Monday, July 11, 2016

வாடிகாவின் எதிரி!

த்வைபாயனரின் ஸ்பரிசம் மென்மையாக இருந்ததோடு மட்டுமல்லாமல் அதில் இவள் தனக்குச் சொந்தமானவள் என்னும் இறுமாப்பான எண்ணம் வெளிப்படவில்லை. இவள் என் சொத்து என்னும் எண்ணம் நிச்சயமாகத் தெரியவில்லை. ஒரு தாய் தன் குழந்தையை எவ்வளவு மென்மையாகக் கையாளுவாளோ அப்படியே அவரின் ஸ்பரிசமும் இருந்தது. அவள் சொல்ல நினைப்பதைப் புரிந்து கொண்டவர் போல் அப்படியே அவர் நிறைவேற்றினார். அந்தப் பரவசமான பிரவாகம் போன்ற அன்பு வெள்ளத்தில் திக்குமுக்காடிக் கொண்டிருந்த வாடிகா தன்னை முழுவதும் அவருக்கு அர்ப்பணித்தாள். “என்னுடைய உடலுக்கு மட்டுமில்லாமல் உள்ளத்துக்கும் இவரே பிரபு! இவரே என் கடவுள்! நான் அவருடையவள்!” என்று தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டாள் வாடிகா. மேலும் கூறினாள். “வரலாற்றுக்கு முந்தைய அந்தக் காலத்தில் பௌலமி எப்படி பிருகு முனிவருக்கு மனைவியாக இருந்தாளோ அப்படியே இப்போது நான் உங்களுக்கு இருக்க விரும்புகிறேன்.” என்றாள். இருவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்தனர்.

த்வைபாயனரிடம் மற்றொரு முக்கிய மாற்றத்தை வாடிகா கண்டாள். அது தான் மஹாராணி சத்யவதி குறித்துப் பேசும்போதெல்லாம் த்வைபாயனரின் மனமும் முகமும் மலர்ந்தது கண்டு அவள் அதிசயித்தாள். அவர் எதிரில் மஹாராணியின் பெயரைச் சொன்னாலே த்வைபாயனர் முகம் மலரும். இந்த விசித்திரத்தை அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை. ஆனால் அவள் புரிந்து கொண்டதெல்லாம் த்வைபாயனரால் திருமணத்தின் போது செய்து கொடுத்த சத்தியங்களை ஒருக்காலும் மீற முடியாது என்பதே! அப்படி மீறுவதை அவரால் நினைத்தும் பார்க்க முடியாது என்பதே! சில நாட்கள் சென்றன. ஹஸ்தினாபுரத்திலிருந்து மந்திரி குனிகர் அங்கே வந்தார். அவருடன் நிறையப் பணியாளர்கள் வந்தனர். சிலர் அவர்களுக்கு உதவி செய்யவும், வேறு சிலர் அவர்களைப் பாதுகாக்கவென வில், அம்புகள் என ஆயுதங்களைத் தாங்கியும் வந்தனர். ஒரு சில காட்டுவாசிகளும் வந்திருந்தனர். அவர்கள் வந்த உடனே மூங்கில் மரங்களை வெட்டி அனைவரும் தங்குவதற்காகக் குடில்கள் அமைக்கத் தொடங்கினர்.

குனிகர் கறவைப்பசுக்கள் நான்கை ஓட்டி வந்திருந்தார். அவற்றுடன் ஒவ்வொரு மாட்டையும் கவனிக்க ஓர் இடையனும் இருந்தான். அதைத் தவிர ஒரு பொலிகாளையும் இருந்தது. பசுக்களும் காளையும் சக்கரவர்த்தி சத்யவதியால்  வாடிகாவுக்குப் பரிசாக அனுப்பப் பட்டிருந்தது. பசுக்கள் எல்லாம் பஞ்ச கல்யாணி எனப்படும் மிகவும் அரிதான வகையைச் சார்ந்தது. அதன் தோல் கன்னங்கரேலெனப் பளபளவெனப் பிரகாசித்தது. அதன் உடலில் ஐந்து இடங்களில் புனிதமான சின்னங்கள் காணப்பட்டன. அதன் வாலில் வெள்ளை மயிர் குஞ்சலம் போல் காணப்பட்டது. பொலிகாளையும் நல்ல வளர்த்தியாகக் காணப்பட்டது. கொம்பினால் பூமியைக் கீறிக் கொண்டிருந்தது. இரண்டு இடையர்கள் அதைத் தனியாகக் கொண்டு வைத்திருந்தனர். வாடிகாவுக்கு மஹாராணியிடமிருந்து வந்த இந்தப் பரிசுகளை ஏற்கச் சிறிதும் விருப்பம் இல்லை. ஆனால் அதனால் அவள் கணவன் கோபம் கொண்டால்? அவளுக்குத் தன் கணவன் கோபம் கொள்வதில் சிறிதும் விருப்பம் இல்லை. அதோடு இல்லாமல் மஹாராணி கொடுத்ததை மறுத்தால் அது மன்னிக்கவே முடியாத குற்றமாகப் போய்விடும். ஆகவே அவள் குனிகரிடமே கேட்டாள். “இந்தப் பசுக்களையும் காளையையும் வைத்ஹ்டுக் கொண்டு நான் என்ன செய்வது?” என்றாள்.

அதைக் கேட்ட த்வைபாயனர், “அவை உன் பசுக்கள். உனக்கு என்ன பிடித்தமோ அதைச் செய்!” என்று சிரித்தவர், “ஆனால் காளையின் அருகே மட்டும் போய்விடாதே! உன்னை முட்டித் தள்ளி  விடும். என் மனைவி இறந்துவிட்டால் நான் என்ன செய்வேன்?” என்ற வண்ணம் அவளைப் பார்த்து மேலும், சிரித்த வண்ணம் கூறினார். “ மாட்சிமை பொருந்திய மஹாராணிக்குத் தான் எத்தனை பெரிய உள்ளம்? அற்புதமானவள்! அவள் எதையும் எப்போதும் மறப்பதே இல்லை!” என்றார். தாயிடம் மகனுக்கு ஏற்படும் இயல்பான பாசத்தில் த்வைபாயனர் இதைப் பேசினாலும் விஷயம் தெரியாத வாடிகாவுக்கு அவர் வார்த்தைகள் வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சியது போல் இருந்தது! மனதில் தோன்றிய கடும் வேதனையைப் பொறுத்துக் கொண்டாள். ஆனால் இதனால் பல இரவுகளை அவள் தூங்காமல் கழிக்க வேண்டி இருந்தது. இதற்கு முன்னால் அவள் இப்படித் தூங்காமல் இருந்ததே இல்லை! அப்படியே தன்னை மறந்து அயர்ந்து தூங்கினாலும் அந்தத் தூக்கத்தில் துர் சொப்பனங்கள் அவளைத் தொந்திரவு செய்தன. மஹாராணி சத்யவதி ஒரு பயங்கர மிருகமாக வந்து அல்லது ஓர் சூனியக்காரியாக வந்து அவள் குரல்வளையைப் பிடித்து நெரிப்பதாகவும் கனவுகள் கண்டு நடுங்கினாள். மஹாராணி அங்கே வரும்போது இதற்குத் தக்கதொரு தீர்வு காண வேண்டும் என்று அவள் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டாலும் அதனால் எல்லாம் அவளுடைய தொல்லைகள் தீரவில்லை.

அவள் தந்தையைப் போல் அவளும் அவ்வளவு எளிதில் மனம் சமாதானம் அடைய மாட்டாள். தன் மூளையைக் கசக்கிக் கொண்டு இந்த மஹாராணியின் பிடியிலிருந்து தானும், தன் கணவனும் தப்ப வேண்டிய வழியைத் தேடினாள். முதலில் அவள் நினைத்தது தன் தந்தையின் துணையினால் மஹாராணியின் மேல் மரண வசிய மந்திரத்தை ஏவுவது தான்! ஆனால் பின்னர் மனதை மாற்றிக் கொண்டாள். ஏனெனில் அவள் தந்தை அப்போது முழுவதும் த்வைபாயனரின் நடத்தையினால் கவரப்பட்டு அவருடைய செல்வாக்கில் கரைந்து போயிருந்தார். இந்தச் சமயம் போய் அவரிடம் தன் வேண்டுகோளைச் சொன்னால் அவர் வாடிகாவைப் பரிகாசம் செய்வதோடு அல்லாமல் ஏளனமாகவும் பார்ப்பார். தந்தை மூலம் அவள் கணவன் த்வைபாயனருக்கும் இந்த விஷயம் தெரிய வந்தால் பின் அவர் அவளை ஒரு நாளும் மன்னிக்கவே மாட்டார். இப்படி யோசித்து யோசித்து மனதைக் குழப்பிக் கொண்டாள் வாடிகா.

கடைசியில் ஒரு நாள் அவளுக்கு நம்பிக்கை பிறந்தது. அவள் உர்வி என அழைக்கப்படும் தன் அத்தையிடம் சென்றாள். அவள் மஹா அதர்வரின் மூத்த சகோதரி. வாடிகாவைப் போல அவளும் ஒரு ஸ்ரோத்திரியர்.  மஹா அதர்வரால் பயிராக்கப்பட்டு வந்த மந்திர மூலிகைகளைப் பாதுகாத்து வளர்க்கும் பொறுப்பு அவளுடையது! அதோடு இல்லாமல் அவளுக்குப் பெண்களின் துன்பங்கள், நோய்கள், அவர்களின் மனோ விசாரங்கள் ஆகியவை குறித்தும் அதற்கான மந்திர வித்தை குறித்தும் நன்கு அறிந்தவள். ஆசிரமத்துப் பெண்களுக்கு இந்த வகையில் அவள் பெரும் உதவி செய்து வந்தாள். அவள் தான் இதற்குச் சரியான நபர். அவளால் தான் ஏதேனும் வசியத்தைக் கொடுத்து அவள் கணவன் இந்த மஹாராணியின் பிடியிலிருந்து வெளிவர ஏற்பாடு செய்ய முடியும். அவள் கணவனின் வாழ்க்கையைக் காப்பாற்றிக் கொடுக்க உர்வியே சரியான நபர்! வாடிகா தன் அத்தையிடம் அந்தக் குறிப்பிட்ட மந்திரங்களைத் தனக்குக் கற்றுக்கொடுக்கும்படி கெஞ்சினாள். எதிரிகளை வெல்லும் மந்திரங்களைத் தானும் தெரிந்து கொள்ள வேண்டும் என்றாள். அவள் அத்தை சிரித்தாள்.

“இவ்வளவு விரைவிலா? இப்போது தானே திருமணம் ஆயிற்று உனக்கு? நீ ஏன் சந்தோஷமில்லாமல் இருக்கிறாய்? என்ன ஆயிற்று உனக்கு?” என்று கேட்டாள். “இல்லை, அத்தை! நான் திருமண வாழ்வில் சந்தோஷமாகவே இருக்கிறேன். ஆனால் எனக்கு ஓர் எதிரி உண்டு. அந்த எதிரியிடமிருந்து என்னைப் பாதுகாக்க வேண்டும் அல்லவா? அதற்காக நானே முயல்கிறேன். ஒரு வேளை அந்த எதிரியிடமிருந்து எனக்கு ஏதேனும் ஆபத்து வந்துவிட்டால்! நான் தயாராக இருக்க வேண்டும் அல்லவா?”

உர்வி அவளுக்குச் சில மந்திரங்களைச் சொல்லிக் கொடுத்தாள். அந்த மந்திரங்கள் அனைத்துமே அவள் எதிரியைத் தாக்குவது என்பதை முக்கிய நோக்கமாகக் கொண்டது என்பதோடு எதிரியை மிகவும் அலங்கோலமாகவும், அசிங்கமாகவும் பார்த்தவர் வெறுக்கும் வண்ணமும் மாற்றும் சக்தியையும் கொண்டது!
“இந்தச் செடியை நான் நடுகிறேன்; இது மிக்க வீரியம் கொண்டது!
என் எதிரியான பெண்கள் இதன் மூலம் அவர்கள் அதிகாரத்தை இழப்பார்கள்
என் கணவனின் அன்பு என்பால் மேலும் உறுதி அடையும்
நீண்ட நெடிய செங்குத்தான இலைகளைக் கொண்ட இந்தச் செடி பார்க்க அழகாகத் தான் இருக்கிறது
என்றாலும் அது தன் வேலையைச் செய்யும். கடவுளரின் விருப்பத்துடனும், அவர்களின் ஊக்கத்துடனும் முழு வலிமையுடனும் இது வேலை செய்யும்.
என் எதிரியை விலகிப் போகச் செல்! என் கணவன் எனக்கே உரியவன்! எனக்கு மட்டுமே! ஆம் எனக்கு மட்டுமே!

மேலும் அது இவ்வாறு முடிந்தது.

இந்த மந்திரச் செடி மிகவும் வீரியமுள்ளது
இதனால் நானும் வலிமை படைத்தவள் ஆனேன்
உயர்ந்த பெண்மணிகளிலெல்லாம் உயர்ந்தவள் ஆனேன்
என் எதிரியோக் கீழ்மையானவர்களில் எல்லாம் மிகக் கீழ்மையானவளாக ஆகிவிட்டாள்
ஓ, என் கடவுளே! இந்த அதிக வீரியம் கொண்ட மந்திரச் செடிகளை நான் உனக்கு நிவேதனம் ஆக்குகிறேன்
என் எதிரியின் மனம் பசுவைத் தேடி ஓடி வரும் கன்றைப் போல் என்னிடம் நாடி வரவேண்டும் அதோடு இல்லாமல் நதியின் நீர் எப்படி ஓர் ஒழுங்குடன் ஓடுகிறதோ அப்படி அவள் ஓட வேண்டும்!

