Tuesday, November 8, 2016

சிசுபாலனின் சீற்றம்!

இனி தொடர்ந்து நாம் படிக்கப் போகும் அத்தியாயங்கள் மனதுக்கு வருத்தம் தரக் கூடியவை! மனது கனத்துப் போகும்படி செய்யக் கூடியவை! எனினும் அதுவும் கடந்து தானே ஆக வேண்டும். அடுத்துப் பார்ப்போம்!

சிசுபாலன் கத்தியதும் மொத்தக் கூட்டமுமே அதிர்ச்சியில் உறைந்தது. சிசுபாலனையோ பார்க்கவே அனைவருக்கும் பயமாக இருந்தது. அவன் குரோதத்திலும் கோபத்திலும் உடல் முழுவதும் சிவந்து ரத்தத்தைப் பூசிக் கொண்டாற்போல் காணப்பட்டான். கண்கள் இரண்டும் சிவந்திருந்ததைப் பார்த்தால் ரத்தம் கொட்டுவதைப் போல் இருந்தது. உடல் நடுங்கியது. கைகள் ஓர் நிலையில் நிற்கவில்லை. அவன் மெல்ல மெல்லத் தன் உணர்வுகளைக் கட்டுப்படுத்த முயன்றான். அப்படி முயன்றவண்ணமே பீஷ்ம பிதாமஹரைப் பார்த்தான். சற்றும் இணக்கமற்ற குரலில், பீஷ்மரின் வயதுக்கும் அனுபவத்துக்கும் உரிய மரியாதையையும் கொடுக்காமல், “ஷாந்தனுவின் புத்திரனே! கங்கை மைந்தனே! இது என்ன வேலை? ராஜசூய யாகத்தின் அக்ரபூஜைக்கு வழிபடுவதற்கு உங்களுக்கு ஓர் மாட்டிடையனா கிடைத்தான்? இந்த இடையனை அக்ரபூஜைக்கு நியமித்ததன் மூலம் நீங்கள் பாண்டவர்களை மட்டும் அவமதிக்கவில்லை. அவர்களை மிகத் தாழ்வான நிலைக்குக் கொண்டும் போய்விட்டீர்கள். அது மட்டுமல்ல இங்கே வந்திருக்கும் அனைத்து அரச குலத்தவரையும் அவமதித்திருக்கிறீர்கள். ரிஷி, முனிவர்களை அவமானம் செய்து விட்டீர்கள். ஓர் சுயநலமான முடிவிற்காக நேர்மையான வழியில் செல்வதைக் கைவிட்டு விட்டீர்கள்!” என்றான்.

சற்று நிறுத்தித் தான் பேசுவதை அனைவரும் கேட்கிறார்களா என்று பார்த்துக் கொண்டான். பின் மேலும் தொடர்ந்து, “ யார் இந்தக் கிருஷ்ணன்? இவன் என்ன ஒரு மாபெரும் அரசனா? எந்த நாட்டுக்கு இவன் அரசன்?அப்படி உங்களுக்கு யதுகுலத்தவருக்குத் தான் அக்ரபூஜை போய்ச் சேர வேண்டும் என்னும் எண்ணம் இருந்திருந்தால் இந்த இடையனைப் பெற்றதாகச் சொல்லிக் கொள்ளும் வசுதேவனை அழைத்திருக்கலாமே! இவனை விட அவர் தகுதி வாய்ந்தவர் அல்லவா? அல்லது வயதிலும் அனுபவத்திலும் மூத்த ஓர் சக்கரவர்த்தியோ, பேரரசரோ தேவை எனில், இதோ பாஞ்சால நாட்டு அரசன் துருபதன் இருக்கின்றானே! அவரை அழைத்திருக்கலாமே! அல்லது இப்படி யாரும் தேவை இல்லை. சாஸ்திர சம்பிரதாயங்களை அறிந்தவராகவும் இருக்க வேண்டும். முனிவர்களைப் போலவும் இருக்க வேண்டும். அதே சமயம் ஆயுதப் பயிற்சிகளிலும் தேர்ந்தவராக இருக்க வேண்டும்! என்று நினைத்திருந்தீர்களானால்! இதோ அஸ்வத்தாமா! குரு துரோணரின் மகன்! சாஸ்திரங்களைக் கற்றுத் தேர்ந்தவன்! முனிபுத்திரன்! ஆயுதப் பயிற்சிகளிலும் சிறந்தவன்! பிரம்மாஸ்திரத்தை ஏவத் தெரிந்தவன்! இதுவும் வேண்டாம். முனிவர்களே போதும் எனில் அதற்கு வேத வியாசர், க்ருஷ்ண த்வைபாயனரை விடச் சிறந்தவர் யார் இருக்கிறார்கள்? அவரை அழைத்திருக்கலாமே!”

இதைச் சொன்ன சிசுபாலன் கிருஷ்ணன் பக்கம் திரும்பினான். “வாசுதேவக் கிருஷ்ணா! நீ பேராசைக்காரன்! மோசமானவன், சூழ்ச்சிக்காரன், நயவஞ்சகன்! கபடம் நிரம்பியவன், உன்னை உயர்வாக எண்ணிக் கொள்பவன்! இதோ என் தாய்வழிச் சகோதரர்கள் ஆன இந்தப் பாண்டவர்கள் ஐவரும் கோழைகள்! கோழைத்தனத்தால் உனக்கு ஓர் உயரிய இடம் கொடுத்துவிட்டார்கள். உனக்கு ஓர் வேண்டாத கௌரவத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இது உனக்குத் தேவையே அல்ல! ஏ, கிருஷ்ணா, நீ மட்டும் ஓர் கௌரவமான, மேன்மையான மனிதனாக இருந்தாயானால், உனக்குச் சிறிதும் பொருத்தமில்லாத இந்த உயர்ந்த கௌரவத்தை ஏற்க மறுத்திருப்பாய்!” இதைச் சொல்லிக் கொண்டே சிசுபாலன் தன்னுடைய ஆசனத்திலிருந்து எழுந்தான். அவன் நண்பர்களும் கூடவே எழுந்தனர்.

சிசுபாலன் எழுந்ததைக் கண்ட யுதிஷ்டிரன் உடனே அவன் அருகே சென்றான். தன்னுடைய இனிமையான வயப்படுத்தும் குரலில் பேச ஆரம்பித்தான். “சகோதரா, தாமகோஷரின் சக்தி வாய்ந்த புத்திரனே! அமைதி! அமைதி! என்ன இருந்தாலும் நீ பீஷ்மரை கௌரவமிக்க பிதாமஹரை இப்படி எல்லாம் பேசலாமா? அவர் எவ்வளவு மேன்மை வாய்ந்தவர்! சக்தி வாய்ந்தவர்! இன்றைக்கு க்ஷத்திரியர்கள் அனைவரும் தங்களுடைய க்ஷத்திரிய தேஜஸே அவரால் மேன்மையும் கௌரவமும் பெற்றிருக்கிறது என்று பேசிக் கொள்கிறார்கள் அல்லவோ! அப்படிப் பட்டவரை இப்படி எல்லாம் பேசலாமா?” என்று மிகவும் தயையுடன் கேட்டான்.

தன்னுடைய ஒரு கை அசைவால் யுதிஷ்டிரனைப் பேச்சை நிறுத்தும்படி கூறினார் பீஷ்ம பிதாமஹர். யுதிஷ்டிரனைப் பேசுவதை நிறுத்தும்படி சொன்ன பீஷமர் சிசுபாலனைத் தந்திரமாகக் கையாண்டால் அவன் தொடர்ந்து மேலே யாகம் தடைப்படாமல் தொடர உதவுவான் என்று எதிர்பார்த்தார். ஆகவே இதைத் தானே சரி செய்யலாம் என்னும் எண்ணத்துடன் மேலே பேசினார். “தாமகோஷனின் புத்திரனே! ஆரியர்களுக்குள் மேன்மையானவனே! கோபம் உன் கண்களை மறைக்கிறது. உன்னுடைய பார்வையை கோபமேகம் மறைக்காமல் பார்த்துக் கொள்! ஒரு நிமிடம் நிதானமாகச் சிந்தித்துப் பார்! நாங்கள் என்ன செய்திருக்கிறோம் என்று யோசி! சரியாகவே செய்திருக்கிறோம் என்பது புலப்படும். நாங்கள் அனைவருமே வாசுதேவக் கிருஷ்ணனை வயது வித்தியாசம் பாராமல் பக்தியுடனும், அன்புடனும் வணங்கி வழிபடுகிறோம். அவன் அத்தகைய தெய்விகத் தன்மை பொருந்தியவன். ஆரியர்களின் தர்மங்களையும் கோட்பாடுகளையும் அவன் ஒவ்வொரு பிரச்னைகளிலிருந்தும் காப்பாற்றி முன்னெடுத்துச் சென்று கொண்டிருக்கிறான். இன்று க்ஷத்திரிய தர்மம், பிரம தேஜஸ், ஆரியர்களின் அரச தர்மம் அனைத்தும் காப்பாற்றப்பட்டிருக்கிறது எனில் அது அவன் ஒருவனால் மட்டுமே! ஆனாலும் உனக்கு இதில் சம்மதமில்லை என்றால், நாங்கள் செய்தது சரி இல்லை என உனக்குத் தோன்றினால், உன்னைச் சேர்ந்தவர்களுக்கும் அப்படித் தோன்றினால் நீங்கள் அனைவரும் உங்கள் வழியில் சென்று கொள்ளலாம். எங்களை எங்கள் வழியில் செல்ல விடுங்கள்! நாங்கள் எங்களுக்குச் சரியென்று பட்டதைச் செய்து கொண்டு போகிறோம்.” என்றார்.

ஆனால் இந்தப் பேச்சைக் கேட்ட அங்கிருந்த அரசகுலத்தினர் அனைவருக்கும் ஏதோ விபரீதமாக நடக்கப் போகிறது என்பது புலப்பட்டு விட்டது. அனைவரும் பதற்றம் அடைந்தனர். அனைவரும் அவரவர் ஆசனங்களிலிருந்து எழுந்து பாண்டவர்களுக்கு ஆதரவானவர்கள் பீஷ்மர் மற்றும் யுதிஷ்டிரன் அவன் சகோதரர்களைச் சூழ்ந்து கொண்டும், சிசுபாலனின் ஆதரவாளர்கள் அவனைச் சூழ்ந்து கொண்டும் தங்கள் வாள்களை உருவிக் கொண்டு ஆயத்த நிலையில் நின்றனர். யாதவர்களும் மற்றும் பாண்டவ, யாதவ ஆதரவு அரசர்களும் கிருஷ்ணனையும் மற்ற யாதவர்களையும் சூழ்ந்து கொண்டனர். அப்போது அனைவரும் அதிசயிக்கும் வண்ணம் எந்த நிலையிலும் வாயே திறவாத பாண்டவ சகோதரர்களில் மிகவும் இளையவன் ஆன சஹாதேவன் பேசத் தொடங்கினான்.

“சேதி நாட்டு மன்னா! என்னால் மேற்கொள்ளப் பட்ட அக்ரபூஜையை ஏற்காதவர்கள் எவராக இருந்தாலும் ஒரு பக்கமாக ஓரமாக ஒதுங்கி இருங்கள் அல்லது வெளியேறுங்கள். எங்களுக்கு ராஜசூய யாகத்தை மேற்கொண்டு செய்து முடிக்கவேண்டிய கடமை உள்ளது. அதை நாங்கள் பூர்த்தி செய்ய வேண்டும். அது பிடிக்காதவர்கள் வெளியேறலாம். ஸ்ரோத்திரியர்களாக இருந்தாலும் சரி, அரசர்களாக இருந்தாலும் சரி. இங்கே இருக்கும் மற்ற ஸ்ரோத்திரியர்களை வைத்து முடித்துக் கொள்கிறோம்.” என்றான் சஹாதேவன். தனக்கு ஆதரவாகத் தன்னைச் சுற்றிக் கூடி இருக்கும் மற்ற அரசர்களைப் பார்த்தான் சிசுபாலன். “நன்றி, அரசர்களே, பேரரசர்களே! இந்த ராஜசூய யாகம் நடைபெற விடாமல் நாம் தடுப்போம். இதோ இந்த என் தாய்வழிச் சகோதரன், பாண்டவ புத்திரன், யுதிஷ்டிரனைச் சக்கரவர்த்தியாக அங்கீகரித்து அபிஷேஹம் செய்ததை ரத்து செய்து அறிவிப்போம். அந்தப் பட்டம் அவனுக்குப் பொருந்தாது, செல்லத் தகாதது என்று அறிவிப்புச் செய்வோம். இதோ இந்த மாட்டிடையனுக்குச் செய்த அக்ரபூஜையை நாம் செல்லாது என்று சொல்வோம். ஒப்புக்கொள்ள மறுப்போம்!” என்று அறைகூவல் விடுத்தான். அனைவரும் அதற்குச் சம்மதம் கூறி ஆஹாகாரம் செய்தனர்.

