Monday, October 10, 2016

கண்ணன் வருவான் ஏழாம் பாகம்! யுதிஷ்டிரன்!

அன்பொழுக சகோதரர்கள் ஐவரையும் பார்த்தான் கிருஷ்ணன். ரதத்தில் ஏறி பீமனுக்கும் அர்ஜுனனுக்கும் நடுவில் அமர்ந்து கொண்டான். யுதிஷ்டிரன் குதிரைகளின் முகக்கயிற்றைப் பிடித்துக் கொண்டு ரத சாரதியின் இடத்தில் துள்ளி ஏறி அமர, குதிரைகள் பிய்த்துக் கொண்டு கிளம்பின. கூட்டம் முழுவதும், “ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா!” என்று கோஷமிட்டது. கிருஷ்ணன் தன் கைகளைக் கூப்பியவண்ணம் எழுந்து நின்று தலை குனிந்த அந்த வாழ்த்துகளை ஏற்றுக் கொண்டான். ரதம் வேகமாக ஓடிக் கொண்டிருந்தது. ரதம் அந்த நகரின் வெளிப்புறத்தை அடைந்தது. யுதிஷ்டிரன் தன் கைகளில் இருந்த  முகக்கயிற்றை ரத சாரதி தாருகனிடம் கொடுத்தான். ரதத்திலிருந்து கீழே குதித்தான். பீமனும், அர்ஜுனனும் மற்ற சகோதரர்களும் யுதிஷ்டிரனைப் பின் தொடர்ந்தனர். கிருஷ்ணனும் ரதத்திலிருந்து கீழிறங்கி யுதிஷ்டிரனின் பாதங்களைத் தொட்டு வணங்கினான். யுதிஷ்டிரன் அவனை அன்போடு அணைத்துக் கொண்டு ஆசிகளைக் கூறினான். “என்றென்றும் விஜயலக்ஷ்மி உன் பக்கம் இருக்கட்டும்!” என்று தன் ஆசிகளை யுதிஷ்டிரன் தெரிவித்தான்.

பின்னர் பீமனையும் வணங்கினான் கிருஷ்ணன். பீமன் அவனை அணைத்துக் கொண்டு அப்படியே தரையிலிருந்து கிருஷ்ணனை மேலே தூக்கினான். முகம் முழுவதும் புன்னகையுடன் ஒரு குழந்தையைத் தூக்குவது போல் கிருஷ்ணனைத் தூக்கிக் கொண்ட பீமன் பின்னர் மெல்லக் கிருஷ்ணனைக் கீழிறக்கினான். மற்ற சகோதரர்களான அர்ஜுனன், நகுலன், சகாதேவன் ஆகியோர் கிருஷ்ணனின் கால்களில் விழுந்து வணங்கினார்கள். சாத்யகியும் வந்து கிருஷ்ணனை வணங்கினான். கிருஷ்ணன் அனைவரையும் தனித்தனியே அணைத்துக் கொண்டு தன் மகிழ்ச்சியைத் தெரிவித்தான். பின்னர், “ஏன் என்னை ஓர் சக்கரவர்த்தியைப் போல் நடத்துகிறீர்கள்?” என்று கேட்டான். “இம்மாதிரி சம்பிரதாயமான மரியாதைகளெல்லாம் எனக்குத் தேவையில்லை. இவை ஓர் மாபெரும் சக்கரவர்த்திக்குச் செய்ய வேண்டிய மரியாதைகளாகும். நான் எவரையும் வெற்றி கொள்ளவும் இல்லை, நான் ஓர் சக்கரவர்த்தியும் இல்லை!” என்றான் கிருஷ்ணன்.

“நீ ஓர் அரசனே, சக்கரவர்த்தியே! யார் சொன்னது நீ சக்கரவர்த்தி இல்லை என்று!” என்று கேட்டான் பீமன். “அப்படி யாரேனும் சொன்னதாகத் தெரிந்தால் அவர்கள் மண்டையை உடைத்து விட்டுத் தான் மறுவேலை!” என்றான் பீமன். யுதிஷ்டிரன் சிரித்த வண்ணம், “கிருஷ்ணா, நீ தான் எங்களுக்கு இப்போது சக்கரவர்த்தி! அது போதும் எங்களுக்கு!” என்றான். கிருஷ்ணன் அன்புடன் அனைவரையும் பார்த்துப் பிரியாவிடை பெற்று மீண்டும் ரதத்தில் ஏறிக் கொண்டான். தாருகன் குதிரைகளை விரட்டக் குதிரைகள் துவாரகை செல்லும் ராஜபாட்டையில் பீடு நடை போட்டுச் சென்றன. சகோதரர்கள் ஐவரும் ரதம் கண்களிலிருந்து மறையும் வரையிலும் அங்கேயே பார்த்தவண்ணம் நின்றிருந்தார்கள்.

யுதிஷ்டிரனுக்கு அவன் இதயத்தில் ஓர் வெற்றிடம் உருவாகி விட்டாற்போல் தோன்றியது. கிருஷ்ணன் துவாரகைக்குச் சென்று விட்டது அவனுக்கு எவருமே தன்னுடன் இல்லை போன்ற ஓர் எண்ணம் தோன்றியது. அவர்களுக்காகக் கிருஷ்ணன் என்னவெல்லாம் செய்து விட்டான்! அவர்கள் ஐவருமே கிருஷ்ணனுக்கு மிகவும் கடமைப் பட்டிருக்கின்றனர். அவர்கள் வாழ்க்கை: தற்போதைய நிலைமை; தற்போது அவர்களுக்குக் கிட்டியுள்ள அந்தஸ்து! திரௌபதியுடன் அவர்களுக்கு மணம் முடித்தது. அது மட்டுமா! அவர்களை முற்றிலும் வெறுத்து வந்த அவர்கள் தாயாதிகளான கௌரவர்களிடமிருந்து அவர்களுக்கு என உரிய ராஜ்யத்தைப் பெற்றுக் கொடுத்தது. அதில் எவ்விதமான சச்சரவும் மனக்கசப்பும் வராமல் பார்த்துக் கொண்டது. இங்கே வந்ததும் காண்டவ வனத்தை எரித்துப் புதிய நகரை நிர்மாணிக்க உதவியது. இந்திரப் பிரஸ்தத்தைக் கட்டிய பின்னர் அங்கே மக்கள் தங்கும்படியான ஏற்பாடுகளைச் செய்து தந்தது. யாதவர்களும் பாஞ்சால நாட்டு வீரர்களும் இல்லை எனில் இவை எதுவும் சாத்தியப்பட்டிருக்காது. விரைவாகவும் அழகாகவும் எல்லாவற்றையும் செய்து முடித்தனர் அவர்கள் அனைவரும்.

எரிந்து கொண்டிருந்த காண்டவ வனத்திலிருந்து அசுரன் மயனைக் காப்பாற்றியது கிருஷ்ணன் தான். அவனைக் காப்பாற்றியதோடு அல்லாமல் அவர்களுக்கென ஓர் தனித்துவம் வாய்ந்த அரச சபாமண்டபத்தை நிர்மாணித்துக் கொடுக்கவும் அரசமாளிகையை நிர்மாணித்துக் கொடுக்கவும் அவனிடம் சத்தியமும் வாங்கிக் கொண்டு அதன்படியே செய்து முடித்தான் கிருஷ்ணன். இம்மாதிரியான சித்திர, விசித்திரமான மாளிகையை இன்று வரை எவரும் பார்த்ததில்லை என்னும்படி அதிசயங்கள் நிறைந்தது அது! கிருஷ்ணன் தலையிடவில்லை எனில் தாயாதிச் சண்டை கட்டாயம் ஏற்பட்டிருக்கும். உறவினர்கள் பலரும் போரில் கலந்து கொண்டு எந்தப்பக்கம் போரிடுவது என்று திகைத்து மயங்கி இருப்பார்கள். துரியோதனன் மட்டும் அவர்களுக்கு என உள்ள உரிமைகளைக் கொடுக்க மறுத்திருந்தால் யுதிஷ்டிரன் நீங்கலான சகோதரர்கள் நால்வரும் துரியோதனனிடம் போரிடத் தயங்கி இருக்க மாட்டார்கள்.

யுதிஷ்டிரன் மட்டும் சம்மதிக்கவில்லை எனில் பீமனோ அர்ஜுனனோ ஹஸ்தினாபுரத்தை விட்டு நீங்குவதற்கோ இந்திரப் பிரஸ்தத்தில் புதிய நகரை நிர்மாணித்துக் கொண்டு அரசாட்சி புரியவோ சம்மதமே கொடுத்திருக்க மாட்டார்கள். யுதிஷ்டிரன் சம்மதித்ததோடு அல்லாமல் கிருஷ்ணன் விடவில்லை. அவர்களிடமும் பேசிச் சம்மதிக்க வைத்தான். இப்போது கவலை ஏதும் இல்லை. எல்லா விஷயங்களும் நன்றாகவே முடிந்து விட்டன. இந்திரப்பிரஸ்தம் அரச தர்மத்திற்கும் அரச நீதிக்கும் ஓர் சாட்சியாக அனைவரையும் கவரும் வண்ணம் பெருமை பெற்றுச் சிறக்கப் போகிறது. ஏற்கெனவே இதன் சிறப்பு வெளியே பரவி வருகிறது. ஹஸ்தினாபுரத்து மக்கள் கூட இந்திரப் பிரஸ்தத்தின் சிறப்புக் குறித்து அறிந்து கொண்டு அங்கிருந்து வந்து இங்கே குடியேறி வருகின்றனர்.

கிருஷ்ணன் இங்கிருந்து சென்றதுடன் தங்கள் தனிப்பட்ட உறவுகளிடம் கூட மாற்றங்களை எதிர்பார்த்தான் யுதிஷ்டிரன். ஏனெனில் கிருஷ்ணன் இங்கிருந்தவரையில் அவனுடைய கருத்துகளின் தாக்கமே அதிகமாக இருந்தது. கிருஷ்ணனின் ஆளுமையை அனைவரும் உணர்ந்திருந்தனர். ஆகவே அவன் இங்கிருந்தவரை மனித உறவுகள் நடந்து கொண்ட முறைக்கும் கிருஷ்ணன் இல்லாதபோது நடந்து கொள்ளப் போகும் முறைக்கும் நிச்சயமாக மாற்றங்கள் தெரியும். தெளிவான கண்ணோட்டம் தேவைப்படும். சூழ்நிலைகளில் அபிலாஷைகளின் தாக்கம் அதிகரிக்கலாம். இப்போது கிருஷ்ணன் இல்லை என்பதால் அதில் ஏற்படும் மாற்றங்கள் என்னவென்பதைக் கண்காணிக்க வேண்டும்.

யுதிஷ்டிரன் மேலும் யோசித்தான். எத்தகைய விசித்திரமான சூழ்நிலைகளிலும், சந்தர்ப்பங்களிலும் ஐவரும் எதிர்கொண்டு ஜெயித்து வந்திருக்கிறார்கள் என்பதை நினைவு கூர்ந்தான். அவர்கள் பக்கம் எவ்வித முயற்சிகளும் சரியாக எடுக்கப்படாவிட்டாலும் கூட கடவுளின் கருணையால் ஒவ்வொன்றிலிருந்தும் தப்பி வந்திருக்கின்றனர். அவர்களிடையே உள்ள ஒற்றுமை ஒன்றே அவர்கள் ஐவரையும் ஒருசேரப் பிணைத்திருந்தது. அதனாலேயே அவர்களால் அனைத்தையும் எதிர்கொள்ள மனோ பலமும் கிடைக்கப் பெற்றிருந்தனர். இது குந்தி தேவியின் சமயோசிதமான புத்தியால் ஏற்பட்ட ஒற்றுமை.  அவர்கள் அனைவரும் குழந்தைப்பருவத்திலேயே ஹஸ்தினாபுரம் அழைத்து வரப்பட்டபோது அவள் அவர்கள் ஐவரிடமும் ஓர் உறுதிமொழி வாங்கிக் கொண்டிருந்தாள். அது தான் அவர்கள் ஐவரும் எப்போதும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்பதோடு அனைத்தையும் சமமாகப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுவும். அதோடு இல்லாமல் யுதிஷ்டிரன் அனைவரையும் விடப் பெரியவன் என்பதால் அவன் மற்ற சகோதரர்களுக்குத் தந்தைக்குச் சமமானவன். அவனும் மற்ற சகோதரர்களைத் தன் சொந்தக் குழந்தைகளைப் போலவே பார்க்க வேண்டும்; நடத்த வேண்டும். யுதிஷ்டிரனுக்கு ஏதேனும் ஆபத்து நேர்ந்தால் மற்ற சகோதரர்கள் தங்கள் உயிரைக் கொடுத்தாவது அவனைக் காப்பாற்ற வேண்டும்.

Thursday, September 29, 2016

கண்ணன் வருவான், ஏழாம்பாகம்! கண்ணனுக்குப் பிரியாவிடை!