அதன் பின்னர் உர்வியிடம் அந்த மந்திரச் செடியைக் காட்டுமாறு வாடிகா கெஞ்சினாள். செடி இல்லாமல் வெறும் மந்திரங்களால் என்ன பயன்? ஆகவே எப்படியேனும் செடியைத் தெரிந்து கொண்டாக வேண்டும். ஆனால் உர்வியோ தன் மருமகளின் இந்த வேடிக்கைப் பேச்சினால் மனம் சந்தோஷம் அடைந்தாள். மருமகளுக்கு இப்போது தான் கல்யாணம் ஆகி இருக்கிறது. அதற்குள்ளாக அவளுக்கு ஓர் எதிரியா? அவளை முறியடிக்க மந்திர வித்தை கற்றுக்  கொள்கிறாளே! சுறுசுறுப்பு மட்டுமல்லாமல் தைரியமும் நிறைந்த பெண் தான் என் மருமகள்! ஆகவே உர்வி அவளை மூலிகைப் பண்ணைக்கு அழைத்துச் சென்று, “பதா” என அழைக்கப்படும் அந்த மந்திரச் செடியைக் காட்டி அதை எப்படிப் பிரயோகம் செய்வது என்பதையும் விளக்கிக் காட்டினாள். அது எப்படிச் செய்தால் உடனடி விளைவு ஏற்படும் என்பதையும் விளக்கினாள்.

“அதை நன்றாகக் கசக்கிப் பிழிய வேண்டும். ஓர் சிவப்பு நிறமுள்ள ஆட்டின் பாலில் அதைக் கலக்க வேண்டும். உன்னுடைய எதிரி யாரோ அவரை இதைக் குடிக்கச் செய்ய வேண்டும். அதோடு இல்லாமல் அவள் படுக்கையைச் சுற்றிலும் இந்தக் கலவையைத் தெளித்தும் விட வேண்டும். உன் எதிரியின் படுக்கையின் அடியில் இந்தச் செடியின் இலைகளைப் பரப்பி வைக்க வேண்டும். உன் கணவனின் படுக்கையின் அடியில் கூட சில இலைகளைப் போட்டு வை. இதெல்லாம் செய்யும்போது இந்த மந்திரங்களை விடாமல் சொல்ல வேண்டும்.”

“இந்த மந்திரத்தினால் அவள் இறந்துவிடுவாளா?” வாடிகா கேட்டாள்.

“இல்லை, இறக்க மாட்டாள். இது மரண வசிய மந்திரமே அல்ல! இதன் மூலம் உன் கணவனுக்கு அவள் மேல் தாங்க முடியாத கோபமும், வெறுப்பும் ஏற்படும். அவளும் கெட்ட குணமுள்ளவளாக மாறிவிடுவாள். அவளுடைய நல்ல குணங்கள் எல்லாம் மறைந்து விடும். ஆனால் எப்படி ஆனாலும் உன் கணவன் அவளுடன் மன முறிவு ஏற்பட்டு அவளை விட்டு விலகி விடுவான். உன் எதிரியின் பிடியிலிருந்து உன் கணவன் விடுபடுவான்.”

இப்போது வாடிகா மந்திரங்களை நன்றாக உச்சரித்துப் பழகி விட்டாள். மந்திர மூலிகையைப் பயன்படுத்தும் விதமும் நன்கு அறிந்து வைத்திருந்தாள். மஹாராணியின் வரவு மட்டுமே பாக்கி! அதற்காகக் காத்திருந்தாள்.


Saturday, July 9, 2016

வாடிகாவின் எதிர்பார்ப்பும் ஏமாற்றமும்!

மூன்றாவது ஏரியின் கரையோரத்தில் சரஸ்வதியின் வாய்க்கால் அகலமாகவும் ஆழமாகவும் பிரவாகம் எடுத்திருக்கும் இடத்தில் கரையோரமாக ஆசிரமம் அமைக்க முடிவாயிற்று. அங்கே புனிதமான அக்னி வளர்க்கப்பட்டு பூமி பூஜையும் முறைப்படி நடந்து முடிந்தது. மஹா அதர்வரும் அவருடைய சீடர்களும் பூமித்தாயை வழிபாடு செய்யும் அதர்வ வேத மந்திரங்களை ஓதினார்கள்.

“சத்தியமே என்றும் நிலைத்திருக்கும், உண்மையானதும் கூட!
ரிடா எனப்படும் விண்ணுலக ஒழுங்குமுறை தனக்குத் தானே கடுமையான கட்டுப்பாட்டுடன் இருக்கிறது. அது ஒரு மாபெரும் தவம்!
தன்னைத் தானே அறிதல் பிரம்மம் எனப்படுகிறது. இந்தப் புனிதமான வேள்விகளில் முதன்மை வகிக்கும் அனைத்துக் கடவுளராலும் பூமி தேவியை வழிபட்டுக் கொண்டாடுகிறார்கள். அவளுக்கு ஆதரவு தருகின்றனர்.
ஏ பூமித்தாயே!
என்றும் உள்ளதற்கும்,என்றும் இல்லாமல் போனதற்கும் துணையாய் இருப்பவளே!
எங்களுக்கு ஒரு மாபெரும் பகுதியை அன்பு கூர்ந்து கொடுப்பாய்!
ஏ, பூமித் தாயே! எங்களை ஒரு நல்ல இடத்தில் தங்கி இருந்து சேவை செய்ய அருள் புரிவாய்!
உன் நாயகனுடனும் விண்ணும், மண்ணும் சேர்ந்து ஒருங்கிணைத்து ஒத்துழைத்து என்றென்றும் நீடித்து இருக்க அருள் புரிவாய்!
ஏ, ஞானத்தின் நாயகியே! ஞான சரஸ்வதியே!
நாங்கள் எப்போதும் இங்கே முன்னேற்றம் கண்டு சந்தோஷத்துடன் வாழ அருள் புரிவாய்!

பூமியில் ஒரு பள்ளம் தோண்டி அது சுத்தம் செய்யப்பட்டது. இரண்டு சீடர்கள் உயிருள்ள ஓர் ஆமையைப் பிடித்துக் கொண்டு வந்திருந்தனர். ஆமை அம்பிகையின் வாகனமாகக் கருதப்படும். இங்கே அது ஸ்திரத்தன்மைக்கு ஓர் சின்னமாகக் கருதப்பட்டது. பூமித் தாய் வரலாற்றுக்காலத்துக்கும் முந்தைய தொன்மையான புராதன காலத்தில் ஆமையின் முதுகில் அமர்ந்த வண்ணம் வந்ததாகச் சொல்லுவார்கள். மஹாவிஷ்ணு கூர்ம அவதாரத்தில் பூமியைத் தன் மேல் தாங்கி வருவார் அல்லவா! அதை நினைவுறுத்தும் வண்ணமாக ஆமையை அந்தப் பள்ளத்தில் வைத்தனர். இதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த வாடிகாவின் நெஞ்சம் ஆனந்தத்தில் தத்தளித்தது. எல்லை மீறிய சந்தோஷத்தில் அவள் இருந்தாள். ஏனெனில் இது தான் அவள் இல்லமாகப் பரிணமிக்கப் போகிறது. வாழையடி வாழையாக, பரம்பரை பரம்பரையாக  அவளும் த்வைபாயனரும் சேர்ந்து உருவாக்கும் சந்ததிகள் இங்கே தான் தங்கி தங்கள் வாழ்க்கையை வாழ்வார்கள். பல தலைமுறைகளுக்கு இது நீடிக்கும். இந்த இடம் அனைத்துக் கடவுளராலும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறது. மேலும் ஆசிகள் கிடைக்கும். இங்கே தான் பராசர முனிவரின் நினைவால் ஆசிரமம் ஏற்படப் போகிறது. மென்மையான அதே சமயம் ஸ்வரம் பிசகாமல் அனைத்துச் சீடர்களும் வேதங்களைக் கற்றுக் கொண்டு ஓதப் போகின்றனர்.

வாடிகா த்வைபாயனரின்  மனோ வசியத்தில் முழுக்க முழுக்க ஆழ்ந்து போனாள். த்வைபாயனர் அவளை அறியாதவர் போல் நடந்து கொள்ளவே இல்லை! மாறாகப் பல்லாண்டுகள், ஏன், ஜென்ம ஜென்மாந்திரத்துப் பந்தம் இருப்பது போலவே நடந்து கொண்டார். அவர் பேசும்போதெல்லாம் இனம் தெரியாத மகிழ்ச்சியை அடைந்தாள். அவருடைய சிறுபிள்ளைத் தனமான சிரிப்பு அவளை மிகக் கவர்ந்தது. அதன் மூலம் அவருடைய பாரம்பரியக் குடும்பப் பண்பு வெளியாயிற்று! விரைவில் அவருடைய படிப்பும், ஞானம் பரந்து பட்டது என்றும் எல்லையற்றது என்பதையும் கண்டு கொண்டாள். மூன்று வேதங்களையும் முற்றிலும் கற்றுத் தேர்ந்திருந்தார். அவற்றின் முக்கியமான சாராம்சங்கள் குறித்த ஞானம் அவரிடம் அதிகம் இருந்தது. சற்றும் ஸ்வரம் பிசகாமல் உச்சரிப்பு மாறாமல் அவர் வேதம் ஓதுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். அவ்வளவு சுத்தமாக இருந்தது. மேலும் அவருக்கு அதர்வ வேதமந்திரங்கள் பலவும் தெரிந்திருந்தன என்பதோடு மூலிகைகளைப் பயன்படுத்தும் விதமும் மூலிகைகளைப் பயன்படுத்துகையில் உச்சரிக்கும் மந்திரங்களும், உச்சரிக்கும் விதமும் நன்கு தெரிந்திருந்தது. அதன் மூலம் அவர் பல வியாதிகளைக் குணப்படுத்தினார். அதோடு இல்லாமல் விண்வெளியைக் கண்காணித்து கிரஹங்களின் போக்குவரத்தைக் கண்காணித்து அதன் மூலம் மக்களுக்கு வரக்கூடிய துன்பத்தைக் கண்டு பிடித்துக் குணமாக்குவதிலும் வல்லவராக இருந்தார்.

இத்தனை இருந்தும் அவளை ஆச்சரியப்படுத்தியது என்னவெனில் அவர் வாயிலிருந்து ஏதும் குறையோ, யாரைக் குறித்தும் புகாரான சொற்களோ ஏதும் வந்ததில்லை என்பதுவே! அனைவரையும் ஊக்கமூட்டி உற்சாகப்படுத்தி வந்தார். யாரையும் எதற்கும் குறை கூறியதில்லை. விடிகாலையில் எழுந்தால் ஆசிரமத்துப் பெண்மணிகளோடு பால் கறக்கும்போது அங்கே கூட இருந்து வேண்டிய உதவிகளைச் செய்வார். அதன் பின்னர் மற்ற ஸ்ரோத்திரியர்களும், பிரமசாரிகளும் அங்கே உள்ள அக்னிகுண்டத்தில் அக்னி உண்டாக்குவதில் அவருடன் ஈடுபடுவார்கள். பின்னர் அவர் கண்டத்திலிருந்து எழுந்திருக்கும் ஓங்கார நாதத்தோடு ஆரம்பிக்கும் வேத கோஷத்தில் மற்றவர்களும் கலந்து கொண்டு அந்த இடத்தையே புனிதப்படுத்தும்.

அங்கிருந்த எவரையும் சுடுசொற்களால் கடுமையாகப் பேசியதே இல்லை! மாறாக யாரேனும் எப்போதேனும் தவறு செய்தால் அவர்களுக்கு அதைத் திருத்திக் கொள்ள உதவிகள் செய்வார். அதன் மூலம் அவர்கள் செய்த தவறை நினைத்து வெட்கமடைய வைத்தார். அவர்களை இன்னும் மேலும் கடுமையாக உழைக்கச் செய்தார். எவ்வளவு சோம்பேறிகளாக இருந்தாலும் அவர்களை மாற்றி அவர்களின் சோம்பேறித் தனத்துக்காக வெட்கம் கொள்ளச் செய்தார். மற்ற வயதான ஸ்ரோத்திரியர்களில் பலரும் பராசர முனிவரின் ஆசிரமத்தில் அவருடைய நேரடிக் கண்காணிப்பின் கீழ் வளர்ந்ததால் அவருடைய கண்டிப்பான நடைமுறைகளையும், பாடங்களையும் அப்படியே சிறிதும் மாறாமல் கடைப்பிடித்தனர். விரைவில் பராசர முனிவரின் காலத்தில் இருந்த கண்டிப்பான ஒழுங்கான நடைமுறை அந்த ஆசிரமத்தில் பழக்கத்துக்கு வந்துவிட்டது. நோயாளிகளைத் தனிப்பட்ட முறையில் கவனித்து வைத்தியம் செய்வதற்கு த்வைபாயனர் தயங்கியதும் இல்லை; மறந்ததும் இல்லை. தவறாமல் நோயாளிகளைக் கவனித்து அவர்கள் நோய்க்குத் தீர்வு கண்டதோடு தன் வழக்கப்படி சின்னஞ்சிறு குழந்தைகளுக்கு உணவு கொடுத்து முடித்ததுமே தானும் உண்ணும் வழக்கத்தை மாற்றாமல் அப்படியே கடைப்பிடித்து வந்தார். அவருடைய உற்சாகமான ஊக்கமூட்டும் வார்த்தைகளாலும், இனிய அன்பான உபசரிப்பாலும் மகிழ்ச்சியான புன்னகையாலும் அனைவர் மனதிலும் இடம் பிடித்தார். அங்கு நாளுக்கு நாள் கூட்டம் அலை மோதியது! அனைவரும் த்வைபாயனர் தங்களைத் தனியே கவனிக்க வேண்டும் என்று விரும்பினார்கள்.

