Saturday, December 31, 2016

குழல் மீதினிற்பூசி நறுநெய் குளித்தே சீவிக் குழல் முடிப்பேன் யான்!

சகோதரர்கள் ஐவரும் தங்கள் வழக்கமான ராஜ உடையையும், ஆபரணங்களையும் தரித்துக் கொண்டனர். தங்கள் ஆயுதங்களையும் எடுத்துக் கொண்டனர். அங்கிருந்து கிளம்பும்போது பீமன் துரியோதனனிடம் திரும்பிச் சொன்னான். “இத்துடன் நாங்கள் நிறுத்திவிடுவோம் என்று நினைத்து விடாதே! நீ தான் எங்கள் முக்கியமான முதன்மை எதிரி ஆவாய். நான் தான் உன்னைக் கொல்லப் போகிறேன்.  உங்களில் எவரும் தப்ப முடியாது! அதை நினைவில் வைத்துக் கொள்!” என்றான். “உன் தொடையைப்பிளந்து உன்னை மாய்ப்பேன்! துஷ்சாசனனையும் கொல்வேன்.” என்று சபதம் செய்தான்.  அர்ஜுனனும் இடைமறித்து, “நானும் கர்ணனைக் கொல்வேன் என்று சபதம் செய்கிறேன்.  ராதேயனையும் அவன் ஆதரவாளர்களையும் கொன்றொழிப்பேன்.” என்றான்.

சஹாதேவன் சொன்னான். “ஷகுனி, காந்தார இளவரசே, நீ ஓர் அவமானச் சின்னம். க்ஷத்திரிய குலத்துக்கே உன்னால் அவமானம்.  போர்க்களத்தில் நான் உன்னை எதிர்கொண்டு கொன்றழிப்பேன்.” என்றான். அதற்கு ஷகுனி கிண்டலாகச் சிரித்துவிட்டுச் சொன்னான். “அதற்கு முன்னர் நீ கொல்லப்படாமல் இருந்தால் தானே!” என்றான். நகுலன் சொன்னான். “நான் உன் மகன் உல்லூகனைக் கொல்வேன்.” என்றான். அதன் பின்னர் பாஞ்சாலி அனைவரையும் பார்த்து, “ துஷ்சாசனன், துரியோதனன் இருவரின் ரத்தத்தால் என் கூந்தலில் பூசிக் குளித்த பின்னரே இந்த என் விரிந்த கூந்தலை முடிவேன்!” என்று பயங்கரமான சபதம் செய்தாள்.  இதை எல்லாம் கேட்டுக் கொண்டிருந்த யுதிஷ்டிரன் தன் கையை எச்சரிக்கை விடுக்கும் பாவனையில் உயர்த்தினான்.  பின்னர் கூறினான்.

“என் அருமைச் சகோதரர்களே, பாஞ்சாலி, கோபத்தின் வசப்பட்டு ஆத்திரத்திற்கு இரையாகி விடாதீர்கள். தர்மத்தின் பாதையை விட்டு விலகாதீர்கள்.  அங்க தேசத்து அரசன், ராதேயனின் மகன் கர்ணன், பாஞ்சாலியைக்குறித்த அவமரியாதையான சொற்களைப் பேசும்போது எனக்கும் ஆத்திரம் மூண்டது. அவனைக் கொல்ல வேண்டுமென்றே நினைத்தேன். ஆனால் என்னால் அவனிடம் கோபத்துடனோ, ஆத்திரத்துடனோ இருக்க முடியாது! அவன் மிகவும் துணிச்சல் உள்ளவன் மட்டுமல்ல; பெருந்தன்மை உள்ளவனும் கூட. விதியின் பயனால் அநீதியைச் சந்தித்தவன்! அவனுக்கு மாபெரும் அநீதி ஏற்பட்டு விட்டது.” என்று கூறினான். பின்னர் அந்த சபை கலைந்தது. கூடி இருந்த அரச குலத்தவர் அனைவரும் அங்கிருந்து சென்றனர். தனக்கு ஆதரவளித்த அரச குலத்தினரைப் பார்ப்பதற்குக் கூட துரியோதனனால் முடியவில்லை. அவனுக்குப் பெருத்த அவமானமாக இருந்தது.

குருட்டு அரசன் திருதராஷ்டிரன் சஞ்சயனால் அழைத்துச் செல்லப்பட்டான். அவன் சகோதரர்கள் ஐவரும் சபதம் எடுத்துக் கொண்ட போதும், திரௌபதி சபதம் போட்டபோதும் கேட்டுக் கொண்டு தானிருந்தான். அவனுக்குள் அச்சம் ஏற்பட்டது. தன் மக்களுக்கு ஏதேனும் நேர்ந்துவிடுமோ என்று பயந்தான். ஆகவே அவன் திரௌபதியிடம் திரும்பி, “உங்கள் அனைவரையும் அடிமைத்தனத்திலிருந்து விடுவித்து விட்டேன். உனக்கு இதைத் தவிர வேறு ஏதேனும் வேண்டுமா? ஏதேனும் வேண்டுமெனில் கேள்!” என்றான்.  அதற்கு திரௌபதி சொன்னாள்:” என் கணவன்மார் ஐவரும் அடிமைகள் இல்லை என்றும் அதிலிருந்து அவர்களை விடுவித்து விட்டதாகவும் நீங்கள் அறிவிப்புச் செய்ததே எனக்குப் போதுமானது! நான் அதிலேயே மிகுந்த திருப்தி அடைந்து விட்டேன்.” என்றாள்.

பின்னர் தன் துணிகளைச் சரி செய்து கொண்டு மேலாடையைத் திருத்திக் கொண்டு அவள் அங்கிருந்து வெளியேறினாள்.  துரியோதனன், துஷ்சாசனன், கர்ணன் ஆகியோரும் செய்வதறியாமல் அங்கிருந்து வெளியேறினார்கள்.  தன் சகோதரர்கள் செய்த பயங்கரமான சபதங்களைச் சிறிதும் பொருட்படுத்தாமல் யுதிஷ்டிரன், தன் பெரியப்பாவின் கால்களில் விழுந்து வணங்கினான். “பெரியப்பா, நாங்கள் எப்போதுமே உங்கள் விருப்பங்களை நிறைவேற்றி வருகிறோம். ஆகவே இனியும் ஏதேனும் இருந்தால் உடனே எங்களிடம் சொல்லவும். நாங்கள் அதை நிறைவேற்றுகிறோம்!” என்றான்.  இதைக் கண்ட திருதராஷ்டிரன் மனம் கூட ஒரு கணம் நெகிழ்ந்தது.  யுதிஷ்டிரன் தன்னுடைய விருப்பங்களை நிறைவேற்றித் தருவதாய்ச் சொன்னதைக் கேட்ட அவன் மனம் யுதிஷ்டிரனின் பெருந்தன்மையால் மகிழ்ந்தது.

 மிக மெல்ல பலஹீனமான தொனியில் அவன் கூறினான். “உன்னுடைய அடக்கமான சுபாவத்தைக் கண்டு மிகவும் மகிழ்ந்தேன் யுதிஷ்டிரா! நீ மிகவும் புத்திசாலி, விவேகி, மிக உயர்ந்தவன். இன்று நடந்த விரும்பத் தகாத சம்பவங்களை எல்லாம் மறந்து விடு! என் மக்கள் செய்த பாவங்களை எல்லாம் மன்னித்து மறந்து விடு! உன்னுடைய அனைத்துப் பொருட்களையும் திரும்ப எடுத்துக் கொண்டு இந்திரப் பிரஸ்தம் செல்! சந்தோஷமாக இரு!” என்றான். யுதிஷ்டிரன் மிகவும் அடக்கத்துடன் இதைக் கேட்டுக் கொண்டிருந்தான். பின்னர் விடைபெற்று இந்திரப் பிரஸ்தம் செல்லும் ஏற்பாடுகளைக்கவனிக்கச் சென்றான்.

ஆனால் இங்கே ஹஸ்தினாபுரத்திலோ துரியோதனன் வெறுப்பிலும் ஆக்ரோஷத்திலும் இருந்தான். அவன் எவ்வளவு ஆவலுடன் இருந்தான்? ஐந்து சகோதரர்களையும், திரௌபதியையும் அடிமை ஆக்கிவிட்டதை நினைத்து சந்தோஷத்தின் உச்சியில் அல்லவோ இருந்தான்! அதற்கு அவர்கள் எதிர்த்தால் அவர்களைக் கொன்றுவிடக் கூடத் தயாராக இருந்தான். ஆனால்! இப்போதும் அவனுடைய துரதிர்ஷ்டம் முன்னால் வந்துவிட்டதே! அது அவனை விடாமல் துரத்தி வருகிறது!  மறுநாள் யுதிஷ்டிரன் தன் தம்பிமாருடனும், மனைவியுடனும் அவன் சூதாட்டத்தில் தோற்றதாகச் சொல்லப்பட்ட அனைத்துச் செல்வங்களுடனும் இந்திரப் பிரஸ்தம் செல்லத் தயாராக இருந்தான்.  அவனுடைய ஏற்பாடுகளை எல்லாம் கவனித்த துரியோதனனுக்கு மீண்டும் ஆத்திரமும், வெறுப்பும் ஏற்பட்டது.

ஓர் பைத்தியக்காரன் போலத் தன் தந்தையின் இருப்பிடம் நோக்கி ஓடினான். “தந்தையே, தந்தையே, இது என்ன? கொடுமையாக இருக்கிறதே!  நீங்கள் எப்படி பாண்டவர்கள் ஐவரையும் ஹஸ்தினாபுரம் விட்டு வெளியேறச் சொல்லலாம்? அவர்கள் மிகவும் வலுவுள்ளவர்களாகவும் மாபெரும் கூட்டணியுடையவர்களாகவும் இருந்தார்கள். ஆகவே நாம் அவர்களின் ஒற்றுமையை உடைத்து அவர்களின் ராஜ்யத்தைப் பிடுங்கிக் கொண்டு அவர்களை அடிமையாக்கலாம் என்று தந்திரமாகத் திட்டம் போட்டோம். அதில் வெல்லவும் செய்தோம்.  அத்தோடு மட்டுமா? நாம் அவர்களை எப்படி எல்லாம் அவமானம் செய்தோம்!  இகழ்ந்தும், பரிகாசமாகவும் பேசியதோடு அல்லாமல், ஏசவும் செய்தோம். “

“மூர்க்கத்தனமாகவும் ஒழுக்கக் கேடாகவும் அவர்களின் ராணியிடம் நடந்து கொண்டோம்.  நாங்கள் இதை எல்லாம் செய்ததே உங்களிடம் நம்பிக்கை வைத்துத் தான். நீங்கள் ஒருவராவது எங்களை ஏமாற்ற மாட்டீர்கள் என்று நம்பினோம். ஆனால் நீங்கள் எங்களை ஏமாற்றி விட்டீர்கள், தந்தையே!  நீங்கள் திரும்பவும் அவர்களுக்கு அரச குலத்தவர் என்னும் தகுதியைக் கொடுத்துவிட்டீர்கள். அவர்களின் க்ஷத்திரிய பரம்பரையை அங்கீகரித்ததோடு அல்லாமல் அவர்கள் ராஜ்ஜியத்தையும் திரும்பக் கொடுத்துவிட்டீர்கள். அவர்கள் கோபத்தை நாங்கள் தூண்டி விட்டு விட்டோம். இனி அவர்கள் மிகக் கடுமையான எதிரிகள். அவர்கள் இப்போது மிகப் பயங்கரமானவர்களாக ஆகிவிட்டனர். முன்னர் இருந்ததை விட இப்போது அவர்கள் மிகப் பயங்கரமான எதிரிகள்!” என்றான் துரியோதனன்.

பின்னர் சற்று நிறுத்திவிட்டு மீண்டும் தொடர்ந்தான். “தந்தையே, அவர்கள் எடுத்துக் கொண்ட பயங்கரமான சபதங்களை எல்லாம் நீங்கள் கேட்டீர்கள் அல்லவா? இனிமேல் இன்றிலிருந்து அவர்கள் எங்களை அழித்து ஒழிக்கும் திட்டங்களைப் போடுவார்கள். இனி எங்களுக்கு எந்நேரமானாலும் ஆபத்துத் தான்!” என்றான்.  மிகவும் உணர்ச்சிவசப் பட்டிருந்த துரியோதனன் அமைதியின்றி மூச்சுக் கூட விட மறந்தவன் போல் காட்சி அளித்தான்.

Friday, December 30, 2016

வண்ணப் பொற்சேலைகளாம்! அவை வளர்ந்தன, வளர்ந்தன, வளர்ந்தனவே!

