Friday, December 23, 2016

காயுருட்டலானார்--சூதுக்களி தொடங்கலானார்!

மாட்சிமை பொருந்திய தங்கள் குலபதியைத் திரும்பிப் பார்த்தான் துரியோதனன்.  அவர் எப்படி இந்த நிகழ்வுக்கு எதிர்வினை ஆற்றுவார் என்பதை அறிய மிகுந்த ஆவலுடன் காத்திருந்தான். அவர் வலக்கையின் ஆள்காட்டி விரலை நீட்டிய வண்ணம் எச்சரிக்கைக் குறி செய்து கொண்டிருந்தார்.  துரோணாசாரியாரும் அப்போது கோடரியை நீட்டியவண்ணம் காட்சி அளித்தார். துரோணர் பரசுராமரின் சீடர் என்பதை நினைவூட்டும் விதமாகத் தன்னுடைய அடையாளமாகவும் கோடரியை வைத்திருந்தார்.  துரியோதனன் பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய இருவரின் மன ஓட்டங்களை அவர்களின் உடல் அசைவிலிருந்து புரிந்து கொண்டான். அவன் தைரியம் அப்போது அவனை விட்டு அகன்றது. தன் கையிலிருந்த வாளை மீண்டும் உறையிலிட்டான். திரும்பித் தன் நண்பர்களைப் பார்த்தான்.  அவர்கள் அவனை ஏளனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

துரியோதனன் எளிதில் வெடித்து விடுகிற சுபாவம் உள்ளவன் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால் இப்படி ஒரு கோழையாகப் பெரியோர்களுக்குப் பயப்படுபவனாக இருப்பான் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை.  இத்தனைக்கும் முதல் நாள் இரவில் அவர்கள் அனைவருமாகச் சேர்ந்தே தான் அந்த முக்கியமான முடிவை எடுத்திருந்தார்கள்.  அப்போது அவர்கள் முடிவுக்குக் குறுக்கே யார் வந்தாலும் அவர்களை அழிக்க வேண்டும் என்றும் பேசி முடிவு எடுத்திருந்தார்கள். அதன் பின்னரும் துரியோதனன் இவ்வளவு பயப்படுகிறானே! அதிலும் அந்தக் கிழவர் பீஷ்மருக்கு! இதைக் கண்ட துஷ்சாசனன் கூடத் தன் அண்ணனை வீரதீரக் கதாநாயகனாகவே எண்ணி இருந்தவன் இப்போது மனம் நொந்தான்.

அதற்குள்ளாக துரியோதனன் மீண்டும் சதுரங்கமேடையில் தன் ஆசனத்துக்கு அருகே போய் உட்கார்ந்து கொண்டான். ஷகுனி அவன் காதுகளில் மெல்லக் கிசுகிசுத்தான். “மருமகனே, கேள்! இதனால் எல்லாம் ஏமாற்றம் அடைந்து விடாதே! பொறுத்திருந்து பார்! நாம் விரைவில் அவர்களைப் பாண்டுவின் குமாரர்கள் என்னும் அந்தஸ்திலிருந்தும் க்ஷத்திரியர்கள், அரசகுலத்தினர் என்னும் தகுதியிலிருந்தும் ஒட்டு மொத்தமாக அழித்து விடுவோம்.  ஹூம், நீ இன்னும் உன்னுடைய தாய்மாமனான என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. என்னிடமிருந்து அவர்கள் தப்பி விடுவார்கள் என்று நினைத்து விடாதே!” என்றான்.

யுதிஷ்டிரன் ஆசாரியர் வேத வியாசரின் தீர்க்க தரிசனத்தைப் பொய்யாக்கி விட வேண்டும் என்றும், ஓர் மாபெரும் யுத்தம் நடைபெறுவதைத் தவிர்க்க வேண்டும் என்று மனப்பூர்வமாக எண்ணினான்.  ஆனால் அவன் தங்கள் ஐவருக்கும் தங்கள் பெரியப்பாவின் மக்களுக்கும் இடையில் உள்ள பூதாகாரமான இடைவெளியை ஒழிக்க வேண்டும் என்று எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் மேலும் மேலும் பிரச்னைகளையே அருகில் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் தன் சொத்துக்களை எல்லாம் அவன் மகிழ்வுடனேயே இழந்தான். அதற்காகச் சிறிதும் கலங்கவில்லை.  மேலும் தங்கள் அனைவரின் உடைமைகளையும், இந்திரப் பிரஸ்தத்தையும் கூட இழந்து விட்டான். இனி அவனும் அவன் சகோதரர்களும் இந்த சபாமண்டபத்திலிருந்து பிச்சைக்காரர்களைப் போல வீடிழந்து நாடிழந்து திரும்பவேண்டியவர்களே! இப்படி இருக்கையில் யுதிஷ்டிரன் இப்போது தான் விஷயத்தைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொண்டான்.

திடீரென ஏற்பட்டதொரு மன வெளிச்சப் பொறியில் அவனுக்குப் புரிந்தது என்னவென்றால் அவர்கள் ஐவருக்கும் அவர்களுடைய பெரியப்பா புத்திரர்களுக்கும் இடையில் சமாதானம் என்பதே இல்லை; எப்போதுமே இல்லை என்பதே! யுதிஷ்டிரன் எவ்வளவு விட்டுக் கொடுத்தாலும் அது துரியோதனாதியரின் மனதைத் திருப்தி செய்யப் போவதில்லை.  துரியோதனன் இந்த விளையாட்டை ஏற்பாடு செய்திருப்பதின் முக்கியக் குறிக்கோள் யுதிஷ்டிரனுடைய செல்வத்தையோ, உடைமைகளையோ, அல்லடு இந்திரப் பிரஸ்தத்தையோ கவர்வது மட்டுமல்ல. அவர்களைக் குலத்திலிருந்தே ஒதுக்கி வைத்துப் பாண்டுவின் புத்திரர்கள் என்னும் அந்தஸ்திலிருந்து முழுமையாக விலக்கி வைத்து ஆரிய வர்த்தத்தின் பிரசித்தி பெற்ற குரு வம்சத்து அரசகுல க்ஷத்திரியர்கள் என்னும் தகுதியிலிருந்து அவர்களைக் கீழிறக்க வேண்டும் என்பதே அவர்கள் எண்ணம். அவர்கள் அனைவரையும் துரியோதனாதியரின் அடிமைகளாக ஆக்கவேண்டும் என்பதே அவர்கள் குறிக்கோள்.

பிதாமஹர் பீஷ்மரைப் பார்த்தான் யுதிஷ்டிரன். அவர் வாக்குக் கொடுத்ததற்கு ஏற்ப மௌனமாகவே வீற்றிருந்தார். ஆனால் கடுங்கோபத்தில் இருந்தார் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.  அவர் இத்தனை வருடங்களாக இந்தக் குரு வம்சத்தையும் ஹஸ்தினாபுரத்தையும் அதன் மகத்தான சாம்ராஜ்யத்தையும் கட்டிக் காத்து வந்தது வீணாகி விட்டது. அந்த நாட்களெல்லாம் இனி வரப் போவதில்லை என்றும் இனி எதுவும் தன் கைகளில் இல்லை என்பதையும் அவர் புரிந்து கொண்டு விட்டார்.  விதுரன் பட்ட பாடு! இத்தனைக்கும் இந்த அரசகுலத்தவரால் மிகவும் மதிக்கப்பட்ட மனிதர் விதுரர். அவர் திருதராஷ்டிரனின் பிரியத்துக்குகந்த மாற்றாந்தாயின் வழி சகோதரர் என்பதால் மட்டுமில்லை. அவருடைய படிப்பு, ஞானம், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் நேசம் மிகுந்த குணம், பெரியோரிடம் காட்டும் மரியாதை, அரச நிர்வாகத்தில் அவர் காட்டிய நிபுணத்துவம் போன்றவையும் அவர் மேல் மிக்க மரியாதையைக் காட்டும்படி செய்திருந்தது.

அப்படிப் பட்ட விதுரரையே அவமதிக்கும்படி நடந்து கொண்டு விட்டான் துரியோதனன். அவனுடைய இந்தக் குணம் விதுரருக்கு மட்டும் அவமரியாதை இல்லை, பீஷ்மருக்கும் சேர்த்துத் தான்.  குரு வம்சத்தினருக்கே ஓர் மரண அடியாக அமைந்து விட்டது அது! அதுவும் பீஷ்மர் பல்லாண்டுகளாகக் கட்டிக் காத்து வந்த பெருமையை எல்லாம் சிதற அடித்து விட்டது.  ஆரியர்களின் பாரம்பரிய சாஸ்திரங்களின் படியும் கோட்பாடுகளின் படியும் ஆரியர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்களை வாங்கவோ, விற்கவோ கூடாது; முடியாது! அது விதி அல்ல! அவர்களை அக்னிக்கடவுளுக்கு இரையாகவும் ஆக்க முடியாது.  இப்படிப்பட்ட மனித பலியைக் கடவுள் வருண பகவான் முற்றிலும் நிராகரித்து விடுவார். ஏற்றுக்கொள்ளவே மாட்டார்.  இதை ஏற்கெனவே வருண் பகவான் முனிவர் ஷுனஷேபாவை பலி கொடுக்கக் கட்டிப் போட்டிருந்த சமயம் அவரை விடுவித்ததன் மூலம் நிரூபித்தும் காட்டி இருக்கிறார்.

அங்கே குழுமியிருந்த அரச குலத்தினரில் பெரும்பான்மையானவர்களுக்கு இந்த சபையில் நடக்கும் இந்த நிகழ்ச்சிகளின் போக்குப் பிடிக்கவில்லை. அவர்களுக்குள்ளாக முணுமுணுத்துக் கொண்டார்கள். ஆனால் வெளிப்படையாக ஏதும் பேசவில்லை. ஏனெனில் அனைவருக்கும் பெரியவரான பிதாமஹர் பீஷ்மரே பேசாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.  ஆகவே மெல்ல மெல்லத் தங்களுக்குள்ளேயே பேசிக் கொண்டனர். துரியோதனன் சூதாட்டம் விளையாடும் இடத்துக்குத் திரும்பி வந்ததும் அங்கே அமர்ந்திருந்த அனைவரையும் பெருமையுடன் பார்த்தான். பின்னர், “ஆட்டம் தொடங்கட்டும்!” என்று தோரணையுடன் கட்டளையிட்டான்.

