Saturday, July 25, 2015

கண்ணனின் கனவில் புதிய நகரம்!

கிருஷ்ணனையே பார்த்துக் கொண்டிருந்த பீமனுக்கு அவன் தன்னுள் ஆழ்ந்து போய் ஏதோ கனவுலகில் இருக்கிறான் என்பதும், அவன் மனதுள் அந்தக் கனவு நகரம் தோன்றிக் கொண்டிருக்கிறது என்பதும் புரிந்தது. இந்த மாறுதலுக்கான காரணத்தையும் அவன் புரிந்து கொண்டான். கிருஷ்ணனின் இந்த உணர்வுகள் அவனுள்ளும் மாற்றத்தை ஏற்படுத்தியது. அவனும் அதில் ஆழ்ந்தான். அவனுள்ளும் கனவு நகரம் விரிந்தது. பரந்தது. மாபெரும் சாம்ராஜ்யம் தோன்றியது. “கிருஷ்ணா! ஆம்! அப்படி ஓர் சாம்ராஜ்யம், தர்ம சாம்ராஜ்யம் உருவாக வேண்டும். அங்கே பெண்கள் இரவு நேரத்திலும் எவ்விதத் தொல்லையும், அச்சமும் இல்லாமல் தன்னந்தனியாகப் பயணிக்க வேண்டும். சுதந்திரமாக நடமாட வேண்டும். எனக்குப் பிறக்கப் போகும் மகன்கள் அதர்மத்தை எதிர்த்துப் போராடும் போருக்குத் தலைமை வகித்து நடத்துவார்கள்; அதில் வெற்றி காண்பார்கள். தங்கமும், வெள்ளியும், சர்வசாதாரணமாக இறைபட வேண்டும். தேவைப்பட்டவர்கள் தங்கள் தேவைக்கு எடுத்துச் செலவு செய்ய வசதியாக இருக்க வேண்டும். அனைவருக்கும் விநியோகிக்க வேண்டும். கோயில்களில் நல்ல முறையில் எல்லாக் காலங்களிலும் வழிபாடுகள் நடந்து கோயிலின் கடவுளர் மட்டுமின்றி அவற்றின் தலைமைப் பூசாரிகளும் நல்ல முறையில் நம்மை வழிநடத்த வேண்டும். என்னால் முடிந்தால் பலஹீனமாய் இருக்கும் ஆரிய இனப் பெண்கள், ஆண்கள் அனைவரையும் வலுவுடன் உள்ளவர்களாய் பலத்துடன் உள்ளவர்களாய் மாற்றிக் காட்டுவேன்.”

“நீ என்ன நினைக்கிறாய் என்பதும், உனக்கு எது வேண்டும் என்பதும் நான் நன்கறிவேன் பீமா! அதனால் தான் உன்னைத் தேடி இங்கே வந்து உன்னுடம் இருக்க விரும்புகிறேன்.”

“அப்படி எனில் வா! கிளம்பு! அப்படி ஓர் நகரைத் தேடிச் செல்வோம்!”

“இரு பீமா! இரு! சற்றுப் பொறு! அவசரப்படாதே! முதலில் நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வோம். நம்மிடம் வெறும் நகரம் மட்டும் இருந்தால் போதுமா? அதில் வசிக்க வேதம் படித்த வேதத்தின் உட்பொருளை உணர்ந்து வாழ்க்கை நடத்தும் வேத பிராமணர்கள் தேவை! தைரியமும், மன உறுதியும் கொண்ட உண்மையாக நடக்கும் க்ஷத்திரியர்கள் தேவை! வியாபாரத்தில் ஈடுபட்டு நாட்டுக்கு உண்மையாக உழைத்துப் பெரும் செல்வம் ஈட்டி அதன் மூலம் பலருக்கும் பயன் கிடைக்கச் செய்யும் வைசியர்கள் தேவை! அவர்கள் மூலம் வியாபாரம் மட்டுமின்றி நிலம், குதிரைகள், கால்நடைச் செல்வங்கள் போன்றவையும் தேவை. இவற்றைப் பராமரிக்கும் ஆட்கள் தேவை. எல்லாவற்றுக்கும் மேல் மன உறுதியுடன் நம்முடன் வாழ்ந்து நம் குழந்தைகளைப் பெற்றெடுக்கத் தயாராக இருக்கும் வீரப் பெண்மணிகள் தேவை! இந்தக் குழந்தைகள் மூலம் நாம் புதியதொரு சமுதாயத்தை உருவாக்குவோம்.”  பீமனின் தோள்களைப் பிடித்த வண்ணம் கண்ணன் கூறினான்.

“ம்ம்ம், நமக்கு அனைத்தும் கிடைக்கும்! ஆனால் அதற்குக் கடும் முயற்சிகள் செய்யவேண்டும். காலம் நிறைய ஆகிவிடும்.” பெருமூச்சுடன் கூறிய பீமன் இவை எல்லாம் திடீர் என ஒரே நாளிலோ, ஒரே இரவிலே நடக்கக் கூடிய ஒன்றல்ல என்பதைப் புரிந்து கொண்டான்.

“பீமா! நாம் என்ன செய்தாலும் அதை நன்றாக, நிதானமாகப் பல முறை யோசித்துச் செய்ய வேண்டும். அதைச் சரியாகவும் செய்ய வேண்டும். நாம் காண்டவப்ரஸ்தத்தை ஒரு வருஷத்தில் கட்டி முடிப்போம். அதன் பின்னரே நான் துவாரகை செல்வேன்.”

“ஆனால், அது எவ்வாறு முடியும் கண்ணா? ஒரு வருஷத்தில் எல்லாம் திடீரென்று முளைத்து விடுமா?”

“நம்மால் முடியும்!உங்கள் ஐவரிடமும் துருபதன் கொடுத்த செல்வம் இருக்கிறது. அவன் உங்களுக்குப் பணிபுரியக் கொடுத்த வீரர் படை இருக்கிறது.  சீதனமாகக் கொடுத்த ரதங்கள், குதிரைகள், மாட்டு வண்டிகள், அவற்றுடன் உள்ள பொருட்கள், கால்நடைச் செல்வங்கள் அனைத்தும் உள்ளன. என் தரப்பில் நீ கவலையே அடைய வேண்டாம். யாதவர்கள் அனைவரும் தங்கள் அனைத்து வளங்களையும் உங்களுக்காக அர்ப்பணிப்பார்கள். மணிமான் அவனுடைய நாகர்களை உங்கள் நகர நிர்மாணத்திற்காக வேலைகள் செய்யவும், உதவிகள் செய்யவும் அழைத்து வருவான்.”

“ஆனால் அது மட்டும் எப்படிப் போதும்?”

“போதாது தான்! அதையும் நான் அறிவேன்! பீமா! நாம் நம்முடைய குலகுருவான வியாசரைச் சந்தித்து இதைக் குறித்துப் பேசி அவருடைய ஆசிகளைப் பெற்றாக வேண்டும். அது முக்கியம். அவருடைய ஆசிகள் இல்லாமல் எந்த ஒரு வேலையும் முற்றுப் பெறாது. நகரை நிர்மாணிக்கும் வரை அவரை நம்முடன் இருக்கச் செய்ய வேண்டும்.”

“ஆஹா! அது வேறா? அவர் எனக்கு ஆசிகள் அளிக்க மாட்டார். எனக்கு உதவவும் மாட்டார். எனக்கு மட்டும் தனியாக உதவுவாரா? மாட்டார்! எனக்குத் தெரியும்! அவர் நாங்கள் ஐவரும் சேர்ந்து தான் இதை ஒருமனதாகச் செய்ய வேண்டும் என்பார். என் மூத்தவன் ஆன யுதிஷ்டிரனை விட்டு விட்டு இதைச் செய்தால் நான் தர்மத்திலிருந்து பிறழ்ந்தவன் என்பார். அவன் இல்லை எனில் இந்த மாபெரும் வேலையில் அதர்மமே இருப்பதாகக் கூறுவார்.”

அப்போது கிருஷ்ணன் ஏதோ புதிதாக நினைவில் வந்தவன் போலத் தன் உதடுகளின் மீது விரலை வைத்து யோசித்தான். பின்னர், “திருதராஷ்டிரனை வசப்படுத்தி அவன் மூலம் ஹஸ்தினாபுரத்துச் செல்வங்களில் ஒரு பகுதி, குதிரைகள், கால்நடைச் செல்வங்கள், ஆட்கள் எனக் கேட்டு வாங்கினால் என்ன?” என்று கேட்டவனுக்கு அது சரியான யோசனையாகத் தோன்றவே பீமன் முதுகில் ஓங்கித் தட்டினான்! “ஆம் அது தான் சரி!  திருதராஷ்டிரனிடம் பேசி இதைச் செய்ய வைப்போம். உன்னுடைய கனவுகள் நனவாவதற்கு இதுவே சரியான சுலபமான வழி.”

ஆனால் பீமன் தலையை ஆட்டினான். “ம்ஹூம், பெரியப்பா எங்களுக்கு எதுவும் தர மாட்டார். தர அவருக்கு விருப்பம் இராது!” என்றான் சோகமாக.

கிருஷ்ணன் மீண்டும் யோசனையில் ஆழ்ந்தான். பின்னர் இந்தப் பிரச்னையிலிருந்து விடுபட ஓர் வழி கண்டு பிடித்தவன் போல் பேச ஆரம்பித்தான். “பீமா! நானே நேரில் போய் திருதராஷ்டிரனிடம் பேசி அவரை இவை அனைத்தையும் கொடுக்க வைக்கிறேன். நாம் கேட்பதெல்லாம் அவர் கொடுத்தாக வேண்டும்.” என்றான்.

“முட்டாள்தனமாகப் பேசாதே, கிருஷ்ணா! அவர் தன் நூறு மகன்களுக்காகவும், தன் பேரப்பிள்ளைகளுக்காகவும், மற்றும் ஹஸ்தினாபுரத்துக்காகவும் அந்தச் செல்வங்களை எல்லாம் காப்பாற்றிக் கொள்ளவே முனைவார்.”

“அப்படியா! சரி பார்க்கலாம்.” என்றான் கிருஷ்ணன். பின்னர் வேறு வழி கண்டு பிடிக்க முனைபவனைப் போல் யோசனையில் ஆழ்ந்தான். “இதோ பார் பீமா! நான் உனக்கு ஒரு வழியைக் காட்டுகிறேன். அது தான் நல்ல வழி. அந்த அரசன் திருதராஷ்டிரன் தாத்தா பீஷ்மரை மனம் நோகச் செய்யும்படி விட மாட்டார். அவர் மனம் சந்துஷ்டி அடைய வேண்டும் என்றே நினைப்பார்.. ஆகவே உன் சகோதரனை அரசனாக வேண்டாம் என்று சொல்ல யோசிப்பார். அதன் மூலம் பீஷ்மரின் வெறுப்பைச் சம்பாதிக்க நேரும் என்பதை அவர் அறிவார். ஆனால் அவருக்கு அதே சமயம் தன் மக்கள் அனைவரும் ஹஸ்தினாபுரத்தை ஆள வேண்டும் என்பதையே விரும்புகிறார். அதைச் செயலாக்கவே விரும்புகிறார். அவர் எண்ணத்துக்குத் தடையாக இருப்பது நீ ஒருவன் தான். உன்னைக் கண்டே அவர் அஞ்சுகிறார்.”

