Thursday, April 21, 2011

ஷாயிபாவின் உள் அந்தரங்கம்! கண்ணன் வருவான் 2-ம் பாகம்!

சற்று நேரத்தில் தன்னைச் சமாளித்துக்கொண்டு விட்டாள் ஷாயிபா. திரிவக்கரையைப் பார்த்து, "உனக்கு என்ன பைத்தியமா?? நானாவது கண்ணனை மணக்க நினப்பதாவது?? அந்தப் பேச்சுக்கே இடம் இல்லை!" என்றாள் ஆத்திரத்துடன். "ஓ, அப்படியா? இல்லை ஷாயிபா, இல்லை, நீ என்ன நினைக்கிறாய் என்பதை நீ நன்கு அறிவாய். உன் உள் மனம் உனக்குத் தெரியும். உன் வழியில், உன் சுபாவமாகக் கண்ணனை நீ உன் வழிக்குக்கொண்டு வர நினைக்கிறாய்." ஆத்திரத்துடன் பேசினாள் திரிவக்கரை. மேலும், "நீ கண்ணனை வெறுப்பது உன் நடிப்பு. ஏனெனில் உனக்கு நன்கு தெரியும், கண்ணன் உன்னை ஒரு நாளும் மணக்கமாட்டான் என்பது. ஆகையால் வெறுப்பதுபோல் நடிக்கிறாய். இவ்வளவு நாட்கள் அடக்கி வைத்திருந்த ஆத்திரம் எல்லாம் வெளியே வந்துவிட்டது திரிவக்கரைக்கு. கோபத்தை அடக்க முடியாமல் பேசிய திரிவக்கரை ஷாயிபாவின் நெஞ்சை ஊடுருவும் நோக்கில் அவள் மீது தன் பார்வையைப் பதித்தாள். அவள் நெஞ்சின் ஆத்திரம் அத்தனையும் அவள் கண்கள் வழியே ஷாயிபாவின் மீது பாய்ந்தது. அவள் கலங்கினாள். திரிவக்கரையின் இந்தப் புதிய அவதாரம் ஷாயிபா இன்று வரை காணாத ஒன்று. அவள் உள்ளூர நடுங்கினாள். “திரிவக்கரை, நீ ஒரு கொடுங்கோன்மை செய்யும் பெண்மணி. கொடுமைக்காரி. எனக்கு அப்படி ஒரு எண்ணமே இல்லை.” இதைச் சொல்லும்போது தன்னையும் அறியாமல் சற்று நேரத்தில் தன்னைச் சமாளித்துக்கொன்டு விட்டாள் ஷாயிபா. ஆனாலும் திரிவக்கரையின் குற்றச் சாட்டுகள்?? அவற்றில் உண்மை உள்ளதா? தன்னையும் அறியாமல் தன் குரலில் தன் பலவீனம் வெளிப்பட்டுவிட்டதோ?


ஆனால் திரிவக்கரையோ, “ஆஹா, பெண்ணே, என்னை என்னவென நினைத்தாய்! விபரம் தெரிந்த நாட்களில் இருந்து அரண்மனையில் சேவை செய்து வருகிறேன். அரண்மனையின் அனைத்து விபரங்களும் எனக்கு அத்துபடி. எதுவுமே தெரியாத அப்பாவி என என்னை நினைக்கிறாயா?? நான் சொல்வதை உன்னால் மறுக்க முடியுமா?? நிச்சயமாய் உனக்கு வெளிப்படையாக மகிழ்ச்சி அளிக்கும் ஒரு செய்தியை நான் சொல்லவில்லைதான். ஒரு வேளை நான் இப்போது உனக்குக் கொடுத்திருப்பது விஷமாக இருக்கலாம். ஆம், விஷம் தான். கஷ்டப்பட்டு விழுங்கு அதை! உன்னால் எவ்வளவு ஜீரணிக்க முடியுமோ அவ்வளவுக்கு அந்த விஷத்தை ஜீரணமும் செய்து கொள். ஒன்று நீ அவனுக்கு ஒரு நல்ல சகோதரியாக இருக்கவேன்டும், அல்லது என்றென்றைக்கும் அவனை விட்டு நீ விலகவேன்டும். திரும்பக் கண்ணனைச் சந்திக்கவே முடியாத அளவுக்கு எப்போதுமே நீ இல்லாதிருக்கவேன்டும். “ மிகக் கடுமையாகவே தன் வார்த்தைகளை உதிர்த்தாள் திரிவக்கரை. எதிர்பாராத இந்த அவமானத்திலும் அடக்கவே முடியாத கோபத்திலும் ஷாயிபாவும் வாயடைத்துப் போயிருந்தாள். அவளுக்குப் பேச்சே வரவில்லை.

