Thursday, April 14, 2011

ஷாயிபாவின் வெறுப்பு! கண்ணன் வருவான் 2-ம் பாகம்

ஒருகாலும் நடக்காத ஒன்று ஷாயிபா. அவன் சாதாரணமானவனே அல்ல. மஹரிஷி நாரதரும் கூறி உள்ளார். தற்போது நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் வேத வியாசரும் கூறுகிறார். கண்ணன் சாமானியமானவனே அல்ல. அவன் அதர்மத்தை வேரோடு அழிக்கப்பிறந்தவன். எங்கள் குருதேவர் சாந்தீபனியும் சரி, ஆசாரியர் கர்கரும் சரி கண்ணன் பிறந்ததில் இருந்து அவனின் ஒவ்வொரு வளர்ச்சியையும் பார்த்துக்கொண்டு தானே இருக்கின்றனர்? அவர்களுக்குத் தெரியாதா? உண்மையில் எங்கள் உயிரைக் காப்பது தான் கண்ணன் கைகளில் இருக்கின்றது. “

“ஓ, அப்படியா? அப்படிச் சொல்லு, ஒரு வழியாக உண்மையை ஒத்துக்கொண்டு விட்டாய் அல்லவா? இதை முதலிலேயே கூறி இருக்கலாமே?? கண்ணனுக்கு உதவுவது தான் உன் நோக்கம் என்பதைத் தெளிவாய்ச் சொல்லி இருக்கலாம். “ஷாயிபாவின் குரலில் கடுமை ஏறியது. “ஏன் என்னிடம் பொய் சொன்னாய்? என்னை மணந்து செல்வதற்காகவே வந்திருப்பதாய்க் கூறினாயல்லவா? அதில் உண்மை என்பதே இல்லை அல்லவா?”
“ஓஹோ, ஷாயிபா, சற்றுச் சரியான கோணத்திலே உன் பார்வையைச் செலுத்து. ஏன் இவ்விதம் தவறாகவே நினைக்கிறாய்?? இப்போது ஒரு மாபெரும் சதிச் சுழலிலே சிக்கிக்கொண்டிருக்கிறோம். இதிலிருந்து மீள வேண்டுமெனில் நான் மட்டும் அல்ல, அனைவருமே கண்ணன் சொல்வதைத் தான் கேட்கவேண்டும். நாம் இருவரும் மணந்து கொண்டு குண்டினாபுரம் சென்று அங்கே கண்ணன் இட்ட பணியைச் செவ்வனே செய்து முடிக்கவேண்டும்.” ஷ்வேதகேது கூறினான்.

“ஓ, ஓஹோ, ஆஹா, அப்படி எனில் உன்னுடைய கண்ணனின் சதித்திட்டத்தில் நானும் ஒரு கருவியாகச் செயல்படவேண்டும்.” என்றாள் ஷாயிபா.

ஷ்வேதகேதுவுக்கு இத்தனை நேரம் அடக்கி வைத்த கோபம் பீறிட்டெழுந்தது. “உன்னையே ஒரு முறை கேட்டுக்கொள் ஷாயிபா. நான் சதியிலோ அல்லது பாவச் செயல்களிலோ ஈடுபடுவேனா? உன்னையே ஒரு முறை கேட்டுப் பார்த்துக்கொள். இதோ பார், நான் உன்னை மிகவும் நேசிக்கிறேன். பிரபாஸ க்ஷேத்திரத்தில் உன்னை எந்த நிமிடம் கண்டேனோ அந்த நிமிடத்திலிருந்து நீ நடக்கும் பாதையின் தூசியைக் கூட வழிபடத் தயாராக இருக்கிறேன். நீ மட்டும் உன் சம்மதத்தைத் தெரிவித்து விட்டால் இந்தக் கணமே கூட உன்னைத் திருமணம் செய்து கொண்டுவிடுவேன். அவ்வளவு நேசிக்கிறேன் உன்னை. மிகவும் போற்றுகிறேன். என் உயிரினும் மேலாகக் கருதுகிறேன். உனக்காக, உன் அன்புக்காக ஏங்குகிறேன். நீ என்னை மணக்க மறுத்து விட்டால்?? ஆம், மறுத்தாயானால்?? உடனே இறந்துவிடமாட்டேன் ஷாயிபா. மரணதேவன் என்னை அழைத்துச் செல்லும் நாளை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். அங்கே மேலோகத்தில் உனக்காக மலர்ப்பாதை அமைத்து உன் வரவை எதிர்பார்த்துக் காத்திருப்பேன். யார் கண்டார்கள்? அது தான் நடக்கப் போகிறதோ என்னவோ!” ஷ்வேதகேது பெருமூச்சு விட்டான்.