“ஆம், அது சரியே!”

“சரி, இப்போது நாம் போய் அவரிடம் சொல்வோம்: “துரியோதனனே ஹஸ்தினாபுரத்தை ஆளட்டும்! ஏனெனில் அவன் தற்கொலை செய்து கொள்வதை நாங்கள் விரும்பவில்லை! ஆகவே, நாங்கள் புதியதாக ஓர் சாம்ராஜ்யத்தைத் தேடிச் சென்று கண்டு கொண்டு புதியதொரு நகரை நிர்மாணிப்பதிலேயே ஆவல் கொண்டிருக்கிறோம். நாங்கள் செல்கிறோம். யமுனைக்கரையில் காடுகளை அழித்துக் காண்டவப்ரஸ்தத்தை நிர்மாணிக்கிறோம்.” என்று சொல்லலாம்.” என்றான் கிருஷ்ணன்,

Thursday, July 23, 2015

கனவு நகரம் நிர்மாணிக்கப் போகும் இடம்!

கிருஷ்ணன் தோள்களில் தன் கரங்களை அன்புடனும், ஆதரவுடனும் வைத்த பீமன், “கிருஷ்ணா! அந்தக் கனவு நகரை நாம் எவ்விதம் நிர்மாணிக்கப் போகிறோம்? நீ எல்லாவற்றையும் யோசித்து வைத்திருக்கிறாய் போல் இருக்கிறதே!” என்று கேட்டான். தன் தலையைத் தடவிக் கொண்டான் கிருஷ்ணன். பின்னர் யோசனையில் ஆழ்ந்தான். அதன் பின்னர் கனவில் பேசுவது போல் பேச ஆரம்பித்தான்.” நான் உன் இடத்தில் இருந்தால் ஹஸ்தினாபுரத்தில் இருந்து தொலைதூரத்தில் அந்த நகரை நிர்மாணிப்பேன்.” என்றான். “நீ சொல்வது சரியே கிருஷ்ணா! துரியோதனனின் நிழல் கூட அங்கே விழக் கூடாது! அப்படி ஓர் இடம் தேர்ந்தெடுக்க வேண்டும்.” என்றான் பீமன்.

“யமுனையைப் பற்றி நீ என்ன நினைக்கிறாய்? யமுனையின் ஒவ்வொரு அலையையும் நான் நன்கறிவேன். நீர் மட்டம் எப்போது உயரும், எப்போது தாழும் என்பதிலிருந்து, எப்போது வெள்ளம் வரும் நேரம், வடியும் நேரம் என அனைத்தும் அறிவேன்.  நான் யமுனையிடம் மிகுந்த அன்பு செலுத்துகிறேன். யமுனையின் கரையில் உள்ள காடுகள் அனைத்தும் எனக்குப் பழக்கமானவை. அதன் ஒவ்வொரு செடியையும், மரத்தையும் நான் நன்கறிவேன். ஒவ்வொரு மூலை முடுக்கையும் நன்கு கவனித்து வைத்திருக்கிறேன்.”

“கிருஷ்ணா, கிருஷ்ணா! நீ சொல்வதைப் பார்த்தால் மத்ராவை மீண்டும் நிர்மாணிக்கச் சொல்கிறாய் எனத் தோன்றுகிறதே! அப்படியா?” என்றான் பீமன்.

“ஆஹா! அது எங்கனம்? அது யாதவர்களின் நகரம்! நான் பாண்டுவின் குமாரர்களுக்கென ஒரு தனி நகரத்தை நிர்மாணிக்கச் சொல்கிறேன்.”

“ஆனால் அது எங்கே அப்பா?”

“ம்ம்ம்ம், என்னிடம் மணிமான் ஓர் விஷயம் சொன்னான். உன்னுடைய முன்னோர்கள் ஒரு சமயம் காண்டவப்ரஸ்தம் என்னும் பகுதியில் வசித்திருக்கிறார்கள். அதை மணிமான் என்னிடம் உறுதி செய்தான். இப்போது அது நாடாக இல்லை. காடாக உள்ளது. “

“கிருஷ்ணா, எனக்குள் மீண்டும் சந்தேகம் முளை விட்டு விட்டது! நீ உண்மையாகவே சொல்கிறாயா? அல்லது என்னை முட்டாள் ஆக்கப் பார்ர்க்கிறாயா?” ஆனால் இதைச் சொன்னபோது அவன் சிரித்த விதத்தில் இருந்து அவன் கிருஷ்ணனைச் சீண்டுவதற்குக் கேட்கிறான் என்பதும் அவனுக்குக் கிருஷ்ணனிடம் முழு நம்பிக்கை வந்து விட்டதும் புரிந்தது.

“என் பேச்சுக்கு ஒப்புக் கொள் பீமா! நான் உன்னுடனும் நம் நண்பர்கள் அனைவருடனும் வருகிறேன். ஒரே வருடத்திற்குள் நாம் அனைவருமாக அங்குள்ள காட்டை அழித்து நகரை நிர்மாணிப்போம்.”

“கிருஷ்ணா, அப்படி எனில் எனக்கு உன் முழு மனப்பூர்வமான சம்மதத்தைக் கொடு! அப்படிச் செய்வதாக உறுதி மொழி கொடு!” என்று தன் வலக்கையை அவன் முன் நீட்டினான் பீமன். “ஓஹோ,, பீமா! நான் சத்தியம் செய்கிறேன்!” என்ற வண்ணம் அவன் கரங்களில் ஓங்கி அடித்துத் தன் உறுதிமொழியைத் தந்தான் கிருஷ்ணன். துவாரகையைக் கட்ட யாதவர்களுக்கு எப்படி உதவினேனோ அவ்வாறே உனக்கும் நான் உதவுவேன். ஆனால் ஒரு விஷயம் பீமா! இதை உன் நன்மைக்காக மட்டும் நான் செய்யவில்லை. இதில் என் நன்மையும் அடங்கி உள்ளது. ஏனெனில் நான் இப்படிச் செய்யவில்லை எனில் ஆர்யவர்த்தத்தில் நான் தோற்றவனாகவே கருதப்படுவேன். ஆர்யவர்த்தத்தில் எபோதும் தர்மத்தின் ஆட்சியே நடைபெறவேண்டும். இல்லை எனில் மனிதன் தடம் புரண்டு விடுவான். இவ்வுலக மனிதர்களைக் காப்பாற்ற ஆர்யவர்த்தத்தில் தர்மத்தின் ஆட்சி நடைபெற்றால் தான் முடியும். வரும் நாட்களில் இது தான் இந்த பாரத வர்ஷத்தையே காத்து நிற்கும்.”

“ஓ, இதற்காகவே, இதை நிறைவேற்றவே நீ உயிர்வாழ்கிறாயா கிருஷ்ணா? உன் வாழ்க்கையின் லட்சியமே இது தானா?” என்ற பீமனுக்கு அப்போது தான் அகோரியின் குடிசைக்குச் சென்றிருந்தபோது அகோரியின் உடலில் ஆக்கிரமித்திருந்த தேவி மாதா சொன்னது நினைவில் வந்தது. கிருஷ்ணனின் பிறப்பையும் அவன் எதற்காக வாழ்ந்து வருகிறன் என்பதையும் தேவிமாதா சொன்னவை எல்லாம் அப்போது பீமன் நினைவு கூர்ந்தான். அவனுக்குள்   கிருஷ்ணன் பால் பிரமிப்பும், பக்தியும் பெருகின.  கிருஷ்ணனும் அவன் சொன்னதை ஆமோதித்தான்.

“ஆனால் நீ காண்டவப்ரஸ்தத்தை நகராக நிர்மாணிப்பதன் மூலம் உன்னுடைய லட்சியத்தை நிறைவேற்றியவன் ஆவாயா?” என்று கேட்டான் பீமன்.

“ஆம், நான் நிறைவேற்றியவன் ஆவேன்!” என்றான் கிருஷ்ணன். அவன் கண்களில் ஓர் ஒளி தோன்றியது. அந்த ஒளியினால் கிருஷ்ணன் முகமே பிரகாசம் ஆனது. “இந்த ஆர்யவர்த்தத்தின் எதிர்காலமே நீங்கள் ஐவரும் நடத்தப் போகும் தர்மத்தின் ஆட்சியில் தான் உள்ளது. உங்கள் நல்லாட்சியில் தான் ஆர்யவர்த்தம் தழைக்க வேண்டும்.” என்றான் கிருஷ்ணன்..

Wednesday, July 22, 2015

கனவு நகரம் நிர்மாணிக்கக் கிருஷ்ணன் உதவுகிறான்!

கிருஷ்ணன் முழு மனதோடு பேசுவதைக் கண்ட பீமனுக்கு உண்மையிலேயே ஆச்சரியமாக இருந்ததோடு அல்லாமல் கொஞ்சம் சந்தேகமும் ஏற்பட்டது. “உண்மையாகத் தான் சொல்கிறாயா, கிருஷ்ணா!” என்று மாறாச் சந்தேகத்துடன் கேட்டான் “நீ உன்னுடைய தந்திர வேலைகளைக் காட்டுகிறாய் என எண்ணுகிறேன்.” என்று மேலும் கூறினான். கிருஷ்ணன் அவனையே பார்த்து, “நான் தந்திர வேலைகள் செய்வதாக நீ நினைத்தால்! உன் வழியே செல்! அதோ உன் வழி! தெளிவாக இருக்கிறது. நீ என்னுடைய அத்தை வழி மூத்த சகோதரன். உனக்கு நான் கெடுதல் செய்வேனா? பீமா! உன் ஆயுதங்களை எடுத்துக் கொள்! உன் தண்டாயுதத்தால் என் மண்டையை உடைத்துவிடு! அது தான் நல்லது! இதோ பார் பீமா! நீ என்ன நினைக்கிறாய்! உன் மனதில் இருப்பது என்ன என்பதை நான் புரிந்து கொண்டு விட்டேன். ஆகவே நீ உன்னுடைய கனவு நகரத்தை நிர்மாணிக்க உனக்கு உதவிகள் செய்யத் தீர்மானித்தேன்.” என்றான் கிருஷ்ணன்.  அவன் பேச்சில் இருந்த உண்மையைப் புரிந்து கொண்டான் பீமன். அவன் இதையே நினைத்துக் கொண்டிருந்து இருக்கிறான் என்பதையும் தெரிந்து கொண்டான். ஆகவே உண்மையாகவே கிருஷ்ணன் அவனுக்கு உதவி செய்யும் நோக்கத்தில் தான் இருப்பதையும் அறிந்தான். தன் உள் மனதில் இருந்த எண்ணத்தை அவன் கண்டு கொண்டே தனக்குப் பாராட்டுகள் தெரிவிப்பதையும் உணர்ந்தான்.