சிசுபாலன் மிகவும் உணர்ச்சி வசப்பட்டிருந்தான். ஆகவே அவன் வாயிலிருந்து சொல்மாரி பொழிந்தது. நிறுத்தாமல் பேசினான். பீஷ்மரைச் சுட்டிக் காட்டியபடி அவன் சொன்னது:” நீர், கங்கை புத்திரரே, மனிதர்களில் கண்மூடித்தனமாகச் செயல்படுபவரே, உங்கள் வார்த்தைகள் அனைத்தும் முற்றிலும் தவறானவை! ஹாஹாஹா, உங்கள் வாழ்க்கையையும் சேர்த்துத் தான் சொல்கிறேன்! பிதாமஹரே! உம்முடைய வாழ்க்கையுமே தவறானதே! வீணானதே!” என்றவண்ணம் ஹாஹாவெனச் சிரித்தான். தொடர்ந்து அலட்சியமும் இகழ்ச்சியும் தொனிக்கச் சொன்னான். “நீர் நினைத்துக் கொள்ளலாம். உம்முடைய இந்த பிரமசரியம் மிகப் புனிதமானது! தூய்மையானது என! ஆனால் இந்த பிரமசரியத்தின் மூலம் அதைக் கடைப்பிடிப்பதாக நீர் சொல்லுவதின் மூலம் உங்கள் முக்கியத்துவம் தான் மறைக்கப்பட்டு வருகிறது! அதை நீர் அறிவீரா? இன்றைக்கு உமக்கு ஒரு முடிவு சொல்லொணாத் துயர முடிவு கிடைக்கப் போகிறது. உம் நம்பிக்கைகள் அனைத்தையும் இழந்து ஓர் முடிவை,  உமக்குத் தக்கதென நான் கருதும் ஓர் முடிவை அளிக்கப் போகிறேன்.”

கிருஷ்ணன் யுதிஷ்டிரன் அருகே நின்று கொண்டிருந்தவன் மெல்ல மெல்ல பீஷ்மரின் பக்கம் வந்தான். அவர் பின்னால் நின்று கொண்டான். அதைக் கண்ட சிசுபாலன் அவனிடம், “உன் மாமனும் புரவலனும் ஆன கம்சனைக் கொன்றாய்! அதே போல் இதோ இந்த ராக்ஷசனைக் கசாப்புக் கடைக்காரனைத் தூண்டி விட்டு ஜராசந்தனைத் தந்திரமாகக் கொன்றாய்! கொல்ல வைத்தாய்! உன்னை இங்கே யார் அழைத்தனர்? நீ ஏன் இங்கே வந்தாய்? உன்னைப் போன்ற துராத்மாக்களுக்கு இங்கே இடமில்லை. இந்தப் பெரிய ராஜசபையில் இடம்பெறத் தகுதி இல்லை!” என்றான் சிசுபாலன். அதைக் கேட்ட பீமன் கோபத்தால் நடுங்கும் உடலுடன் சிசுபாலனை நோக்கி ஓர் அடி எடுத்து வைத்தான். பீஷ்மர் தடுத்தார். “வேண்டாம், பீமா! நில்! அங்கேயே நில்! இப்போது தான் நாம் மாட்சிமை பொருந்திய வாசுதேவக் கிருஷ்ணனுக்கு அக்ரபூஜையைச் செய்து முடித்திருக்கிறோம். இந்த ராஜசூய யாகத்தை மேலே நடத்திச் செல்லும் பொறுப்பும் அதைப் பாதுகாக்கும் பொறுப்பும் கிருஷ்ணனைச் சார்ந்தது! இதை அவனிடம் விட்டு விடுவோம். மனிதர்களுள் சிறந்தவன் ஆன வாசுதேவக் கிருஷ்ணன் எப்போது எதை எப்படிச் செய்ய வேண்டும் என்பதை அறிந்தவன்! இந்த சூழ்நிலைக்கு ஏற்ற தக்கதொரு முடிவை அவன் சரியாக எடுப்பான். இந்தச் சூழ்நிலையைக் கையாளும் பொறுப்பு அவனுடையது!” என்றார்.

Monday, November 7, 2016

கண்ணனுக்கே முதல் மரியாதை!

கிரஹங்கள் அனுகூலமான நிலையில் இருப்பது அறியப்பட்டவுடன் யுதிஷ்டிரன் இந்த ராஜசூய யாகத்தின் “யஜமான்” ஆகவும் யாகத்தின் முக்கிய ஆஹூதிகளை அளிப்பவனாகவும் நியமிக்கப்பட்டான். ஏற்கெனவே ஒரு பெரிய மண்டபத்தில் நூற்றுக்கணக்கான அந்தணர்கள் அமர்ந்து கொண்டு யாகம் வளர்த்துக் கொண்டு வேதங்களை ஓதிக் கொண்டு இருந்தார்கள். அங்கே யுதிஷ்டிரன் யாகத்துக்கு வருகை தந்திருந்த அனைத்து அரசர்களோடும் சென்றான். முதல்நாளைய நிகழ்வுகள் முடிந்ததும் அன்றைய தினம் யுதிஷ்டிரன் சக்கரவர்த்தியாக நியமிக்கப்பட்டான். அனைவரும் அதை அங்கீகரித்தனர். இரண்டாம் நாள் எல்லா ஸ்ரோத்திரியர்களும் மற்றும் அரசர்கள் அனைவரும் அந்த யாக மண்டபத்துக்குள் கூடினார்கள். அன்றைய தினம் அக்னி பகவானுக்கு வழிபாடுகள் ஆஹூதிகள் கொடுக்கப்பட்டன. அடுத்த முக்கியமான சடங்கு அக்ரபூஜை என அழைக்கப்படும் முதல் மரியாதை கொடுக்கும் நிகழ்வு. இதற்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் யாகம் முடியும்வரை அந்த யாகத்தையும் வந்திருக்கும் அனைவரையும் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்பார்கள். யாகத்தின்போது எவருக்கும் இடையில் மனஸ்தாபமோ, சண்டைகளோ, மன வருத்தமோ இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். யாகத்தின் யஜமான் ஆன சக்கரவர்த்தி யாக நிகழ்வுகளில் மனம் பதிந்து இருக்கும் வேளையில் மற்றவரால் யாகத்துக்கு இடையூறு நேராமல் பார்த்துக் கொள்வது அக்ரபூஜையின் வழிபாடு செய்யப்படுபவரின் கடமை ஆகும். இதற்காக பிரபலமாகவும் மிகவும் புனிதமாகவும் வாழ்க்கை நடத்தி வரும் முனிவர்கள் யாரேனும் ஒருவரோ அல்லது மிகவும் புத்திசாலித்தனமும் வீரமும் நிறைந்த பெரிய பேரரசரோ மாமன்னரோ தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அவர்களின் முக்கியத்துவம் இதை வைத்தே அனைவரும் தெரிந்து கொள்வார்கள். ஆகவே இதற்குத் தேர்ந்தெடுக்கப்படுபவர் யார் என்று அறியும் எண்ணம் அனைவர் மனதிலும் இருந்தது. அனைவரும் ஒருவிதமான ஆவலுடன் கூடிய எதிர்பார்ப்பில் காத்திருந்தார்கள்.

சிசுபாலனும் அவன் நண்பர்களும் இப்போதிருக்கும் சூழ்நிலையில் சிசுபாலனை விட்டால் பெரிய மன்னர் எவரும் இல்லை என்பதால் அவனைத் தான் அழைப்பார்கள் என்று எண்ணிக் கொண்டு காத்திருந்தார்கள். யுதிஷ்டிரனுக்குத் தன் தாய்வழிச் சகோதரன் ஆன சிசுபாலனைக் குறித்து நன்கு தெரியும். தங்கள் மாமன் மகன் ஆன வாசுதேவக் கிருஷ்ணனுக்கும் அவனுக்கும் இடையில் உள்ள பிரச்னைகள் குறித்தும் அறிவான். ஆகவே அவன் மனதினுள் வேறொரு முடிவு எடுத்திருந்தான். அக்ரபூஜைக்கான நபரைத் தேர்ந்தெடுக்கும் நேரம் வந்ததாக அறிவிக்கப்பட்டது. பீஷ்மர் யுதிஷ்டிரனைப் பார்த்து, “குழந்தாய், அக்ர பூஜைக்கான வேளை வந்துவிட்டதாக அறிவித்திருக்கிறார்கள். நம் பண்டைய வழக்கப்படி நீ யாரேனும் ஓர்முனிவரையோ அல்லது அரசனையோ இதற்கான பிரதிநிதியாகத் தேர்ந்தெடுத்து அக்ரபூஜையைச் செய்ய ஆரம்பித்து விடு! அதன் பின்னர் யாகத்தின் முக்கிய நிகழ்வுகளைத் தொடர சௌகரியமாய் இருக்கும்!” என்றார்.

யுதிஷ்டிரனுக்கு இருதயம் துடிக்கவே மறந்து விட்டாற்போல் இருந்தது. ஒரு கணம் திகைத்தான். தானே தேர்ந்தெடுப்பதா? கடவுளே! இது பெரியதொரு அழிவில் அல்லவோ கொண்டு விடும்? என்ன செய்யலாம்? இந்த ராஜசூய யாகத்தின் போது சிசுபாலனும் அவன் நண்பர்களும் ஏதோ ஓர் திட்டத்துடன்  குழப்பம் விளைவிக்க வேண்டும் என்று காத்திருக்கிறார்கள். இதை யுதிஷ்டிரன் நன்கு அறிந்திருந்தான். ஆனால் என்ன திட்டம் என்று தான் புரியவில்லை. ஆனால் என்ன ஆனாலும் சிசுபாலனை அக்ரபூஜைக்கு அழைக்கக் கூடாது. அவன் அதற்குத் தகுதியானவன் அல்ல. அவனை விட்டால் வேறு பெரியவர்கள் என்று பார்த்தால்! ஆஹா! தாத்தா! தாத்தா பீஷ்மர் இருக்கிறாரே! இங்கு வந்திருக்கும் அனைத்து அரசர்களாலும் போற்றி வணங்கப்படுபவர் பிதாமஹர் பீஷ்மர். கங்கையின் புத்திரர். அரியணையில் அமர்ந்து அரசாளாவிட்டாலும் அவர் கண்ணசைவிலும், கையசைவிலும் தானே ஹஸ்தினாபுரம் செயல்படுகிறது! இதன் மூலம் அவருடைய புகழும் வீரமும் மேலும் மேலும் பேசப்படுகிறது. எவ்விதத்திலும் குறைவாகப் பேசுவதில்லை.

யுதிஷ்டிரன் தன் தாத்தா பக்கம் திரும்பினான். “தாத்தா அவர்களே! நீங்கள் யாரைக் கையைக் காட்டினாலும் அவர்களை முதல் மரியாதைக்கு அழைத்து வழிபட நான் தயார் தான்! ஆனால் இங்குள்ள அனைவரிலும் நீங்கள் வயதிலும் அனுபவத்திலும் பெரியவர். உங்களால் செய்ய முடிந்தவற்றை இங்கே எவராலும் செய்ய முடியாது! நீங்கள் அனைவராலும் மதிக்கப்படுகிறீர்கள்!....................................”

இதற்குள்ளாகக்குறுக்கிட்டார் பீஷ்மர். சிரித்தார். “குழந்தாய், நான் உன் தாத்தா! இந்தக் குடும்பத்துக்கு பரத குலத்துக்கு  குரு வம்சத்துக்கு மூத்தவன். ஆகவே நீ என்னிடம் இந்த விஷயத்தை விட்டு விட்டாய் அல்லவா? அதற்கு  நான் சந்தோஷப்படுகிறேன்.” என்றார். அடுத்து பீஷ்மர் யோசிக்கவோ யாரையும் கலந்து கொள்ளவோ இல்லை. சிறிதும் யோசிக்கவில்லை. அவர் மனதில் வாசுதேவக் கிருஷ்ணனே நிறைந்திருந்தான். அவன் ஒருவனே இதற்குத் தகுதியானவன். அவனைத் தான் நாம் வணங்க வேண்டும். அவனுடைய வழிகாட்டுதல் இல்லை எனில் இந்தக் குரு வம்சமே அழிந்திருக்கும். பாண்டவர்கள் ஐவரும் இருந்த இடம் தெரியாமல் போயிருப்பார்கள் கிருஷ்ணனின் துணை இல்லை எனில் பாண்டவர்கள் திரௌபதியைத் திருமணம் செய்திருக்க மாட்டார்கள். துருபதனுடன் கூட்டணி வைத்திருக்கவும் முடியாது. இன்று வலுவான கூட்டணியோடு பாண்டவர்கள் நிம்மதியாக இருப்பதற்குக் காரணமே கிருஷ்ணன் தான். அவன் ஒருவன் மட்டுமே! அதிலும் இப்போது சில நாட்கள் முன்னர் ஜராசந்தனை அடியோடு கொன்று ஒழித்ததன் மூலம் ஆரியவர்த்தமே கிருஷ்ணனுக்குக் கடமைப்பட்டிருக்கிறது. அவர்களால் இப்படி நிம்மதியாக இந்த ராஜசூய யாகத்தில் கலந்து கொள்ள வந்திருக்க முடியாது! தன் கைகளால் தன் நீண்ட தாடியைத் தடவி விட்டுக் கொண்டார் பீஷ்மர்.

அந்த சபாமண்டபமே அமைதியில் ஆழ்ந்திருந்தது. “நம்மில் சிறந்த வீரனும், சக்தி வாய்ந்தவனும், மிகப் படித்தவனும், ஞானம் பொருந்தியவனும், சமீபத்தில் மிகச் சமீபத்தில் தர்மத்திற்காகத் தீமையை அழித்து ஒழித்தவனும் தர்மத்தைக் காத்தவனும் ஆன…….”

கூட்டம் இன்னும் அமைதியில் ஆழ்ந்தது.

“………..கிருஷ்ண வாசுதேவன்! ஆம், அவன் ஒருவனே இந்த அக்ரபூஜைக்குத் தகுதி வாய்ந்தவன்!”