திரு முன்ஷி அவர்கள் என்ன எழுதி இருக்கிறாரோ, எந்த வரிசையில் எழுதி இருக்கிறாரோ அப்படித் தான் நான் எழுதி வருகிறேன். மஹரிஷிகளில் நான் வியாசன் என்று கீதையில் கண்ணன் சொல்லி இருப்பதாக வருகிறது. ஆகவே தான் சென்ற பாகத்தில் வியாசரின் பங்கைக் குறித்துப் பார்த்தோம். வியாசாய விஷ்ணு ரூபாய! என்பதும் அனைவரும் அறிந்ததே! இதில்  என் சொந்தக் கற்பனை ஏதும் இல்லை. திரு முன்ஷி அவர்கள் எழுதி இருப்பது தான்! இப்போது யுதிஷ்டிரனின் வாழ்க்கை மூலம் கண்ணனின் பங்கைச் சொல்ல நினைக்கிறார் முன்ஷி. அதைத் தான் நான் எழுதப் போகிறேன். படிக்கிறவங்க மட்டும் மனதைத் திடம் செய்து கொண்டு படிக்கவும். நன்றி. இதை எழுதுவது “கீதா சாம்பசிவம்” ஆகிய நான் என்று நினைக்காமல் முன்ஷி ஜி சொல்லி இருப்பதைப் படிக்கிறோம் என்று நினைத்துக் கொண்டு படிக்கவும். கடைசி பாகம் குருக்ஷேத்திரத்தோடு பாதியில் நின்று விடும். அப்போதும் கதை முடியவில்லை என்று நினைக்க வேண்டாம். கிட்டத்தட்ட இது பாகவதமும், பாரதமும் கலந்தது தான். மஹாபாரதத்தில் கண்ணனின் பங்கு மிகப் பெரியது! அதை ஒரு வரிக்குள் அடக்க முடியாது. இனி நம் கதைக்குச் செல்வோம். இந்திரப் பிரஸ்தத்தை நோக்கிச் செல்வோம்.

இந்திரப் பிரஸ்தம்! நகர் முழுவதும் மிகச் சிறப்பாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. மக்கள் அரச மாளிகையில் நிலா முற்றத்திலும் மற்றும் ராஜ வீதியின் தெருவோரங்களிலும் வரிசையாக நின்று கொண்டிருந்தார்கள். கண்ணன் இன்று துவாரகைக்குத் திரும்புகிறான். அவனுக்குப் பிரிவுபசார விழா! பாண்டவர்களை ஹஸ்தினாபுரத்திலிருந்து திருதராஷ்டிரன் வெளியேற்றியதும், அவர்களை இந்திரப் பிரஸ்தத்தில் நகரை நிர்மாணிக்கச் சொல்லியும் காண்டவ வனத்தை அழிப்பதில் உதவி செய்தும் கண்ணனும் யாதவத் தலைவர்கள் பலரும் ஈடுபட்டார்கள். அவர்களில் சிலர் துவாரகைக்கு ஏற்கெனவே சென்று விட கண்ணனும் மீதம் இருந்த யாதவத் தலைவர்களும் இன்று துவாரகை திரும்ப இருக்கின்றனர். மிகப் பிரமாதமாகப் பெரிய அளவில் பிரிவுபசார விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஆசாரிய தௌம்யர் தன் சீடர்களோடும் மற்ற ஸ்ரோத்திரியர்களோடும் அங்கே நின்று கொண்டிருந்தார். விடைபெற்றுச் செல்லும் விருந்தாளிகளுக்குத் தூவி ஆசிகளை வழங்கத் தயாராக அவர் கையிலும் மற்றவர்கள் கைகளிலும் அக்ஷதை இருந்தது. யுதிஷ்டிரன் கிருஷ்ணனை அவன் ரதத்தின் அருகே அழைத்து வந்து கொண்டிருந்தான். கண்ணன் ஏறி அமர்ந்ததும் ரதத்தில் பூட்டப்பட்டிருந்த குதிரைகளை விரட்டத் தயாராக ரத சாரதி தாருகன் காத்திருந்தான். கைகளில் குதிரைகளைப் பூட்டி இருந்த கயிறுகளை இழுத்துப் பிடித்திருந்தான். அதையும் மீறிக் குதிரைகள் பரபரத்துக் கொண்டிருந்தன. சாத்யகியின் ரதத்தில் கிருஷ்ணனின் ஆயுதங்கள் எல்லாம் அதனதன் இடங்களில் வைக்கப்பட்டிருந்தன. ஆனால் சாத்யகி அர்ஜுனனிடம் வில் வித்தை பயின்று தேர்ச்சி அடைவதற்காகச் சில நாட்கள் இந்திரப் பிரஸ்தத்தில் தங்கிச் செல்ல இருந்தான். கிருஷ்ணன் மாளிகை வாயிலுக்கு வந்தான். “ஜெய் ஶ்ரீ கிருஷ்ணா” என்னும் கோஷம் உரக்க ஒலித்தது. அதைக் கண்ட கிருஷ்ணன் தன் இருகைகளையும் கூப்பி மக்களை வணங்கினான்.

கிருஷ்ணன் வழக்கம் போல் தன் மஞ்சள் வண்ணப் பீதாம்பரத்தை அரையில் உடுத்தி இருந்தான். தங்கச் சரிகை வேலைப்பாடு செய்த உருமாலைத் தோளில் வீசி இருந்தான். அவன் கழுத்தில் அணிந்திருந்த ரத்தினமாலை சூரிய ஒளி பட்டுப் பிரகாசித்தது. அவன் தலையில் அணிந்திருந்த கிரீடத்தின் மேல் ஓர் அழகான மயிலிறகைச் சூடி இருந்தான். கிருஷ்ணன் யுதிஷ்டிரனையும், பீமனையும் விடச் சிறியவன். ஆனால் அர்ஜுனனுக்கு ஒரு வயது பெரியவன். என்றாலும் வயது அவன் முகத்திலோ உடலிலோ தன் அடையாளங்களைப் பதிக்கவில்லை! இளமையாகவே இருந்தான். அப்போது ஆசாரிய தௌம்யர் அங்கே வந்து கிருஷ்ணன் கிளம்புவதற்கான நல்ல நேரம் நெருங்கிவிட்டதாய்க் கூறினார். தன் அத்தை குந்தியின் கால்களில் விழுந்து வணங்கிய கிருஷ்ணன், திரௌபதியைப் பார்த்து அன்பான புன்னகை புரிந்து  விடைபெற்றான். தன் சின்னத் தங்கை, அருமைத் தங்கை இப்போது அர்ஜுனனின் மனைவியாக ஆகி இருப்பவள் சுபத்ராவின் சோகம் தோய்ந்த முகத்தைத் தூக்கிப் பார்த்துப் புன்னகை புரிந்தான். அவள் கன்னத்தில் குறும்புடன் தட்டிக் கொடுத்தான். பின்னர் ஐந்து சகோதரர்களையும் அவரவர் கன்னங்களில் தட்டிக் கொடுத்தும், அழுத்திக் கொடுத்தும் அவர்களிடமிருந்து பிரியாவிடை பெற்றான்.

சுபத்ராவைப் பார்த்து, “சுபத்ரா, அர்ஜுனனைக் கடத்துவதற்காக நீ என் ரதத்தைத் திருடினாய் அல்லவா? அதை நான் இப்போது திரும்பிப் பெறலாமா?” என்று கேட்டான். சுபத்ராவுக்கு நாணம் மீதூறியது. மெல்லத் தன் கண்களை மட்டும் மேலே தூக்கித் தன் அருமை அண்ணனைத் தான் சிறு வயதிலிருந்தே பார்த்துப் பார்த்து பிரமித்தவனை, தன் அன்புக்குரியவனைப் பார்த்தாள். பீமனும் அர்ஜுனனும் கிருஷ்ணனுக்கு இருபக்கங்களிலும் நடந்து வந்தார்கள். நகுலனும், சஹாதேவனும் சாத்யகியுடன் பக்கவாட்டில் வந்தனர். ரதத்தை நெருங்கினார்கள். யுதிஷ்டிரன் அப்போது, “நில், கிருஷ்ணா, கொஞ்சம் பொறு. உனக்கு ஒரு ஆச்சரியம் காத்திருக்கிறது!” என்ற வண்ணம் கிருஷ்ணனின் கைகளைப் பிடித்துக் கொண்டான். “என்ன அது?” என்று வியப்புடன் கேட்டான் கிருஷ்ணன். “இன்னும் சிறிது நேரத்தில் உனக்குத் தெரியவரும்!” என்றான் யுதிஷ்டிரன் புன்னகையுடன். பின்னர் யுதிஷ்டிரன் தாருகனை குதிரைகளைக் கட்டி இருக்கும் ரதத்தின் முகக் கயிறுகளைத் தன்னிடம் கொடுக்கச் சொன்னான். தாருகனைக் கீழே இறங்கச் சொன்ன யுதிஷ்டிரன் தான் அந்த இடத்தில் அமர்ந்தான். “நான் தான் உன் ரதத்தை உனக்காக ஓட்டப் போகிறேன்.” என்றான் யுதிஷ்டிரன்.

“என்ன இது?” என்று உண்மையான ஆச்சரியத்துடன் கேட்டான் கிருஷ்ணன். “என்னை ஒரு கேள்வியும் கேட்காதே கிருஷ்ணா! நீயே இன்னும் சற்று நேரத்தில் தெரிந்து கொள்வாய்!” என்று சொன்னான் யுதிஷ்டிரன். பின்னர் யுதிஷ்டிரன் ஒரு சைகை செய்ய பீமன் குதித்து ரதத்தில் ஏறிச் சாமரத்தைத் தன் கைகளில் எடுத்துக் கொண்டான். அர்ஜுனனோ ஒரு குடையை விரித்துக் கிருஷ்ணன் தலைக்கு மேல் பிடித்தான். “சரி, இப்போது ரதத்தில் ஏறு, கிருஷ்ணா!” என்றான் யுதிஷ்டிரன். “ஆனால், இதெல்லாம் என்னப்பா?” என்று கேட்டான் கிருஷ்ணன். “உங்கள் அன்பு வெள்ளத்தில் என்னை மூழ்கடித்து விட்டீர்கள். ஆனால் இத்தகைய மரியாதைகளுக்கு எல்லாம் நான் தகுதியானவனே அல்ல! நான் ஓர் அரசன் இல்லை, சாமானியன், சக்கரவர்த்தியும் அல்ல! அதற்கும் கீழானவனே!” என்றான் கண்ணன். “சரி, சரி, கிருஷ்ணா, நீ இப்போது நீயாகவே ரதத்தில் ஏறப் போகிறாயா? இல்லை எனில் நான் உன்னைத் தூக்கி உட்கார வைக்கவா?” என்று பயமுறுத்தினான் பீமன்.

Wednesday, September 28, 2016

கண்ணன் வருவான், ஏழாம் பாகம் யுதிஷ்டிரர்!

 முதலில் கொஞ்சம் பூர்வ கதையைப் பார்ப்போமா! இந்தக் கண்ணன் தொடர்களின் கடைசிப் புத்தகம் இந்த யுதிஷ்டிரர் பற்றிய புத்தகமும் அதோடு இணைந்துள்ள குருக்ஷேத்திரம் குறித்த பாகமும். குருக்ஷேத்திரம் என்னும் பெயரில் தனிப்புத்தகம் இருப்பதாக நினைத்தேன், இல்லை, இதிலேயே சுமார் 145 பக்கங்கள் யுதிஷ்டிரர் குறித்து வந்த பின்னர் இதன் கடைசிப் பாகம் குருக்ஷேத்திரம் மட்டும் பதின்மூன்றே அத்தியாயங்கள் எழுதப்பட்டு அதையும் இதில் சேர்த்திருக்கின்றனர். திரு கே.எம்.முன்ஷிஜி அவர்கள் இந்தத் தொடரை எழுத ஆரம்பிக்கையில் குருக்ஷேத்திர யுத்தகளத்தில் கண்ணனின் விஸ்வரூபமும் கீதோபதேசம் குறித்தும் எழுதிக் கண்ணன் எப்படி சாஸ்வத தர்ம கோப்தா(saswata dharma gopta)வாக அர்ஜுனனுக்குக் காட்சி கொடுத்தார் என்பதை விவரிக்கும் ஆசையுடன் அதைக் குறித்து முன்னுரையில் குறிப்பிட்டிருக்கிறார். ஆனாலும் கூடவே இதைக் குறித்து நான் எழுதுவதும் அவன் விருப்பமே! அவன் விருப்பம் இருந்தால் நான் நிச்சயம் அதை விவரித்து எழுதுவேன் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். கண்ணன் விருப்பம் அப்படி அல்ல என்றே ஆகி இருக்கிறது.