அவர்களின் திருமணம் நடைபெறுவதற்கு முந்தைய நாட்களில் வாடிகா த்வைபாயனரின் சாகசக் கதைகளைக் கேட்க நேர்ந்தது. ஷார்மி அவற்றைக் குறித்து விரிவாகச் சொல்லிக் கொண்டிருப்பாள். ஷார்மி பொதுவாகவே அதிகம் பேசும் சுபாவம் படைத்த பெண்மணி. இப்போது த்வைபாயனரின் சிறு வயது சாகசங்கள் அவளை மிகவும் கவர்ந்ததால் அதைக் குறித்து அதிகம் பேசி வந்தாள். நடந்த அனைத்தையும் ஒன்றுவிடாமல் விவரித்தாள். த்வைபாயனர் சிறு வயதில் கல்பியில் இருந்தது; அங்கிருந்து பராசர முனிவருடன் வந்தது; அவளுடைய “ஆரிய புத்திரர்” ஆன கௌதம முனிவரின் உதவியுடன் பராசர முனிவர் த்வைபாயனருக்கு உபநயனம் செய்வித்தது. கௌதமரைக் குருவாக ஏற்று அவருடைய பயிற்சியில் பிரமசரிய விரதம் பூண்டது, என்றெல்லாம் எடுத்துக் கூறுவாள். அதோடு இல்லாமல் இந்த பால முனிவர் தினந்தோறும் ஆசிரமத்தில் காலை வேளையில் பால் கறக்கும் பெண்களுடன் இதமாகப் பேசி அவர்களுக்கு எப்படி எல்லாம் உதவுவார் என்பதையும், தன் கணவனுடைய பயிற்சியினாலேயே த்வைபாயனர் இத்தனை சிறந்து விளங்குவதாகவும் கூறுவாள். மேலும் பாங்கு முனி என்றும் நொண்டி முனி என்றும் அழைக்கப்பட்ட பராசர முனிவரின் இறந்த உடலை த்வைபாயனர் தனியே சுமந்து கொண்டு வந்து சேர்த்ததைக் கதை கதையாகக் கூறுவாள்.

எல்லாவற்றிலும் அவளுக்கு இன்னமும் வியப்பு ஊட்டும் விஷயம் ஒன்று உண்டென்றால் அது அவர்களுடைய நடமாடும் ஆசிரமம் ஹஸ்தினாபுரம் வழியாக தர்மக்ஷேத்திரத்துக்குப் பயணப்படும்போது ஹஸ்தினாபுரத்தில் தங்கியதும், அங்கே மஹாராணி சத்யவதியைப் பார்த்ததும் தான்! அவள் வாழ்நாளில் மறக்கவே முடியாத ஒளிபொருந்திய நாட்களாக அவற்றை அவள் கருதினாள். ஒரு மஹாராணி அவள் இன்னமும் மஹாராணியாகப் பதவியில் இருக்கையிலேயே அவளைக் கண்டு பேசுவது என்பது எத்தனை பெரிய விஷயம்! ஷார்மிக்கு அது நடந்து விட்டது!

“ஓ,ஓ, அந்த மஹாராணியின் உடல் தான் எத்தனை மெல்லியது! மெல்லிய உடல்வாகைக் கொண்டிருந்தாலும் அவள் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை! அத்தனை அழகானவள்! மிகவும் பகட்டான பட்டாடைகளை உடுத்திக் கொண்டிருந்தாள். என்ன இருந்தாலும் ஒரு சாம்ராஜ்யத்தின் மஹாராணி அல்லவா?” என்று சொன்னவள் மேலும் தொடர்ந்து, “நாங்கள் அங்கே தங்கி இருந்த நாட்களில் மஹாராணி தினமும் எங்களைக் காணவேண்டி அங்கே வருவாள். பிரதிபேஸ்வரர் கோயிலில் தான் நாங்கள் தங்கி இருந்தோம். அங்கே தினமும் வந்து தன் கையாலேயே பாலமுனிக்கும் என் கணவர் ஆர்யபுத்திரருக்கும் உணவு பரிமாறுவாள்!”

இம்மாதிரி விஷயங்களைக் கேட்கையில் வாடிகாவுக்கு என்ன சொல்வது என்றே தெரியாது. ஒன்றும் புரியாமல் வலிய ஒரு புன்னகையை வரவழைத்துக் கொள்வாள். ஆனாலும் அவள் உள்மனம் இவற்றால் மகிழ்ச்சி அடையவில்லை. ஏனென்று தெரியவில்லை!  விரைவில் ஒரு நல்ல முஹூர்த்த நாளில் வாடிகாவுக்கும் த்வைபாயனருக்கும் திருமணம் நடந்தேறியது. ஆசாரிய கௌதமர் த்வைபாயனரின் தந்தை ஸ்தானத்தில் இருந்தபடியால் மஹா அதர்வர் தாரை வார்த்துக் கொடுத்த அவர் மகள் வாடிகாவை முறைப்படி பெற்றுக் கொண்டார். பின்னர் மணமகனும், மணமகளும் அக்னியைச் சுற்றி சப்தபதி வலம் வந்தனர். ஏழடி எடுத்து வைத்துத் தங்கள் உறவை உறுதி செய்து கொண்டார்கள். காதல் பரிமாற்றங்கள் நடந்தேறின. அதுவரை பிரமசாரிணியாக இருந்த வாடிகாவும் த்வைபாயனருக்கும் சேர்த்து மான் தோல்கள் பரிசளிக்கப்பட்டன. அவர்கள் இருவரும் மட்டும் தனித்திருக்கப் போகும் அந்த இரவை எதிர்நோக்கிய வாடிகாவின் மனதில் உள்ளூர அச்சமும் இருந்தது. ஏனெனில் ஆசிரமத்துப் பெண்மணிகளிடம் பேசித் தெரிந்து கொண்ட வகையில் பெரும்பாலான ஆண்கள் தங்கள் மனைவியை முதல்முறை சந்திக்கும்போது மிகவும் மிருகத்தனமாக நடந்து கொள்வார்களாம். கொஞ்சமும் மென்மையே இருக்காதாம். ஆகவே தன் கணவனும் தன்னைக் காயப்படுத்தி விட்டால் என்னும் அச்சம் அவளை விட்டுப்போகவில்லை. இந்த மாதிரி ஒரு மோசமான கொடூரமான நிலைமை தனக்கு ஏற்படுகையில் தன்னால் அதிலிருந்து மீண்டு வர முடியுமா? தன்னால் அதைத் தாங்க முடியுமா? ஒரு மனைவியாக த்வைபாயனரைத் தன்னால் சந்தோஷமாக வைத்திருக்க முடியுமா?

இரவும் வந்தது, இருவரும் தனித்தும் விடப்பட்டனர். வாடிகாவுக்கு ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியம். ஏனெனில் த்வைபாயனர் நடந்து கொண்ட முறையே முற்றிலும் வேறாக இருந்தது.

Friday, July 8, 2016

வாடிகா அடைந்த மகிழ்ச்சி!

தொன்மையான அந்தக்  கால கட்டங்களில் வேதங்களில் சொல்லி இருந்தது என்னவெனில் ஒரு தந்தை விரும்பினால் தன் மகளுக்கும் உபநயனம் செய்விக்கலாம். பொதுவாகத் தந்தைமார்கள் இதை விரும்பியதில்லை! தங்கள் மகளுக்கு வேதம் கற்பிக்க விரும்பிய தந்தையர் மிகக் குறைவாகவே இருந்தனர். ஆனாலும் அதை விரும்பும் தந்தையர் தங்கள் மகளுக்கும் உபநயனம் செய்வித்து பிரமாசாரிணி என்னும் பெயருடன் கடுமையான நியம நிஷ்டைகளை அனுபவிக்கும்படி விட்டது உண்டு. பனிரண்டு வருடங்கள் அவளும் ஒரு பிரமசாரிக்கு உரிய விரதத்தை அனுசரித்துக் கொண்டு கடுமையான நியமங்களுடன் வேதத்தைக் கற்றுக் கொள்ளுவாள். அதன் பின்னர் அவளுக்கும் ஒரு ஸ்ரோத்திரியனுக்கு என்ன மரியாதை உண்டோ அந்த மரியாதை கிடைக்கும். அவனுக்குள்ள உரிமைகளும் கிடைக்கும். ஆனால் பெரும்பாலான பெண்டிருக்கு இவை மறுக்கப்பட்டே வந்திருக்கிறது. ஏனெனில் பெரும்பாலான தந்தையருக்கு இதில் விருப்பம் இருந்தது இல்லை!

ஆனால் இங்கே ஜாபாலி முனிவர் இந்த வழக்கம் ஆங்காங்கே இருந்து வந்ததை அனுசரித்துத் தன் மகன் சுமாந்துவுடன் இரட்டையாகப் பிறந்த வாடிகாவுக்கும் உபநயனம் செய்வித்திருந்தார். அவளும் சுமாந்துவைப் போல வேதம் கற்றுக் கொண்டு வந்திருந்தாள். பிரமசாரிணியாகத் தன் நியமங்களை அனுஷ்டித்து வந்தாள். இப்போது சில காலம் முன்னரே அவளுக்கும் சுமாந்துவுக்கும் பனிரண்டு வருடம் வேத அத்யயனம் பூர்த்தி அடைந்திருந்தது. அதோடு இல்லாமல் வாடிகா தன் தகப்பனின் பிரியத்துக்கும், பாசத்துக்கும் உகந்த மகளாக இருந்து வந்தாள். அதில் அவள் மிக சந்தோஷம் அடைந்திருந்தாள். தன் தந்தையிடம் அவளும் மிகவும் அர்ப்பணிப்பு உணர்வோடு கூடிய பாசத்தை வைத்திருந்தாள். செல்ல மகள் என்னும் உரிமையுடன் அவள் எல்லாவிதமான சேட்டைகளையும் செய்து வந்தாள். ஆனாலும் ஜாபாலி முனிவர் அவளிடம் கோவித்தது இல்லை! ஒரு உரிமையுடன் கூடிய செல்லக் கண்டிப்புடனும், சிரிப்புடனும் அவளை விட்டு விடுவார். அவள் தந்தையின் ஆதிக்கத்தையும் மீறி வாடிகாவிடம் தனக்கென சுயமாக ஒரு சிந்தனை இருந்தது. தன்னுடைய பனிரண்டு வருடப் பாடங்கள் முடிவடைந்ததும் அவள் ஒரு தக்க ஸ்ரோத்திரியனோடு தனக்கு மணம் ஆகும் என நினைத்திருந்தாள். அதை எதிர்பார்த்திருந்தாள். ஆனால் த்வைபாயனரை எப்போது பார்த்தாளோ அப்போதே அவரின் எவரையும் எளிதில் கவரும் சிரிப்பும், வேதம் ஓதும் பாங்கும் சரஸ்வதி நதிக்கரையின் அருகே அவர் வருணனை அழைத்த விதமும் அவளை மிகவும் கவர்ந்து விட்டது. அவரைத் திருமணம் செய்யும் எண்ணமும் அவளிடம் மெல்ல மெல்லத் தோன்றி இருந்தது.

அதன் பின்னர் த்வைபாயனர் திரும்பி வந்ததும், தன் தந்தையிடம் தான் ஹஸ்தினாபுரம் சென்றதையும் அங்கே ஷாந்தனுவை உயிர்ப்பித்த விதத்தையும் சொல்லக் கேட்டதும் அவளுக்கு மனோ வசிய மந்திரத்தின் தேவையே இல்லாமல் மனம் முழுவதும் த்வைபாயனர் பால் சென்று விட்டது. அவருடைய சாகசங்களையும் நிகழ்த்திய அற்புதங்களையும் கேட்டதும் அவர் மேல் பித்துப் பிடித்தவள் போல் ஆனாள். ஆஹா! தான் மட்டும் அவரை மணந்து கொண்டு தர்மக்ஷேத்திரத்தை நிர்மாணிப்பதில் அவருக்கு உதவிகள் செய்தால்! அதைவிட சொர்க்கம் என்ன பெரியதாக இருக்கப் போகிறது! தன் தந்தை தன்னை வெளியேறச் சொன்னதுமே அவளும் சுமாந்துவுடனும் த்வைபாயனருடனும் வெளியே வந்தாள். அவர்கள் பைலரைச் சந்தித்தார்கள். பைலர் இப்போது பூரணமாய்க் குணம் அடைந்திருந்தார். அவர்கள் அனைவரும் கீழே இறங்கி வந்து அங்கே காத்திருந்த பராசர கோத்திரத்தைச் சேர்ந்த ஸ்ரோத்திரியர்களை அவர்களுடன் வந்தவர்களையும் சேர்த்து மேலே ஆசிரமத்தில் வந்து தங்கும்படி அழைப்பு விடுத்தார்கள். வழிகாட்டிக் கொண்டு சேர்த்தார்கள். 

அவள் இதுவரை ஒரு சில ஆசிரமங்களை அவை நிலைபெற்று இருந்த இடங்களிலேயே பார்த்திருக்கிறாள். அவள் தந்தை எங்கானும் பிரயாணப்படும்போது அவருடன் சென்று பார்த்த ஆசிரமங்களும் ஓரிடத்திலேயே இருந்தவை தான். ஆகவே இப்போது பராசர முனிவரின் நடமாடும் ஆசிரமத்தைப் பார்த்ததும் அவளுக்கு வியப்பு அதிகம் ஆனது. யமுனைக்கரையில் இருந்த பராசரரின் சீடர்களின் ஆசிரமங்களில் இருந்து வந்த முக்கியமான ஆசாரியர்களில் சிலர் இங்கே வந்திருப்பதாக த்வைபாயனர் அவளிடம் சொன்னார். அதைத் தவிரவும் பராசரைன் ஆசிரமத்தின் சீடர்களில் பலரும் வந்திருந்தனர். தர்மக்ஷேத்திரத்துக்கு வந்த நீண்ட நெடிய பாதையிலும் கூட இந்த நடமாடும் ஆசிரமவாசிகள் தங்கள் நித்திய கர்மானுஷ்டானங்களையோ, வழிபாடுகளையோ, யக்ஞங்களையோ விடவில்லை. இடைவிடாத கண்காணிப்பில் அனைத்தும் முறையாகச் செய்யப்பட்டன. இந்த ஆசிரமம் மிகவும் பழைமையான முறையில் நடத்தப்பட்டு வந்தது. இதன் உயிரும் உற்சாகமும் இதில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களாலும் தொடர்ந்து நிலைநிறுத்தப்பட்டது. த்வைபாயனரைத் தலைமையாகக் கொண்டு அவருடைய நம்பிக்கையைச் சம்பாதித்துக்கொண்டு இந்த ஆசிரமம் தான் புத்துயிர் பெற்றதோடு அல்லாமல் தர்மக்ஷேத்திரத்தையும் புத்துயிர் பெற வைக்க வேண்டி வந்திருந்தது.