“நீ எப்படியோ என் மனதைப் படித்து விட்டாய்! ஆம், கிருஷ்ணா! உண்மையாகவே நான் புதியதொரு நகரத்தை நிர்மாணிக்க எண்ணுகிறேன்.” என்றான் பீமன். “தெரியும், பீமா! நீ ஹஸ்தினாபுரத்தை விட வலுவாக, பலம் உள்ளதாக ஓர் சாம்ராஜ்யத்தையும், நகரத்தையும் நிர்மாணிக்க எண்ணுகிறாய்! அங்கே ஆட்சி செய்ய எவ்வித இடையூறுகளும் எந்தப்பக்கமிருந்தும் வரக் கூடாது என்றும் நினைக்கிறாய். நீ நினைப்பது சரியே! அப்படி ஓர் நகரம் நிர்மாணிக்கப்பட்டால் அது கடவுளரின் சொர்க்கமாகவே இருக்கும்.” என்று சொன்ன கிருஷ்ணன் கைகள் பீமனின் தோள்களில் படிந்திருந்ததே தவிர அவன் பார்வை தூரத்தில் எங்கோ பார்த்த வண்ணம் அவன் கனவுலகில் இருப்பது போல் காட்சி தந்தது.

“ஆம், ஓர் கனவு நகரம், கடவுளரின் சொர்க்கம்! மரங்கள் வீதி ஓரங்களில் செழிப்பாக வளர்ந்து நிழல் கொடுத்துக் கொண்டு காற்றில் கர்வம் பொங்கத் தலையாட்ட வேண்டும். எண்ணிலடங்காப் பழங்கள் நிறைந்த மாந்தோப்புக்கள் இருக்க வேண்டும். தோட்டங்கள், நீரூற்றுக்கள், உல்லாசப் பூங்காக்கள், ஆங்காங்கே அவற்றில் பயமோ, கவலையோ இன்றி இளைப்பாறும் மக்கள்… குளங்கள், தாமரை பூத்திருக்க வேண்டும். மீன்கள் அங்குமிங்கும் நீந்தித் திரிய வேண்டும். குளக்கரைகளில் மக்கள் தாமரைகளைப் பறிக்கவும் மீன்களுக்கு உணவிடவும் வேண்டும். “ கிருஷ்ணன் சற்றே நிறுத்தினான். பீமன் தன் தலையை ஆட்டிச் சம்மதம் தெரிவித்தான். கிட்டத்தட்ட அவன் கனவு கண்ட அதே பாணியில் ஓர் நகரம். இதைத் தான் அவன் பல நாட்களாய்க் கனவு கண்டு வந்தான்.

மேலும் கிருஷ்ணன் பேசிக் கொண்டிருந்தான்:” ஒவ்வொரு வீட்டிலும் பூக்கள் நிறைந்த பூந்தோட்டம் இருக்க வேண்டும்.  ஆங்காங்கே தாழ்வாரங்களில் எல்லாம் நிழல் தரும் மரங்கள் நிழல் கொடுத்த வண்ணம் இருக்கவேண்டும். உங்கள் ஐவரின் வீர, தீர, சாகசங்களை வெளிப்படுத்தும் பற்பல வண்ண ஓவியங்களைத் தீட்டி அனைவர் வீடுகளிலும் மாட்டி இருக்க வேண்டும். உங்கள் புகழ் பாரெங்கும் பரவ வேண்டும்.”

பீமன் அகல விரிந்த கண்களோடு ஆச்சரியம் ததும்ப அனைத்தையும் கேட்டுக் கொண்டிருந்தான். அவன் அவ்வப்போது தலையை ஆட்டிச் சம்மதம் தெரிவித்த விதம் அவன் அப்போதே அம்மாதிரியானதொரு நகரத்தைத் தன் மனக்கண்களால் கண்டு களிக்கிறான் என்பதை வெளிப்படுத்தியது. கிருஷ்ணன் வர்ணித்த விதம் பீமன் மனதை மிகவும் கவர்ந்தது. ஆகையால் அவன் பேச்சுக்கு எந்தவிதமான இடையூறும் செய்யாமல் வாய் பேசாமல் கேட்டுக் கொண்டு வந்தான் பீமன்.

கிருஷ்ணன் தொடர்ந்தான்:” நூற்றுக்கணக்கில் பசுக்கள், அவையும் குடம் குடமாகப் பால் அளிக்க வேண்டும். அழகான, வலுவான வேகமாக ஓடக்கூடிய குதிரைகள், அவற்றில் ஏறி அமர்ந்து நாம் போட்டி போட்டுக்கொண்டு குதிரைகளை ஓட்ட வேண்டும். பெரிய ரதங்கள், தங்கள் சக்கரங்களை உருட்டிக் கொண்டு தெருக்களில் ஓட வேண்டும். அவற்றில் வீராதி வீரர்கள், அதிரதிகள், மஹாரதிகள் போன்றோர் பயணம் செய்ய வேண்டும். நாம் நிர்மாணிக்கப் போகும் நகரத்திலும், சாம்ராஜ்யத்திலும் வசிக்கப் போகும் பிராமணர்கள் கற்பித்தலைத் தங்கள் முக்கியத் தொழிலாகக் கொண்டு அனைவருக்கும் தக்க கல்வி கற்பித்து வர வேண்டும். வேதங்களிலும், மற்றவற்றிலும் உள்ள விஷயங்களை எடுத்துச் சொல்ல வேண்டும்; க்ஷத்திரியர்கள் ஆன நாமோ அனைத்துத் தரப்பு மக்களையும் பாதுகாக்கும் ஏற்பாடுகளைச் செய்து கொண்டு அனைவரையும் பாதுகாக்க வேண்டும். க்ஷத்திரியர்களுக்கு முழு அதிகாரம் இருந்தாலும் துஷ்பிரயோகம் செய்யக் கூடாது. வைசியர்கள் வியாபாரத்தின் மூலம் சம்பாதிப்பதை நாட்டுக்குச் செலவு செய்வதோடு, தேவை உள்ளவர்களுக்கும், மற்றும் இல்லாதவருக்குக் கொடுப்பதையும் முக்கியக் கடமையாகக் கொள்ள வேண்டும். நீ எங்கு ஆட்சி புரிந்தாலும் அங்கே தர்மத்தின் ஆட்சி நடைபெறும்; நடைபெற வேண்டும்.”

கிருஷ்ணன் அளித்த இந்த ஒளிமயமான எதிர்காலக் கனவுகள், தன் கனவு நகரம் அப்போதே நனவாகி விட்ட குதூகலம் பீமனுக்கு. அவன் கண்ணெதிரே கிருஷ்ணன் விவரித்த காட்சிகள் அப்படியே அப்போது நடப்பவை போல் தோன்றின.. ஆகவே மேலும் பேசச் சொல்லிக் கிருஷ்ணனை ஊக்குவித்தான். கிருஷ்ணன் மேலும் தொடர்ந்து, “ அதோடு மட்டுமா? உன்னுடைய அரச மாளிகையில் மிக அழகான, உலகத்து அழகெல்லாம் திரண்டு வந்த ஓர் அரசகுல மங்கை ராணியாக இருப்பாள். தேவலோகத்து அப்சரஸ்களின் அழகெல்லாம் இவள் கால் தூசிக்குக் காணாது! அத்தனை அழகான அந்தப் பெண்மணி தன் அழகிய கண்களால் உன்னைக் கண்டு நாணத்துடன் சிரிப்பாள். பாண்டுவுடைய பேரன்மார்களுக்குத் தாயாக இருப்பாள். அவள் பெயர் ஜாலந்திரா!” என்று தன் ஜொலிக்கும் கண்களால் சிரித்த வண்ணம் கண்ணன் கூறினான்.  இதைக் கேட்டதுமே பீமன் முகத்தில் ஓர் ஒளி பிறந்தது. விவரிக்க ஒண்ணாத சந்தோஷத்துடன் அவன் கண்ணனைப் பார்த்து, “கோவிந்தா! உண்மையாகவா? இது எல்லாம் நடக்குமா? நீ இதில் தீவிரமாக இருக்கிறாயா?”

“ஆம், நான் இதில் தீவிரமாக இருக்கிறேன். அப்படி ஒரு நகரை நீ நிர்மாணிக்க அனைத்து யாதவர்களையும் இதில் ஈடுபடுத்துகிறேன். குதிரைகள், பசுக்கள், கால்நடைச் செல்வங்கள், ரதங்கள், ஆயுதங்கள், தேவைப்பட்டால் தங்கக் கட்டிகள்! எது ஆனாலும் தரத் தயாராக இருக்கிறோம்.” “கோவிந்தா, கோவிந்தா! உண்மையாகச் சொல்கிறாயா? நீ இதில் நிச்சயமாக இருக்கிறாயா? உன்னுடைய இந்த வாக்குறுதியை நீ நிச்சயமாய் நிறைவேற்றுவாயா? அதில் உறுதியாக இருக்கிறாயா?”

“இதோ பார் பீமா! என் அருமைத் தந்தை நேர்மையும், நீதியும் வடிவான வசுதேவர் மற்றும் அவர் மனைவியான என்னைப் பெற்ற தாய் தேவகி இவர்கள் இருவர் மேலும் ஆணையிட்டுச் சொல்கிறேன். நான் சொன்னதை நிறைவேற்றுவேன்! நானும், பலராமனும் மட்டும் முன்னர் ஓர் நகரை நிர்மாணிக்க வேண்டி இருந்தது. ஆனால் இப்போது நாங்கள் அனைவரும் உங்களுடன் சேர்ந்து அப்படி ஒரு நகரை நிர்மாணிக்க உதவுகிறோம்.”

“ஆஹா! என்ன அருமை! அற்புதம்!” என்றான் பீமன். அவன் கோபம், ஆத்திரம், தாபம், வெறுப்பு அனைத்தும் போன இடம் தெரியவில்லை. பறந்து ஓடி  விட்டது. அவன் சந்தேகங்கள் போன இடம் தெரியவில்லை. “துரியோதனன் யுவராஜாவாக இருக்கும் நகரம் வசிக்க லாயக்கற்றது. அங்கே வசிக்க முடியாது! அதனால் தான் நான் பானுமதிக்கு வாக்களித்தேன். துரியோதனனே ஹஸ்தினாபுரத்தை ஆளுவான் என்னும் வாக்குறுதியை அளித்தேன்.” என்றான் கிருஷ்ணன் அமைதியாக.  பீமனுக்கு ஆச்சரியத்துக்கு மேல் ஆச்சரியம்.

“கிருஷ்ணா, கிருஷ்ணா! இவை அனைத்தையும் நீ என் பொருட்டு யோசித்து வைத்திருக்கிறாய்! ஆஹா! என்ன ஆனந்தம்! ஏன் முதலிலேயே நீ இதைக் கூறவில்லை! என்னுடைய முடிவில்லாத சங்கடங்களை எல்லாம் முதலிலேய்யே தீர்த்திருக்கலாமே! “ என்றான் பீமன்.

“ம்ம்ம்ம்ம். நான் அவ்வளவு வேகமாக யோசிப்பவன் அல்ல! மெல்ல மெல்லத் தான் யோசித்து முடிவெடுப்பேன். மக்களிடமும் மெதுவாகக் கொண்டு சேர்ப்பேன்.”தன்னைத் தானே சுய விமரிசனம் செய்யும் பாணியில் கூறினான் கிருஷ்ணன். மன்னிப்புக் கேட்கும் பாவனையில் புன்னகையும் செய்தான். அதைப் பார்த்த பீமனுக்கும் சிரிப்பு வந்து விட்டது. “கிருஷ்ணா! என் கனவு நகரை நான் நிர்மாணிக்கையில் நீ என்பக்கம் நின்று தோளோடு தோள் கொடுத்து உதவுவாய் அல்லவா?” என்ற வண்ணம் பீமன் அன்பாகத் தன் கரங்களைக் கிருஷ்ணன் தோள்களில் வைத்தான்.

