Wednesday, October 28, 2015

சத்ராஜித்தின் உறுதி!

“என்ன அஸ்வமேத யாகமா? நீங்கள் என்ன மாபெரும் சக்கரவர்த்தி பதவிக்கு ஆசைப்படுகிறீர்களா? சக்கரவர்த்தியாகும் எண்ணமா?” என்று கிருஷ்ணன் கொஞ்சம் ஆச்சரியத்துடனேயே கேட்டான். “ஹா, அது சூரியதேவனின் உரிமையுடன் கூடிய கட்டளை ஆகும். இதற்கெனவே நான் இரு குதிரைகளைக் கருத்துடன் வளர்த்து வருகிறேன். அவற்றிற்கு சாஸ்திரபூர்வமாக அபிஷேஹ ஆராதனைகள் நடத்தி யாகம் செய்யத் தயார் செய்து விடுவேன். இன்னும் இரு வருடங்களில் அவை நடந்து விடும். அவற்றால் எனக்கு ஒரு சக்கரவர்த்திக்குக் கிடைப்பதை விட அதிகமான அதிகாரமும், பலமும், செல்வமும் கிடைத்துவிடும்.” என்றான் சத்ராஜித்.  சத்ராஜித்தின் தற்புகழ்ச்சியான பேச்சுக்களைப் பார்த்தும், கேட்டும் கிருஷ்ணன் மனதுக்குள் சிரித்துக்கொண்டான். வெளிப்படையாக ஒரு புன்னகையை மட்டுமே காட்டினான். அவர்கள் அந்தத் தாழ்வாரத்தின் இன்னொரு பகுதிக்குச் சென்று கொண்டிருந்தனர். அங்கே தான் கரடித் தோலால் ஆன விரிப்புகள் விரிக்கப்பட்டிருந்தன.

சத்ராஜித் கிருஷ்ணனை அங்கிருந்த ஓர் ஆசனத்தில் அமரச் செய்தான். அதன் பின்னர் தனக்கு உரிய ஆசனத்தில் அவனும் அமர்ந்து கொண்டான். இரு ஆசனங்களிலும் சாய்ந்து அமரும் வண்ணம் திண்டுகள் வெல்வெட் துணீயால் தைக்கப்பட்டுப் போடப்பட்டிருந்தன. சத்ராஜித்தின் கழுத்தில் இருந்த ச்யமந்தக மணியானது மிகச் சிறந்ததொரு ஒளியை வீசிக் கொண்டு அதன் பிரதிபலிப்பை அந்த அறை முழுவதும் பாய்ச்சிக் கொண்டிருந்தது. அந்த ச்யமந்தக மணியின் மேல் சூரியக் கதிர்கள் பட்டுப் பிரதிபலிக்கையில் இன்னொரு சூரியன் இங்கே உதித்து விட்டானோ என்னும்படியாக ரத்தவண்ண ஒளிக்கதிர்கள் அறை முழுவதையும் ரத்தச் சிவப்பாக்கிக் கொண்டிருந்தது. சற்று நேரம் இருவரும் எதுவும் பேசவில்லை. அமைதி நிலவியது.

அப்போது சத்ராஜித் கிருஷ்ணனைப் பார்த்து ஆதரவும், தயவும் நிரம்பிய குரலில் திடீரெனப் பேச ஆரம்பித்தான். “வாசுதேவா! நேற்று ராஜசபையில் நீ என்னுடன் பேசுவதற்கு மிகவும் ஆர்வம் காட்டினாய்! என்ன காரணம்? அதோடு என்ன காரணத்தால் நீ இங்கே வந்து என்னைக் காண வந்திருக்கிறாய்! உண்மையை ஒளிக்காமல் சொல்!” என்றான்.

“ஓஹோ, உங்களுக்குக் காரணம் வேண்டுமெனில் அதை நான் சொல்கிறேன், கேளுங்கள்.” என்ற கிருஷ்ணன், சத்ராஜித் தன்னை உயர்வாகக் கருதிக்கொண்டு கேட்ட கேள்வியின் மூலம் அங்கு உருவாக்கப்பட்ட சூழ்நிலையைச் சிறிதும் லட்சியம் செய்யாமல் பேச ஆரம்பித்தான். இது சத்ராஜித்துக்குக் கொஞ்சம் ஏமாற்றத்தையே தந்தது! “ஒரு விதத்தில் நான் உங்களைச் சந்திக்க ஆர்வமாகத் தான் இருந்தேன். ஏனெனில் உங்களுக்கும் மற்ற யாதவத் தலைவர்களுக்கும் இடையே ஒரு பரிபூரணப் புரிதலோடு கூடிய ஒத்திசைவு ஏற்பட வேண்டும் என்பதில் எனக்கு ஆர்வம்!”

