Thursday, December 29, 2016

ஹரி ஹரி என்றாள்! கண்ணா! அபயமுனக்கு அபயமென்றாள்!

“மிக உண்மை! அவருக்கு நாம் நம் தந்தையைப் போல் மரியாதை கொடுத்து வந்தோம். இப்போது அவருடைய கரங்களை நாம் எரித்தே ஆக வேண்டும். சுட்டுப் பொசுக்க வேண்டும். இதோ நம் மனைவியான இந்தப் பரிதாபத்துக்குரிய இளவரசியைப் பார்! எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவள்! நாம் அவளைத் திருமணம் செய்து கொள்கையில் அவளை ஓர் அரசியாக்கிப் பார்ப்போம் என்றும் நம் பட்டமஹிஷியாக அவளே இருப்பாள் என்றும் உறுதி மொழி கொடுத்திருந்தோம்.  இப்போது அவளை நம் அண்ணன், மூத்தவன் பணயம் வைத்துத் தோற்று அடிமையாக்கி வைத்திருக்கிறானே, இந்நிலையில் அவளைப் பார்க்கையில் உனக்கு ரத்தம் கொதிக்கவில்லையா?” என்று கேட்டான்.

“ஆம், பீமா! எனக்கும் கோபம் வரத்தான் செய்கிறது. ஆத்திரத்தில் உடல் நடுங்குகிறது. அதே போல் தான் நம் மூத்தவனுக்கும் இருக்கும் அல்லவா? அதோ அவர் முகத்தைப் பார்! அவர் மனம் உடைந்து நிற்பதைக் கவனி! நம்மைப் போல் அவரும் துக்கத்தில் மூழ்கித் தவிப்பது உன் கண்களில் படவில்லையா? இப்போது அவரிடம் உன் கோபத்தைக் காட்டுவதன் மூலம் மேலும் அவரைத் துக்கத்தில் ஆழ்த்தி விடாதே! அது நம் எதிரிகளுக்கு நல்லதொரு வாய்ப்பாகி விடும். அவர்கள் நோக்கமே நம்மைப் பிரித்து ஒருவருக்கொருவர் சண்டை மூட்டி விடுவது தான்! அதை உண்மையாக்கி விடாதே! இது வரையிலும் நாம் அனைவரும் ஒருவராக வாழ்ந்து வருகிறோம். ஆறு உடல்களாகவும் ஒரே உயிராகவும் இருந்து வருகிறோம். நம் எதிரிகள் இப்போது நாம் தோற்றதை நினைத்து மட்டுமே சந்தோஷம் அடைந்திருக்கிறார்கள்.  நாம் நம் மூத்தவனோடு சண்டை போட்டால் அதன் மூலம் அவர்களுக்கு இன்னமும் சந்தோஷம் கிடைக்கும்!”

மிக முயற்சி செய்து அர்ஜுனன் பீமனை சமாதானம் செய்தான். அவர்கள் வாழ்நாளில் எப்போதுமே மூத்தவனை மதிப்பதை ஓர் கடமையாகக் கடைப்பிடித்து வந்தார்கள். அந்த நிலைமை இப்போது மீண்டும் அர்ஜுனனால் திரும்பியது. இந்த துரதிர்ஷ்டமான நிலையைக் கண்டு தன்னை அடக்கி வைத்துக்கொள்ள இயலாத விகர்ணன் என்னும் துரியோதனனின் சகோதரர்களில் ஒருவன் இப்போது எழுந்து கொண்டு திரௌபதியைப் பார்த்துப் பேச ஆரம்பித்தான்.

“மாட்சிமை பொருந்திய மஹாராணியே! அண்ணியாரே! நீங்கள் சொல்வது சரியே! அதை அப்படியே நான் ஏற்கிறேன். இந்த தர்பார் மண்டபத்தில் நீதியும், நேர்மையும் சிறிதும் இல்லை!  தாத்தா அவர்களே, இந்தக் குரு வம்சத்தின் பிதாமஹர் நீங்கள்! நீங்கள் ஏன் மாட்சிமை பொருந்திய அண்ணன் யுதிஷ்டிரன் அவர்கள் மஹாராணியைப் பணயம் வைப்பதைப் பார்த்துக்கொண்டு சும்மா உட்கார்ந்திருந்தீர்கள்? குரு வம்சத்தின் ஏனைய தலைவர்களும் வாய் மூடிக் கொண்டு உட்கார்ந்திருந்தார்களே! யுதிஷ்டிரன் தன் ராணியைப் பணயம் வைக்கும்போது ஏன் ஒருவருமே மறுத்துப் பேசவில்லை?” என்று கேட்டான்.  மிகவும் சிரத்தையுடனும், பவித்திரமான மனதுடனும் விகர்ணன் கேட்ட இந்தக் கேள்விகளால் அந்த தர்பார் மண்டபத்தின் இறுக்கமான சூழ்நிலை சற்றே மாறியது. அனைவரும் விகர்ணனையே கவனித்தார்கள்.