Thursday, December 22, 2016

நெறி உரைத்திடும் மேலவர் வாய்ச்சொல் நீசரானவர் கொள்ளுவதுண்டோ?

ஆனால் விதுரர் தான் ஓர் விஷயத்தில் சரியாகப் புரிந்து கொள்ளாததையும் அப்போது உணர்ந்தார். பொதுவாக விதுரர் நினைப்பது போல் தான் நடந்து வந்திருக்கிறது. தவறியதே இல்லை. ஆனால் இப்போது விதுரர் தாம் தவறாகப் புரிந்து கொண்டு விட்டோம் என்பதை உணர்ந்து கொண்டார்.  மிக மோசமாக நடக்கப் போகிறது என்பதையும் கண்டு கொண்டார். இந்த விளையாட்டின் விளைவுகள் யுதிஷ்டிரனையும், மற்ற நான்கு சகோதரர்களையும் சொத்து இழக்கச் செய்வது மட்டுமே என நினைத்திருந்தார் விதுரர். மிஞ்சிப் போனால் இந்திரப் பிரஸ்தத்தையும் பிடுங்குவார்கள் என்றே எண்ணி இருந்தார். ஆனால் துரியோதனாதியரின் நோக்கம் அதுவல்ல என்பதை இப்போது தான் தெளிவாகப் புரிந்து கொண்டார் விதுரர். பாண்டவர்கள் ஐவரையும் சொத்துக்களை மட்டுமில்லாமல் நாட்டையும் இழக்க வைத்து, பாண்டுவின் புத்திரர்கள் என்னும் அந்தஸ்திலிருந்தும் அவர்களை விலக வைத்துப் பின் க்ஷத்திரிய அரசகுலத்தவர் என்னும் தகுதியிலிருந்தும் அவர்களை நீக்கித் தங்கள்  அடிமைகளாகச் செய்ய வேண்டும் என்பதே துரியோதனாதியரின் நோக்கம் என்பதை விதுரர் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொண்டார். அவர் மனம் கொதித்தது.

ஏற்கெனவே பீஷ்மரும் விதுரரும் ஹஸ்தினாபுரத்தின் அரசாட்சி நிலையாக இருப்பதற்குச் செய்து வந்து கொண்டிருந்த பல்வேறு முயற்சிகளையும் முறியடித்துத் தன் விருப்பம் போல் நடந்து கொண்டு வந்தான் துரியோதனன்.  பீஷ்மரின் அரசு அதிகாரத்தை நிலைக்க விடாமல் குலைக்கும்படி நடந்து வந்தான். மிக இளம் வயதிலிருந்தே துரியோதனனுக்குப் பாண்டவர்கள் பால் இருந்த அளவற்ற வெறுப்பின் மதிப்பீட்டைச் சரியாகப் புரிந்து கொள்ளத் தவறி விட்டார் விதுரர். அதை நினைத்து இப்போது தன்னைத் தானே நொந்து கொண்டார். விதுரர் இப்போது திருதராஷ்டிரன் பக்கம் திரும்பி அவன் காலைத் தொட்டார். பீஷ்மரிடமிருந்து மௌனமாக சம்மதத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவருக்கு அவரின் தலை அசைப்பே போதுமானதாக இருந்தது.  அதன் பின்னர் திருதராஷ்டிரனும் அனுமதி கொடுத்தான்.

அனுமதி கிட்டியதும் விதுரர் பேசினார்: “பிரபுவே,  நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன். இந்த விளையாட்டை இத்துடன் நிறுத்துங்கள். நாம் இருவரும் ஒன்றாகத் தான் தொட்டிலில் வளர்ந்தோம். அப்போதிலிருந்து நாம் நண்பர்களாகவும் இருந்து வருகிறோம். இத்தனை வருடங்களாக நான் உண்மையாகவும் நேர்மையாகவும் உங்களுக்காக உழைத்து வருகிறேன். என்னால் இப்போது இந்த நேர்மையற்ற செயலைப் பார்த்துக் கொண்டு மௌனமாக இருக்க இயலாது. ஆகவே நான் இப்போது உங்களை எச்சரிக்கிறேன். ஹஸ்தினாபுரம் மெல்ல மெல்ல அழிவை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது!” என்றார்.

துரியோதனனும் அவன் ஆதரவாளர்களும் விதுரரை கோபமாகவும் ஆத்திரமாகவும் பார்த்தார்கள். அவர்கள் தாங்கள் முதல் நாள் இரவு எடுத்திருந்த முடிவைச் செயல்படுத்தும் நேரம் விரைவில் வந்து விடும் என்றும் தங்கள் முடிவைச் செயல்படுத்திவிடலாம் என்றும் நினைத்துக் கொண்டிருந்தார்கள். விதுரர் ஆனால் தொடர்ந்து பேசினார்:”பிரபுவே, உங்களுக்கு நினைவில் இருக்கிறதா? துரியோதனனின் பிறப்பின் போது நமக்குத்  தெரிந்து எத்தனை எத்தனை கெட்ட சகுனங்கள் தோன்றின என்பதை நீங்கள் அறிவீர்கள் அல்லவோ? இதோ உங்கள் இந்த மகன் தான் இவ்வுலகம் முற்றிலும் அழியக் காரணகர்த்தாவாக இருக்கப் போகிறான். ஆகவே அவனைக் கொன்று தான் அந்தப் பேரழிவிலிருந்து நாம் இவ்வுலகைக் காக்க வேண்டும். அவனைக் கொல்வதில் தவறில்லை!” என்றார்.

விதுரரின் மென்மையும் இனிமையும் நிறைந்த குரல் ஓர் பயங்கரப் புயல் காற்றின் ஓசையைப் போல் அந்த சபாமண்டபத்தில் ஒலித்ததை அனைவரும் உணர்ந்தனர். விதுரர் மேலும் தொடர்ந்து பேசினார்: “மாட்சிமை பொருந்திய மன்னா! இந்த விளையாட்டு மேலும் தொடர்ந்தால், நமக்குச் சொல்லப்பட்ட தீர்க்க தரிசனங்கள் அனைத்தும் உண்மையாகிவிடும். உங்கள் மகனால் பாண்டவ சகோதரர்களிடமிருந்து கிட்டத்தட்ட கொள்ளையடிக்கப்பட்ட இந்தச் செல்வங்களும் அவர்களின் உடைமைகளும் நல்லதற்கல்ல. அந்த இறைவனுக்கே இது பொறுக்காது. இறைவனின் கோபத்துக்கு இவர்கள் ஆளாகப் போகின்றனர். உங்களுடைய இந்த முதுமையான வயதில் நீங்கள் உங்கள் குமாரர்கள் அனைவரும் அழியப் போவதை, அதுவும் உங்கள் எதிரே அழியப் போவதை உணரப் போகிறீர்கள். ஆம், ஐயா, உங்கள் அனைத்து மகன்களும் அழிந்து போகப் போகின்றனர்.”

“அரசே, உங்கள் மகன் துரியோதனன், பாண்டவ சகோதரர்களுடன் நேருக்கு நேர் நின்று போரிட தைரியமில்லாமல் இருக்கிறான். போர்க்களத்தில் அவர்களை எதிர்கொள்ள அவனுக்கு இஷ்டமில்லை. “இப்போது ஷகுனியைச் சுட்டிக்காட்டிய வண்ணம் விதுரர் மேலும் பேசினார்:” இதோ இந்த தந்திரக்கார ஷகுனி, காந்தார இளவரசன் துணையுடன் உங்கள் மகனும் அவன் ஆதரவாளர்களும் பாண்டவர்களின் சொத்துக்கள் அனைத்தையும் கொள்ளையடித்து விட்டனர். நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன், பிரபுவே. போதும், இந்த விளையாட்டை இத்துடன் நிறுத்துங்கள். நிறுத்தச் சொல்லி ஆணையிடுங்கள். நீங்கள் அப்படிச் செய்யவில்லை எனில் அனைத்து க்ஷத்திரியர்களும் ஒருவருக்கொருவர் சண்டையிட்டுக் கொண்டு செத்துப் போகப் போகின்றனர்.  தர்மம் அழியப் போகிறது. குரு வம்சத்தினரால் தர்மத்தைக் காக்க முடியவில்லை எனில், நீங்கள் கட்டிய மகத்தான சாம்ராஜ்யக் கோட்டை தகர்ந்து விடும். ஆசிரமங்கள் அனைத்தும் கல்லறைகளாகிவிடும். சுடுகாடாகி விடும். க்ஷத்திரியர்கள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொள்ளுவார்கள். மிச்சம் மீதி இருப்பர்கள் இப்படிப்பட்ட கோரமான வலிமைக்கு முன் எதிர்கொள்ள முடியாமல் செய்வதறியாமல் தவிப்பார்கள்.”

ஆனால் திருதராஷ்டிரன் வாயே திறக்கவில்லை. ஒரு வார்த்தை கூட அவன் வாயிலிருந்து வெளிவரவில்லை. துரியோதனன் கோபத்தில் கொதித்தான். தன் புருவங்களை நெரித்த வண்ணம் இடையில் இருந்த வாளில் கை வைத்து அதை உருவிய வண்ணம் துஷ்சாசனன் துணைக்கு வர விதுரர் பக்கம் பாய்ந்தான். “சித்தப்பா,  எங்கள் சோற்றைத் தின்று கொண்டே எங்கள் எதிரிகளைப் புகழ்ந்து பேசுவதில் அதுவும் எங்கள் எதிரே பேசுவதில் நீங்கள் வல்லவர், நிபுணர்!” என்று கோபம் கொந்தளிக்கக் கூறினான். “சித்தப்பா, என் சிறு வயதிலிருந்தே நீங்கள் எனக்குத் தீங்கு தான் புரிந்து வந்திருக்கிறீர்கள். நீங்கள் ஓர் மிருகம். உங்களுக்கு உணவளித்த கைகளையே பாய்ந்து கடிக்கிறீர்கள். நாயை விடக் கேவலமாக நடந்து கொள்கிறீர்கள். இப்போது என் தந்தை என்னிடம் வைத்திருக்கும் பாசத்தையும் கொன்று என்னையும் அழிக்க நினைக்கிறீர்கள்!” என்று கத்தினான்.