“அது அப்படி ஒன்றும் முக்கியமானது அல்லவே! அதற்கு இன்னும் நேரம் எவ்வளவோ இருக்கிறதே! ஆகையால் நிச்சயமாக வேறொரு காரணம் இருந்தே ஆக வேண்டும். அதன் காரணமாகவே நீ இவ்வளவு அவசரமாக என்னை வந்து பார்க்கிறாய்!” என்றான் சத்ராஜித்.

“நீங்கள் சரியாகவே சொல்கிறீர்கள்! மாட்சிமை பொருந்திய சத்ராஜித் அவர்களே, நான் இங்கே மிகவும் அவசரமாகவும், அவசியமாகவும் உங்களை வந்து சந்திப்பதற்கு ஒரு முக்கியக் காரணம் இருக்கிறது தான். ஆனால் அது உங்களை நிச்சயம் பாதிக்கும்.” என்றான் கிருஷ்ணன் நட்பு தொனிக்க!

“என்ன? என்னைப் பாதிக்கும் விஷயமா?” என்று கேட்ட சத்ராஜித்தின் முகம் சற்றே மாறியது. அவன் முகத்தில் ஒரு தீவிர பாவனை தோன்றியது. “என்னை எதுவும் பாதிக்காது! பாதிக்கும்படி நான் அனுமதிப்பதில்லை!” என்று தீர்மானமாகச் சொன்னான். புன்னகை புரிந்த கிருஷ்ணன் அவனைப் பார்த்துத் தன் இனிமையான மயக்கும் குரலில் பேசத் துவங்கினான். “ ஒரு வேளை நான் உங்களுக்கு உதவலாம்! அல்லவா? உங்களுக்கும் மற்ற யாதவத் தலைவர்களுக்கும் இடையே இருக்கும் வேறுபாடுகளைக் களைய நான் உதவி செய்யலாம். என் உதவி உங்களுக்குத் தேவைப்படலாம்! அதிலும் முக்கியமாக மாட்சிமை பொருந்திய சாத்யகரோடு உங்களுக்கு ஏற்பட்டுள்ள வேறுபாடுகள்! அவற்றைக் களைய என் உதவி தேவைப்படலாம்!” என்றான்.

“உதவி! அதுவும் உன்னிடமிருந்து! ஹூம்!” வெறுப்பும், இகழ்ச்சியும் கலந்த குரலில் கத்தினான் சத்ராஜித். “இப்போது எனக்குப் புரிகிறது.  நீ ஏன் இங்கு வந்திருக்கிறாய் என்பதை நான் புரிந்து கொண்டேன். உன்னுடைய உணர்ச்சிகரமான வெற்றிகளில் ஒன்றை இங்கும் வந்து பெற்றுச் செல்லவே நீ வந்திருக்கிறாய்! அது நிச்சயம் நடக்காது!”

ஆனால் கிருஷ்ணன் அதற்கெல்லாம் அசைந்து கொடுக்கவில்லை. “ஆம், ஐயா!” என்று வெளிப்படையாக ஒத்துக் கொண்டவன்.”நான் உங்கள் மனதை, உங்கள் இதயத்தை வெற்றி கொள்ளவே வந்துள்ளேன்! அது உண்மை தான்! அதற்கு நீங்கள் என்னை அனுமதிப்பீர்கள் அல்லவா?” என்றும் வினவினான். வெளியே இருந்து கேட்டுக் கொண்டிருந்த சத்யபாமாவின் இதயம் வெகு வேகமாக அடித்துக் கொண்டது. அவள் வாய் வழியாக வெளியே வந்துவிடுமோ என்னும் வண்ணம் துடித்தது. அவளும் மிகவும் ஆவலுடனும், நம்பிக்கையுடனும் பார்த்தாள். கிருஷ்ணன் அவள் தந்தையை மிகுந்த நட்புடனும், நம்பிக்கையுடனும் பார்த்து மேற்கண்டவாறு கேட்டபின்னர் அவர் முகத்தையே ஆவலுடன் உற்று நோக்கிய வண்ணம் அமர்ந்திருப்பதைக் கண்டாள் பாமா. கிருஷ்ணனின் இந்த நட்புக்கரத்துக்கு அவள் தந்தை எதிர்க்கரம் நீட்ட வேண்டும் என்றும் அவள் எதிர்பார்த்தாள்.

