரன் கண்களில் கண்ணீர் ததும்பியது. நன்றிக்கடனில் மூழ்கினான் யுதிஷ்டிரன். அவனால் பேசமுடியவில்லை.  அப்போது கூட்டத்தில் அமைதியை மீண்டும் நிலை நாட்டக் கிருஷ்ணன் தன் கைகளை உயர்த்தினான். அப்போது தான் அவன் இன்னும் பேசி முடியவில்லை என்பதை சபையினர் புரிந்து கொண்டனர். “மேலும் என் மூத்த அண்ணாரும், ரோஹிணி அன்னையின் மகனுமான பலராமர், உங்களுடன் வருகிறார். அவரோடு தேர்ந்தெடுத்த யாதவர் குல அதிரதர்களுடன் நானும் வருகிறேன். மாட்சிமை பொருந்திய யுதிஷ்டிரரே! காண்டவபிரஸ்தத்துக்கு நாங்கள் அனைவரும் உங்களுடன் வந்திருந்து புதிய நகரை நிர்மாணிக்க உதவிகள் செய்கிறோம்.”

அதற்கு மேல் பீமனால் பொறுக்க முடியவில்லை. சபையில் வயதிலும் அறிவிலும், தகுதியிலும் மூத்தவர் பலர் இருக்க அவர்கள் முன் வாயடக்கம் வேண்டும் என்னும் நினைவே அற்றவனாய்த் தன் உரத்த குரலில் முழக்கமிட ஆரம்பித்தான். "ஜெய கிருஷ்ண வாசுதேவா!” என்று உரத்த குரலில் கூவினான். சபை மொத்தமும் அவனுடன் சேர்ந்து  கொண்டது. பின்னர் கிருஷ்ணன் வியாசர் பக்கம் திரும்பினான். “முனி சிரேஷ்டரே! பாண்டவர்களை அவர்கள் நிர்மாணிக்கப் போகும் நகரில் பல்லாண்டு வீற்றிருந்து நல்லாட்சி தர வேண்டும் என ஆசீர்வதிக்க வேண்டுகிறேன். அது மட்டுமல்ல, குருதேவா! நீங்களும் எங்களுடன் காண்டவபிரஸ்தம் வந்திருந்து எங்கள் புதிய நகரம் நிர்மாணம் ஆகப் போகும் இடத்தையும் பார்த்து நல்லாசி கூறியருள வேண்டுகிறேன்.”

“வாசுதேவா! நிச்சயமாய் நான் வருகிறேன்.” என்று சிரித்த வண்ணம் கூறிய வியாசர் தன் வலக்கையை உயர்த்தி யுதிஷ்டிரனுக்கு ஆசிகளைத் தெரிவித்தார். பின்னர் உரத்த குரலில் வேத மந்திரங்களை ஓதி அதன் மூலமும் கடவுளரின் ஆசிகளை வேண்டினார். வேத பண்டிதர்கள் அவருடன் கலந்து கொண்டனர்.

“ஏ இந்திரா, தேவர்களின் அரசனே! உன் கருணை மழையை இந்த அரசன் மேல் பொழிவாய்!
இவனுக்கு நீண்ட ஆயுளைக் கொடுப்பாய்!
அனைத்துச் சிறப்புக்களையும் இவனுக்குக் கொடுத்து ஆசீர்வதிப்பாய்!
மனிதருக்குள் இவன் தலைசிறந்தவனாக இருக்கவும், இவனே அனைவருக்கும் தலைவனாக இருக்கவும், இந்தப் பரந்த பூமியில் பிரபுவாகத் தலைமை தாங்கி வழிநடத்தவும் ஆசீர்வதிப்பாய்!
அனைத்து மக்களின் ஆசைகளையும் இவன் பூர்த்தி செய்ய ஆசீர்வதிப்பாய்!
மனிதர்களுக்குப் புதியதொரு உலகைக் காட்டி அவர்களை நல்வழிப்படுத்த் ஆசீர்வதிப்பாய்!
சூரியக் கடவுளைப் போல், அவன் ஒளிபொருந்திய கதிர்களைப் போல் இவனும் பிரகாசிக்க அருளுவாய்!
நூற்றுக்கணக்கான வசந்தங்களை இவன் கண்டு நீண்ட நாட்கள் வாழ்வாங்கு வாழ ஆசீர்வதிப்பாய்!

