Tuesday, February 21, 2012

தர்மம் பாரினில் தழைத்திட வேண்டும்

ஷ்வேதகேது கண்ணனைக்கண்டதுமே அவனைக் கட்டித்தழுவிக் கொண்டு தன் அன்பை வெளிப்படுத்தினான். பின்னர் ஆசாரியரின் எதிரே கண்ணனையும் அமரச் சொல்லி, தானும் அமர்ந்தான். சாந்தீபனி ஷ்வேதகேதுவிடம் பாண்டவர்கள் வெளியேற்றப்பட்ட விபரத்தைக் கண்ணனிடம் விளக்கிச் சொல்லும்படி கூறினார். அதன் மேல் ஷ்வேதகேது கூறியதாவது: ஹஸ்தினாபுரத்தில் மூன்று ஆயுதப் பயிற்சிக்கான மாணவர்களைத் தன் குருகுலத்தில் சேர்க்கவேண்டி அதற்கான சோதனைக்குச் சென்றான் ஷ்வேதகேது. அங்கே உத்தவனைச் சந்தித்தான். அவன் ஐந்து சகோதரர்களோடு வாரனவதத்திற்குச் செல்லத் தயாராகிக் கொண்டிருந்தான். மேலும் ஷ்வேதகேது கூறியதாவது: “கண்ணா, மன்னன் திருதராஷ்டிரனுக்கு துரியோதனனை அடக்க முடியவில்லை. அவன் பிடிவாதம் தாங்க முடியாமல் வேறு வழியும் தெரியாமல் திருதராஷ்டிரன் யுவராஜா யுதிஷ்டிரனை யுவராஜப் பதவியை விட்டு விலகச் சொல்லி ஆணையிட்டான். மகன் மேலுள்ள பாசம் அந்தக் குருட்டுக் கண்களை மட்டுமல்லாமல் அவன் இதயத்தையும், புத்தியையும் குருடாக்கிவிட்டது. யுதிஷ்டிரனை அவன் தாயையும், மற்ற நாலு தம்பியரையும் அழைத்துக்கொண்டு வாரணாவதம் சென்று வாழும்படியும் ஆணையிட்டிருக்கிறான். முதலில் இந்த விஷயம் ஹஸ்தினாபுரத்து மக்களுக்குத் தெரியாமல் இருந்தது; ஆனால் எத்தனை நாட்களுக்கு உண்மையை மறைக்க முடியும்?”

“வேறு வழியில்லாமலும், பாண்டவர்கள் வெளியேறுகையிலும் மக்களுக்கு விஷயம் தெரிந்துவிட்டது. அனைவரும் சொல்லவொண்ணா துக்கத்தில் ஆழ்ந்து போயினர். குருவம்சத்தின் மற்ற வாரிசுகளும், மற்றப் பெரியோர்களும், சிறியோர்களும் இதை எதிர்த்துக் குரல் கொடுத்தார்கள். அரண்மனைப் பெண்டிர் பகிரங்கமாகவே புலம்பி அழுதனர். ஐந்து சகோதரர்களும், ஹஸ்தினாபுரத்தை விட்டுச் செல்கையில் ஒரு மாபெரும் மக்கள் கூட்டம் அவர்களைத் தொடர்ந்து கண்களில் கண்ணீரோடு ஒரு யோஜனை தூரம் சென்று பிரியாவிடை கொடுத்தனர். “

கிருஷ்ணன் முகத்தில் கவலை மட்டுமல்லாமல் தீவிர யோசனையும் தெரிந்தது. “ஷ்வேதகேது, எனக்கு ஒரு சந்தேகம். பிதாமகர் பீஷ்மரை எதிர்த்துக்கொண்டு ஹஸ்தினாபுரத்தின் அரசன் கூட எதுவும் செய்ய முடியாது என்று கேள்விப் பட்டிருக்கிறேன். யுதிஷ்டிரனை யுவராஜா பதவிக்கு பட்டாபிஷேஹம் செய்து வைத்ததும் அவருடைய ஆலோசனையின் பேரில் எனச் சொல்வார்கள். இப்போது இப்படி ஒரு அசாதாரண சம்பவம் நிகழ்கையில் அவர் எவ்வாறு பார்த்துக்கொண்டிருந்தார்?”

“கண்ணா, ஹஸ்தினாபுரத்தில் நான் இருந்தது சிறிது நேரமே. அந்த நேரத்துக்குள்ளாக என்னால் எதையும் கண்டுபிடிக்கமுடியவில்லை. ஆனால் நான் பார்த்த சிலர் கூறியதன் பேரில் மன்னன் திருதராஷ்டிரன் யுதிஷ்டிரனுக்கு இந்த யோசனையைக் கூறியதுமே யுதிஷ்டிரன் எந்தவிதத் தடங்கலும் சொல்லாமல் மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டதாகச் சொல்கின்றனரே. அவன் தம்பியருக்கு சம்மதம் இல்லையாம்; ஆனாலும் மூத்த அண்ணனை எதிர்க்கக் கூடாது எனப்பேசாமல் இருந்துவிட்டனராம்.” ஷ்வேதகேது கூறினான்.