கூட்டம் பெருவாரியாக ஆரவாரித்தது. ஒரு சிலர் சாது, சாது என்று கோஷிக்கக் கிருஷ்ணனைச் சார்ந்தவர்கள் அனைவரும், “வாசுதேவக் கிருஷ்ணனுக்கு ஜெய மங்களம்!” என்று ஆர்ப்பரித்தார்கள். ஸ்ரோத்திரியர்கள் அனைவரும், “வெற்றி கிட்டட்டும்! வாசுதேவனுக்கே வெற்றி!” என்று கோஷித்தார்கள். சஹாதேவன் கிருஷ்ணனை நெருங்கினான். அவன் கைகளில் கிருஷ்ணனுக்கு மரியாதை செய்வதற்கான பொருட்கள் நிறைந்த தாம்பாளம் காணப்பட்டது. அவன் கீழே குனிந்து கிருஷ்ணனின் பாதங்களை அலம்பினான். சந்தனம் குங்குமம் வைத்தான். கிருஷ்ணனின் நெற்றியிலும் சந்தனம், குங்குமத்தால் பொட்டு வைத்தான். கிருஷ்ணனுக்கு மாலை அணிவித்தான். பின்னர் நடுவில் விளக்கு ஏற்றி வைத்திருந்த ஆரத்தித் தட்டைக் கைகளில் வாங்கிக் கிருஷ்ணனுக்குச் சுற்றி ஆரத்தி எடுத்தான். ஆரத்தித் தட்டில் வைத்திருந்த விளக்கு ஒளிவீசிப் பிரகாசித்தது. கிருஷ்ணனை முதல் மரியாதையை ஏற்கச் சொல்லி வேண்டினான். வியாசருக்கும், மற்ற ஸ்ரோத்திரியர்களுக்கும் இதில் மகிழ்ச்சி ஏற்பட்டது. ஆகவே கிருஷ்ண வாசுதேவனுக்கும், பாண்டவர்களுக்கும் ஆசிகளை வழங்கும் மந்திரங்களை அவர்கள் முழங்க ஆரம்பித்தனர்.

பாஞ்சால நாட்டு துருபதன், மகத நாட்டு சகாதேவன் மற்றும் பல அரசர்கள் ஒன்று கூடி எழுந்து நின்று “வாசுதேவக் கிருஷ்ணனுக்கு ஜெய மங்களம்!” என்று கோஷித்தார்கள். இந்த ஆர்வமான கூச்சல்கள் கொஞ்சம் குறைந்ததும் வேத வியாசர் எழுந்து கிருஷ்ணனுக்கு அருகே வந்தார். அவன் தலையில் தன் கைகளை வைத்துக் கொண்டார். ஆசிகளை வழங்கினார். பின்னர், இடி முழக்கம் போன்ற குரலில், “கடவுள் அருளால் நீ இன்று முதல் சாஸ்வத தர்மகுப்தாவாக விளங்குவாய்! எல்லையற்ற முடிவற்ற அழியாத தர்மத்தின் பாதுகாவலன் நீயே என்று அறிவிக்கப்படுகிறாய்!” என்றார். உடனே மற்ற ஸ்ரோத்திரியர்கள் அனைவரும் அதை ஆமோதித்து மந்திர முழக்கங்களைச் செய்தார்கள். பாரத வர்ஷம் முழுவதும் அமைதி வேண்டிப் பிரார்த்தனைகள் செய்து மந்திர முழக்கங்கள் செய்யப்பட்டன. அது முடிந்ததும் எங்கும் மீண்டும் அமைதி நிலவியது. அந்த அமைதியைக் கிழித்துக் கொண்டு சிசுபாலன் உரத்த குரலில் கத்தினான்.

“இந்தப் பாவப்பட்ட அனைவரையும் அவமரியாதை செய்யும் நிகழ்ச்சியில் நான் பங்கெடுக்கப்போவதில்லை!”

Sunday, November 6, 2016

ராஜசூய யாகத்துக்கான ஏற்பாடுகள்!

விரைவில் யுதிஷ்டிரன் சஹாதேவனை அனுப்பியும், அவன் மூலம் பல தூதர்களை ஆங்காங்கே பல தேசங்களுக்கும் அனுப்பியும் ராஜசூய யாகத்திற்குப் பன்னாட்டு அரசர்களையும் அழைத்தான். அப்படியே ஆங்காங்கே உள்ள ஸ்ரோத்திரியர்களுக்கும் யுதிஷ்டிரன் சார்பில் அழைப்புகள் அனுப்பப்பட்டன. பெரு வணிகர்கள், பெரிய பெரிய பண்ணைகள் வைத்து விவசாயம் செய்யும் விவசாயிகள், பலருக்கும் சேவை செய்வதில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் தவிர்க்க முடியாத ஷூத்ரர்கள் என அனைவரும் அழைக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டு அவரவருக்கு உரிய வேலைகளில் ஈடுபடுத்தப் பட்டனர். நகுலனைப் பிரத்தியேகமாக ஹஸ்தினாபுரத்துக்கு அனுப்பி வைத்திருந்தான் யுதிஷ்டிரன். அவன் அங்கே சென்று மூத்தவர்களையும் குரு வம்சத்துத் தலைவர்களையும் ராஜசூய யாகத்துக்கு அழைக்க வேண்டும் என்று ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது. குரு வம்சத்தின் முக்கியமான நபர்களையும் யாகத்துக்கு அழைத்திருந்தான் யுதிஷ்டிரன். எல்லோருக்கும் முன்னால் யாகத்துக்கான ஏற்பாடுகள் நடைபெறும் சமயத்திலேயே ஆசிரமத்தில் வாசம் செய்யச் சென்றிருந்த மாட்சிமை பொருந்திய ராஜமாதா சத்யவதி தன்னிரு மருமகள்கள் ஆன காசி தேசத்து ராஜகுமாரிகளுடனும், வியாசரின் மனைவியான வாடிகாவுடனும் அங்கே வந்து சேர்ந்தாள். அவர்களுடன் ஷார்மியும் வந்திருந்தாள். ஷார்மிக்கு இப்போது முதுமை மிக அதிகம் ஆகிவிட்டபோதிலும் வந்த உடனேயே சமையலறைப் பொறுப்பையும் சமையலுக்கான ஏற்பாடுகள் செய்வதன் பொறுப்பையும் ஷார்மி ஏற்றுக் கொண்டாள்.

நூற்றுக்கணக்கான சீடர்கள் பின் தொடர ஆசாரியர் வியாசரும் வந்து சேர்ந்தார். வியாசர் தான் ராஜசூய யாகத்தை நடத்தித் தரும் பிரமன் ஆகப் பொறுப்பை ஏற்றுக் கொண்டிருந்தார். ஸ்ரோத்திரியர்களில் சிறந்தவன் ஆன சுஷர்மா சாமவேதத்தைச் சேர்ந்த சாங்கியங்களுக்கும் சடங்குகளுக்கும் பொறுப்பேற்றுக் கொண்டிருந்தார். ஆரிய வர்த்தத்திலேயே சிறந்த வைதிகரும் சமயச் சடங்குகள் செய்வதில் நிபுணர் என்ற பெயர் பெற்றவரும் ஆன யாக்ஞவல்கியர் யாகத்தின் “அதவர்யூ”வாக நியமிக்கப்பட்டிருந்தார். தௌமியரும், பைலரும் யாகத்தின் “ஹோதா”க்களாக நியமனம் செய்யப்பட்டிருந்தனர். வந்திருந்த ஸ்ரோத்திரியர்கள் பல குழுக்களாகப் பிரிந்து அன்றாட நிகழ்ச்சிகள் நடந்து முடிந்ததும், தங்களுக்கும் சமயச் சடங்குகள் குறித்தும் கோட்பாடுகள் குறித்தும் நடைபெறும் விழாவின் முக்கியத்துவம் குறித்தும் தங்களுக்குள் விவாதித்துத் தெளிவு பெற்றனர். யுதிஷ்டிரன் அவர்கள் தங்குவதற்கெனப் புதியதாக வீடுகள் கட்டிக் கொடுக்க ஏற்பாடுகள் செய்திருந்தான்.

ஒவ்வொரு நாளும் கூட்டம் கூட்டமாக மக்கள் வந்து விழாவைப் பார்த்துப் பங்கெடுத்ததோடு அல்லாமல் புராண காலத்துக் கதாநாயகர்கள் குறித்தும், குரு வம்சத்துப் பழைய வீராதி வீரர்கள் குறித்தும் ஸ்ரோத்திரியர்களும் மற்றவர்களும் சொல்லும் வீர, தீர சாகசக் கதைகளையும் நாடோடிப் பாடல்களையும் கேட்டு மகிழ்ந்தனர். புராண நிகழ்ச்சிகளும், முன்னோர்களின் வீர தீர சாகசங்களும், கண்ணன் செய்த அற்புதங்களும் அனைவராலும் ஆடல், பாடல் நிறைந்த நாட்டிய நாடகமாகச் சிறந்த கலைஞர்களால் நடித்துக் காட்டப்பட்டது. ஆயிரக்கணக்கான மக்கள் இந்தப் புதுமையைக் கண்டு ரசித்தனர். உணவு உண்பதற்கென பெரிய பெரிய கூடங்கள் கட்டப்பட்டிருந்தன. ஒரே சமயம் ஆயிரக்கணக்கான மக்கள் ஒருங்கே அமர்ந்து உணவு உண்ணும்படியாக ஏற்பாடுகள் செய்திருந்தார்கள். இவை அனைத்தையும் ஷார்மி தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்திருந்தாள். அனைவருக்கும் ஏழையாக இருந்தாலும் சரி, பெரிய பேரரசராக இருந்தாலும் சரி, ஒரே மாதிரியான தரமான உணவை திருப்தி அடையும் வண்ணம் பரிமாற உத்தரவுகள் போடப்பட்டிருந்தன. இத்தனை அமர்க்களத்திலும் வியாசர் தன் பழக்கம் ஆன குழந்தைகளுக்கு உணவு அளிப்பதை நிறுத்தவில்லை. குழந்தைகளுக்கு உணவு அளித்த பின்னரே அவர் உண்டார்.

அரச விருந்தினர்கள் ஒவ்வொருவராக வர ஆரம்பித்தனர். அவரவர் படை வீரர்களுடனும் பெரிய பெரிய ரதபப்டைகளுடனும் தங்கள் செல்வாக்கைக் காட்டிக் கொண்டு வந்தனர். சேதி தேசத்து சிசுபாலனும், காருஷ மன்னன் தந்த வக்கிரனும் பெரிய பெரிய ரதப்படைகளுடன் வந்து சேர்ந்தனர். யுதிஷ்டிரன் அனைவரையும் மலர்ந்த முகத்துடன் வரவேற்றான். சிசுபாலனையும் அவ்வாறே அவன் வரவேற்க சிசுபாலனோ யுதிஷ்டிரனை விடத் தான் மிக உயர்ந்தவன் என்னும் எண்ணம் தலைதூக்க அலட்சியத்துடன் தன் தலையை ஆட்டி அதை ஏற்றுக் கொண்டான். சற்றும் சம்பிரதாயங்களைக் கடைப்பிடிக்கவே இல்லை. நட்பும் தொனிக்கவில்லை. கிருஷ்ணன் தன் தந்தை வசுதேவருடன் வந்து சேர்ந்தான். அவர்களுடன் பலராமனும் மற்றும் பல யாதவத் தலைவர்களும் வந்திருந்தார்கள். அவர்களை மிகவும் அன்புடனும், மரியாதையுடனும் யுதிஷ்டிரன் வரவேற்றான். அவன் மனதுக்குள் கிருஷ்ணன் பால் நன்றி சுரந்தது. ஏனெனில் எவ்விதமான பெரிய போர்களும் இல்லாமல் பல தேசத்து அரசர்களின் நட்புடன் கூடிய உறவை சாத்தியமாக்கியது கிருஷ்ணன் தானே! இமயமலைப் பிராந்தியத்திலிருந்து ஆரம்பித்து மூன்று பக்கங்களிலும் உள்ள கடல் எல்லை வரை உள்ள நாடுகளைத் தன்னுடன் நட்புப் பாராட்டும்படி செய்தது கிருஷ்ணன் அன்றி வேறு யார்!

ஹஸ்தினாபுரத்திலிருந்து பிதாமகர் பீஷ்மர் வந்து சேர்ந்தார். அவருடன் திருதராஷ்டிரன், அவர்கள் சகோதரன் ஆன மந்திரி விதுரர், மேலும் துரியோதனனும் அவன் சகோதரர்களும் கூட வந்து விட்டார்கள். காந்தாரத்திலிருந்து துரியோதனனின் பாட்டன் ஆன சபல் ராஜாவும் தன் மகன் ஷகுனியுடன் வந்திருந்தான். துரியோதனனை இணை பிரியாத அங்க தேசத்து மன்னன் கர்ணனும், துரோணரின் ஒரே மகன் அஸ்வத்தாமாவும் வந்திருந்தனர். குரு வம்சத்து இளவரசர்கள் அனைவருக்கும் ஆசாரியர்கள் ஆன கிருபாசாரியாரும், துரோணாசாரியாரும் வந்திருந்தனர். ஆகவே யுதிஷ்டிரன் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு பாண்டவர்கள் ஆன தங்கள் ஐவருக்கும், துரியோதனாதியருக்கும் இடையே உள்ள மனக்கசப்பை முற்றிலும் அகற்றி இருபக்கமும் ஓர் ஒத்திசைவான மனப்போக்கை உண்டாக்க வேண்டும் என்று பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தான். ஆகவே முக்கியமான வேலைகளில் தன் குடும்பத்து நபர்களை ஈடுபடுத்தி அவர்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கச் செய்தான்.