திரௌபதி முழு மனதுடன் கிருஷ்ணனைச் சரண் அடைந்து அவனை வேண்டிக் கொண்டாள். அவள் அப்படிப் பிரார்த்திக்கும்போதே திடீரென விண்ணில் ஓர் அபூர்வமான பிரகாசம் தென்பட்டு அந்தப் பிரகாசம் அந்த தர்பார் மண்டபத்துக்குள்ளும் சாளரங்கள் வழியாக வந்தது. இது வரை எவரும் இத்தகையதொரு பிரகாசத்தைக் கண்டதில்லை!  தொடர்ந்து திரௌபதி கூப்பிய கரங்களுடன் பிரார்த்தித்துக் கொண்டிருக்க துஷ்சாசனன் அந்த நடு மதியத்து சூரியன் ஒரு நெருப்புக்கோளத்தைப் போல் அதீதப் பிரகாசத்துடன் வேகமாகச் சுற்றுவதைக் கண்டான். அவனுக்கு மயக்கமே வரும்போல் ஆகி விட்டது.  அத்துடன் நில்லாமல் அந்த நெருப்புக் கோளத்திலிருந்து தெரிந்த ஒளிக் கற்றை ஓர் பிரகாசமான போர்வை போல நீண்டு வந்து அந்த அறைக்குள் நுழைந்திருந்தது.  அந்த ஒளிக்கற்றையானது நேரே திரௌபதியைச் சுற்றிக் கொண்டு அவளைப் போர்வை மூடுவதைப் போல் முழுமையாக மூடியது. திரௌபதி நெருப்பையே ஆடையாக அணிந்த வண்ணம் காட்சி அளித்தாள். அதைக் கண்டு மீண்டும் மயக்க நிலைக்கு ஆளான துஷ்சாசனன் தன் கண்களைத் துடைத்துக் கொண்டு மீண்டும் சாளரங்களுக்கு வெளியே பார்த்தான்! அந்த நெருப்புக் கோளத்தின் நட்ட நடுவே அவன் கண்டது என்ன?  ஆஹா! அது கிருஷ்ண வாசுதேவன்! சிசுபாலனை வதம் செய்கையில் எவ்வாறு காட்சி அளித்தானோ அவ்வாறே இப்போதும் அந்த நெருப்புக்கோளத்தின் நடுவே  தனக்குப் பின்னே சக்கரம் சுற்ற எந்நேரமும் சக்கரத்தை எடுத்துப் பிரயோகிப்பான் போல் காட்சி அளித்தான். துஷ்சாசனன் நடுங்கினான். அவன் உடல் வியர்த்தது. கை, கால்கள் நடுங்கின.

அந்த நெருப்புக்கோளத்தையே வியப்புடனும் திகைப்புடனும் பார்த்தான் துஷ்சாசனன்.  அவன் கைகள் திரௌபதியின் புடைவையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருந்தாலும் இப்போது அவனுக்குத் தன் கைகள் மரத்துவிட்டாற்போன்ற உணர்வு தோன்றியது.  அப்படியே கைகள் செயலற்று உயிரற்றுப் போய்விட்டாற்போல் தோன்றியது. அவன் கைகளில் இருந்த புடைவை நுனி தானாக அவனை விட்டு நழுவிற்று.  தன்னையறியாமல் துஷ்சாசனன் கீழே விழுந்தான்.  ஆனால் திரௌபதி மிகவும் பயபக்தியுடன் அந்த ஒளிவட்டத்தைப் பார்த்தாள். “ஆஹா, அவன் வந்து விட்டான்! வந்தே விட்டான்! என் பிரபு! என் கோவிந்தன்! என் யஜமானன்! என் ரக்ஷகன்! என்னைப் பாதுகாக்க வந்தே விட்டான்! “ அவள் தனக்குத் தானே கண்ணீருடன் சொல்லிக் கொண்டாள்.  அந்த ஒளிவட்டம் வந்த வேகத்திலே திடீரென மறையவும் செய்தது.  அந்தத் திறமையான ஒளிவட்டம் மெல்லமெல்ல ஓர் நிஅழலைப் போல் மறைந்து போய் மதிய நேர சூரிய வெளிச்சத்தில் இரண்டறக் கலந்தது. பிதாமஹரின் உயரமான உருவம் தன் கைகளில் பரசுராமரிடம் குருகுலத்தை முடிக்கையில் அவரால் அளிக்கப்பட்ட கோடரியுடன் எழுந்து நின்றது.

வருடக் கணக்காக அனைவரும் பிதாமஹருக்குச் செய்து வந்த மரியாதை அப்போதும் சற்றும் தவறவில்லை. திரௌபதி கூடத் தன் விம்மல்களையும், புலம்பல்களையும் அடக்கிக் கொண்டு தன் மேல் துணியை எடுத்துத் தன்னைப் போர்த்திக் கொண்டு பின்னே சென்று விட்டாள்.  பிதாமஹர் தான் அமர்ந்திருந்த உயர்ந்த மேடையிலிருந்து கீழிறங்கினார். தன் வலக்கையை உயர்த்திக் கொண்டு அனைவரையும் அமைதியுடன் இருக்கச் சொல்லி ஜாடை காட்டினார்.  அவர் அப்படிக் கையை உயர்த்தியதும், அரண்மனையின் நிகழ்வுகளை அறிவிப்புச் செய்யும் காரியஸ்தர் தன் சங்கை எடுத்து முழக்கம் செய்தார்.  அந்த முழக்கம் முடிந்ததும், தன் கைகளைக் கீழிறக்கிய பிதாமஹர் அங்கே வீற்றிருந்த அரச குடும்பத்தவரை நோக்கித் திரும்பினார்.  அவர்களோ தாங்கள் முழுக்க முழுக்க பூமியில் புதைக்கப்பட்டு விட்டவர்கள் போல் அங்கிங்கும் எங்கும் நகரக் கூட முடியாதவர்களாக வாய் திறந்து பேசக் கூட முடியாதவர்களாகக் காட்சி அளித்தனர்.

“மதிப்புக்குரிய தலைவர்களே, நான் உங்களுக்கு இப்போது ஓர் உயர்ந்த கட்டளையைப் பிறப்பிக்கப் போகிறேன்.  அதை எதிர்ப்பவர் யாராக இருந்தாலும் அவர்கள் இறப்பார்கள்!” என்றார்.

பின்னர் தொடர்ந்து, “ என் மதிப்புக்குரிய தந்தை, மஹாராஜா சக்கரவர்த்தி ஷாந்தனு, இப்போது பித்ரு லோகத்தில் முன்னோர்களுடன் வீற்றிருப்பவர்,  தன் வாழ்நாளில் இப்படி ஓர் கட்டளையை ஒரே ஒரு முறை கொடுத்திருக்கிறார்.  அது எப்போதெனில் ஹைஹேயர்களால் ஆரியர்களுக்கு நேரிட்ட பேரிடரின் போது குரு வம்சத்துத் தலைவர்கள் அனைவருக்கும் இட்டிருக்கிறார்.  இன்று வரை எனக்கு அப்படிக் கட்டளை இடும்படியான சந்தர்ப்பம் ஏதும் வாய்க்கவே இல்லை!”

“ஆனால் இப்போது மீண்டும் முன்போல் ஆரியர்களின் நல்வாழ்வுக்கு பங்கமும் அச்சுறுத்தலும் ஏற்பட்டிருக்கிறது.  குரு வம்சத்துப் பெயர்பெற்ற சக்கரவர்த்தியின் குமாரர்களே!  இந்த ஆணைக்குக் கீழ்ப்படியுங்கள்.  உங்கள் வாள்களை உருவி என் முன்னர் தரையில் போடுங்கள்.” என்றார் பீஷ்மர்.  ஒவ்வொரு குரு வம்சத்துத் தலைவனும் அடுத்தவன் என்ன செய்கிறார் என்பதையே பார்த்தார்கள்.  அவர்கள் செய்வதையே தாங்களும் செய்ய யத்தனித்தார்கள். ஆனால் துரியோதனனின் ஆதரவாளர்கள் என்ன செய்வது என்று புரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தார்கள். செய்வதறியாது துரியோதனனையே பார்த்தார்கள். துரியோதனன் அதைவிடக் குழப்பத்தில் ஆழ்ந்திருந்தான். மிகவும் அச்சத்தில் உறைந்து போயிருந்தான். அவன் கண்கள் வியப்பிலும் அச்சத்திலும் விரிந்திருந்தன.

பரசுராமரால் அளிக்கப்பட்ட அந்த பயங்கரமான கோடரியைக் கண்டு துரியோதனன் நடுங்கினான். பிதாமஹர் எப்போது வேண்டுமானாலும் அந்தக் கோடரியை வீசி அவனைத் துண்டாக்கிவிடலாம். அவரை அவனால் இப்போதைய நிலையில் எதிர்க்க முடியாது. வேறு வழி என்ன? பிதாமஹர் சற்று நேரம் பொறுத்திருந்து விட்டு மீண்டும் சொன்னார்.” என் ஆணைக்குக் கீழ்ப்படி!” அவர் குரலில் இத்தனை வருஷங்களாகப் பேரன் என்று அவர் காட்டி வந்த அன்பும், ஆதரவும், மென்மையும் சற்றும் இல்லாமல் வறண்டு கடுமையாக இருந்தது. அதிகாரத் தொனி காணப்பட்டது.  இப்போது அவன் என்ன செய்ய வேண்டும்? இந்தக் கிழவனின் அடக்குமுறைக்கு அடங்கி நடப்பதா அல்லது இவனை எதிர்த்து நிற்பதா? பீஷ்மரின் கண்கள் துரியோதனனின் மேலேயே  நிலைத்திருந்தன.  “என் ஆணையை மீறப்போகிறாயா?” என்று கேட்டார் அவர். துரியோதனனுக்குத் தொண்டை அடைத்துக் கொண்டாற்போல் இருந்தது.  இப்போது திருதராஷ்டிரன் பக்கம் திரும்பிய பீஷ்மர் மெல்லிய குரலில் அவனிடம், “மகனே,  நீ பாண்டவகுமாரர்களை இங்கே பொழுதுபோக்குவதற்காகத் தான் அழைத்திருந்தாய்! இப்போது விளையாட்டு முடிந்து விட்டது! இல்லையா மகனே!” என்றார்.

திருதராஷ்டிரன் இந்த நெருக்கடியான நேரத்தில் அனைத்தையும் மறந்தே போய்விட்டான். அவன் என்ன சொன்னான் என்பதையோ, என்ன நடந்தது என்பதையோ, என்ன செய்தான் என்பதையோ முற்றிலும் மறந்துவிட்டுப் பிதாமஹரிடம், “ஆம், தாத்தா! இது வெறும் விளையாட்டுத் தான். பொழுதுபோக்குத் தான்! இந்த விளையாட்டு இப்போது முடிந்து விட்டது. தாத்தா, விளையாட்டு முடிந்து விட்டதால் பணயமாக ஈடு கட்டியவை அனைத்தையும் இப்போது திருப்பிக் கொடுத்தாகவேண்டும்.” என்றும் கூறினான். “ஆம், மகனே! ஆம்! நீ சொல்வது சரி! இப்போது உன் கட்டளையை அறிவி! இந்த மாபெரும் சபையில் அறிவிப்புச் செய்!” என்றார்.

 திருதராஷ்டிரன் பேச ஆரம்பித்தான். அவன் உதடுகள் நடுங்கின. ஏற்கெனவே மெல்லிய குரலில் பேசுபவன் இப்போது அச்சத்தில் இன்னமும் பலஹீனமான குரலில் “பாண்டவர்கள் ஐவரும், திரௌபதியும் சுதந்திரமானவர்கள்.  என் அருமை மக்களே! இவர்களிடமிருந்து நீங்கள் வென்ற செல்வங்கள், நாடுகள், மண்டலங்கள் மற்றும் அனைத்தும் இப்போது இவர்களிடம் திரும்பக் கொடுத்தாக வேண்டும்!” என்று அறிவித்தான்.


“மாட்சிமை பொருந்திய குரு வம்சத் தலைவர்களே, என் அருமை மக்களே! கௌரவர்களே! என்னுடைய இந்த ஆணைக்குக் கீழ்ப்படியுங்கள்.  உங்களில் எவரேனும் இந்த ஆணைக்குக் கீழ்ப்படிய மறுத்தால் அவர் கழுத்து இந்தக் குருவம்சத்துக்கு அர்ப்பணிக்கப்படும்.”


பீஷ்மர் ஷகுனியின் பக்கம் திரும்பினார். “காந்தார இளவரசே, ஷகுனி, விளையாட்டு இப்போது முடிந்து விட்டது. ஆகையால் நீ இனிமேல் குரு வம்சத்தவருக்கு தர்மத்தை எப்படிப் பாதுகாப்பது, நீதியை எப்படிப் பின்பற்றுவது என்பது குறித்துப் பாடம் எடுக்க வேண்டாம்!” என்றவர் துரியோதனன் பக்கம் திரும்பி, “ குழந்தாய். குரு வம்சத்தின் அதிகாரம் கொண்ட இந்தப் புனிதமான தர்பார் மண்டபத்தை ஓர் கொலைக்களமாக அதுவும் ஆடு, மாடுகளை வெட்டும் கொலைக்களமாக மாற்றி விடாதே!” என்றார்.