“நான் உன் பக்கம் நின்று உதவிகள் செய்வதோடு நின்றுவிட மாட்டேன், பீமா! என்னோடு சேர்த்து அனைத்து யாதவர்களையும், மற்றும் நாகர்களையும் சேர்த்து உனக்கு உதவச் செய்வேன். இந்த பூவுலகே கண்டு களிக்கும் வண்ணம் ஓர் அற்புத நகரை நாம் நிர்மாணிப்போம்.” என்றான் கிருஷ்ணன்.

Sunday, July 19, 2015

தர்ம சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்கலாம்!

“எல்லாம் சரி அப்பா! உன் மூத்தவன் என்ன சொல்லப்போகிறான்? அவனைக் கொஞ்சம் நினைத்துப் பார்! அவன் கலவரங்களைக் கண்டாலே வெறுப்பவன். இதை எல்லாம் கண்டால் அவன் தனக்கு அரியணையே வேண்டாம் என்று சொல்லி விடுவான். வெறுப்பில் அனைத்தையும் உதறி விடுவான்.” என்றான் கிருஷ்ணன்.

“கிருஷ்ணா! கிருஷ்ணா! நீ எங்கள் எதிரிகளுக்காகப் பரிந்து பேசுகிறாய்!” பீமனுக்குள் மீண்டும் சந்தேகம் முளை விட்டது.

“இல்லை, பீமா! கொஞ்சம் யோசித்துப் பார்! ஹஸ்தினாபுரத்திலேயே இருந்து நாம் ஆட்சி செய்தால் அதன் மூலம் வரப் போகும் விளைவுகளையும் சிந்தித்துப் பார்த்தாக வேண்டும். யார் யார் என்ன சொல்வார்கள்! என்ன நினைப்பார்கள்! எங்கிருந்து ஆதரவு வரும்! என அனைத்தையும் யோசிக்க வேண்டும்.” என்ற கிருஷ்ணன் அதற்கு ஏதோ முடிவைக் கண்டவன் போல மேலும் பேசலானான். “பீமா! நீ சொல்வது சரியாக இருக்கும் என எனக்குத் தோன்றுகிறது. உன் எண்ணங்கள் சரியே! நீ ஹஸ்தினாபுரத்தை விட்டு வந்ததும் சரியே எனத் தோன்றுகிறது. ஒரு புத்தம்புதிய நகரத்தைக் கண்டு பிடித்து நிர்மாணிப்பது தான் நல்லது. அது தானே உன் திட்டம்? அது தான் சரியானதும் கூட. ம்ம்ம்ம்ம்….விஸ்வாமித்திர முனிவர் கூடக் கடவுளரிடம் சொர்க்கத்தைப் பற்றிக் கெஞ்சிக் கொண்டிருக்காமல் புதியதாய் ஓர் சொர்க்கத்தைப் படைக்க ஆரம்பித்தார். படைத்தும் காட்டினார். அது போல் தான் நாமும் செய்ய வேண்டும்.”

இப்போது உண்மையாகவே பீமனுக்கு ஆச்சரியம் மேலிட்டது. கிருஷ்ணன் தனக்குத் தானே வாதம் செய்து கொள்பவனைப் போல் மேலே பேச ஆரம்பித்தான்.”ஒரு புதிய அரசாங்கத்தை, சாம்ராஜ்யத்தை நிர்மாணிப்பது நல்லது; எளியது: சுலபமாக நிறைவேறக் கூடியதும் கூட! இப்போது நீ ராக்ஷசவர்த்தத்தில் நிர்மாணித்த மாதிரித் தான் அதுவும். அங்கே உன் ராணி  ஹிடிம்பாவும், உன் மகன் கடோத்கஜனும் உன்னை முழு மனதோடு மகிழ்வோடு வரவேற்பார்கள்.”

“எனக்குத் தெரியும்!” என்ற வண்ணம் பீமன் பெருமூச்சு விட்டான். இங்கே ஹஸ்தினாபுரத்தில் இருப்பதை விட அங்கே ராக்ஷசவர்த்தத்தில் நான் மிகவும் மகிழ்ச்சியோடு இருந்தேன். ஆனால் என் தாய்க்கும், என் சகோதரர்களுக்கும் அது பிடிக்கவில்லை. அவர்கள் அங்கே இருப்பதை வெறுத்தார்கள்.”

தன் சிந்தனை மாறாமலே கிருஷ்ணன் மேலே பேசினான்:” ஒரு வேளை நம்மால் ஒரு புத்தம்புதிய நகரத்தைக் கண்டு பிடிக்க முடிந்தால்? அங்கே துரியோதனனின் நிழல் கூட விழாது. அல்லவா? அப்படி ஒரு நகரத்தைக் கண்டு பிடிக்க முடிந்தால்?”

“என் முடிவு அதுதான்! நான் கண்டுபிடிக்கப்போகிறேன்.” என்றான் பீமன் திட்டவட்டமாக.

“ஆம், பீமா, நீ சொல்வது சரியே! நான் உன் ஊழியன் கோபு உன்னுடைய கனவு நகரத்தின் அமைப்பை வரைந்து கொண்டிருக்கும்போது பார்த்தேன்.” என்ற வண்ணம் பீமனின் தோள்களைப் பற்றிக் கொஞ்சம் உணர்ச்சிகரமாகப் பேச ஆரம்பித்தான். அவனுக்குள்ளாக ஏதோ புதிய திட்டம் உருவாகி இருக்குமோ என்னும் எண்ணம் தோன்றியது பீமனுக்கு. “அப்படி ஒரு நகரம் உருவானால், அங்கே துரியோதனன் இருக்க மாட்டான். உங்களுடன் சண்டை போட துரியோதனனும் இருக்க மாட்டான். இடையூறுகளைச் செய்யும் துஷ்சாசனனும் இருக்க மாட்டான். உங்களைத் தனிமைப் படுத்த துரோணாசாரியாரும் இருக்க மாட்டார். ஒரு வேளை அதுதான் உன் எண்ணத்தில் இருக்கிறதோ! ஒரு புதிய நகரத்தைக் கனவு நகரத்தை நிர்மாணிக்கும் எண்ணம்!”

பீமன் முகத்தில் புன்முறுவல் தலை காட்டியது. வெகு நேரத்துக்குப் பிறகு மலர்ந்த முகத்தோடு, “ஆம், அப்படித்தான் நினைக்கிறேன்.” என்றான் பீமன். திடீரெனத் தோன்றியதொரு உணர்ச்சிகரமான நினைப்பிலே பீமன் புதியதொரு நகரத்தை நிர்மாணிக்க வேண்டும் என்று புறப்பட்டிருந்தாலும், இப்போது கிருஷ்ணனின் பேச்சைக் கேட்டதும் அது தான் சரி என்று அவனுக்கும் தோன்றியது. புதிய நகரத்தை நிர்மாணிக்கப் பல காரணங்கள் இருந்தன. எல்லாவற்றையும் விட முக்கியமான காரணம் துரியோதனனைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டாம்.

“நான் என்ன செய்தேன் என உனக்குத் தெரியும் அல்லவா? பீமா! இதோ பார்! ஜராசந்தன் என்னையும் மத்ராவையும் சேர்த்து அழிக்கக் கிளம்பி வந்தான். நகரை முற்றுகையிடப் போவதாகத் தெரிந்தது. நகரைத் தீயிட்டு அழிக்கப் போவதாகவும் தகவல்கள் கிட்டின. அதன் பின்னரே நாங்கள் மத்ராவை விட்டு விலகினோம். வெளியேறினோம். சௌராஷ்டிராவுக்குச் சென்று எங்களுக்கென ஒரு புதிய நகரத்தை நிர்மாணித்துக் கொண்டோம். துவாரகை எனப் பெயரிட்டோம். கால்நடைச் செல்வங்களுக்கு மதிப்புக் கொடுத்துக் குதிரைகள், பசுமாடுகள் போன்றவற்றை வளர்த்து அதன் மூலம் பெரும் செல்வந்தர்களாக ஆகி விட்டோம். நாங்கள் நினைத்ததை விடப் பெரிய செல்வந்தர்களாக இருக்கிறோம். ஒரு பெரிய சாம்ராஜ்யத்தையே வென்றிருக்கிறோம். எங்களை விட நீ அறிவுள்ளவன்; விவேகம் நிறைந்தவன். ஹஸ்தினாபுரத்தைத் தான் ஆளுவேன் எனச் சண்டை போட்டுக் கொண்டிருப்பதை விட்டு விட்டுப் புத்தம்புதிதாக ஓர் நகரத்தை, சாம்ராஜ்யத்தை நிர்மாணம் செய்து அதை ஆளலாம். அது தான் நல்லது! அது தான் நமக்கு சொர்க்கமாகவும் இருக்கும். ஹஸ்தினாபுரத்தை ஆள்வது நரகத்தை ஆள்வதற்குச் சமம்.”

பீமன் ஒரேயடியாகக் குதித்தான். “கிருஷ்ணா, கிருஷ்ணா! இது தான்! இது தான்! நான் நினைத்ததும். நான் செய்ய இருந்ததும், இதுவே!” என்றான்.

ஆனால் கிருஷ்ணன் தன் வசத்திலேயே இல்லை போல் தோன்றியது. அவன் தன்னுள் ஆழ்ந்து போயிருந்தான். அவன் கண்கள் தொலைதூரத்தில் ஏதோ ஓர் காட்சியைக் காண்பது போல் மங்கிக் காணப்பட்டது. அவன் பேசினான்; வார்த்தைகள் தெளிவாகவே இருந்தன. ஆகையால் அவன் தனக்குள்ளாக ஏதோ காட்சியைக் கண்டு அதில் மூழ்கி இருக்கிறான் என்பதைப் புரிந்து கொண்டான் பீமன். கிருஷ்ணன் சொன்னான்: “யமுனைக்கரைக்குச் செல்வோம் வா, பீமா! பாஞ்சால அரசன் துருபதன் நமக்கு உதவிகள் செய்வான். நாங்கள் யாதவர்கள் அனைவரும் உங்கள் பக்கமே இருப்போம். நாக தேசத்து அரசன் மணிமானும், தன்னால் இயன்றதை உனக்குக் கட்டாயம் செய்வான். அங்கே ஓர் நகரை நிர்மாணித்து ஓர் சாம்ராஜ்யத்தை ஏற்படுத்தி அதை தர்ம சாம்ராஜ்யமாக மாற்றிக் காட்டுவோம். தர்மத்தின் பாதையில் நல்லாட்சியைக் கொடுப்போம்.”

Saturday, July 18, 2015

பீமனை வழிக்குக் கொண்டு வந்தான் கண்ணன்!