பீஷ்மரையும் குரு துரோணரையும் முறைப்படி மரியாதைகள் செய்து அவர்களை கௌரவித்து எல்லாவிதமான ஏற்பாடுகளும் சரியாக வந்திருக்கிறதா என்று அவர்களை மேற்பார்வை பார்க்கச் செய்தான். அஸ்வத்தாமனுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்காக அங்கே வருகை புரிந்திருக்கும் அனைத்து ஸ்ரோத்திரியர்களின் சௌகரியங்களுக்கும் அவனைப் பொறுப்பாக்கி அவர்களைக் கவனிக்கச் செய்தான். துரியோதனன் இப்போது ஹஸ்தினாபுரத்தின் மன்னன் ஆகி விட்டதால் அவனை மற்ற அரசகுல விருந்தினர்களை வரவேற்கவும் அவர்களை உரிய இடங்களில் தங்க வைக்கவும் ஏற்பாடுகள் செய்வித்ததை மேற்பார்வை பார்த்து அவர்களை உபசரிக்கும்படி செய்தான். மேலும் அரசர்கள் கொண்டு வந்து தரும் கணக்கற்ற பரிசுகளை எல்லாம் துரியோதனனே வாங்கிப் பத்திரப்படுத்தும்படியும் கூறி இருந்தான். இதன் மூலம் தான் துரியோதனனை எந்த அளவுக்கு நம்புகிறோம் என்று காட்டிக் கொள்ள வேண்டும் என்பதே யுதிஷ்டிரன் விருப்பம். இதே போல் பரஸ்பரம் அவர்களும் எதிரொலிப்பார்கள் என்று முழு மனதுடன் நம்பினான்.

மற்ற முக்கியமான விருந்தினர்களைக் கவனிக்க துரியோதனனின் தம்பியான துஷ்சாசனனையும், ஹஸ்தினாபுரத்தின் மந்திரியான சஞ்சயனையும் நியமித்தான் யுதிஷ்டிரன். கிருபாசாரியாரை அனைவரும் கொடுக்கும் தங்கக் கட்டிகளையும், நகைகளையும் வாங்கிப் பத்திரப்படுத்தும்படி கூறினான். வந்து சேரும் விலை மதிப்பற்ற பொருட்களைப் பங்கிடும் வேலையை விதுரரைக் கவனிக்கச் செய்தான். கிருஷ்ணன் வந்திருக்கும் ஸ்ரோத்திரியர்கள் அனைவரின் பாதங்களையும் கழுவிப் பாத பூஜை செய்யும் உரிமையைக் கேட்டுப் பெற்றான். அவனையே எல்லோரும் எப்போதும் கவனித்தார்கள். அவன் ஏதேனும் சொன்னாலோ அல்லது ஏதேனும் வாத, விவாதங்களில் பங்கெடுத்தான் என்றாலோ அதையே அவன் சொல்வதை மட்டுமே அனைவரும் கவனித்தார்கள். கிருஷ்ணனால் எல்லாவற்றிலும் வெகு எளிதாகப் பங்கெடுக்கவும் முடிந்தது.

அனைத்தும் சுமுகமாகவும் அருமையாகவும் எளிமையாகவும் நடப்பது கண்டு யுதிஷ்டிரன் மகிழ்ந்தான். ஆனாலும் சில அரசர்களுக்கும், அரச விருந்தினருக்கும் ராஜசூய யாகத்தின் முக்கியத்துவம் குறித்துச் சரியான புரிதல் இல்லாமை கண்டு யுதிஷ்டிரன் மனம் வருந்தவும் செய்தது. ஏனெனில் அவர்களில் சிசுபாலன் முக்கியமானவனாக இருந்தான். அவனுக்கு இது எல்லாம் வேண்டாத வீண் வேலையாகத் தோன்றியது. அவனைத் திருப்தி செய்வதும் கடினமாக இருந்தது. இவ்வளவு வருடங்கள் ஆகியும் அவன் ருக்மிணியின் சுயம்வரத்தின்போது கிருஷ்ணன் ருக்மிணியைத் தூக்கிச் சென்றதையும் அதனால் தான் தன்னால் ருக்மிணியை மணக்க முடியவில்லை என்பதையும் மறக்கவே இல்லை. கிருஷ்ணன் தன் தாய்வழிச் சகோதரன் என்று கூட அவனால் சமாதானம் ஆக முடியவில்லை. கிருஷ்ணனை ஓர் எதிரியாகவே பார்த்தான். இப்போது இங்கே யாகத்துக்கு வந்த அவனைப் பார்த்துக் கிருஷ்ணன் நலம் விசாரித்தும், அவன் கிருஷ்ணனின் விசாரணைகளையோ, வாழ்த்துகளையோ ஏற்கவே இல்லை.

ஜராசந்தனுக்கு மிகவும் நெருக்கமானவனாக இருந்தான் சிசுபாலன். அவனுடைய அளவுக்கு அதிகமான தன்னம்பிக்கையாலும் தற்பெருமை மற்றும் அகந்தையாலும் கிருஷ்ணன் மெல்ல மெல்ல ஆரியவர்த்தத்தில் ஓர் முக்கியமான இடத்தைப் பெற்றிருப்பதைக் கவனிக்கத் தவறி விட்டான். சிசுபாலனின் அகந்தை அவன் கண்களை மறைத்து விட்டது. ஆனால் இப்போது ஜராசந்தன் உயிருடன் இல்லை என்பது நிச்சயம் ஆன பின்னால் இங்கே வந்தால் ஒவ்வொரு விஷயத்திலும் கிருஷ்ணனின் பங்கு எவ்வளவு பெரிதாக இருக்கிறது என்பது சிசுபாலனுக்குத் தெள்ளத் தெளிவாகப் புரிந்தது. அதிலும் மகத தேசத்துக்கு இப்போது அரசனாக இருக்கும் ஜராசந்தன் மகன் சகாதேவனாலும் இன்னும் மற்றச் சில ஆரிய அரசர்களும், பேரரசர்களும் கிருஷ்ணனை ஓர் கடவுளாகவே கொண்டாடுவதைக் கண்டு சிசுபாலனுக்குப் பொறாமை மேலிட்டது.


Saturday, November 5, 2016

கடோத்கஜனின் குதூகலம்!

தம்பி மகன் நம்மைப் புகழ்ந்து பேசுகிறானே என்பதில் யுதிஷ்டிரன் மகிழ்ந்தான். கடோத்கஜன் மேலும் தொடர்ந்தான். “ஆம், இதோ இந்தச் சிற்றப்பா தான் என்னை இந்தக் கிரீடத்தை அணிந்து வரும்படி வற்புறுத்தினார். ஏனெனில் உங்களுக்கெல்லாம் தலை நிறைய மயிர் இருக்கிறது. எனக்கோ வழுக்கையாக அன்றோ உள்ளது. ஒருவேளை இதையே என்னுடைய கிரீடமாக நீங்கள் அனைவரும் எண்ணிக் கொண்டு நான் இந்தக் கிரீடத்தோடு பிறந்ததாகவும் நினைத்துக் கொண்டீர்களானால்?” என்று சொன்னவன் தன்னுடைய நகைச்சுவையை எண்ணித் தானே சிரித்துக் கொண்டான். பீமன் அதை அப்படியே ஆரியர்களின் மொழியில் மொழி பெயர்க்க அனைவரும் உண்மையிலேயே சிரித்தனர். அப்போது வேத வியாசர் கடோத்கஜனிடம் அவனுடைய தாய்மொழியிலேயே பேசத் துவங்கினார். கடோத்கஜனுக்கு ஆச்சரியம் மேலிட்டது.

“குழந்தாய், நீ இங்கே இப்போது வந்திருப்பதில் எனக்கு மிகவும் சந்தோஷம்! நான் உன்னைக் கடைசியாகப் பார்த்தபோது நீ சிறு குழந்தையாக இருந்தாய். என் மடியில் படுத்துக் கொண்டு தேன் கலந்த பாலை அருந்திக் கொண்டிருந்தாய். உனக்கு என்னுடைய ஆசிகள்!” என்று ஆரீவதித்தார். அவன் முதுகில் தன் கைகளால் தட்டிக் கொடுத்துத் தன் மகிழ்வைத் தெரிவித்துக் கொண்டார். கடோத்கஜன் தன்னுடைய கிரீடத்தைத் தகப்பன் பீமனிடம் கொடுத்துவிட்டு ஆசாரியரை நமஸ்கரித்தான். பீமன் இப்போது அவன் நமஸ்கரிப்பதற்கும், பின் மீண்டும் எழுவதற்கும் அருகில் இருந்து உதவினான். “அது சரி குழந்தாய்! நீ கடல் தாண்டி ராக்ஷஸர்களின் நாட்டூக்குச் சென்று அவர்களை உன்னுடைய நட்பினால் வெல்லப் போவதாகச் சொல்லிக் கொண்டிருந்தாய் அல்லவா? அங்கே எல்லாம் வெற்றிகரமாக முடிந்ததா? நீ எவ்வாறு உன் வேலைகளை முடித்துக் கொண்டாய்?” என்று வியாசர் அவனிடம் கேட்டார்.

கடோத்கஜனுக்கு இந்த முனிவரை மிகவும் பிடித்தது. “ஓ, அதுவா, இதோ இந்தச் சிற்றப்பா!” என்று சஹாதேவனைச் சுட்டிக் காட்டிய வண்ணம் ஆரம்பித்தான். “இவர் என்னை இலங்கைக்கு அனுப்பி அங்குள்ள ராக்ஷசர்களோடு நட்புப் பாராட்டச் சொன்னார். நானும் போனேன்; அவர்களிடம் என்னுடைய தந்தை எவ்வளவு பலவான், சக்தி வாய்ந்தவர் என்றெல்லாம் எடுத்துச் சொன்னேன். என் பெரியப்பா மிகவும் சாத்விகமான முறையில் இந்திரப் பிரஸ்தத்தையும் சுற்றி உள்ள நாடுகளையும் ஆண்டு வருவதையும் சொன்னேன்.” பின்னர் சஹாதேவனை விசித்திரமான ஒரு பார்வை பார்த்தான். “இந்தச் சிற்றப்பா எனக்கு நன்கு பாடங்கள் கற்றுக் கொடுத்திருந்தார். அதன்படியே நானும் நடந்து கொண்டேன். அந்த அரசனும் எனக்குப் பரிசுகள் பல வழங்கினான். அவற்றில் குட்டி யானைகள். தந்தங்கள், இன்னும் என்னென்னவோ! எனக்குப் பலவற்றின் பெயரே நினைவில் இல்லை! மறந்து விட்டேன்.” என்றான்.

சற்று நேரத்தில் அங்கிருந்த மூத்தோர் அனைவரும் வெளியேறினார்கள். பீமன் மட்டும் இருந்தான். கடோத்கஜன் மட்டுமே அனைவரின் கவனத்துக்குப் பாத்திரமாக இருந்தான். அங்குள்ள இளைஞர்களிடையே இந்த இளைய ராக்ஷசன் ஓர் ஈர்ப்பையும் ஈடுபாட்டையும் ஏற்படுத்தி இருந்தான். அதிலும் பாண்டவர்களின் புத்திரர்களான உப பாண்டவர்கள் கடோத்கஜனைச் சுற்றிக் கொண்டனர். பீமனையும் சூழ்ந்து கொண்டனர். “இந்த சகோதரனைக் குறித்துத் தான் நீங்கள் சொல்வீர்களா?” என்று கேட்டனர். “ஆம், ஆம், இவனே தான்!” என்றான் பீமன். கடோத்கஜனைப் பார்த்து ராக்ஷசர்களின் மொழியில், “இவர்கள் ஐவரும் உன் சகோதரர்கள்!” என்றான். “எல்லோருமேவா?” என்று வியந்தான் கடோத்கஜன். “என்ன இவ்வளவு சிறுவர்களாகச் சின்ன உடலோடு இருக்கின்றனரே!” என்றவண்ணம் நாக்கைச் சொடுக்கிக் கொண்டு அவர்களைப் பார்த்தான். அவனோடு ஒப்பிடுகையில் அவர்கள் ஐவரும் சிறிய பொம்மைகளைப் போல் தோற்றம் காட்டினார்கள். இந்த ஐந்து பொம்மைகளும் என் சகோதரர்களா என்று வியந்த கடோத்கஜன் சிரிக்க ஆரம்பித்தான்.

பீமன் அவனை அந்தப்புரத்திற்குள் அழைத்துச் சென்றான். திரௌபதிக்கும், ஜாலந்திராவுக்கும் அவனை அறிமுகப்படுத்தி கடோத்கஜனிடம், “இவர்கள் இருவரும் உன் தாய்மார்!” என்றும் கூறினான். “என்ன? என்னுடைய தாய்மாரா? ஹாஹாஹா, எவ்வளவு சிறிய தாய்மார்கள்? குட்டியான தாய்மார்கள். எனக்கு என்னுடைய தாய் ஒருத்தி ஏற்கெனவே உண்டு. “ என்று தன் விரல்களால் எண்ணியவன், “அவள் முதல் தாய்! இதோ இந்தத் தாய் இரண்டாவது. அதோ அந்தத் தாய் மூன்றாவது. மற்றும் இங்கிருக்கும் பெண்கள் அனைவருமே எனக்குத் தாய்மார்கள் தானா?” என்று கேட்டுக் கொண்டே பெருங்குரலில் சிரித்தான். அவனுக்கு இன்று எதைப் பார்த்தாலும் நகைப்பாக இருந்தது. “ரொம்பச் சிரிக்காதே, மகனே! எங்காவது வெடித்து விடப் போகிறாய்!” என்ற வண்ணம் அவன் முதுகில் தட்டினான் பீமன்.