“நீ எப்படி இறந்து போவாய்?? அதெல்லாம் இறக்க மாட்டாய். அது தான் உன் அருமை நண்பன் நான் உன்னைத் திருமணம் செய்து கொள்ளவேண்டும் என விரும்புகிறானே! அதை நீ மீற மாட்டாயல்லவா?” ஏளனம் பொங்கக் கேட்டாள் ஷாயிபா.

“என்னால் காத்திருக்க இயலாது.” சர்வ நிச்சயமாய்க் கூறினான் ஷ்வேதகேது. “உன் சம்மதம் தெரியும் வரை, நீ மனம் மாறும் வரை காத்திருக்க இயலாது. உன் முடிவை உடனே கூறு. நாம் இருவரும் சேர்ந்து ஆற்ற வேண்டிய பெரிய பணிகள் நமக்காகக் காத்திருக்கின்றன.”

“அப்படி என்ன அரிய பணி?? என் உதவியோடு நீ ஆற்றவேண்டிய சிறந்த பணி என்னவோ?” குரலில் சற்றும் ஏளனம் குறையாமல் கேட்டாள் ஷாயிபா.

“ஜராசந்தனின் சதித்திட்டத்தை முறியடிக்க வேண்டும். கிருஷ்ணனைக் கொல்லவேண்டும் என்பதற்காகவே சேதி நாட்டு இளவரசன் சிசுபாலனைத் தன் கைக்குள் போட்டுக்கொண்டிருக்கிறான் ஜராசந்தன். அதை முறியடிக்கவேண்டும். ருக்மிணிக்கும் சிசுபாலனுக்கும் நடக்கவிருக்கும் பொம்மைக் கல்யாணத்தை எவ்வகையிலேனும் தடுக்கவேண்டும்.”

“ஓ, திரிவக்கரை ஒரு முறை என்னிடம் இளவரசி ருக்மிணி கண்ணனைக் காதலிப்பதாய்க் கூறினாளே?”

“ஆம், அவள் கண்ணன் மேல் பைத்தியமாக இருக்கிறாள் என்றே கூறலாம். இன்னமும் கண்ணனைத் தவிர வேறு எவரையும் ஏற்க அவள் மனம் மறுக்கிறது. முதலில் இந்த பொய்யான சுயம்வரத்தைத் தடுத்து நிறுத்த வேண்டும். அதன் பின்னர் ருக்மிணி கண்ணனை மணப்பதற்கு உன் மூலம் உதவி செய்ய நினைக்கிறேன். நீ அதற்கு ஒத்துழைக்கவேண்டும்.”
“ஆஹா, திட்டம் என்னவோ நன்றாய்த் தான் உள்ளது. ஆனால் இவை எல்லாவற்றையும் நீ செய்து முடிக்கும் முன்னர் ருக்மிணிக்கு வேறு எவரோடும் திருமணம் நடந்துவிட்டால்????”

“எனக்கு ருக்மிணியை நன்கு தெரியும். அவள் மனதை நான் புரிந்து கொண்டு விட்டேன். அவள் மன உறுதி கொண்ட ஒரு பெண். தன் மனதைக் கண்ணன் மேல் திடமாக வைத்திருக்கிறாள். கண்ணனைத் தவிர வேறு எவரையேனும் மணக்கும்படியான சந்தர்ப்பம் நேர்ந்தால், அவள் அதை விடத் தன் உயிரை விட்டுவிடுவாள் என எதிர்பார்க்கலாம். இது சர்வ நிச்சயம். அவள் அப்படிப்பட்ட பெண்.”