விதுரரைப் பார்த்துச் சீறினான் துரியோதனன். அவன் கைகள் மட்டுமின்றி உடலே கோபத்தில் துடித்தது. “ஹூம், என்ன இருந்தாலும் ஓர் சேடியின் மகன் தானே, நீங்கள்! உங்களிடமிருந்து இதை விட அதிகமாக எதையும் எதிர்பார்க்க முடியாது!” என்று ஏளனமாகக் கூறினான்.  சற்று நேரம் நிறுத்திய துரியோதனன் மேலும் தொடர்ந்தான். “நீங்கள் இந்தப் பாண்டவ குமாரர்களுக்குச் சாதகமாக நடந்து கொண்டு பாரபட்சம் பார்க்கிறீர்கள். இனிமேலாவது அப்படி எல்லாம் நடந்து கொள்ளாதீர்கள்!”  “துரியோதனன் விதுரரைக் கொல்லப் போகிறானா?” இதுவே அங்குள்ள அனைவர் மனதிலும் எழுந்த கேள்வி!  துரியோதனன் மேலும் தொடர்ந்தான்.

இகழ்ச்சி நிரம்பிய குரலில் அவன் கூறியதாவது:” எங்களைப் பற்றிக் கவலைப்படாதே, வேலைக்காரியின் மகனே! உன்னுடைய அருமை அண்ணன் மகன்களுக்காகவென்று உன்னுடைய துக்கத்தைக் காப்பாற்றி வைத்துக் கொள்! உன்னுடைய வருத்தம் எல்லாம் அவர்களுக்கே போகட்டும். விரைவில் அவர்கள் அனைவரும் எனக்கு அடிமையாவார்கள்!” என்று உதடுகளை வக்கிரமாக நெளித்த வண்ணம் கூறினான். வெறுப்பும் இகழ்ச்சியும் கலந்த குரலில் சிரித்த வண்ணம் அவன் மேலும் தொடர்ந்து, “நான் என்னவாக இருந்தாலும் சரி. நான் என்ன செய்தாலும் சரி, அல்லது வருங்காலத்திலும் சரி, என்னை இந்த வாழ்க்கைப் பயணத்தில் தள்ளி விட்ட கடவுளே காரணம் ஆவார். இது கடவுளின் உத்திரவு!” இதைச் சொல்லியவண்ணம் வன்மம் பொங்க விதுரரைப் பார்த்த துரியோதனன் தன் உடைவாளை அதன் உறையிலிருந்து எடுத்து விதுரரை நோக்கி நீட்டியதைப் பார்த்தால் அவன் வழியில் விதுரர் குறுக்கிடுவார் என்பது தெரிந்தால் அவரைக் கொல்லவும் துரியோதனன் தயங்க மாட்டான் என்பதை எடுத்துக் காட்டியது.

Tuesday, December 20, 2016

பீடிழந்த ஷகுனி அங்கு பின்னுஞ்சொல்லுகின்றான்!

சபை முழுவதும் அமைதி நிலவியது. ஆனாலும் அங்கே குழுமியிருந்த மக்கள் ஒருவருக்கொருவர் எதுவும் பேசிக்கொள்ளாமலேயே தங்களையும் அறியாமல் இப்போது நடக்கப் போவது விளையாட்டு அல்ல; ஓர் மறைமுகப் போர் என்பதை உணர்ந்திருந்தனர். இன்னும் சொல்லப் போனால் தேவாசுர யுத்தம் போல இதுவும் ஓர் போர், அசுரர்களுக்கும் தேவர்களுக்கும் இடையில் நடைபெறப் போகும் போர் என்று உணர்ந்தார்கள். ஆட்டம் ஆரம்பித்தது. யுதிஷ்டிரன் முதலில் தங்கள் குடும்பத்து நகைகளையும் அதிசயமாகக் கிடைத்த ரத்தினங்களையும் பணயம் வைத்தான். உடனே துரியோதனனும் தன்னுடைய நகைகளை எல்லாம் பணயமாக வைத்தான். முதலில் யுதிஷ்டிரன் பாய்ச்சிக்காய்களைக் கையில் எடுத்தான். தன் உள்ளங்கைகளுக்குள் வைத்து உருட்டினான். கீழே விரித்திருந்த பலகையில் அந்தக் காய்களை உருட்டி விட்டான. பின்னர் அவற்றை ஷகுனி கைகளில் எடுத்துத் தன் கைகளில் உருட்டிப் பலகையில் உருட்டி விட்டான். அப்போது பீஷ்மர் ஷகுனியையே கவனித்துக் கொண்டிருந்ததால் அவன் காய்களை உள்ளங்கையில் வைத்து உருட்டுகையிலேயே தனக்கு வேண்டிய எண் விழுவதற்குத் தோதாகத் தன் சுண்டுவிரலைப் பயன்படுத்திக் காய்களை மாற்றி அமைப்பதைக் கவனித்து விட்டார்.  ஆனால் மற்றவர்களோ ஷகுனிக்கு என்ன எண் விழுந்தது என்பதை அறியும் ஆவலில் எம்பி எம்பிப் பார்த்தனர்.  திருதராஷ்டிரனுக்குப் பொறுமை இல்லை. அவன் சஞ்சயனிடம், “சஞ்சயா, என்ன நடக்கிறது?” என்று வினவினான்.

ஷகுனி பகடைக்காய்களை உற்றுப் பார்த்துவிட்டு, யுதிஷ்டிரனிடம், “மூத்தவரே, நாங்கள் தான் வென்றோம்!” என்றான் மகிழ்ச்சியுடன். துரியோதனனின் ஆதரவாளர்களான அரசர்களும், குரு வம்சத் தலைவர்களும் இதைக் கேட்டு நகைத்தனர். ஒரு சிலர் அமைதியை வேண்டி, ‘சாது, சாது’ என்று கோஷித்தனர். அனைவரும் பீஷ்மர் இருந்த பக்கம் பார்த்தனர். அவர் முகத்தைப் பார்த்ததும் துரியோதனன் ஆதரவாளர்களின் உற்சாகம் வடிய ஆரம்பித்தது. பீஷ்மர் முகம் உணர்ச்சிகள் அற்ற சலவைக்கல் சிற்பம் போல் காணப்பட்டது. ஷகுனியின் பேச்சைக் கேட்ட, யுதிஷ்டிரன் உடனே, “சரி, இப்போது எனக்குப் பரிசாக வந்த விலை உயர்ந்த நகைகள், தங்கக் கட்டிகள், பாளங்கள் ஆகியவற்றைப் பணயம் வைக்கிறேன்.” என்றான். அவனுடைய சொத்துக்களை இம்முறையில் பிரிய நேர்வது குறித்து அவன் மனம் வருந்தியது. எப்படியேனும் விளையாட்டில் ஜெயிக்க வேண்டும் என்று நினைத்துப் பொறுமை இழந்தான்.

தன் ஆட்டத்தை ஆடிய யுதிஷ்டிரனிடம் இருந்து மீண்டும் காய்களை வாங்கிய ஷகுனி தன் உள்ளங்கைகளில் வைத்து அவற்றை உருட்டி முன்னர் ஆடியது மாதிரியே தனக்குச் சாதகமான எண்களைக் கொண்டு வந்து, “மீண்டும் நாங்களே வென்றோம்!” என்று கூறிக் கொண்டு கிண்டலாகச் சிரித்தான்.  ஆட்டம் தொடர்ந்து ஆடப்பட்டது. அவை முழுவதும் ஓர் இறுக்கமான சூழ்நிலையில் தவித்தது. சற்றும் எதிர்பாராவண்ணம் ஆட்டத்தில் சூடு பிடித்தது. ஒவ்வொரு விளையாட்டின் போதும் யுதிஷ்டிரன் தன் சொத்துக்களை ஒவ்வொன்றாகப் பணயம் வைத்தான். துரியோதனனும் அதே போல் யுதிஷ்டிரனின் சொத்துக்களுக்கு ஈடான பணயத்தைத் தானும் வைப்பான். யுதிஷ்டிரன் விளையாடியதும் ஷகுனி விளையாடுவான். தன் உள்ளங்கைகளில் வைத்து உருட்டிய வண்ணம் பகடைக்காய்களைத் தன் சுண்டு விரலால் தேவைக்கேற்றபடி மாற்றிக் கொண்டு தந்திரமாக விளையாடினான் ஷகுனி. ஒவ்வொரு ஆட்டத்திலும் தான் ஜெயித்ததை ஓர் மந்திரம் போல மகிழ்ச்சியுடன் கூறிக் கொண்டு சந்தோஷம் அடைந்தான். துரியோதனனின் ஆதரவாளர்கள் தங்கள் தொடைகளைத் தட்டிக் கொண்டும் மகிழ்ச்சிக் கூக்குரல் இட்டுக் கொண்டும் மகிழ்ச்சியைத் தெரிவித்துக் கொண்டனர்.

பீஷ்மர் யுதிஷ்டிரனையே வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்தார். யுதிஷ்டிரன் நடந்தவை எதுவும் தன்னைப் பாதிக்காதது போல் காட்டிக் கொண்டு சிரித்த முகத்துடன் தொடர்ந்து ஆடினான். சற்றும் தயக்கமின்றிப் பாய்ச்சிக்காய்களை உருட்டி வீசினான். ஒவ்வொரு விளையாட்டிலும் தன் சொத்துக்களைப் பணயம் வைத்த யுதிஷ்டிரன் பின்னர் தன் ஈடு இணையற்ற ரதப்படைகளின் ரதங்கள், குதிரைகள், யானைகள், தன் படை வீரர்கள், மற்றும் யுதிஷ்டிரனுக்கே சொந்தமான அடிமைகள், அவன் அரண்மனைக் கஜானா மற்றும் தானியக் களஞ்சியம் என ஒவ்வொன்றாய்ப் பணயம் வைத்து வரிசையாக எல்லாவற்றையும் இழந்தான். ஒவ்வொரு முறையும் ஷகுனி தன் அறிவிப்பை ஓர் மந்திரம் போல் கூறி வந்தான். “மூத்தவனே, நாங்கள் வென்றோம்!”