குருக்ஷேத்திரம் குறித்துப் பதின்மூன்று அத்தியாயங்கள் எழுதிய முன்ஷிஜி மேற்குறிப்பிட்ட வார்த்தைகளை ஜனவரி 26 ஆம் தேதி 1971 ஆம் வருடம் குறிப்பிட்டுச் சொல்லி இருக்கிறார். திடீரென பிப்ரவரி எட்டாம் தேதி  1971 ஆம் வருடம் இறந்து விட்டார். ஆகவே அதை எட்டாம் பாகமாகத் தனியாக வெளியிடாமல் இந்தப் புத்தகத்திலேயே அந்தப் பதின்மூன்று அத்தியாயங்களும் சேர்க்கப் பட்டுள்ளன. இப்போது கொஞ்சம் முன் கதையைப் பார்த்துக் கொள்வோம்.

பரதகுலப் பேரரசன் ஷாந்தனுவுக்கு மூன்று மகன்கள். கங்கையின் மூலம் தேவவிரதன் எனப்படும் காங்கேயன், சத்யவதி மூலம் சித்திராங்கதன், விசித்திர வீரியன். இதிலே பீஷ்மர் என்றழைக்கப்பட்ட தேவவிரதன் தன் தம்பிகளுக்காகத் தன் அரியணை உரிமையைத் துறந்து வாழ்ந்து வந்தார். ஆனால் சித்திராங்கதனும், விசித்திர வீரியனும் சிறு வயதிலேயே இறந்து விட்டார்கள். சித்திராங்கதன் திருமணம் செய்து கொள்ளாமலேயே இறக்க, விசித்திர வீரியன் இரு இளவரசிகளைத் திருமணம் செய்த பின்னர் நோய்வாய்ப்பட்டு இறந்தான். ஆகவே ஆரியர்களின் பழமையான சம்பிரதாயங்களின்படி நியோக முறைப்படி விசித்திர வீரியனின் இரு மனைவியரும் முறையே இரு பிள்ளைகளைப் பெற்றெடுத்தனர். அதில் அம்பிகை என்னும் இளவரசியின் மகன் பிறவிக்குருடாகப் பிறந்துவிட, அம்பாலிகாவின் பிள்ளை பிறவியிலேயே பலஹீனமுள்ளவனாகப் பிறக்கிறான். இந்த இருவருக்கும் புத்திர தானம் செய்தவர் சத்யவதியின் முதல் பிள்ளையான க்ருஷ்ண த்வைபாயனர் என்னும் வேத வியாசர்.

இவர் பராசரமுனிவருக்கும், மச்சகந்தி என அப்போது அழைக்கப்பட்ட மீனவப் பெண்ணிற்கும் பிறந்தவர். பராசர முனிவர் முக்காலமும் அறிந்தவர். ஒரு முறை யமுனையைக் கடக்கையில் விண்ணில் தோன்றிய கிரஹச் சேர்க்கையைக் கண்டறிந்த அவர் இப்போது தன் மூலம் ஒரு பிள்ளை ஜனித்தால் அது மிகவும் புகழுடனும், ஞானத்துடனும், அனைவராலும் போற்றி வணங்கக்கூடிய தெய்விகத் தன்மையுடனும் இருப்பான் என்பதைத் தெரிந்து கொண்டார். ஆனால் உடனடியாக விந்து தானம் செய்ய அப்போது எதிரே மச்சகந்தியைத் தவிர வேறு எவரும் இல்லை. ஆகவே அவர் மச்சகந்தியிடம் தன் நோக்கத்தைச் சொல்ல, முதலில் பயந்த அவள் பின்னால் தன் கற்புக்குக் களங்கம் நேராது என்று தெரிந்து கொண்டு சம்மதிக்கிறாள். அந்த யமுனை நதியிலேயே ஒரு தீவில் அவளுடன் கூடுகிறார் பராசரர். உடனே பிள்ளையும் பிறக்கிறது. மஹாபாரதக் கதைப்படி அந்தப் பிள்ளை உடனே வளர்ந்து தந்தையுடன் சென்று விடுவான். ஆனால் நம் கதையில் ஐந்து வயது வரை தாயிடம் வளர்ந்து பின்னர் தந்தையால் அழைத்துச் செல்லப்படுகிறான் இந்தக் குழந்தையே பின்னால் வேதங்களைத் தொகுத்து வேத வியாசர் என்னும் பெயர் பெற்று ஆரியவர்த்தம் முழுமைக்கும் ஆசாரியராய் குருவாய் விளங்கினார்.

இங்கே ஹஸ்தினாபுரத்தில் திருதராஷ்டிரன் பிறவிக்குருடு என்பதால் அரியணை ஏற முடியாது என்று சாஸ்திர சம்பிரதாயங்களின் படி முடிவானதால் பாண்டு அரியணை ஏறுகிறான். ஆனால் சில காலமே அரியணையில் இருந்த பாண்டு தன் பலஹீனமான உடல் நலத்தால் மனம் வெறுத்துப் போகிறான். அவனால் மனைவியுடன் சுகித்து இருக்க முடியாமல் சாபம் வேறு குறுக்கிடவே இமயமலைப் பகுதிக்குச் சென்று விடுகிறான். அவன் இரு மனைவியரும் அவனுடன் செல்கின்றனர். திருதராஷ்டிரனுக்குப் பல பிள்ளைகள் பிறக்கின்றனர். அவன் மனைவி காந்தார தேசத்து இளவரசி காந்தாரி. அவள் சகோதரன் ஷகுனியும் அவளுடன் ஹஸ்தினாபுரத்திலேயே வாழ்வதற்கு வந்திருக்கிறான். இந்த ஷகுனி ஹஸ்தினாபுரத்துக் கௌரவர்களிடையே பிரிவினையைத் தூண்டி விடுகிறான். காட்டுக்குச் சென்ற பாண்டு தன் மனைவியர் இருவருக்கும் குழந்தைகள் மேல் இருக்கும் ஆசையைக் கண்டு இருவரையும் நியோக முறையில் குழந்தை பெற்றுக்கொள்ள அனுமதி கொடுக்கிறான் குந்தி என்னும் முதல் மனைவிக்கு யுதிஷ்டிரன், பீமன், அர்ஜுனன் என்னும் மூன்று பிள்ளைகள் பிறக்க மாத்ரி என்னும் இரண்டாம் மனைவிக்கு நகுலன், சஹாதேவன் என்னும் இரட்டையர் பிறக்கின்றனர்.

ஒரு மயக்கும் பொழுதில் தன் இளைய மனைவி மாத்ரியுடன் கூட நினைத்த பாண்டு அக்கணமே இறந்து போகத் தன் கணவன் சாவுக்குத் தானே காரணம் என்று மாத்ரியும் உடன் கட்டை ஏறி விடுகிறாள். செய்வதறியாது திகைத்த குந்தி வியாசரை வரவழைத்து ஆலோசனை கேட்டுக் கொண்டு ஹஸ்தினாபுரம் திரும்ப முடிவெடுக்கிறாள். இந்தச் செய்தி ஹஸ்தினாபுரத்தையும் சென்றடைய அங்கே பாண்டவ புத்திரர்களைக் கோலாகலமாக வரவேற்க ஏற்பாடுகள் செய்யப்படுகிறது, பாண்டு இறந்து போனதால் அவன் மூத்த பிள்ளை யுதிஷ்டிரனே அடுத்த அரசனாக வேண்டும் என்றும் முடிவு செய்யப்படுகிறது. கௌரவ சகோதரர்களுக்கு இது பிடிக்கவில்லை. நியாயமாகப் பார்த்தால் தங்கள் தந்தை தான் அரியணை ஏறி இருக்க வேண்டும். ஆனால் அவர் குருடாகப் போய் விட்டார். இருந்தாலும் தனக்குத் தான் பட்டம் கட்ட வேண்டும் என்றே துரியோதனன் எதிர்பார்த்தான். தன் மாமன் ஷகுனியைப் பிதாமகர் பீஷ்மரைக் கண்டு பேச அனுப்பி வைக்கிறான். பீஷ்மர் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை.

மஹாராணி சத்யவதி தன் இரு மருமகள்களுடன் கோதுலி ஆசிரமத்திற்கு வானப்பிரஸ்தமாகச் சென்று விட இங்கே அனைவரையும் சமாளிக்கும் பொறுப்பு பீஷ்மரின் தலையில் விழுகிறது. ஏற்கெனவே க்ருபாசாரியார் என்னும் ஆசாரியர் குரு வம்சத்தின் குருவாக இருந்து வர அவருடைய சகோதரியின் கணவனும் பரசுராமரின் சீடருமான துரோணாசாரியாரைப் பாண்டவர்களுக்கும் கௌரவர்களுக்கும் ஆசாரியராக நியமிக்கிறார் பீஷ்மர். பாண்டவர்கள் அனைத்திலும் சிறந்து விளங்குகின்றனர். அவர்களின் நேர்மையான போக்கும், பெருந்தன்மையான குணமும், இனிமையான நடத்தையும் அனைவரையும் கவர்கின்றது. அதோடு ஆயுதப் பயிற்சியிலும் தேர்ந்து விடுகின்றனர். ஒவ்வொருவரும் ஒவ்வொரு துறையில் மிகச் சிறப்பான பயிற்சி பெறுகின்றனர்.

துரியோதனனும் ஆயுதப் பயிற்சியை நன்றாகச் செய்து சிறப்பாக விளங்கினாலும் வில் வித்தையில் அர்ஜுனனைத் தோற்கடிக்க அவனால் முடியவில்லை. அதற்குத் தன் சிநேகிதனான தேரோட்டி மகன் கர்ணனையே நம்புகிறான். கர்ணனும் துரோணாசாரியாரிடம் வில் வித்தை பயின்றாலும் துரோணாசாரியார் அர்ஜுனனிடம் காட்டிய அளவுக்கு ஈடுபாடு கர்ணனிடம் காட்டவில்லை. தான் ஓர் சூத புத்திரன் என்னும் எண்ணம் ஒரு பக்கம் கர்ணனை வாட்டி வதைக்க மறுபக்கம் தான் அர்ஜுனனை மிஞ்ச வேண்டும் என்னும் எண்ணமும் தோன்றுகிறது. அதற்குள்ளாக யுவராஜா யுதிஷ்டிரனையும், அவனுடன் அவன் சகோதர்கள் நால்வரையும் அவர்கள் தாய் குந்தியுடன் வாரணாவதம் என்னும் இடத்திற்குத் தன் சூழ்ச்சி மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்கிறான் துரியோதனன். வாரணாவதத்தில் அரக்கினால் ஓர் மாளிகை கட்டி அதில் பாண்டவர்கள் ஐவரையும் அவர்கள் தாயுடன் உயிருடன் எரிக்க வேண்டும் என்பதே அவன் முடிவு.

இந்தச் சூழ்ச்சி குறித்துப் பாண்டு மற்றும் திருதராஷ்டிரன் ஆகியோரின்  சகோதரரும் அம்பிகா, அம்பாலிகாவின் பணிப்பெண்ணால் பெற்றெடுக்கப்பட்டவருமான விதுரருக்குத் தெரிய வர அவர் அந்த மாளிகையின் கீழ் சுரங்கம் வெட்டுவித்து அனைவரையும் தப்புவிக்கிறார். ஆனால் இது தெரியாத துரியோதனன் அவர்கள் இறந்தார்கள் என்று எண்ணி நிம்மதியாக பாஞ்சால நாட்டின் அரசன் தன் மகள் திரௌபதிக்காக ஏற்பாடு செய்த சுயம்வரத்திற்குச் செல்கிறான். ஆனால் ஐந்து சகோதரர்களும் வாரணாவதத்திலிருந்து தப்பிச் சென்று ராக்ஷஸ வர்த்தம் சென்று அங்கே பீமன் ஹிடிம்பனைக் கொன்று விட்டு அவன் சகோதரி ஹிடிம்பியைத் திருமணம் செய்து கொண்டு கடோத்கஜன் என்னும் பெயரில் ஓர் பிள்ளையும் பெறுகிறான்.

குந்தியின் சகோதரன் ஆன வசுதேவரின் எட்டாவது பிள்ளையான கண்ணன் பாண்டவர்களுக்குச் சகோதரன் முறை, ஆகவே பாண்டவர்கள் அனைவரிடமும் அன்புடன் பழகுவதோடு அர்ஜுனனிடம் தனியான அன்பும் செலுத்துகிறான் கிருஷ்ணன். அவன் பாண்டவர்களின் நலத்தைத் தன் சொந்த நலமாகக் கருதி அவர்களைப் பாதுகாத்து வருகிறான், ராக்ஷஸவர்த்தத்தில் பாண்டவர்கள் இருப்பதை அறிந்த கண்ணன் உத்தவனை அனுப்பி அவர்களைச் சுயம்வரத்தில் கலந்து கொள்ளப் பாஞ்சாலம் வரும்படி கிருஷ்ணன் சொல்ல ஐவரும் பாஞ்சாலம் வருகின்றனர். அர்ஜுனன் சுயம்வரத்தில் வெற்றி கொண்டு திரௌபதியை மனைவியாக அடைகிறான். ஆனால் குந்தி தவறாகச் சொன்ன ஓர் வார்த்தையால் திரௌபதி வேத வியாசர் மற்றும் கிருஷ்ணனின் யோசனையைக் கேட்டுக் கொண்டு ஐந்து சகோதரர்களையும் மணந்து கொள்கிறாள். இப்போது துருபதனின் பலமும் சேர யுதிஷ்டிரன் பலம் பொருந்தியவனாய்த் திரும்பி வர திருதராஷ்டிரனால் ஏதும் சொல்ல முடியாமல் போகிறது. ஆனாலும் ஹஸ்தினாபுரத்திலேயே அவர்கள் தொடர்ந்து இருந்தால் தன் பிள்ளைகளுக்கும் அவர்களுக்கும் இடையில் நடைபெறும் சண்டைகளை யோசித்து திருதராஷ்டிரன் யுதிஷ்டிரனைத் தன் சகோதரர்களை அழைத்துக் கொண்டு ஹஸ்தினாபுரத்தை விட்டுச் சென்றுவிடும்படி வற்புறுத்துகிறான்.