கருணையே வடிவெடுத்த கண்ணன் கருணை பொங்கி வழியும் தன் கண்களால் பீமனையே பார்த்தான். அவன் முகத்தில் தெரிந்த கோபம் கிருஷ்ணனைக் கொஞ்சம் யோசிக்க வைத்தது. பேசாமல் அவனுடன் நடந்தான். அந்த நதிக்கரையில் இருவரும் சிறிது நேரம் அங்கும் இங்குமாக நடந்தனர். அவர்களிடமிருந்து சற்றுத் தொலைவில் கூப்பிட்டால் கேட்கும் தூரத்தில் சகாதேவனும், சாத்யகியும் பின் தொடர்ந்தனர். சற்றுப் பொறுத்துக் கிருஷ்ணன் வாயைத் திறந்தான். “பீமா! நீ உன் சகோதரன் யுதிஷ்டிரன் ஹஸ்தினாபுரத்தை ஆள வேண்டும் என்றே விரும்புகிறாயா? திருதராஷ்டிரனைக் குறித்தோ, துரியோதனன் குறித்தோ உனக்கு ஆக்ஷேபணைகள் ஏதும் இல்லையா? அவர்கள் இருந்தாலும், இல்லாவிட்டாலும் யுதிஷ்டிரன் ஹஸ்தினாபுர மன்னனாக ஆனால் போதும் உனக்கு! அது தானே?” என்று வினவினான்.

“ஏன்? மீண்டும் ஒரு பொய்யான வாக்குறுதியைக் கொடுத்து என்னை ஏமாற்றப் பார்க்கிறாயா? உன் பேச்சை, வஞ்சகப் பேச்சை நான் காது கொடுத்துக் கேட்கப்போவதில்லை.”

கிருஷ்ணன் இப்போது கொஞ்சம் தீவிரமாகவே பேசினான்.” ஒரு வேளை…அதாவது ஒரு வேளை,….. நான் அனைத்து சத்தியங்களையும், உறுதிமொழிகளையும் உடைத்து எறிந்துவிட்டு உன் மூத்தவன் யுதிஷ்டிரன் ஹஸ்தினாபுரத்துக்கு அரசனாக உதவி செய்கிறேன்! என்றால்? அப்போது?” கிருஷ்ணன் ஏதோ தீவிரமான சிந்தனையில் இருப்பதும் அவன் குரலில் இருந்து தெரிந்தது. ஆனால் பீமன் சீறினான். “ வாயை மூடு கிருஷ்ணா! நீ எனக்கு உதவப் போகிறாயா? அதுவும் பானுமதிக்கு நீ அம்மாதிரி சத்தியம் செய்து கொடுத்த பின்னருமா? துரியோதனன் தான் ஹஸ்தினாபுரத்தை ஆளப்போகிறான் என அவளுக்கு நீ கொடுத்த வாக்கு? அதன் பின்னருமா?”பீமன் மேலும் கோபத்தில் சீறினான்.

கிருஷ்ணன் எதையும் லக்ஷியம் செய்யாமல் அவனை வசப்படுத்தும் மென்மையான குரலில் மேலும் பேச ஆரம்பித்தான். “என்னைக் கொஞ்சம் யோசிக்க விடு!” என்றவன், மேலும் தொடர்ந்து யோசித்த வண்ணமே பேச்சைத் தொடர்ந்தான். “ இதோ பார் பீமா! நான் திருதராஷ்டிரனைச் சந்தித்துப் பேசித் தாத்தா அவர்கள் போட்ட திட்டத்தின்படி யுதிஷ்டிரன் ஹஸ்தினாபுரத்தை ஆளவும், துரியோதனன் தொடர்ந்து யுவராஜாவாக இருக்கவும் சம்மதம் வாங்குகிறேன். இந்த முடிவுக்கு அவனைச் சம்மதிக்க வைக்கிறேன்.” என்றான்.

“ஆஹா! அது உன்னால் முடியாது அப்பனே! நிச்சயமாய் முடியாது! நீ சிறு குழந்தையைப்போல் பேசுகிறாய்! என் பெரியப்பாவா இதற்கெல்லாம் சம்மதிப்பார்! நிச்சயம் மாட்டார்! என் மூத்தவன் ஹஸ்தினாபுரத்து அரசன் ஆகிவிட்டால் பின்னர் துரியோதனன் தற்கொலை அல்லவோ செய்து கொள்வான்! ஆகவே அவரால் இதற்குச் சம்மதம் அளிக்க முடியாது!”

“அப்படி எனில் அதுவும் சரிதான்!” கிருஷ்ணன் நம்பிக்கையை இழக்காமல் உற்சாகத்துடனே பேசினான். “பின்னர் நீ யுவராஜாவாக ஆகிவிடலாமே! துஷ்சாசனனோ இதற்கெல்லாம் போட்டிக்கு வரப் போவதில்லை. அவன் தான் காந்தாரம் செல்லப் போவதாய்ச் சொல்லிவிட்டானே!”

பீமனுக்குக் கிருஷ்ணன் பேசிய போக்குப் பிடிக்கவில்லை. அவன் கேலி செய்கிறான் என்பதைப் புரிந்து  கொண்டு, “இப்படி எல்லாம் பேசாதே! உன் பேச்சு எனக்குப் பிடிக்கவே இல்லை. நகைச்சுவையாகப் பேசுவதாக எண்ணிக் கொண்டு இப்படி என்னை வதைக்காதே!” என்று மீண்டும் சீறினான்.

“பீமா, பீமா, நீ எனக்கு நியாயம், நீதி கிடைக்கச் செய்ய மாட்டாயா? இதோ பார்! நம்மிடம் துருபத அரசன் நம் பக்கம் இருப்பதோடு அல்லாமல் விராட தேசத்து அரசர்கள், சுநீதன் மற்றும் யாதவத் தலைவர்கள் என ஒரு பெரும்படையே இருக்கிறது. அனைவருமே தாத்தா பீஷ்மரின் சொல்லைத் தட்ட மாட்டார்கள். அவர் சொல்படி நடப்போது அவர் கருத்துக்களுக்கே ஆதரவும் கொடுப்பார்கள். ஆகவே நமக்கு என்ன வேண்டுமோ அதை நாம் இதன் மூலம் அடைய முடியும்!” என்றான் கிருஷ்ணன். இது பீமனுக்குக் கொஞ்சம் உற்சாகத்தைக் கொடுத்தது என்பது அடுத்து அவன் கேட்டதிலிருந்து தெரிந்த்து.

“நிஜமாகவா சொல்கிறாய்? உன்னால் முடியுமா? அப்படி மட்டும் நடந்தால்??? ஆனால் என் மூத்தவன் யுதிஷ்டிரன் எண்ணம் என்னவாக இருக்கும்? அவன் என்ன சொல்வான்?”

“இதை ஒப்புக் கொள்வதை விட அவனுக்குவேறு வழியும் இருக்கிறதா? அவன் தான் திருதராஷ்டிரனிடம் தன்னை ஒப்புக் கொடுத்துக் கொண்டு அவன் சொல்படி நடப்பதாக உறுதிமொழி கொடுத்துவிட்டானே! “ பேசிக் கொண்டே வந்த கிருஷ்ணன் மனதில் திடீரென ஒரு எண்ணம் தோன்றியது. அந்தச் சிந்தனையின் விளைவு குரலிலும் தெரியுமாறு அவன் தனக்குள் பேசுவது போல் பேசினான்:” ஒருவேளை துரோணாசாரியாரும், கிருபாசாரியாரும் அஹிசத்ராவுக்குப் போய்விட்டார்கள் எனில்……………………..?

“ஓ, நாம் ஒன்றும் கோழைகள் அல்ல! நிச்சயமாய் வீரர்களே! நம்முடைய எதிரிகளை நாமே ஒன்று சேர்ந்து அழிப்போம்.” என்று தன் மார்பில் அடித்துக் காட்டிய பீமன், “குரு வம்சத்து பலம் எல்லாம் துரோணரையோ, கிருபரையோ நம்பி இல்லை. அவர்கள் இயல்பாகவே வீரர்கள்!” என்றான். இந்த யோசனை பீமனுக்குப் பிடித்திருந்ததால் கிருஷ்ணன் மேல் அவனுக்கு இருந்த கோபமும், வெறுப்பும் மெல்ல மெல்லக் குறைய ஆரம்பித்தது.

“ஒரு வேளை,…நீ துஷ்சாசனனோடு சண்டை போட நேர்ந்தால்? அவன் பாட்டனார் சுபலா குரு வம்சத்தினரோடு யுத்தத்துக்கு அறிவிப்புக் கொடுத்துவிடுவார்.”

“ஓ, அது ஒன்றுமே இல்லை! அவர்களை எல்லாம் சுலபமாக ஜெயித்துவிடலாம். கவலையே வேண்டாம்!” என்ற பீமன் மெல்ல மெல்லத் தன் இயல்புக்குத் திரும்பிக் கொண்டிருந்தான். கிருஷ்ணன் ஒரு சந்தேகத்தைக் கிளப்பினான்: “திருதராஷ்டிரன் ஒரு வேளை காட்டுக்குச் செல்ல யோசிக்கலாம். காட்டுக்குச் சென்று தவம் செய்ய விரும்பலாம். ஆனால் காந்தாரி? அவள் தன் மகன் இறந்துவிட்டால்,,,,, அதுவும் மூத்தவன் இறந்து பட்டால் அவன் சிதையிலேயே அவளும் தீக்குளிக்க யத்தனிப்பாள். ஏனெனில் அவன் அவளுக்குக் கண்ணுக்குக் கண்ணான மிக அருமையான மகன்.”

“அதெல்லாம் என்னை என்ன செய்துவிடும்? ஒன்றும் முடியாது! நான் எந்த அளவுக்கு வேண்டுமானாலும் செல்லத் தயாராக இருக்கிறேன். ஆம், அவர்கள் எங்களுக்குச் செய்த தீமைகளை விடவா? ஆகவே எனக்கு ஒன்றும் பிரச்னை இல்லை.”

“ம்ம்ம்ம்ம் ….இன்னொரு தொந்திரவும் இதில் இருக்கிறது. திருதராஷ்டிரன் ஹஸ்தினாபுரத்தை விட்டுச் செல்ல நேர்ந்தால்…….அப்போது குரு வம்சம் இரண்டாகப் பிரிய வாய்ப்பு உள்ளது.  இரு குழுவினராகப் பிரிந்து விடுவார்கள்.”

கிருஷ்ணன் மிக மிக மெதுவாகப் பேசினான். “சகோதரா, உன் வீரம், புஜபல பராக்கிரமம், விவேகம், பயிற்சி அனைத்தும் குருவம்சத்தினரை அதுவும் உன்னில் ஒரு பகுதியினரை ஒடுக்குவதிலேயே சகோதர யுத்தத்திலேயே செலவாகிவிடும். அதை யோசித்தாயா? நீ தர்ம சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க நினைக்கிறாய்! ஆனால் அது முடியுமா? யோசித்தாயா? நான் சொல்வது சரிதானே?” என்றான் கிருஷ்ணன்.

“கிருஷ்ணா! கிருஷ்ணா! இப்படி எல்லாம் பேசி என்னை பயமுறுத்தப் பார்க்கிறாயா? என்னால் இதற்கெல்லாம் பயப்பட முடியாது! எவருடனும் போர் தொடுக்கவோ, எந்தச் சூழ்நிலையையும் சந்திக்கவோ நான் தயாராகவே இருக்கிறேன்.”

Friday, July 17, 2015

பீமன் மறுப்பு! கிருஷ்ணன் தவிப்பு!

பீமனின் கோபத்தை முற்றிலும் அலட்சியம் செய்தான் கிருஷ்ணன். அதைக் கண்டு கொள்ளாமலேயே, “இதோ பார், பீமா! நீ இல்லாமல் நான் திரும்பிச் சென்றேன் ஆனால் உன் மூத்தவன் பட்டாபிஷேஹ வைபவத்தில் கலந்து கொள்ளவே மாட்டான்! அதை யோசித்துப் பார்!” என்றான்.