“ஆஹா, தந்தையே, இங்கிருக்கும் நேரம் முழுவதும் நான் சிரித்துக் கொண்டே தான் இருப்பேன்; அப்படித் தான் இருக்கவேண்டும் போல் இருக்கிறது!” என்றான் கடோத்கஜன். “அது சரி, இப்போதைக்கு உனக்கு மூன்று தாய்மார்கள் போதும் என நினைக்கிறேன்.” என்று பீமனும் கடோத்கஜனுடைய சிரிப்பில் கலந்து கொண்டே சொன்னான். பின்னர் அவனை அரண்மனையின் மற்றொரு பாகத்துக்கு அழைத்துச் சென்றான் பீமன். அங்கே தான் இளவரசர்கள் ஐவரும் படுத்து உறங்குவார்கள். அப்போது அவர்கள் அங்கே படுக்க ஆயத்தம் செய்து கொண்டிருந்தனர். கடோத்கஜனைப் பார்த்ததும், “இவனும் எங்களுடன் தூங்கப் போகிறானா? நாங்கள் அயர்ந்து தூங்குகையில் இவனுக்குப் பசி எடுத்து எங்களைச் சாப்பிட்டு விடப் போகிறான்!” என்று சுத்ரசோமா என்னும் மகன் கூறினான்.

அதைக் கேட்ட பீமன், “கடோத்கஜா! இவர்கள் என்ன கேட்கிறார்கள் தெரியுமா? அவர்கள் தூங்குகையில் உனக்குப் பசி வந்துவிட்டால் இவர்களைத் தின்று விடுவாயா என்று கேட்கின்றனர்!” என்றான். கடோத்கஜன் சிரித்தான். “அம்மா சொல்லி அனுப்பி இருக்கிறாள். மனிதர்களைத் தின்னாதே என்று! நானும் அதற்குக் கீழ்ப்படிந்தேன். தந்தையும் சொல்கிறார். மனிதர்களைத் தின்னாதே என! அதையும் அப்படியே கீழ்ப்படிந்து கேட்கிறேன். ஆனால் நான் இங்கே என் சகோதரர்களுடன் இந்தப் படுக்கையில் படுத்து  உறங்க விரும்பவில்லை. என் வழக்கம்போல் நான் மரத்தின் மேலேறியே தூங்குகிறேன்.” என்றான்.

“அது சரி, உனக்கு எது சரி என்று தோன்றுகிறதோ அப்படியே செய்!” என்றான் பீமன். பின்னர் மற்ற சகோதர்களைப் பார்த்து, “கடோத்கஜன் மிகவும் இரக்க குணம் உள்ள பிள்ளை. அன்பானவன். ஆனால் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நம்முடைய ஆரியப் பழக்க வழக்கங்கள் ஏதும் அவனுக்குத் தெரியாது!” என்றான். சற்று நேரத்தில் பீமன் வந்து கடோத்கஜனுக்கு எல்லாம் சௌகரியமாக இருக்கிறதா என்று பார்க்க வந்தான். தந்தையைப் பார்த்த கடோத்கஜன் மரத்திலிருந்து கீழே குதித்தான். “தந்தையே, அம்மா நான் உங்களைத் தனியே சந்திக்கையில் சொல்வதற்கென ஓர் முக்கியமான செய்தியை அனுப்பி இருக்கிறாள்.” என்றான். “சரி, வா, நாம் இருவரும் கொஞ்சம் தனியே சென்று பேசுவோம்.” என்று பீமன் கடோத்கஜனை அழைத்துச் சென்றான். அவர்கள் இருவரும் இப்போது மற்றவர்களிடமிருந்து தனியே வந்துவிட்டார்கள். தந்தையின் காதுகளில் கிசுகிசுத்தான் கடோத்கஜன்.

“தந்தையே, உங்களுக்கு எதிரிகள் யாரானும் உண்டா?” இப்போது பீமன் கட்டுக்கடங்காமல் சிரித்தவண்ணம், “எனக்கு எங்கே பார்த்தாலும் எதிரிகள் தான்!” என்றான். “அவர்கள் யாரென எனக்குக் காட்டுங்கள்!” என்றான் கடோத்கஜன். “ஹா, என் எதிரிகளைத் தெரிந்து வைத்துக் கொண்டு நீ என்ன செய்யப் போகிறாய் மகனே! உனக்கு ஏன் அவர்களைக் குறித்து அறிய வேண்டும்? என் நண்பர்களைக் குறித்து அறிந்து கொள்!” என்றான் பீமன். “ம்ஹூம், அதெல்லாம் இல்லை தந்தையே! அம்மா உங்கள் எதிரிகளைத் தெரிந்து வைத்துக் கொண்டு என்னை அவர்கள் அனைவரையும் கொல்லச் சொல்லி இருக்கிறாள். தாய் சொல்லை நான் தட்ட முடியாது அல்லவா? ஆகவே உங்கள் எதிரிகளைக் காட்டுங்கள்.” என்றான் கடோத்கஜன்.

“அடக் கடவுளே!” என்றுகூவினான் பீமன். ம்ம்ம்ம் இது ஒரு சோகமயமானதாக இருக்கும். இந்த இளைய ராக்ஷசன் மட்டும் என்னுடைய அனைத்து எதிரிகளையும் ஒவ்வொருவரையும் மிச்சம் மீதி வைக்காமல் கொன்றுவிட்டான் எனில்! தன் மகனைத் தட்டிக் கொடுத்து ஆசுவாசம் செய்தான் பீமன். “மகனே, என் எதிரிகளைக் குறித்துக் கவலைப்படாதே! பிரதிவிந்தியனும் சுத்ரசோமனும் எப்போதும் உனக்கு உதவுவதற்குக் காத்திருப்பார்கள். ஆகவே நீ எதற்கும் கவலைப்படாதே!”

“ஆனால் தந்தையே, அம்மா சொல்லி விட்டாள். நான் அதைக் கேட்டே ஆகவேண்டும். உங்கள் எதிரிகளை ஒழிக்கும்படி சொல்லி அனுப்பி இருக்கிறாள் அம்மா! அவர்களை நான் கொல்ல வேண்டும்!”

“ஆஹா, நீ சற்று நேரத்துக்கு முன்னர் என்ன சொன்னாய்? இங்கே இருக்கும்வரை தந்தையின் பேச்சைத் தான் கேட்க வேண்டும் என்றாய் அல்லவா? ஆகவே நீ இப்போது நான் சொல்வதை மட்டுமே கேட்க வேண்டும்!” என்றான் பீமன். “நீங்கள் அப்படிச் சொன்னால் சரி தந்தையே! உங்கள் சொற்படியே நடந்து கொள்கிறேன். இப்போது நான் மரத்தின் மேலேறிக் கொஞ்ச நேரம் தூங்குகிறேன்.” என்ற வண்ணம் மரத்தின் மேல் ஏறினான்.

Friday, November 4, 2016

கடோத்கஜனுக்கு வரவேற்பு!

அந்த உருவம் ரதத்திலிருந்து வேகமாகக் குதித்து அங்குமிங்கும் எவரையோ தேடிற்று. வேறு யார்! பீமனைத் தான்! ஆம் அவன் மகன் கடோத்கஜன் தான் சஹாதேவனுடன் வந்திருந்தது. எனினும் இங்கு எவரும் அவனைப் பார்த்தது இல்லையே! கடோத்கஜன் கீழே குதித்ததும் தன் தகப்பனைத் தான் தேடினான். அவன் மிகச் சிறு குழந்தையாக இருந்தபோதே அவன் தந்தை அவன் தாயையும், அவனையும் விட்டுப் பிரிந்து சென்றிருந்தார். எனினும் அவன் தாய் ஹிடும்பி அவன் தந்தை பீமனைக் குறித்து மிக அருமையாக விவரணையுடன் வர்ணனைகள் செய்திருந்தாள். ராக்ஷஸ வர்த்தத்தின் அனைத்து ராக்ஷசர்களையும் தன் வீர, தீரச் செயல்களால் வென்ற வல்லமை பொருந்திய அரசன் வ்ருகோதரன் குறித்து ஹிடும்பி தன் மகன் கடோத்கஜனுக்கு எடுத்துச் சொல்லி இருந்தாள். அவள் அன்பை அவன் எவ்வாறு பெற்றான் என்பதையும் வர்ணித்திருந்தாள். இதோ தந்தை!

ஆம், கடோத்கஜன் பீமனைக் கண்டு பிடித்து விட்டான். அங்கிருந்தவர்களிலேயே அவன் ஒருவன் தான் ஹிடும்பியின் வர்ணனையோடு ஒத்துப் போனான். தந்தையை விபரம் தெரிந்த நாளில் இருந்து இப்போது தான் முதன் முறையாகப் பார்க்கிறான் கடோத்கஜன். ஆகவே அவனுக்கு வழியில் சஹாதேவன் சொல்லிக் கொடுத்திருந்த ஆரியர்களின் சம்பிரதாயமான வரவேற்புக்களும் அதற்குத் தான் நடந்து கொள்ள வேண்டிய முறையும் சற்றும் நினைவில் வரவில்லை. இத்தனைக்கும் அன்கே கூடியிருந்த விருந்தினர்களில் பலரும் மிகப் பெரிய பதவிகளில் இருக்கிறவர்கள்! மகாப் பெரியதொரு சபையின் முன்னே அவர்கள் கூடி இருந்தனர்.  அங்கிருந்த ஸ்ரோத்திரியர்கள் தங்கள் கைகளில் பூரண கலசம் வைத்துக் கொண்டு சஹாதேவனுக்கூ வரவேற்புக் கூறும் விதமாக மந்திரங்களை ஓதிக் கொண்டு இருந்தார்கள். இவ்வளவுக்கும் நடுவில் தன் தகப்பனைக் கண்டதுமே கடோத்கஜன், வெறி பிடித்த முரட்டுக்காளையைப் போல் ஓடோடிச் சென்று தன் தந்தையின் கால்களில் விழுந்தான். விழும்போதே, “தந்தையே, தந்தையே!” என்று பெருங்குரலில் கத்தினான். அவனே பீமனின் ஒரு காலைத் தூக்கித் தன் தலையிலும் வைத்துக் கொண்டான். அப்போது ஏற்பட்ட தடுமாற்றத்தில் பீமன் கீழே விழாமல் இருந்ததே பெரிய ஆச்சரியம்.

அனைவருமே அதிர்ச்சி கலந்த அச்சத்துடன் இதைப் பார்த்தார்கள், ஓர் விசித்திரமான உருவம் வந்ததோடு அல்லாமல் சற்றும் சாஸ்திர, சம்பிரதாயங்களை மதிக்காமலும் நடந்து கொள்கிறதே! அர்ஜுனன் தன் வில்லையும் அம்பையும் எடுத்தான். கடோத்கஜனை நோக்கிக் குறி பார்த்தான். அவன் மட்டும் ஏதேனும் கொலை நோக்கத்தோடு வந்திருந்தால் அர்ஜுனனின் அம்பு குறி தவறாமல் அவன் மார்பைப் பிளக்கும்! ஆனால் இது என்ன? பீமன் வந்திருக்கும் புதிய விசித்திரமான மிருகத்தைத் தூக்கி நிறுத்தித் தன் தோள்களில் சார்த்திக் கொண்டு தட்டிக் கொடுத்து ஆசுவாசப் படுத்துகிறானே! “தந்தையே, தந்தையே!” என்று புலம்பினான் கடோத்கஜன் மீண்டும். ஆனால் அவன் ஆரியர்களின் மொழியில் பேசாமல் ராக்ஷசர்களின் மொழியில் பேசியதால் மற்றவர்களுக்குப் புரியவில்லை!

“எப்படி என்னை அடையாளம் கண்டு கொண்டாய், மகனே!” என்று வினவினான் பீமன். அவனும் ராக்ஷசர்களின் மொழியிலேயே பேசினான். “தந்தையே, என் அம்மா உங்களை வர்ணித்த மாதிரியே இருக்கிறீர்கள் நீங்கள்! ஆகவே உங்களை அடையாளம் காண்பது சிரமமாக இல்லை! அதோடு அவள் என்னிடம் உங்கள் காலைத் தூக்கி என் தலையின் மேல் வைத்து ஆசிகளை வாங்கும்படி சொல்லி அனுப்பி இருக்கிறாள்.” என்றும் சொன்னான் கடோத்கஜன். பீமன் அப்போது யுதிஷ்டிரனைச் சுட்டிக்காட்டி, “கடோத்கஜா! உன் பெரியப்பாவின் கால்களில் விழுந்து வணங்கு!” என்றான். கடோத்கஜனுக்கோ அதில் சம்மதம் இல்லை! “ஹூம், தந்தையே, அம்மா உங்கள் கால்களில் தான் விழுந்து வணங்கச் சொன்னாள். இவர் கால்களில் எல்லாம் விழும்படி சொல்லி அனுப்பவில்லை. அதோடு அவர் என்ன இத்தனை சிறிய உருவமாக இருக்கிறார்! ஹூம்! பூச்சியைப் போல் இருக்கிறார்!” என்றான் அரை மனதோடு.