அங்கிருந்த மற்ற நடுநிலை வகிக்கும் அரசர்களில் பலருக்கும் இதைக் காணப் பொறுக்கவில்லை. ஏனெனில் ஷகுனி தந்திரத்தின் மூலமே ஒவ்வொரு ஆட்டத்திலும் ஜெயித்து வருகிறான் என்பதை அவர்களும் கண்டு கொண்டனர். ஆனாலும் இத்தனை இழந்தும் யுதிஷ்டிரனின் மலர்ந்த முகமும் உற்சாகமான போக்கும் விளையாட்டில் காட்டிய ஈடுபாடும் அவர்களை வியக்க வைத்தது.  ஒரு தேர்ந்த சூதாட்டக்காரனைப் போல் அவன் தொடர்ந்து அடுத்து, அடுத்து என விளையாடி வந்தான்.  ஆயிற்று. இனி ஏதும் இல்லை. தொடர்ந்து ஆடிய யுதிஷ்டிரன் அனைத்து சொத்துக்களையும் இழந்ததோடு அல்லாமல் தன் தம்பிகளின் சொத்துக்களையும் பணயம் வைத்து இழந்தான். அப்போது ஷகுனி அவனிடம் இகழ்ச்சியாக, “ நல்லது, மூத்தவனே, உன்னிடம் இனி பணயம் வைக்க ஏதும் இல்லை. எல்லாவற்றையும் இழந்து விட்டாய். ஆகவே இனி நீ இழந்தவற்றை மீட்க வேண்டுமானல் உனக்கே உனக்கு எனச் சொந்தமான ஒன்றைத் தான் பணயம் வைக்க வேண்டும். அப்படி உனக்கெனச் சொந்தமாக என்ன இருக்கிறது?” என்று கேட்டான். இதைக் கேட்ட விதுரர் மனம் கொதித்தார். மெல்ல மெல்ல ஷகுனி யுதிஷ்டிரனை அவன் சகோதரர்களை ஒவ்வொருவராகப் பணயம் வைக்கும்படி தூண்டி வருவதை விதுரர் புரிந்து கொண்டார்.

Sunday, December 18, 2016

மாயச் சூதினுக்கே ஐயன் மனமிணங்கி விட்டான்!

துரியோதனனும், ஷகுனியும் யுதிஷ்டிரன் இனி இந்த விளையாட்டு ஆடுவதிலிருந்து பின்வாங்க முடியாது என்பதை நன்கறிந்திருந்தனர்.  வசமாக யுதிஷ்டிரன் மாட்டிக் கொண்டான் என்பதும் புரிந்திருந்தது இருவருக்கும். அப்படி அவன் விளையாடாமல் ஒதுங்கினால் இந்த மாபெரும் சபையின் முன்னர் அவன் ஓர் கோழையாகவும் தொடை நடுங்கியாகவும் அறிவிக்கப்படுவான் க்ஷத்திரிய குலத்துக்கே ஓர் அவமானச் சின்னமாகவும் அறிவிக்கப்படுவான். ஆகவே யுதிஷ்டிரனால் இந்த சூதாட்டம் ஆடுவதிலிருந்து தப்ப இயலாது. 

ஷகுனி கேட்டான்:"யுதிஷ்டிரா, நீ என்னுடன் சூதாட்டம் ஆடும்போது ஏமாற்றப்பட்டு விடுவோம் என்று அஞ்சுகிறாயா? அப்படி உனக்கு அச்சமாக இருந்தால் சொல்லி விடு. நாம் விளையாட வேண்டாம்." என்றான் எகத்தாளமாக. "இல்லை, காந்தார இளவரசரே! இந்த ஆணையைப் பிறப்பித்தவர் குரு வம்சத்தின் தலைவர். அவர் ஆணையை நான் மதித்தே ஆகவேண்டும். ஆகவே நான் விளையாடப் போகிறேன்." என்றான் யுதிஷ்டிரன். அப்போது சங்குகளும், பேரிகைகளும் முழங்கின. கட்டியம் கூறுவோரின் தொனிகளில் இருந்து பிதாமஹர் பீஷ்மரும், அரசன் திருதராஷ்டிரனும் வருகிறார்கள் என்பது புரிந்தது. இரு மெய்க்காவல் படை வீரர்கள் கைகளில் தங்கத் தகட்டால் மூடப்பட்ட தண்டாயுதங்களை ஏந்தியபடி உள்ளே நுழைந்து நுழைவாயிலுக்கு இருபுறமும் நின்று கொண்டனர்.

இரு தலைவர்களும் உள்ளே நுழைந்ததும் அங்கே அமர்ந்திருந்த ஸ்ரோத்திரியர்கள் அனைவரும் எழுந்து கொண்டு மந்திர கோஷங்கள் செய்து அவர்களை ஆசீர்வதித்து, வாழ்த்துகள் சொல்லி வரவேற்க மற்றவர் மரியாதையுடன் தலை குனிந்து வரவேற்றனர். சஞ்சயன் திருதராஷ்டிரனைக் கைப்பிடித்து அவனுடைய ஆசனத்துக்கு அழைத்துச் சென்றான். அவர்களுக்குப் பின்னர் துரோணாசாரியார், அஸ்வத்தாமா மற்றும் கிருபர் ஆகியோரும் வந்தனர். அதன் பின்னர் குரு வம்சத்தின் மற்ற உயர் பதவிகளில் இருக்கும் தலைவர்கள் அணி வகுத்து வந்தனர்.  உள்ளே நுழைந்த பீஷ்மரின் கழுகுக்கண்கள் அங்கிருந்த அனைவரையும் நோட்டம் விட்டன. அவர் முகம் இறுக்கமாக இருந்தது. 

அந்த மாபெரும் அவையின் இத்தனை வருட பாரம்பரியத்திற்குப் பொருந்தாத வகையில் பெரும்பாலான குரு வம்சத்துத் தலைவர்கள் ஆயுதபாணியாக வந்திருப்பதை அவர் கண்டு கொண்டார். அவர் மட்டும் இந்த விளையாட்டின் போது தலையிட்டால் ஷகுனி அதை எதிர்கொள்ளத் தயாராகக் காத்திருந்தான். ஆனால் அது தான் அந்த இடையூறும் எதிர்கொள்ளலுமே குரு வம்சத்தின் முடிவாகவும் அமையலாம். மொத்த அவையும் ஓர் எதிர்பார்ப்பிலும் நடுக்கத்திலும் அடுத்து நடக்கப் போவதற்காகக்  காத்திருந்தது.

சகோதரர்கள் ஐவரும் பீஷ்மருக்கும், திருதராஷ்டிரனுக்கும் நமஸ்கரிக்க, துரியோதனாதியரும் அதைப் பின்பற்றினார்கள். கர்ணனும் ஷகுனியும் கூட அனைவருக்கும் நமஸ்கரித்தனர். யுதிஷ்டிரன் கீழே விழுந்து நமஸ்கரிக்கையில் பீஷ்மர் குனிந்து அவனைத் தூக்கினார். தன்னுடன் ஆரத் தழுவிக் கொண்டு அவனை உச்சி முகர்ந்தார். அங்கிருந்த அனைவருக்கும் இந்த அன்பும், பாசமும் கண்டு ஆச்சரியம் ஏற்பட்டது. யுதிஷ்டிரனிடம் பீஷ்மர் அளவற்ற பாசம் வைத்திருப்பதைக் கண்டு வியந்தனர். அவர்கள் அனைவருக்கும் இந்த சூதாட்டத்தில் என்ன நடந்தாலும் அதில் பீஷ்மர் தலையிடப் போவதில்லை என்று வாக்களித்திருப்பது குறித்துத் தெரிந்திருந்தது. ஆனால் அதற்கும் இப்போது யுதிஷ்டிரன் பால் பீஷ்மர் காட்டிய பாசத்துக்கும் சம்பந்தம் ஏதும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டனர்.

யுதிஷ்டிரனின் இந்த முடிவு ஓர் வீரதீர சாகசமானதாகவே பீஷ்மர் எண்ணினார். அதற்காக அவனைப் பாராட்டவும் செய்தார். உண்மைக்கும், நேர்மைக்கும், சமாதானத்திற்கும், தர்மத்தின் வழி நடப்பதற்காகவும் அவன் தன்னையும் தன் குடும்பத்தையும் பணயம் வைக்கிறான் என்பதை பீஷ்மர் நன்கறிந்திருந்தார். இந்தக் குரு வம்சத்தில் இவன் ஒருவனாவது தர்மத்தின் வழி நடப்பதில் உறுதியுடன் இருக்கிறான் என்பதைக் கண்டு பீஷ்மர் உள்ளூர மகிழ்ந்தார். எத்தனை தடைகள் வந்தாலும் என்ன பிரச்னைகள் வந்தாலும் தர்மத்தைக் காப்பதில் யுதிஷ்டிரனுக்கு உள்ள உறுதியைக் கண்டு ஆனந்தம் அடைந்தார்.  அனைவரும் தங்கள் ஆசனங்களில் அமர்ந்தனர். ஆசிகளைக் கூறும் மந்திர கோஷங்களைச் செய்தனர் அங்கிருந்த அந்தணர்கள் அனைவரும். வந்திருந்த தலைவர்கள் அனைவரும் அவரவருக்குரிய ஆசனங்களில் அமர்ந்தனர்.

விதுரரும், சஞ்சயனும் கூட அவரவர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டனர். ஒருவர் பீஷ்மரின் காலடிகளுக்கு அருகேயும், சஞ்சயன் திருதராஷ்டிரனின் காலடிகளுக்கு அருகேயும் அமர்ந்தனர். பின்னர் இருவரும் பீஷ்மரைப் பார்க்க அவர் அனுமதி அளிக்கத் தொடர்ந்து திருதராஷ்டிரனும் அனுமதி அளிக்க விதுரர் அறிவிப்புச் செய்தார்!