Thursday, December 29, 2016

ஹரி ஹரி என்றாள்! கண்ணா! அபயமுனக்கு அபயமென்றாள்!

“மிக உண்மை! அவருக்கு நாம் நம் தந்தையைப் போல் மரியாதை கொடுத்து வந்தோம். இப்போது அவருடைய கரங்களை நாம் எரித்தே ஆக வேண்டும். சுட்டுப் பொசுக்க வேண்டும். இதோ நம் மனைவியான இந்தப் பரிதாபத்துக்குரிய இளவரசியைப் பார்! எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தவள்! நாம் அவளைத் திருமணம் செய்து கொள்கையில் அவளை ஓர் அரசியாக்கிப் பார்ப்போம் என்றும் நம் பட்டமஹிஷியாக அவளே இருப்பாள் என்றும் உறுதி மொழி கொடுத்திருந்தோம்.  இப்போது அவளை நம் அண்ணன், மூத்தவன் பணயம் வைத்துத் தோற்று அடிமையாக்கி வைத்திருக்கிறானே, இந்நிலையில் அவளைப் பார்க்கையில் உனக்கு ரத்தம் கொதிக்கவில்லையா?” என்று கேட்டான்.

“ஆம், பீமா! எனக்கும் கோபம் வரத்தான் செய்கிறது. ஆத்திரத்தில் உடல் நடுங்குகிறது. அதே போல் தான் நம் மூத்தவனுக்கும் இருக்கும் அல்லவா? அதோ அவர் முகத்தைப் பார்! அவர் மனம் உடைந்து நிற்பதைக் கவனி! நம்மைப் போல் அவரும் துக்கத்தில் மூழ்கித் தவிப்பது உன் கண்களில் படவில்லையா? இப்போது அவரிடம் உன் கோபத்தைக் காட்டுவதன் மூலம் மேலும் அவரைத் துக்கத்தில் ஆழ்த்தி விடாதே! அது நம் எதிரிகளுக்கு நல்லதொரு வாய்ப்பாகி விடும். அவர்கள் நோக்கமே நம்மைப் பிரித்து ஒருவருக்கொருவர் சண்டை மூட்டி விடுவது தான்! அதை உண்மையாக்கி விடாதே! இது வரையிலும் நாம் அனைவரும் ஒருவராக வாழ்ந்து வருகிறோம். ஆறு உடல்களாகவும் ஒரே உயிராகவும் இருந்து வருகிறோம். நம் எதிரிகள் இப்போது நாம் தோற்றதை நினைத்து மட்டுமே சந்தோஷம் அடைந்திருக்கிறார்கள்.  நாம் நம் மூத்தவனோடு சண்டை போட்டால் அதன் மூலம் அவர்களுக்கு இன்னமும் சந்தோஷம் கிடைக்கும்!”

மிக முயற்சி செய்து அர்ஜுனன் பீமனை சமாதானம் செய்தான். அவர்கள் வாழ்நாளில் எப்போதுமே மூத்தவனை மதிப்பதை ஓர் கடமையாகக் கடைப்பிடித்து வந்தார்கள். அந்த நிலைமை இப்போது மீண்டும் அர்ஜுனனால் திரும்பியது. இந்த துரதிர்ஷ்டமான நிலையைக் கண்டு தன்னை அடக்கி வைத்துக்கொள்ள இயலாத விகர்ணன் என்னும் துரியோதனனின் சகோதரர்களில் ஒருவன் இப்போது எழுந்து கொண்டு திரௌபதியைப் பார்த்துப் பேச ஆரம்பித்தான்.

“மாட்சிமை பொருந்திய மஹாராணியே! அண்ணியாரே! நீங்கள் சொல்வது சரியே! அதை அப்படியே நான் ஏற்கிறேன். இந்த தர்பார் மண்டபத்தில் நீதியும், நேர்மையும் சிறிதும் இல்லை!  தாத்தா அவர்களே, இந்தக் குரு வம்சத்தின் பிதாமஹர் நீங்கள்! நீங்கள் ஏன் மாட்சிமை பொருந்திய அண்ணன் யுதிஷ்டிரன் அவர்கள் மஹாராணியைப் பணயம் வைப்பதைப் பார்த்துக்கொண்டு சும்மா உட்கார்ந்திருந்தீர்கள்? குரு வம்சத்தின் ஏனைய தலைவர்களும் வாய் மூடிக் கொண்டு உட்கார்ந்திருந்தார்களே! யுதிஷ்டிரன் தன் ராணியைப் பணயம் வைக்கும்போது ஏன் ஒருவருமே மறுத்துப் பேசவில்லை?” என்று கேட்டான்.  மிகவும் சிரத்தையுடனும், பவித்திரமான மனதுடனும் விகர்ணன் கேட்ட இந்தக் கேள்விகளால் அந்த தர்பார் மண்டபத்தின் இறுக்கமான சூழ்நிலை சற்றே மாறியது. அனைவரும் விகர்ணனையே கவனித்தார்கள்.

அங்கிருந்த மற்ற அரசகுலத்தவரைப்பார்த்துத் திரும்பிய விகர்ணன், “ஏன் அனைவரும் மௌனமாக உட்கார்ந்திருக்கிறீர்கள்? இப்போதாவது பேசலாமே! நம்மில் எவருக்கும் துரியோதனனை எதிர்த்துப்பேசவோ உண்மையை உரக்கச் சொல்லவோ தைரியமே இல்லையா? நம்மில் யாருமே தைரியசாலிகள் இல்லையா? மதிப்புக்குரிய தாத்தா அவர்களே! நான் எப்போதுமே நான் நினைப்பதை உண்மை என்று கருதுவதை சரி என என் மனதுக்குப் பட்டதைச் சொல்லியே தீருவேன். ஒரு வேளை அதுதான் என் கடைசி வார்த்தைகளாக இருந்தாலும் சரி! நான் அவற்றைப் பேசியே தீருவேன்!”

“மரியாதைக்குரிய என் அண்ணன் துரியோதனன் தன் தகுதியிலிருந்து கீழிறங்கி விட்டார். அதுவும் யுதிஷ்டிரனுக்குத் தன் ராணியைப் பணயம் வைக்கும் உரிமை சிறிதும் இல்லை.  ஏனெனில் மஹாராணி பாஞ்சாலி யுதிஷ்டிரனுக்கு மட்டும் மனைவி அல்ல. மற்ற நால்வருக்கும் மனைவி ஆவாள்.  இப்போது நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். பிதாமஹரே! மற்ற நால்வரின் சம்மதம் இல்லாமல் யுதிஷ்டிரனால் எப்படித் தன் மனைவியைப் பணயம் வைக்க முடியும்? அவளை அவர் இழந்ததாக எப்படிக் கருத முடியும்? அவள் எப்படி அடிமை ஆவாள்? அவளை நாம் எப்படி அடிமை என்று சொல்லலாம்? அவள் கௌரவர்கள் ஆன எங்களுக்குச் சொந்தம் இல்லை. அவள் சுதந்திரமானவள்!” என்று கூறினான் விகர்ணன். விகர்ணனின் வார்த்தைகள் அங்கிருந்த அரச குலத்தவர் அனைவர் மனதிலும் குறிப்பிட்டுச் சொல்லத் தக்க மாற்றத்தை உண்டு பண்ணியது. ஆனால் இது எதுவும் துரியோதனனின் ஆதரவாளர்கள் மனதை மாற்றவே இல்லை.

அங்க தேசத்து அரசன் கர்ணன் விகர்ணனைப் பார்த்து ஆத்திரம் கொண்டான். அவன் எழுந்து நின்று கூறினான். “விகர்ணா? நீ என்ன உன்னை மற்றவர்களை விட அதிக புத்திசாலியாகவும், விவேகியாகவும் எண்ணிக் கொண்டிருக்கிறாயா?  இங்கிருப்பவர்களை விட நீ அதிகம் புத்திசாலியா? இங்கிருக்கும் அனைவரும் பிதாமஹர் பீஷ்மர் உள்பட, அரசர் திருதராஷ்டிரர், துரோணாசாரியார், கிருபாசாரியார் மற்றும் மதிப்புக்குரிய மற்ற அரசகுலத்தவர் அனைவரும் திரௌபதி ஓர் அடிமை என்பதை ஒப்புக் கொண்டு விட்டார்கள்!” என்றான்.

“அவள் கணவன்மார் ஐவரையும் பார்! பெரிய வீரர்களாம். வீராதி வீரர்கள்! அவர்களும் தங்களை ஓர் அரசகுலத்தவர் என்றே சொல்லிக் கொள்கின்றனர். அவர்கள் அவளை, அந்தப் பாஞ்சால இளவரசியை ஓர் அடிமை என்று நினைக்காவிட்டால், அவள் இங்கே இழுத்து வரப்பட்டதை எப்படி அனுமதித்தார்கள்? அவள் கணவன்மாரின் நிலைமை என்ன? தர்மத்தின் பாதுகாப்போ தர்மத்தின் சட்டதிட்டமோ அவர்களைக் காப்பாற்றவில்லை, அவர்களிடம் அது எடுபடவும் இல்லை. ஏனெனில் அவர்கள் ஐவருமாகச் சேர்ந்து ஒரு பெண்ணைப் பங்கு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்! இவர்களை தர்மத்தின் பாதுகாவலராக எப்படிச் சொல்ல முடியும்?”
“அவள் ஓர் பரத்தை! பொதுவில் ஐவரால் பங்கு போட்டுக் கொள்ளப்படுபவள். வெட்கம் கெட்டவள்! இப்போது அவளுக்கு என்ன வந்தது? இங்குள்ள தகுதி வாய்ந்த மன்னர்கள் நிறைந்த அரசவையில் அனைவர் முன்னாலும் வருவதற்கு என்ன கேடு?  விகர்ணா, நீ எங்கள் அனைவரையும் விட புத்திசாலி, விவேகி என்று பெயரெடுக்க விரும்புகிறாய்! ஆனால் இங்கே நம் முன்னர் அவள் கொண்டு வரப்பட்டதன் மூலம் அவளுடைய அடக்கத்துக்கோ, நாணத்துக்கோ பங்கம் வந்துவிட்டதாக எண்ணிச் சீற்றம் கொள்ளாதே! பயப்படவேண்டாம்.  இதோ இந்த ஐந்து சகோதரர்களும் அவர்கள் அணிந்திருக்கும் உடையை அணியக் கூடத் தகுதி அற்றவர்கள். துஷ்சாசனா, எழுந்து சென்று இந்த ஐவரின் ஆடைகளை அவர்கள் உடலிலிருந்து நீக்கிவிடு!  மறக்காமல் இதோ இந்தப் பரத்தை திரௌபதியின் உடலில் இருந்தும் ஆடையை நீக்கி விடு! பின்னர் அவர்கள் யஜமானன் ஆன துரியோதனனிடம் அவர்களை ஒப்படைத்து விடு!” என்றான்.

கர்ணன் கூறிய இந்தக் கொடூரமான சொற்களைக் கேட்ட சகோதரர்கள் ஐவரும் தங்கள் மேலாடைகளை நீக்கினார்கள். அவற்றை துரியோதனன் காலடியில் சமர்ப்பித்தார்கள்.  திரௌபதியால் அப்படிச் செய்ய முடியாது. ஏனெனில் அவள் உடலில் ஒற்றை ஆடை மட்டுமே தரித்திருந்தாள். அதை எப்படி நீக்குவது? ஆகவே அவள் சும்மா இருந்தாள். ஆனால் துஷ்சாசனன் அவளை விடவில்லை. அவள் ஆடையின் ஒரு நுனியைப் பிடித்து இழுத்தான். மிக வேகத்தோடு அதை அவள் உடலிலிருந்து இழுத்து அகற்ற யத்தனித்தான்.  திரௌபதி வெறித்தனமாக அதை எதிர்த்தாள்.  தன் கணவன்மாரை ஒருவர் பின் ஒருவராகப் பார்த்தாள். இந்த அவமதிப்பிலிருந்து அவள் தப்புவதற்காக எதையும் அவர்கள் செய்யப் போவதில்லை; அவர்களால் செய்ய முடியாது. அந்த சபையில் இருந்த மற்றப் பெரியோர்களையும் அவள் பார்த்தாள். அவர்களிமிருந்து ஏதேனும் உதவி கிட்டுமோ என்றும் எதிர்பார்த்தாள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக எவரும் இருந்த இடத்தை விட்டு அசையவில்லை.  தான் எந்த உதவியும் கிடைக்கப் பெறாதவளாக நிராதரவான நிலையில் இருப்பதை திரௌபதி உணர்ந்தாள்.

