Friday, December 23, 2016

காயுருட்டலானார்--சூதுக்களி தொடங்கலானார்!

மாட்சிமை பொருந்திய தங்கள் குலபதியைத் திரும்பிப் பார்த்தான் துரியோதனன்.  அவர் எப்படி இந்த நிகழ்வுக்கு எதிர்வினை ஆற்றுவார் என்பதை அறிய மிகுந்த ஆவலுடன் காத்திருந்தான். அவர் வலக்கையின் ஆள்காட்டி விரலை நீட்டிய வண்ணம் எச்சரிக்கைக் குறி செய்து கொண்டிருந்தார்.  துரோணாசாரியாரும் அப்போது கோடரியை நீட்டியவண்ணம் காட்சி அளித்தார். துரோணர் பரசுராமரின் சீடர் என்பதை நினைவூட்டும் விதமாகத் தன்னுடைய அடையாளமாகவும் கோடரியை வைத்திருந்தார்.  துரியோதனன் பீஷ்மர் மற்றும் துரோணர் ஆகிய இருவரின் மன ஓட்டங்களை அவர்களின் உடல் அசைவிலிருந்து புரிந்து கொண்டான். அவன் தைரியம் அப்போது அவனை விட்டு அகன்றது. தன் கையிலிருந்த வாளை மீண்டும் உறையிலிட்டான். திரும்பித் தன் நண்பர்களைப் பார்த்தான்.  அவர்கள் அவனை ஏளனத்துடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

துரியோதனன் எளிதில் வெடித்து விடுகிற சுபாவம் உள்ளவன் என்பதை அவர்கள் அறிந்திருந்தார்கள். ஆனால் இப்படி ஒரு கோழையாகப் பெரியோர்களுக்குப் பயப்படுபவனாக இருப்பான் என்பதை அவர்கள் எதிர்பார்க்கவே இல்லை.  இத்தனைக்கும் முதல் நாள் இரவில் அவர்கள் அனைவருமாகச் சேர்ந்தே தான் அந்த முக்கியமான முடிவை எடுத்திருந்தார்கள்.  அப்போது அவர்கள் முடிவுக்குக் குறுக்கே யார் வந்தாலும் அவர்களை அழிக்க வேண்டும் என்றும் பேசி முடிவு எடுத்திருந்தார்கள். அதன் பின்னரும் துரியோதனன் இவ்வளவு பயப்படுகிறானே! அதிலும் அந்தக் கிழவர் பீஷ்மருக்கு! இதைக் கண்ட துஷ்சாசனன் கூடத் தன் அண்ணனை வீரதீரக் கதாநாயகனாகவே எண்ணி இருந்தவன் இப்போது மனம் நொந்தான்.

அதற்குள்ளாக துரியோதனன் மீண்டும் சதுரங்கமேடையில் தன் ஆசனத்துக்கு அருகே போய் உட்கார்ந்து கொண்டான். ஷகுனி அவன் காதுகளில் மெல்லக் கிசுகிசுத்தான். “மருமகனே, கேள்! இதனால் எல்லாம் ஏமாற்றம் அடைந்து விடாதே! பொறுத்திருந்து பார்! நாம் விரைவில் அவர்களைப் பாண்டுவின் குமாரர்கள் என்னும் அந்தஸ்திலிருந்தும் க்ஷத்திரியர்கள், அரசகுலத்தினர் என்னும் தகுதியிலிருந்தும் ஒட்டு மொத்தமாக அழித்து விடுவோம்.  ஹூம், நீ இன்னும் உன்னுடைய தாய்மாமனான என்னைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. என்னிடமிருந்து அவர்கள் தப்பி விடுவார்கள் என்று நினைத்து விடாதே!” என்றான்.

யுதிஷ்டிரன் ஆசாரியர் வேத வியாசரின் தீர்க்க தரிசனத்தைப் பொய்யாக்கி விட வேண்டும் என்றும், ஓர் மாபெரும் யுத்தம் நடைபெறுவதைத் தவிர்க்க வேண்டும் என்று மனப்பூர்வமாக எண்ணினான்.  ஆனால் அவன் தங்கள் ஐவருக்கும் தங்கள் பெரியப்பாவின் மக்களுக்கும் இடையில் உள்ள பூதாகாரமான இடைவெளியை ஒழிக்க வேண்டும் என்று எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் மேலும் மேலும் பிரச்னைகளையே அருகில் கொண்டு வந்து கொண்டிருக்கிறது. இத்தனைக்கும் தன் சொத்துக்களை எல்லாம் அவன் மகிழ்வுடனேயே இழந்தான். அதற்காகச் சிறிதும் கலங்கவில்லை.  மேலும் தங்கள் அனைவரின் உடைமைகளையும், இந்திரப் பிரஸ்தத்தையும் கூட இழந்து விட்டான். இனி அவனும் அவன் சகோதரர்களும் இந்த சபாமண்டபத்திலிருந்து பிச்சைக்காரர்களைப் போல வீடிழந்து நாடிழந்து திரும்பவேண்டியவர்களே! இப்படி இருக்கையில் யுதிஷ்டிரன் இப்போது தான் விஷயத்தைத் தெள்ளத் தெளிவாகப் புரிந்து கொண்டான்.