ஆனால் சத்ராஜித் தன் சுட்டுவிரலைக் கிருஷ்ணன் முகத்துக்கு நேரே நீட்டி ஆட்டிய வண்ணம் பேச ஆரம்பித்தான். “ஆஹா! இப்போது அறிந்து கொண்டேன். நீ கடைசியில் எதற்கு வருகிறாய் என்று இப்போது  புரிந்து கொண்டேன். யாதவத் தலைவர்களுக்கு ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு கட்ட நினைக்கிறாய்! அந்த நஷ்டம் நானும் அந்தப் பங்கீட்டில் பங்கேற்காத காரணத்தால் ஏற்பட்டது அல்லவா? ஆகையால் இங்கே வந்து என்னிடம் இருந்து நல்லவற்றைப் பெற்று யாதவர்களுக்கு அளித்து அவர்களுக்கு இழப்பீடு கொடுக்க வைக்க முயல்கிறாய்! உன்னுடைய ஆணைகளுக்கு நான் கட்டுப்படவில்லை என்பதால் இப்போது நேரிலேயே வந்து அவற்றை நிறைவேற்றிக் கொள்ள நினைக்கிறாய்!” அவன் குரலில் இருந்த கிண்டல் அவன் கிருஷ்ணனைப் பார்த்துச் சிரிக்கிறான் என்பதைச் சொல்லாமல் சொல்லியது.

“அது என்னுடைய ஆணையே அல்ல ஐயா! என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்! “ என்ற கிருஷ்ணன் தொடர்ந்து, “நீங்கள் இழப்பீடு கொடுத்தால் அது எனக்கு வெற்றி அல்ல! தர்மத்தின் வெற்றி! எனக்குத் தனிப்பட்ட முறையில் அதனால் எவ்வித பலனும் இல்லை.” என்றான் கிருஷ்ணன். அகந்தையுடன் சிரித்தான் சத்ராஜித்! “நீ வெளிப்படையாகப் பேசுவதைப் பாராட்டுகிறேன், வாசுதேவா! சில உண்மைகளை நீ என்னிடமிருந்தும் இப்போது கேள்!” என்றான். “ஆம், நான் அதற்குத் தான் வந்தேன். வெளிப்படையாகப் பேசுவதற்கு! வேறேதும் வெற்றுரையைக் கேட்டுக் கொண்டு உட்கார்ந்திருப்பதற்கு வரவில்லை. இதற்காகவே வந்தேன். வேறெதற்கும் இல்லை!” என்றான் கிருஷ்ணன்.

“அப்படி எனில் கேள்!” என்ற சத்ராஜித் முகத்தில் தீர்மானமும் உறுதியும் தென்பட்டது. “என்னுடைய செல்வங்கள் அனைத்தும் சூரிய தேவனின் அருளால் கிடைத்தது.” என்ற வண்ணம் தன் கழுத்தில் இருந்த ச்யமந்தக மணியை மெல்லத் தடவிக் கொடுத்தான். அதை அப்படியே எடுத்துத் தன் கண்களில் ஒற்றிக் கொண்டான். “இப்படி எனக்குக் கடவுள் அருளால் கிடைத்த செல்வத்தை எக்காரணம் கொண்டும் நான் இழக்க விரும்பவில்லை.” என்றும் கூறினான். “நீங்கள் உங்கள் மனதை மாற்றிக் கொள்ள வேண்டும். அதைத் தான் நானும் விரும்புகிறேன். உங்களுக்கு நான் சொல்லும் ஆலோசனையும் அதுவே!” என்றான் கிருஷ்ணன்.

“நான் அடிக்கடி மனதை மாற்றிக் கொள்பவன் அல்ல! ஒரு முறை முடிவெடுத்தால் எடுத்தது தான். ஒரே முறை தான் சிந்திப்பேன்! பலமுறை குழப்பிக்கொள்ள மாட்டேன். இதில் இரண்டாவது சிந்தனைக்கே இடமில்லை. என்னுடைய செல்வங்கள் எல்லாம் நான் சம்பாதித்தவை! அவற்றை எக்காரணம் கொண்டும் நான் எவருக்கும் கொடுக்க மாட்டேன். யாரும் என்னிடம் கேட்கவும் முடியாது!” என்ற சத்ராஜித்தின் கண்கள் அங்குமிங்கும் பயங்கரமாக உருள அவன் உதடுகளும் அவன் மனதின் உறுதியைப் பிரதிபலிக்கும் வண்ணம் சற்றே கீழ் நோக்கி மடிந்தன.


1 comment:

ஸ்ரீராம். said...

பொறாமையாலும், ஆத்திரத்தாலும் அறிவிழக்கும் சத்ராஜித். ம்ம்ம்....