இதன் முக்கிய ஆசாரியராக கௌதம முனிவர் இருந்தார். பராசர முனிவரின் சீடர்களிலேயே மிகவும் வயதானவர் அனைவரிலும் மூத்தவர். வாடிகாவை அவருக்கு அறிமுகம் செய்து வைத்தபோது ஒரு தந்தையைப் போல் அவளைப் பார்த்துப் புன்னகை செய்து ஆசிகளை வழங்கினார். ஆசாரிய கௌதமருடன் அவர் மனைவி ஷார்மியும் தன் குழந்தைகளோடு வந்திருந்தாள். இவர்களைப் போல் இன்னும் பற்பல ஆசாரியர்கள் தங்கள் குடும்பத்துடன் இதில் இணைந்திருந்தனர். அவர்களின் சீடர்களும் வந்திருந்தனர். பிரமசாரிகளான மாணவர்கள் மான் தோலை அரையாடையாக உடுத்திக் கொண்டு கைகளில் தண்டங்கள், உணவு உண்ணும் சுரைக்குடுக்கை ஆகியவற்றோடு காட்சி அளித்தனர். ஆசிரமத்தை நம்பி உயிர் வாழ்பவர்களும் தங்கள் குடும்பத்தோடு இடம் பெற்றிருந்தார்கள். சிறுவர்களும், சிறுமிகளும் ஆங்காங்கே ஓடிக் கொண்டும், விளையாடிக் கொண்டும், பாட்டுகள் பாடிக் கொண்டும் அங்கும் இங்குமாக நிறைந்த அந்த இடத்துக்கே ஓர் கலகலப்பை உண்டாக்கி இருந்தார்கள். அவர்கள் அனைவரும் இந்தப் பிரயாணத்தை மிகவும் ரசித்தனர். இந்த ஆசிரமவாசிகளால் வைத்தியம் செய்யப்பட்டு வந்த நோயாளிகள், வயது சென்ற மூத்தோர்கள், நடக்க முடியாதவர்கள், சின்னஞ்சிறு குழந்தைகள் ஆகியோரும் மாட்டு வண்டிகளில் ஏறிப் பயணம் செய்து வந்திருந்தனர். அவர்களை ஆசிரமத்தின் ஆசாரியர்கள் கவனித்து வைத்தியம் செய்தனர். 

வீரியம் நிறைந்த பொலிகாளைகளும் கணக்கற்ற பசுக்களும், கன்றுகளும் உடன் அழைத்து வரப்பட்டிருந்தன. மாடுகளைக் கவனிக்கவென இடையர்கள் இருந்தார்கள். அவர்கள் வேளாவேளைக்கு மாடுகளைக் கவனித்து உணவு  கொடுப்பதும், பால் கறப்பதும் மேய்ச்சலுக்கு அழைத்துச் செல்வதுமாக இருந்தனர். இவர்களைத் தவிர சில வில்லாளிகள் சக்கரவர்த்தி ஷாந்தனுவால் அனுப்பப் பட்டிருந்தனர். அவர்கள் இவர்கள் அத்தனை பேருடைய பாதுகாப்புக்காக வந்திருந்தனர். ராக்ஷசர்களிடமிருந்தோ காட்டு மிருகங்களிடமிருந்தோ இவர்களுக்குத் தொந்திரவு வராமல் பாதுகாத்தனர் அவர்கள். அனைவரையும் பார்த்த வாடிகாவுக்குச் சொல்ல முடியாத சந்தோஷம் வந்தது. அவள் மனம் ஆனந்தத்தில் குதித்தது! கூத்தாடியது! அதுவும் பராசர கோத்திரத்து முனிவர்கள் அனைவருமே த்வைபாயனரிடம் பற்றுடனும், பாசத்துடனும் மரியாதையுடனும் இருப்பதைக் காணும்போது அவளுக்கு மனம் நிறைந்து போனது. அவர்கள் அனைவருமே த்வைபாயனரை “பால முனி” என்றோ “சிறிய முனிவர்” என்றோ அழைத்தனர். ஏனெனில் பராசரர் தான் அந்த ஆசிரமவாசிகளின் தலைவராகக் கருதப் பட்டு வந்ததாலும் அவரை அனைவரும் மாட்சிமை பொருந்திய நொண்டி முனி என அழைத்ததாலும் அவரிடமிருந்து அவர் மகனை வித்தியாசப் படுத்திக் காட்ட வேண்டி இப்படி அழைத்தனர்.

பைலர் வாடிகாவை அழைத்துச் சென்று பராசர முனிவரின் சீடர்களுக்கெல்லாம் இவள் த்வைபாயனருக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் என்றும் மஹா அதர்வரின் ஒரே மகள் என்றும் வேத வித்தையில் தேர்ந்தவள் என்றும் அறிமுகம் செய்து வைத்தார். அவர்கள் அனைவரும் இதைக் கேட்டதும் ஆனந்தத்தில் மெய்ம்மறந்து போனார்கள். வாடிகாவைக் கண்டதுமே ஆசாரிய கௌதமரின் மனைவி ஷார்மி அவளை ஏற இறங்கப் பார்த்தாள். ஷார்மி சற்றே குண்டாகக் கொஞ்சம் ஆண்மைத் தனம் கலந்து இருந்தாள். வாடிகாவைப் பார்த்ததும் ஷார்மிக்குப் பிடித்து விட்டது. அதை அறிவிக்கும் விதமாக ஷார்மி வாடிகாவைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டு உச்சந்தலையில் முத்தங்களைப் பொழிந்தாள். இதன் மூலம் வாடிகாவின் பேரில் தனக்கிருந்த உரிமையை அவள் நிலைநாட்டிக் கொண்டாள். வாடிகாவுக்கோ ஆனந்தம் தாங்க முடியாமல் கண்ணீரே வந்து விட்டது. மற்றும் அங்கிருந்த பெண்மணிகள் அனைவரும் வாடிகாவுக்கு ஆசிகளைத் தெரிவித்தும் அவளை அணைத்துக் கொண்டும் தங்கள் சந்தோஷத்தை வெளிப்படுத்தினார்கள். வாடிகாவுக்கு மூச்சுத் திணறினாலும் இந்த அன்பை, சந்தோஷத்தை அவள் மிகவும் விரும்பியே ஏற்றுக் கொண்டாள். 

இந்த நடமாடும் ஆசிரமம் அவர்கள் இருந்த மலையின் அடிவாரத்துக்கு வந்திருந்தது. காளைகள் வண்டிகளிலிருந்து அவிழ்க்கப்பட்டு மாடுகள் நீர் குடிக்க வண்டிக்காரர்களால் அழைத்துச் செல்லப்பட்டன. மற்றவர்களில் உணவு சமைப்போர் தங்கள் வேலையைத் தொடங்கி இருந்தனர். மற்ற ஸ்ரோத்திரியர்களும், அவர்கள் மனைவிமார்கள், பிரமசாரிகளான மாணாக்கர்களுடன் மஹா அதர்வரைக் கண்டு நமஸ்கரித்து ஆசிகளைப் பெற வேண்டி மலை மேல் ஏறிச் சென்றனர். மறுநாள் மஹா அதர்வர் தன்னுடன் த்வைபாயனர், கௌதமர் மற்றும் முக்கியமான சில ஆசாரியர்களை அழைத்துக் கொண்டு ச்யமந்தக ஏரிக்கரைக்குச் சென்றார். அங்கே அனைவரும் கூடி ஆலோசித்து எந்த இடத்தில் பராசரரின் ஆசிரமம் அமையவேண்டும் என்பதை முடிவு செய்தனர்.                                          

Thursday, July 7, 2016

குருதேவரின் வசிய மந்திரப் பிரயோகத்தில் த்வைபாயனர்!

"மக்கள் கூட்டம் மிகவும் எதிர்ப்பைத் தெரிவிக்கும்.  என்னிடம் அவர்கள் மிகவும் எதிர்பார்ப்பு வைத்திருக்கிறார்கள். ஆகையால் எப்போது என்ன   செய்வார்கள் என்றே கூற முடியாது! என்னை அமைதியாக இருக்கவும் விட மாட்டார்கள்.  ஐயா, இந்த வாஜ்பேய யக்ஞம் குறிப்பிட்ட நேரத்தில் ஆரம்பிக்கப்பட்டால் தான் அங்கே பராசர முனிவரின் பெயரால் ஓர் ஆசிரமம் தர்மக்ஷேத்திரத்தில் நிலை பெற்று இருக்க முடியும்! அதற்கு உதவுங்கள்!” என்றார் த்வைபாயனர்.

ஆனால் ஜாபாலியோ விடாமல், “வேறு என்னவெல்லாம் நீ சாதித்திருக்கிறாய் இளைஞனே!” என்று கேட்டார். த்வைபாயனரோ, “ஏதோ ஒன்றிரண்டு நடந்துள்ளது ஐயா! ஆனால் உங்கள் ஆசிகள் இல்லாமல் அவை எல்லாம் வீணே! நான் எதையும் சாதித்ததாகக் கூற முடியாது. ஒன்றே ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். பரதனுடைய வம்சத்தில் பிறந்த குரு குலத்து சிரேஷ்டமான சக்கரவர்த்தி ஷாந்தனுவிடமும், அவரின் மூத்த மகன் இளவரசன் காங்கேயனிடமும் நான் வேண்டிக் கேட்டுக் கொண்டது ஒன்றே ஒன்று தான். பிரம தேஜஸும் க்ஷத்திரிய தேஜஸும் ஒன்று சேர வேண்டும் என்பதே என் வேண்டுகோள். இவை இரண்டும் எப்போதும் இணைந்து இருந்தால் தான் உலகுக்கு நன்மை! தர்மம் நிலைபெற்றிருக்கும்.”

“அவர்கள் அதற்கு என்ன சொன்னார்கள்?”

“இருவரும் நான் சொல்வதை அங்கீகரித்தார்கள். அப்படி ஓர் இணைப்பு இருந்தால் தான் தர்மம் நிலைபெற்றிருக்கும் என்பதையும் தர்ம சாம்ராஜ்யம் ஏற்படும் என்பதையும், ராஜ்ஜியங்கள் நிலைத்து நின்று புகழைப் பரப்பும் என்பதையும் ஒத்துக் கொண்டாரகள். ஆகவே அதற்காக உழைப்பதாக வாக்குறுதி கொடுத்தார்கள்.”

மஹா அதர்வருக்கு இந்த விஷயத்தில் ருசி ஏற்பட்டது. ஆர்வம் அதிகரித்தது. “ஆனால் நீ இதற்கு பதில் சொல்லவே இல்லையே! பிரமசாரி, நீ நிஜமாகவே இந்தக் காற்றில் கரைந்து போகும் வித்தையைக் கற்றிருக்கிறாயா? அப்படிக் கரைந்து போய்விடுகிறாயா?”

“ஐயா, நான் அப்படி எல்லாம் காற்றில் கரைந்து போவதில்லை. ஆனால் எவரும் எழுந்திருக்கும் முன்னரே அதிகாலையில் எழுந்து ஹஸ்தினாபுரத்தை விட்டு வெளியேறிவிட்டேன். நேரம் ஆயிற்றென்றால் கூட்டம் என்னைச் சூழ்ந்து கொள்ளும். பின்னர் நான் நினைத்தபடி செய்ய முடியாது. பின்னர் நான் கோதுலியில் இருக்கும் என் தந்தையின் ஆசிரமத்துக்குச் சென்றேன். அங்கே தான் அவருக்கான ஈமச்சடங்குகளும் செய்யப்பட்டன. அதன் பின்னர் யமுனைக்கரையில் என் தந்தையால் ஸ்தாபிக்கப்பட்ட சில ஆசிரமங்களுக்கும் அவரின் சீடர்கள் நடத்தி வரும் ஆசிரமங்களுக்கும் சென்றேன். அங்குள்ள ஸ்ரோத்திரியர்களில் சுமார் நாற்பது நபர்கள், அவர்களில் சிலர் ஆசாரியர்கள், தங்கள் குடும்பத்துடன் வசித்து வந்தார்கள். மற்றும் மற்ற ஸ்ரோத்திரியர்களைச் சார்ந்திருப்பவர்கள் என்று பலரும் இங்கே என்னுடன் இப்போது வந்திருக்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் தர்மக்ஷேத்திரத்தில் ஆசிரமம் அமைத்துக் கொண்டு இருக்க ஆசை தான்!. மேலும் ஐயா, மாட்சிமை பொருந்திய சக்கரவர்த்தினி சத்யவதி சுமார் 300 பசுக்களை எங்கள் ஆசிரமத்துக்குக் கொடையாகக் கொடுத்துள்ளார்கள்!” என்றார் த்வைபாயனர்.

“அவர்களெல்லாம் எப்போது வருகின்றனர்?”

“அனைவரும் வந்து மலையடிவாரத்தில் உங்கள் ஆசிகளுக்காகக் காத்திருக்கின்றனர் ஐயா!”

“இது என்ன முட்டாள் தனம்? நீ அந்த ஓநாய்களின் ராஜ்ஜியத்தில் முற்றிலும் சபிக்கப்பட்ட இடத்திலா ஆசிரமங்களை அமைக்க வேண்டும் என்கிறாய்? முட்டாள்தனம்!”

“நான் மட்டுமல்ல, குருதேவரே! நானில்லை! உங்கள் மரண வசிய மந்திரம் என்னிடம் பலித்துவிட்டால், நானும் என் முன்னோர்களின் இடத்துக்குப் பித்ருலோகத்துக்குச் சென்றுவிட்டால், என் தந்தையின் முக்கியச் சீடர்கள் அனைவரும் என்னிடம் சத்தியம் செய்து தந்திருக்கின்றனர். என்னவென்று தெரியுமா? தர்மக்ஷேத்திரத்தில் ஆசிரமங்கள் அமைக்கையில் நான் உயிருடன் இல்லாவிட்டால் சுமாந்துவைத் தங்கள் தலைவராக ஏற்கச் சம்மதித்திருக்கிறார்கள்.”

