Saturday, October 4, 2014

பீமனின் திருட்டுத் தனம்!

அதைப் பார்த்த பீமன் உள்ளூரச் சிரித்தபடி, தாமரைப்பூப்பாதங்களைக் கொண்ட இளவரசி, இப்போது ஆசிரமத்திற்கு வந்துவிட்டாள் என எண்ணிக் கொண்டான். மீண்டும் இளவரசியைப் பார்க்கும் ஆவல் மேலிட்டாலும் அனைவரும் தங்குவதற்கு உரிய ஏற்பாடுகளைச் செய்ய வேண்டியதே இப்போது அவன் முதல் வேலையாக இருந்ததால் கவனத்தை அதில் தான் திருப்ப இயலும்.   ஏமாற்றத்துடன் பெருமூச்சு விட்டான் பீமன்.  ஆசிரமத்திற்கு வந்த பீமன் தன் அண்ணன் யுதிஷ்டிரனிடம் அனைவரும் தங்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து முடித்துவிட்டதாகவும் இரவு உணவு தயாராகிக் கொண்டிருப்பதாகவும் கூறினான்.  பின்னர் தௌம்ய ரிஷியின் கால்களில் விழுந்து வணங்கினான்.  அவரைப் பார்த்து, “குருதேவரே, உங்களால் என்னை எவ்வளவு ஆசீர்வதிக்க முடியுமோ அவ்வளவு ஆசீர்வதியுங்கள்.  அதற்கான கையிருப்பு இல்லை எனில் என் சகோதரர்களுக்கென வைத்திருக்கும் ஆசீர்வாதங்களில் இருந்து கடன் பெற்று என்னை ஆசீர்வதியுங்கள்.” என்றான்.



பின்னர் தன் தாய் தங்கியிருந்த குடிசைக்குச் சென்று தாயின் கால்களிலும் விழுந்து வணங்கினான்.  பின்னர் அங்கே தன் தாயுடன் அமர்ந்திருந்த திரௌபதியைக் கடைக்கண்களினால் பார்த்துவிட்டு அங்கு அமர்ந்திருந்த மற்றப் பெண்மணிகளிடம் யாரையோ தேடினான்.  என்ன ஏமாற்றம்!  அவன் எதிர்பார்த்த நபர் அங்கில்லை! பறக்கும் தாமரைப்பூப்போன்ற பாதங்களைக் கொண்ட அந்தக் காசி இளவரசி அங்கில்லை.  அரை மனதாக சமையல் நடைபெறும் இடத்திற்குச் சென்றான்.  சமையலில் கெட்டிக்காரனான அவன் மனம் இப்போது சமையலில் லயிக்கவில்லை.  ஆனாலும் என்ன நடக்கிறது என்று பார்த்தான்.  ராக்ஷச அரசன் வ்ருகோதரனின் மகத்தான பசியை நன்கு அறிந்திருந்த தௌம்ய ரிஷி அவனுக்காக ஏராளமான உணவுகளைத் தயாரிக்கச் சொல்லி இருந்தார்.  நிதானமாக அமர்ந்து ஒவ்வொன்றாக ருசி பார்த்தான் பீமன்.  பின்னர் அங்கிருந்து கிளம்பி கிருஷ்ணன் தங்கி இருக்கும் குடிசைக்குச் சென்றான்.


“கோவிந்தா!  உன்னை இப்போது நான் பார்க்க வரலாமா?” என்று கேட்ட வண்ணம் உள்ளே நுழைந்த பீமன், அங்கே கிருஷ்ணன், சாத்யகி ஆகியோருடன் அமர்ந்திருந்த தன் சகோதரன் நகுலனையும் இன்னொரு மனிதனையும் பார்த்தான்.  அந்த மனிதன் முகம் எங்கோ பார்த்தது போல் இருந்தது பீமனுக்கு.  சட்டெனப் பொறிதட்ட ஜாலந்தராவின் முக ஜாடையில் அவன் இருப்பதைப்பார்த்து, இவன் தான் காசி இளவரசன் சுஷர்மனாக இருக்க வேண்டும் என முடிவு கட்டினான்.  சற்று உயரம் குறைவாகவும், தேக அமைப்பில் மென்மையாகவும் காணப்பட்ட அந்த இளைஞனுக்கு 25 வயதிருக்கலாம் என நினைத்தான் பீமன்.