அப்போது சற்றும் எதிர்பாரா வண்ணம் அவள் மனம் அவள் ஸ்வீகரித்துக் கொண்ட சகோதரன் கிருஷ்ண வாசுதேவன் பால் சென்றது.  அவன் அவளுக்கு வழிகாட்டியாகவும் ஒரு சிறந்த நண்பனாகவும் இருந்து வருகிறான், பல வகையிலும் அவளுக்குத் தக்க ஆலோசனைகள் சொல்லி வருகிறான்.  அவள் தன்னையுமறியாமல் தன் இரு கரங்களையும் ஒன்று சேர்த்துக் கூப்பிக் கொண்டாள்.  பின்னர் கண்ணீர் மழையாகப் பொழியக் கிருஷ்ண வாசுதேவனை நினைத்துப் பிரார்த்திக்க ஆரம்பித்தாள்.  பிரார்த்திக்கும்போதே அவள் தன்னையுமறியாமல் விம்மி விம்மி அழ ஆரம்பித்தாள். “சகோதரா, கிருஷ்ண வாசுதேவா! நீ இப்போது எங்கே இருக்கிறாய்? இப்போது என்னை இந்த நிலைமையிலிருந்து உன் ஒருவனால் மட்டுமே காப்பாற்ற முடியும்.  கிருஷ்ணா! கிருஷ்ணா! எங்கே இருக்கிறாய் நீ?  நான் என்னை உன் காலடிகளில் சமர்ப்பிக்கிறேன். உன்னிடம் சரணாகதி அடைந்து விட்டேன். என்னை இந்த ராக்ஷசர்களிடமிருந்து நீ தான் காப்பாற்ற வேண்டும். ஹே கிருஷ்ணா, கோவிந்தா! ஹரே முராரி! ஹே நாத நாராயண வாசுதேவா! என்னைக் காப்பாற்று!”

Wednesday, December 28, 2016

வேதச்சுடர்த்தீ முன் வேண்டி மணஞ்செய்து பாதகர் முன் இந்நாள் பரிசழிதல் காண்பீரோ?

ஆத்திரமும் கோபமும் முகத்தில் தெரிய, கோபத்தினால் நடுங்கும் குரலில் பாண்டவர்களின் ராணியான திரௌபதி அங்கே அமர்ந்திருந்த பீஷ்மரை நோக்கி, “நான் இங்கே குரு வம்சத்தின் பெரியோர்களைக் காண்கிறேன். அனைவரும் தர்மத்தைப் பாதுகாப்பவர்கள். எப்போது என்று அறிய முடியாத பழங்காலத்திலிருந்து தர்மத்திற்கும், நீதிக்கும் நேர்மைக்கும் மட்டுமே இடம் கொடுத்து, அதற்காகவே வாழ்ந்து வருபவர்கள்.  இவர்கள் கண் முன்னர் அதர்மம் தலை தூக்க அஞ்சி, புற்றில் சுருண்ட பாம்பாக அடங்கிக் கிடக்கும்.”
தன் சுட்டு விரலை துரியோதனன் பால் சுட்டியவண்ணம் அவள், “இங்கே ஒரு மனிதன் அதிகார போதையில் மூழ்கித் தன் சகோதரனை அனுப்பி ஒரு பெண்ணை, அதுவும் குரு வம்சத்து ராணியை இழுத்துக் கொண்டு இந்த சபைக்கு வரும்படி கூறியுள்ளான்.” சற்று நேரம் பொறுத்து அவள் மீண்டும் பேசினாள். “உங்கள் அனைவரின் முன்னிலையில் நான் என் பிரபு, என் கணவர், பாண்டுவின் குமாரர், தர்மத்தின் காவலர் யுதிஷ்டிரரிடம் ஒரு கேள்வி கேட்க விரும்புகிறேன். அவர் சூதாட்டத்தின் போது முதலில் யாரை இழந்தார்? அவரை இழந்த பின்னர் என்னையா? அல்லது என்னை முதலில் இழந்த பின்னர் அவரை இழந்தாரா?” என்று கேட்டாள். அவள் குரல் பலஹீனமாக இருந்தாலும் தன் சக்தி அனைத்தையும் திரட்டிக் கொண்டு அவள் பேசினாள்.

பீஷ்மரைப் பார்த்து அவள், “குரு வம்சத்தின் மூத்தவரே, பிதாமஹரே, உங்களை வணங்கிக் கேட்டுக் கொள்கிறேன். என்னுடைய இந்த எளிய கேள்விக்கு விடை கூறுங்கள். நீங்கள் என்னை ஓர் அடிமையாக நினைக்கிறீர்களா அல்லது சுதந்திரமான பெண்மணியாக நினைக்கிறீர்களா?” என்று கேட்டாள். தன் ஐந்து கணவன்மாரையும் மிகவும் வெறுப்புடன் பார்த்தாள்.  அவளைக் கண்ட யுதிஷ்டிரனுக்கு துக்கம் அதிகம் ஆகியது. எவ்வளவு சீருடனும், சிறப்புடனும் இருந்தவள், இருக்க வேண்டியவள், இம்மாதிரியான ஓர் தாழ்ந்த நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டாளே! இதை எண்ணிய யுதிஷ்டிரன் அவமானத்தால் தலை குனிந்து அமர்ந்து விட்டான். அவனால் பணயத்துக்கு உள்ளாக்கப்பட்ட தன் தேவியை நிமிர்ந்து பார்க்கக் கூட மனமோ தைரியமோ இல்லை! ஆனால் மாட்சிமை பொருந்திய திரௌபதி, பாஞ்சால இளவரசி, பாண்டவர்களின் மனைவி, இந்திரப் பிரஸ்தத்தின் ராணி கோபத்தின் உச்சியில் இருந்தாள்.

பீஷ்மரை ஆவேசத்துடன் பார்த்தாள். “உங்களை நாங்கள் மிகவும் தைரியசாலியாகவும், அதிகம் கற்றறிந்தவராகவும் நினைத்து கௌரவித்து வருகிறோம், பிதாமஹரே! இந்தக் குரு வம்சத்திலேயே உங்களைப் போன்ற சிறந்த அறிஞர் எவருமில்லை என்கிறார்கள்.  இப்போது என் கேள்விக்கு நீங்கள் விடை அளியுங்கள்!” என்றாள்.  பீஷ்மர் தன் தொண்டையைக் கனைத்துக் கொண்டு துஷ்சாசனனைப் பார்த்தார்.  அவன் தன் உடைவாளை உருவிக்கொண்டு திரௌபதி அருகே நின்றிருந்தான். பின்னர் திரௌபதியிடம் அவர், “உன்னுடைய கேள்விக்கு சரியான தக்க பதில் அளிக்க முடியாத நிலையில் நான் இப்போது இருக்கிறேன் திரௌபதி! தர்மத்தின் நிழல் மிகவும் நுட்பமானது. அது எங்கே எப்போது விழுகிறது என்றோ விழாமல் இருப்பது குறித்தோ அறிவது அத்தனை எளிதல்ல!” என்ற பீஷ்மர் சற்றே நிறுத்தினார்.

பின்னர் மேலும் தொடர்ந்து, “ஒரு மனிதன் எப்போது தன்னுடைய உடைமைகள் எல்லாவற்றையும் இழந்து தன்னையும் இழக்கிறானோ அவனுக்குத் தன்னுடைய மனைவியைப் பணயம் வைக்கும் உரிமை இல்லை!” என்றார்.  இந்தக் கிழவர் தன்னுடைய வாக்கு வன்மையால் தங்கள் முக்கிய நோக்கத்தைப் புரட்டிப் போட்டுவிடுவார் என்னும் எண்ணம் துரியோதனனுக்கும் அவன் சகாக்களுக்கும் வந்தது.  அவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு துரியோதனனின் அடுத்த ஆணைக்காகக் காத்திருந்தார்கள். பிதாமஹர் இந்தப் பிரச்னையின் நெருக்கடியான சூழ்நிலையை துரிதப்படுத்த விரும்பவில்லை.  ஆகவே தன் கைகளால் அங்கே அமைதி நிலவ வேண்டினார்.

“அடுத்தபடியாக, “ என்று ஆரம்பித்துத் தொடர்ந்து பேச ஆரம்பித்தார் அவர். ஒரு மனிதன் தன் அனைத்து உடைமைகளையும் சூதாட்டத்தில் தோற்றாலும் தோற்காவிட்டாலும் அவன் தன் மனைவியைப் பணயம் வைக்க முடியும்!” என்றார். “யுதிஷ்டிரனுக்கு நன்கு தெரியும் ஷகுனி சூதாட்டத்தில் சிறந்த நிபுணன் என்பதை நன்கு அறிவான். அதை அறிந்திருந்தும் தான் அவன் ஷகுனியோடு இந்தச் சூதாட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டான். விரும்பியே பங்கெடுத்தான். அவன் விரும்பியே அதில் மாட்சிமை பொருந்திய ராணியான உன்னை,  பாஞ்சால இளவரசியைப் பணயம் வைத்துத் தோற்றான். நான் உன்னுடைய கேள்விக்குத் தக்க பதில் அளிக்க முடியாத நிலையில் இருக்கிறேன், பாஞ்சாலி!” என்றார். அவ்வளவில் திரௌபதியின் ஆக்ரோஷம் அதிகம் ஆனது. “பிதாமஹரே! உங்கள் எண்ணமே தப்பு. அதாவது ஆரியபுத்திரர் அவருடைய சொந்த விருப்பத்தின் பேரில் இங்கே வந்திருக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்! அல்ல, பிதாமஹரே! அவர் அப்படி வரவில்லை. இந்திரப் பிரஸ்தத்தை விட்டுக் கிளம்பும் முன்னரே இதை அவர் சித்தப்பா விதுரரிடம் தெரிவித்து விட்டார்.”

“பின்னர் அவன் ஏன் இங்கே வந்தான்?” என்று கோபமாகக் கேட்டான் துரியோதனன்!

“ஹூம்! இந்திரப் பிரஸ்தத்தில் மஹாராஜா யுதிஷ்டிரரிடம் இது வெறும் விளையாட்டு என்றும் பொழுதுபோக்காக ஆடுவதற்காக அழைப்பு அனுப்பப்பட்டிருப்பதாகவும் தான் சொன்னார்கள். மரியாதைக்குரிய பெரியோர்களே, இந்த அநியாயத்தை, அநீதியைப் பாருங்கள்! மூத்தவரான யுதிஷ்டிர ராஜா துரியோதனனுடன் ஓர் விளையாட்டாக ஆடுவதற்காகத் தான் அழைப்பு அனுப்பப்பட்டது. அதை நம்பி நாங்கள் ஹஸ்தினாபுரம் வந்ததும் இங்கே துரியோதனனுக்கு பதிலாக ஷகுனி ஆடுவார் என்று சொல்லி விட்டார்கள்!” என்ற திரௌபதி சற்றே நிறுத்தினாள். மேலும் தொடர்ந்து, “  இப்போது ஷகுனி அவர்கள் ஆடியதால் என் பிரபு யுதிஷ்டிரருக்கு இந்த விளையாட்டில் ஜெயிப்பதற்கான வாய்ப்பே தரப்படவில்லை. உங்கள் அனைவருக்கும் இது தெரியும். பிதாமஹரே, நான் உங்களைக் கேட்கிறேன்! ஏன் நீங்கள் இந்த அநியாயமான விளையாட்டைத் தடுக்க முற்படவில்லை?  இந்தக் குடும்பத்திற்கு நீங்கள் தான் தலைவர். அனைவருக்கும் மூத்தவர். பிதாமஹர்! அப்படி இருந்தும் நீங்கள் வாய் மூடி மௌனமாக இருந்தது ஏன்? துரியோதனன் இப்படியான ஓர் அநியாயமான விளையாட்டு விளையாடுவதை ஏன் நீங்கள் கண்டிக்கவில்லை?”
 