"பிதாமஹர் பீஷ்மரும், சக்கரவர்த்தி திருதராஷ்டிரனும் இட்ட கட்டளையின் பேரில் இப்போது ஆட்டம் ஆரம்பிக்கத் தொடங்கும்!"

Saturday, December 3, 2016

வல்லுறு சூதெனும் போர் தனில் வலிமைகள் பார்க்குதும் வருதி!

ஆசாரியர் தௌமியரும், ஆசாரியர் சோமதத்தரும் இருவருக்கும் மரபு ரீதியான முறையில் வரவேற்பு அளித்துத் தக்க மந்திர கோஷங்களால் பெருமைப் படுத்தினார்கள்.  யுதிஷ்டிரன் தன் சகோதரர்களுடனும், துரியோதனன் தன் குழுவினருடனும் நுழைவாயிலுக்கருகே பெரியோர்களை எதிர்பார்த்துக் காத்திருந்தனர். துரியோதனாதியரும் மற்றக் கௌரவர்களும் தாங்கள் விரித்த பொறியில் பாண்டவர்கள் மாட்டிக் கொண்டதை எண்ணி இறுமாப்புடன் இருந்தனர். மிகவும் வெற்றிகரமாக அமைந்து விட்டது எனக்  குதூகலித்தனர். அதைக் கண்ட யுதிஷ்டிரனுக்குத் தனக்குள்ளாகச் சிரிப்பு வந்தது. அவர்கள் தன்னை மாட்டுவதற்கு விரித்த வலையே தனக்கு ஓர் சந்தர்ப்பமாகப் பயன்படப் போவதை அவர்கள் அறிய மாட்டார்கள் என்று நினைத்துக் கொண்டான். தற்செயலாக அவன் துரியோதனன் அருகே நிற்க நேரிட்டது. உடனே அவன் மனம் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு துரியோதனன் மனதை வெல்ல வேண்டும். இந்த சூதாட்டமே தேவையில்லை என்றெல்லாம் எண்ணியது. அதன் மூலம் சமாதானம் பிறக்கட்டுமே! “சகோதரா! இந்தச் சூதாட்டத்தை நாம் ஆடுவது அவ்வளவு முக்கியமா?” என்று துரியோதனனிடம் கேட்டான். அவனை ஈர்க்கும் குரலில், “நாம் இந்தச் சூதாட்டம் இல்லாமலே சமாதானமாக இருக்கலாம்!” என்றும் சொன்னான்.

“இந்த ஆட்டத்தில் என்ன தப்பைக் கண்டாய்? இதை ஆடுவதில் என்ன தவறு?” என்று கேட்டான் துரியோதனன். அதற்கு யுதிஷ்டிரன், “சூழ்ச்சிகளால் நிறைந்த ஓர் சூதாட்டத்தை ஆடுவதை விடப் போர் புரிவது மிகவும் உத்தமமான ஒன்று! இந்தச் சூதாட்டத்தினால் நம் நட்புத் தான் சிதையப் போகிறது!” என்றான். அதைக் கேட்டுக் கொண்டிருந்த ஷகுனி தன்னையும் அந்தப் பேச்சில் இணைத்துக் கொண்ட வண்ணம், “மூத்தவனே, ஏன் பயப்படுகிறாய்? சூதாட்டத்திலிருந்து தப்புவதற்கு ஏன் முயல்கிறாய்?” என்று கேட்டான் யுதிஷ்டிரனிடம். அவனைப் பார்த்துக் கருணையுடன் சிரித்தான் யுதிஷ்டிரன். “மாட்சிமை பொருந்திய காந்தார இளவரசர், ஷகுனி அவர்களே, வணக்கம். இந்தச் சூதாட்டத்தின் பாய்ச்சிக்காய்களை எடுத்து ஆடும் ஓர் மனிதன் எவ்வளவு விவேகமுள்ளவனாக இருந்தாலும் விரைவில் ஓர் முட்டாளாகவோ அல்லது தந்திரங்களும் சூழ்ச்சிகளும் நிறைந்தவனாகவோ ஆகி விடுகிறான் ஆகவே இந்த ஆட்டத்தை நாம் ஆடவே வேண்டாம்!!” என்றான்.

ஷகுனி ஒரு சீறலுடன் மற்ற அரசர்களையும் அரசகுடும்பத்தினரையும் நோக்கித் திரும்பினான். ஓர் தேர்ந்த வில்லாளியைப் போல் அவன் மற்றவர்களைப் பார்த்து, “ உங்களுக்கெல்லாம் இந்த யுதிஷ்டிரன் ஏன் சூதாட்டத்தை அதுவும் அரசர்கள் ஆடும் இந்த ஆட்டத்தை ஆட மறுக்கிறான் என்பது எளிதாகப் புரிந்திருக்கும். அவன் வாழ்க்கையில் முதல் முதலாக ராஜசூய யாகத்தை நடத்தி அதன் மூலம் ஏராளமான செல்வங்களைச் சம்பாதித்து விட்டான். அதை விட்டுப் பிரிய அவனுக்கு மனமில்லை!” என்றான். அங்கே பரிகாசமும் ஏளனமும் நிறைந்த சிரிப்புக் கிளம்பியது. அதன் பின்னர் ஷகுனி யுதிஷ்டிரன் பக்கம் திரும்பி, “மூத்தவனே! உன் செல்வங்களை நீயே வைத்துக் கொள். இந்தச் சவாலை ஏற்று ஆட்டத்தை ஆட நீ மறுத்தால் விளையாட வேண்டாம்! விட்டு விடலாம்!” என்று தூண்டும் குரலில் கூறினான்.

யுதிஷ்டிரனைப் பார்த்து அவமதிப்பும் அலட்சியமும் துலங்கும்படி சிரிக்க மற்றவர்களும் அதைப் பின்பற்றிச் சிரித்தார்கள். ஆனால் யுதிஷ்டிரன் ஷகுனி சொன்ன மனதைப் புண்படுத்தும் வார்த்தைகளின் தாக்கத்தை அலட்சியம் செய்துவிட்டுச் சாதாரணமான குரலில், “அப்படி எல்லாம் இல்லை மாட்சிமை பொருந்திய ஷகுனி அவர்களே! நீங்கள் தப்பாகப் புரிந்து கொண்டு விட்டீர்கள். எனக்கு எதிலும் பயமோ அச்சமோ இல்லை. ஒன்றே ஒன்றைத் தவிர! அது தான் அதர்மப் பாதையில் செல்வது! அதர்மமாய் நடப்பது! அதோடு எனக்கு செல்வங்களைக் குறித்துக் கவலையும் இல்லை. இவை எல்லாம் சற்றும் முக்கியமில்லாத விஷயங்கள், நான் இவற்றுக்கெல்லாம் முக்கியத்துவம் கொடுப்பதே இல்லை! மாட்சிமை பொருந்திய குரு வம்சத்து அரசர் எனக்கு ஆணை பிறப்பித்திருக்கிறார். இந்தச் சூதாட்டத்தை நான் ஆடியே ஆகவேண்டும் என்று சொல்லி இருக்கிறார். ஆகவே நான் இந்த ஆட்டத்தை ஆடத் தான் போகிறேன். அல்லது நாங்கள் இருவருமாகச் சேர்ந்தே இந்த ஆட்டத்தை வேண்டாம் என்று சவாலைத் திரும்ப பெற்றாக வேண்டும்.” என்றான்.

துரியோதனன் சொன்னான்:”மூத்தவனே! நான் உன்னிடம் ஒரு வேண்டுகோள் விடுக்கலாமா? நான் ஓர் வித்தியாசமான ஆட்டக்காரன். ஆகவே எனக்குப் பதிலாக ஷகுனி மாமாதான் உன்னுடன் ஆடப் போகிறார்.” என்றான். யுதிஷ்டிரன் ஷகுனியையும் அவன் ஆட்டத்தையும் குறித்து நன்கு அறிவான். ஷகுனி ஓர் மந்திரவாதியைப் போல் ஆடி துரியோதனன் பக்கம் வெற்றியைத் தேடித் தருவான். இவன் எனக்கு எதிராக விளையாடினான் எனில் நான் வெல்வது எப்படி? சற்றும் இயலாத ஒன்று! ஹூம்! இந்திரப் பிரஸ்தம் என் கைகளை விட்டுப் போகவேண்டுமெனில் அது விரைவில் நடந்து முடிந்து விடும்!” என்று நினைத்துக் கொண்டான். ஆனாலும் அவன் அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல் மேலே சொன்னான்:” துரியோதனா, சகோதரா! இன்று வரை இந்த ஆட்டம் உரியவரால் மட்டுமே விளையாடப் பட்டதாக அறிந்திருக்கிறேன். பிரதிநிதிகளால் மற்றவருக்காக ஆடப்பட்டதை அறியவில்லை. ஆகவே இந்த ஆட்டத்தை நீயே ஆட வேண்டும், பந்தயம் என்ன என்பதையும் பிணையத் தொகையையும் அறிவிக்க வேண்டும்!” என்று கேட்டுக் கொண்டான்.

ஷகுனி துரியோதனனின் உதவிக்கு வந்தான். “இதோ பார், யுதிஷ்டிரா! இந்த ஏற்பாட்டில் எந்தவிதமான தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.” என்று சொன்னவன் மீண்டும் ஓர் சீறலுடன், “மூத்தவனே, நீ தான் ஏதேதோ சாக்குப் போக்குகள் சொல்லித் தப்பிக்க நினைக்கிறாய்! இந்த ஆட்டத்தை ஆடாமல் தப்பித்து உன் செல்வங்களைக் காப்பாற்றிக் கொள்ள நினைக்கிறாய்! எப்படியேனும் போகட்டும்! உனக்கு இந்த ஆட்டத்தை ஆடுவதில் விருப்பமில்லை எனில் வெளிப்படையாகச் சொல்லி விடு! ஏன் ஏதேதோ கூறி தப்பப் பார்க்கிறாய்?” என்று கேட்டான். பின்னர் ஷகுனி கேலியாகச் சிரித்தான். துரியோதனனும் துஷ்சாசனும் கூட அதைக் கண்டு அந்தச் சிரிப்பில் கலந்து கொண்டு யுதிஷ்டிரனை அவமதித்தனர்

Friday, December 2, 2016

தெய்வமே துணை!