அப்போது கிருஷ்ணன், “என்னிடம் கேட்பதில் என்ன பலன்?  நீ ஏற்கெனவே உள்ளே நுழைந்து என்னைப் பார்க்கவும் பார்த்துவிட்டாய்!  என்ன விஷயம்?  எல்லாம் சரியாகப் போகிறது அல்லவா?” என்று பீமனிடம் கேட்டான்.  “ஆஹா, எல்லாம் நன்றாகப் போகிறது.” என்றான் பீமன்.  “ஆனால் கிருஷ்ணா, சில மனிதர்கள் மிகவும் வருத்தமாக உன்னைப் பார்க்க வேண்டிக் காத்திருக்கின்றனர்.”  என்றும் கூறினான்.  “அதோ கேள்! மக்களின் பொறுமையின்மையை!  “ஜெய ஜெய கிருஷ்ண வாசுதேவா!” எனக் கூக்குரல் போட்டுக் கொண்டு உனக்காகக் காத்திருக்கின்றனர்.  விரைந்து செல் கிருஷ்ணா!  உன் மக்களைச் சமாதானம் செய்!” என்ற வண்ணம் கிருஷ்ணனுக்கும், சுஷர்மாவுக்கும் இடையில் அமர்ந்தான் பீமன்.



“உண்மை தான்.  அவர்களை நான் காக்க வைக்கக் கூடாது.  வெகு தூரத்தில் இருந்தெல்லாம் என்னைப் பார்க்க வேண்டியே வந்திருக்கின்றனர்.  அது சரி, பீமா!  உனக்கு சுஷர்மாவைத் தெரியுமா?  மாட்சிமை பொருந்திய காசி அரசரின் புதல்வன்!  துரியோதனன் மனைவி பானுமதியின் உடன் பிறந்த சகோதரன்!” என்றான் கிருஷ்ணன்.



“நீ ஸ்வீகாரம் செய்து கொண்டிருக்கும் சகோதரிகளில் பானுமதியும் ஒருத்தி! அல்லவா! கிருஷ்ணா! “ என்று பீமன் சிரித்துக் கொண்டிருக்கும்போதே, கிருஷ்ணன் தன் கிரீடத்தையும், உத்தரீயத்தையும் அங்கேயே விட்டு விட்டு சாத்யகியுடன் குடிசையை விட்டு வெளியேறினான். சுஷர்மாவுக்கோ தர்ம சங்கடமாக இருந்தது. தன்ந்தங்கை கணவன் ஆன துரியோதனன் பீமனை எவ்வளவு வெறுக்கிறான் என்பதை அவன் நன்கறிவான்.  ஆகவே பீமனுடன் நட்புப் பாராட்ட அவன் விரும்பவில்லை.  அவன் அங்கிருந்து கிருஷ்ணனோடு வெளியேற விரும்பி எழுந்தபோது பீமனின் கரங்கள் அவன் தோள்களில் படிந்து அவனைத் தடுத்தது.



“உத்கோசகத்துக்கு எப்போது வந்தீர்கள், இளவரசே?” நட்புப் பாராட்டும் தொனியில் பீமன் கேட்டான்.  “மூன்று நாட்கள் ஆகின்றன!” என்றான் சுஷர்மன்.  பீமனுக்கு சுஷர்மனுக்குத் தன்னோடு உரையாடுவதில் விருப்பமோ, மகிழ்ச்சியோ இல்லை என்பது புரிந்தது.  சம்பாஷணையை வளர்த்த விரும்பாதவனாகக் காணப்பட்டான்.  அவனை வெறுப்படைய வைக்கும் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தான் பீமன்.  “உத்கோசகத்தில் இருந்து எப்போது கிளம்புகிறீர்கள்?” என்று கேட்க, “இன்று மாலையே கிளம்புகிறோம்!” என்று பதிலளித்தான் சுஷர்மன்.  பீமன் அதற்கு, “என்ன அவசரம்?  கொஞ்சம் தங்கி எங்களுடன் சில நாட்களைக் கழித்த பின்னர் செல்லலாமே!” என்றான்.  சுஷர்மனின் புருவங்கள் நெரிந்தன.  “என் சகோதரி பானுமதிக்கு உடல்நலம் சரியில்லை.  எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு விரைவில் நாங்கள் ஹஸ்தினாபுரம் போயாக வேண்டும்!” என்றான் சுஷர்மன்.