அங்கே காண்டவ வனத்தை அழித்து இந்திரப் பிரஸ்தம் என்னும் பெயரில் ஓர் புதிய நகரைக் கண்ணன் ஆலோசனையின் பேரில் எழுப்புகிறார்கள் பாண்டவர்கள் ஐவரும். ஹஸ்தினாபுரத்தில் இருந்த பலரும் யுதிஷ்டிரனுக்குக் கீழ் வாழ விரும்பி இங்கே வருகின்றனர். யுதிஷ்டிரனை அங்கே சக்கரவர்த்தியாகப் பிரகடனம் செய்து வாழ்த்துகின்றனர் வேத வியாசரும், கண்ணனும். பின்னர் வியாசர் தர்மக்ஷேத்திரம் சென்றுவிட, கண்ணன் துவாரகை திரும்புகிறான். கண்ணனைப் பிரிய மனமில்லாமல் விடை கொடுக்கின்றனர் பாண்டவர்கள். இதன் பின்னர் தொடர்கிறது நம் கதை!

Tuesday, September 27, 2016

தர்ம சாம்ராஜ்யத்தை ஸ்தாபிப்பேன்!

“ம்ம்ம்ம், இது எவ்விதத்திலாவது குரு வம்சத்துப் பெண்டிரைப் பாதிக்குமா, அம்மா? அப்படிப் பாதித்தால் அது எங்கனம் நடைபெறும்?” என்று தன் தாயிடம் கேட்டார் த்வைபாயனர். “அப்படி ஏதும் தெரியவில்லை, மகனே! நான் சந்தித்தவர்கள் எல்லோருமே பாண்டவ புத்திரர்களை முழு மனதோடு ஆதரிக்கின்றனர்.” என்று கூறிய சத்யவதி தன் கண்களைச் சிறிது மூடிக் கொண்டு ஏதோ பழைய காட்சிகளை மனக்கண்ணில் கொண்டு வந்து பார்ப்பவள் போல் காணப்பட்டாள். பின்னர் தொடர்ந்து தனக்குள்ளே முணுமுணுக்கும் பாவனையில், “ஹூம், இந்தக் குரு வம்சத்தின் அதிகாரத்தையும் ஆட்சி புரியும் சக்தியையும் வலிமை பெறச் செய்யப் போவதாக நான் தான் நினைத்துக் கொண்டிருந்தேன். எவ்வளவு முட்டாள் நான்! கனவுகளிலேயே வாழ்ந்திருக்கிறேன்!” என்று அலுப்புடன் கூறினாள்.

தன் தாயின் நெற்றியின் மேல் மிருதுவாகக் கையை வைத்தார் த்வைபாயனர். நெற்றி நெருப்பாய்ச் சுட்டுக் கொண்டிருந்தது. மெல்லத் தடவிக் கொடுத்தவர், “அப்படி எல்லாம் பேசாதீர்கள், அம்மா! நீங்கள் ஒரு அசையாத் தூண் போல் ஸ்திரமாக நின்று காங்கேயருக்கு முழு ஆதரவு கொடுத்திருக்கிறீர்கள். அதோடு இல்லாமல் குரு வம்சத்தினரிடையே உங்களுக்கு உள்ள பிடிப்பும், ஈர்ப்பும் போல் அவர்களும் உங்களிடம் மாறாத அன்பு வைத்திருக்கின்றனர். ஆனால் ஒரு விஷயம் உண்மை தான்! இந்த ஷகுனி ஒரு ஆபத்தானவன். அதிலும் யுதிஷ்டிரன் அரியணை ஏறினால் அவன் சும்மா இருக்க மாட்டான். தன் வேலையைக் காட்டுவான்.”

சத்யவதி கூறினாள். “ஷகுனியைச் சாதாரணமாக நினைக்கக் கூடாது. நினைக்கவும் முடியாது. அவன் ஓர் சின்னஞ்சிறு புழுவைப் போல இருப்பான். ஆனால் அந்தப் புழு ஒரு மரத்தைத் துளைத்துக் கொண்டு உள்ளே சென்று முழு மரத்தையும் வேரோடு அறுத்துவிட்டு விடும். அதைப் போன்றவன் அவன். உன் அபிப்பிராயம் என்ன கிருஷ்ணா? உனக்கும் இந்தக் குருவம்சத்தினரின் முன்னேற்றத்தில் அக்கறை உண்டு. ஆகவே உன் கருத்தையும் கூறு!” என்றாள் சத்யவதி. “அம்மா, நாம் இப்போது ஓர் செங்குத்துப் பாறையின் விளிம்பில் நிற்கிறோம். ஒவ்வொருவரும் எந்த இடத்தில் நிற்கிறோம் என்பதை நாம் நமக்கு நாமே முதலில் தெளிவாக்கிக் கொள்வோம். நான் எங்கே நிற்கிறேன் என்பதையும் புரிந்து கொள்ள முயல்கிறேன். குரு வம்சத்தினர் சர்வ வல்லமை பெற்று அதிகாரங்களைப் பெற்று இருப்பதற்கு எனக்குள் சொந்தமாகவும் காரணங்கள் உண்டு!” என்றார் த்வைபாயனர்.

“உனக்கெனத் தனிக்காரணங்களா? அவை என்ன?” சத்யவதி கேட்டாள்.

சற்று நேரம் மௌனமாகவே இருந்தார் த்வைபாயனர். அந்த அறைக்குள்ளாக சூரியக் கிரணங்கள் சாளரத்தின் வழியாக மெல்ல மெல்ல உள்ளே வந்து ஒளிச் சிதறல்களாகக் காட்சி அளிக்க சற்று நேரம் அதையே பார்த்தார். பின்னர் தன் தாயிடம் திரும்பி, “அம்மா, சொல்கிறேன். எனக்கெனச் சில காரணங்கள் இருக்கின்றன என்றேன் அல்லவா? குரு வம்சத்தினரின் அதிகாரம் பரவலாகவும், வல்லமையாக இருக்கவும் அதை நான் ஆதரிக்கவும் சில காரணங்கள் உள்ளன. ஆனால் அவற்றைக் கேட்டு நீங்கள் அதிர்ச்சியோ ஏமாற்றமோ அடைய வேண்டாம். இதை நான் இன்று வரை எவரிடமும் விவரித்துச் சொன்னதில்லை. மாட்சிமை பொருந்திய காங்கேயரிடம் பிரம தேஜஸும், க்ஷத்திரிய தேஜஸும் ஒருங்கிணைந்து காணப்படுகிறது. ஆகவே அவருக்குக் கட்டுப்பட்ட ஒரு சக்கரவர்த்தி இந்தக் குரு வம்சத்து ராஜ்யத்தை ஆட்சி புரிய வேண்டும் என்று நான் நினைக்கிறேன். அவன் தர்மத்துக்குக் கட்டுப்பட்டவனாக நீதியும் நியாயமும் உள்ளவனாக, சாவுக்கும் அஞ்சாதவனாக தர்மம் ஒன்றுக்கே வாழ்பவனாக இருக்க வேண்டும், என்பது என் ஆசை. ஆகவே இந்தக் குரு வம்சத்தில் அப்படி ஒரு அரசன் அரியணை ஏறினால் அது யுதிஷ்டிரனாக இருக்கலாம். இல்லை எனில் நான் வேறு எங்காவது போய் வேறு அரசனைத் தேட வேண்டியது தான்!”

சற்றே நிறுத்திக் கொண்டு பின்னர் மேலும் விநயத்துடன் கூறினார். “தாயே, எனக்கு சூரிய பகவான் ஆணையிட்டிருக்கிறார். தர்ம சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க வேண்டும் என்று! நானே எதிர்பாராவண்ணம் அதற்கான அதிகாரத்தையும் எனக்களித்திருக்கிறார். ஆசிரமங்கள் பல்கிப்பெருக ஆரம்பித்துள்ளன; மக்களுக்கும் வேதவாக்கியங்களில் நம்பிக்கை துளிர் விட ஆரம்பித்திருக்கிறது. வேதத்தைக் கற்பவர்களும், கற்பிப்பவர்களும் பெருகி வருகின்றனர். நன்கு கற்றறிந்த ஓர் புத்தம்புதிய தலைமுறை தலை தூக்க ஆரம்பித்திருக்கிறது. நான் வழிகாட்டி வரும் வாழ்க்கை முறைக்கு அவர்கள் பழக்கப்படுத்திக் கொண்டு விட்டனர். கொஞ்சம் கொஞ்சமாகவேனும் நான் நேர்மையாகவும், நல்வாழ்க்கை வாழவும் மக்களைப் பழக்கப்படுத்தி வருகிறேன். ஆகவே இதை எல்லாம் நான் மேலும் தொடரவேண்டுமானால் இங்கே ஹஸ்தினாபுரத்தில் ஓர் நேர்மையும் நியாயமும் உள்ள சக்கரவர்த்தி ஆள வேண்டும். அதற்கு யுதிஷ்டிரனே பொருத்தமானவன்.” என்று முடித்தார் த்வைபாயனர்.

“ஹூம், மகனே, நாம் எங்கே போய்த் தேடுவது அப்படிப் பட்ட ஓர் சக்கரவர்த்தியை!” என்று பெருமூச்சு விட்ட சத்யவதி, “மகனே, பாண்டு மட்டும் நம்மிடையே இருந்திருந்தால்!  அவன் அப்படிப் பட்ட ஓர் சக்கரவர்த்தியாக நிச்சயம் இருந்திருப்பான்! ஆனால் தெய்வம் துணை செய்யவில்லையே!” தன் கண்களிலிருந்து பெருகிய கண்ணீரைத் துடைத்துக் கொண்டாள் சத்யவதி. “கிருஷ்ணா, நீ என் கஷ்டங்களைச் சிறிதும் புரிந்து கொள்ளவே இல்லையே! என் வலிமையின் வல்லமையின் கடைசிக்கட்டத்தில் நான் இருக்கிறேன்.” என்று மீண்டும் பெருமூச்சு விட்டாள் சத்யவதி!

“இல்லை, தாயே, நான் புரிந்து கொண்டுள்ளேன்.” என்றார் த்வைபாயனர்..”ஆனால் அவை எல்லாம் இந்தக் கஷ்டத்திலிருந்து விடுபடும் வழியல்ல தாயே! அதில் ஏதும் பொருள் இல்லை! நான் உங்களை மிகவும் நேசிக்கிறேன், உங்களை வணங்குகிறேன். என் தெய்வம் நீங்கள். அம்மா, நான் உங்கள் மகன் என்பதால் மட்டும் அல்ல. இந்த ஹஸ்தினாபுரத்து மக்களின் மனதில் எப்படிப்பட்டதொரு மாற்றங்களையும் நல்லொழுக்கமான வாழ்க்கையை வாழவும் நீங்கள் முனைந்து பாடுபட்டீர்கள்! அதைப் பார்த்துப் பார்த்துப் பெருமைப் பட்டிருக்கிறேன், தாயே!”

த்வைபாயனர் மீண்டும் தன் பேச்சை நிறுத்திக் கொண்டார். சூரிய ஒளி உள்ளே நுழைந்தது. அதைப் பார்த்த த்வைபாயனர் தன்னையும் அறியாமல் மேலும் பணிவுடன் பேசினார். “ஆனால் தாயே, இதற்குப் பின்னர் எல்லாமே வித்தியாசமாக ஆகி விடும். என்னால் இனிமேல் நடக்கப் போவதைக் குறித்து அறிய முடிகிறது. நான் அறிந்த வரையில் ஹஸ்தினாபுரம் ஓர் மாபெரும் யுத்தத்தை நோக்கி நடைபோடுகிறது. ஹஸ்தினாபுரம் போர் புரியும் கூடாரமாகப் பிரிந்து நிற்கப் போகிறது. தர்மம் அடியோடு மறக்கப்படும். மனிதர்களுக்குள்ளே அவர்களுக்கிடையே உள்ள விரோத மனப்பான்மையால் ரத்தம் சிந்தப் போகிறது. இல்லை, இல்லை, கொட்டப் போகிறது. அதோடு இப்போது எவரால் சொல்ல முடியும் அம்மா, இந்த மாபெரும் யுத்தத்தில் ஜெயிக்கப் போவது யார் என்று? நல்லவரா, அல்லது கெட்டவரா? கடவுளா அல்லது சைத்தானா?”