“ஹூம், ஒரு சக்கரவர்த்தியாய் ஆவதற்கு உள்ள அம்சங்கள் எதுவும் என் மூத்தவனிடம் இல்லை. அப்படி ஆனான் எனில் அது மிக அரிதாகவே நடக்கும்.” என்று சொல்லியவண்ணம் நடக்கத் துவங்கினான் பீமன். திடீரென நின்று திரும்பிப் பார்த்து, “ அவரால் என்ன செய்ய முடியும்? எங்கள் உடலை, ஆன்மாவை, உயிரை துரியோதனனுக்கும் அவன் சகோதரர்களுக்கும் விற்றுவிடுவார்.  தன்னையும் சேர்த்துத் தான் எங்கள் பரம வைரிக்கு விற்பார். அது ஒன்று தான் அவருக்குத் தெரியும். துரியோதனன் எங்கள் பரம வைரி என்பதை அவர் அறிய மாட்டாரா என்ன?”

“ஆஹா! நீ இப்படிப் பேசினாய் எனில் நான் திரௌபதியின் முகத்தை எவ்வாறு பார்ப்பேன்? என்னுடைய ஆலோசனையின் பேரிலேயே அவள் உங்கள் ஐவரையும் மணந்திருக்கிறாள் என்பதை நீ அறிவாயா? அவளுக்கு நான் என்ன பதில் சொல்வேன்? நீ அங்கே இல்லை என்றதுமே அவள் காம்பில்யம் திரும்பப் போவதாய்ச் சொன்னாள். நீ இல்லாமல் நான் சென்றேன் எனில் நிச்சயமாய்க் காம்பில்யத்துக்குப் போய்விடுவாள்.” என்றான் கிருஷ்ணன்.

“அது தான் சரி! இப்படிப் பட்ட உபயோகமற்ற மனிதர்களுக்கு மனைவியாய் இருப்பதை விட அவள் காம்பில்யம் செல்வதே சிறந்தது! அப்படியே செய்யச் சொல் அவளை! அதுதான் அவளுக்கு நல்லது!” என்று ஓங்கிய குரலில் கத்திய பீமன் மீண்டும் வேகமாய் நடக்க ஆரம்பித்தான்.  அவன் அங்கிருந்து செல்வதைக் கிருஷ்ணன் தடுத்தான். தன் கைகளால் அவன் தோள்களைப் பற்றி நிறுத்தி, “இதோ பார் பீமா! நான் சொல்வதைக் கேள்!” என ஆரம்பித்தான். “அதெல்லாம் முடியாது! நீ என்ன சொன்னாலும் நான் கேட்கப் போவதே இல்லை. என்ன நடந்தாலும் சரி.நீ ஹஸ்தினாபுரம் திரும்பிப் போ! உடனே போ!” என்றபடி அவன் கைகளைத் தட்டிவிட்டான் பீமன்.
“அதே போல் என்ன நடந்தாலும் நீ இல்லாமல் நான் திரும்பப் போவதில்லை.” என்று சிரித்த வண்ணம் கூறிய கிருஷ்ணன் மீண்டும் அவன் தோள்களைத் தன் இருகைகளாலும் பிடித்து அவனை மேலும் நடக்கவிடாமல் செய்தான். “இதோ பார் பீமா! இன்னொரு முக்கியமான விஷயம் இருக்கிறது. காசி தேசத்து அரசகுமாரியை மறந்து விட்டாயா? நீ இல்லாமல் நான் ஹஸ்தினாபுரம் சென்றால் அவள் தன் நாவை அறுத்துக் கொண்டு என் காலடியில் தற்கொலை செய்து கொள்வதாய் சபதம் செய்திருக்கிறாள். ஆஹா! அந்த மென்மையான மனம் கொண்ட இளவரசி இவ்விதம் என் காலடியில் விழுந்து சாவதை என்னைக் காணச் சொல்கிறாயா? அதை நான் எவ்விதம் காண்பேன்! என்னால் முடியாது அப்பனே! உன்னைப் போன்ற கல்நெஞ்சம் எனக்கு இல்லை.”

ஜாலந்திராவின் பெயரைக் கேட்டதுமே பீமன் அங்குமிங்கும் நடப்பதை நிறுத்திவிட்டு கிருஷ்ணன் தன்னை நதிக்கரையோரம் போக  அனுமதிப்பதை ஏற்றுக் கொண்டான். கொஞ்சம் யோசனையுடன் அப்படியும் இப்படியுமாக நடந்தான். “அது சரி, கிருஷ்ணா! அந்தப் பெண் உயிருடன் இருந்தாக வேண்டுமா? இந்த பூவுலகில் வாழும் அனைத்துப் பெண்களின் சூழ்ச்சித் திறனும் அவள் ஒருத்தியின் மூளையில் புகுந்திருக்கிறது.” என்று கோபத்துடன் சீறினான்.

“ம்ஹூம், நீ அவளைச் சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. அவளைத் தப்பாகவே எண்ணுகிறாய். நியாயமாக அவளைப் புரிந்து கொள்ளும் விதத்தில் புரிந்து கொள்.”

இதைச் சொல்லும்போது கிருஷ்ணன் காட்டிய நிதானமும், சாந்தமும் பீமனுக்கு எரிச்சலூட்டியது. கிருஷ்ணன் பக்கம் ஆவேசமாகத் திரும்பினான். “ஹூம், அவள் தானே உன்னிடம் வாக்குறுதி வாங்கிக் கொண்டாள்? துரியோதனன் தான் ஹஸ்தினாபுரத்தை ஆளவேண்டும் என வாக்குறுதி வாங்கிக் கொண்டாள் அல்லவா?” கோபம் பொங்கியது பீமனுக்கு. “இதோ பார் பீமா! நான் அவளைச் சந்திக்க வேண்டும் என என்னைக் கட்டாயப்படுத்தியது நீ தான்! அதை மறவாதே! அதோடு அவள் விருப்பங்களுக்கு மதிப்புக் கொடுத்து நிறைவேற்றும்படியும் நீ தான் கேட்டுக் கொண்டாய்!” என்றான் கிருஷ்ணன் புன்னகையோடு.

“ஹூம், சரி, சரி, நீ ஏன் என்னுடன் பேசி நேரத்தை வீணாக்குகிறாய்? என் நேரமும் வீணாகிறது. திரும்பி ஹஸ்தினாபுரத்துக்கே போ! போ!” என்றான் பீமன் கண்டிப்புடன். அதே சமயம் தன் கைகளால் திரும்பிச் செல்லும் சாலையையும் சுட்டிக் காட்டினான். “சரி, அப்பா! நீ திரும்பி வராவிட்டால் போகிறது! என்னை உன்னுடன் வரவிடு! நானும் உன்னுடன் வருகிறேனே!” என்றான் கிருஷ்ணன். அவன் குரலில் பரிதாபம் தெரிந்தது இனி என்ன செய்யப் போகிறேனோ என அவன் கவலைப்படுவது போல் காட்டிக் கொண்டான். “நீ திரும்பவில்லை எனில் நான் துவாரகைக்கே திரும்பிச் சென்று விடுகிறேன். என்னை விடு அப்பா!” என்றான் கிருஷ்ணன் செய்வதறியாதவன் போல.

“முதலில் அதைச் செய்! நீ மட்டும் துவாரகைக்குச் சென்றுவிட்டால் அனைவருக்கும் நல்லது! போ! உடனே கிளம்பு! என் சகோதரர்களை விட நீ மிகவும் மோசமானவன். இனிமையாகப் பேசியே கழுத்தை அறுப்பாய்! அதிலும் சூழ்ச்சிகள் செய்வதில், தந்திரமாகப் பேசி ஏமாற்றுவதில் நீ மன்னன்! சக்கரவர்த்தி! உனக்கு ஈடு, இணை எவருமில்லை!” என்று கிருஷ்ணனைப் பார்த்து வெறுப்புடன் கூறினான் பீமன்.

“பீமா, என் சகோதரா! நீ எப்போதுமே நேர்மையும், நியாயமும் உள்ள ஒரு மனிதனாக இருந்து வருகிறாய்! உன்னிடமிருந்து இப்படி ஒரு பாராட்டுப் பெற நான் என்ன தவம் செய்துவிட்டேன்!  என்ன செய்தேன் பீமா? என்னை நீ ஏசும்படி என்ன செய்துவிட்டேன்?” என்று கிருஷ்ணன் பீமனிடம் நட்புத் தோரணையில் அதே சமயம் சற்றும் குறையாத பணிவுடன் கேட்டான்.

“என்ன செய்யவில்லை நீ?” கிருஷ்ணனை நோக்கித் திரும்பிய பீமன் தன் கரங்களை இடுப்பில் வைத்துக் கொண்டு அவனை முறைத்தான். என்னையும், என் வீரத்தையும், என் தோற்றத்தையும் வைத்து நீ விளையாடினாய்! இதன் மூலம் நான் பட்டத்து இளவரசனாக யுவராஜாவாக ஆகலாம் என்றும் அதன் பின்னர் காசி தேசத்து இளவரசியின் சுயம்வரத்தில் கலந்து கொண்டு அவளை மணக்கலாம் என்றும் நம்பிக்கை ஊட்டினாய்!”

“உண்மை! இதையே தான் நான் ஜாலந்திராவுக்கும் சொல்லி இருக்கிறேன்.” என்று ஒப்புக் கொண்டான் கிருஷ்ணன். பற்களைக் கடித்த வண்ணம் அவனைக் கோபமாகப்பார்த்தான் பீமன். “உன் இரட்டை வேஷம் அம்பலமாகி விட்டது. இரட்டை வேஷம் போடுவதில் நீ நிபுணன்! நீ எனக்கும் என் சகோதரர்களுக்கும் நன்மை செய்யத் தான் வேலை செய்கிறாய் என நான் நினைத்தேன். மூடன்! ஆனால் நீ என்ன செய்தாய்! துரியோதனனுக்கு எங்கள் உரிமையைத் தாரை வார்த்து விட்டாய்! உன் வாக்குறுதியின் மூலம்.”

“ஆமாம், ஆமாம், நான் பானுமதிக்கும் வாக்குக் கொடுத்திருந்தேன். துரியோதனனே ஹஸ்தினாபுரத்தை ஆள்வான் என உறுதி மொழி கொடுத்திருந்தேன்.” எதற்கும் கவலைப்படாமல் கிருஷ்ணன் சந்தோஷமாகச் சிரித்தான். “சீ! வெட்கங்கெட்டவனே!” பீமன் சீறினான் அவனைப் பார்த்து. கிருஷ்ணன் அசரவில்லை. “நான் உண்மையாக நடப்பதை வெட்கம் கெட்ட செயலாக நினைக்கவில்லை!” என்றான் சாவதானமாக.

“நீயா உண்மையானவன்? உண்மையாக நடப்பவன்? தர்மவான் நீயா? நீ?”

“ஆமாம்.” என்றான் கிருஷ்ணன் மீண்டும் அதே நிதானத்துடன். பின்னர் அவனைப் பார்த்து ஊக்கம் கொடுக்கும் சொற்களைப் பேசலானான். “இதோ பார் பீமா! உண்மையைச் சொல்லட்டுமா? உண்மையை உணர்ந்ததும் என்ன செய்யப் போகிறாய்? ஹஸ்தினாபுரத்தை துரியோதனன் ஆண்டால் தான் நீங்கள் ஐவரும் உங்களுக்கான உரிமையை உண்மையாக அடைய முடியும்!”