“ஆஹா, எல்லாப் பெண்களும் அப்படித் தான் சொல்லிக்கொண்டிருப்பார்கள். ஆனால் திருமணம் செய்து கொள்வது என்பதோ தாயும், தகப்பனும் சுட்டும் ஒருவனைத் தான்.”

“நீ அப்படி என்னைத் திருமணம் செய்துகொள்ள மாட்டேன் என்று சொல்லிவிடாதே ஷாயிபா. “ஷ்வேதகேது கொஞ்சம் கவலையுடனேயே கூறினான். “ஷாயிபா, பழைய விஷயங்களை மறந்துவிடு. நாம் இருவருமாகப் புதியதொரு எதிர்காலத்தை ஆரம்பிப்போம். நான் உன்னை இன்னமும் விரும்புகிறேன். மனதார விரும்புகிறேன். என் கண்களில் நீ இல்லாத எதிர்காலத்தை நான் காண விரும்பவில்லை.”

“கிருஷ்ணன் ருக்மிணியை மணந்து கொள்ளச் சம்மதித்துவிட்டானா?”ஷாயிபா கேட்டாள். திடீரென ஷாயிபாவிற்கு இந்த விஷயத்தைத் தெரிந்து கொள்ளும் ஆவல் அதிகரித்தது. “எனக்கு எப்படித் தெரியும்?” என்று கேட்டான் ஷ்வேதகேது. “நீ தான் சொல்லேன்.” என்றான்.

“இதோ பார் ஷ்வேதகேது. நான் இந்தக் கண்ணனை வெறுக்கிறேன். அடியோடு வெறுக்கிறேன். அவனுக்காக எந்த உதவியையும் நான் செய்யத் தயாராக இல்லை. செய்யவும் மாட்டேன். உதவியா உதவி?? என் கண் முன்னால் அந்தக் கண்ணன் சாகவே நான் விரும்புகிறேன். அதே சமயம் நான் உன்னை மணக்கவும் விரும்பவில்லை. என்னையும் என் பெரியப்பனையும் ஏமாற்றி நயவஞ்சகமாக என் பெரியப்பனைக் கொன்று, நாட்டையும் பறித்தாய் நீ. அந்தக் கண்ணனுக்கு அதற்கான உதவியைச் செய்தாய் நீ. அதோடு உன்னை மணந்து கொண்டு அந்தக்கண்ணனுக்கு உதவி செய்யும் ஒரு முக்கியக் கருவியாக நான் விரும்பவில்லை. நீ போகலாம்.”

“கண்மூடித்தனமான கோபத்தில் இருக்கிறாய் ஷாயிபா. அந்தக் கோபத்திலேயே பேசவும் செய்கிறாய். நான் இன்னும் சில நாட்கள் இங்கே தான் தங்கப் போகிறேன். உன்னிடமிருந்து இல்லை என்ற பதிலை நான் எதிர்பார்க்கவே இல்லை. வலுக்கட்டாயமாகவேனும் உன்னைத் தூக்கிக்கொண்டு குண்டினாபுரம் செல்லவே நான் விரும்புகிறேன். உன்னை விட மாட்டேன்.”

“நீ முதலில் இங்கிருந்து செல்!’ சீறினாள் ஷாயிபா.

“இப்போது நான் போனாலும் தினமும் உன்னிடம் தான் வருவேன். நீ சரி என்று சொல்லும் வரை வருவேன்.” என்றான் ஷ்வேதகேது.

1 comment:

priya.r said...

இந்த அத்தியாயம் எண் 61 படித்து விட்டேன்
ஸ்வேத கேது ஷாயிபா மேல் வைத்திருக்கும் காதலை சொல்லும் விதம் வியப்பாகவும் ரசிக்கும் படியாகவும் உருக்கமாகவும் இருக்கிறது