“கிருஷ்ணா, இன்று நீ மிகவும் விரக்தியிலும் ஏமாற்றத்திலும் தென்படுகிறாய். நீ இப்படி எல்லாம் பேசியதே இல்லை. எப்போதும் எதிர்காலம் குறித்த நம்பிக்கையில் தெம்புடன் பேசுவாய்! இன்று ஏன் இப்படி?” என்று சத்யவதி தன் மகனைப் பார்த்துக் கேட்டாள். “தாயே, குரு வம்சத்தினரின் உள் சண்டையால், தாயாதிச் சண்டையால் இந்த மொத்த உலகும் கஷ்டப்படப் போகிறது. பிரிந்து நிற்கப் போகிறது!” என்றார் த்வைபாயனர். “த்வைபாயனரே, அப்படிச் சொல்லாதீர்கள்! இதைத் தடுக்க வேறு வழி ஏதும் இல்லையா?” என்று கேட்டார் பீஷ்மர்.

“நான் தான் சொல்லிவிட்டேனே, இளவரசே! ஹஸ்தினாபுரத்தின் அதிகாரமும், ஆட்சியும் முக்கியமான இடம் பெறப் போகிறது. புதியதாக நியமிக்கப் போகும் சக்கரவர்த்தி பிரமதேஜஸும், க்ஷத்திரிய தேஜஸும் ஒருங்கே பொருந்தியவனாக இருக்கவேண்டும். அவனுடைய பரிபூரண அதிகாரம் இந்த உலகு முழுவதும் பரவ வேண்டும்.அனைவரும் அதை உணர வேண்டும்.” என்றார் த்வைபாயனர். பின்னர் சற்று நேரம் மௌனத்தில் ஆழ்ந்தார். பின்னர் தொடர்ந்து பேசினார். “இந்த ஷகுனி இருக்கிறானே, அவன் பரமசிவன் கழுத்தில் உள்ள விஷம் போன்றவன். அதைத் துப்பவும் முடியாது; விழுங்கவும் முடியாது!” என்றார். “ஆஹா, நாம் ஓர் செங்குத்துப்பாறையின் விளிம்பில் நிற்கிறோம் என்று நீ சொன்னதன் உண்மையான பொருளை இப்போது புரிந்து கொள்ள முடிகிறது, மகனே!” என்றாள் சத்யவதி மெல்லிய குரலில்.

“தாயே, வரக்கூடியதை அப்படியே எதிர்கொள்வோம். தைரியமாக இருங்கள். கடவுள் நமக்கு இவற்றை எதிர்கொள்ளும் தைரியம் மட்டுமில்லாமல் இதிலிருந்து நாம் தப்பிக்கவும் வழிகாட்டுவார் என்று நம்புவோம்.” என்றார் த்வைபாயனர். வேறு வழியில்லாமல் தன் கையைத் தூக்கி விரித்தாள் சத்யவதி! “ஆனால் இப்படி ஒரு கடுமையான சூழ்நிலையில் நான் எப்படி வாழ்வேன்? எங்கு பார்த்தாலும் சூழ்ச்சி, எந்தப் பக்கம் செல்வது என்று முடிவெடுக்க முடியாத் தன்மை, மக்களின் நம்பிக்கையைப் பெற முடியாமை, நேர்மையான நல்வாழ்க்கை வாழ வேண்டிய வழியில் ஸ்திரமாகவும் தைரியமாகவும் நிற்க முடியாமல் தவித்தல்! இந்தச் சூழ்நிலையில் நான் வாழவேண்டுமா?” என்று விரக்தியின் எல்லைக்கே போய்க் கூறினாள் சத்யவதி.

“நீங்கள் எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதைக் கூறுகிறேன், தாயே!” என்றார் த்வைபாயனர். “காசி தேசத்து இளவரசிகளான அம்பிகாவுடனும், அம்பாலிகாவுடனும் நீங்கள் பராசர ஆசிரமத்துக்குச் சென்று விடுங்கள். அங்கே நீங்கள் ஓய்வாக இருக்கலாம். நீங்கள் கிளம்புகையில் ஹஸ்தினாபுரத்து மக்கள் கண்ணீர் சிந்தலாம். ஆனால் அந்தக்கண்ணீர் தான் உங்களையும் ஹஸ்தினாபுரத்து மக்களையும் பிணைக்கும் கயிறாக இருக்கும். நீங்கள் இந்தச் சூழ்ச்சிகள் நிறைந்த இடத்திலிருந்து வெளியேறி விட்டாலே, நீங்கள் மகாப் பெரியவராக மதிக்கப்படுவீர்கள். உங்கள் தார்மிக அதிகாரம் மிக உயர்ந்த இடத்துக்குச் சென்று விடும். நீங்கள் முக்கியத்துவம் பெறுவீர்கள். நீங்கள் மிகவும் இன்றியமையாதவர் என்பது மக்களால் உணரப்படும். ஒரு வேளை இங்கே ரத்தம் சிந்தினால் நீங்கள் மௌனமாக ஓர் பார்வையாளராக இருங்கள். ஆனால் அதன் பின்னர் யுத்த்த்தினால் எவ்விதப் பயனும் இல்லை என்பதை அறிந்து கொண்டு அவர்களே உங்களிடம் வலிமை பெறவும் வழிகாட்டச் சொல்லும்படியும் வந்து நிற்பார்கள்.” என்றார்.

சத்யவதி சற்று நேரம் யோசித்துக் கொண்டிருந்தாள். “சரி, கிருஷ்ணா, மிக நல்லது. நான் அப்படியே செய்கிறேன்.” என்ற வண்ணம் நீண்ட பெருமூச்சு விட்டாள். “அதெல்லாம் சரி அப்பா! ஒரு வேளை ஹஸ்தினாபுரமோ அல்லது மற்ற எந்த இடத்ஹ்டு அதிகாரமோ தர்மத்தைக் காக்க வேண்டி ஓர் அரசனைச் சக்கரவர்த்தியைக் கொண்டு வரவில்லை எனில்? அப்போது என்ன செய்ய வேண்டும்?” என்று கேட்டாள் சத்யவதி. “தாயே, நான் அதையும் கவனத்தில் கொள்ளாமல் இல்லை. இந்த ஆபத்து இருக்கிறது என்பதையும் உணர்வேன்.” என்ற த்வைபாயனர் மேலும் தொடர்ந்து, “ஆனால் ஒன்று, எனக்குக் கடவுளரிடமிருந்து பித்ருலோகத்துக்கு அழைப்பு வரும் வரை நான் தர்மத்திற்காகவும் நீதி, நேர்மைக்காகவும் வாழ்வேன். ஒரு வேளை குரு வம்சத்தவரால் அப்படி ஓர் சக்கரவர்த்தியைக் கொண்டு வர முடியவில்லை எனில், என் கடவுள் சூரிய பகவான் எனக்கு வழிகாட்டுவான். என்ன செய்யவேண்டும் என்பதைச் சொல்வான்.
தர்மம் என்றென்றும் சாஸ்வதம்; அதற்கு அழிவில்லை.
சூரிய பகவானே, அழிவற்ற தர்மத்தின் பாதுகாவலன்
தீமைகளை அழித்து நன்மைகளை நிலை நாட்டி தர்மசாம்ராஜ்யத்தை மீண்டும் ஸ்தாபிப்பான்,
இது நிச்சயம் நடக்கும், எனக்கு உறுதியாகத் தெரியும். நிச்சயமாகத் தெரியும்.”


இத்துடன் ஆறாம் பாகம் வேத வியாசர் முடிவடைந்தது. இனி ஏழாம்பாகம் யுதிஷ்டிரர் குறித்துப் பார்க்கப் போகிறோம்.

சத்யவதியின் கவலை!

சத்யவதி என்றேனும் ஓர் நாள் பாண்டு தன் வனவாசத்தை விட்டு விட்டு நாடு திரும்பி மீண்டும் ஹஸ்தினாபுரத்தின் அரண்மனைப் பொறுப்பையும் இந்தக் குரு வம்சத்தின் பாரம்பரியமான சாம்ராஜ்யத்தையும் ஏற்றுக் கொள்ளப் போகிறான் என்றே நம்பி வந்தாள். பாண்டுவின் வரவுக்காகக் காத்திருந்தாள். ஆனால் இவ்வளவு இளம் வயதில் பாண்டு இறப்பான் என்று அவள் எதிர்பார்க்கவே இல்லை. மனம் மிகவும் நொந்து போய் வாழ்க்கையே வெறுத்துப் போய் என்ன செய்வது என்று தெரியாமல், புரியாமல் திகைத்திருந்தாள். அதோடு ஹஸ்தினாபுரமோ உட்பகையாலும் பல்வேறுபட்ட கருத்து வேறுபாடுகளாலும் கொந்தளித்துக் கொண்டிருந்தது. பாண்டு திரும்பி வந்து ஆட்சிப் பொறுப்பை ஏற்று இவற்றை எல்லாம் ஓர் ஒழுங்கு செய்வான் என்று எதிர்பார்த்திருந்த அவள் நம்பிக்கைகள் அனைத்தும் பொய்த்துப் போய்விட்டன. அவள் இத்தனை நாட்கள் கட்டிக் காத்து வந்த அவள் மனோ தைரியம் அவளை விட்டு அகன்றது. அவள் நோய்வாய்ப்பட்டுப் படுத்துவிட்டாள். இதைக் கண்டே பிதாமகர் பீஷ்மர் ஆசாரியர் வேத வியாசரை ஒரு முறை ஹஸ்தினாபுரம் வந்துவிட்டுச் செல்லும்படி கேட்டுக் கொண்டிருந்தார். அதன் பேரிலேயே இப்போது வியாசர் இங்கே வருகை புரிந்திருந்தார்.

ஆசாரியர் வேத வியாசர் பீஷ்மருடன் மஹாராணி சத்யவதியின் மாளிகைக்கு வந்து சேர்ந்தார். ராணிமாதாவின் அந்தப்புர அறைக்கு இருவரும் சென்றனர். அங்கே ராஜமாதா உடல் நலம் பூரணமாய்க் கெட்டுச் சிவந்த கண்களுடனும், செக்கச் சிவந்த முகத்துடனும் கொதிக்கும் உடலுடனும் படுத்திருந்தாள். அவள் அந்தரங்கச் சேடி தாவி உதவி செய்ய மெல்ல எழுந்திருந்து சாய்ந்த வாக்கில் படுக்கையில் அமர்ந்த ராணிமாதா தன் காலைத் தொட்டு வணங்கிய ஆசாரியரை ஆசீர்வதித்தாள். சுயக்கட்டுப்பாடுகளிலும் நல்லொழுக்கங்களைக் கடைப்பிடிப்பதிலும் பிரபலம் அடைந்திருந்த பீஷ்ம பிதாமகர் தானும் தன் மாற்றாந்தாயான சத்யவதியின் பாதங்களைத் தொட்டு வணங்கிக் கொண்டார். தன் கை அசைப்பால் இருவரையும் அமரச் சொன்னாள் சத்யவதி. பின்னர் தன் கண்களை ஒரு நிமிடம் மூடிக் கொண்டாள். த்வைபாயனரிடம், “கிருஷ்ணா, இந்த அடி பெரும் அடியாக மரண அடியாக விழுந்து விட்டது! என்னால் இதைத் தாங்க முடியவில்லை!” இதைச் சொல்கையிலேயே அவள் தொண்டை அடைத்துக் கொண்டு குரல் தழுதழுத்தது. அவள் கண்களிலிருந்து கண்ணீர் பெருகியது.

“கிருஷ்ணா, கிருஷ்ணா, இப்படி வா! என் அருகே வந்து அமர்ந்து கொள்! இத்தனை நாட்களாக நான் உனக்காக் காத்திருந்தேன் குழந்தாய்! இன்னும் எத்தனை நாட்கள் நான் உயிருடன் இருக்கப் போகிறேனோ தெரியவில்லையே! ஆனால் நான் உடனே இறக்க விரும்புகிறேன்; ஆம் நான் இறக்க வேண்டும்!” என்று புலம்பினாள் சத்யவதி! அவள் இத்தனையில் அளவுக்கு மீறித் தன் சக்தியைச் செலவிட்டதால் களைத்துப் போய்விட்டாள். மெல்லத் தனக்குள்ளாக முணுமுணுத்துக் கொண்டாள். “ஆரிய புத்திரரின் விருப்பங்களை எல்லாம் நிறைவேற்றித் தருவதாகவும், தர வேண்டும் எனவும் நான் உறுதியாக இருந்தேன். ஆனால், ஆனால் அவற்றில் நான் தோல்வி அடைந்து விட்டேனே! இந்தத் தோல்வியிலிருந்து மீண்டும் மீள முடியாத அளவுக்குத் தோல்வி அடைந்து விட்டேன்!” என்று கூறிய அவள் பெரும் விம்மல்களோடு கூடிய அழுகையை ஆரம்பித்தாள். அவளால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளவே முடியவில்லை! மெல்லிய பலஹீனமான குரலில், “நான் வாழ்க்கையைச் சரியாக வாழவில்லை. என் மொத்த வாழ்க்கையுமே வீணாகி விட்டது. என் பிரபுவுக்கு, என் அருமைக் கணவர் ஆரிய புத்திரர் மஹாராஜா ஷாந்தனுவிற்கு நான் நல்ல பலமுள்ள புத்திரர்களைப் பெற்றுத் தரவில்லை. நீண்ட நாட்கள் வாழக் கூடிய பிள்ளைகளை நான் பெறவில்லை!” என்று புலம்பினாள்.

