துரியோதனனும், ஷகுனியும் யுதிஷ்டிரன் இனி இந்த விளையாட்டு ஆடுவதிலிருந்து பின்வாங்க முடியாது என்பதை நன்கறிந்திருந்தனர். வசமாக யுதிஷ்டிரன் மாட்டிக் கொண்டான் என்பதும் புரிந்திருந்தது இருவருக்கும். அப்படி அவன் விளையாடாமல் ஒதுங்கினால் இந்த மாபெரும் சபையின் முன்னர் அவன் ஓர் கோழையாகவும் தொடை நடுங்கியாகவும் அறிவிக்கப்படுவான் க்ஷத்திரிய குலத்துக்கே ஓர் அவமானச் சின்னமாகவும் அறிவிக்கப்படுவான். ஆகவே யுதிஷ்டிரனால் இந்த சூதாட்டம் ஆடுவதிலிருந்து தப்ப இயலாது.
ஷகுனி கேட்டான்:"யுதிஷ்டிரா, நீ என்னுடன் சூதாட்டம் ஆடும்போது ஏமாற்றப்பட்டு விடுவோம் என்று அஞ்சுகிறாயா? அப்படி உனக்கு அச்சமாக இருந்தால் சொல்லி விடு. நாம் விளையாட வேண்டாம்." என்றான் எகத்தாளமாக. "இல்லை, காந்தார இளவரசரே! இந்த ஆணையைப் பிறப்பித்தவர் குரு வம்சத்தின் தலைவர். அவர் ஆணையை நான் மதித்தே ஆகவேண்டும். ஆகவே நான் விளையாடப் போகிறேன்." என்றான் யுதிஷ்டிரன். அப்போது சங்குகளும், பேரிகைகளும் முழங்கின. கட்டியம் கூறுவோரின் தொனிகளில் இருந்து பிதாமஹர் பீஷ்மரும், அரசன் திருதராஷ்டிரனும் வருகிறார்கள் என்பது புரிந்தது. இரு மெய்க்காவல் படை வீரர்கள் கைகளில் தங்கத் தகட்டால் மூடப்பட்ட தண்டாயுதங்களை ஏந்தியபடி உள்ளே நுழைந்து நுழைவாயிலுக்கு இருபுறமும் நின்று கொண்டனர்.
இரு தலைவர்களும் உள்ளே நுழைந்ததும் அங்கே அமர்ந்திருந்த ஸ்ரோத்திரியர்கள் அனைவரும் எழுந்து கொண்டு மந்திர கோஷங்கள் செய்து அவர்களை ஆசீர்வதித்து, வாழ்த்துகள் சொல்லி வரவேற்க மற்றவர் மரியாதையுடன் தலை குனிந்து வரவேற்றனர். சஞ்சயன் திருதராஷ்டிரனைக் கைப்பிடித்து அவனுடைய ஆசனத்துக்கு அழைத்துச் சென்றான். அவர்களுக்குப் பின்னர் துரோணாசாரியார், அஸ்வத்தாமா மற்றும் கிருபர் ஆகியோரும் வந்தனர். அதன் பின்னர் குரு வம்சத்தின் மற்ற உயர் பதவிகளில் இருக்கும் தலைவர்கள் அணி வகுத்து வந்தனர். உள்ளே நுழைந்த பீஷ்மரின் கழுகுக்கண்கள் அங்கிருந்த அனைவரையும் நோட்டம் விட்டன. அவர் முகம் இறுக்கமாக இருந்தது.
அந்த மாபெரும் அவையின் இத்தனை வருட பாரம்பரியத்திற்குப் பொருந்தாத வகையில் பெரும்பாலான குரு வம்சத்துத் தலைவர்கள் ஆயுதபாணியாக வந்திருப்பதை அவர் கண்டு கொண்டார். அவர் மட்டும் இந்த விளையாட்டின் போது தலையிட்டால் ஷகுனி அதை எதிர்கொள்ளத் தயாராகக் காத்திருந்தான். ஆனால் அது தான் அந்த இடையூறும் எதிர்கொள்ளலுமே குரு வம்சத்தின் முடிவாகவும் அமையலாம். மொத்த அவையும் ஓர் எதிர்பார்ப்பிலும் நடுக்கத்திலும் அடுத்து நடக்கப் போவதற்காகக் காத்திருந்தது.