தர்பார் மண்டபத்துக்குள் அடி எடுத்து வைத்தான் யுதிஷ்டிரன். அந்த தர்பார் மண்டபத்தில் அவன் யுவராஜாவாக இருந்தபோது நிகழ்ந்த சில சந்தோஷமான நிகழ்வுகள், சம்பவங்கள் அவன் மனக்கண்கள் முன்னே தோன்றின. முதன் முதலில் அவனும் அவன் சகோதரர்களும் இந்த தர்பார் மண்டபத்தினுள் நுழைந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்தான். பல வருடங்கள் முன்னர் அவர்கள் சிறுவர்களாக இருந்தபோது அவன் தாய் குந்தியுடன் இங்கே வந்ததையும் அவனையும் அவன் சகோதரர்களையும் பாண்டுவின் புத்திரர்களாக இந்தக் குருவம்சத்தினர் அங்கீகரித்த அந்த நாளும் அவன் நினைவில் வந்தது. அந்த நாட்கள்! எவ்வளவு சந்தோஷமானவை! மறக்கவும் முடியாத நாட்கள் அவை! அதன் பின்னரே அவன் வாலிபப்பருவம் எய்தியதும் இதே தர்பார் மண்டபத்தில் தான் யுவராஜாவாகப் பட்டாபிஷேஹம் செய்விக்கப்பட்டான் அதை ஒட்டி இந்த ஹஸ்தினாபுரத்தின் அநேக நிகழ்ச்சிகளிலும், கொண்டாட்டங்களிலும் ஓர் யுவராஜாவாக அவன் பங்கேற்றிருக்கிறான். அதன் பின்னர் தான் அவன் இந்தக் குரு வம்சத்தினரின் அரசனாக அறிவிப்புச் செய்யப்பட்டான். பின்னர் துரியோதனனால் அவனும் அவன் சகோதரர்களும் இந்த தர்பார் மண்டபத்திலிருந்து விடைபெற்று வெளியேற்றப்பட்டார்கள்.

இவை எல்லாம் நடைபெற்ற சமயங்களில் எல்லாம் இங்கே கூட்டம் கூட்டமாகப் பொதுமக்களும் குரு வம்சத்துத் தலைவர்களும் அமர்ந்திருந்து அவனுக்குத் தக்க மரியாதைகள் செய்து தங்கள் அங்கீகாரத்தைத் தெரிவித்துக் கொண்டனர். இங்கே தான் அவன் ஆட்சி அதிகாரம் குறித்த நடவடிக்கைகள் குறித்தும் ராஜ்ய நிர்வாகம் குறித்தும் அறிந்து கொண்டான். இமயமலையிலிருந்து பெருகிப் பிரவாகம் எடுத்து ஓடும் கங்கையைப் போல் தர்மத்தின் பாதையில் அவன் செல்லவேண்டியதைக் குறித்தும் தர்மத்தைக் குறித்தும் இங்கே தான் அறிந்து கொண்டான். தர்மத்தின் ஊற்று இந்த தர்பார் மண்டபம் என்பது அவன் முடிவு! சத்தியத்தின் பேரொளி இங்கே பிரகாசித்து வருவதாகவும் எண்ணினான். அப்படிப் பட்ட தர்பார் மண்டபம் இன்று? சதியாலோசனை நடக்கும் இடமாகவும் இழிந்த செயல்களைச் செய்யும் இடமாகவும் சூழ்ச்சிகளின் பிறப்பிடமாகவும் மாறி விட்டது! இதன் ஒளி மங்கி விட்டது! தன் புனிதத்தை இந்த தர்பார் மண்டபம் இழந்து விட்டது.

இங்கே இனி தொடர்ந்து எரியப் போகும் சூழ்ச்சியாகிய அக்னியில் அவன் ஓர் பலியாடாக மாறித் தன்னைத் தானே பலி கொடுத்துக் கொள்ளப் போகிறான். அது தான் கடவுளின் விருப்பம் போலும்! இதன் மூலம் அவன் தன்னை மட்டுமல்லாமல் தன் குடும்பத்தையே மனைவி, தாய், சகோதரர்கள் உள்பட பலி கொடுக்கப் போகிறான். ஆனால் உள்ளுக்குள் அவன் மனம் அவனையும் அவனுடன் கூடச் சேர்ந்து இந்த சூதாட்டம் என்னும் துர்பிரயோக யாகத்தில் பங்கெடுப்பதைப் பாராட்டிக் கொண்டிருந்தது. ஏனெனில் அவனும் அவன்  சகோதரர்களும் இதன் மூலம் அமைதியையும் சமாதானத்தையுமே விரும்புவதை வெளிப்படையாகச் சொல்ல முடியும்! அவர்களுக்குத் தேவையானதும் அதுவே! ஓர் மாபெரும் யுத்தம் ஏற்படுவதைத் தடுத்தாக வேண்டும். அதற்குரிய விலை அவனும் அவன் சகோதரர்கள் மற்றும் குடும்பமும் தான் என்றால் அவன் அவற்றை பலி கொடுக்கவும் தயங்கப் போவதில்லை.

அந்த மாபெரும் சபாமண்டபத்தின் நுழைவாயிலுக்கு எதிரே ஓர் பக்கத்தில் ஓர் மேடையின் மேல் ஐந்து ஆசனங்கள் போடப்பட்டிருந்தன. மேடையின் நடுவே போடப்பட்டிருந்த இரு சிங்காதனங்களும் ஒன்று பிதாமஹர் பீஷ்மருக்கும் இன்னொன்று மன்னன் திருதராஷ்டிரனுக்கும் ஆகும். இது கூட அவன் அரசனாகப் பிரகடனம் செய்யப்பட்டபோது செய்த ஏற்பாடு தான். அவனை விட உயர்வான ஸ்தானத்தில் திருதராஷ்டிரனையும் பிதாமஹரையும் வைத்திருந்தான் யுதிஷ்டிரன். அந்த வரிசையிலேயே ஆசனங்களையும் போடச் செய்வான். இப்போதும் அது தொடர்கிறது போலும்! அவர்களுக்கு அடுத்தபடியாகக் கொஞ்சம்கீழ் வரிசையில் போடப்பட்டிருந்த ஆசனங்கள் அனைத்தும் துரியோதனனுக்கும் அவன் குழுவினருக்குமானது ஆகும். துரியோதனனுக்குச் சமமாகப் போடப்பட்டிருந்த அந்த இன்னொரு ஆசனம் ஒருவேளை யுதிஷ்டிரனுக்காக இருக்கும். அவன் தாய் மற்ற சகோதரர்களும் அந்த ஐந்து ஆசனங்களில் அமரலாம். அல்லது திரௌபதி அமரலாம்.

இவர்களுக்கு அருகே கொஞ்சம் சின்ன ஆசனங்கள் போடப்பட்டிருந்தன. இருபக்கங்களிலும் காணப்பட்ட அவை ஒன்று துரோணருக்கும் இன்னொன்று கிருபருக்கும் ஆகும். எல்லா ஆசனங்களின் பின்னாலும் ஓர் சாமரம் வீசும் பெண் சிலையைப் போல் அசையாமல் நின்று கொண்டிருந்தாள். இவர்களுக்கெல்லாம் சற்றுத் தள்ளிப் பொன்னால் வேயப்பட்ட தகட்டைப் பொருத்தி மான் தோலால் மூடப்பட்டிருந்த ஆசனங்கள் கௌரவர்களின் ராஜகுருவான ஆசாரியர் சோமதத்தருக்கும் இன்னொன்று பாண்டவர்களின் ராஜகுருவான தௌமியருக்கும் ஆகும். அந்த மேடையின் வலது ஓரத்தில் மற்ற ஸ்ரோத்திரியர்கள் அமர்ந்து கொண்டு மத, சாஸ்திர ரீதியான சடங்குகளைச் செய்ய ஏதுவாகத் தயார் நிலையில் இருப்பார்கள். இவர்களை அடுத்துக் குரு வம்சத்தின் மற்றத் தலைவர்களும் அரசகுடியில் பிறந்தவர்களும் அமர்ந்திருப்பார்கள்.

எல்லாவற்றிலிருந்தும் சற்றுத் தள்ளி ஓர் சின்ன மேடை அந்த தர்பார்மண்டபத்தின் நடுவில் காணப்பட்டது. அந்த மேடையில் தந்தத்தால் ஆன சொக்கட்டான் விளையாடும் பலகை ஒன்று வைக்கப்பட்டிருந்தது. பகடை விளையாட்டின் பாய்ச்சிக்காய்கள் அங்கே விரிக்கப்பட்டிருந்த பட்டு விரிப்பில் வீசி விரிக்கப்படும் அந்தக் காய்கள் அடங்கிய ஓர் வெள்ளிச் சொம்பும் அங்கே இருந்தது. ஏற்பாடுகள் அனைத்தையும் பார்த்த யுதிஷ்டிரனுக்குத் தன்னையும் அறியாமல் சிரிப்பு வந்தது. இந்தப் பாய்ச்சிக்காய்கள் தான் அவன் செய்யப் போகும் மாபெரும் தியாகத்துக்கு ஓர் அடையாளச் சின்னமாக விளங்கப் போகின்றன. இவற்றின் மூலம் தான் அவன் அமைதியையும் சமாதானத்தையும் பெறப் போகிறன். நடக்கப் போகிற நிகழ்ச்சியைக் குறித்த நினைவுகள் அவன் மனதில் வருத்தத்தை ஏற்படுத்தியது. அவன் தங்களுடைய பரம்பரையையே அடகு வைத்துத் தன் சகோதரர்களைக் கொள்ளை அடிக்கப் போகிறான்.  தன்னுடன் அருகே வந்து கொண்டிருந்த  பீமனை ஓர் பார்வை பார்த்தான். அவனுடைய தைரியமான சகோதரன்; அவனுக்குப் பிரியமானவன். யுதிஷ்டிரனுக்கு ஓர் பிரச்னை என்றால் அடுத்த கணமே முன்னுக்கு நிற்பவன். இப்போதும் வந்துவிட்டான்.