பின்னர் காங்கேயரிடம் திரும்பி, “காங்கேயா, நீ த்வைபாயனனிடம் எல்லா விபரங்களையும் கூறி விட்டாய் அல்லவா?” என்று கேட்டாள். “ஆம், தாயே, ஆம்! நான் அனைத்தையும் த்வைபாயனரிடம் கூறி உள்ளேன்.” என்றார் பீஷ்மர். “நீ என்ன நினைக்கிறாய், கிருஷ்ணா? இந்த விஷயத்தில் உன் கருத்து என்ன?” என்று த்வைபாயனரைக் கேட்டாள் ராஜமாதா. “காங்கேயர் எடுத்திருக்கும் முடிவு சரியானது தான் தாயே!” என்றார் த்வைபாயனர். “காங்கேயர் மட்டுமின்றி குரு வம்சத்துத் தலைவர்கள் அனைவருமே இதை ஒத்துக் கொண்டிருக்கிறார்கள். நியோக முறையில் பாண்டுவின் மனைவியர் குழந்தை பெற்றது ஏற்கக் கூடியதே! ஆகவே அவர்கள் பாண்டுவின் புத்திரர்களை முறைப்படி இளவரசர்களாக அங்கீகரித்துத் தான் ஆகவேண்டும். அதில் அவர்கள் உறுதியாக இருக்க வேண்டும்.” என்றார்.

“ஆம், தாயே, அது உண்மைதான்!” என்றார் பீஷ்மர்! “நாங்கள் குரு வம்சத்துத் தலைவர்கள் அனைவருமே ஏற்கெனவே இதற்கான உறுதிமொழியை எடுத்து விட்டோம். பாண்டுவின் ஐந்து புத்திரர்களையும் ஹஸ்தினாபுரத்து இளவரசர்களாக  அங்கீகரிப்பதோடு அல்லாமல் யுதிஷ்டிரனை யுவராஜாவாகப் பட்டாபிஷேஹம் செய்யும் எண்ணமும் உள்ளது!” என்றார். “ம்ம்ம்ம், அப்படியா? குரு வம்சத்து மூத்தோர்களின் கருத்தையும் கேட்டாயல்லவா? அவர்கள் என்ன சொல்கின்றனர்?” என்று கேட்டாள் ராணி சத்யவதி. “அவர்களில் பலருக்கும் ஐந்து சகோதரர்களையும் பாண்டுவின் புத்திரர்களாகவும், ஹஸ்தினாபுரத்து இளவரசர்களாகவும் அங்கீகாரம் செய்வதில் எவ்விதத் தடையும் இல்லை!” என்றார் பீஷ்மர்.

அப்போது த்வைபாயனர், “காங்கேயரே! நான் வருவதற்குச் சற்றே நேரம் முன்னர் ஷகுனி உங்களை வந்து சந்தித்ததாகக் கூறினீர்கள் அல்லவா? அவன் கருத்து என்ன? அவன் என்ன சொல்கிறான்?” என்று கேட்டார். பீஷ்மர் கொஞ்சம் இகழ்ச்சியுடன் சிரித்தார். “அவன் எதற்கு வருவான்? என்னிடம் மிகுந்த அழுத்தம் கொடுப்பதே அவன் நோக்கம். மேலும் மேலும் என்னைச் சிந்திக்கவிடாமல் அழுத்தி அவன் கருத்தை நான் ஏற்கச் செய்ய வேண்டும் என்பதே அவன் நோக்கம். அதை மிகச் சாமர்த்தியமாகச் செய்தான். அவன் என்ன சொன்னான் தெரியுமா? அவன் தந்தையிடமிருந்து எனக்குச் செய்தி வந்திருப்பதாகத் தெரிவித்தான். அவன் தந்தை சொல்லி அனுப்பினாராம். பாண்டுவின் புத்திரர்கள் ஐவரையும் நாம் அங்கீகாரம் செய்யக் கூடாது என! அதோடு மட்டும் அல்ல. அப்படியே நாம் பாண்டுவின் புத்திரர்களை ஏற்றுக் கொண்டாலும், அதனால் துரியோதனன் அரியணை ஏறுவதற்கு எவ்விதத் தடையும் இருக்கக் கூடாதாம். எப்படியானும் துரியோதனன் அரியணை ஏறும்படி நாம் பார்த்துக் கொள்ள வேண்டுமாம். அதோடு மட்டுமா? அவன் சில ஸ்ரோத்திரியர்களைக் கூட இதற்காகக் கண்டு பேசினானாம். அவர்களிடம் குரு வம்சத்துப் பழைய கோட்பாடுகளைக் குறித்துக் கலந்து ஆலோசித்து துரியோதனன் அரியணை ஏற உரிமை உள்ளவன் தானா என்றெல்லாம் கேட்டுக் கொண்டானாம்!” மீண்டும் இகழ்வுடன் நகைத்தார் பீஷ்மர்.

“ஆஹா! ஸ்ரோத்திரியர்கள் எல்லோரும் எப்படி துரியோதனனை ஆதரிக்க ஆரம்பித்திருக்கின்றனர்?” என்று வியப்புடன் கேட்டார் ஆசாரியர். “ம்ம்ம்ம்ம், இல்லை த்வைபாயனரே! அவன் என்னை ஏமாற்றுகிறான் என நினைக்கிறேன். என்னை நம்ப வைப்பதற்காகப் பொய் சொல்லுகிறான். எனக்குத் தெரிந்தவரையில் ஹஸ்தினாபுரத்தின் அனைத்து ஸ்ரோத்திரியர்களும் ஆசாரிய விபூதியின் கருத்தோடு ஒத்துப் போகிறார்கள். அதோடு நிற்காமல் இப்போதைய ராஜகுருவான ஆசாரிய பாரத்வாஜரின் கருத்துக்களோடும் ஒத்துக் கொள்கிறார்கள். இவர்கள் இருவரும் யுதிஷ்டிரன் அரியணை ஏறுவதற்கு எவ்விதத் தடையும் இல்லை என்றே கூறிவிட்டார்கள். அவர்களும் நம்முடைய பழைய கோட்பாடுகளையும், நீதிகளையும் அலசி ஆராய்ந்தே இம்முடிவுக்கு வந்திருக்கின்றனர். அதை அனைத்து ஸ்ரோத்திரியர்களும் ஆதரிக்கின்றனர். அவர்களுக்கு இந்த முடிவு எடுத்ததன் அடிப்படையே தர்மக்ஷேத்திரத்தில் உம்மால் ஸ்தாபிக்கப்பட்ட வித்வத் சபையின் நடவடிக்கைகளே முக்கியக் காரணம் என்றும் சொல்கின்றனர். அங்கே ஆரியவர்த்தத்தின் பழைமையான கோட்பாடுகளும், நீதி, நியதிகளும் அலசி ஆராய்ந்து ஓர் முடிவுக்கு எட்டி இருப்பதாகவும் அதையே தாங்களும் பின்பற்றுவதாகவும் சொல்லுகின்றனர். அந்த வித்வத் சபையை நீர் தான் அங்கீகாரம் செய்திருப்பதாகவும் சொல்கின்றனர்.”

அப்போது த்வைபாயனர், “ஐந்து சகோதரர்களும் இறந்து போன குரு வம்சத்துக் கடைசிச் சக்கரவர்த்தியான பாண்டுவின் புத்திரர்களே என்பதில் எவ்வித ஐயத்துக்கும் இடமில்லை. ஆகவே அவர்களில் மூத்தவனான யுதிஷ்டிரனுக்கு இந்த அரியணை பிறப்புரிமை என்பதிலும் எவ்வித சந்தேகமும் இல்லை! அவன் தந்தைக்குப் பின்னர் அவருடைய வாரிசாக அவன் தான் அரியணை ஏற வேண்டும்!” என்றார் த்வைபாயனர். பின்னர் காங்கேயரிடம், “அது சரி, இளவரசே, நீங்கள் ஷகுனியிடம் என்ன சொல்லிப் போகச் சொன்னீர்கள்?” என்று கேட்டார். அதற்கு பீஷ்மர், “அந்த சூழ்ச்சிக்காரனிடம் பேசும் அளவுக்குப் பொறுமை என்னிடம் இல்லை, ஐயா! ந அவனிடம் தீர்மானமாகக் கூறி விட்டேன். ஐந்து சகோதரர்களும் பிரமாதமான வரவேற்புடன் அழைக்கப்படுவார்கள் என்றும் அவர்களைப் பாண்டுவின் புத்திரர்களாக அறிமுகம் செய்யப் போகிறோம் என்பதையும் இறந்த சக்கரவர்த்தி பாண்டுவின் மகன்கள் என்பதால் அவர்களுக்கு இந்த நாட்டின் சகல சுக சௌக்கியங்களையும் ஓர் இளவரசர்களாக இருந்து அனுபவிக்கும் உரிமை உண்டு என்பதையும் தெரிவித்து விட்டேன்.” என்றார்.

மெல்லத் தன் கண்களைத் திறந்து பார்த்தாள் சத்யவதி. இவ்வளவு நேரமும் அவள் கண்களை மூடியே படுத்துக் கொண்டு அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தாள். இப்போது மீண்டும் தாவியின் உதவியால் எழுந்து அமர்ந்து கொண்டு, “கிருஷ்ணா, காங்கேயன் மட்டும் இல்லை எனில் இந்தக் குருவம்சத்தைக் கட்டிக் காப்பாற்றுவது கடினம். அவன் தான் அனைவரையும் ஒருங்கிணைத்துக் கட்டிக் காத்து வருகிறான். இப்போதுள்ள இந்த மாறுபட்ட சூழ்நிலைக்கு முக்கியக் காரணமே அந்த ஷகுனி தான். முதலில் அவனை ஹஸ்தினாபுரத்திலிருந்து வெளியேற்ற வேண்டும்!” என்றாள்.

“தாயே, நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மையே! ஷகுனி தான் அனைத்துக்கும் மூலக் காரணம் ஆவான். ஆனால் அவனை நாம் அவ்வளவு எளிதில் வெளியேற்ற முடியாது. அது மிகக் கடினம். அவன் காந்தாரியுடன் காந்தார நாட்டுச் சீதனமாகவன்றோ வந்துள்ளான். அவனை நாம் வெளியேற்றினால் திருதராஷ்டிரன் ஒருக்காலௌம் சமாதானமாகப் போக மாட்டான். இதை ஒத்துக் கொள்ளவும் மாட்டான். காந்தார நாட்டு அரசனும் நாம் அவனை அவமதித்து விட்டோம் என்று எண்ணிக் கொள்வான். அவனைப் பொறுத்தவரை இது வாழ்வா, சாவா என்னும் பிரச்னையாகத் தோற்றுகிறது. அம்மா, ஷகுனியைக் குறித்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்காதீர்கள். இங்குள்ள குரு வம்சத்துத் தலைவர்கள் அவனை ஒரு கை பார்த்துவிடுவார்கள். கவலையே வேண்டாம் அம்மா!” என்றார் பீஷ்மர் சமாதானமாக.

மேலும் தொடர்ந்து, “இப்போது ஒரு குழப்பம் ஏற்பட்டால், சச்சரவு நேர்ந்தால் அதன் மூலம் ஓர் சிறு போரே மூளலாம். அல்லது அது சிறு போராக இல்லாமல் ஓர் மாபெரும் யுத்தமாக அக்கம்பக்கத்து அரசர்கள், சிற்றரசர்கள் கூடக் கலந்து கொள்ளும் பெரும்போராகவும் மாறலாம். ஆகவே இவ்விஷயத்தை நாம் கவனமாகக் கையாள வேண்டும். துரியோதனனுக்கு காந்தார அரசன் சபல் பாட்டனார். ஆகவே அவன் துரியோதனனைத் தான் ஆதரிப்பான். அதைத் தவிர கருஷ நாட்டுப்பிரபுவும் சேதி தேசத்து அரசனும் அவனை ஆதரிக்கலாம். ம்ம்ம்ம்ம்ம்? மத்ரா கூட இதில் சேர்ந்து கொள்ளலாம். பாண்டுவின் புத்திரர்கள் பாண்டவர்கள் ஐவருக்கும் அவர்கள் சார்பில் குந்தியின் சகோதரன் வசுதேவன், யாதவத் தலைவன், மற்றும் குந்தியின் ஸ்வீகாரத் தந்தை குந்திபோஜன், மற்றும் ஒருவேளை பாஞ்சால தேசத்து அரசன் துருபதன் ஆகியோர் ஆதரிக்கலாம்!” என்று நீண்ட யோசனையுடன் கூறினார் பீஷ்மர்.