ஆனால் திரிவக்கரையோ தன் கோபத்தை இத்தனை நாள் அடக்கி வைத்திருந்ததே பெரிய விஷயம் என்னும்படியாகக் கோபத்தைக் கொட்டித் தீர்த்தாள். அவளாலேயே அவளை நிதானம் செய்து கொள்ள முடியவில்லை. தன் வசத்தில் இல்லை திரிவக்கரை. “நீ, கம்சாச் சித்தியின் புத்திமதிகளை எல்லாம் கேட்டுக்கொண்டிருக்கிறாய் போல் தெரிகிறது. என்ன சொல்கிறாள் அவள்? தன் கிசுகிசுக்குரலில்! அவளுடைய பேச்சுக்களைத் தொடர்ந்து கேட்பவர்கள் காதுதான் புண்ணாகும். விஷமருந்தியவர்களின் குடல் கெட்டுப்போவதைப்போல் அவர்கள் மனமும் கெட்டுப்போகும். இதோ பார் ஷாயிபா! நான் சொல்வதைக் கேள். கம்சாச் சித்தி பேசும்போது அதைக் கவனித்துக் கேட்டுக்கொள்ளாதே. புரிந்ததா?? இது தான் இப்போதைக்கு நான் உனக்குச் சொல்லும் ஆலோசனை, புத்திமதியும் கூட.” கைகளில் ஏந்தி வந்த தாம்பாளத்தை, கலீர், கிண்கிணார்” என்ற சப்தம் வரும்படியாக ஓசையுடன் கீழே வைத்தாள் திரிவக்கரை. “ ஓ, மறந்துவிட்டேனே, உன் அருமைக் கம்சாச் சித்தியிடம் இதைச் சொல். அவள் செல்ல மகன் ப்ருஹத்பாலன் யுவராஜாவாக வேன்டுமெனில் கண்ணன் விரும்பும் வகையில் தான் ஆகவேண்டும். கண்ணன் சொற்படி கேட்க வேண்டும். அவன் தாயின் முந்தானையில் தன் முகத்தை ஒளித்துக்கொண்டு யுவராஜாவாக வேண்டுமெனில் அது ஒருக்காலும் நடக்காத ஒன்று.” போகிற போக்கில் இதைச் சொன்ன திரிவக்கரை அங்கிருந்து சென்றுவிட்டாள்.


அப்பாடா! நிம்மதிப்பெருமூச்சு ஷாயிபாவை உலுக்கி எடுத்தது. ஆனாலும் அவள் தன் மனதை ஆராய ஆரம்பித்தாள். உண்மையில் அவள் கண்ணனை விரும்புகிறாளா என்ன?? ஆனால் ஆனால்?? ஷ்வேதகேது?? அவள் ஷ்வேதகேதுவைத் திருமணம் செய்துகொள்ளவேண்டுமென நினைத்தது உண்மைதான். ஆனால் அது எப்போது?? கண்ணனைச் சந்திக்கும் முன்னர் அல்லவோ?? சட்டென ஒரு எண்ணம் அவளைத் தாக்கியது. ஒருவேளை……. ஒரு வேளை……… அவள் பெரியப்பாவே அவளைக்கண்ணனுக்குத் திருமணம் செய்வித்துச் சமரசம் செய்து கொள்ளவேண்டுமென நினைத்திருந்தால்??? அப்போது தான் கண்ணனைப் பூரண விருப்பத்துடன் கணவனாக ஏற்றுக்கொண்டிருப்போமா? “இல்லை, இல்லை, என் அருமைப்பெரியப்பா! ஒருக்காலும் இல்லை. அப்படி எல்லாம் நடைபெறாது. என் கடவுளே, என் தேவனே, நான் ஒருபோதும் உனக்கு துரோகம் செய்ய மாட்டேன். உனக்கு விசுவாசமாகவே இருப்பேன். அந்த கிருஷ்ணனைப்பழி வாங்குவேன். பழி, பழிக்குப்பழி! அவன் இறக்கவேண்டும்.” தன் உடைகளுக்குள் மறைத்து வைத்திருந்த அந்தக் கத்தியை எடுத்துப் பார்த்த ஷாயிபா அதைத் திரும்ப வைத்தபடியே, “இன்று நடுநிசியில் முடிக்கவேண்டும்.” என்று வாய் விட்டுச் சொல்லிக்கொண்டாள். ஆனாலும் அவள் மனம் அவள் சொல்வதைக் கேட்காமல் தன் போக்கில் வேகமாய்ச் சென்று கொண்டிருந்தது.