அங்கிருந்த மற்ற அரசகுலத்தவரைப்பார்த்துத் திரும்பிய விகர்ணன், “ஏன் அனைவரும் மௌனமாக உட்கார்ந்திருக்கிறீர்கள்? இப்போதாவது பேசலாமே! நம்மில் எவருக்கும் துரியோதனனை எதிர்த்துப்பேசவோ உண்மையை உரக்கச் சொல்லவோ தைரியமே இல்லையா? நம்மில் யாருமே தைரியசாலிகள் இல்லையா? மதிப்புக்குரிய தாத்தா அவர்களே! நான் எப்போதுமே நான் நினைப்பதை உண்மை என்று கருதுவதை சரி என என் மனதுக்குப் பட்டதைச் சொல்லியே தீருவேன். ஒரு வேளை அதுதான் என் கடைசி வார்த்தைகளாக இருந்தாலும் சரி! நான் அவற்றைப் பேசியே தீருவேன்!”

“மரியாதைக்குரிய என் அண்ணன் துரியோதனன் தன் தகுதியிலிருந்து கீழிறங்கி விட்டார். அதுவும் யுதிஷ்டிரனுக்குத் தன் ராணியைப் பணயம் வைக்கும் உரிமை சிறிதும் இல்லை.  ஏனெனில் மஹாராணி பாஞ்சாலி யுதிஷ்டிரனுக்கு மட்டும் மனைவி அல்ல. மற்ற நால்வருக்கும் மனைவி ஆவாள்.  இப்போது நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். பிதாமஹரே! மற்ற நால்வரின் சம்மதம் இல்லாமல் யுதிஷ்டிரனால் எப்படித் தன் மனைவியைப் பணயம் வைக்க முடியும்? அவளை அவர் இழந்ததாக எப்படிக் கருத முடியும்? அவள் எப்படி அடிமை ஆவாள்? அவளை நாம் எப்படி அடிமை என்று சொல்லலாம்? அவள் கௌரவர்கள் ஆன எங்களுக்குச் சொந்தம் இல்லை. அவள் சுதந்திரமானவள்!” என்று கூறினான் விகர்ணன். விகர்ணனின் வார்த்தைகள் அங்கிருந்த அரச குலத்தவர் அனைவர் மனதிலும் குறிப்பிட்டுச் சொல்லத் தக்க மாற்றத்தை உண்டு பண்ணியது. ஆனால் இது எதுவும் துரியோதனனின் ஆதரவாளர்கள் மனதை மாற்றவே இல்லை.

அங்க தேசத்து அரசன் கர்ணன் விகர்ணனைப் பார்த்து ஆத்திரம் கொண்டான். அவன் எழுந்து நின்று கூறினான். “விகர்ணா? நீ என்ன உன்னை மற்றவர்களை விட அதிக புத்திசாலியாகவும், விவேகியாகவும் எண்ணிக் கொண்டிருக்கிறாயா?  இங்கிருப்பவர்களை விட நீ அதிகம் புத்திசாலியா? இங்கிருக்கும் அனைவரும் பிதாமஹர் பீஷ்மர் உள்பட, அரசர் திருதராஷ்டிரர், துரோணாசாரியார், கிருபாசாரியார் மற்றும் மதிப்புக்குரிய மற்ற அரசகுலத்தவர் அனைவரும் திரௌபதி ஓர் அடிமை என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்கள்!” என்றான்.

“அவள் கணவன்மார் ஐவரையும் பார்! பெரிய வீரர்களாம். வீராதி வீரர்கள்! அவர்களும் தங்களை ஓர் அரசகுலத்தவர் என்றே சொல்லிக் கொள்கின்றனர். அவர்கள் அவளை, அந்தப் பாஞ்சால இளவரசியை ஓர் அடிமை என்று நினைக்காவிட்டால், அவள் இங்கே இழுத்து வரப்பட்டதை எப்படி அனுமதித்தார்கள்? அவள் கணவன்மாரின் நிலைமை என்ன? தர்மத்தின் பாதுகாப்போ தர்மத்தின் சட்டதிட்டமோ அவர்களைக் காப்பாற்றவில்லை, அவர்களிடம் அது எடுபடவும் இல்லை. ஏனெனில் அவர்கள் ஐவருமாகச் சேர்ந்து ஒரு பெண்ணைப் பங்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்! இவர்களை தர்மத்தின் பாதுகாவலராக எப்படிச் சொல்ல முடியும்?”
“அவள் ஓர் பரத்தை! பொதுவில் ஐவரால் பங்கு போட்டுக் கொள்ளப்படுபவள். வெட்கம் கெட்டவள்! இப்போது அவளுக்கு என்ன வந்தது? இங்குள்ள தகுதி வாய்ந்த மன்னர்கள் நிறைந்த அரசவையில் அனைவர் முன்னாலும் வருவதற்கு என்ன கேடு?  விகர்ணா, நீ எங்கள் அனைவரையும் விட புத்திசாலி, விவேகி என்று பெயரெடுக்க விரும்புகிறாய்! ஆனால் இங்கே நம் முன்னர் அவள் கொண்டு வரப்பட்டதன் மூலம் அவளுடைய அடக்கத்துக்கோ, நாணத்துக்கோ பங்கம் வந்துவிட்டதாக எண்ணிச் சீற்றம் கொள்ளாதே! பயப்படவேண்டாம்.  இதோ இந்த ஐந்து சகோதரர்களும் அவர்கள் அணிந்திருக்கும் உடையை அணியக் கூடத் தகுதி அற்றவர்கள். துஷ்சாசனா, எழுந்து சென்று இந்த ஐவரின் ஆடைகளை அவர்கள் உடலிலிருந்து நீக்கிவிடு!  மறக்காமல் இதோ இந்தப் பரத்தை திரௌபதியின் உடலில் இருந்தும் ஆடையை நீக்கி விடு! பின்னர் அவர்கள் யஜமானன் ஆன துரியோதனனிடம் அவர்களை ஒப்படைத்து விடு!” என்றான்.