சற்று நேரம் அங்கே எவரானும் பதில் கொடுப்பார்கள் என்று நினைப்பது போல் மௌனமாகக் காத்திருந்தாள் திரௌபதி! யாரும் பேசவில்லை. பின்னர் தொடர்ந்து, “ நீங்கள் சொன்னீர்கள்! ஆர்யபுத்திரர் இந்த விளையாட்டைத் தன் சொந்த விருப்பத்தின் பேரில் தான் விளையாடினார் என்றீர்கள்!  அதோடு அவர் சுய விருப்பத்தின் பேரில்  என்னைப் பணயம் வைத்ததாகச் சொல்கிறீர்கள். பிதாமஹரே, நான் உங்களை ஒரு கேள்வி கேட்கிறேன். இந்த தர்பார் மண்டபம் தர்மத்தின் பாதையில் அரசாட்சி நடத்தும் அரசர்களுக்கானதா? அல்லது தர்மத்தைப் பாதுகாப்பதிலிருந்து இந்தக் குரு வம்சத்து அரசர்கள் நிறுத்திக் கொண்டனரா?  என் தந்தை மரியாதைக்குரிய பாஞ்சால அரசர், துருபதர், எந்த ராஜ சபையிலும் பெரியோர் இல்லை எனில் அதை ஓர் ராஜசபையாகவே கருதக் கூடாது. ராஜ சபைக்கு அது லாயக்கற்றது என்பார். தாங்கள் உண்மை என்று நினைப்பதை, உண்மையான கருத்தைப் பேசவில்லை எனில் அவர் ஓர் ஆண்மகனே அல்ல! எங்கே உண்மை இல்லையோ, அங்கே நேர்மையும் இல்லை!”

அப்போது பலத்த சிரிப்புடன் அவள் பேசுகையில் துஷ்சாசனன் குறுக்கிட்டான். அவன் அவள் பக்கம் திரும்பினான். “ஓர் நேர்மையான விளையாட்டில் நீ துரியோதனனுக்கு அடிமையாகி விட்டாய். நீ இப்போது ஓர் அடிமை! தர்மத்தின் நுணுக்கங்களைப் பற்றி உனக்கு ஏன் வீண் கவலை? நீ ஓர் அடிமை! உன்னுடைய தர்மம் இப்போது என்னவெனில் உன் புதிய யஜமானனை எவ்வகையிலாவது திருப்தி செய்ய வேண்டும். உன்னுடைய யஜமான் கௌரவர்களின் தலைவனும் அரசனுமான துரியோதனன். அவனுக்குத் திருப்தி ஏற்படும் வகையில் நீ நடந்து கொள்ள வேண்டும்.”  திரௌபதி மிகவும் வெறுப்புடன் துஷ்சாசனைப் பார்த்தாள். அவள் பார்வையில் ஆக்ரோஷம் தெரிந்தது. அவள் எல்லாம் வல்ல அந்தப் பரமசிவன் தன் மூன்றாவது கண்ணால் எரிப்பது போல் துஷ்சாசனனையும் எரித்துவிடலாமா என்று எண்ணுவது போல் தெரிந்தது. ஆனால் அவள் வாய் திறந்து எதுவும் பேசவில்லை.

பீமனால் தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியவில்லை. புயல் காற்றில் ஆடும் ஓர் இலை போல் நடுங்கினான். யுதிஷ்டிரனை வெறுப்புடன் பார்த்தான். பின்னர் அவனிடம், “பார், நன்றாகப் பார்! உன் முட்டாள் தனத்தாலும் பைத்தியக்காரத்தனத்தாலும் என்ன நிகழ்ந்திருக்கிறது என்பதைப் பார்! நம்மிடம் இருந்த எல்லாவற்றையும் நீ சூதாடிப் பணயம் வைத்துத் தோற்று விட்டாய்! அதோடு நிறுத்தினாயா! எங்களையும் பணயம் வைத்து சூதாடித் தோற்றதோடு அல்லாமல் எங்களை எல்லாம் ஓர் அடிமையாகக் கீழ்த்தரமான நிலைக்குக் கொண்டு வந்து விட்டாய்! போகட்டும்! அதைக் கூட நான் பொறுத்துக் கொண்டு விடுவேன். ஆனால் இது! திரௌபதியை இந்த சபைக்கு ஓர் அடிமைப் பெண்ணாக அழைத்து வந்திருப்பதை என்னால் சிறிதும் பொறுக்க இயலாது. “ இதைச் சொல்லிய வண்ணம் தன் பிடரி மயிரைச் சிலிர்த்துக் கொண்டான் பீமன். ஓர் சிங்கம் தன் பிடரி மயிரைச் சிலிர்ப்பது போல் இருந்தது அது!

“பாஞ்சால நாட்டு இளவரசியைப் பார், மூத்தவனே, நன்றாகப் பார்! ஆடு, மாடுகளை வெட்டுவதற்கு இழுத்துச் செல்வதைப் போல் அவளை இங்கே இழுத்து வந்திருக்கிறான் பார்! இதை என்னால் இன்னும் எத்தனை நேரம் பார்த்துக் கொண்டு பொறுத்திருக்க முடியும்? சஹாதேவா, விரைவில் சென்று நெருப்பை எடுத்து வா! நான் உடனே மூத்தவனின் கைகளை, மனைவியைப் பணயம் வைத்த அந்தக் கைகளை எரித்துச் சாம்பலாக்குகிறேன்!” என்று பற்களைக் கடித்துக் கொண்டு கூறினான்.  அர்ஜுனன் பீமன் இவ்வாறு கடுமையான வார்த்தைகளைச் சொல்லிப் பிதற்றுவதைக் கண்டு மிகவும் வருந்தினான். பீமனின் தோள்களில் கைகளை வைத்த வண்ணம், அவன், “சகோதரா, பீமா! உனக்கு என்ன ஆயிற்று? இதற்கு முன்னர் நீ ஒருபோதும் மூத்தவரை இப்படிக் கடுமையாக வசை பாடிக் கேட்டதில்லையே! நாம் நம் தந்தையைப் போல் அல்லவா அவருக்கு மிக்க மரியாதை கொடுத்து வந்திருக்கிறோம்.” என்றான். பொறுமையின்றி பீமன் இடையில் குறுக்கிட்டான்.        

Monday, December 26, 2016

பாண்டவர் தேவியுமல்லை நீ! புகழ்ப் பாஞ்சாலத்தான் மகளல்லை நீ!

அங்கே நின்றிருந்த ஓர் ஊழியனிடம் துரியோதனன் கூறினான். “பிரதிகாமி, பெண்கள் தங்கும் அந்தப்புரம் செல். அங்கிருக்கும் நம் அடிமை திரௌபதியிடம் சொல். அவள் இப்போது எனக்கு உரியவள் என்று எடுத்துச் சொல். உடனே அவளை தர்பார் மண்டபத்துக்கு வரச் சொல். என் ஆணை என்று தெரிவி! அவளுடைய யஜமானர்களான எங்களுக்கு அவள் உடனடியாக இங்கே வந்து தன் வணக்கங்களைத் தெரிவித்துவிட்டு அடிமைகளுக்குரிய வேலைகளைத் தொடங்க வேண்டும் என்று சொல்!” என்றான். அந்த ஊழியன் கண்களில் அச்சம் தெரிந்தது. அதைக் கண்ட துரியோதனன் மேலும் தொடர்ந்து கூறினான். “ பிரதிகாமி, விதுரன் இப்போது விவரித்தவற்றைக் கேட்டுவிட்டு இதன் பின் விளைவுகள் என்னவாக இருக்குமோ என்று அஞ்சுகிறாயா? பயப்படாதே! இதோ பாண்டவ சகோதரர்கள் ஐவருமே இப்போது எங்கள் அடிமைகள். ஆகவே இவர்கள் ஐவரின் மனைவியுமான திரௌபதியும் எங்கள் அடிமையே!” என்றான்.

அரை மனதாக அந்த ஊழியன் பிரதிகாமி பெண்கள் தங்கும் அந்தப்புரம் நோக்கிச் சென்றான். அங்கே விசாரித்ததில் திரௌபதி மாதாந்திர விலக்கின் காரணமாக அரச குடும்பத்தினர் தங்கவென்று ஏற்படுத்தப்பட்டிருந்த தனி அறையில் இருப்பதைத் தெரிந்து கொண்டான். அங்கே இருந்த திரௌபதியோ விரைவில் மோசமான பேரிடர் ஒன்று ஏற்படப் போகிறது என்பதைத் தன் உள்ளுணர்வால் புரிந்து கொண்டிருந்தாள். எந்த நேரமும் அது தன்னையும் வந்து தாக்கும் என எதிர்பார்த்திருந்தாள். அதுவும் அவள் மாத விலக்கின் காரணமாகத் தனித்திருக்கையில் தன்னை நோக்கி ஊழியன் பிரதிகாமி வருவதைப் பார்த்ததும் அவள் நெஞ்சு உலர்ந்து போனது. அச்சத்தில் மனம் திக், திக் என அடித்துக் கொண்டது. அவளுக்கு ஏற்கெனவே யுதிஷ்டிரன் இம்மூவுலகிலும் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காகத் தங்கள் அனைவரையும் தியாகம் செய்து விடுவான் என்னும் எண்ணம் ஆழப் பதிந்திருந்தது. அப்படி ஏதானும் நடந்திருக்குமோ?
பிரதிகாமி அறைக்கு வெளியே நின்ற வண்ணம் தன் கைகளைக் கூப்பிக் கொண்டான். பின்னர் தன் தலையைக் குனிந்து வணக்கம் தெரிவித்தான். “மாட்சிமை பொருந்திய அரசியே! உங்களை தர்பார் மண்டபத்திற்கு அழைத்துச் செல்லவே நான் வந்துள்ளேன்!” என்றான். “என்ன? தர்பார் மண்டபத்திற்கா? அதுவும் என்னுடைய இந்த நிலைமையிலா? அது எப்படி முடியும்?” என்று கேட்டாள்.  “என்னை மன்னியுங்கள், மாட்சிமை பொருந்திய அரசியே! நான் உண்மையையும் பேச முடியாது. அதே சமயம் உங்களிடம் பொய்யும் சொல்ல முடியாது. மாட்சிமை பொருந்திய இந்திரப் பிரஸ்தத்து அரசர் யுதிஷ்டிரன் சூதாட்டத்தின் போது உங்களையும் பணயம் வைத்து ஹஸ்தினாபுரத்து யுவராஜா துரியோதனனிடம் உங்களை இழந்து விட்டார்.  யுவராஜா துரியோதனன் இப்போது உங்களை தர்பார் மண்டபத்துக்கு அழைத்திருக்கிறார்.” என்றான்.

திரௌபதி திகைத்தாள்.  சிறிது நேரம் ஆனது அவள் தன்னிலைக்கு வர! தன்னிலைக்கு அவள் வந்ததும், கேட்டாள். “என்ன சொல்கிறாய்? பிரதிகாமி? என்ன இது? என் கணவருக்குப் புத்தி பிசகி விட்டதா? அவர் என்னை எப்படிப் பணயம் வைக்க முடியும்?” அதற்குப் பிரதிகாமி தன் கைகளைக் கூப்பிய வண்ணம் கூறினான். “மாட்சிமை பொருந்திய அரசர் யுதிஷ்டிரன் முதலில் தங்கள் உடைமைகளையும், செல்வங்களையும் இழந்தார். பின்னர் இந்திரப் பிரஸ்தத்தை இழந்தார். அதன் பின்னர் தன் சகோதரர்கள் ஒருவர் பின் ஒருவராக இழந்தார். பின்னர் தன்னையும் இழந்தார். அதன் பின்னர் தன்னுடைய க்ஷத்திரிய குலத்தின் மகன் என்னும் தகுதியை இழந்தார். அதன் பின்னர் உங்களைப் பணயம் வைத்து உங்களையும் இழந்தார்!” என்று விவரித்தான்.

திரௌபதியின் முகம் ஆத்திரத்திலும் தாங்கொணாக் கோபத்திலும் சிவந்தது. “பிரதிகாமி, உடனடியாக தர்பார் மண்டபம் செல்! அங்கே என் கணவர் யுதிஷ்டிரன், பாண்டுவின் புத்திரனிடம் கேள்! அவர் என்னை எப்போது இழந்தார் என்று கேள்! தன்னையும் தன் சுதந்திரத்தையும் இழந்த பின்னர் என்னை இழந்தாரா? அல்லது அதற்கு முன்னரா என்று நான் கேட்டதாக ஆரிய புத்திரரிடம் கேள்!” என்று பதில் கொடுத்தாள். பிரதிகாமி மீண்டும் தர்பார் மண்டபம் நோக்கிச் சென்றான். அங்கே யுதிஷ்டிரனைப் பார்த்து அவன், “பிரபுவே, மதிப்புக்குகந்த பாஞ்சால இளவரசியும், உங்கள் ராணியுமான தேவி அவர்கள் உங்களிடம் இதைக் கேட்கச் சொன்னார்கள். அவரை நீங்கள் இழந்தது உங்கள் சுதந்திரத்தைப் பறி கொடுத்த பின்னரா அல்லது அதற்கு முன்னரா என்று அறிய விரும்புகிறார்!” என்றான்.