ஆனால் பீமனோ இதைக் கேட்டதும் கோபம் கொண்ட காளையைப் போல் சீறினான். தன் தலையை ஆட்டினான். “உன்னுடன் பேசவே எனக்குப் பிடிக்கவில்லை.  நான் உன்னுடன் பேசப்  போவதில்லை. உடனே இங்கிருந்து போ! சென்றுவிடு! இல்லை எனில்………..” கிருஷ்ணனை அடிப்பவன் போல் அவன் மீது பாய்ந்து கொண்டு வந்தான் பீமன். அதைக் கண்ட சாத்யகி இருவருக்கும் நடுவே வந்து நின்று  கொள்ள கிருஷ்ணன் சாத்யகியை அங்கிருந்து அகற்றினான். “சாத்யகி, பீமனின் வழியில் குறுக்கிடாதே! அவன் போக்கில் அவனை விடு! என்ன இருந்தாலும் அவன் என் அத்தை வழி சகோதரன். என்னை அடிக்கவோ, கொல்லவோ அவனுக்கு எல்லா உரிமைகளும் உண்டு.” என்ற வண்ணம் பீமன் பக்கம் திரும்பி, “சகோதரா! நீ என்ன சொல்கிறாயோ அதைச் செய்வது என முடிவெடுத்துவிட்டேன்.” என்றான்.

“சூழ்ச்சிக்காரா!, சூழ்ச்சிக்காரா! வஞ்சகா! வஞ்சகா!” என்று கத்தினான் பீமன். பின்னர் அதே சொற்களை முணுமுணுத்துக் கொண்டிருந்தான். “உனக்குச் சேவை செய்ய எனக்கு அனுமதி கொடு, பீமா!” எனக் கிருஷ்ணன் அவனை தயவாகக் கேட்டுக் கொண்டான்.

“என்ன! நீ எனக்குச் சேவை செய்யப்போகிறாயா? ஆஹா! இதில் எவ்வளவு உண்மை இருக்கிறது? எப்போதும் அனைவரும் உனக்கல்லவோ சேவை செய்கின்றனர்? உன் புகழை அல்லவோ பாடுகின்றனர்! நீயல்லவோ அனைவரும் உனக்கு மட்டுமே சேவை செய்ய வேண்டும் என விரும்புகிறாய்? அனைவரும் உனக்குச் சேவை செய்வதோடு அல்லாமல் உன்னைக் கீழே விழுந்து வணங்கவும் வேண்டும். அது தானே உனக்குப் பிடித்தமானது? அதோடு “கிருஷ்ணனுக்கே மங்களம், ஜெயம் கிருஷ்ணனுக்கே!” என்றெல்லாம் முழங்கவும் வேண்டும் அல்லவா? அது தானே உனக்குப் பிடித்தமானது? நீ எனக்குச் சேவை செய்யப்போகிறாயா? ஆஹா! இதை விடப் பெரிய நகைச்சுவையான விஷயத்தை யாரேனும் கேட்டிருக்கின்றனரா? ஹாஹாஹா!” என்று கோபமாகச் சிரித்தான் பீமன்.

“நீ சொல்வது முற்றிலும் சரி, சகோதரா! சில சமயம் என்னை அனைவரும் விரும்புகிறார்கள் என்பதையே நானும் விரும்புகிறேன். அனைவராலும் விரும்பப்படுவதை நான் ஏற்கிறேன். ஆனால் என் பலவீனம் என்னவென்றும் நீ என்னிடம் சொல்ல வேண்டுமே! அதைத் தான் நானும் விரும்புகிறேன். இப்படிப் பட்ட வெளிப்படையான கருத்துக்களால் தான் நான் எப்போதும் சரியான பாதைக்குத் திருப்பி விடப் படுகிறேன். ஆகவே உன் கருத்து எனக்கு மிக முக்கியமானது. இதன் மூலம் நீ என்னை விரும்புவதை நிறுத்திவிடாதே! அப்புறமாய் நான் மிகவும் துயருற்று பரிதாபமான நிலைக்குத் தள்ளப்படுவேன்.”


“ஹூம், சாத்யகியைப் போன்ற முகஸ்துதிக்காரர்களால் நீ மிகக் கெட்டுப் போய்விட்டாய்! முகஸ்துதியைத் தான் நீ விரும்புகிறாய்! இவனைப் போல் முகஸ்துதி செய்பவர்களை உன் நண்பர்கள் ஆக்கிக் கொள்கிறாய்!”

சாத்யகியால் இதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. “என்ன முகஸ்துதி செய்பவன் என்று சொல்லாதே!” என்று கூவினான். “கிருஷ்ணனைக் கெடுத்தது நாங்கள் யாரும் இல்லை. நீ! நீ தான்! ஆம் நீ தான் அவனைக் கெடுத்துவிட்டாய்! மற்ற எவரையும் விட அதிகமாய் நீ தான் அவனைக் கெடுத்துக் கொண்டிருக்கிறாய்!” என்றும் கூறினான்.
கிருஷ்ணனோ சாத்யகியைக் குறிப்பாகப் பார்த்த வண்ணம், அவன் கூறியதை மறுக்கும் வகையில், “சாத்யகி, பீமன் சொல்வதே சரியானது!” என்ற வண்ணம் பீமன் பக்கம் திரும்பினான். “சகோதரா, நீ சொல்வது சரியே! நான் உன்னுடன் ஒத்துப் போகிறேன். ஹஸ்தினாபுரத்தைப் போன்ற மோசமான இடத்தில் வசிப்பது ஆபத்து ஆனதே! நல்லவேளையாக நீ அங்கிருந்து வெளியேறினாய்!” என்றான். ஆனால் பீமனோ அவனைச் சந்தேகத்துடன் பார்த்துத் தலையை ஆட்டினான்.

“அப்படிப் பார்க்காதே என்னை, சகோதரா! ஹஸ்தினாபுரத்து சூழ்ச்சிகளால் நீ கலங்கிப் போயிருப்பதை நான் அறிவேன். அதிலும் துரியோதனன் எங்கே வசிக்கிறானோ அங்கே இருப்பதை நீ விரும்ப மாட்டாய் என்றும் நான் அறிவேன். ஏனெனில் நீ அரச தர்மங்களைக் கடைப்பிடிக்கக் கூடியதொரு தர்ம சாம்ராஜ்யத்தை ஸ்தாபிக்க நினைக்கிறாய்!”

“என்ன சொன்னாலும் சரி, என்ன நடந்தாலும் சரி, நான் ஹஸ்தினாபுரம் திரும்பப் போவதில்லை.” அத்துடன் பேச்சை நிறுத்தியவன் திரும்பி நடக்க ஆரம்பித்தான்.

Thursday, July 16, 2015

வெறுப்பும் கசப்பும், நகைப்பும்!

சூரியன் அஸ்தமிக்கும் சமயம் பீமன் ரதத்தை நிறுத்தினான். தன் ரதசாரதியைப் பார்த்து அங்கேயே இரவு தங்குவதற்குக் கூடாரம் ஒன்று அமைக்கும்படி ஆணையிட்டான். குதிரைகளை அவிழ்த்துவிட்டு நீர்காட்டித் தீனி போடும்படியும் சொல்லிவிட்டு, கோபுவை அருகில் ஏதேனும் கிராமம் இருந்தால் பால் கிடைத்தால் வாங்கிவரும்படி சொன்னான். கிராமவாசிகளுக்கு பிரபலமான அரசன் வ்ருகோதரன், குரு வம்சச் சக்கரவர்த்தி பாண்டுவின் இளைய மகன் ஆன பீமன் தங்கள் கிராம எல்லையில் முகாம் இட்டிருப்பதை அறிந்தவுடன் அவனைப் பார்க்க வேண்டிக் கூட்டமாகக் கூடினார்கள். அவன் வரவை ஒட்டி ஓர் அரச விருந்துக்கு ஏற்பாடு செய்வதாகவும் கூறினார்கள். விருந்தை ஏற்கும்படி பீமனை வேண்டிய மக்கள் அங்கிருந்த குதிரைகளுக்குத் தீனி காட்டுவதிலும், ரதத்தை சுத்தம் செய்வதிலும் உதவி செய்தனர்.

விருந்தை முடித்துக் கொண்ட பீமன் அங்கிருந்த நதிக்கரையில் தன் கூடாரத்தை அமைத்துக் கொண்டு இரவு அங்கே தங்கி உறங்க ஆயத்தங்கள் செய்து அப்படியே தூங்கியும் போனான். அவனைச் சுற்றி கோபுவும் மற்ற வீரர்கள், ரதசாரதி ஆகியோர் அரண் போல வட்டவடிவில் சுற்றிப் படுத்தனர். மறுநாள் விடிந்து சூர்யோதயம் ஆன சிறிது நாழிகையில் கிருஷ்ணன், சஹாதேவனுடனும், சாத்யகியுடனும் அங்கே வந்து சேர்ந்தான். அவர்களுக்கு பீமன் அங்கே தங்கி இருக்கும் செய்தி தெரிய முகாமுக்கு வந்து சேர்ந்தனர். பீமன் அப்போது நதிக்கரையில் குளித்துக்  காலை அனுஷ்டானங்களை முடித்துக் கொண்டு, சூரியனுக்கும் அர்க்யம் விட்டு வரக் கிளம்பிச் சென்றிருந்தான். இதைக் கேள்விப் பட்ட கிருஷ்ணனும் அவன் குழுவினரும் நதிக்கரையிலேயே தாங்கள் வந்த ரதங்களையும் குதிரைகளையும் விட்டு விட்டு பீமனைத் தேடிச் சென்றனர்.

கோபு அங்கே சின்னச் சின்ன கூழாங்கற்களையும், நத்தைகளின் ஓடுகளையும் வைத்துக் கொண்டு தரையில் ஒரு பெரிய விசித்திரமான அமைப்பைப் பெரியதாக வரைந்து கொண்டிருந்தான். இதற்காக ஆங்காங்கே நடப்பதும் கூழாங்கல்லை வைப்பதும், எடுப்பதும், ஓடுகளை வைப்பதுமாக அங்குமிங்கும் நடந்து கொண்டிருந்தான். அவனிடம், “பீமன் எங்கே?” என்று கிருஷ்ணன் கேட்டதை முதலில் அவன் கவனித்ததாய்க் காட்டிக் கொள்ளவே இல்லை. மீண்டும் மீண்டும் கூழாங்கற்களை மாற்றி அமைப்பதிலேயே குறியாக இருந்தான். மீண்டும் விடாமல் கிருஷ்ணன் அவனிடம் கேட்கவே உள்ளுக்குள்ளாகக் கோபத்தை அடக்கிக் கொண்டு கோபம் கண்களில் தெரிய தன் கைகளால் நதிப்பக்கம் சுட்டிக்காட்டினான். அவன் காட்டிய திசையில் இடுப்பளவு ஆழத்தில் நின்ற வண்ணம் பீமன் தன் அனுஷ்டானங்களை நிறைவேற்றிக் கொண்டிருந்தான்.

“கோபு! நீ இங்கே என்ன செய்கிறாய்? இந்தக் கூழாங்கற்களை வைத்து இது என்ன வீடா கட்டுகிறாய்?” என்று கிருஷ்ணன் கேட்டான்.