மஹா அதர்வர் ஜாபாலியின் கண்களில் குறுநகை ஒளிர்ந்தது. “உன்னை மாதிரி ஒரு அயோக்கியனைக் கடைந்தெடுத்த அயோக்கியனை நான் பார்த்ததே இல்லை!நீ என் மாணாக்கன் என்று சொல்லிக் கொள்கிறாய்! ஆனால் எனக்குக் கீழ்ப்படிவதில்லை. இந்த ஆசிரமத்தை விட்டு என் அனுமதி இன்றி நீ வெளியேறி இருக்கிறாய். அதோடு இல்லாமல் சஞ்சீவனி மூலிகைகளையும் எனக்குத் தெரியாமல் என்னிடம் சொல்லாமல் எடுத்துச் சென்று இருக்கிறாய்! என் அனுமதி இன்றி சக்கரவர்த்தி ஷாந்தனுவை அதர்வ மந்திரங்களின் உதவியால் மரணத்திலிருந்து மீட்டிருக்கிறாய். நீ எப்படி இந்த மாதிரியெல்லாம் செய்தாய் என்பதை என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. இதோ இங்கே இருக்கும் என் சீடர்களில் எவருக்கும் அதர்வ மந்திரங்களும் அவற்றின் உச்சாடனங்களும் தெரிந்திருந்தும், சஞ்சீவனி மூலிகையைப் பயன்படுத்தத் தெரிந்திருந்தும் இன்று வரை எவரும் மரணத்தின் பிடியிலுள்ள ஒருவரையேனும் உயிர் பிழைக்க வைத்ததில்லை. அதற்கான முயற்சிகளைச் செய்ததில்லை.”

ஒரு குறும்புச் சிரிப்புச் சிரித்தார் த்வைபாயனர். “மன்னியுங்கள் குருதேவரே! நான் உங்கள் மற்ற சீடர்கள் போல் எல்லாம் நடந்து கொள்ளவில்லைதான்! மன்னியுங்கள்! எனக்கே தெரியவில்லை! என்னால் எப்படி இதைச் செய்ய முடிந்தது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை! சக்கரவர்த்திக்கு நான் வைத்தியம் செய்தபோது நானே அங்கே உடலோடு இல்லை என்ற உணர்வு தோன்றியது. முற்றிலும் மந்திர உச்சாடனங்களில் ஆழ்ந்து போனேன். வேறு நினைவே இல்லை!  வேதத்தின் அனைத்து சக்திகளும் ஒன்று திரண்டு சக்கரவர்த்தியின் உடலுக்குள் புகுந்துவிட்டாற்போன்ற தோற்றம்! அவ்வளவே நான் அறிவேன்! நடந்தது எப்படி என்று எனக்கும் தான் புரியவில்லை!”

மஹா அதர்வர் மௌனத்தில் ஆழ்ந்தார். “ம்ம்ம்ம்ம், அது தான், அதுதான் உன்னுடைய வெற்றிக்கு ஓர் காரணமாக இருந்திருக்க வேண்டும்,”என்று தனக்குள்ளே பேசிக் கொள்பவர் போலச் சொன்னார். இப்போது மீண்டும் அவருக்குள் அந்தக் கோபமான உணர்வு திரும்பி விட்டாற்போல் இருந்தது. “த்வைபாயனா! நீ என் சீடனாக இருக்கத் தகுதி வாய்ந்தவனே அல்ல!அதோடு இல்லாமல் நீ என் சீடன் எனச் சொல்லிக் கொண்டு என்னை ஆலோசிக்காமல் என்னிடம் கலந்து கொள்ளாமல் நீயே ஒரு ஆசிரமத்தை ஸ்தாபிக்கவேண்டும் என்று நினைக்கிறாய்! இது எனக்கு உவப்பாக இல்லை. ஹூம்! உன்னால் என்ன செய்ய முடியும்? நூற்றுக்கணக்கில் பசுக்களையும் மாணாக்கர்களையும் என்னிடம் கொண்டு வந்து நிறுத்துவாய்! எனக்கு இப்படி எல்லாம் தேவையே இல்லை! மேலும் என்னிடம் கேட்கவே இல்லை. நீ சுமாந்துவை உன் ஆசிரமத்தலைவனாக நியமிக்கிறாய்! இத்தனைக்கும் மேலே நீ என்னை குரு வம்சத்தினரின் வாக்குறுதியை ஏற்றுக்கொண்டு செயல்படச் சொல்கிறாய்! நான் அவர்களை ஒருக்காலும் நம்பப் போவதில்லை. அவர்களால் தர்மத்தைக் கடைப்பிடித்து தர்மத்தின் வழியில் நிற்க முடியும் என்றே தோன்றவில்லை!”

முனிவர் கோபத்தின் உச்சத்தில் இருந்தார். “இப்போது நீ என்னை உன் மேல் மரண வசிய மந்திரப் பிரயோகம் செய்யச் சொல்கிறாய்! ஆகவே நீ இறந்துவிடுவாய்! நீ இறந்த பின்னர் தர்மக்ஷேத்திரத்தின் நிர்மாணங்களை ஏற்படுத்தும் மாபெரும் பொறுப்பிலிருந்து தப்பிவிடுவாய்! இப்போது என் மேல் அந்தப் பொறுப்பு சுமத்தப்படும்! எனக்கு இந்த வயதில் இது தேவையா?” என்றவண்ணம் த்வைபாயனரைக் கடுமையாகப் பார்த்தார் ஆசாரியர். “எனக்கு இது தேவை இல்லை! நான் உன் ஆசிரமத்தைப் பார்த்துக்கொள்ளும் பொறுப்பை ஏற்கப் போவதில்லை. நீ கொடுக்கும் சீடர்களோ அல்லது பசுக்களோ எனக்குத் தேவையும் இல்லை!” கோபமாகவும் ஏளனமாகவும் சீறினார் ரிஷி.

“மதிப்புக்குரிய ஆசாரியரே! எனக்கு ஓர் உதவி மட்டும் செய்ய முடியுமா? சுமாந்துவை என் தந்தையின் சீடர்களை ஏற்றுக்கொள்ளச் செய்ய முடியுமா?”

“முடியாது! என்னால் அது முடியாது!” திட்டவட்டமாகக் கூறினார் ஜாபாலி ரிஷி! பின்னர் அவர் குரலில் இருந்த கடுமை கொஞ்சம் குறைந்தாற்போல் தோன்றியது! “நான் உன் மேல் இன்னும் கடுமையானதொரு மந்திரப் பிரயோகம் செய்கிறேன்! செய்யப் போகிறேன்! பார்த்துக்கொண்டே இரு!” என்றார். அவர் கண்கள் கிண்டலாகச் சிரித்தன. த்வைபாயனரோ எதற்கும் கலங்காமல், “ஆம் ஆசாரியரே! நீங்கள் விரும்புவது எதுவானாலும் நிறைவேற்றிக்கொள்ளுங்கள்! என்னாலும் நிறைவேற்றப்படும்!” என்றார். இப்போது கொஞ்சம் சிரிப்பு எட்டிப் பார்த்தது முனிவரின் முகத்தில்!

“நான் உன் மேல் மிகக் கடுமையான மோசமானதொரு வசியத்தை ஏவப் போகிறேன். அது மரண வசிய மந்திரத்தை விடக் கொடுமையானது. உன்னால் தாங்க முடியாது!”மீண்டும் சிரிப்பு வர அதை அடக்கிக் கொண்ட முனிவர், “நான் வாடிகாவை உன் மேல் பற்று வரும்படி செய்யப் போகிறேன். உன் நினைவில் அவள் பைத்தியமாகும்படி செய்யப் போகிறேன். அந்தப் பெண்ணின் தொந்திரவை நான் வேறு எப்படி நீக்குவது? என்னுடைய பேச்சையே அவள் கேட்கவில்லை; கேட்பதும் இல்லை. என் வேலைகளில் உள் புகுந்து குழப்பம் செய்கிறாள். அந்த சஞ்சீவனி மூலிகையை உன்னிடம் கொடுத்ததன் மூலம் அவள் என்னை ஏமாற்றி விட்டாள்!” என்ற முனிவர் சுற்றும் முற்றும் பார்த்தவண்ணம், “எனக்குத் தெரியும், அவள் இங்கே தான் எங்கேயோ சுற்றிக் கொண்டிருக்கிறாள். நாம் பேசுவதை எல்லாம் கேட்டுக் கொண்டிருக்கிறாள். ஏதோ ஓர் மூலையில் ஒளிந்திருக்கிறாள். அனைத்தையும் கவனிக்கிறாள்.” ஒரு நிமிடம் சந்நியாசிக்கு உரிய பாவனைகள் அவர் முகத்திலிருந்து மறைந்தது. பின்னர் மீண்டும் புன்னகை செய்தார்.

த்வைபாயனரோ, “நீங்கள் என் குருநாதர்! உங்களால் என்னிடம் எவ்வித வசியப் பிரயோகம் செய்ய முடியுமோ அதைச் செய்து கொள்ளலாம்.நான் காத்திருக்கிறேன்.” என்ற த்வைபாயனரின் முகத்தில் ஒரு கணம் வெற்றியினால் விளையும் சந்தோஷம் தெரிந்தது. முனிவர் தன் கைகளைத் தட்டவே ஓர் ஊழியன் அங்கே வந்தான். அவனிடம், “உடனே சென்று வாடிகா எங்கிருந்தாலும் அழைத்துவா! இந்தக் குகைக்கு அருகிலேயே அவள் சுற்றிக் கொண்டிருக்க வேண்டும்!” என்று உத்தரவு போட்டார். ஊழியன் சென்றான். சற்று நேரத்தில் வாடிகா அங்கே ஓடோடி வந்தாள். “நான் என்ன சொன்னேன் த்வைபாயனா! அவள் இங்கே தான் சுற்றிக் கொண்டிருப்பாள் என்பதை உன்னிடம் சொன்னேன் அல்லவா? இதோ பார், அவள் வந்துவிட்டாள்!” என்றார். முனிவரின் நடத்தை, பாவனைகள் எல்லாமும் இப்போது மிக மென்மையாக மாறிவிட்டது. வாடிகா அவருடைய கண்ணின் கருமணி!

“என்னிடம் எதை எதிர்பார்க்கிறீர்கள், தந்தையே?” என்று வாடிகா கேட்டாள். தன் தலையை இரண்டாகப் பிரித்துப் பின்னலிட்டிருந்தாள். அவை முன்னால் வந்து விழுந்தன. அலட்சியமாக அதைப் பின்னால் தள்ளிக் கொண்டாள். “நீ எங்கள் சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டிருந்தாய் அல்லவா?” என்று வினவினார் முனிவர். “இல்லை, தந்தையே!” என்று ஒரு சிரிப்புடன் சொன்னாள் வாடிகா. “நான் பக்கவாட்டுக் கதவின் அருகே சும்மா நின்று கொண்டிருந்தேன். உங்களுக்கு எப்போது நான் தேவை என்றாலும் உடனே உள்ளே நுழைய ஆயத்தமாகக் காத்திருந்தேன்! அதோடு நீங்கள் மிகச் சத்தமாகவன்றோ பேசிக் கொண்டிருந்தீர்கள்! எனக்கு அவை காதில் விழுந்தே தீர்ந்தன!” என்றாள்.

“பொய் சொல்லாதே! நான் இப்போது த்வைபாயனன் மீது மிகக் கடுமையானதொரு வசிய மந்திரத்தை ஏவப் போகிறேன். அவன் எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கவில்லை. உன் மேலும் வசிய மந்திரப் பிரயோகம் செய்யப் போகிறேன். நீ என் அனுமதி இல்லாமல் சஞ்சீவனியைத் திருடி த்வைபாயனனிடம் கொடுத்ததற்காக உன் மேல் வசியப் பிரயோகம் செய்யப் போகிறேன்.” என்ற வண்ணம் மஹா அதர்வர் தன் கண்களை மூடிக் கொண்டார். அதன் பின்னர் த்வைபாயனரின் மேல் தன் கண்களை ஈட்டி போல் நாட்டியவண்ணம், “த்வைபாயனா! இதோ பார் வாடிகாவை! இவள் மேல் நீ காதல் கொள்வாய்!” என்றார்.

“அப்படியே குருதேவா! உங்கள் ஆணைப்படியே!” என்றார் த்வைபாயனர். அவரையும் அறியாமலேயே அவருடைய உள்ளுணர்வு வாடிகா மீது சென்றது. அவள் மேல் ஆழ்ந்த விருப்பம் கொண்டு அவளுக்காக ஏங்கத் தொடங்கினார். இப்போது முனிவர் வாடிகா பக்கம் திரும்பினார். “வாடிகா, த்வைபாயனன் மேல் அன்பு செலுத்து! மாறாத அன்பு செலுத்து!” என்றார். வாடிகா மிகுந்த நாணத்துடன் த்வைபாயனரைப் பார்த்தாள், அவளுக்கு அவர் ஏற்கெனவே அவள் இதயத்தில் கொலு வீற்றிருப்பதாகத் தோன்றியது. “சரி, தந்தையே! நான் இவர் மேல் அன்பு செலுத்துகிறேன்.” என்றாள். “ ம்ம்ம்ம்ம், இவ்வாறுதான் என் முன்னோர்களான பிருகு மற்றும் ஆங்கிரஸ் ஆகியோரின் மனோ வசிய மந்திர சக்தி பூர்த்தி அடைந்தது!” என்றார் மஹா அதர்வர். வாடிகா தன் பக்கவாட்டில் நின்று கொண்டிருந்த த்வைபாயனரை ஓரக்கண்ணால் பார்க்க த்வைபாயனர் புன்னகை புரிந்தார்.

“இருவரும் இங்கிருந்து செல்லுங்கள்!” என்ற மஹா அதர்வர், “ இங்கே உட்கார்ந்து கொண்டு முட்டாள்களைப் போ விழிக்காதீர்கள். பராசர முனிவரின் சீடர்கள் அனைவரும் இந்த மலை அடிவாரத்தில் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களை இங்கே இந்த ஆசிரமத்திற்கு அழைத்து வந்து அனைத்து சௌகரியங்களோடும் தங்க வையுங்கள். த்வைபாயனர் தன்னுடைய ஆசிரமத்தை முழுதும் நிர்மாணிக்கும் வரை அவர்கள் இங்கேயே தங்கட்டும். சுமாந்து, அடுத்த நல்ல நாள் எப்போது வருகிறது என்பதைக் கொஞ்சம் பார்! இந்த வாடிகாவை இங்கிருந்து அழைத்துச் செல்! என்னிடமிருந்து அவள் விடுபடட்டும்!” என்றார்.                                            

Tuesday, July 5, 2016

குருவும் சீடனும்!