ஆனால் பீமனின் முகம் செக்கச்செவேர் எனச் சிவந்து கண்கள் கோபத்தில் ரத்தம் போல் காணப்பட்டன. அடுத்து அர்ஜுனன், நகுலன், சஹாதேவன் ஆகிய மூவரும் தலை குனிந்த வண்ணமே வந்தனர். தரையிலிருந்து அவர்கள் கண்களை மேலெடுத்துப் பார்க்கவே இல்லை. அவனிடம் அவர்களுக்கு இருந்த விசுவாசத்தின் காரணத்தால் தங்கள் முடிவு, உள்ளுணர்வு எல்லாவற்றையும் தூக்கி எறிந்துவிட்டு அவனைச் சரண் அடைந்து விட்டார்கள். உண்மையில் அவர்கள் மிகவும் மனவேதனையில் இருந்தனர். அவன் விரும்புவதெல்லாம் தன் சகோதரர்களின் மகிழ்ச்சியைத் தான்! ஆனால் இப்போதோ! ஓர் மாபெரும் புயலில் சூறாவளியில் அவர்களுடைய மகிழ்ச்சியை எல்லாம் அடித்துக் கொண்டு போகும்படி யுதிஷ்டிரனே செய்யப் போகிறான். துரதிர்ஷ்டத்தில் அவர்களை மூழ்கடிக்கப் போகிறான்.

தன் தாய் குந்தியையும், மனைவி பாஞ்சாலியையும் மகிழ்ச்சியுடனும் திருப்தியுடன் வைத்துக் கொள்வதே யுதிஷ்டிரனுக்குத் தலையாய கடமை! ஆனால்! அவனே அவர்களைத் துன்பத்திலும் துயரிலும் தாங்கொணா சோகத்திலும் ஆழ்த்திவிட்டான்.  ஆனாலும் இதனால் எல்லாம் அவனுக்கு சங்கடங்கள் ஏதும் இல்லை. எத்தனை எத்தனை ரிஷிகள்! முனிவர்கள்! உண்மையைக் கடைப்பிடிப்பதற்காகவும் கடைப்பிடித்ததற்காகவும் இறக்கும்படி நேரிட்டிருக்கிறது! ததீசி என்னும் புராண காலத்து முனிவர் ஒருவர் தன் முதுகெலும்பையே தேவர்களுக்காகத் தியாகம் செய்திருக்கிறார். அவர் அசுரர்களை வெல்ல வஜ்ராயுதம் தயாரிக்கத் தன் முதுகெலும்பைக் கொடுத்து உதவி இருக்கிறார். இதன் மூலம் தேவர்கள் அசுரர்களை வெல்ல உதவி இருக்கிறார். ஆகவே இந்த தவம் என்னும் நெருப்பில் வேகாமல் எதையும் சாதிக்க இயலாது! அவன் சமாதானத்தையும் அமைதியையும் நிலைநாட்ட வேண்டுமெனில் இந்தச் சின்னத் தியாகம் அவசியமானதே! இது அவன் நிலைநாட்டப் போகும் அமைதிக்கு முன்னர் ஓர் சின்ன விலையே ஆகும்.

அங்கே அமர்ந்திருந்த குருவம்சத்துத் தலைவர்கள் அனைவரும் யுதிஷ்டிரனைக் கண்டதுமே தங்கள் கைகளைக் கூப்பியவண்ணம் அவனை நமஸ்கரித்தார்கள். ஒரு சிலர் கீழே விழுந்தும் வணங்கினார்கள். அவர்களில் சிலர் முகங்களில் மகிழ்ச்சியே இல்லாததையும் யுதிஷ்டிரன் கவனித்தான். இன்னும் சிலர் துரியோதனனின் பக்கம் ஆதரவு தெரிவிப்பவர்கள் தங்கள் மகிழ்ச்சியை உள்ளூர வைத்துக் கொண்டு வெளிக்காட்டாமல் இருந்தார்கள். துரியோதனன் வெல்வதற்கு அவர்கள் காத்துக் கொண்டிருந்தார்கள். துரியோதனன் இந்திரப் பிரஸ்தத்தை வென்றதும் அதன் செல்வங்களையும் மற்ற பொக்கிஷங்களையும் கொள்ளை அடித்து அனுபவிக்கத் துடித்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே அவர்கள் நோக்கமெல்லாம் துரியோதனன் வெல்ல வேண்டும் என்பதில் தான்.

அங்கிருந்த சூழ்நிலையே இறுக்கமாகக் காணப்பட்டது. எங்கும் அமைதி இல்லை என்பது போல் இருந்தது. அடுத்து என்ன நடக்குமோ என்ற கவலை சிலருக்கு இருந்தாலும் பலரும் அங்கே நடக்கப் போவது நல்லதில்லை என்பதால் காணப்பட்ட மனக்கலக்கத்துடன் இருந்தனர். துரியோதனன், துஷ்சாசனன், ஷகுனி, கர்ணன், அஸ்வத்தாமா ஆகியோர் முன்னே வந்து கொண்டிருந்தனர். சகோதரர்கள் ஐவரையும் பார்த்ததும் வரவேற்கும் பாவனையில் முகமன் கூறினார்கள். துரியோதனன் யுதிஷ்டிரனின் கால்களில் விழுந்து வணங்க அவனைத் தூக்கி நிறுத்தினான் யுதிஷ்டிரன்: “சகோதரா, உன் விருப்பத்திற்கேற்றவண்ணமே எல்லாம் நடைபெறக் கடவுள் அருள் புரியட்டும்!” என்ற வண்ணம் அவனைக் கட்டித் தழுவிக் கொண்டான்.

Thursday, December 1, 2016

பீஷ்மரின் திகைப்பு!

“யுத்தம் மூளும் என்னும் எண்ணமே என்னை நடுங்க வைக்கிறது, தாத்தா!” என்றான் யுதிஷ்டிரன். “தாத்தா, உங்களுக்குத் தெரியும்! நீங்கள் நன்கறிவீர்கள்! அது ஒரு சிங்கத்தைப் போல் ஆட்களை விழுங்கும் காட்டு மிருகங்களைப் போல் உயிருடன் மனிதர்களை உண்ணும் விலங்குகளைப் போல் வந்து கொண்டிருக்கிறது. பற்பல வீரதீரங்களைச் செய்யும் கதாநாயகர்களின் எலும்புகளால் இந்த வளமான பூமியை நிரப்பிவிடும். உடைந்த ரதங்களும், இறந்த குதிரைகளும் யானைகளுமே எங்கும் காணக்கிடைக்கும். இவற்றை எல்லாம் என்னால் பார்க்க முடியவில்லை. பெண்களும், குழந்தைகளும் ஆதரவற்று வீடின்றி இருக்க இடமின்றித் திரிவார்கள். பசுக்களும், மற்ற கால்நடைச்செல்வங்களும் அழிக்கப்படும்!”

“குழந்தாய்!, ஆசாரியர் சொல்வதற்கு முன்னரே, அவர் உதவி இன்றியே என்னால் பல்லாண்டுகளுக்கு முன்னரும் பின்னரும் போர் வருவதைக் கணிக்க முடிந்தது. குரு வம்சத்தினருக்கு தர்மம் என்றால் என்னவென்று தெரியவில்லை எனில், அரச நீதியைச் சரிவர அவர்களால் கடைப்பிடிக்க முடியவில்லை எனில் வேறு எவரால் இங்கே ஒழுங்கான ஆட்சியை, நேர்மையான ஆட்சியைத் தர முடியும்?” என்று வருத்தம் தோய்ந்த குரலில் சொல்லி நிறுத்தினார் பீஷ்மர். யுதிஷ்டிரன் முழு மனதோடு மனம் நிறைய போர் குறித்த உண்மையான வருத்தத்தோடு தான் இவற்றைச் சொல்கிறான் என்பதைக் கண்டு கொண்டார் பீஷ்மர். இதோ! ஓர் நேர்மையான ஆட்சியாளன்! தர்மத்தின் பாதையைத் தவற விடாதவன்! நேர்மைக்கும்,, நீதிக்கும் தர்மத்தின் வழியில் செல்வதற்கும் என்றே பிறந்தவன்!

“தாத்தா, தாத்தா! என்னை மன்னியுங்கள்! இந்த நேர்மை, நீதி இவற்றை எல்லாம் கடைப்பிடிப்பது என்பது ஓர் தவம் செய்வது போல் ஆகும். யக்ஞம் செய்வது போல் ஆகும். இதற்காக வாழ்பவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் தங்களைத் தாங்களே இந்த நேர்மை, நீதி என்னும் புனிதமான அக்னியில் ஆஹுதியாக இடத் தயார் நிலையில் இருக்க வேண்டும். பல இரவுகள் தூக்கமில்லாமல் கழித்த பின்னர் தான் எனக்குப் புரிந்தது தாத்தா! நான் எப்படியேனும் ஆசாரியரின் தீர்க்க தரிசனத்தைப் பொய்யாக்க வேண்டும். அதை நடக்க விடாமல் முறியடிக்க வேண்டும்! அதற்காக என் உயிரையே கொடுக்க வேண்டி இருந்தாலும் சரி! அவ்வளவு ஏன்? அதற்காக என் மனைவி திரௌபதி, என் அருமைச் சகோதரர்கள், என் தாய், எங்கள் குழந்தைகள் ஆகிய அனைவரின் உயிரையும் விலையாகக் கொடுக்க நேர்ந்தாலும் கொடுத்துவிடத் தயார்!”

“குழந்தாய், உன்னால் போரைச் சகிக்க முடியாது எனில் பின்னர் இங்கே ஏன் வந்திருக்கிறாய்? வருவதற்கு மறுத்திருக்கலாமே!”