Monday, September 26, 2016

ஷகுனியின் ஏமாற்றம்!

ஷகுனி கொஞ்சம் தணிந்த குரலில் பேச ஆரம்பித்தான். அவன் புன்னகையே அவன் எப்படியேனும் பீஷ்மரின் நன்மதிப்பைப் பெற வேண்டும் என்பதில் அவன் முக்கியமாக நினைப்பதைச் சுட்டிக் காட்டியது. பீஷ்மரைப் பார்த்து, “பிதாமகரே, ஆசாரியர் அவ்வாறு கூறினாரா? நீங்களும் அதையே செய்வேன் என்று சொல்வதில் தவறே இல்லை. ஏனெனில் இந்த ஆரியவர்த்தம் முழுதும் தேடினாலும் ஆசாரியரின் சொல்லை எதிர்த்துச் செயலாற்றும் தைரியமோ உரிமையோ எவருக்கும் இல்லை என்பது உலகறியுமே! அதோடு பாரம்பரியப் பழக்கவழக்கங்களை எடுத்துச் சொல்வதிலும் அதைக் கடைப்பிடிக்க வேண்டிய அவசியத்தை உணர்த்துவதிலும் ஆசாரியருக்கு இல்லாத அதிகாரம் வேறெவருக்கு உண்டு! ஆனால் பிதாமகரே, உங்களுக்குத் தெரியாததில்லை! சூழ்நிலைகளையும், சந்தர்ப்பங்களையும் ஒட்டி ஒவ்வொரு சமயம் பழைய சம்பிரதாயங்களை மீற வேண்டிய அவசியம் ஏற்படும் இல்லையா? நீங்கள் அறியாததா! நான் வேண்டுமானால் இன்னும் கொஞ்சம் வெளிப்படையாகவே பேசட்டுமா?” என்றான் ஷகுனி.

“நீர் பேசுவதை நான் ஒருக்காலும் தடுக்கவில்லை; தடுக்கவும் மாட்டேன்.”

“காந்தார நாட்டுத் தலைவர்கள், படைவீரர்கள் அனைவரும் இங்கே குரு வம்சத்தினரோடு இணைந்து செயலாற்ற விரும்புகின்றனர். இந்தக் கூட்டுத் தொடர வேண்டுமெனில் பீஷ்ம பிதாமகர் தன் முடிவை மாற்றிக் கொண்டு எங்களுடைய விருப்பத்தைப் பரிசீலிக்க வேண்டும் என்பதே என் தந்தையின் மற்றும் எனது வேண்டுகோள்!” பின்னர் ஷகுனி சற்று நேரம் பேச்சை நிறுத்திவிட்டு ஏதோ யோசனையில் இருந்தான். பின்னர் பீஷ்மரைப் பார்த்துத் தன் கைகளைக் கூப்பிய வண்ணம் மேலும் தொடர்ந்தான். “என் தந்தை மாட்சிமை பொருந்திய காந்தார அரசர் என்ன நினைக்கிறார் எனில், காந்தார தேசத்து அரச குடும்பத்தின் நட்பும், தொடர்பும், இங்கே பெரிதும் மதிக்கப்பட வேண்டும்; மதிக்க வேண்டும் என்பதே!” என்றான்.

“சும்மாச் சும்மாச் சுற்றி வளைத்து வளைத்துக் கேள்விகள் கேட்கவேண்டாம், இளவரசே! இப்போது உண்மையாகவும் ஒளிக்காமலும் என்னிடம் பேசுங்கள். உங்கள் தந்தையின் முடிவை நாங்கள் ஏற்கவேண்டும்; ஏற்றுக்கொண்டே ஆகவேண்டும் என்று அவர் சொல்கிறாரா?” பீஷ்மர் பட்டென்று உடைத்துப் பேசினார். சொல்லும்போது ஷகுனியின் முகத்தையே உன்னிப்பாகக் கவனித்தார். அத்தகைய உள்நோக்கங்கள் ஏதும் இல்லை என்று மறுக்கப் போன ஷகுனியை இடைமறித்த பீஷ்மர்,”இதோ பாரும், காந்தார இளவரசே, உங்கள் தந்தையிடம் இதைச் சொல்லுங்கள்.” என்றவர் சற்றே நிறுத்தினார். தன் பொறுமையின்மையை அடக்கிக் கொண்டு கோபத்தையும் அடக்கிக் கொண்ட பீஷ்மர், “குரு வம்சத்தின் அதிகாரங்களையும், அரச நீதியையும் செம்மையாகச் செய்து முடிக்க பீஷ்மனுக்குப் பிறர் உதவி ஏதும் தேவை இல்லை என்பதை உம் தந்தையிடம் போய்ச் சொல்லும்!” என்றார்.

ஷகுனிக்குப் பதட்டம் ஏற்பட்டது. “இல்லை, இல்லை, பிதாமகரே, அப்படி எல்லாம் இல்லை!” என்று அவசரம் அவசரமாக மறுத்த ஷகுனி, “குரு வம்சத்தினரின் ராஜரீக விவகாரங்களில் தலையிடுவதற்கு என் தந்தை ஒத்துக்கொள்ள மாட்டார். தலையிடவும் மாட்டார்!” என்று மறுத்தான். அதைக் கேட்ட பீஷ்மர், அதிகாரத் தொனியில், கிட்டத்தட்டக் கட்டளையைப் போலவே, “சரி, உங்கள் தந்தையிடம் போய்ச் சொல்லுங்கள் இளவரசே! பீஷ்மன் பாண்டுவின் புத்திரர்கள் ஐவரையும் ஏற்றுக் கொண்டு முறைப்படி ஹஸ்தினாபுரத்துக்கு உரிய இளவரசர்களாக அங்கீகாரம் செய்யப் போகிறான் என்பதைச் சொல்லுங்கள். பாண்டுவிற்கு அவன் அரியணையில் இருக்கையில் என்ன உரிமைகள் இருந்தனவோ, என்ன வசதிகளை அவன் அனுபவித்தானோ அத்தனையும் இந்த ஐந்து இளவரசர்களுக்கும் உண்டு என்பதையும் பீஷ்மன் ஏற்றுக்கொள்கிறான் என்பதை உங்கள் தந்தைக்குத் தெரிவிக்கவும். அப்படி யாரேனும் இதைத் தடுக்க முயன்றால், குரு வம்சத்தினரின் ராஜரீக விவகாரங்களில் எவரேனும் குறுக்கிட்டால், பின்னர் அவர்கள் மிகவும் மோசமான பின் விளைவுகளைச் சந்திக்க நேரிடும். குரு வம்சத்து வீரர்கள் அனைவரும் ஒன்று திரண்டு அவர்கள் மேல் போர் தொடுத்து அவர்களை ஒன்றுமில்லாமல் செய்து விடுவார்கள்.” உரத்த குரலில் பீஷ்மர் இதைச் சொன்னபோது அவர் குரல் இடிமுழக்கம் போலவே கேட்டது.

அதற்குள்ளாக அரண்மனைக் காரியஸ்தர் கதவுக்கருகே நின்று கொண்டிருந்தவர் பீஷ்மருக்கு அருகே வந்து கூப்பிய கரங்களுடன் வணக்கம் தெரிவித்து விட்டு, “பிரபுவே, ஆசாரியருக்காக நாம் அனுப்பி இருந்த படகு நதியில் வருவது தெரிகிறது விரைவில் ஆசாரியர் இங்கே வந்து விடுவார்! !” என்று தெரிவித்தான். “சரி, உடனே ராஜமாதாவிடம் போய் நான் ஆசாரியரை அழைத்துக் கொண்டு அவரை வந்து சந்திப்பதாகத் தெரிவித்து விடு. ராஜமாதா களைப்புடன் இருந்தால் தொந்திரவு செய்யாதே! அவர் அழைத்து வரச் சொன்னால் அழைத்துச் செல்லலாம்.” என்றார் பீஷ்மர். பீஷ்மர் அவ்வளவில் எழுந்து ஷகுனியுடனான சந்திப்பு முடிந்தது என்பதற்கு அறிகுறியாக அந்த அறையிலிருந்து வெளியேறத்தொடங்கினார். ஷகுனி அவரை வணங்க, அதை ஓர் தலை அசைவின் மூலம் அங்கீகரித்த பீஷ்மர் ஆழ்ந்த யோசனையில் இருப்பதை அவருடைய நெரிந்த புருவமும், ஆழமான கண்களும் தெரிவித்தன. ஷகுனி யோசனையில் ஆழ்ந்திருந்தான். அவன் தந்தை அவனிடம் ஏற்கெனவே பீஷ்மரிடம் ரொம்பவும் வற்புறுத்தியோ கட்டாயப்படுத்தியோ பேச வேண்டாம் என்று சொல்லியே அனுப்பி இருந்தான். ஆகையால் ஷகுனி மிகவும் சிரமப்பட்டுத் தன்னை அடக்கிக் கொண்டான். குரு வம்சத்தினரோடு இந்த அபிப்பிராய பேதத்தினால் பெரும் பின் விளைவுகள் ஏற்படக் கூடாது என்பதில் காந்தார அரசன் உறுதியாக இருந்தான்.

என்றாலும் வெளிப்படையாகப்போலி அடக்கத்தைக் காட்டியவன், “பிரபுவே, நான் மிகவும் ஏமாற்றத்துடன் செல்கிறேன்.” என்று பீஷ்மரிடம் தெரிவித்தான். கிட்டத்தட்டக் கதவுக்கருகே சென்றுவிட்ட பீஷ்மர் திரும்பினார். சகுனியைப் பார்த்து, “ இன்னமும் மூன்று நாட்களில் நீ காந்தாரத்துக்கே நேரில் சென்று உன் தந்தையிடம் என்னுடைய செய்தியைத் தெரிவிப்பாய் என்று எதிர்பார்க்கிறேன்.”என்று கிட்டத்தட்டக் கட்டளையாகச் சொன்னார். ஷகுனிக்கும் இது ஓர் வேண்டுகோளே இல்லை, கட்டளை என்பதும் புரிந்து விட்டது. ஆகவே வேறு வழியில்லாமல் தலை வணங்கித் தான் அதை வரவேற்பதாகத் தெரிவித்துக் கொண்டான். ஆனாலும் அவன் மனம் உள்ளூர வெறுப்பில் ஆழ்ந்தது. பீஷ்மர் தன் காரியஸ்தன் பின் தொடர அந்த அறையை விட்டு வெளியேறினார்

Saturday, September 24, 2016

துரியோதனனுக்கே பட்டம்!

ஷகுனி ஒல்லியாக உயரமாக ஆனால் திடமான உடலுடன் இருந்தான். நெற்றி கொஞ்சம் மேடிட்டிருந்ததால் கண்கள் ஆழத்தில் இருப்பது போல் காணப்பட்டன. அந்த ஆழமான கண்களால் அவன் தனக்கு எதிரிலிருப்பவரைப் பார்க்கும்போது அந்தப் பார்வை இதயத்தின் ஆழத்தில் ஊடுருவுவது போலவும் தோன்றியது. உயர்ரகப் பட்டாடை அணிந்து கைகளிலும் தோள்பட்டைகளிலும் ராஜ வம்சத்துக்கே உரிய ஆபரணங்களை அணிந்து கொண்டு தலையிலும் இளவரசுக் கிரீடம் தரித்துக் காணப்பட்டான். அவன் அரைக்கச்சையிலிருந்து சிறிய வாள் ஒன்று நீட்டிக் கொண்டிருந்தது. பீஷ்மர் தனக்குரிய ஆசனத்தில் அமர்ந்து கொண்டதும், அவருடன் கூடவே வந்திருந்த அரசு ஊழியர் அறைக்கதவின் அருகே சென்று நின்று கொண்டார். பீஷ்மர் ஷகுனியையே சிறிது நேரம் உற்றுப் பார்த்தார். அவர் கண்கள் எப்போதும் போல் மின்னலைப் போல் பிரகாசித்துப் பார்ப்பவருக்கு மனதிற்குள் ஓர் மரியாதையை உண்டாக்கியது. அந்த அறையிலிருந்த மற்ற ஊழியர்களைத் தன் கையசைப்பால் வெளியேறச் சொன்னார் பீஷ்மர். பின்னர் ஷகுனியை அழைத்துத் தன்னருகே போடப்பட்டிருந்த சற்றே சிறியதாக இருந்த அரியணையில் அமரச் சொன்னார். இதன் மூலம் ஷகுனியும் ராஜவம்சம் என்பதை அவர் அங்கீகரிக்கிறார் என்பது வெளிப்படையானது.