மஹா அதர்வருக்கு த்வைபாயனரின் பேச்சு ஆச்சரியத்தைத் தந்தது, எப்படி எல்லாம் இந்த இளைஞன் யோசிக்கிறான்!   த்வைபாயனரைப் பார்த்து, “அது சரி, இதைத் தொடர்ந்து வரப்போவது என்ன?” என்று கேட்டார்.

“ஐயா, நான் ஹஸ்தினாபுரத்தின் சக்கரவர்த்தி ஷாந்தனுவிடமிருந்து ஒரு வாக்குறுதியைப் பெற்றிருக்கிறேன். தர்ம க்ஷேத்திரத்தில் ஒரு வாஜ்பேய யக்ஞத்தை நடத்துவது என்பதும் அதில் ஒன்று. அந்த யக்ஞத்துக்கு பிரம்மனாக நீங்களோ அல்லது நீங்கள் சுட்டும் எவராவதோ தலை தாங்கி நடத்தித் தர வேண்டும். நான்காம் வேதத்தின் சார்பாக சமயச் சடங்குகளை நடத்தித் தரும் பிரம்மனாகப் பொறுப்பேற்க வேண்டும்.”

“இது வெறும் வெட்டிப் பேச்சு!” என்றார் மஹா அதர்வர். “ஹூம், உனக்குத் தெரியுமா, தெரியாதா? அஸ்தினாபுரத்தின் தலைசிறந்த ஸ்ரோத்திரியர்கள் அனைவரும் பிரம்ம வித்தையை ஏற்க மறுத்தவர்கள். அவர்களைப் பொறுத்தவரை வேதம் மூன்றே பகுதிகளால் ஆனது தான்!” என்றார். அதற்கு த்வைபாயனர், “இல்லை, ஐயா! அனைத்துக் கடவுளரும், உங்கள் குலத்து தீர்க்க தரிசிகளான முன்னோர்களுமாகச் சேர்ந்து உங்கள் மந்திர வித்தையின் மூலம் சக்கரவர்த்தி ஷாந்தனுவின் உயிரை மீட்டுக் கொண்டு வர முடிந்தது.”

“என்ன? மந்திர வித்தையா? யார் உனக்குச் சொல்லிக் கொடுத்தது?”

“என் தந்தை அவருக்குத் தெரிந்தவரை மந்திர வித்தையை எனக்குச் சொல்லிக் கொடுத்தார். அது சாதாரணமான உடல் நல்வுகளுக்காக மட்டுமே! ஆனால் அதில் முக்கியமான மந்திரமே இறக்கும் நிலையில் இருப்பவரை உயிர் பிழைக்க வைப்பது தான்! இதை எனக்கு என் குருநாதர் சொல்லிக் கொடுத்தார்!” என்ற த்வைபாயனர் மீண்டும் தன் கைகளைக் கூப்பி மஹா அதர்வரை வணங்கினார்.

“என்ன? நான் உனக்குச் சொல்லிக் கொடுத்தேனா? ஏன் பொய்யெல்லாம் சொல்கிறாய்?” மஹா அதர்வர் கோபத்துடன் கேட்டார்.   “இல்லை ஐயா, அந்த மந்திரங்களை நான் உங்களிடமிருந்தே கற்றேன்!” என்றார் த்வைபாயனர். “இருக்கலாமோ? ஆனால் நான் உனக்கு அதைக் கற்றுக் கொடுக்கவே இல்லை! ஏன், இங்குள்ள என் அருமைச் சீடர்களுக்குக் கூட நான் அவற்றைக் கற்றுத் தந்ததில்லை!” என்றார் மஹா அதர்வர்.

“நீங்கள் சொல்லிக் கொடுத்தீர்கள் ஐயா! ஆம், உங்களிடமிருந்தே நான் கற்றேன். பைலருக்கு உடல் நலம் குன்றி இருந்தபோது அவரை நீங்கள் தான் மீண்டும் உயிர்ப்பித்தீர்கள். அப்போது நீங்கள் அந்த மந்திரங்களைப் பிரயோகம் செய்வதைப் பார்த்திருந்தேன். அப்போது தான் நானும் அவற்றைக் கற்றேன். மீண்டும் இந்த் ஆசிரமத்திற்குப் பைலர் கொண்டுவரப் பட்டபோதும் நீங்கள் மறுமுறையும் இந்த மந்திரங்களை அவர் மேல் பிரயோகம் செய்தீர்கள். அப்போது நான் மனனம் செய்திருப்பதும் நீங்கள் சொல்வதும் ஒன்றாக இருக்கிறதா, ஒத்துப் போகிறதா என்று சோதித்துப் பார்த்துக் கொண்டேன். என் ஞாபக சக்தி சரியாகவே இருந்தது. நான் இறக்கும் நிலையில் இருப்பவர்களை எப்படி உயிருடன் மீட்பது என்பதை இப்படித் தான் உங்கள் மூலமாகக் கற்றுக் கொண்டேன்.”

மஹா அதர்வரால் த்வைபாயனரின் பேச்சை நம்பவே முடியவில்லை! “என்ன? வேதத்தின் மந்திரங்களை சற்றும் பிறழாமல் நான் சொல்லிய அதே ஏற்ற இறக்கத்தோடு, அதே ஒலியோடு அதே ஸ்வரத்தோடு உன்னால் அப்படியே சொல்ல முடிந்ததா? இது உண்மையா?” என்று கேட்டார்.  

“ஆம், குருதேவரே! அந்த மந்திரங்கள், என் நினைவிலிருந்து நீங்கள் எப்படி உச்சாடனம் செய்தீர்களோ அப்படியே வெளிப்பட்டது. உங்களைப் போலவே நானும் அந்த மந்திரங்களைத் தக்கபடி உச்சரித்துக் கிட்டத்தட்ட யமலோகத்தை எட்டிப் பார்த்து விட்ட சக்கரவர்த்தி ஷாந்தனுவை உயிர்ப்பித்தேன். உங்கள் கிருபை தான் ஆசாரியரே! இதிலிருந்து நான் அவற்றைச் சரியாகவே உச்சரித்திருக்கிறேன் என்பது புரிகிறதல்லவா?” என்றார் த்வைபாயனர். மஹா அதர்வருக்கு இந்த விஷயத்தில் இப்போது தனியான ஆர்வம் உண்டாகி விட்டது. “அது சரி, அந்த மூலிகை, சஞ்சீவனி மூலிகை அது இல்லாமலேயேவா நீ மந்திரங்களை மட்டும் உச்சரித்துக் காப்பாற்றினாய்?”

“இல்லை, ஆசாரியரே, என்னிடம் அந்த மூலிகையும் இருந்தது.” என்றபடி புன்னகை புரிந்தார் த்வைபாயனர். “எங்கிருந்து நீ அதைப் பெற்றாய்?” ஆசாரியர் கேட்டார். த்வைபாயனருக்கு தனக்குள்ளேயே ரகசியமான வேடிக்கை விஷயமாக இது தெரியவே உள்ளூரச் சிரித்துக் கொண்டார். பின்னர் சொன்னார்: “என் குருநாதரின் ஆசிரமத்திலிருந்து தான் எனக்கு இது கிடைத்தது!” என்றார். மஹா அதர்வருக்கு மீண்டும் கோபம் வந்து விட்டது! “இதோ பார், பிரமசாரி, திரும்பத் திரும்ப நீ சொன்னதையே சொல்லாதே! நீ என் சீடன் எனச் சொல்லிக் கொண்டிராதே! நான் ஒருக்காலும் உன்னை என் சீடனாக ஏற்கவே இல்லை!” என்றார்.

“இல்லை, ஆசாரியரே, நீங்கள் என்னை உங்கள் மாணாக்கனாக ஏற்றுக் கொண்டு விட்டீர்கள்! இல்லை எனில் என் மேல் மரண வசிய மந்திரத்தை எப்படி உங்களால் பிரயோகம் செய்ய நினைக்க முடியும்? உங்கள் அனுமதி இல்லாமல் உங்கள் ஆசிரமத்திலிருந்து நான் விலகியதற்காகவன்றோ இப்படிச் செய்ய நினைத்தீர்கள்!” த்வைபாயனர் கேட்டார். மஹா அதர்வரின் ஒளி பொருந்திய கண்களில் மெல்ல மெல்லக் கருணை வந்தமர்ந்தது. அவரின் கடுமையான பார்வை மென்மையாக மாற ஆரம்பித்தது. தன் மஞ்சள் நிறத் தாடியைத் தன் கைகளால் நீவிக் கொண்டதைப் பார்த்தால் வரவிருக்கும் புன்னகையை மறைக்க நினைக்கிறாரோ என எண்ணத் தோன்றியது.

“வாஜ்பேய யக்ஞத்திற்கு அதிகாரபூர்வமான தலைவராக யார் இருக்கப் போகின்றனர்?” என்று த்வைபாயனரைக் கேட்டார். அதற்கு த்வைபாயனர் சற்றும் தயங்காமல், “யக்ஞம் தர்மக்ஷேத்திரத்தில் என்னுடைய குருநாதரான தங்கள் முன்னிலையில் நடைபெறும்.” என்று பணிவுடன் தெரிவித்தார். “ஆஹா! எனக்காக அதையும் நீயே முடிவு செய்துவிட்டாயா?” என்றார் மஹா அதர்வர்! அவர் உடனே கேட்டது கோபமாக என்று தோன்றினாலும் கேள்வியின் உக்கிரம் இப்போது முன்னைவிடக் குறைந்திருந்தது நன்றாகவே புலப்பட்டது. த்வைபாயனரும் ஆமோதிப்பாகத் தலையை ஆட்டினார்.

“ஆம், குருதேவரே, அதர்வ வேதமும் வேதங்களின் ஒரு பகுதியே, வேதத்தின் நான்காம் பகுதி என்று அனைவரும் ஒத்துக்கொள்ள வேண்டும் என்னும் உங்கள் நீண்ட நாட்கள் ஆவல் இதன் மூலம் தீரும். அனைவரும் ஒப்புக் கொள்வார்கள். ஆகவே உங்கள் ஆசை நிறைவேறும்!” என்றார் த்வைபாயனர். “ஏன் அப்படிச் சொல்கிறாய்?” என்று மஹா அதர்வர் கேட்டார்.

“ஏனெனில் சக்கரவர்த்தி ஷாந்தனுவும் சரி, அவருடைய ராஜசபையின் தலைமைப் புரோகிதரும் ராஜகுருவுமான ஆசாரிய விபூதியும் சரி, இந்த பிரம்மனைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பை என்னிடம் ஒப்படைத்துவிட்டார்கள். நன்கு கற்றறிந்த ஞானம் நிரம்பிய மஹா அதர்வரைக் கொண்டு வர  வேண்டிய பொறுப்பு என்னைச் சேர்ந்து விட்டது. வாஜ்பேய யக்ஞத்தின் அதிகார பூர்வத் தலைவரை நான் தான் தேர்ந்தெடுக்க வேண்டும்.” என்ற த்வைபாயனர் சில நொடிகள் தயங்கினார். பின்னர் மீண்டும் வணக்கத்துடன் கூடிய குரலில், “இப்போது நீங்கள் என் மேல் மரண வசிய மந்திரப் பிரயோகம் செய்யப் போகிறீர்கள்! ஆகவே இது வேறு விஷயம். இல்லை எனில் குருவே, நீங்களே எனக்கு அதர்வ வேதத்தை முற்றிலும் கற்றுக் கொடுத்து விடுவீர்கள்!” என்றார். மஹா அதர்வர் இதற்கு பதில் ஒன்றும் சொல்லவில்லை. பின்னர் பேச்சை மாற்றினார். “அது சரி, பிரமசாரி, நீ என்னமோ காற்றில் அப்படியேக் கரைந்து போய்விட்டாய் என்கிறார்களே, நீ நினைத்தால் அப்படிக் கரைந்து போவாயாமே! அது உண்மையா?” என்று கேட்டார்.                                                  



Sunday, July 3, 2016

சீடனும் குருவும்!

“என்ன? என் சீடனா? இதை விட மோசமாக என்னை அவமதிக்க முடியாது! எனக்கு இப்படி ஒரு சீடனா? நான் ஒருக்காலும் அவனை என் சீடனாக அங்கீகரிக்கவே மாட்டேன்!” கோபத்துடன் கொந்தளித்தார் மஹா அதர்வர். “அப்போது அவனிடம் நான் என்ன சொல்லட்டும்? தந்தையே! சொல்லுங்கள்!” என்றான் சுமாந்து! மஹா அதர்வ சிறிது நேரம் யோசித்தார். அவர் உதடுகள் ஏதோ யோசனையில் சுளித்தன, நெளிந்தன. பின்னர் உறுதியாக மடிந்தன. “ஆம் இது தான் தக்க சமயம்! நம் முன்னோர்களான பிருகுவுக்கும் ஆங்கிரஸுக்கும் அவர்களின் மன விருப்பம் பூர்த்தியாகும் வண்ணம் நடைபெறும். அவனைப் பணிய வைக்க இதுவே சரியான சந்தர்ப்பம்!” என்று மனதினுள் நினைத்தவர் தன் மகனிடம், “அவனை இங்கே அனுப்பி வை!” என்று ஆணையிட்டார். சுமாந்து வெளியேறியவன் திரும்புகையில் த்வைபாயனருடன் வந்தான். த்வைபாயனர் மஹா அதர்வரைப் பார்த்ததும் கீழே விழுந்து சாஷ்டாங்கமாக வணங்கினார். அவர் பாதங்களைத் தொட்டுத் தன் கண்களில் ஒற்றிக்கொள்ள வேண்டிக் கையை நீட்டினார். அவர் செய்யப் போவதை அறிந்தவர் போல் மஹா அதர்வர் அதற்குள்ளாகத் தன் பாதங்களை விருட்டென இழுத்துக் கொண்டார்.