யுதிஷ்டிரனுக்கு மூச்சு முட்டியது. அவன் உள்ளத்தில் உணர்ச்சிப் பிரவாகம் எடுத்து ஓடியதில் அவன் மூழ்கி விடுவான் போல் இருந்தது. அவனால் பேச முடியவில்லை. அதோடு இல்லாமல் அவன் தர்பார் மண்டபத்தில் வைத்து எதையும் பேசவும் விரும்பவில்லை. திரௌபதியை அவன் இழந்தது எப்போது என்பது குறித்த கருத்து எதையும் இப்போது கூற அவன் விரும்பவில்லை. திரௌபதியைப் பணயம் வைத்தது சரியானது தானா என்பது குறித்தும் அவன் ஏதும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் துரியோதனன் மிகவும் ஆத்திரத்துடன் பிரதிகாமியிடம் கூறினான். “அந்தப் பெண்மணியை இங்கே தர்பார் மண்டபத்துக்கு வரச் சொல்! அவளே நேரில் இந்தக் கேள்வியைக் கேட்கட்டும்!” என்றான்.  பிரதிகாமி திரும்பிச் சென்று திரௌபதியிடம் யுதிஷ்டிரன் பதில் ஏதும் கொடுக்கவில்லை என்றும், துரியோதனன் அவள் தர்பார் மண்டபம் வந்தே ஆகவேண்டும் என்று வற்புறுத்துவதாகவும் கூறினான்.

துரியோதனனின் இந்தக் கட்டளையைப் பிரதிகாமி கூறியதும் திரௌபதி சொன்னாள்: ”நீ மீண்டும் தர்பார் மண்டபத்துக்குப் போ! அங்கே என் பிரபுவிடம் நான் செய்ய வேண்டியது என்ன என்று கேள்! அவர் சொல்வதை மட்டுமே நான் கேட்பேன். மற்றவர் பேச்சைக் கேட்க மாட்டேன்!” என்று தீர்மானமாகச் சொன்னாள். மீண்டும் தர்பார் மண்டபம் சென்ற பிரதிகாமிக்குத் தான் மிகக் கடுமையான அக்னிப் பரிக்ஷையில் இருப்பதாகத் தோன்றியது. ஏதோ கடுமையான சாபத்தில் அவன் பாதிக்கப்பட்டிருப்பதாக நினைத்தான். ஏனெனில் அவனைக் காப்பாற்ற யுதிஷ்டிரனாலும் முடியாது. துரியோதனன் குறித்துச் சொல்லவே வேண்டாம்.  அங்குமிங்கும் செய்திகளைத் தூக்கிக் கொண்டு அலையும் அவனை துரியோதனன் எவ்வாறு காப்பாற்றுவான்? அவனால் செய்யக் கூடியது எதுவுமே இல்லை. திரௌபதியின் செய்தியை அங்கே தர்பார் மண்டபத்தில் துரியோதனனிடம் தெரிவித்தான் பிரதிகாமி. யுதிஷ்டிரன் வாயே திறக்கவில்லை. தங்களுடனேயே திரௌபதியும் இருக்கவேண்டும் என்றே அவன் அவளையும் பணயம் வைத்தான். அவனுடைய இந்த நோக்கத்தை அவன் எப்படி திரௌபதியிடம் விவரிப்பான்?

“அவளிடம் சொல்! அவள் இங்கே வந்து இங்குள்ள பெரியோரிடம் அவள் என்ன செய்ய வேண்டும் என்பதைக் கேட்கச் சொன்னேன் என்று தெரிவிப்பாய்!” என்றான் யுதிஷ்டிரன்.  ஊழியன் பிரதிகாமி அந்த இடத்திலேயே சிலை போல் நின்றான். அவனை அங்கேயே ஸ்தாபிதம் செய்து விட்டாற்போல் நின்றான். அவன் துரியோதனனுக்கும் கீழ்ப்படியாமல் இருக்க முடியாது. அதே போல் திரௌபதியின் நேர்மையான கோபத்தையும் அவனால் எதிர்கொள்ள முடியாது! துரியோதனன் தன் தம்பி துஷ்சாசனனிடம் திரும்பினான். “தம்பி, துஷ்சாசனா! இந்த ஊழியன் எதற்கெடுத்தாலும் பயப்படுகிறான். நீயே அந்தப்புரம் செல்! திரௌபதியை தர்பார் மண்டபத்துக்கு இழுத்துவா!  உனக்குக் கீழ்ப்படிய மாட்டேன் என்று அவளால் மறுக்க இயலாது! கேவலம் அவள் ஓர் அடிமை!” என்றான். துஷ்சாசனன் வெற்றிப் புன்முறுவல் பூத்தான். பாண்ட சகோதரர்கள் ஐவர் மட்டுமின்றி அவர்களின் மனதுக்குகந்த ராணியும் இப்போது அவர்களின் அடிமை!

துஷ்சாசனன் அரசகுலப் பெண்டிர் தங்கும் அந்தப்புரம் சென்று அங்கே தனி அறையில் இருந்த திரௌபதியைச் சென்று பார்த்தான். ஓர் இகழ்ச்சிப் புன்னகையுடன் அவளிடம் அவள் ஹஸ்தினாபுரத்து அரசன் துரியோதனனால் தர்பார் மண்டபத்துக்கு வரும்படி ஆணையிடப் பட்டிருப்பதாகச் சொன்னான். திரௌபதி திட்டவட்டமாக மறுத்தாள். அவன் சொன்னான். “வா, உடனே வா! வந்துவிடு! நீ என்ன இன்னமும் உன்னைக் குரு வம்சத்தின் இளவரசி என்றா நினைத்துக் கொண்டிருக்கிறாய்? நீ இப்போது ஓர் அடிமை! ஆனால் பயப்படாதே! நீ இப்போது குரு வம்சத்தின் ஈடு இணையற்ற அரசன் துரியோதனனின் பாதுகாப்பில் இருக்கிறாய்!” என்றான். அப்போது திரௌபதி அடைந்த வேதனையை துஷ்சாசனன் மிகவும் ரசித்தான். அவன் சிரித்தான். மேலும் பேசினான். “ரொம்பவே அடக்கமாக இருப்பதாக நினைக்காதே! நாங்கள் யார்? உன் கணவன்மார்களின் பெரியப்பன் பிள்ளைகள் தானே!” என்று கூறினான்.

ஆத்திரமும், ஆங்காரமும் பொங்க திரௌபதி துஷ்சாசனனைப் பார்த்தாள். அங்கிருந்து காந்தாரி தங்கி இருந்த இடம் நோக்கிச் செல்ல இரண்டு அடி எடுத்து வைத்தாள். ஆனால் துஷ்சாசனன் அவளை அங்கிருந்து தப்பிச் செல்ல விடவில்லை.  அவளை நோக்கிக் கோபமாக அடி எடுத்து வைத்து, அவளுடைய நீண்ட தலைமுடியைப் பிடித்து இழுத்தான். அவள் தலைமுடியைப் பிடித்து இழுத்த வண்ணம் அவளை தர்பார் மண்டபம் நோக்கி இழுத்துச் சென்றான். அது மிகக் கஷ்டமானதொரு வேலை தான். ஆனாலும் துஷ்சாசனன் சிறிதும் இரக்கமின்றி நடந்து கொண்டான். திரௌபதியின் கெஞ்சல்களைக் கேட்ட அவன் மீண்டும் மீண்டும் அவமரியாதையான சொற்களை அவளிடம் கூறினான்.  “என் சகோதரன் துரியோதனன் நீ தர்பார் மண்டபம் வந்து சேர வேண்டும் என்று விரும்புகிறான். நீ ஓர் அடிமை. இங்கே ஆடப்பட்ட சூதாட்டத்தில் நீ உன் கணவனால் பணயம் வைக்கப்பட்டு அடிமை ஆகி விட்டாய்!” என்று கூறிக்கொண்டே அவளை இழுத்துச் சென்றான். திரௌபதி கட்டி இருந்த ஒற்றை ஆடை அவள் கண்களிலிருந்து பெருகிய கண்ணீரில் நனைந்தது.  அந்தக் கோலத்துடனேயே அவள் தர்பார் மண்டபத்துக்குள் நுழைந்தாள்.


Sunday, December 25, 2016

அன்று நகைத்தாளடா! உயிர் மாமனே! அவளை எனக்கு ஆளாக்கினாய்!

பீமன் தன்னுடைய தண்டாயுதத்தைத் தூக்கக் கிளம்பினான். பீஷ்மரின் காலடிகளில் அது கிடந்தது. ஆனால் அர்ஜுனன் பீமனைத் தடுத்தான்.  ஆனால் யுதிஷ்டிரனின் எண்ணமோ வேறாக இருந்தது. ஆம், திரௌபதியும் இப்போது இங்கே இருந்தாக வேண்டும். அவர்கள் ஐவர் மட்டும் ஒற்றுமையுடன் ஒன்றாக இருந்தால் போதாது! கூடவே திரௌபதியும் அவர்களுடன் இருக்க வேண்டும்.  அவர்கள் ஐவரையும் இணைக்கும் முக்கிய நபராக திரௌபதி இருக்கிறாள். ஆகவே அவளும் இருந்தாக வேண்டும். உடனே யுதிஷ்டிரன் பேச ஆரம்பித்தான். “ நான் இப்போது என் மனைவியும் பாஞ்சால நாட்டு இளவரசியும் , எங்கள் ஐவருக்கும் பிரியமான மனைவியும்  ஆன திரௌபதியைப் பணயம் வைக்கிறேன்.” என்றான். சபாமண்டபத்தில் கூடி இருந்த மக்கள் அனைவரும் திகைத்து உட்கார்ந்திருந்தனர்.

அங்கு நடப்பது என்ன என்பதை அவர்கள் பூரணமாகப் புரிந்து கொள்ளும் முன்னரே அங்கே சூதாட்டம் ஆடி முடிக்கப்பட்டு விட்டது. ஷகுனியும், “நாங்களே இம்முறையும் வென்றோம். இப்போது பாஞ்சால இளவரசி எங்கள் அடிமை! எங்களுக்கு தாசியாகச் சேவை செய்ய வேண்டியவள்!” என்றான். துரியோதனனும் அவன் சகோதரர்களும் தங்கள் சுயக்கட்டுப்பாடுகளை இழந்து குதூகலத்தில் கூச்சலிட்டார்கள். அவன் ஆதரவாளர்களும், நண்பர்களும் அந்தக் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார்கள்.  ஒரு சிலர் அவனைக் கட்டித் தழுவிக் கொள்ள இன்னும் பலர், “துரியோதனனுக்கே ஜெயம்! வெற்றி துரியோதனனுக்கே!” என்றெல்லாம் கூவினார்கள். அவர்களுடன் சேர்ந்து அங்க தேசத்து மன்னன் கர்ணனும் இந்த சந்தோஷத்தில் கலந்து கொண்டான். துரியோதனனுக்கும் அவனுக்கும் ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவே இல்லை.  கர்ணன் துரியோதனனைப் பார்த்துப் புன்னகையுடன் அவன் காதுகளில் மெல்லக் கிசுகிசுத்தான்.

“துரியோதனா, இந்த திரௌபதி அவள் சுயம்வரத்தில் நம்மை எல்லாம் துச்சமாக நினைத்து உதறித் தள்ளிவிட்டு அர்ஜுனனைத் தேர்ந்தெடுத்தாள் அல்லவா? அப்போதே நான் அவளை அந்தச் சுயம்வர மண்டபத்திலிருந்து கடத்தித் தூக்கி வந்திருப்பேன். ஆனால் நீ தான் என்னைத் தடுத்தாய்!”  என்றான். அதற்கு துரியோதனன், “போகட்டும் விடு! இப்போது அவள் நம் அடிமை. நாம் கருணை காட்டினால் தான் அவளுக்கு நன்மை பயக்கும். ஆகையால் அவளை நாம் இப்போது என்ன வேண்டுமானாலும் செய்யலாம். யாரும் எதுவும் கேட்க முடியாது!” என்றான்.

இந்த மானங்கெட்ட நிகழ்ச்சியின் மூலம் குரு வம்சத்தினருக்கு ஏற்படப் போகும் அவப்பெயரை நினைத்து பீஷ்மர் வருந்தினார். தன் மதிப்பிழந்துவிட்டதாகக் கருதினார்.  அவர் கண் முன்னால் அவர்கள் குடும்பத்து அருமை மருமகள், பேரரசன் துருபதனின் மகள், எவ்வளவு மென்மையும் மதிப்பும் மிக்கவள், அனைவராலும் விரும்பப் படுபவள், அனைவராலும் மதிக்கப்படுபவள், இன்று ஒரு பேரத்திற்குப் பலியாகி விலை போய்விட்டாள். இது நீதியா, தர்மமா? யுதிஷ்டிரன் அவன் வாழ்நாளில் நேர்மையைக் கடைப்பிடித்து வந்திருக்கலாம்.  ஆனால் இன்று அவன் தன்னைத் தானே தியாகம் செய்து கொண்டது மட்டுமில்லாமல், தன் சகோதரர்கள் மற்றும் அருமை மனைவியையும் தியாகம் செய்யும்படி நேர்ந்து விட்டது. இதெல்லாம் எதற்காக? ஓர் கடினமான போர் ஏற்படுவதைத் தடுப்பதற்காக! அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக! யுதிஷ்டிரன் தன்னைத் தானே தாழ்த்திக் கொண்டுள்ளான்.  துரியோதனனால் அவர்கள் ஐவருக்கும் குரு வம்சத்து அரச குலத்தவரிடம் ஏற்பட்டிருக்கும் தீராப்பகையை ஒழிப்பதற்காக இத்தனையும் நடந்திருக்கிறது.