“நீ முதலில் அவர் கால்களில் விழுந்து வணங்கி ஆசிகளைப் பெற்றுக்கொள்!” என்று கண்டிப்புடன் சொன்னான் பீமன். கடோத்கஜன் தன் தோள்களைக் குலுக்கிக் கொண்டான். மீண்டும் அரை மனதாக, “சரி, சரி, அப்படியே செய்கிறேன்!” என்றான். அப்போது அந்தக் கூட்டத்தில் எங்கும் நிசப்தம். மக்கள் கீழே குனிந்து தங்கள் கைகளை மடக்கிக் கொண்டு வழி ஏற்படுத்திக் கொடுத்தனர். சிலர் கைகளைக் கூப்பிக் கொண்டனர். அதைப் பார்த்த பீமன் கடோத்கஜனையும் தன் கைகளைக் கூப்பிக் கொள்ளும்படி கூறினான். ஆனால் அந்த இளம் ராக்ஷசனுக்கு அதெல்லாம் பழக்கமே இல்லை. எப்படிக் கைகளைக் கூப்புவது என்றே புரியவில்லை அவனுக்கு. பீமன் அவன் கைகளைப் பிடித்துக் கொண்டு கூப்பிக்கொள்ளுமாறு செய்ய வைத்தான். கூட்டம் ஆரவாரித்தது. அதைக் கண்ட கடோத்கஜன், “என்ன விஷயம்?” என்று கேட்க, பீமன், “முனிவர் வருகிறார்.ஆசாரிய வேத வியாசர்! அவரை வரவேற்க வேண்டும். நீ அவருக்கு உன் மரியாதைகளைத் தெரிவிக்க வேண்டும்!” என்றான் பீமன்.

‘ஆனால், தந்தையே, அம்மா சொல்லி இருப்பது என்னவென்றால் நீங்கள் ஒருவரே இவ்வுலகத்தில் மிகப் பெரிய மனிதர், எல்லாவகையிலும் என்பதே! எனக்கு அப்படித் தான் புரிய வைத்திருக்கிறாள்!” என்றான் கடோத்கஜன். “நான் உன் அம்மாவோடு ஒத்துப் போகிறேன். ஆனால் இந்த மக்களை எல்லாம் நம்மால் அப்படி ஒத்துக்கொள்ள வைக்க முடியாது!” என்று பரிவுடன் மகனிடம் சொன்னான் பீமன். அப்போது அங்கே வந்த வியாசரைப் பார்த்ததுமே கடோத்கஜனுக்குப் புரிந்து விட்டது. இவரைத் தானே தன் தாய் சொல்லி இருந்தாள். அவன் தந்தை பீமனை ராக்ஷசவர்த்தத்திலிருந்து அழைத்துச் சென்றது இந்த முனிவர் தான் என்று அவன் தாய் ஹிடும்பி கடோத்கஜனிடம் சொல்லி இருந்தாள். ஆகவே அவர் தான் இது! என்று புரிந்து கொண்டான் கடோத்கஜன்.  அவன் எண்ணப் போக்குப் புரியாத பீமன் கடோத்கஜனை வியாசர் கால்களில் விழுந்து வணங்கும்படி சொல்ல கடோத்கஜன் மறுத்தான். “அம்மா சொன்னது சரியாகத் தான் இருக்கிறது! அம்மா எப்போதுமே தப்பாகச் சொல்ல மாட்டாள்!” என்று முணுமுணுத்துக் கொண்டான்.

பீமனோ விடாமல் அவன் முதுகில் தட்டி, “முனிவர் கால்களில் விழுந்து வணங்கு!” என்று மீண்டும் மீண்டும் கூறினான். “சரி, சரி!” என்று அரை மனதாகக் கூறிய கடோத்கஜன், “அம்மா, இதெல்லாம் வேண்டாம் என்று சொல்லி அனுப்பி இருக்கிறாள். ஆனால் தந்தையோ இதைச் செய் என்கிறார்! நான் என்ன செய்வேன்? இப்போது இங்கே தந்தை மட்டுமே இருக்கிறார். அம்மா இல்லை! ஆகவே தந்தை சொல்வதைக் கேட்டே ஆக வேண்டும்.” என்று கூறிக் கொண்டான். மிக முயற்சி செய்து வியாசரின் கால்களில் விழுந்து வணங்க முற்பட்டான். இம்மாதிரியான சம்பிரதாயமான வேலைகளே சிறிதும் தெரியாத காரணத்தால் அவன் பெரிய உடலைத் தூக்கிக் கொண்டு முன்னோக்கிக் குனிந்து வணங்க முற்படுகையில் தடுமாறிக் குப்புற அப்படியே விழுந்தான். அவன் தலைக்கிரீடம் தலையிலிருந்து கீழே விழுந்து விட்டது. அதைப் பார்த்த கடோத்கஜனுக்கே சிரிப்பு வர ராக்ஷசச் சிரிப்புச் சிரித்த வண்ணம் கிரீடத்தைப் பிடிக்க முயன்றான். அவன் சிரிப்பதைப் பார்த்த அனைவருக்கும் அந்தச் சிரிப்புத் தொற்றிக் கொள்ள அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்.

யுதிஷ்டிரன் தன் வாழ்நாளிலேயே முதல் முறையாக ஓர் சிறு பிள்ளையைப் போலச் சிரித்துக் குதூகலித்தான். அந்தக் கிரீடத்தைப் பிடித்து முழுதும் வழுக்கையாகக் காட்சி தந்த கடோத்கஜனின் தலை மேல் வைக்க முயன்றான். இப்படி ஓர் விசித்திரமான உருவத்தைத் தனக்கு உறவாகக் கொடுத்திருக்கும் கடவுளின் அற்புதத்தை எண்ணி வியந்தான். சிரித்துக் கொண்டே இருந்த கடோத்கஜனோ தன் தந்தையின் பக்கம் திரும்பி ராக்ஷச மொழியில் பேச ஆரம்பித்தான். “அதோ, அந்த மனிதர்!” சகாதேவனைச் சுட்டிக் காட்டிய கடோத்கஜன், “பெரியப்பாவா, சிற்றப்பாவா? அவரை உங்கள் மொழியில் நான் என்னவென அழைப்பது? அவர் தான் இந்தக் க்ரீடத்தை அணிந்து கொள்ளுமாறு என்னை வற்புறுத்தினார். ஏனெனில் நான் வ்ருகோதர அரசனின் புத்திரனாம்! இப்போது அம்மா மட்டும் இங்கே இருந்திருந்தாள் எனில் இதைத் தூக்கி எறியச் சொல்லி இருப்பாள். ஆனால் இங்கே எல்லோருமே என்னைக் “கீழ்ப்படி” என்று சொல்வதால் இந்த கடோத்கஜனும் கீழ்ப்படிகிறான்.” என்றான். பீமன் மற்றவர்களுக்காக அதை மொழி பெயர்த்துச் சொன்னான்.

யுதிஷ்டிரன் பீமனிடம் சொன்னான். “கடோத்கஜன் கிரீடத்தை அணிய வேண்டாம். நாம் அவனுக்காகப் புதியதாய் ஒன்றைச் செய்து தருவோம்.” என்றான். இதை கடோத்கஜனிடம் மொழி பெயர்த்தான் பீமன். “அதோ அந்தச் சிற்றப்பாவை விட இந்தப் பெரியப்பா சொல்லி இருப்பது மிகவும் அறிவுபூர்வமாக இருக்கிறது!” என்று சகாதேவனைச் சுட்டிக் காட்டிச் சொன்னான். யுதிஷ்டிரனுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

Thursday, November 3, 2016

சஹாதேவனுடன் வந்த விருந்தாளி!

திட்டங்கள் அனைத்தும் முழுமையாகப் போடப்பட்டன. எல்லாம் தயார் நிலையில் இருந்தன. அப்போது கிருஷ்ணன் பாண்டவர்களிடம் விடைபெற்றுக்கொண்டு துவாரகை திரும்பினான். ஜராசந்தன் முற்றிலும் அழித்து ஒழிக்கப்பட்ட செய்தியை யாதவர்களிடம் தெரிவிக்க வேண்டும் என்னும் ஆவல் அவனிடம் மிகுந்திருந்தது. ஜராசந்தனை ஒழித்த பின்னர் அதிகாரத்தின் பலம் இப்போது இருக்குமிடத்தில் கொஞ்சம் வேறுபாடுகள் இருந்தன. முன்னிருந்ததைப் போல் இல்லை. அதிலும் ஜராசந்தனை உதவிக்கு எதிர்பார்த்திருந்தவர்கள் இப்போது உதவிக்கு ஆளின்றி என்ன செய்வது எனப் புரியாமல் திகைத்தனர். ஆரியவர்த்தத்திலேயே பாண்டவர்களின் நிலையும் அதிகாரமும் ஆட்சி செலுத்தும் பாங்கும் எவராலும் போட்டியிட முடியாத அளவுக்கு வலிமை பெற்றிருந்தது. அதோடு அவர்கள் ஏற்கெனவே வல்லமை பொருந்திய சக்கரவர்த்தியாக இருந்த பாஞ்சால தேசத்து துருபதனுடனும் காசி, மத்ரா போன்ற நாட்டினருடனும் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்கள். துவாரகையின் யாதவர்களோ எப்போதுமே பாண்டவர் பக்கம் தான் என்பது தீர்மானம் ஆகிவிட்டது.

எல்லாவற்றிற்கும் மேலே அனைவராலும் போற்றி வணங்கப்பட்ட வேத வியாசரின் ஆசிகளும் உதவியும் பாண்டவர் பக்கமே காணப்பட்டது. இது எல்லாம் போதாது என்பது போல நடமாடும் கடவுளாகவே வர்ணிக்கப்பட்ட யாதவ குல வாசுதேவக் கிருஷ்ணனோ தன்னுடைய மகிமையால் பாண்டவர்களை எவராலும் வெல்ல முடியாதவர்களாக ஆக்கி இருந்தான். யுதிஷ்டிரன் இந்திரப் பிரஸ்தத்திலேயே இருக்க மற்ற சகோதரர்கள் நால்வரும் அவரவருக்கென தனியாக உள்ள படைகளுடன் அண்டை நாடுகளுக்குச் சென்று அந்த அரசர்களின் உதவியையும் நாடி, அவரைத் தங்கள் பக்கமும் சேர்த்துக் கொண்டு, ராஜசூய யாகத்தில் கலந்து கொள்ளும்படியும் முறையான அழைப்பை யுதிஷ்டிரன் சார்பில் கொடுக்கக் கிளம்பினார்கள். அவர்கள் அனைவரும் நட்பு முறையிலே யுதிஷ்டிரனின் அழைப்பை ஏற்றுக் கொண்டு ராஜசூய யாகத்தில் கலந்து கொள்வதாகச் சொன்னால் யுதிஷ்டிரனால் அனுப்பப்பட்ட பரிசுகள் அவர்களுக்கு அளிக்கப்பட்டு அவர்களால் அங்கீகரிக்கப்படும். அப்படி ஒரு வேளை அவர்களுக்கு இவற்றை ஏற்பதில் தயக்கம் இருந்தால் அதை முறியடிக்கும் திறன் அந்தப் படைவீரர்களிடம் இருந்தது. அவர்களே முடிவெடுத்துவிடுவார்கள்.

உண்மையில் அனைத்து அண்டை நாட்டு அரசர்களும் யுதிஷ்டிரனின் நட்பு அழைப்பை ஏற்கவே செய்தார்கள். ஆங்காங்கே ஒரு சிலர் மட்டும் போரிட்டுப் பார்த்துத் தோல்வி அடைந்து பின்னர் மனம் மாறினார்கள். இன்னும் சில அரசர்கள் காருஷ நாட்டு தந்தவக்கிரன் மற்றும் பிரகியோதிஷ நாட்டின் பகதத்தன் ஆகியோர் மிகக் கடுமையாகப் போரிட்ட பின்னரே யுதிஷ்டிரனின் நட்பை அங்கீகரித்தார்கள். அரசர்களுடன் மோதல்கள் ஏற்பட்டுவிடுமோ என்று யுதிஷ்டிரன் அஞ்சியது இப்போது ஒன்றும் இல்லை என்றாகி விட்டது. ராஜசூய யாகம் மிகவும் நல்ல முறையில் அனைத்து அரசர்களும் நட்புரீதியில் வந்து கலந்து கொண்டு சிறப்பிக்கும்படி நடக்கும் என்பது இப்போது யுதிஷ்டிரனுக்கு நிச்சயம் ஆனது. இதில் அவன் மனம் மகிழ்ந்தான். தர்மம் சிறக்கும் என்றும் தர்மத்தின் பாதையில் தான் செல்வது அனைவருக்கும் மகிழ்வைத் தரும் என்றும் உணர்ந்தான்.