“உங்கள் ஆசிகளை வேண்டி இங்கு வந்தேன், குருவே!” என்றார் த்வைபாயனர். குற்றத்தை ஒப்புக்கொண்டு மன்னிப்புக் கேட்கும் பாவனையில் அவர் குரல் இருந்தது. அதே பணிவுடன் அவர், “நான் இதற்கெல்லாம் தகுதியானவனே இல்லை! அதை நான் நன்கறிவேன். ஏனெனில் இந்த ஆசிரமத்திலிருந்து நான் உங்கள் அனுமதி இல்லாமல் வெளியேறிவிட்டேன். உங்களை அவமதித்து விட்டேன். அந்த மோசமான நடத்தைக்காக உங்கள் மன்னிப்பையும் அதே சமயம் உங்களிடமிருந்து தண்டனையையும் பெற வேண்டியே நான் இப்போது இங்கே வந்துள்ளேன்!” த்வைபாயனர் பேச்சை முற்றிலும் அலட்சியம் செய்தார் மஹா அதர்வர்! “ஆஹா! தண்டனையை வரவேற்கிறாயா நீ? அதைத் தேடியா வந்துள்ளாய்?” என்று கேட்டார். “ஆனால் நீ சொல்லுவதன் பொருளை நீயே உணர்ந்து கொள்ளவில்லை என்று நினைக்கிறேன் த்வைபாயனா!” என்று மேலும் கூறினார்.

“என்னை நம்புங்கள், குருவே! நீங்கள் உங்கள் மரண வசிய மந்திரத்தை என் மீது தாராளமாகப் பிரயோகம் செய்யலாம். அதற்காகவே நான் இப்போது வந்துள்ளேன்! உங்கள் ஆசிரமத்தில் உங்களுக்குச் சிறிதும் கீழ்ப்படியாத மாணவன் நான்! ஆகவே தண்டனையை வேண்டியே நான் இப்போது இங்கே வந்துள்ளேன்!” என்றார் த்வைபாயனர். த்வைபாயனர் இதை மனப்பூர்வமாக அறிந்தே தான் சொல்கிறார் என்பதைப் புரிந்து கொண்டார் மஹா அதர்வர். இந்த இளம் பிரமசாரிக்குப் பைத்தியம் பிடித்து விட்டதோ என்றே எண்ணினார் அவர். பின்னர் அவரைப் பார்த்து, “இதோ பார், பிரமசாரி! நீ என் சீடனே இல்லை! நான் ஒருக்காலும் உன்னை என் சீடனாக ஏற்கவே இல்லை!” என்று கடுமையாகக் கூறினார்.

அதற்கு த்வைபாயனர், “மிகச் சிறந்த ஆசாரியரே! போனமுறை நான் இங்கே வந்திருந்தபோது நான் உங்களிடம் சபதம் செய்திருந்தேனே! உங்கள் மாணாக்கனாகச் சீடனாக நான் ஆகிவிடுவேன் என்று! அதை மறந்துவிட்டீர்களா? உங்கள் மாணாக்கனாக நான் இங்கிருந்து வெளியேறியதே உங்கள் ஆசைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்பதற்காகவே!” என்று மேலும் கூறினார்.

“என்ன? என் மனம் விரும்புவதை நீ பூர்த்தி செய்தாயா? நிஜமாகவா? நிச்சயமாகவா? நீ எப்போதாவது உண்மை பேசி இருக்கிறாயா? உண்மையை எப்படிச் சொல்லவேண்டும் என்பதையாவது அறிவாயா?” என்று கோபத்துடன் கேட்டார். அதற்கு த்வைபாயனர், “ஐயா, நான் பிரமசரிய விரதம் ஏற்கையில் எப்போதும் உண்மையையே பேசுவது என்று உறுதி மொழி கொடுத்திருக்கிறேன்.” என்றார். மேலும் தொடர்ந்து, “நான் அதை விடாமல் கடைப்பிடிக்கிறேன்.” என்றும் கூறினார்.

“என்ன என்ன உறுதிமொழிகளை எல்லாம் நீ எடுத்துக் கொண்டாய்?”

“எல்லா பிரமசாரிகளும் தங்கள் மறுபிறவியான உபநயனத்தின் போது என்ன என்ன உறுதிமொழிகள் எடுத்துக் கொள்வார்களோ அவை தான்!”

“இவற்றைத் தவிர வேறு ஏதேனும் உறுதிமொழிகளை நீ எடுத்துக் கொண்டிருக்கிறாயா? சபதங்கள் செய்திருக்கிறாயா?”

“ஆம், ஐயா! என் தந்தையின் ஆலோசனைப்படி, பராசர கோத்திரத்தைச் சேர்ந்த நாங்கள் அனைவரும் மேலும் ஓர் அதிகப்படியான சபதம் ஏற்றோம். அது பராசர விரதம், பராசரரின் சபதம் என்று பெயரில் உள்ளது!”

“அதை நீயும் எடுத்துக் கொண்டுள்ளாயா?”

“ஆம், ஐயா!”

“என்ன அது?”

“நான் பிறரால் ஏற்படுத்தப்படும் மனக்காயங்களிலிருந்து விலகி இருப்பேன்! அவற்றை நானும் ஏற்படுத்தமாட்டேன்!
மற்றவரின் சொத்துக்கு ஆசைப்பட மாட்டேன்!
எப்போதும் உண்மையையே பேசுவேன்; உண்மையை மட்டுமே பேசுவேன்; மற்ற எதையும் பேசமாட்டேன்!
என்னிடம் இருப்பது எத்தனை விலை உயர்ந்த பொருளானாலும் அதை மற்றவருக்குத் தேவை என்றால் அவர் தகுதி வாய்ந்தவராகவும் இருந்தால் கட்டாயம் கொடுத்துவிடுவேன்!
இளம்பெண்களைக் குறித்துப் பேசுவதைத் தவிர்த்து விடுவேன்.
பேராசையையும், பொதுவான ஆசைகள், விருப்பங்களையும் தவிர்ப்பேன். அவற்றில் மனம் வைக்க மாட்டேன்.
என் குலக் கடவுளையும், இஷ்ட தெய்வத்தையும் குலத்து முன்னோர்களையும் மதித்துப் போற்றி வணங்குவேன்!


இவற்றை எல்லாம் எனக்குப் போதிக்கும் வேதம் ஒன்றுக்காகவே அதை வாழ வைக்கவே நான் உயிர் வாழ்வேன்! வேத வாக்கு சத்திய வாக்கு என்று உணர்ந்து செயல்படுவேன். வேதத்துக்கும் இந்தப் பிரபஞ்சத்துக்கும் உள்ள தொடர்பைப் புரிந்து கொண்டு அதற்குச் சாதகமாகவே செயல்படுவேன்! அண்டத்தின் அதிசயங்களைப் புரிந்து கொள்ள உதவும் வேதங்களை என் உயிர் உள்ளவரை பாதுகாப்பேன்!”

“ஹூம், நீ சொல்வதில் ஒரு குறை உள்ளது!” என்றார் ஏளனமாக. மஹா அதர்வர் எதைக் குறிக்கிறார் என்பது புரியாமல் த்வைபாயனர் அவரைப் பார்க்க அவர் கூறினார். “நீ இங்கே வேதம், வேதம் என்றெல்லாம் கூறியது மூன்று வேதங்களைப் பற்றி மட்டுமே! இல்லையா? ஏனெனில் உன்னைப் பொறுத்தவரை வேதத்தில் மூன்றே பகுதிகள் தான்! ரிக், யஜூர், சாமம்!” என்றார்.

“இல்லை, ஆசாரியரே, நான் அப்படி நினைக்கவில்லை. அதோடு என் தந்தை பராசர முனிவர் கூறியுள்ளார்! வேதத்தின் தொகுதிகள் நான்கு என்று அவர் என்னிடம் சொல்லி இருக்கிறார். பராசர கோத்திரத்தைச் சேர்ந்த நாங்கள் அனைவரும் அதைப் புரிந்து கொண்டிருக்கிறோம். என் தந்தை எப்படிச் சொன்னாரோ அப்படியே நாங்கள் புரிந்து கொண்டிருக்கிறோம். நான் என் வாழ்க்கையை மூன்று பகுதிகளால் ஆன வேதத்துகு மட்டும் அர்ப்பணிக்கவில்லை. வேதம் மொத்தத்துக்கும் அதர்வ வேதத்தையும் சேர்த்து நான்கு வேதங்களுக்குமாக என் வாழ்க்கை நான் அர்ப்பணித்திருக்கிறேன். அதர்வ வேதம் இல்லை எனில் வைத்தியம் தான் ஏது? உடல் வேதனைகளிலிருந்து விடுதலை பெறுவது எப்படி? அரசன் ஆட்சி செய்வதும் எப்படி? ராஜரீக நீதிகள் அதில் தானே உள்ளன! அழிவிலிருந்து அரசாட்சியைக் காப்பாற்றுவது அதர்வ வேதம் தான். என் தந்தை எனக்கு அப்படித் தான் சொல்லிக் கொடுத்திருக்கிறார்.” என்றார் த்வைபாயனர். மதிப்புடனும் மரியாதையுடனும் மஹா அதர்வரைப் பார்த்துவிட்டுத் தன் தலையைக் குனிந்து கொண்டார்.

மஹா அதர்வர் மனதில்  த்வைபாயனர் இந்த விஷயத்தை எடுத்துச் சொன்ன விதம் மிகவும் கவர்ந்து விட்டது. அவர் மனம் கொஞ்சம் போல் இளகியது. என்றாலும் தன் பிடியை விடாமல், த்வைபாயனரைப் பார்த்து, “பிரமசாரி! உண்மையைச் சொல்! ஏன் நீ இங்கே திரும்பி வந்தாய்? உண்மையான காரணம் என்ன?” என்று அதட்டினார். என்றாலும் முன்னிருந்த  கடுமை கொஞ்சம் குறைந்திருந்தது. அதையும் த்வைபாயனர் கவனித்துக் கொண்டார்.

“ஆசாரியரே! நான் தான் ஏற்கெனவே உங்களிடம் சொன்னேனே! உங்கள் மரண வசிய மந்திரத்தை நீங்கள் தாராளமாக என் மேல் பிரயோகம் செய்யலாம். என்னை மரணம் சம்பவிக்கும்படி செய்யலாம். நான் ஆசிரமத்தை விட்டு வெளியேறியதன் காரணமே உங்கள் தூது முழுவதுமாக நிறைவேற வேண்டும் என்பதற்கே அன்றி வேறில்லை!”

“என்ன தூதா? நானா? என்னிடமிருந்து யாருக்குத் தூது?” ஆச்சரியம் பொங்கக் கேட்ட மஹா அதர்வர் இந்த இளைஞன் சொல்வதன் உட்கருத்து என்ன என்று யோசித்தார். அவரை ஆர்வம் தொற்றிக் கொண்டது. “என்னுடைய தூது இது தான் என்று உனக்கு எப்படித் தெரியும்? நீ எவ்வாறு அறிந்து கொண்டாய்?” “ என்ன பணியை நாம் முடிக்க இருந்தோம் என்னும் ஆர்வமும் அவரிடம் எழுந்தது! அப்போது த்வைபாயனர், “ஐயா, நான் உண்மையை வெளிப்படையாகச் சொல்லலாமா?” என்று கேட்டார். “சொல், சொல், உடனே சொல்! உண்மையை மட்டும் சொல்! அதையும் வெளிப்படையாகச் சொல்! வேறே எதுவும் சொல்லவேண்டாம்.”

“மதிப்புக்குரிய மஹா அதர்வர் தர்மக்ஷேத்திரத்தின் மேல் சாபம் இட்டிருந்தார். ஏனெனில் அங்குள்ள மூன்று வித்யா அறிந்த மஹரிஷிகளில் ஒருவரான என் கொள்ளுப்பாட்டனார் மஹா வசிஷ்ட முனியின் தலைமையில் மற்ற ஸ்ரோத்திரியர்கள் அனைவரும் ஒன்று கூடி அதர்வ வேதத்தை வேதங்களின் ஒரு பகுதியாக ஏற்க முடியாது என்று சொல்லி இருந்தனர். அதோடு யாகங்கள், யக்ஞங்கள் செய்கையில் பிரம்மனாக அமர்ந்து யாகத்தை நடத்தித் தரும் தகுதி அதர்வ வேதக்காரர்களுக்கு இல்லை என்றும் மறுத்தனர். அதர்வ வேதம் ஓதப்படுவதையும் எதிர்த்தனர். அதர்வர்களின் இந்த யாக பிரம்மா என்னும் உரிமை அடியோடு மறுக்கப்பட்டது. ஏனெனில் மூன்று வேதங்களை அறிந்த ஸ்ரோத்திரியர்கள் அனைவருமே அதர்வ வேதத்தை ஒரு வேதப் பகுதியாக நினைக்கவில்லை என்பதோடு அதை மட்டமாகவும் தாழ்வானதாகவும் அதர்வ வேதம் அறிந்தோர்களைக் கீழோராகவும் பார்த்தனர். இது தான் அப்போதைய உண்மை நிலை! இதன் காரணமாகவே தர்மக்ஷேத்திரத்துக்கு சாபமும் ஏற்பட்டது!”                                                              



Friday, July 1, 2016

மஹா அதர்வரிடம் மரணத்தை யாசிக்கும் த்வைபாயனர்!

தன்னுடைய ஆசிரமத்திலிருந்து சற்றுத் தொலைவில் அமைந்திருந்த ஓர் குகையில் அமர்ந்து தியானம் செய்வதற்காக வந்திருந்த மஹா அதர்வர் தன்னைத் துணிகளால் போர்த்திய வண்ணம் அமைதியாக அமர்ந்திருந்தார். தன்னுடைய வலிமையும் மன உறுதியும் தீர்க்கமான பார்வையும் காணாமல் போய்விட்டதோ என்று உணரும் தினங்களில் எல்லாம் அவர் இப்படி வந்து தவம் செய்ய அமர்வது உண்டு. பல வாரங்களாக அவர் ஓநாய்களின் சாம்ராஜ்யம் எனக் கருதப்பட்ட இடத்தில் நடைபெற்று வந்த விசித்திரமான சம்பவங்களில் ஆச்சரியம் அடைந்திருந்தார். தன்னுடைய தவ வலிமையால் அதைக் குறித்த உண்மையையும் முக்கியத்துவத்தையும் கண்டறிய விரும்பினார். வேட்டைக்காரர்கள் பலர் குழுக்களாக வந்து அங்கிருந்த ஓநாய்களையும் மற்ற துஷ்ட மிருகங்களையும் அங்கிருந்து விரட்டிக் கொண்டிருந்தனர். இவர்களைத் தவிர காட்டிலேயே வாசம் செய்து காட்டை நிர்வகிக்கும் ஊழியர்களில் பலரும் அங்கே வந்து ஆங்காங்கே மண்டிக்கிடக்கும் புதர்களையும், தாறுமாறாக வளர்ந்திருக்கும் காட்டுக் கொடிகளையும்,  பாதை இல்லாமல் முளைத்துக்கிடக்கும் முட்செடிகளையும், மரங்களையும் வெட்டி அப்புறப்படுத்திப் பாதையை ஏற்படுத்தினர். முக்கியமாக ஐந்து ச்யமந்தக ஏரிகளைச் சுற்றியும் உள்ள இடங்கள் நன்றாகச் சுத்தம் செய்யப்பட்டன.

