Wednesday, October 12, 2011

நகை புரிந்து பொறுத்துப் பொறுத்தையோ ஆண்டுகள் போக்குவான்!

கண்ணனைக் குறித்த எந்தத் தகவலும் இல்லாமல் அன்றைய தினம் நகர்ந்தது. மதுராவின் பெண்கள் அனைவரும் கண்ணன் இல்லாத தனித்ததொரு நிலையை நன்கு உணர்ந்தனர். அதோடு கண்ணன் ஒருவனாலேயே நமக்கு நன்மை செய்ய முடியும் எனவும், அவனே அதிர்ஷ்டத்தையும் கொண்டு வருவான் எனவும் முழு மனதோடு நம்பினர். இப்போது கண்ணன் இல்லை; நம் நிலைமை அதோகதிதான். அவனோடு போயிற்று நம் நல்ல நாட்கள் எல்லாம். இனி வரும் நாட்களை நம்ப முடியாது. கண்ணன் மட்டும் நல்லபடியாகத் திரும்பி வந்தால் போதும்; ஏ, யமுனைத் தாயே, உனக்கு எப்படி வழிபாடு செய்தால் ஏற்றுக்கொள்வாயோ, அவ்வாறு செய்து விடுகிறேன். மஹாதேவா, தேவாதி தேவா, நீரே துணை; கண்ணனை திரும்ப எங்களிடம் கொண்டு சேர்க்கவும். உம்மைத் தான் நம்பி இருக்கிறோம். எத்தனை விரதங்கள் வேண்டுமானாலும் இருக்கிறோம்; அதனால் கண்ணனுக்கு நன்மை விளைந்தால் சரி. இளம்பெண்களும் கண்ணன் இல்லாமையை நன்கு உணர்ந்தனர். யமுனைக்குக் குளிக்கச் செல்கையில் அங்கே ஆண்களுக்கான படித்துறையில் யமுனையின் நிறத்தோடு போட்டி போட்டுக்கொண்டு பளீரென்ற சிரிப்போடும், தலையில் மயில் பீலியோடும் காணப்படும் இளம் முகம், அதன் சுண்டி இழுக்கும் காந்தி, ஒவ்வொருவரையும் தனித்தனியாக விசாரிக்கும் பாங்கு. அனைவர் மனதையும் வருத்தம் பிசைந்தது. அழகான சிரிக்கும் கண்கள், இனிமையான வாரத்தைகள், ஆஹா, கண்ணனைப் போல் எவரும் உண்டா?? இவர்களில் தனித்துத் தெரிந்தாள் சத்யா என அழைக்கப்படும் சத்யபாமா. சத்ராஜித்தின் மகள். பதினைந்தே வயது நிரம்பிய சத்யபாமா தன் வெளிப்படையான பேச்சால் அனைவரையும் ஒரு பக்கம் கவர்ந்தாள்; இன்னொரு பக்கம் அனைவருக்கும் உறுத்தலாகவும் இருந்தது. கண்ணன் மேல் அவள் வைத்திருந்த பாசத்துக்கும், அன்புக்கும் ஈடு இணை கூற முடியாது. நடந்த விஷயங்களை எல்லாம் ஒருவாறு உணர்ந்திருந்தாள். தன் தகப்பன் தான் கண்ணனின் திடீர் மறைவுக்குக் காரணம் என நினைத்த அவள், தீயெனக் கொதிக்கும் கோபத்தைக் காட்டும் விழிகளோடு தகப்பனிடம் சென்று சண்டை போட்டாள். கண்ணனின் இந்த மறைவுக்குத் தன் தகப்பனே காரணம் என அடித்துக் கூறினாள். குற்றம் சாட்டினாள். கண்ணனை அடியோடு வெறுக்கும் தன் தகப்பன் கண்ணனை மதுராவை விட்டே ஓட்டி விட்டதாகவும் கூறினாள். கண்ணனே ஒரு கடவுள், எல்லாருக்கும் மேலான அந்த மஹாதேவனுக்கு ஈடானவன்; அவனுக்குக் கெடுதல் நினைப்பாருக்குக் கட்டாயம் சாபங்கள் சேரும். தெய்வசாபம் பொல்லாதது.