கர்ணன் கூறிய இந்தக் கொடூரமான சொற்களைக் கேட்ட சகோதரர்கள் ஐவரும் தங்கள் மேலாடைகளை நீக்கினார்கள். அவற்றை துரியோதனன் காலடியில் சமர்ப்பித்தார்கள்.  திரௌபதியால் அப்படிச் செய்ய முடியாது. ஏனெனில் அவள் உடலில் ஒற்றை ஆடை மட்டுமே தரித்திருந்தாள். அதை எப்படி நீக்குவது? ஆகவே அவள் சும்மா இருந்தாள். ஆனால் துஷ்சாசனன் அவளை விடவில்லை. அவள் ஆடையின் ஒரு நுனியைப் பிடித்து இழுத்தான். மிக வேகத்தோடு அதை அவள் உடலிலிருந்து இழுத்து அகற்ற யத்தனித்தான்.  திரௌபதி வெறித்தனமாக அதை எதிர்த்தாள்.  தன் கணவன்மாரை ஒருவர் பின் ஒருவராகப் பார்த்தாள். இந்த அவமதிப்பிலிருந்து அவள் தப்புவதற்காக எதையும் அவர்கள் செய்யப் போவதில்லை; அவர்களால் செய்ய முடியாது. அந்த சபையில் இருந்த மற்றப் பெரியோர்களையும் அவள் பார்த்தாள். அவர்களிமிருந்து ஏதேனும் உதவி கிட்டுமோ என்றும் எதிர்பார்த்தாள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எவரும் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை.  தான் எந்த உதவியும் கிடைக்கப் பெறாதவளாக நிராதரவான நிலையில் இருப்பதை திரௌபதி உணர்ந்தாள்.

அப்போது சற்றும் எதிர்பாரா வண்ணம் அவள் மனம் அவள் ஸ்வீகரித்துக் கொண்ட சகோதரன் கிருஷ்ண வாசுதேவன் பால் சென்றது.  அவன் அவளுக்கு வழிகாட்டியாகவும் ஒரு சிறந்த நண்பனாகவும் இருந்து வருகிறான், பல வகையிலும் அவளுக்குத் தக்க ஆலோசனைகள் சொல்லி வருகிறான்.  அவள் தன்னையுமறியாமல் தன் இரு கரங்களையும் ஒன்று சேர்த்துக் கூப்பிக் கொண்டாள்.  பின்னர் கண்ணீர் மழையாகப் பொழியக் கிருஷ்ண வாசுதேவனை நினைத்துப் பிரார்த்திக்க ஆரம்பித்தாள்.  பிரார்த்திக்கும்போதே அவள் தன்னையுமறியாமல் விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள். “சகோதரா, கிருஷ்ண வாசுதேவா! நீ இப்போது எங்கே இருக்கிறாய்? இப்போது என்னை இந்த நிலைமையிலிருந்து உன் ஒருவனால் மட்டுமே காப்பாற்ற முடியும்.  கிருஷ்ணா! கிருஷ்ணா! எங்கே இருக்கிறாய் நீ?  நான் என்னை உன் காலடிகளில் சமர்ப்பிக்கிறேன். உன்னிடம் சரணாகதி அடைந்து விட்டேன். என்னை இந்த ராக்ஷசர்களிடமிருந்து நீ தான் காப்பாற்ற வேண்டும். ஹே கிருஷ்ணா, கோவிந்தா! ஹரே முராரி! ஹே நாத நாராயண வாசுதேவா! என்னைக் காப்பாற்று!”

1 comment:

ஸ்ரீராம். said...

கண்கலங்கும் நிலைமை.