திடீரென ஏற்பட்டதொரு மன வெளிச்சப் பொறியில் அவனுக்குப் புரிந்தது என்னவென்றால் அவர்கள் ஐவருக்கும் அவர்களுடைய பெரியப்பா புத்திரர்களுக்கும் இடையில் சமாதானம் என்பதே இல்லை; எப்போதுமே இல்லை என்பதே! யுதிஷ்டிரன் எவ்வளவு விட்டுக் கொடுத்தாலும் அது துரியோதனாதியரின் மனதைத் திருப்தி செய்யப் போவதில்லை.  துரியோதனன் இந்த விளையாட்டை ஏற்பாடு செய்திருப்பதின் முக்கியக் குறிக்கோள் யுதிஷ்டிரனுடைய செல்வத்தையோ, உடைமைகளையோ, அல்லடு இந்திரப் பிரஸ்தத்தையோ கவர்வது மட்டுமல்ல. அவர்களைக் குலத்திலிருந்தே ஒதுக்கி வைத்துப் பாண்டுவின் புத்திரர்கள் என்னும் அந்தஸ்திலிருந்து முழுமையாக விலக்கி வைத்து ஆரிய வர்த்தத்தின் பிரசித்தி பெற்ற குரு வம்சத்து அரசகுல க்ஷத்திரியர்கள் என்னும் தகுதியிலிருந்து அவர்களைக் கீழிறக்க வேண்டும் என்பதே அவர்கள் எண்ணம். அவர்கள் அனைவரையும் துரியோதனாதியரின் அடிமைகளாக ஆக்கவேண்டும் என்பதே அவர்கள் குறிக்கோள்.

பிதாமஹர் பீஷ்மரைப் பார்த்தான் யுதிஷ்டிரன். அவர் வாக்குக் கொடுத்ததற்கு ஏற்ப மௌனமாகவே வீற்றிருந்தார். ஆனால் கடுங்கோபத்தில் இருந்தார் என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.  அவர் இத்தனை வருடங்களாக இந்தக் குரு வம்சத்தையும் ஹஸ்தினாபுரத்தையும் அதன் மகத்தான சாம்ராஜ்யத்தையும் கட்டிக் காத்து வந்தது வீணாகி விட்டது. அந்த நாட்களெல்லாம் இனி வரப் போவதில்லை என்றும் இனி எதுவும் தன் கைகளில் இல்லை என்பதையும் அவர் புரிந்து கொண்டு விட்டார்.  விதுரன் பட்ட பாடு! இத்தனைக்கும் இந்த அரசகுலத்தவரால் மிகவும் மதிக்கப்பட்ட மனிதர் விதுரர். அவர் திருதராஷ்டிரனின் பிரியத்துக்குகந்த மாற்றாந்தாயின் வழி சகோதரர் என்பதால் மட்டுமில்லை. அவருடைய படிப்பு, ஞானம், அனைவரையும் அரவணைத்துச் செல்லும் நேசம் மிகுந்த குணம், பெரியோரிடம் காட்டும் மரியாதை, அரச நிர்வாகத்தில் அவர் காட்டிய நிபுணத்துவம் போன்றவையும் அவர் மேல் மிக்க மரியாதையைக் காட்டும்படி செய்திருந்தது.

அப்படிப் பட்ட விதுரரையே அவமதிக்கும்படி நடந்து கொண்டு விட்டான் துரியோதனன். அவனுடைய இந்தக் குணம் விதுரருக்கு மட்டும் அவமரியாதை இல்லை, பீஷ்மருக்கும் சேர்த்துத் தான்.  குரு வம்சத்தினருக்கே ஓர் மரண அடியாக அமைந்து விட்டது அது! அதுவும் பீஷ்மர் பல்லாண்டுகளாகக் கட்டிக் காத்து வந்த பெருமையை எல்லாம் சிதற அடித்து விட்டது.  ஆரியர்களின் பாரம்பரிய சாஸ்திரங்களின் படியும் கோட்பாடுகளின் படியும் ஆரியர்கள் ஆணாக இருந்தாலும், பெண்ணாக இருந்தாலும் அவர்களை வாங்கவோ, விற்கவோ கூடாது; முடியாது! அது விதி அல்ல! அவர்களை அக்னிக்கடவுளுக்கு இரையாகவும் ஆக்க முடியாது.  இப்படிப்பட்ட மனித பலியைக் கடவுள் வருண பகவான் முற்றிலும் நிராகரித்து விடுவார். ஏற்றுக்கொள்ளவே மாட்டார்.  இதை ஏற்கெனவே வருண் பகவான் முனிவர் ஷுனஷேபாவை பலி கொடுக்கக் கட்டிப் போட்டிருந்த சமயம் அவரை விடுவித்ததன் மூலம் நிரூபித்தும் காட்டி இருக்கிறார்.

அங்கே குழுமியிருந்த அரச குலத்தினரில் பெரும்பான்மையானவர்களுக்கு இந்த சபையில் நடக்கும் இந்த நிகழ்ச்சிகளின் போக்குப் பிடிக்கவில்லை. அவர்களுக்குள்ளாக முணுமுணுத்துக் கொண்டார்கள். ஆனால் வெளிப்படையாக ஏதும் பேசவில்லை. ஏனெனில் அனைவருக்கும் பெரியவரான பிதாமஹர் பீஷ்மரே பேசாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.  ஆகவே மெல்ல மெல்லத் தங்களுக்குள்ளேயே பேசிக் கொண்டனர். துரியோதனன் சூதாட்டம் விளையாடும் இடத்துக்குத் திரும்பி வந்ததும் அங்கே அமர்ந்திருந்த அனைவரையும் பெருமையுடன் பார்த்தான். பின்னர், “ஆட்டம் தொடங்கட்டும்!” என்று தோரணையுடன் கட்டளையிட்டான்.

2 comments:

ஸ்ரீராம். said...

என்னவொரு தலைப்பு!

விதியை மாற்றவோ வெல்லவோ யுதிஷ்டிரானால் முடியுமா என்ன!

sambasivam6geetha said...

இந்தத் தலைப்புகள் எல்லாம் மீசைக்காரருடையது! :)