பல்வேறு விதமான எண்ணங்கள் மோதக் கண்ணன் அவற்றில் மூழ்கினான். கண்ணன் முகத்தைப் பார்த்த சாந்தீபனி, “கண்ணா, இப்போது நீ ஹஸ்தினாபுரம் செல்வதால் எந்தப் பயனும் இல்லை; அதை விடவும் நீ காம்பில்யத்திற்குச் செல்லலாம். நான் ஷ்வேதகேதுவிடம் நீ கூறிய செய்தியைக் கூறி அனுப்பி வைக்கிறேன். அதன் பின்னர் நீ காம்பில்யம் செல்வாய். கண்ணா, உன் அத்தை குமாரர்களான ஐந்து சகோதரர்களும் குரு வம்சத்தின் ரத்தினங்கள்; அனைவராலும் நேசிக்கப்பட்டனர். இப்போது அவர்களில் ஒருவர் யுவராஜாவாக இல்லாமல் துரியோதனன் யுவராஜாவாக இருக்கையில் நீ அங்கு செல்வது சரியாக இருக்காது. குழந்தாய், நிலைமை தலைகீழாக மாறிவிட்டது. அதுவும் நன்மைக்காக இல்லை; மேலும் மோசமாக ஆவதற்கே மாறி இருக்கிறது. நீ இந்தச் சமயம் அங்கே செல்வது உனக்குத் தகுதியும் அல்ல.”

கண்ணன் முகம் உறைந்து காணப்பட்டது. சிறு குழந்தையைப் போல் சிரித்துக்கொண்டு காணப்படும் வழக்கமான சிரிப்பைக் காணோம். அவன் கண்களின் கருமணிகளில் எப்போதும், குறும்பும், மகிழ்வோடும் காணப்படும். இப்போதோ உணர்ச்சிகளற்ற ஆழமான கிணற்றுக்குள் காணப்படும் கற்களைப் போல் காணப்பட்டன. முகத்திலே கண்களின் ஆழம் அளவிடமுடியாத ஆழத்துக்குப் போய்விட்டாற்போல் காணப்பட்டன. “குருதேவா,” ரகசியம் பேசுபவனைப் போல் வெகு ஆழத்தில் கீழே விழுந்து கிடப்பவன் போல் கிருஷ்ணன் குரல் மெல்லக் கேட்டது. “குருதேவா, காலம் எனக்கு இடப்போகும் முக்கியமான வேலையைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். அந்த வேலையும் வந்துவிட்டது; வேளையும் வந்துவிட்டது. இது எனக்கிடப்பட்ட வேலை; நான் தான் செய்யவேண்டும். நான் ஹஸ்தினாபுரம் செல்கிறேன்.”

"கண்ணா, ஹஸ்தினாபுரத்தில் துரியோதனன் உன்னை வரவேற்க மாட்டான். வேண்டாம் செல்லாதே!"

"ஆசாரியரே, துரியோதனனின் வரவேற்பை எதிர்பார்த்துக்கொண்டு நான் அங்கே செல்லவில்லை. யுதிஷ்டிரனும், பீமனும், அர்ஜுனனும், நகுல, சகாதேவர்களோடு ஹஸ்தினாபுரத்தில் இருந்தவரைக்கும் தர்மம் உயரத்தில் விண்ணை விட உயரமாக சூரியனைப் போல் பிரகாசித்துக்கொண்டிருந்தது. இப்போது அதற்கு கிரஹணம் பீடித்துவிட்டது. ஆகவே நான் அங்கே தான் இப்போது இருந்தாகவேண்டும். " கண்ணன் குரலில் தெரிந்த கடினம் சூழ்நிலை எவ்வளவு கடினம் என்பதைச் சூசகமாகத் தெரிவித்தது.

சட்டெனச் சூழ்நிலையில் ஒரு விவரிக்கவொண்ணாப் பதட்டம் சூழ்ந்தது.

1 comment:

priya.r said...

குருதேவா, காலம் எனக்கு இடப்போகும் முக்கியமான வேலையைக் குறித்துப் பேசிக்கொண்டிருந்தோம். அந்த வேலையும் வந்துவிட்டது; வேளையும் வந்துவிட்டது. இது எனக்கிடப்பட்ட வேலை; நான் தான் செய்யவேண்டும்//

கண்ணன் சொல்லிய வரிகள் மனதில் பதிந்து விட்டது ..