அந்த ஆசிரமத்திற்கு அக்கம்பக்கம் உள்ள கிராமங்களிலிருந்து காட்டுவாசிகளிடமிருந்தும் பல மக்கள் வந்து தங்கள் வியாதிகளுக்கு மருந்து வாங்கிச் செல்வார்கள். தங்களுக்கு வைக்கப்பட்ட சூனியத்திலிருந்து யது வித்யை என்னும் மந்திர சக்தி மூலம் பாதுகாப்புத் தேடி வருபவர்கள் பலர் இருந்தனர். கிரஹங்களின் சேர்க்கைகளால் மோசமாக அவதிப்பட்டவர்கள், குடும்பத்தில் சண்டை இருந்தால் அதைத் தீர்க்க வேண்டி வந்தவர்கள், அங்கிருந்த பழங்குடியினரின் சண்டைகள் எனப் பல விஷயங்கள் அந்த ஆசிரமத்தில் விவாதிக்கப் பட்டுத் தீர்வு காண முடிந்தது. அவர்களுடைய தேவைகளை எல்லாம் மஹா அதர்வரின் சீடர்களாலேயே நிறைவேற்றப்பட்டன. அதன் பின்னர் அவர்கள் மஹா அக்னிக் குண்டத்துக்கு அருகே வந்து மஹா அதர்வரின் தரிசனமும் ஆசிகளும் பெற்றுச் செல்ல வருவார்கள். அவரைப் பார்த்தாலே கடவுள் அமர்ந்திருப்பது போல் தோன்றும். தவிர்க்க முடியாததொரு மாபெரும் சக்தி அவரிடம் இருப்பதை அனைவரும் உணர்வார்கள். அவருடைய அந்த சக்தியால் செத்தவன் உயிர் பிழைப்பான் என்றும் உயிருள்ளவன் சாவான் என்றும் அவர்கள் அறிந்து கொண்டிருந்தனர்.

சமீப காலமாக அந்தக் கிராமத்து மனிதர்கள் பல்வேறு விதமான வதந்திகளை அங்கே சொன்னார்கள். வியந்து சொன்னவர்கள் பலர்! கொஞ்சம் கூடப் பிடிக்காமல் சொன்னவர்கள் சிலர்! ஆனால் அனைவரும் ஒருமுகமாகச் சொன்னது என்னவெனில் இளம் துறவி ஒருவன் அனைத்து அதிசயங்களையும் நிகழ்த்தி வருகிறான் என்பதே! பல்வேறு விதமான சாதனைகளை அவன் எளிதாக நிறைவேற்றி வருவதாகவும் பேசிக் கொண்டனர். ஹஸ்தினாபுரத்தின் சக்கரவர்த்தி ஷாந்தனு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தான். அவனை ஒன்பது நாட்கள் மந்திர வித்தையில் இந்த இளம் முனிவன் பூரணமாய்க் குணப்படுத்தி விட்டானாம். யமனைக் கூட விரட்டி விட்டானாம். அந்த முனிவன் மரணத்தின் கடவுளான யமனை ஓட ஓட விரட்டி விட்டானாம். யமனை முறியடிக்கும் வல்லமை படைத்த அவன் யாரோ! அத்தோடு மட்டுமல்லாமல் ராஜரிகமான முடிவுகள் எடுக்கவும் நடைபெறவும் அவன் காரணமாக இருந்தானாம்.

ஆம், ஹஸ்தினாபுரத்தில் கூடிய ராஜசபையில் யுவராஜா காங்கேயன் தான் சபதங்கள் எடுத்திருப்பதாக அறிவித்திருக்கிறார். அவர் ஹஸ்தினாபுரத்தின் அரியணையின் உரிமையும் வேண்டாம்; தன் சந்ததியினருக்கும் வேண்டாம் என்று சபதம் செய்திருக்கிறாராம். அதற்காக அவர் திருமணமே செய்து கொள்ளப் போவதில்லையாம்! அவர் உயிருடன் இருக்கும் வரை ஹஸ்தினாபுரத்தின் அரியணையில் யார் வீற்றிருந்தாலும் அவர்கள் நன்மைக்காக மட்டுமே உழைப்பாராம். அவர் உடல், உயிர் இரண்டும் இனி ஹஸ்தினாபுரத்தின் மேன்மைக்காகவே தானாம். அது மட்டுமா? அவரின் சிற்றன்னை சத்யவதியின் மூத்த மகன் ஆன சித்திராங்கதனை யுவராஜா ஆக்குவதற்கு முழுச் சம்மதம் தெரிவித்து அவனும் அப்படியே யுவராஜாவாக அறிவிக்கப்பட்டிருக்கிறானாம். அதன் பின்னர் அந்த இளம் துறவி எங்கே போனான் என்று யாருக்கும் தெரியவில்லையாம். ஒரு சிலர் அவன் விண்ணில் பறந்து சென்றதைப் பார்த்ததாகக் கூறுகின்றனர். உண்மையாக இருக்குமா?

மஹா அதர்வரின் சீடர்கள் இதை ஒரு சவாலாக, ம்ஹூம், அப்படியும் சொல்ல முடியாது! தெய்வக் குற்றமாகக் கருதினார்கள். அவர்களைப்பொறுத்தவரை மஹா அதர்வர் ஒருவரே வாழ்வுக்கும், சாவுக்கும் முழு முதல் தலைவர். அவர் ஒருவரால் மட்டுமே ஒருத்தரை வாழ வைக்கவும் முடியும். இறக்க வைக்கவும் முடியும். மஹா அதர்வரின் முக்கியச் சீடர்களாலும், அவரின் மகன் சுமாந்துவாலும் இந்த விஷயங்கள் அனைத்தும் அவர் காதுகளுக்கு எட்ட வைக்கப்பட்டன. அவரையே எப்போதும் கவனித்துக் கொண்டு அங்கும் இங்கும் சுறுசுறுப்பாக வளைய வரும் அவர் அருமை மகள் வாடிகாவும் இதை உறுதிப் படுத்தினாள். இவை வெறும் வதந்திகள் என்று தள்ளுவதற்கு மஹா அதர்வரால் முடியவில்லை. அவற்றிலிருந்து தம்மை அந்நியப்படுத்திக் கொள்ள இயலவில்லை. அவர் இப்போது தன் முழு சக்தியையும் தவ வலிமையையும் பிரயோகப்படுத்தி அவர் விரும்பாத விதத்தில் மாற்றங்கள் ஓநாய்களின் சாம்ராஜ்யத்தில் ஏன் ஏற்பட்டு வருகிறது என்பதை அறிந்தாக வேண்டும். ஏன் இப்படி நடக்கின்றன என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும். இந்த மர்மத்தை அவிழ்க்க அவர் நினைத்தபோது அனைத்து முயற்சிகளும் ஒரே ஒரு திசையை நோக்கியே பயணித்தன. அது தான் அந்த இளம் துறவி, இளைஞன், பிரமசாரி த்வைபாயனன் அவர் கண்காணிப்பிலிருந்து தப்பியவன், அவரால் மரணம் அடைந்திருக்க வேண்டியவன்! அவனையே அனைத்துத் தேடுதல்களும் சுட்டிக் காட்டின.

மஹா அதர்வரின் தியானம் கலைந்தது. ஏதோ குறுக்கிட்டாற்போல் உணர்ந்தார். அந்த ஆசிரமத்துக்கு வரும் மலைப்பாதையில் தன்னந்தனியாக ஓர் உருவம் மெல்ல மெல்ல மேலேறிக் கொண்டிருந்தது அவருக்குத் தெரிந்தது. அவர் புருவங்கள் நெரிந்தன. அது யாராக இருக்கும்? த்வைபாயனனா? இத்தனைக்கும் பிறகு த்வைபாயனன் தன்னுடைய வெற்றியைக் கொண்டாட வேண்டி இங்கே வந்து என்னை அவமதிக்கும் துணிகரமான செயலைச் செய்யப் போகிறானா? வரட்டும்! இம்முறை அவர் ஒருபோதும் தவறு செய்யப் போவதில்லை! அவன் ஆசிரமத்தினுள் நுழையட்டும். அவனுக்கு உடனே மரணம் சம்பவிக்கும்படியான வசிய ஆற்றலை முறைப்படி மந்திர உச்சாடனங்களோடு செய்து முடிக்கிறேன். அவன் இறந்துவிடுவான். அது தான் சரி. அவரால் மேலே தொடர்ந்து தன்னுடைய தவத்தைத் தொடர முடியவில்லை. இந்த இளம் துறவியோடு சரியான முறையில் உரையாடி அவனை மரணத்தின் பிடியினுள் தள்ளியாக வேண்டும். அவருக்குப் பொறுமை இல்லை! அவன் வரட்டும், சீக்கிரம் வரட்டும்!

அப்போது அவர் மகன் சுமாந்து அங்கே வந்து குகையின் வாயிலில் நின்றான். உள்ளே நுழைய அனுமதி கேட்டுக் காத்திருந்தான். மஹா அதர்வருக்குள் எரிச்சல் மூண்டது. அவர் தவம் செய்கையில் யாரும் வந்து தொந்திரவு செய்வதை விரும்பவே மாட்டார். மேலும் இப்போது மிக முக்கியமான தருணம். அவர் தம் சக்தியை எல்லாம் ஒன்று திரட்டிக் கொண்டு அந்த இளைஞனை எதிர்கொள்ள வேண்டும். அவன் மேல் மரணத்துக்கான வசிய மந்திரப் பிரயோகத்தை ஆரம்பிக்க வேண்டும். இப்போது பார்த்து இடையூறு! எரிச்சலுடன் மகனைப் பார்த்தார்.

“என்ன வேண்டும் உனக்கு?” கடுமையாகக் கேட்டார். அப்போது சுமாந்து, “தந்தையே, த்வைபாயனன் திரும்பி விட்டான்!” என்று பணிவுடன் சொன்னான். தன் தந்தையின் கால்களில் விழுந்து வணங்கவும் செய்தான். “எனக்குத் தெரியும்! அந்த அற்பன் திருட்டுத்தனமாக எவரும் அறியாமல் இந்த ஆசிரமத்தை விட்டு வெளியேறினான். அவனுக்கு நம் மூதாதையரான பழமை வாய்ந்த மூத்த ரிஷிகளின் சாபம் கிடைத்துள்ளது. பிருகுவின் சாபமும், ஆங்கிரஸின் சாபமும் அவனுக்குக் கிடைத்துவிட்டது! அவனை நான் பார்க்க விரும்பவில்லை! போகச் சொல் இங்கிருந்து!” என்றார். “இல்லை தந்தையே! அவன் உங்களிடம் ஓர் உதவி கேட்டு வந்திருப்பதாகச் சொல்கிறான்!” என்று சுமாந்து கூறினான்.

“என்னிடம் உதவியா? என்னிடமிருந்து அவனுக்கு ஒரே ஒரு உதவி தான்கிடைக்கும்!” என்று கூறிய மஹா அதர்வர் ஜாடையின் மூலம் அவன் மேல் மரண வசிய மந்திரப் பிரயோகம் செய்ய இருப்பதை உணர்த்தினார். “நான் அவனிடம் ஏற்கெனவே கூறிவிட்டேன், தந்தையே! அவன் தங்கள் அதிருப்தியைச் சம்பாதித்துக் கொண்டு விட்டான் என்பதையும் நீங்கள் அவனைப் பார்க்க விரும்ப மாட்டீர்கள் என்றும் சொல்லிவிட்டேன். அவனை போகவும் சொன்னேன்!” என்று சுமாந்து கூறினான். “அதற்கு அவன் என்ன சொன்னான்?” என்று கேட்டார் மஹா அதர்வர்!

“தந்தையே! அவன் சொல்வது மிக விசித்திரமாக இருக்கிறது! நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அவனை என்ன செய்ய விரும்புகிறீர்களோ அதையே அவனும் விரும்புகிறான். அவனுக்கும் அதுவே விருப்பமாம்! நீங்கள் மரண வசிய மந்திரப் பிரயோகம் செய்து அவனை மெல்ல மெல்ல இறக்கும்படி செய்யலாம் என்று அவன் கூறுகிறான். அவனைப் போன்ற கீழ்ப்படியாத மாணவர்களுக்கு இது ஓர் பாடமாக இருக்கும் என்றும் சொல்கிறான்.” என்று சுமாந்து கூறினான். மஹா அதர்வரால் தன் காதுகளை நம்ப முடியவில்லை! “என்ன!” என்று அதிர்ந்து போனார். “அவன் மேல் நான் வசியப் பிரயோகம் செய்து அவனை இறக்க வைக்க அவன் ஒத்துக் கொள்கிறானா? உண்மையாக அவன் இதைத் தான் சொன்னானா? நீ உன் காதுகளால் இதைக் கேட்டாயா?”

“ஆம், தந்தையே! அவன் மேலும் சொன்னான். அவன் உங்கள் சீடனாம். ஆகவே தன் குருவின் ஆசை பூர்த்தியடைய வேண்டுமாம். குருவின் ஆசை பூர்த்தி அடையாமல் இருந்தால் அதை அவன் அனுமதிக்க மாட்டானாம். அவன் ஏதோ வேடிக்கைக்குச் சொல்கிறான் என்றே நினைத்தேன். ஆனால் அவன் உண்மையாகவே சொல்கிறான். மனப்பூர்வமாகச் சம்மதிக்கிறான்.”