“என்ன ஆயிற்று பானுமதிக்கு?” பீமன் விடாமல் கேட்டான்.
“ஓ, அவள் துரியோதனனின் குழந்தையைச் சுமந்து கொண்டிருக்கிறாள்.  விரைவில் அவளுக்குப் பிரசவம் ஆகிவிடும்.  அந்த சமயம் நாங்கள் அவளுடன் இருக்க விரும்புகிறோம்.”  இதைச் சொல்வதற்குள் சுஷர்மாவுக்கு வேர்த்து விறுவிறுத்து விட்டது.  “ஓ, அப்போது நீங்கள் ஹஸ்தினாபுரத்தில் பல நாட்கள் தங்கும்படி நேரும்!” என்றான் பீமன்.  “ஆம், இப்போது நாங்கள் புனித யாத்திரை செய்யப் போகிறோம்.  அதை முடித்துக் கொண்டு ஹஸ்தினாபுரம் வருவோம்.  என் தங்கை பானுமதிக்குக் குழந்தை நல்லபடி பிறந்து அவளும் உடல் நலம் தேறும் வரையில் நாங்கள் ஹஸ்தினாபுரத்தில் இருப்போம்.” சொல்லிக் கொண்டே அங்கிருந்து எழுந்து செல்ல ஆரம்பித்தான் சுஷர்மன்.



“ஏன், எங்களுடன் தரைவழிப் பயணம் மேற்கொள்ளலாமே?” என்று கேட்டான் பீமன்.  உடன் தானும் எழுந்து சுஷர்மாவுடன் செல்ல ஆயத்தமானான்.  பீமனுக்கு எப்போதுமே அவனை இப்படிப் பேசும்போது  நட்ட நடுவில் தவிக்க விட்டுச் செல்பவர்களைக் கண்டால் பிடிக்காது.  இவனும் இதையே செய்யப் பார்க்கிறானே! “நாங்கள் படகுப் பயணத்தையே விரும்புகிறோம்.” என்றான் சுஷர்மன்.  பீமன் சிரித்தான்.  “ஆம், ஆம், தூசி இருக்காது. உடலில் அழுக்குச் சேராது.  பாதையில் மேடு பள்ளங்கள் இருக்காது என்பதால் தூக்கிப் போடாது. அதோடு நதியில் போவதால் எப்போதும் குளிர்ந்த காற்று வீசும்.  ஆனால் தரை வழிப் பயணத்தில் நாங்களும் உங்கள் துணைக்கு இருப்போம். நீங்களும் எங்கள் துணைக்கு இருக்கலாம்.”



“இல்லை, நாங்கள் படகுப் பயணத்தையே விரும்புகிறோம்!” என்ற வண்ணம் பீமனைப் பார்த்துக் கும்பிட்டு விட்டுக் குடிசையின் வாயிலை நோக்கிச் சென்றான் சுஷர்மன்.  தன்னுடன் பேசுவதை நிறுத்திக் கொண்டு சட்டென அவன் கிளம்புவதால் அமைதியை இழந்த பீமன், “படகுகளுக்கு எப்போது போவீர்கள்? என்று கேட்ட வண்ணம் சுஷர்மனோடு சேர்ந்து கொண்டான். அலைகளின் ஏற்ற, இறக்கத்தையும், நீரின் மட்டத்தையும் பொறுத்து நங்கூரம் எடுக்கப்படும்.  ஆனால் நாங்கள் இரவு உணவுக்குப் பின்னர் படகுக்குப் போய்விடுவோம்.” என்றான்.



“நீங்கள் செல்லும்போது விடை கொடுக்க நான் வருகிறேன்.” என்றான் பீமன்.  அவனுக்கு இப்போது தான் செய்யவேண்டியது என்ன என்பது புரிந்தது.  நகுலனுக்கு பீமன் இப்படி வலுவில் அவனுடன் நட்புப் பாராட்டுவது ஆச்சரியத்தை அளித்தாலும், இதில் ஏதோ உள் நோக்கம் உள்ளது என்ற அளவில் புரிந்து கொண்டிருந்தான்.  ஆகவே அனைத்தையும் மௌனமாகப் பார்த்துக் கொண்டிருந்தான்.   தான் சொன்னபடியே இரவு உணவுக்குப் பின்னர் பீமன் நதிக்கரைக்குச் சென்ற தௌம்ய ரிஷியோடும், மற்றவர்களோடும் சேர்ந்து கொண்டு காசி இளவரசனும், இளவரசியும் அங்கிருந்து கிளம்புகையில் விடை கொடுக்கச் சென்றான்.  அவன் எதிர்ப்பார்ப்புப் பொய்யாகவில்லை.  ஜாலந்தராவுக்கும் அவனுக்கும் கண்களாலேயே ரகசியப் பேச்சு வார்த்தை நடந்தது.  திருட்டுத் தனமாகத் தன் பக்கம் அவள் பார்ப்பதையும், கண்களால் விடைபெறுவதையும் பார்த்த பீமன் ஆகாயத்தில் பறந்தான்.  அவன் உள்ளம் சந்தோஷத்தில் கூத்தாடியது.