சத்ராஜித்துக்கோ கண்ணன் மேல் வெறுப்பு என்னமோ குறையவில்லை; ஆனால் கண்ணன் நாட்டுக்குத் திரும்பவில்லை எனில் பழி தன்னைத் தான் வந்து சேரும் என்பதை நன்கு தெரிந்து வைத்திருந்தான். ஆனால் இந்தப் பெண்ணிடம் என்ன பதில் சொல்வது! வாய்மூடி மெளனியாய் இருத்தலே நலம். இவளிடம் வாயைக் கொடுத்தால் மீள்வது கடினம். அதிலும் செல்லமாய் வளர்த்த பெண்; துக்கப்படுவதைக் காணவும் சகிக்கமுடியவில்லை. பேசாமல் இருந்துவிடலாம். சத்ராஜித் வாயைத் திறக்கவே இல்லை. முதல்நாள் கண்ணனுடன் யமுனைக்குச் சென்றவர்களோ, நான் உயிருடன் இருக்கும்வரையிலும் உங்களை யாரும் எதுவும் செய்ய முடியாது எனக் கண்ணன் கூறியது நினைவில் வந்தது. அப்படியானால்???? கண்ணன் இப்போது ஜராசந்தனிடம் தன்னை ஒப்புக் கொடுத்து நம்மை எல்லாம் காப்பாற்றப் போய்விட்டானா?? மதுராவை ஜராசந்தன் எவ்வகையிலேனும் அழிப்பான் என்பது நிச்சயம் என்பதை அறிந்திருந்தாலும் அவர்கள் மனதில் கண்ணனிடம் மதிப்பும், மரியாதையும் மிகுந்தது. மதுராவின் ஆசாரியர்களோ மஹாதேவருக்கு யக்ஞம், யாகங்கள் செய்வதன் மூலம் வரப்போகும் ஆபத்தின் விளைவைக் குறைக்க யத்தனம் செய்தனர். நேரம் ஆக, ஆக, ஜராசந்தன் மதுராவை அழிக்க வரப் போகிறானே என்ற கவலையையும் மீறி அனைவரும் கண்ணனைக் குறித்துக் கவலைப்பட ஆரம்பித்தனர். கண்ணனிடம் நம்பிக்கை வைத்திருந்த கடா என்னும் வீரனுக்கும் ஷங்குவுக்கும், இப்போது நம்பிக்கையே போய்விட்டது. உக்ரசேன மஹாராஜாவிடம் மந்திராலோசனை சபையைக்கூட்ட வேண்டினார்கள். அவர்களோடு கிருதவர்மன், அந்தரிஷ்டன், சாம்பன், கக்‌ஷன் ஆகியோரும் சேர்ந்து கொண்டனர். மறுநாள் அனைத்து யாதவத் தலைவர்களும் மந்திராலோசனைக்குக் கூடினார்கள். அவர்களுக்கு இம்மாதிரியானதொரு பெரிய சபையை இன்று வரையிலும் பார்த்த நினைவு இல்லை. அவ்வளவு தலைவர்களும் ஒன்று கூடி இருந்தனர். அதைத் தவிரவும், மாளிகைக்கு வெளியே மற்ற யாதவ மக்கள், பொது ஜனங்கள் அனைவரும் கூடி நின்று கொண்டு மந்திராலோசனையின் முடிவுக்குக் காத்திருந்தனர்.

"கிருஷ்ணவாசுதேவன், நம்மைவிட்டுச் சென்றுவிட்டான்." உக்ரசேனர் முகம் மட்டும் சோகத்தைக் காட்டவில்லை; குரலும் காட்டியது. மதுராவின் நம்பிக்கை நக்ஷத்திரம் விண்ணிலிருந்து மறைந்து விட்டது. கண்ணன் சென்ற இடம் தெரியவில்லை. ஆனால் அவன் நம்மைக் காக்கவேண்டியே சென்றுள்ளான். " உக்ரசேனர் தழுதழுக்கும் குரலில் தொடர்ந்தார். "நம்மிடையே அவன் இருக்க நாம் மிகவும் கொடுத்து வைத்திருந்தோம். இப்போது தகுதியற்ற நம்மிடையே அவன் இல்லை; நம் அனைவரையும் ஒன்று சேர்த்து ஒற்றுமை உள்ளவர்களாக்கி, வலிமையையும், பலத்தையும் காட்டச் செய்து நம் குலப் பெருமையை நிலைநாட்டினான். அப்படிப்பட்டவனிடம் நாம் நம்பிக்கை வைக்கவில்லை; நன்றி கெட்ட நம்மிடையே இருக்க வேண்டாம் என அவன் சென்றுவிட்டான். இப்போது என்ன செய்வது என்றே புரியவில்லை."

யாருக்கும் குரல் எழும்பவில்லை. ஒருவாறு தன்னைச் சமாளித்துக்கொண்ட கத்ரு, "கடைசியாய்க் கண்ணனைப் பார்த்தவர் யார்?" என்று கேட்டான். "உத்தவன்!"வசுதேவர் கூறினார். "அவனுக்குத் தான் என்ன நடந்தது என்று தெரியும்." "உத்தவா, கடைசியாய் அவன் பேசிய வார்த்தைகள் என்ன?" உக்ரசேனர் கேட்டார். "மாட்சிமை பொருந்திய பாட்டனாரே, நாங்கள் அனைவருமே பீமசேனனை வழி அனுப்பச் சென்றோம். அவனை வழி அனுப்பிவிட்டுத் திரும்பி வரும்போது கண்ணன் என்னிடம், " உத்தவா, நான் என்ன செய்யப் போகிறேன் என்றோ ஏன் என்றோ எங்கே செல்லப் போகிறேன் என்றோ எதுவும் கேட்காதே." என்றான். உத்தவன் குரல் உணர்ச்சி மயமாய் இருந்தது. "பாட்டனாரே, கண்ணன் மேலும் என்னிடம், அவன் தாயையும், தகப்பனையும் கவனித்துக்கொள்ளுமாறும், தன்னுடைய நமஸ்காரங்களைத் தன் சார்பில் அவர்களுக்குத் தெரிவிக்குமாறும் கூறினான். மேலும் பெரிய அண்ணா பலராமனுக்கு எப்போதும் தான் அவர் அருகேயே இருப்பதாகவும், தன் நெஞ்சில் அவரைச் சுமந்து செல்வதாயும் கூறினான்." உத்தவனுக்குத் துக்கம் தாங்க முடியாமல் "ஓ"வென்று அழ ஆரம்பித்தான்.

2 comments:

priya.r said...

//இவர்களில் தனித்துத் தெரிந்தாள் சத்யா என அழைக்கப்படும் சத்யபாமா//

பாமா வின் வருகை இங்கே இருந்து தான் ஆரம்பமாகிறதா ?

sambasivam6geetha said...

சத்யபாமாவின் கதை தனியாக வரும். ச்யமந்தகமணி சம்பந்தப்பட்டதாச்சே! கிருஷ்ணன் பட்ட கஷ்டங்களோடு சேர்ந்து வரும். :)))