திரிவக்கரை அவளுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியைக் கொடுத்துச் சென்றிருந்தாள். அவள் மேல் தேவகி அம்மா மிகுந்த பாசம் வைத்திருக்கிறாள். ஏன் இந்த திரிவக்கரையும் அவளுக்காக எவ்வளவு வேலைகளைச் செய்து தருகிறாள். இவை எல்லாம் அவள் மேல் உள்ள அன்பாலா? அல்லது அவள் பெரியப்பா மேல் உள்ள மரியாதையினாலும் பாசத்தினாலுமா?? கிடையவே கிடையாது. எல்லாம் அந்த கிருஷ்ணன் இவர்கள் என்னிடம் இப்படி நடக்கவேண்டும் எனச் சொல்கிறான். அவர்கள் அதை நிறைவேற்றுகிறார்கள். அவனும் தான் என்னிடம் அன்பாக இருக்கிறான். இந்த உலகமே ஒரு புதிய உலகம். முற்றிலும் மாறுபட்ட உலகம். அவளிடம் எல்லாரும் இத்தனை பிரியமாகவும், பாசத்துடனும் நடந்து கொள்வதற்கு அந்த அந்த மாட்டிடையன் கண்ணனே காரணம். யோசித்து யோசித்து ஷாயிபாவுக்கு மயக்கமே வந்துவிட்டது. இதென்ன தூக்கமா? மயக்கமா? ஒன்றுமே புரியவில்லையே! அவளுக்குத் தான் எங்கேயோ பறக்கிறாற்போல் இருந்தது. எங்கோ எங்கோ செல்கிறாள். மேகக் கூட்டங்களுக்கிடையே மிதந்துமிதந்து செல்கிறாள். மேகங்கள் அவளைக் கடக்கின்றன. அதோ, அது என்ன சூரியனா, சந்திரனா?? சந்திரனாய்த் தான் இருக்கவேண்டும். இல்லை எனில் இத்தனை குளுமை எங்கிருந்து வரும்?? இது பகலா, இரவா? ம்ம்ம்ம்? இரவு! ஆம் இரவு, இரவுதான் வந்துவிட்டது. ஆஹா, நடுநிசியாகிவிட்டதா? கண்ணனைக் கொல்லவேண்டுமே. என் வாழ்நாளின் லட்சியமே கண்ணனைக் கொல்வது தான். இதை விடப் பெரியதொரு தொண்டை அவளால் தன் பெரியப்பனுக்குச் செய்ய முடியாது. பெரியப்பாவின் ஆன்மா அமைதி அடையவேண்டுமானால் அவள் கண்ணனைக் கொன்றே ஆகவேண்டும். பழி வாங்க வேண்டும். ஆம், பழி, பழிக்குப்பழி. அவள் உயிர்வாழ்வதே இந்தப் பழிவாங்கலுக்குத் தான். அவள் வாழ்வின் ஒரே ஆசை, ஒரே குறிக்கோள், ஒரே லட்சியம் இதோ, இப்போது நிறைவேறப் போகிறது. அவள் பெரியப்பாவின் ஆன்மா சாந்தியடையும்.

1 comment:

priya.r said...

இந்த அத்தியாயம் எண் 63 படித்து விட்டேன்
ஷாயிபாவின் எண்ணம் சொல் சிந்தனை இவற்றை சுற்றியே கதை போய் கொண்டு இருக்கிறது
ம் ,பார்ப்போம் ..........