துரோணருக்கும் கிருபருக்கும் நடப்பது என்னவென்று புரியவே இல்லை. இந்த நிகழ்ச்சியின் முக்கியத்துவம் என்ன என்பதை அவர்கள் உணரவே இல்லை. அவர்கள் இருவரும் வெட்கத்திலும் அவமானத்திலும் தலை குனிந்து அமர்ந்திருந்தனர். அவர்கள் இந்த நிகழ்ச்சியின்போது குறுக்கிட்டுப் பேசித் தடுக்கவே விரும்பினார்கள். ஆனால் தன் ஒரு கையசைவால் பீஷ்மர் அவர்களைத் தடுத்து விட்டார்.  துரியோதனனின் இந்த அடாவடி நடவடிக்கையினால் அதிர்ச்சிக்குள்ளாகிய ராஜகுருமார்கள் சோமதத்தரும் ஆசாரியர் தௌமியரும் பீஷ்மரிடம் அனுமதி கேட்டுக் கொண்டு அந்த அவையை விட்டு வெளியேறினார்கள். அவர்களுடன் அந்த சபையில் இருந்த பல ஸ்ரோத்திரியர்களும் ஒருவர் பின் ஒருவராக வெளியேறினார்கள்.

செய்வதறியாது திகைத்து உட்கார்ந்திருந்த விதுரர் தன் இரு கைகளாலும் முகத்தைத் தாங்கிய வண்ணம் பூமியை நோக்கிக் கொண்டு அமர்ந்திருந்தார். அவர் மனமெல்லாம் பூமா தேவியிடம் குரு வம்சத்து இளையவர்கள் செய்யும் இந்த அக்கிரமத்தை மன்னிக்கும்படி வேண்டிக் கொண்டிருந்தது. “இதற்கு நான் இறந்திருக்கலாமே!” என்று திரும்பத் திரும்ப அவர் மனம் சொல்ல வாயும் அதை முணுமுணுத்தது.  திருதராஷ்டிரன் மிகவும் சந்தோஷத்துடன் இருந்தான் என்பது அவன் திரும்பத் திரும்ப சஞ்சயனிடம், “இப்போது நமக்கு வெற்றியின் மூலம் என்ன கிடைத்தது?” என்று ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் கேட்டுக் கேட்டுத் தெரிந்து கொண்டான்.

அங்கிருந்த பெரியோர்கள் அனைவரின் தகுதியையும் பதவியையும் முற்றிலும் நிராகரித்துவிட்டு துரியோதனன் ஷகுனியைக் கட்டித் தழுவிக் கொண்டு உற்சாகம் அடைந்தான். “மாமா அவர்களே, இன்று என் வாழ்நாளில் ஒரு பொன்னாள். மிகவும் மகிழ்ச்சிக்கு உள்ளான நாள். இந்த அருமையான நாளை உங்களுக்கு அர்ப்பணிக்கிறேன்.” என்றான்.  பின்னர் விதுரர் பக்கம் திரும்பி, “ஏ, சித்தப்பா விதுரா, இந்த திரௌபதி தன் சுயம்வரத்தில் எங்களை எல்லாம் அவமதித்து நடந்து கொண்டபோது நீ எங்கே போயிருந்தாய்? அந்த சுயம்வரத்தில் கூடி இருந்த அனைத்து அரசர்களையும் எங்களை ஏளனத்துடன் பார்த்துக் கேலி செய்ய வைத்தாளே, அப்போது நீ எங்கே போயிருந்தாய்? இப்போது அவள் எங்கள் அடிமை. நீ தான் இப்போது அந்தப்புரம் சென்று அவளை இங்கே இழுத்து வர வேண்டும்.” என்றான்.

பின்னர் ஒரு சீறலுடன் அவன் மேலும் கூறினான்.”இது ஓர் அற்புதமான மரியாதை இங்குள்ள பெரியவர்களுக்கெல்லாம். ஒரு அரசியை வரவேற்க வேண்டும்; ஆனால் அவள் இனிமேல் அரசியே அல்ல! ஓர் அடிமை! அவள் இங்கே வந்து எங்கள் அனைவருக்கும் தக்க மரியாதையைத் தெரிவித்த பின்னர், இங்குள்ள பெண் அடிமைகள் வசிக்கும் இடத்துக்குச் செல்ல வேண்டும். அவளுக்குத் தான் செய்ய வேண்டிய வேலைகள் என்னவென்று விரைவில் கற்றுக்கொள்ளச் சந்தர்ப்பம் கிட்டும்!” என்று கூறினான். பின்னர் தன் மீசையைத் தானே திருகிவிட்டுக் கொண்டான்.

விதுரர் தன் ஆசனத்திலிருந்து எழுந்து துரியோதனனைப் பார்த்துக் கை கூப்பி வணங்கினார். “மாட்சிமை பொருந்திய இளவரசே, திருதராஷ்டிர அரசனின் மகனே! இப்போதும் ஒன்றும் கெட்டுப்போகவில்லை. எதற்கும் நேரம் ஆகிவிடவில்லை.  நான் சொல்வதைக் கொஞ்சம் கேள்! இனி மேலே எதையும் செய்யாதே! போதும், விட்டு விடு! இதோடு நிறுத்திக் கொள்! திரௌபதி உன்னுடைய அடிமை அல்ல. ஒருக்காலும் இல்லை. அவள் ஓர் க்ஷத்திரிய குலத்து இளவரசி! ஆரியவர்த்தத்தின் பெருமை மிகுந்த சக்கரவர்த்தியின் குமாரி! அவள் பாண்டவ சகோதரர்கள் ஐவருக்கும் மனைவியும் ஆவாள்!” என்றார்.

“ஆஹா! அரசியா அவள்! அரசி!” என்று வாயைக் கோணிக் கொண்டு ஊளையிடும் குரலில் கூவினான் துரியோதனன். அப்போது விதுரர் மேலும் பேசினார். “யுதிஷ்டிரனுக்கு அவளைப் பணயம் வைக்க எந்த உரிமையும் இல்லை. ஏனெனில் ஏற்கெனவே அவன் தன்னைத் தானே பணயம் வைத்துக் கொண்டு அடிமையாகி விட்டான். ஓர் அடிமை எப்படி இன்னொரு சுதந்திரமான பெண்ணைப் பணயம் வைக்க முடியும்? இதோ, பார், துரியோதனா! நான் உன் நன்மையை விரும்புபவன் அல்ல என நீ நினைக்கிறாய்! ஆனால் அப்படி எல்லாம் இல்லை! நான் உன் நன்மைக்காகவே இப்போது பேசுகிறேன். நீ இப்போது என்னுடைய ஆலோசனைகளைக் கேட்காவிட்டால், நீ உன் சகோதரர்களுடனும், உன் நண்பர்களுடனும் முற்றிலும் அழிந்து படுவாய்!”

விதுரர் பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தார். சற்று நேரம் கழித்துத் தன் தலையைத் தூக்கி துரியோதனனைப் பார்த்து, “ உன் கண்கள் இன்று மூடிக் கொண்டன போலும்! குருடாகிவிட்டன போலும்! இல்லை எனில் இன்றைய நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து நடைபெறப் போகின்றவை குறித்து நீ யோசித்துப் புரிந்து கொண்டிருப்பாய்!” என்று கூறினார். அவர் கண்கள் கண்ணீரைப் பொழிந்தன.

“நீ புலம்புவதெனில் தனியே புலம்பிக்கொள், கிழவா! நிறுத்திக்கொள் இப்போது!” என்ற துரியோதனன் தன் குர்லை உயர்த்தி, “இனிமேலும் ஏதும் பேச வேண்டாம். நிறுத்து! நாங்கள் ஏற்கெனவே நிறையவே உன் புத்திமதிகளையும் ஆலோசனைகளையும் கேட்டுக் கொண்டு விட்டோம். நீ கீழ்க்குடிக்குப் பிறந்தவன் தானே! ஆகவே நீ எதற்கெடுத்தாலும் பயப்படுகிறாய்! ஆபத்து ஏற்படும் என்று அஞ்சுகிறாய். நாங்கள் பிறவியிலேயே க்ஷத்திரியர்கள்! அரச குலத்தவர். எல்லாவிதமான ஆபத்துக்களையும் எதிர்நோக்கும் போர்க்குணம் படைத்தவர்கள்! எங்களுக்குக் கடவுளின் அருள் பூரணமாக இருக்கிறது!” என்றான்.

Saturday, December 24, 2016

ஒளி மின்னும் அமுதமும் போன்றவள்! இவர் மேவிடு தேவி!

யுதிஷ்டிரன் மனதில் நம்பிக்கை தளர்ந்து விட்டது. அவனால் இப்போது எதுவும் செய்ய இயலாது. அவனால் இயன்றதெல்லாம் தங்களுடைய சகோதர ஒற்றுமையைப் பாதுகாத்துக் கொள்வது ஒன்று மட்டுமே! அதில் அவனுக்கு சந்தேகமே இல்லை.  அவர்கள் நாடிழந்து, வீடிழந்து பிச்சைக்காரர்களாக ஆனாலும் பாதகமில்லை. ஐந்து சகோதரர்களும், அவர்கள் மனைவியுமான திரௌபதியும் பிரிக்க முடியாதவர்கள்.  தன் கைகளை ஆதுரத்துடன் நகுலனின் தோள்களில் வைத்தான் யுதிஷ்டிரன். அவன் அன்பு முழுவதும் அந்தக் கைகள் வழி பாய்ந்தது. ஆனால் பீமனின் கண்களோ கோபத்திலும் ஆக்ரோஷத்திலும் சிவந்து எரிந்து கொண்டிருந்தன.  என்ன நடக்கப் போகிறது? சகோதரர்கள் ஐவரையும் விலைக்கு வாங்கி அடிமைகளாகவா விற்கப் போகிறான் இந்த துரியோதனன்? அவனுக்கு யுதிஷ்டிரனின் கைகளை நகுலனின் தோள்களிலிருந்து உடனடியாக அகற்ற வேண்டும் என்று தோன்றியது. வலுக்கட்டாயமாக அகற்ற விரும்பினான்.

அப்போது அர்ஜுனன் அவனிடம் மெல்லிய குரலில், “சகோதரா, நம்முடைய வாழ்க்கையின் இந்தத் தருணங்கள் மிக முக்கியமானவை. ஆகவே உன்னுடைய உணர்வுகளைக் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது நலம்!” என்று எச்சரிக்கை செய்தான். பீமன் தன் பற்களைக் கோபத்துடன் கடித்தான். வேறு வழியின்றி அர்ஜுனனின் சொற்களுக்குக் கட்டுப்பட்டான். யுதிஷ்டிரன் அதைக் கவனித்தான். மெல்லிய குரலில் பீமனிடம், “வ்ருகோதர அரசனே! பொறுமை, பொறுமை!  நான் என்ன செய்யப் போகிறேனோ அது தான் நமக்கு நல்லது. நம்மால் முடிந்த வரை நன்மை செய்ததாகும். “ என்று சொல்லிவிட்டு ஷகுனி பக்கம் திரும்பினான். “நான் இதோ இப்போது பணயமாக இந்த இளம் வீரனும் அழகும் வீரமும் நிறைந்த புத்திசாலியும், குதிரைகளைப் பழக்குவதில் தேர்ந்தவனும் ஆன என் சகோதரன் நகுலனைப் பணயம் வைக்கிறேன்.” என்றான்.ஷகுனி உடனே பாய்ச்சிக்காய்களை உருட்டி முன் போல் சுண்டு விரலால் தனக்கு வேண்டிய எண்களை அமைத்த வண்ணம் வீசினான். எதிர்பார்த்தது போல் அவன் வென்றான். “நாங்கள் வென்றோம்!” என்று மகிழ்ச்சிக் கூக்குரல் இட்டான்.