“வாசுதேவா! எங்கள் ஏன் பின் தொடர்ந்து வந்தீர்கள்?” அவனுக்குள் இருந்த கோபம் இதில் வெளித் தெரிந்தது. இந்த விருந்தாளிகள் வேண்டாத விருந்தாளிகள் என்பதை அவன் தன் இந்தக் கேள்வியின் மூலம் காட்டிக் கொண்டான். தன் கோபத்தை மறைக்கவும் இல்லை.  கிருஷ்ணன் ஆனால் கருணையுடனும், தயவுடனும் சிரித்தான். “ஆஹா, கோபு, கோபு! இதோ பார்! கோபம் கொள்ளாதே! தயவு செய்! இந்தக் கூழாங்கற்களை எல்லாம் வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறாய்? இப்போது என்ன செய்கிறாய்?”

தான் இன்னமும் முடிக்காமலே வைத்திருந்த அமைப்பைப் பார்த்த கோபு கொஞ்சம் உள்ளூர கர்வத்துடன், “ நாங்கள் புதியதொரு நகரத்தை நிர்மாணிக்கத் திட்டம் தீட்டுகிறோம்.” என்றான். பீமன் செய்ய நினைத்தது எல்லாம் தன்னுடன் சேர்ந்தே அவன் செய்ததாகவும், அவன் திட்டம் போட்டதும் தானும் இணைந்து திட்டம் போட்டதாகவும் கோபுவின் நினைப்பு இருந்தது. அதைக் கண்ட கிருஷ்ணன் சிரித்தான். “கோபு, உன் வேலையை நீ தொடர்ந்து செய்! யார் கண்டார்கள்? ஒரு நாள் இல்லைனா ஒரு நாள் இது உதவலாம்.” என்றான் கிருஷ்ணன். அதற்குள்ளாக கிராமத்து மக்கள் உணவு தயாரித்து எடுத்துக் கொண்டு வந்தனர். அவர்கள் பீமனுக்கும் அவனுடன் வந்தவர்களுக்கும் மட்டுமே பால், பழங்கள் போன்றவைகள் எடுத்து வந்திருக்க, அங்கே இன்னமும்  மூன்று ரதங்கள் கூடுதலாக நிற்பதைக் கண்டு வியந்தனர். புதிதாக வந்தவர்கள் யார் எனப் பார்த்தால் வாசுதேவ கிருஷ்ணன்! அவனுடன் சாத்யகி மற்றும் பீமனின் குட்டி சகோதரன் சகாதேவன். சில நாட்கள் முன்னரே காம்பில்யத்திலிருந்து சென்ற திருமண ஊர்வலத்தில் இவர்களை எல்லாம் கண்டு முக்கியமாய்க் கிருஷ்ணனைக் கண்டு அவனிடம் ஆசிகளை வாங்கி இருந்த மக்கள் மீண்டும் அவனைக் கண்டதும் ஆச்சரியம் அடைந்தனர். கிருஷ்ணனின் சாகசங்கள் பற்றிய கதைகளையும், அவன் நடத்திய அதிசய அற்புதங்களையும் பற்றிக் கேட்டிருந்த அவர்கள் இப்போதும் அவன் காலடியில் விழுந்து வணங்கி ஆசிகளை வேண்டினார்கள்.

கிருஷ்ணன் தன் கூட வந்திருந்த ஆட்களைத் தங்களுக்கும் அங்கே முகாம் அமைக்கும்படியும் கூடாரங்களை ஏற்படுத்தும்படியும் ஆணையிட்டு விட்டு அனைவரும் நதிக்குச் சென்றனர். தாங்களும் குளித்துக் காலை அனுஷ்டானங்களை முடிக்கலாம் என்றே சென்றனர். நதியில் இறங்கியதும் சற்றுத் தொலைவில் பீமனைக் கண்ட கிருஷ்ணன் அவனை அழைத்தான். “பீமா, பீமா! நாங்கள் வந்துவிட்டோம்!” என்றும் அறிவித்தான். ஆனால் பீமனோ முகத்தைத் திருப்பிக் கொண்டு வேறுபக்கம் பார்த்தான். கிருஷ்ணனும் அவனுடைய சகாக்களும் நதியில் குளித்து சூரியனுக்கு அர்க்யம் கொடுத்துத் தங்கள் அனுஷ்டானங்களை நிறைவேற்றிக் கொண்டார்கள். பீமன் தண்ணீரிலிருந்து வெளியேறியதும் மூவரும் அவனை வரவேற்று மூத்தவன் என்பதால் அவன் கால்களில் விழுந்து வணங்க முயன்றனர். பீமன் அவர்கள் தீண்டத் தகாதவர்கள் என்னும்படி நடந்து கொண்டு விருட்டெனத் தன் கால்களை நகர்த்திக் கொண்டதோடு அல்லாமல் அவர்களைக் கோபம் பொங்கவும் பார்த்தான். மிகக் கடுமையான அந்தப் பார்வையை கிருஷ்ணன் ஒருவனே எதிர்கொண்டான்.

“பீமா, என் சகோதரா!” என்று கிருஷ்ணன் ஆரம்பித்தான்.

 “இதோ பார்! கிருஷ்ணா! என்னைத் தொந்திரவு செய்யாதே! என்னைத் திரும்ப அழைத்துச் செல்வதற்குத் தான் நீ வந்திருக்கிறாய் என்பதை நான் நன்கறிவேன். நீ என்ன மந்திர, தந்திர வேலைகள் செய்தாலும் நான் திரும்பி வரப்போவதில்லை! அது நிச்சயம்!” என்று பீமன்  உறுதியுடன் கூறினான்.

“ஆஹா! யார் சொன்னார்கள்! நான் உன்னைத் திரும்ப ஹஸ்தினாபுரத்துக்கு அழைத்துச் செல்லப்போவதாய்? அப்படி ஒரு திட்டமே இல்லை!” என்றான் கிருஷ்ணன் சாவதானமாக. மேலும் தொடர்ந்து, “நீ எங்கெல்லாம் செல்லப் போகிறாயோ அங்கெல்லாம் வரப்போகிறோம்.” என்றான். பீமன் கோபத்தில் கொதித்தான், “சூழ்ச்சிக்காரா, வஞ்சகா, ஏமாற்றுக்காரா! கிருஷ்ணா! நீ ஓர் ஏமாற்றுக்காரன். இதோ பார், சஹாதேவா! நீ, நீயும் இன்னொரு ஏமாற்றுக்காரன் தான். நீங்கள் அனைவருமே ஏமாற்றிப் பிழைப்பவர்கள். போங்கள் இங்கிருந்து! ஹூம், விரைவில் செல்லுங்கள்!”

“கொஞ்சம் நான் சொல்வதைத் தான் கேள் பீமா! சகோதரா! பொறுமை!” என்றான் கிருஷ்ணன். அவனைக் கொன்று விடுவான் போலப் பார்த்தான் பீமன். “நீ என்ன வேண்டுமானாலும் சொல்! ஆனால் அதைக் கேட்க நான் தயாராக இல்லை. நான் கேட்கப்போவதில்லை. இங்கிருக்கும் மூவரில் மட்டுமல்ல, இந்தப் பரந்த உலகிலேயே உன்னைப் போல் ஏமாற்றுக்காரனை நான் பார்த்தது இல்லை.” இடைவிடாமல் பேசியதாலோ என்னமோ கொஞ்சம் நிறுத்திப் பெரியதொரு மூச்சை விட்ட பீமன் மேலும் தொடர்ந்தான்! “போ இங்கிருந்து! திரும்பி ஹஸ்தினாபுரம் செல்! நீ இங்கேயே இருந்தால் என் திட்டங்களை எல்லாம் பாழடித்துவிடுவாய்! உன்னால் என் திட்டங்கள் வீணாவதை நான் விரும்பவில்லை!” பீமன் அவ்வளவோடு திரும்பிக் கொண்டு தன் முகாமை நோக்கி நடந்தவன், தன் கூடாரத்துக்குச் சென்றான். அவனோடு கிருஷ்ணன், சகாதேவன், சாத்யகி ஆகியோர் சேர்ந்து கொண்டனர்.

தவிப்போடு கிருஷ்ணன், “சகோதரா! நீ இல்லாமல் நான் ஹஸ்தினாபுரம் திரும்புவது எப்படி?  என்னால் எப்படிச் செல்ல முடியும்?” என்றான். அவன் குரலில் நிராசை மிகுந்தது. கோபத்துடன் திரும்பிய பீமன் அவனைப் பார்த்துப் பெருங்குரலில் கத்தினான். “என்ன? உன் தந்திரவேலையை ஆரம்பிக்கிறாயா? நீ என்ன சொன்னாலும், எதைச் செய்தாலும் இம்முறை உன்னை நம்புவதில்லை என்று நான் ஏற்கெனவே முடிவு எடுத்துவிட்டேன்.”

எதற்கும் அசராத கிருஷ்ணனோ, “ஏன் போகமாட்டேன் என்று சொல்லட்டுமா? நான் வெறும் கையுடன் நீ இல்லாமல் திரும்பினேன் எனில் உன் அன்னை குந்தி தேவி சாகும்வரை உண்ணாவிரதம் இருந்து உயிரை விட்டு விடுவாள்.”

சீறினான் பீமன். மனம் கசந்துவிட்டது தெரியும் வகையில் நகைத்த வண்ணம், “அவள் எப்போதோ இறந்திருக்க வேண்டும். அதுவும் இதோ இவனைப்போன்ற பிள்ளைகளைப் பெற்றதற்கு, ஏமாற்றுக்காரர்களைப் பிள்ளைகளாப் பெற்றதற்கு எப்போதோ இறந்திருக்க வேண்டும். இப்போது இறந்தால் ஒன்றும் நஷ்டமில்லை!” என்ற வண்ணம் சகாதேவனைச் சுட்டிக் காட்டினான். அவனுடன் சேர்ந்து மற்ற சகோதரர்களையும் சேர்த்தே அவன் சொல்லுவதைப் புரிந்து கொண்டனர் அனைவரும். “இதோ இங்கே இருக்கிறானே, இந்த சகாதேவன், மென்மையாகப் பேசக் கூடியவன்; உண்மையாகவும் பேசுபவனாம்! ஆனால் நான் அவன் என்ன சொன்னாலும் அதை இப்போது நம்பப் போவதில்லை. இப்போது அவன் வாய் மூடி மௌனியாக இருக்கிறானே! இதன் மூலம் தன்னை கெட்டிக்காரனாய்க் காட்டிக் கொள்கிறான் போலும்! நடிப்பு! அனைத்தும் நடிப்பு! இவன் என்ன சொன்னான் என்னிடம் தெரியுமா? இவனுக்கு வருங்காலம் தெரியும் என்றல்லவோ அனைவரும் சொல்கின்றனர்! நான் பட்டத்து இளவரசனாக அரசனுக்கு அடுத்த பதவியில் இருப்பேன் என்றான்! எவ்வளவு பெரிய நகைச்சுவை! ஹாஹாஹாஹா! பொய் சொல்லி இருக்கிறான்! ஏமாற்றுக்காரன்! சூழ்ச்சிக்காரன்!” மனக்கசப்போடு மீண்டும் பெரிதாக நகைத்தான் பீமன்,