சகோதரர்கள் ஐவரும் பீஷ்மருக்கும், திருதராஷ்டிரனுக்கும் நமஸ்கரிக்க, துரியோதனாதியரும் அதைப் பின்பற்றினார்கள். கர்ணனும் ஷகுனியும் கூட அனைவருக்கும் நமஸ்கரித்தனர். யுதிஷ்டிரன் கீழே விழுந்து நமஸ்கரிக்கையில் பீஷ்மர் குனிந்து அவனைத் தூக்கினார். தன்னுடன் ஆரத் தழுவிக் கொண்டு அவனை உச்சி முகர்ந்தார். அங்கிருந்த அனைவருக்கும் இந்த அன்பும், பாசமும் கண்டு ஆச்சரியம் ஏற்பட்டது. யுதிஷ்டிரனிடம் பீஷ்மர் அளவற்ற பாசம் வைத்திருப்பதைக் கண்டு வியந்தனர். அவர்கள் அனைவருக்கும் இந்த சூதாட்டத்தில் என்ன நடந்தாலும் அதில் பீஷ்மர் தலையிடப் போவதில்லை என்று வாக்களித்திருப்பது குறித்துத் தெரிந்திருந்தது. ஆனால் அதற்கும் இப்போது யுதிஷ்டிரன் பால் பீஷ்மர் காட்டிய பாசத்துக்கும் சம்பந்தம் ஏதும் இல்லை என்பதைப் புரிந்து கொண்டனர்.
யுதிஷ்டிரனின் இந்த முடிவு ஓர் வீரதீர சாகசமானதாகவே பீஷ்மர் எண்ணினார். அதற்காக அவனைப் பாராட்டவும் செய்தார். உண்மைக்கும், நேர்மைக்கும், சமாதானத்திற்கும், தர்மத்தின் வழி நடப்பதற்காகவும் அவன் தன்னையும் தன் குடும்பத்தையும் பணயம் வைக்கிறான் என்பதை பீஷ்மர் நன்கறிந்திருந்தார். இந்தக் குரு வம்சத்தில் இவன் ஒருவனாவது தர்மத்தின் வழி நடப்பதில் உறுதியுடன் இருக்கிறான் என்பதைக் கண்டு பீஷ்மர் உள்ளூர மகிழ்ந்தார். எத்தனை தடைகள் வந்தாலும் என்ன பிரச்னைகள் வந்தாலும் தர்மத்தைக் காப்பதில் யுதிஷ்டிரனுக்கு உள்ள உறுதியைக் கண்டு ஆனந்தம் அடைந்தார். அனைவரும் தங்கள் ஆசனங்களில் அமர்ந்தனர். ஆசிகளைக் கூறும் மந்திர கோஷங்களைச் செய்தனர் அங்கிருந்த அந்தணர்கள் அனைவரும். வந்திருந்த தலைவர்கள் அனைவரும் அவரவருக்குரிய ஆசனங்களில் அமர்ந்தனர்.
விதுரரும், சஞ்சயனும் கூட அவரவர் ஆசனத்தில் அமர்ந்து கொண்டனர். ஒருவர் பீஷ்மரின் காலடிகளுக்கு அருகேயும், சஞ்சயன் திருதராஷ்டிரனின் காலடிகளுக்கு அருகேயும் அமர்ந்தனர். பின்னர் இருவரும் பீஷ்மரைப் பார்க்க அவர் அனுமதி அளிக்கத் தொடர்ந்து திருதராஷ்டிரனும் அனுமதி அளிக்க விதுரர் அறிவிப்புச் செய்தார்!
"பிதாமஹர் பீஷ்மரும், சக்கரவர்த்தி திருதராஷ்டிரனும் இட்ட கட்டளையின் பேரில் இப்போது ஆட்டம் ஆரம்பிக்கத் தொடங்கும்!"
1 comment:
.
Post a Comment