யுதிஷ்டிரனுக்கு இந்த ஆட்டத்தை விரைவில் முடிக்க வேண்டும் என்னும் வேகம் பிறந்தது. அவனுக்கு எந்த நேரமும் பிதாமஹர் இந்த ஆட்டத்தில் நடுவே புகுந்து தடுப்பாரோ என்னும் எண்ணம் இருந்தது. ஆகவே அதிகம் பேச்சு வார்த்தை வைத்துக் கொள்ளாமல் விரைந்து ஆடி முடிக்கவேண்டும் என்று எண்ணினான்.  ஆகவே அடுத்ததாக, “என் அருமை இளைய சகோதரன், விவேகம் நிறைந்தவன், புத்திசாலி, சஹாதேவன், தீர்க்கதரிசனம் மிகுந்தவன், அடுத்த பணயமாக வைக்கிறேன்.” என்றான் யுதிஷ்டிரன்.  மேலும் தொடர்ந்து, “இவனைப் போன்ற அறிவாளியும் புத்திசாலியும் இவ்வுலகில் காணக் கிடைக்க மாட்டார்கள்.” என்றும் சொன்னான். சொல்லிவிட்டு யுதிஷ்டிரன் தன் கைகளுக்கு வந்த பாய்ச்சிக்காய்களை உருட்டி விட்டான். ஷகுனி உடனே அதை எடுத்து துரியோதனன் சார்பில் அடுத்து விளையாடினான். மீண்டும் ஷகுனிக்கே ஜெயம்! “நாங்களே இம்முறையும் வென்றோம்!” என்று கூக்குரல் இட்டான்.

நகுலன் சஹாதேவன் பக்கம் திரும்பினான். “நாம் இப்போது என்ன செய்ய வேண்டும்?” அதற்கு சஹாதேவன், “மூத்தவருக்குக் கீழ்ப்படிந்து நட!” என்று சொல்லிவிட்டு அமைதியானான்.  உடனே நகுலனும், சஹாதேவனும் தங்கள் ஆசனங்களில் இருந்து எழுந்து கொண்டு, இளவரசர்களுக்கான கிரீடத்தைத் தங்கள் தலையிலிருந்து நீக்கினார்கள். உடைவாளையும் உருவிக் கொண்டு கிரீடத்தையும், உடைவாளையும் பீஷ்மரின் காலடிகளில் வைத்து வணங்கினார்கள். குரு வம்சத்தின் அப்போதைய பெரியவர் பீஷ்மர் மட்டுமே என்பதை உறுதி செய்யும் விதமாக இது அமைந்தது. ஓர் ஏளனமும், பரிதாபமும் நிறைந்த சிரிப்புடன் ஷகுனி யுதிஷ்டிரனைப் பார்த்தான். “மூத்தவனே, இரட்டையர்களை இழந்து விட்டாயே!” என்ற வண்ணம் கபடமாகச் சிரித்தான்.

பின்னர் யுதிஷ்டிரனைப் பார்த்து மேலும் சூழ்ச்சி நிறைந்த குரலில், “மூத்தவனே, உனக்கு இன்னும் இரு சகோதரர்கள் இருக்கின்றனரே! நம் ஆரிய வர்த்தத்தின் பழமையான கோட்பாடுகளின் படியும் விதிகளின் படியும் தந்தை இல்லை எனில் சகோதரர்களுக்கு மூத்த அண்ணனே தந்தைக்குச் சமம் ஆவான். குடும்பத்தை நிர்வாகம் செய்யும் அதிகாரமும், குடும்பச் சொத்துக்களை நிர்வகிக்கும் அதிகாரமும் மூத்தவனுக்கே  உரியது.  மொத்தக்குடும்பமும் அவனுக்குக் கட்டுப்பட்டது.  உன்னுடைய பணயங்கள் எதுவுமே இங்குள்ள செல்வங்களுக்கு ஈடு ஆகாது தான்! மட்டமானவை தான். ஆனாலும் நாங்கள் பெருந்தன்மையுடன் நடந்து கொள்கிறோம். அதனால் தான் உன்னுடைய மட்டமான இந்த சகோதரர்களையும் உன் சொத்தாகக் கருதிக் கொண்டு பயன்படுத்த அனுமதிக்கிறோம்!” என்றான்.

அத்துடன் நிறுத்தாமல் மேலும் தொடர்ந்து, “மூத்தவனே? உன்னுடைய மற்ற சகோதரர்களைக் குறித்து என்ன முடிவு செய்திருக்கிறாய்? அவர்களைக் கூலிகளாகப் பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும் அல்லவா? அவர்கள் அதில் நன்றாக வேலை செய்வார்கள் இல்லையா? அல்லது இவர்கள் உன் சொந்த சகோதரர்கள் என்பதால் இரட்டையர்களை விட உனக்கு இவர்கள் மேல் அதிகப் பாசம் உண்டோ? ஆம், ஆம், அப்படித் தான் இருக்க வேண்டும். ஏனெனில் இந்த இரட்டையர்கள் உன் தாய் வயிற்றில் பிறக்கவில்லையே! உன் சிற்றன்னைக்குப் பிறந்தவர்கள் தானே!” என்று கேலியுடன் கூறினான்.

கோபமே கொள்ளாத யுதிஷ்டிரனுக்கும் கோபம் மூண்டது. ஆனாலும் தாங்கள் அடிமைகளாக ஆனாலும் சரி சகோதரர்கள் ஐவரும் திரௌபதியுடன் ஒன்றாகச் சேர்ந்தே இருக்க வேண்டும் என்பதில் யுதிஷ்டிரன் உறுதியாக இருந்தான்.  ஆகவே அவன் ஷகுனியைப் பார்த்து, “காந்தார இளவரசே! அப்படியெல்லாம் சொல்லாதீர்கள். நீங்கள் ஏற்கெனவே எங்கள் சொத்துக்களை எல்லாம் பிடுங்கிக் கொண்டு விட்டீர்கள். இப்போது நீங்கள் எங்கள் ஐவருக்குள்ளும் வேற்றுமை கற்பிக்கப் பார்க்கிறீர்கள். ஆனால் ஒருக்காலும் இதில் நீங்கள் வெல்ல முடியாது. நீங்கள் என்ன செய்தாலும் சரி, என்ன சொன்னாலும் சரி, நாங்கள் ஐவரும் ஒன்று தான். உடல் ஐந்து, உயிர் ஒன்று. இப்படியே நாங்கள் ஒன்றாகவே கடைசி வரை இருப்போம். உங்களால் இதில் மட்டும் வெல்ல முடியாது. இப்போது என் அடுத்த பணயம் அர்ஜுனன், மிகச் சிறந்த வில்லாளி!” என்று முடித்தான்.

மீண்டும் பாய்ச்சிக்காய்கள் வீசப்பட்டன. ஷகுனி எப்போதும் போல் ஜெயித்தான். யுதிஷ்டிரன் அர்ஜுனனையும் இழந்தான். யுதிஷ்டிரன் கண்கள் கண்ணீரைச் சொரிந்தன. ஏனெனில் அர்ஜுனன் எதற்கும் கலங்காதவனாக கௌரவத்துடன் எழுந்து கொண்டு தன் தலைக் கிரீடத்தையும் உடைவாளையும் கழற்றி பீஷ்மரின் காலடிகளில் வைத்து வணங்கினான். இப்போது துரோணாசாரியாருக்கே கோபம் வந்து விட்டது. ஏனெனில் அர்ஜுனன் அவருக்குப் பிரியமான சீடன். எவரோடும் ஈடு செய்ய முடியாத வில்லாளி. வில் வித்தையில் நிபுணன். அர்ஜுனனின் குருவாக அவர் தான் அவனுக்கு குருகுல வாசம் முடிந்ததும் கிரீடம் சூட்டி வில் அம்புகள், வாள் போன்றவை அளித்து கௌரவித்தார். ஆகவே இப்போது கோபத்துடன் தன் அருகிலிருந்த கோடரியைக் கைகளில் எடுத்தார்.  பீஷ்மரைப் பார்த்தார்.

“பிதாமஹரே! என்ன இது?” என்று கோபத்துடன் வினவினார். “இனிமேலும் சந்தர்ப்பம் கொடுத்துக் கொண்டிருந்தால் இவர்கள் சகோதரர்கள் ஐவரையும் அடிமைகளாக ஆக்கி விடுவார்கள். இங்கேயே, இப்போதே!” என்றார். பீஷ்மர் அவர் முதுகில் தட்டிக் கொடுத்து சமாதானம் செய்தார். அவர் காதுகளில் மெல்லக் கிசுகிசுத்தார். “பொறுங்கள், இப்போது எதுவும் வேண்டாம். இன்னும் நேரம் இருக்கிறது!” என்றார்.  அதற்குள்ளாக யுதிஷ்டிரன், “இதோ அடுத்த பணயம் பீமன்!” என்றான். “அதெல்லாம் முடியாது! நான் இங்கே இந்த சபையில் உன்னால் தோற்கப் பட்டு அடிமையாகப் போவதில்லை. இதற்கு நான் ஒத்துக் கொள்ள மாட்டேன்.” என்ற வண்ணம் பீமன் எழுந்தான். யுதிஷ்டிரன் அவனை மீண்டும் கீழே உட்கார்த்தி வைத்தான்.

“வ்ருகோதரா, ராக்ஷச அரசே, நீ என்னுடைய பணயமாக ஆகியே தீர வேண்டும். ஏனெனில் நாம் அனைவரும் ஒன்றாக இருக்க வேண்டும். நாம் அனைவரும்! அர்ஜுனனும், இரட்டையரும் எங்கே இருக்கின்றனரோ அங்கே நாமும் இருக்க வேண்டும்!” என்றான். பின்னர் அவன் ஷகுனியிடம் திரும்பி, “இதோ ராக்ஷசவர்த்தத்தின் அரசன் வ்ருகோதர அரசன்!  என்னுடைய ராணுவத்தின் தலைமைத் தளபதி! இவனை நான் பணயம் வைக்கிறேன்.” என்றான்.  மீண்டும் பாய்ச்சிக்காய்கள் உருட்டப்பட்டு, பீமனும் அடிமையாக ஆனான். ஷகுனி உற்சாகத்துடன் கூவினான். பீமன் தன் கண்களில் இருந்து கண்ணீர் வழிய எழுந்து வெறுப்பு கண்களில் தெரியத் தன் தலைக்கிரீடத்தையும் உடைவாளையும் அகற்றி பீஷ்மரின் காலடியில் தூக்கி எறிந்தான்.

‘ம்ம்ம், தாத்தா அவர்கள் எங்கள் ஐவரின் ஒற்றுமை குறித்து சந்தேகம் கொண்டிருப்பார். சகோதரர்களின் ஒற்றுமை குறித்தும் மூத்தவனுக்குக் கீழ்ப்படிதல் குறித்தும் அவர் கொண்டிருக்கும் சந்தேகம் இப்போது தீர்ந்திருந்தாலும் நானும் என்ன் சகோதரர்களுடனேயே இருந்தாக வேண்டும். அப்போது தான் அவருக்குப் புரியும்!” என்று எண்ணியவனாக, “மாட்சிமை பொருந்திய ஷகுனி அவர்களே, நான் இப்போது என்னையே பணயம் வைக்கிறேன்.” என்றான். “நாங்கள் தயார்!” என்றான் ஷகுனி. மீண்டும் பாய்ச்சிக்காய்கள் உருட்டப்பட்டு யுதிஷ்டிரனும் அடிமை ஆனான்.  பீஷ்மரின் கண்களில் கண்ணீர் வந்தது. யுதிஷ்டிரன் எவ்வளவு புத்திசாலி, விவேகம் நிறைந்தவன், தன்னலம் இல்லாதவன், தர்மத்தைக் கடைப்பிடிப்பவன், இப்போது அடிமை! அதுவும் சொந்தப் பெரியப்பன் மகன்களுக்கே. இல்லை. இல்லை. இல்லை. இது நடக்கக் கூடாது. பீஷ்மர் தன் கைகளால் தன் கண்களை மறைத்துக் கொண்டார்.

யுதிஷ்டிரன் தன் அரசக் கிரீடத்தையும் உடைவாளையும் கழற்றி மரியாதையுடன் பீஷ்மர் காலடிகளில் வைத்தான். கீழே குனிந்து வணங்க முற்படுகையில் பீஷ்மர் அவனைத் தூக்கிக் கட்டி அணைத்தார். பின்னர் யுதிஷ்டிரனும் தன் சகோதரர்களுடன் போய் நின்று கொண்டான். அப்போது ஷகுனியின் உதடுகளிலிருந்து வக்கிரமும், வஞ்சகமும் நிறைந்த வார்த்தைகள் வந்தன. “மூத்தவனே, நீ தர்மராஜா எனப் பெயர் வாங்கியவன். நேர்மையின் அதிகாரி. தர்மத்தின் வழியில் அரசாட்சி புரிந்தவன். நீ ஒரு விஷயத்தை மறந்து விட்டாய்! அதி முக்கியமான விலை உயர்ந்த ஒன்றை விட்டு விட்டாய்! அது தான் அழகுராணியும் உன் மனைவியும் ஆன பாஞ்சால இளவரசி திரௌபதி!” என்றான்.