தன்னுடைய சக்தி முழுதும் செலவழித்துத் தன் மக்களை நேர்மையான பாதையில் வாழும்படி கற்றுக்கொடுக்க முயற்சித்தான் யுதிஷ்டிரன். அனைவருக்கும் சமமான நீதி, பெருந்தன்மையான போக்கு, அனைவருக்கும் கேட்டதைக் கொடுக்கும் இயல்பு இவை அனைத்தும் யுதிஷ்டிரனிடம் இயல்பாகவே வாய்த்திருந்தது. ஏழைகளிடமும் இல்லாதவர்களிடமும் அன்பு சுரந்தது. அவனுடைய நேர்மையான, நீதி நெறி தவறாத ஆட்சியின் விளைவாக அவன் நாடு எல்லாவிதமான வளங்களையும் பெற்றுச் செழித்தது. மாதம் மும்மாரி பெய்தது. எங்கும் வறட்சி என்பதே இல்லை. அதே போல் அதீத வெள்ளம், புயல் போன்ற இயற்கைச் சீற்றங்களும் இல்லை. இயல்பான மழைப்பொழிவால் வயல்கள் நல்ல நீர் வளம் பெற்று விளைச்சல் அதிக அளவில் காணப்பட்டது. அனைவரும் முழுமையாக அனைத்தையும் கற்றுத் தெளிதலில் ஈடுபட்டனர். குருகுலங்கள் தழைத்தோங்கின. முக்கியமாக மிருகங்களின் தாய் எனக் கருதப்படும் பசுக்களும், மனிதர்களின் தாய் எனப்படும் பெண்மக்களும் சிறந்து பாதுகாப்புடன் விளங்க அனைத்து ஏற்பாடுகளும் செய்யபப்ட்டன. பெண்கள் மரியாதையுடனும் கவனத்துடனும் நடத்தப்பட்டார்கள். அவர்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. யுதிஷ்டிரனின் இந்த உதார குணத்தாலும் தர்மத்தின் பாதையில் நடப்பதாலும் அனைவராலும் தர்மபுத்திரன் என்றே அழைக்கப்பட்டான். ஒரு சிலர் இவன் தான் தர்மராஜாவின் மறு அவதாரம். இவன் தர்மராஜாவே தான் என்றும் சத்தியம் செய்தனர்.

வேத வியாசரின் அறிவுரைப்படி அவரின் சீடர்களில் சிலர் யுதிஷ்டிரன் சார்பாக ராஜசூய யாகத்துக்கு அக்கம்பக்கம் உள்ள ஆசிரமங்களின் ஸ்ரோத்திரியர்களையும், மாணாக்கர்களையும் சென்று அழைத்தனர். அனைவருக்கும் வியாசர் தன் ஆசிகளைத் தெரிவிப்பதாகவும் சொல்லி இருந்தார். மேலும் இந்த யாகத்தில் “பிரமனாக” வேத வியாசரே அமர்ந்து நடத்தப் போவதாகவும் தெரிவிக்கப்பட்டது. இதைத் தவிர வேறெதுவும் இந்தச் சூழ்நிலைக்குப் பொருந்தி வராது என்றே அனைவரும் பேசிக் கொண்டனர். ஆகவே இதில் சிறப்பாகத் தேர்ச்சி பெற்றிருந்த ஆசாரியர்கள் அனைவரும் சந்தோஷம் அடைந்தனர். யாகம் நடைபெறுவதில் ஆர்வம் கொண்டனர். ஆசாரியர் வேத வியாசரின் மூலம் தங்கள் கஷ்டங்கள் அனைத்துக்கும் ஓர் விடிவு ஏற்படும் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தனர்.

காண்டவ வனத்தை ஆக்கிரமித்திருந்த அசுரன் மயன் அது எரிக்கப்பட்ட போது கிருஷ்ணனைச் சரண் அடைந்திருந்தான். அவன் இப்போது ராஜசூய யாகம் நடைபெறுவதற்கான சபாமண்டபத்தைக் கிருஷ்ணனின் ஆக்ஞையின் பேரில் கட்டிக் கொடுத்திருந்தான். யுதிஷ்டிரனுக்காக அவன் கட்டி இருந்த அந்த சபாமண்டபம் மூவுலகிலும் காண்பதற்கு அரியதாக மிகச் சிறப்பாக அமைந்திருந்தது. அதைக் கண்டோர் இதைப் போல் பார்த்ததே இல்லை என்றே பேசிக் கொண்டார்கள். விரைவில் மற்ற நாடுகளுக்கு திக்விஜயம் சென்றிருந்த சகோதரர்கள் நால்வரும் நாடு திரும்ப ஆரம்பித்தனர். அவர்கள் தங்களுடன் தங்கக் கட்டிகள், நவரத்தினங்கள், வெள்ளிக்கட்டிகள், பசுக்கள், யானைகள், குதிரைகள் என்று பல்வேறு விதமான பரிசுகளைத் தாங்கள் வென்று வந்த நாடுகளின் சார்பாகப் பெற்று வந்தனர். அர்ஜுனன் தன் படைகளுடன் இமயமலைப்பகுதிக்குச் சென்றிருந்தான். அங்கே அவன் மிகவும் உள்ளே சென்றுவிட்டான். வடக்கே மானசரோவர் ஏரி வரை சென்று விட்டான். நகுலன் மேற்கே சென்றிருந்தவன் அங்கே கடற்கரை ஓரம் ஆண்டு வந்த மிலேச்ச நாட்டு அரசர்களைக் கூட வென்று பரிசுகளை எடுத்து வந்தான்.

பீமன் தன் பங்கிற்குக் கிழக்கே சென்றிருந்தான் அது முற்றிலும் வெற்றியில் முடிந்திருந்தது. அவனுடைய வெற்றியில் முக்கியமான பங்கு வகித்தது அவன் சேதி அரசன் சிசுபாலனை வென்றது தான். ஜராசந்தனின் முக்கியக் கூட்டாளியாக இருந்த சிசுபாலன் இப்போது தன்னுடன் சேர்ந்து தன்னை முன்பை விட வலுவானவனாக மாற்றும் அரசர்கள் இருக்கின்றனரா என்று தேடிக் கொண்டிருந்தான். ஆகவே பீமன் இவனை எப்படியாவது வழிக்குக் கொண்டுவர நினைத்தான். சிசுபாலனை வெல்ல ஓர் வழியையும் தேடிக் கண்டறிந்தான். “சிசுபாலா, நாம் சகோதரர்கள், தாய்வழிச் சகோதரர்கள்! அதை மறவாதே! உன் அன்னை எங்கள் சிற்றன்னை! உன் தாய் மாட்சிமை பொருந்திய மகாராணி ஷ்ருதஸ்ரவாவும் என் தாய் குந்தியும் உடன் பிறந்த சகோதரிகள் அல்லவோ! ஆகவே நாம் நண்பர்களாக இருந்து நட்புப் பாராட்டுவதையே நம் தாய்மார் விரும்புவார்கள்!” என்று திரும்பத் திரும்ப சிசுபாலனிடம் சொன்னான்.

சிசுபாலனுக்குக் கிருஷ்ணன் தான் ஜன்ம வைரி. ஆகவே பாண்டவர்களோடு சேர்ந்து கொண்டு அவர்களையும் தன் பக்கம் இழுத்துக் கொண்டு விட்டால் பின்னால் கிருஷ்ணனை ஆதரிப்பவர்களே இருக்கப் போவதில்லை. கிருஷ்ணனுக்கு எதிராக இவர்களைத் திருப்பி விடலாம். மேலும் ராஜசூய யாகத்திலும் அந்தக் கிருஷ்ணனுக்கு மரியாதை எதுவும் கிடைக்காமல் பார்த்துக் கொள்ளலாம். நமக்கே முதல் மரியாதை தரவேண்டும் என்னும்படியாக சூழ்நிலையை மாற்றி விடலாம். இதன் மூலம் நாம் நமக்குக் கிடைக்கும் பெயரையும், புகழையை வைத்துப் பெருத்த அளவில் அதிகார பீடம் ஏறிவிடலாம். இதுவே சிசுபாலனின் கணக்கு. ஆகவே அவன் பீமன் வார்த்தைகளுக்கு மறுப்பேதும் சொல்லவில்லை.

தெற்கே சென்றிருந்த சகாதேவனின் அனுபவங்கள் மாறுபட்டிருந்தது. அவன் நாடு திரும்பியதுமே அனைத்து ஸ்ரோத்திரியர்களும், அரசர்கள், வைசியர்கள், சூத்திரர்கள் என அவனைச் சூழ்ந்து கொண்டு பெரிய அளவில் வரவேற்புக் கொடுத்தார்கள். அவனுடைய ரதத்தைப் பார்த்தவர்கள் அதிர்ந்து போனார்கள். அவனருகே ஒரு வித்தியாசமான இல்லை இல்லை விசித்திரமான பயங்கரமான உருவம் அமர்ந்திருந்தது. சகாதேவனுக்கு அருகே அது அவனுக்குச் சமமாக அமர்ந்திருந்தது. கருங்காலிக்கட்டையைப் போன்ற கருத்த உடல், வயதில் சிறியவன் ஆனாலும் மலை போன்ற பெருத்த மேனி, பெரிய மிகப் பெரிய வாய், உறுதியான தாடையின் இருபக்கங்களிலும் தோன்றிய இரு கோரைப்பற்கள், செம்புக்கலரில் தாடி, முடியே இல்லாத வழுக்கைத் தலையில் சூடி இருந்த தங்கக் கிரீடம். இதன் கைகளில் ஒரு மரத்தினால் ஆன ஆயுதம், அதைச் சுற்றிலும் வளையங்கள் கோர்க்கப்பட்டுக் காணப்பட்டது. கைகளில் வளையல்கள் போன்ற கங்கணங்கள், தோள்களில் சூடி இருந்த தோள் வளைகள், கழுத்தில் மாலைகள் இடுப்பில் தங்கத்தினால் ஆன அரைச்சுற்று, முகத்தில் குங்கும வண்ணத்தால் தீட்டப்பட்ட ஓவியங்கள்!

Tuesday, November 1, 2016

பீமனின் திக்விஜயம்!

“நம்முடைய இந்திரப் பிரஸ்தத்துக்கு ஆபத்து நேராமல் பாதுகாக்க நமக்கு இத்தனை பெரிய ராணுவப் படைகள் தேவை தான்!” என்றான் பீமன். “அப்படிச் சொல்லாதே, பீமா, நாம் செய்யப் போவது ராஜசூய யாகம். அதற்கு இத்தனை பேரை நாம்போரிட்டு வெற்றி காணவேண்டும் என்றெல்லாம் கட்டாயம் இல்லை. ஆகவே கடுமையாகப் பேசாதே!” என்ற யுதிஷ்டிரன் தான் சமாதானம் அடைந்து விட்டதைக் குறிக்கும் வண்ணம் ஓர் புன்னகையைச் சிந்தினான். ஆனால் பீமன் அதை லக்ஷியமே செய்யவில்லை.

“என்ன, நான் கடுமையாக இருக்கிறேனா?” என்று அலட்சியமாகக் கேட்டான் பீமன். “ என் நாக்கிலிருந்து பொய்யான வார்த்தைகள் வராது! பொய்க்கு நான் அடிமையும் இல்லை. உண்மைக்கே நான் தலை வணங்குவேன். என்னிடம் இருக்கும் ஒரே ஆயுதம் உண்மை தான். அதைத் தான் என் நாக்கும் பேசும்!” என்று சொன்ன பீமன் மிகத் தீவிரமான மனோநிலையில் இருப்பதை அவன் சிவந்த முகம் காட்டியது. “ நான் உனக்குச் சொல்கிறேன், கேட்டுக் கொள். துரியோதனனை அழிக்கும் வரை நமக்கு நிம்மதியே கிடையாது. அமைதியோ சமாதானமே கிடையாது. அவன் நம்மால் அழிய வேண்டும் அல்லது அவன் தீய செயல்களால் அவனாகவே அழிந்து போக வேண்டும். அது மட்டுமல்ல, அந்தப் பாம்பு ஷகுனி அவனும் இருக்கக் கூடாது. அவர்கள் மட்டும் நம் மீது போர் தொடுத்தால், அண்ணா, நான் உனக்குச் சத்தியம் செய்து தருகிறேன்,. நான் தான் அதில் வெற்றி பெறுவேன். என்ன விலை கொடுத்தாவது வெற்றியைப் பெறுவேன்.” என்றான் பீமன்.

தயவாகச் சிரித்தான் யுதிஷ்டிரன். “பொறுமையுடன் இரு பீமா! நான் சொல்வதைக் கேள்! தாயாதிச் சண்டைகளால் விளையும் விளைவுகள் குறித்து நீ அறிவாயா?” என்று கேட்டான். பீமன் கண்கள் தீயைப் போல் ஜொலித்தன. எழுந்தான் அவன். “ஆஹா, துரியோதனனுக்குக் கீழ்ப்படிந்து நடப்பது குறித்ததின் விளைவுகள் என்னவென்று நீ  அறிவாய் அல்லவா?” என்று கோபத்துடன் அண்ணனிடம் கேட்டான். யுதிஷ்டிரன் அமைதியாக ஓர் தந்தையைப் போல் ஆதரவுடன் பீமனைப் பார்த்தான். “பீமா, கோபப் படாதே! நீ இப்படிக் கோபப் பட்டால் நம் பெரியப்பா திருதராஷ்டிரனின் பிள்ளைகளுடன் நாம் எப்போது நட்பு ரீதியில் பழகுவோம்? முதலில் உட்கார்ந்து கொள். நிதானமாகச் சிந்தித்துப் பார்! நான் சொல்வதைக் கேள்! நம்முடைய குடும்பப் பிரச்னைகளைச் சரி செய்வது நம் கடமை இல்லையா? விரிந்து போயிருக்கும் உறவுகளை ஒட்ட வேண்டாமா? நம்முடைய பெரியப்பா வழி சகோதரர்களை அவர்களும் ஓர் அரசகுமாரர்கள் என்னும் முறையில் தக்க மரியாதைகள் கொடுத்து நாம் அவர்களையும் அழைக்க வேண்டாமா? அது நம் கடமை அல்லவா? அவர்கள் பொல்லாதவர்களாக இருக்கலாம். ஆனால் நாம் நம்முடைய நேர்மையின் மூலமும் ஒழுங்கின் மூலமும் அவர்களின் பொல்லாத்தனத்தை ஜெயித்து விடுவோம்! ஜெயித்து விட்டோம்!” என்றான்.