“தாத்தா, உங்களுக்குத் தெரியாதா? நான் இங்கே வருவதற்கு மறுத்தால் துரியோதனனின் சவாலை ஏற்க மறுத்தால், பின்னர் அதற்காகவே துரியோதனன் போர் தொடுப்பான்!”

“ஆம், அதுவும் உண்மைதான். அதுவும் எனக்குத் தெரியும்!” என்றார் பீஷ்மர். “அவன் அவ்வளவு எளிதில் திருப்தி அடைய மாட்டான் குழந்தாய்! உன்னிடமிருந்து அனைத்தையும் பிடுங்கிக் கொண்டால் கூட அவன் மனம் திருப்தி அடையுமா தெரியவில்லை! ஆனால் அவன் அவ்வாறு உன்னிடமிருந்து எல்லாவற்றையும் பிடுங்கி விட்டான் எனில்? என்ன செய்யப் போகிறாய்? அதை எவ்வாறு தடுப்பாய்?”

யுதிஷ்டிரன் பணிவுடனும், விநயத்துடனும் தலையைக் குனிந்து கொண்டான். “தாத்தா, அது இறைவன் விருப்பம். இறைவன் விருப்பம் இந்திரப் பிரஸ்தத்தை நாங்கள் ஆளக் கூடாது, துரியோதனன் தான் ஆளவேண்டும் என்றிருந்தால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? நாங்கள் அதை எப்படி எதிர்ப்போம்? துரியோதனன் என்னிடமிருந்து பிடுங்கிக் கொள்ளும்படி விட மாட்டேன். நானே கொடுத்துவிடுவேன். ஒருவேளை அதன் பிறகாவது அவன் மனம் அமைதி அடையலாம். எங்களிடம் அவன் கொண்டிருக்கும் வஞ்சம் மறையலாம். அவனுடைய விஷமத் தன்மை குறையலாம்!”

“என்ன! இந்திரப் பிரஸ்தத்தைக் கொடுத்துவிடுவாயா?” பீஷ்மர் குரலில் ஆச்சரியம் மிகுந்தது.

“ஆம், தாத்தா, நான் அதற்கும் தயார்!”

“ஆஹா, மகனே, உன்னுடைய இந்த விசித்திரமான முடிவுக்கு உன் தாய், சகோதரர்கள் மற்றும் உன் மனைவி பாஞ்சால நாட்டு இளவரசி ஆகியோர் என்ன சொன்னார்கள்? அல்லது சொல்லப் போகிறார்கள்?”

“தாத்தா, என்னுடைய இந்த முடிவு அவர்களுக்கு இன்னமும் தெரியாது! நான் சொல்லவில்லை. சித்தப்பா விதுரர் இந்தச் சவாலை ஒரு அழைப்பாக எங்களிடம் வந்து சொல்லியபோது, நான் என் சகோதரர்களிடம் அவர்கள் எனக்குக் கட்டுப்பட்டிருப்பதாகக் கூறி இருந்த உறுதிமொழியிலிருந்து அவர்களை விடுவித்து விட்டேன். என்னை என்னுடைய சொந்த முடிவின் படி நடப்பதற்கு அனுமதிக்கும்படி கேட்டுக் கொண்டேன். ஆனால் அவர்கள் தான் கேட்கவில்லை; மீண்டும் அவர்கள் அனைவரும் உறுதிமொழி கூறினார்கள்; எனக்கு ஆதரவாகவே செயல்படப் போவதாகச் சொல்லிவிட்டார்கள். இந்த விளையாட்டின் மூலம்……. இல்லை……இல்லை…… சூதாட்டத்தின் மூலம் என்ன நடந்தாலும், நான் எப்படி நடந்து கொண்டாலும், என்னைப் பிரிவதில்லை என்றும் சபதம் செய்து விட்டார்கள்!” என்றான் யுதிஷ்டிரன்.

“குழந்தாய்! உன் கழுத்தில் கத்தியை வைக்க ஏதுவாக நீ அவர்களிடம் உன் கழுத்தைக் காட்டிவிட்டாய்! நீயே விரும்பி ஏற்றுக் கொள்கிறாய்! அது உனக்குப் புரிகிறதா இல்லையா?”

“ஆம், தாத்தா, அதனால் போர் நின்றால் சரி! யுத்தமே வராமல் இருந்தால் சரி!” என்றான் யுதிஷ்டிரன்.

பீஷ்மர் மேலும் கேட்டார்;” குழந்தாய், உன்னால் அதைத் தடுக்க முடியும் என்றா நினைக்கிறாய்? முடியாது, அப்பனே, முடியாது!” என்றவர் சற்று நேரம் சிந்தனையில் ஆழ்ந்தார். பின்னர் தொடர்ந்து விதுரரிடம் திரும்பி, “விதுரா, நீ என்ன நினைக்கிறாய்?” என்று கேட்டார்.

“பிரபுவே, சகோதரர்கள் ஐவரிடமும் நான் ஹஸ்தினாபுரம் வரவேண்டாம் என்று சொல்லி விட்டேன். அழைப்பை ஏற்க வேண்டாம் என்றே கூறினான். ஆனால் யுதிஷ்டிரன் ஓர் வீரனைப் போல் இந்தச் சவாலை ஏற்றுக் கொண்டுவிட்டான். அவன் மனோபலம் என்னை வியக்க வைத்தது. ஆகவே அவனை இந்த விஷயத்தில் திசை திருப்ப வேண்டாம் என்று இருந்துவிட்டேன். அவன் சமாதானத்திற்காக எரியும் நெருப்பில் குதிக்க நினைக்கிறான். அதற்குத் தயாராக வந்துவிட்டான். அவன் தோல்வியைக் கூட அடையலாம். ஆனால் அவன் செய்யப் போகும் இந்த முயற்சி தகுதியானதே! நேர்மையான ஒன்றே!” என்றார் விதுரர்.

“தாத்தா, என்னை மன்னியுங்கள்!” என்று மீண்டும் சொன்னான் யுதிஷ்டிரன். கைகளைக் கூப்பிய வண்ணம், “என் தந்தையை விட உங்களைத் தான் அதிகம் அறிவேன். உங்களை மிகவும் மதித்துப் போற்றுகிறேன். இந்த பூவுலகில் நீங்கள் வாழும் கடவுள் என உங்களை வணங்கி வருகிறேன். ஆகவே உங்களிடம் வந்தேன் தாத்தா! நாம் அனைவருமே தினம் தினம் சாந்தி, சாந்தி, சாந்தி எனத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறோம். ஆனால் பாருங்கள், யுத்தம் நடந்து அதில் சாவதற்குத் தயாராக இருப்பவர்களால் அமைதிக்கும் சமாதானத்துக்குமாக வேண்டி உயிர்விடத் தயாராக இருக்க முடிவதில்லை. நான் அமைதிக்கும் சமாதானத்துக்குமாக என் உயிரைக் கூடத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன் தாத்தா! என்னை மக்கள் அனைவரும் தர்மத்தின் ராஜா என்றும் தர்ம ராஜா என்றும் அழைக்கிறார்கள் அல்லவா? அது உண்மையிலேயே இருக்கட்டும் தாத்தா! வெறும் பெயர் மட்டும் எனக்கு வேண்டாம். உண்மையிலேயே தர்மத்தின் பாதுகாவலனாக தர்ம ராஜாவாக அதை ரக்ஷிக்கும் அரசனாக இருக்க விரும்புகிறேன்.”

பின்னர் சற்று நேரம் மௌனத்தில் கழிந்தது. யுதிஷ்டிரன் தொடர்ந்தான். “ சரி தாத்தா, உங்கள் பொன்னான நேரத்தை நான் ஏற்கெனவே வீணாக்கி விட்டேன். தயவு செய்து எனக்கு இந்த ஓர் உதவியைச் செய்யுங்கள். சூதாட்டத்தின் போது என்ன நடந்தாலும் சரி, அமைதியாக இருங்கள். நீங்கள் தலையிடவே வேண்டாம். ஆட்டம் தந்திரமாகவும் மோசடியாகவும் நடந்தாலும் சரி!”

“இது ஒரு மோசமான கேலிக்குரிய சூழ்நிலை. நம் அனைவரின் கௌரவமே பாழடையப் போகிறது. யுதிஷ்டிரா, நீயோ அல்லது துரியோதனனோ எல்லாவற்றிலும் ஒத்துப் போவதில்லை! இன்று வரை அப்படித் தான்! ஆனால் இந்த ஒரு விஷயத்தில் மட்டும் ஒத்துப் போயிருக்கிறீர்கள்! அது தான் நான் சூதாட்டத்தில் தலையிடக் கூடாது என்பது! இந்த விஷயத்தில் இருவரும் ஒரே மனதுடன் இருக்கிறீர்கள். ஒரு பக்கம் சூழ்ச்சி, நயவஞ்சகம், இன்னொரு பக்கம் நேர்மை, நீதி! போகட்டும்! நல்லது யுதிஷ்டிரா, நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். மிக அதிகமாக நேசிக்கிறேன். நீ தர்மத்தின் பாதுகாவலன் மட்டுமல்ல, தர்மத்தின் அடையாளச் சின்னம், வாழும் தர்ம ராஜா! நீ கடைசிவரை அப்படித் தான் இருப்பாய்! மாற மாட்டாய்! உன்னால் மாற முடியாது. என்றும் எப்போதும் அமைதிக்கும் சமாதானத்துக்குமாக வாழ்வாய்! சமாதானத்திற்காகவே யுத்தம் செய்வாய்! போகட்டும்! இந்தச் சூதாட்டத்தில் அது சூழ்ச்சியானது என்பது முன் கூட்டியே தெரிந்திருந்தும் நான் தலையிடப் போவதில்லை! என்ன நடந்தாலும்! சரிதானே!” என்றார் பீஷ்மர்.  அவர்கள் இருவரும் அறையை விட்டு வெளியேறியதும் பீஷ்மர் தனக்குள்ளே, “ஓஓ, கடவுளே, கடவுளே, இன்னும் எத்தனை நாட்கள் நான் இந்தக் குரு வம்சத்தினரின் பாரத்தைத் தாங்கியாக வேண்டுமோ, தெரியவில்லையே!” என்றார்.