இவை முடிந்ததும் மந்திராக்ஷதைகளால் யுதிஷ்டிரனுக்கு வியாசரும் மற்ற பிராமணர்களும், ரிஷி, முனிவர்களும் ஆசீர்வதித்தனர். அப்போது ராஜசபையில் இருந்த அனைவரும் இடி முழக்கம் போல் தங்கள் கைகளைத் தட்டித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர். அந்தச் சபையின் அனைத்து நியதிகளையும் சம்பிரதாயமான சடங்குகளையும் உடைத்துக்கொண்டு அனைவரும் ஒரே குரலில், ஒரே மனிதனின் உரத்து ஒலிப்பது போல், “முனி சிரேஷ்டரின் ஆசீர்வாதங்கள் அனைத்தும் உண்மையாகட்டும்! கிருஷ்ண வாசுதேவனுக்கு ஜெயம்! யுதிஷ்டிரனுக்கு ஜெயம்! குருவம்ச சிரேஷ்ட்ரான யுதிஷ்டிரனுக்கு மங்களம்!” என்று முழங்கினார்கள்.

சிறிது நேரத்தில் அங்கிருந்த பெரியோர் அனைவரும் பக்கவாட்டுக் கதவின் வழியே வெளியேறினார்கள். அவர்கள் வெளியேறியதுமே மற்ற மக்களும் முக்கிய வாயில் வழியாக வெளியேற ஆரம்பித்தனர். அப்போது பீமன் சிறிது கூட சம்பிரதாயம் குறித்துக் கவலை கொள்ளாமல் குதித்து ஓடி வந்தான். கிருஷ்ணனை ஆரத் தழுவிக் கொண்டான். பின்னர் அவனை அப்படியே உயரத் தூக்கிச் சுற்றினான். அங்கிருந்த அனைவரும் இதைப் பார்த்து ரசித்தனர். பீமன் பின்னர் கிருஷ்ணனைத் தரையில் இறக்கிவிட்டு விட்டு அவன் தோள்களின் மேல் தன் கையை வைத்த வண்ணம் பக்கவாட்டுக் கதவை நோக்கி நகர்ந்தான். கிருஷ்ணனைப் பார்த்து, “நீ மிகப் பொல்லாதவன்!” என்று கூறிச் சிரித்தான். சிரிப்புச் சப்தம் கேட்காதவாறு கிருஷ்ணன் சிரித்தான். “ஆம், நான் பொல்லாதவன் தான். இல்லை எனில் நான் அளித்த நான்கு உறுதிமொழிகளையும்  எவ்வாறு காப்பாற்றுவேன்? அவற்றில் மூன்று ஏற்கெனவே என்னால் மீட்கப்பட்டது தான்!”

“என்ன, நான்கா?” பீமன் கேட்டான்!

“ஒன்று திரௌபதிக்குக் கொடுத்த வாக்குறுதி! அவளுக்கு நல்ல கணவனைத் தேடித்தருவேன் என்று சொல்லி இருந்தேன். ஒருவனுக்குப் பதிலாக ஐந்து நல்ல கணவர்கள் அவளுக்குக் கிடைத்திருக்கின்றனர். இரண்டாவது வாக்குறுதி பானுமதிக்குக் கொடுத்தது! துரியோதனன் மட்டுமே ஹஸ்தினாபுரத்தை ஆளவேண்டும் என்பது அது! விரைவில் அவன் ஹஸ்தினாபுரத்துக்கு அரசனாக முடிசூட்டப்படுவான்! மூன்றாவது நான் உனக்குக் கொடுத்தது! நீ யுவராஜாவாக ஆவாய், உன்னை யுவராஜா ஆக்குவேன் என்று! ஆம், விரைவில் நீயும் யுவராஜா ஆகிவிடுவாய். குரு தேவர் அதற்கான ஏற்பாடுகளைச் செய்து விரைவில் உன்னை யுவராஜா ஆக்குவார் என நம்புவோம்.”

“நான்காவது?”

“ஆம், நான்காவது இன்னும் மிச்சம் இருக்கிறது. அது பூர்த்தி ஆவதும், ஆகாததும் உன்னிடம் தான் இருக்கிறது. உன் கையில் தான் இருக்கிறது!”

“என்ன என்னிடமா?” ஆச்சரியத்துடன் கேட்டான் பீமன்.

“ஆம், ஜாலந்திராவிடம் அவளுக்கு நல்லதொரு கணவனைத் தேடித்தருவதாக வாக்குக் கொடுத்திருக்கிறேன்.” கிருஷ்ணன் சிரித்தான்.


இத்துடன் நான்காம் பாகம் முடிவடைந்தது. பின்னுரையைத் தொடர்ந்து ஐந்தாம் பாகம் விரைவில் தொடரும். நன்றி. வணக்கம்.