பீமன் ஏளனமாகச் சிரித்த வண்ணம், :”ஆஹா, கட்டாயம் செய்ய வேண்டியது தான்! அதிலும் அந்த ஷகுனி இருக்கிறானே! அவனுக்குப் பிரத்தியேகமான அழைப்பு ஒன்றையும் அனுப்பியாக வேண்டும்! ஏன் அப்படிச் செய்யக் கூடாதா என்ன? நம்முடைய முக்கியமான எதிரி அவன் தான்! ஆகவே அவனுக்கு முக்கியத்துவம் கொடுத்து இப்படி மரியாதை செய்து விடுவோம்!” என்றான். ஆனால் யுதிஷ்டிரனோ தீவிரமான மனோநிலையில், “ஆம், அப்படித் தான் செய்ய வேண்டும். ஒருவேளை நம் அழைப்பை ஏற்று அவன் இங்கே வந்தான் எனில் துரியோதனன் மீது நாம் பொழியும் அன்பைப் பார்த்து பிரமித்துத் திகைத்துப் போவான்! அவன் மனமும் மாறிவிடும்!” என்றான் நம்பிக்கையுடன்.

அதற்கு பீமன் ஏளனமாக, “அண்ணா, நீ எப்போதுமே நம் எதிரிகளிடம் தான் அதிகப் பாசமும் அன்பும் காட்டுகிறாய்! நண்பர்களிடம் அல்ல!” என்றான். “கோபம் கொள்ளாதே பீமா! நீ பெற்ற அபார வெற்றிக்குப் பின்னர், அவன் நம்மை அழிக்கலாம் என்று போடும் திட்டங்கள் எல்லாம் வீணாகிவிடும் என்பதை உணர்ந்திருப்பான்.” என்று பொறுமையாக பதில் சொன்னான் யுதிஷ்டிரன். “ஹூம், அவனை வெல்ல முடியாது! அவன் நம் அழைப்பையும் ஏற்காமல் நிராகரிப்பான். நாம் இங்கே எத்தகைய பிரம்மாண்டமான வலிமையும், பலமும் நட்பும் பொருந்தியதொரு வலுவான கூட்டணியை நிர்மாணித்திருக்கிறோம் என்பதையும் அவன் கவனிக்க மாட்டான். புரிந்து கொள்ளவும் மாட்டான். இத்தனையையும் அவனைக் கெடுக்க வேண்டும் என்ற நினைவோ முயற்சிகளோ இல்லாமலேயே நாம் செய்து முடித்திருக்கிறோம்!” என்றான் பீமன்.

கிருஷ்ணன் தலையிட்டான்., “வ்ருகோதர அரசரே! தயவு செய்து அமருங்கள். எங்களிடம் பொறுமை காட்டுங்கள். மூத்தவர் துரியோதனனையும் ஷகுனியையும் வெல்வதற்கு ஓர் சந்தர்ப்பம் கிட்டாதா என்றே பார்க்கிறார். அதற்காகவே காத்திருக்கிறார். அதையும் நேர்மையான முறையான முறையில் செய்ய நினைக்கிறார். இவருடைய இந்த நேர்மைக்கும் உண்மைக்கும் தானே அனைவரும் இவரை “தர்மபுத்திரன்” என்று அழைக்கின்றனர்.” என்று மேலே பேசாமல் கொஞ்சம் நிறுத்தினான் கிருஷ்ணன். கிருஷ்ணனை அலட்சியமாகப் பார்த்தான் பீமன். “கிருஷ்ணா, உனக்கும் ஏதேனும் புத்தி பிசகி விட்டதோ?” என்றும் வினவினான். ஆனால் கிருஷ்ணனோ நிதானமாக, “நான் உன்னுடன் முழுக்க முழுக்க ஒத்துப் போகிறேன், பீமா! மூத்தவர் செய்த, செய்யப் போகும் எந்தச் செயல்களாலும் ஷகுனியை நம் வழிக்குக் கொண்டுவரவே முடியாது!” என்றான் கிருஷ்ணன்.

“ஆ, அப்படிச் சொல்! கிருஷ்ணா, ஷகுனி எப்படிப்பட்டவன் என்பதை நீ அறிவாய் அல்லவா! அவன் முழுக்க முழுக்க விஷத் தன்மை மட்டுமே கொண்டு பிறந்திருக்கிறான். ஹூம், அவனை மட்டும் சக்கையாகப் பிழிந்தோமானால் இந்த உலகு மொத்தத்தையும் அழிக்கக் கூடிய அளவுக்கு விஷம் அவன் ஒருவனிடமிருந்தே கிட்டி விடும். எங்களை அழிக்க அவன் என்ன தான் செய்யவில்லை! எல்லாவிதங்களிலும் முயன்றானே!”

பீமன் மனதுக்குள் கசப்புப் பொங்கி வழிந்தது. “நான் சிறுவனாக இருந்தபோது என்னைக் குளத்தில் மூழ்கடிக்கப் பார்த்தார்கள். அதன் பின் நாங்கள் சகோதரர் ஐவரையும் சேர்த்து வாரணாவதத்தில் உயிருடன் எரித்துச் சாம்பலாக்க முயன்றார்கள். அவர்களிடமிருந்து தப்பிக்க வேண்டி நாங்கள் காடுகளிலும், வனாந்தரங்களிலும் அகதிகளைப்போல் சுற்றிக் கொண்டும் அலைந்து கொண்டும் பல வருடங்களைக் கழிக்க வேண்டி வந்தது. அவர்களின் கொடூரங்களிலிருந்து தப்பிக்க வேண்டி ராக்ஷசவர்த்தமே சென்று ஒளிந்து வாழ்ந்தோம். இவ்வளவு எல்லாம் செய்த பின்னரும் அவர்கள் நம்மில் அனைவரிலும் மூத்தவன் ஆன யுதிஷ்டிரனுக்கு உரிமை உள்ள சிங்காதனத்தில் அவனை ஏற அனுமதிக்கவில்லை! அவனுக்கு அது மறுக்கப்பட்டது!”

பீமனின் கோபம் எல்லை மீறியது. தன் சுட்டு விரலை நீட்டி ஆட்டிக் கொண்டே மேலும் பேசினான். “இதோ பார்,மூத்தவனே! அவர்கள் நம்மை அழிக்கவென்றே வருகின்றனர். அவர்களுக்கு ஹஸ்தினாபுரம் மட்டும் போதவில்லை; இப்போது இந்த இந்திரப் பிரஸ்தத்தையும் நம்மிடமிருந்து அபகரிக்க நினைக்கிறார்கள். போரிட்டு நம்மிடமிருந்து இதைப்  பெற முடியாது! ஆகையால் சூழ்ச்சிகளும்,சதிகளும் செய்து இதை அபகரிக்கப் பார்க்கின்றனர்.” என்றான் பீமன். பின்னர் சற்று நேரம் அமைதியாக அமர்ந்திருந்தான்.

“என் அன்பான தம்பியே!” என்று அன்புடன் அழைத்தான் யுதிஷ்டிரன். “இதோ பார்! அவர்கள் இனிமேல் என்ன செய்யப் போகிறார்கள் என்பதெல்லாம் இங்கே தேவை இல்லை! அந்தப் பேச்சை விடு! நாம் அவர்களுக்கு என்ன செய்யப் போகிறோம் என்பதே இங்கே இப்போது முக்கியமானது. அதோடு இல்லை; ஷகுனிக்கு நாம் தனியாகச் சிறப்பு அழைப்பை அனுப்பி வைக்கலாம். பீமா, அதோடு இதை மறவாதே! துரியோதனனுக்கும் ஓர் மனக்குறை இருக்கிறது அல்லவா! கொஞ்சம் யோசித்துப் பார்! அவன் தந்தை மட்டும் பிறவிக்குருடாக இல்லாமல் இருந்திருந்தால் இத்தனை நாட்களில் துரியோதனன் தானே ஹஸ்தினாபுரத்தின் பாரம்பரிய அரியணைக்குச் சொந்தக்காரன் ஆகி இருப்பான்!” என்றான் யுதிஷ்டிரன்.

பந்தயக் குதிரை கோபத்தில் கனைப்பது போல் பீமன் உறுமினான். “நான் சும்மா உட்கார்ந்திருக்கப் போவதில்லை. என்னால் அது முடியாது. நாம் உயிருடன் இருப்பதற்காகவும், உன்னுடைய அரியணையும் ஆட்சியும் நிலைத்திருக்க வேண்டும் என்பதற்காகவும், நம் குழந்தைகளுக்கு நம் பாரம்பரியம் தொடரவேண்டும் என்பதற்காகவும் நான் போரிடப் போகிறேன். இங்கே நாம் இவ்வுலகுக்கும், க்ஷத்திரிய தர்மத்துக்கும் ஆதரவான ஓர் சூழ்நிலையை உருவாக்கி மக்களை மகிழ்வுடன் வாழ வழி செய்து கொடுத்திருக்கிறோம். இங்கே ஓர் அழகான உலகம் உருவாக்கப் பட்டிருக்கிறது. நாம் அரச தர்மத்தோடு சேர்த்து க்ஷத்திரிய தர்மத்தையும் பிரம்ம தேஜஸையும் பாதுகாத்து வருகிறோம். என்னுடைய வழியை நான் தேர்ந்தெடுக்கிறேன். தேர்ந்தெடுத்து விட்டேன்! ஹஸ்தினாபுரத்தை முறியடிக்க, அண்ணா, தேவை என்றால் தான்! தேவை எனில் ஹஸ்தினாபுரத்தை முறியடிக்க என்னிடம் போதுமான வீரர்கள் இருக்கின்றனர். அவர்களே போதும்!” என்று சொன்ன பீமன் ஒரு நீண்ட பெருமூச்சு விட்டான்.

யுதிஷ்டிரன் நடுவில் பேசுவதற்கு இரண்டு மூன்று  முறை முயற்சித்தான். ஆனால் கோபத்தின் உச்சியிலிருந்த பீமன் அவனைப் பேச அனுமதிக்கவில்லை. பின்னர் மீண்டும் பீமனே பேசினான். “நான் ஏற்கெனவே படை வீரர்களை மெல்ல மெல்ல நகருவதற்கு ஆணைகள் பிறப்பித்து விட்டேன். படைகள் மெதுவாக நகர்கின்றன. உனக்குப் பிடித்தாலும் சரி, பிடிக்காவிட்டாலும் சரி ஓர் திக்விஜயத்தை நடத்தத் தான் போகிறேன். அதோடு இல்லை அண்ணா, நான் உபநயனத்தின் போது போட்டுக் கொண்ட இந்தப் புனிதமான பூணூலின் மேல் ஆணையிட்டுச் சொல்கிறேன். நான் துரியோதனனை அழித்து ஒழிப்பேன். ஷகுனியையும் அழிப்பேன். அதோடு இல்லை அவர்கள் நண்பர்கள் அனைவரையும் ஒழித்துக் கட்டுவேன். அவர்கள் நம் வழிக்கு மட்டும் வந்தார்களானால் தொலைந்தார்கள்!” என்று உரத்த குரலில் தன் முடிவைக் கூறிய பீமன் அந்த அறையிலிருந்து அதிரும் காலடிகளோடு வெளியேறினான்.

பீமனைப் போலவே தம் மற்ற சகோதரர்களும் நினைக்கின்றனர்; அப்படியே செய்ய வேண்டும் என்று எண்ணுகின்றனர் என்பதை அவர்கள் சொல்லாமலேயே யுதிஷ்டிரன் புரிந்து கொண்டான். அவனுக்குமே கொஞ்சம் தர்ம சங்கடமாகவே இருந்தது. பீமனுக்குத் தான் அநீதியை இழைத்துவிட்டோமோ என்று வருந்தினான். அவனுக்குத் தான் தன் மேல் எத்தனை மதிப்பு! எத்தனை பிரியம்! அவன் மிகவும் அன்பானவன் தானே! தைரியமானவனும் கூட! எத்தனை பரிவுடன் நமக்காகப் பேசினான். ஹூம், இனியாவது எங்கள் இருவருக்குமிடையே பிரிவும், மாறுபட்ட சிந்தனைகளும் வரக் கூடாது. கூடியவரை அனைவரும் ஒரே வழியிலேயே செல்ல வேண்டும். அங்கேயே அத்தனை நேரம் மௌனமாக அமர்ந்திருந்த த்வைபாயனர் மெல்லப் பேசினார். கிருஷ்ணன் பக்கம் திரும்பிய வியாசர், “வாசுதேவா, உடனே சென்று பீமனிடம் சொல்! மூத்தவனான யுதிஷ்டிரன் இந்த திக்விஜயத்தின் முழுப் பொறுப்பையும் பீமனிடமே விட்டு விட்டான் என்று சொல்லிவிட்டு வா! அதோடு அதற்கு மூத்தவனின் ஆசிகளும் பீமனுக்கு உண்டு என்று போய்ச் சொல்லி விடு!” என்றார்.