ஆனால் பீஷ்மருக்கு உள்ளூர ஷகுனியைப் பிடிக்காது. அவன் இங்கே ஹஸ்தினாபுரத்திற்குத் தன் சகோதரியோடு சேர்ந்து வந்ததே அவருக்கு இஷ்டமில்லை. வந்ததிலிருந்து அவனைப் பிடிக்காமலும் போனது. ஷகுனி கபடமாக நடந்து கொள்வதோடு அல்லாமல் கபடம், சூழ்ச்சி செய்பவர்களை மிகவும் ஆதரித்துப் பாராட்டி வந்தான். அதோடு இப்போது அவன் பாண்டுவின் புத்திரர்கள் ஐவரையும் காட்டிலிருந்து வரவழைத்து ஹஸ்தினாபுரத்தின் மக்களுக்கும் மற்றக் குரு வம்சத்தினருக்கும் அறிமுகம் செய்விப்பதையோ அவர்களையும் இந்த ராஜ்யத்துக்கு உரிய ராஜகுமாரர்கள் என்ற அங்கீகாரம் கொடுப்பதையோ சற்றும் விரும்பாமல் அதற்கு எதிராகக் குரு வம்சத்துத் தலைவர்கள் சிலரைத் தனக்காக ஆதரவு அளிக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தான். இந்தச் செய்தியும் பீஷ்மர் காதுகள் வரை எட்டி இருந்தது. பாண்டுவுக்கு மனைவியுடன் கூடி இருந்து பிள்ளைகளை அழிக்கும் பாக்கியம் இல்லை என்பதால் அவன் வாரிசில்லாமல் இறந்துவிடுவான் என்றே திருதராஷ்டிரனும், காந்தார அரசனும், திருதராஷ்டிரன் மாமனாரும் ஆன சபலும் நினைத்திருந்தார்கள்.  ஆகவே அடுத்து துரியோதனன் தான் யுவராஜாவாக அறிமுகம் செய்யப்பட்டு குரு வம்சத்து அரியணைக்கும் உரியவனாக ஆகப் போகிறான் என்றே எதிர்பார்த்திருந்தனர். ஆனால் இப்போதோ! பாண்டவர்கள் இங்கே வரப் போகின்றனர் என்பதும் அவர்களுக்கு அங்கீகாரம் கிடைத்துவிடும் என்பதும், அடுத்து யுதிஷ்டிரன் யுவராஜாவாக நியமிக்கக் கூடும் என்பதும் அவர்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.

அதை எல்லாம் நினைத்த பீஷ்மர் ஷகுனியை இப்போது இங்கே பார்த்ததும் என்ன சொல்வதென்று தெரியாமல், “இளவரசே, தங்கள் தகப்பனார் சபல் நல்ல உடல் நலத்துடன் இருக்கிறாரா?” என்று நல விசாரணை செய்தார். இந்த சம்பிரதாயப் பேச்சுக்களால் ஷகுனி பதட்டம் அடைந்தான். தன் கைகளைக் கூப்பிய வண்ணம், “பிதாமகரே, என் தந்தை உடல் நலத்துடனேயே இருக்கிறார். அவர் தங்களுக்கு அனுப்பியுள்ள செய்தியைத் தங்களிடம் சமர்ப்பிக்கவே நான் இங்கே வந்திருக்கிறேன்.” என்றான். பீஷ்மர் அப்படியே அசையாமல் சற்று நேரம் ஷகுனியையே பார்த்த வண்ணம் அமர்ந்திருந்தார். பின்னர் ஷகுனியிடம் கேட்டார்;” என்ன செய்தி?” என்று கேட்டார்.

ஷகுனிக்கு மீண்டும் பதட்டம் ஏற்பட்டது. தன் தலையைத் தடவுகிறாப்போல் தன் கிரீடத்தைச் சரி செய்து கொண்டு தன்னைக் கொஞ்சம் சமாளித்துக் கொண்டான். இப்போதுள்ள மனநிலையில் அவன் பீஷ்மரைச் சந்திக்கவோ அவருடன் பேசவோ விரும்பவில்லை. ஆனால் வேறு வழியில்லை. அவன் பேசித்தான் ஆகவேண்டும். நேரடியாக விஷயத்துக்குப் போய்விடுவோம் என்று ஷகுனி நினைத்தான். தொண்டையைக் கனைத்துச் சரி செய்து கொண்டான். “என் தந்தை மாட்சிமை பொருந்திய காந்தார அரசர் அவர்கள் கூறியது இது தான்;” குரு வம்சத்து அரசரான பாண்டு அவர்கள் முன்னோர்களூடன் கலந்திருக்கப் பித்ரு லோகம் சென்று விட்டார். ஆகவே இப்போது நாடு ராஜா இல்லாமல் இருப்பதால் திருதராஷ்டிரனின் மூத்த மகன் ஆன துரியோதனனை யுவராஜாவாக ஆக்க வேண்டும். இதுவே அவர் வேண்டுகோள்.” என்றான். இதைச் சொல்வதற்குள்ளாக அவனுக்கு வேர்த்து விறுவிறுத்துவிட்டது.

பீஷ்மர் ஏதும் பேசாமல் அமர்ந்திருந்தார். பின்னர் ஷகுனியிடம், “அவ்வளவு தானே! வேறொன்றும் இல்லையே!” என்று கேட்டார். இந்த அதிரடியான கேள்வியால் ஷகுனி திகைத்துப் போனான். ஒருவாறு தன்னைச் சமாளித்துக் கொண்டு, “மதிப்புக்குரிய என் தந்தை உங்களிடம் பெரு மதிப்பு வைத்திருக்கிறார். உங்களைப் போற்றி வணங்குகிறார். துரியோதனனுக்குத் தக்க நீதியை நீங்கள் செய்வீர்கள் என்றும் நம்புகிறார்.” என்று கூறினான். “அதெல்லாம் சரி இளவரசே, காந்தார நாட்டு மன்னர் இதை மட்டுமே கூறினாரா? பாண்டவர்களுக்கு எவ்வகையில் நீதி வழங்க முடியும் என்பதைக் குறித்து அவர் ஒன்றும் சொல்லவில்லையா? துரியோதனனுக்கு மட்டும் நீதி வழங்கினால் போதும் என்று எண்ணி விட்டாரா? இத்தகைய நீதியை துரியோதனனுக்கு வழங்குவது போல் பாண்டவர்களுக்கும் வழங்க வேண்டாமா? அது குறித்து என்ன கூறினார்?”

“என் தந்தை மதிப்புக்குரிய காந்தார அரசர், பாண்டுவின் புத்திரர்கள் எனப்படும் ஐவரையும் நீங்கள் இளவரசர்களாகவும் குரு வம்சத்துக் குழந்தைகளாகவும் ஏற்றுக்கொள்வதற்கு எந்தத் தடையும் கூறவில்லை. தாராளமாக உங்களை அந்தக் குழந்தைகளைப் பாண்டுவின் புத்திரர்களாகவே ஏற்றுக் கொள்ளச் சொல்லி விட்டார். ஆனால் பாண்டுவிற்குப் பின்னர் குரு வம்சத்து அரியணையை திருதராஷ்டிரன் பெற்றெடுத்த பிள்ளையான துரியோதனனுக்கே சேர வேண்டும். அவனுக்கே குரு வம்சத்து அரியணை உரிமையானது!” என்று திக்கித் திணறிச் சொல்லி முடித்தான் ஷகுனி. பீஷ்மர் மீண்டும் சிறிது நேரம் மௌனம் காத்தார். பின்னர், “இன்னும் ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா, காந்தார இளவரசே!” என்று கேட்டார். ஷகுனி, “வேறே ஏதும் இல்லை, பிதாமகரே1” என்று பணிவுடன் கூறினான். பின்னர் தொடர்ந்து, “என் தந்தை ஒரு நல்ல பதிலை இந்தச் செய்திக்கு எதிர்பார்க்கிறார். நீங்கள் நல்ல நீதிமான் என்று பெயரெடுத்தவர். ஆகவே துரியோதனனுக்குத் தக்க நீதியைச் செய்ய வேண்டும்.” என்றும் கூறினான்.

அவன் கேள்விக்குப் பதிலே சொல்லாத பீஷ்மர் மேலும் தொடர்ந்து ஷகுனியிடம் கேட்டார். “காந்தார இளவரசே! நீங்கள் குரு வம்சத்துத் தலைவர்கள் சிலரிடம் பேசிப் பாண்டுவின் புத்திரர்களை இளவரசர்களாக அங்கீகாரம் செய்யக் கூடாது என்று கேட்டு அதற்காக ஆதரவு திரட்டுவதாகக் கேள்விப் பட்டேன்! அது உண்மையா?” என்று அதிகாரத் தொனியில் கேட்டார். இவ்வளவு வெளிப்படையாகத் தன்னிடம் நேரிலேயே பீஷ்மர் இப்படி ஒரு கேள்வியைக் கேட்பார் என்பதை எதிர்பார்க்காத ஷகுனி சற்றே மன்னிப்புக் கேட்கும் தோரணையில், “நான் அப்படி ஒரு காரணத்துக்காக அவர்களிடம் பேசவில்லை!” என்று கூறினான். “அப்படியா? பின்னர் அவர்கள் தாமாகவே உம்மை நாடி வந்தார்களோ?” பீஷ்மர் கேட்டார். இந்தக் கேள்வியைத் தவிர்க்க விரும்பினான் ஷகுனி. நேரடியான பதிலை மட்டும் பின்னர் தவிர்த்துவிட்டு, “அவர்கள் அனைவரும் நீங்கள் பாண்டுவின் புத்திரர்களை அங்கீகாரம் செய்துவிட்டு யுதிஷ்டிரனை யுவராஜாவா அங்கீகாரம் செய்து அறிவிக்கப் போகிறீர்களா என்பதை அறிவதில் ஆர்வமுடன் இருக்கின்றனர்.” என்று சுற்றி வளைத்து பதில் கூறினான்.

“இதற்காக நீர் சில ஸ்ரோத்திரியர்களையும் கண்டு பேசி இருக்கிறீர்கள்.” பீஷ்மரின் இந்த நேரடித் தாக்குதலை ஷகுனி சிறிதும் எதிர்பார்க்கவே இல்லை. ஏனெனில் அவன் மிகவும் ரகசியமாக ஒரு சில ஸ்ரோத்திரியர்களைக் கண்டு இது குறித்துப் பேசி இருந்தான். ஆனால் எப்படியோ அது பீஷ்மருக்குத் தெரிந்திருக்கிறதே! ஷகுனிக்கு அதிர்ச்சியாக இருந்தது. “அப்படி எல்லாம் இல்லை, பிதாமகரே! ஸ்ரோத்திரியர்களைக் கண்டு நான் பேசினதன் காரணம் என்னவெனில் அவர்களிடம் இருந்து குரு வம்சத்துப் பழைய நடைமுறைகளின் படியும் இப்போதுள்ள சூழ்நிலைகளின் படியும் துரியோதனன் யுவராஜாவாக ஆக முடியுமா என்பதைத் தெரிந்து கொள்வதற்காகவே அவர்களிடம் பேசினேன்.”

“ம்ம்ம்ம், நம் அரண்மனையின் முன்னாள் ராஜகுரு ஆசாரிய விபூதியையும், இப்போதைய ராஜகுருவான ஆசாரிய பாரத்வாஜரையும் கண்டு பேசினீர்களா?”

“இல்லை, பிதாமகரே, இல்லை!”

“ஓ, அப்படியா? அப்படி எனில் நீங்கள் அவர்களுடன் எங்கள் வம்சத்துப் பாரம்பரிய நடைமுறைகள் குறித்துக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.” என்ற பீஷ்மர் தனக்குத் தானே பேசிக்கொள்ளும் தோரணையில் மேலும் பேசினார்;” ஆனால் அவர் ஒரு வித்தியாசமான ஸ்ரோத்திரியர். வித்வத் சன்ஸதின் கருத்துக்களையே எதிர்கொண்டு சவாலை எதிர்நோக்கி இருக்கிறார். தர்மக்ஷேத்திரத்தில் ஆசாரியரால் அங்கீகரிக்கப்பட்டதையே எதிர் கொண்டிருக்கிறார்.”

“இதைக் குறித்து ஆசாரியரின் கருத்து என்ன பிதாமகரே!” என்ற ஷகுனி தனக்குள் மேலும், “அதை நான் தெரிந்து கொண்டே ஆகவேண்டும். ஆசாரியரையே எதிர்த்து நிற்கும் ஓர் ஸ்ரோத்திரியன் எப்படிப்பட்டவனாக இருப்பான்?”” என்று தனக்குள்ளாக முணுமுணுத்தான். பீஷ்மர் அதற்குக் கிட்டத்தட்ட ஓர் ஆணையாக, “குரு வம்சத்துக் கடைசி அரசன் பாண்டு தான்! இப்போது அவன் இறந்து விட்டான். ஆகவே அவனுக்குப் பின்னர் அவன் குழந்தைகளே அவனுடைய வாரிசாக ஆகின்றனர். இந்த அரியணையும் அவர்களுக்கே உரியது! இப்போது பாண்டு உயிருடன் இருந்திருந்தாலும் இது தான் நடந்திருக்கும். பாண்டு இல்லாத இந்த நிலையில் இதை நடத்தி வைக்கவேண்டிய பொறுப்பு என்னுடையது!” என்று முடிவாகக் கூறினார்.